Advertisement

அத்தியாயம் 26
அமுதவள்ளியின் சிறகுக்குள் பொத்திப் பொத்திப் வளர்த்ததினாலையே மலர்விழிக்கு தந்தையின் குணமோ அத்தையின் குணமோ ஒட்டவில்லை. ரிஷியை அத்தையின் வீட்டில் முதன் முதலாக பார்த்த போது அவனின் உடையும், தோற்றமும் அவன் அங்கு வேலை செய்யும் ஒரு சிறுவன் என்றே எண்ணினாள்.  
அமுதவள்ளி அவனிடம் பாசம் காட்டுவதும், செல்லம் கொஞ்சுவதும் கொஞ்சம் பொறாமையை ஏற்படுத்த அன்னையிடம் சண்டையிடலானாள் குட்டி மலர். அமுதவள்ளியோ! ரிஷி கீதாராணியின் மகன் என்று சொல்லாது தன் அண்ணன் சரவணகுமரனின் மகன் என்று கூறி அவனிடம் அன்பாக நடக்கும் படி கூற  மலர்விழிக்கு அன்னையின் வாக்கு வேதவாக்கானது.   
ஆனால் ரிஷியோ அவளை கண்டாலே அஞ்சி நடுங்கியவாறே ஓடலானான். ஏன் என்று புரியாவிட்டாலும் அத்தை அவனிடம் கடுமையாக நடந்துக் கொள்வதைக் கண்டு அத்தையையே கண்டித்தாள். அன்றிலிருந்து மலர்விழி வரும் நாட்களில் ரிஷிக்கு கீதாராணியிடமிருந்து விடுதலை கிடைத்துவிடும். அதனாலயே ரிஷிக்கு அவர்களை பிடித்திருந்தது.
அமுதவள்ளியிடம் மாத்திரம் ஒட்டிக் கொண்டவன் மலருடன் ஒழுங்காக பேச கூட மாட்டான் அதற்க்கு காரணம் கீதாராணியும், ரத்னவேலும் அவளை செல்லம் கொஞ்சுவதுதான். 
ஒருநாள் மலர்விழிக்கு ஊட்டும் பொழுது ரிஷிக்கும் அமுதவள்ளி ஊட்ட 
“யார் தட்டுல யாருக்கு ஊட்டுற?” என்று தட்டையும் தள்ளி விட்டு அமுதவள்ளியையும் கீதா அறைந்திருக்க கீதாவை தள்ளிய மலர்விழி குட்டி கீதாராணியாகவே மாறி அத்தையை எச்சரித்தாள். அன்றே கீதாராணி மலர்விழியின் அம்மா மேல் உள்ள பாசத்தை புரிந்து கொண்டிருந்தாள் அவளுக்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. 
ரிஷிக்கு கீதாராணி செய்யும் கொடுமைகளை கண்டு அமுதவள்ளி ரிஷி அங்கிருந்து சென்று விட்டால் போதும் என்று கடவுளை எந்தநாளும் பிரார்த்திக்க அன்று பந்து விளையாடும் பொழுது குட்டி மலருக்கு என்ன தோன்றியதோ! 
காவலாளி கேட்டில் இல்லாத நேரம் கேட்டும் திறந்திருக்க, கீதாராணியின் வேட்டை நாய்களும் மலர் இருக்கும் பொழுது ரிஷியை ஒன்றும் செய்யாது என்பதால் பந்தை தூக்கி வெளியே எறிந்தாள். அது பாதையின் மறு விளிம்பிற்கு உருண்டோடியது. 
எடுத்து கொண்டு வா என்றால் ரிஷி கேட்டை தாண்டி ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டான் என்று அறிந்தவள் கீழே உருண்டு, புரண்டு அழ ரிஷியும் வேறு வழியில்லாது பாதையை கடந்தான். 
அவன் பாதையை கடக்கும் போதே கேட்டை இழுத்து பூட்டியவள் அவனுக்கு பலிப்புக் காட்டிக் கொண்டிருக்க, அங்கே என்ன நடந்ததென்று அறியாத கீதாராணி ரிஷி பாதையை கடப்பதையும், வேட்டை நாய்கள் அவனை துரத்தாமல் இருப்பதையும் கண்டு துப்பாக்கியோடு வந்தவள் வேட்டை நாய்களை சுட்டுத் தள்ளினாள். 
ரிஷி அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவனை இங்க இருந்து போகுமாறு சொன்னாள் மலர்விழி. அவன் காதில் விழுந்தால் தானே! கத்தினாள் ஓடு… ஓடு.. அவனும் ஓடினான்… இந்த வீட்டிலிருந்து… கீதாராணியின் பிடியிலிருந்து… ஆனால் அது கீதாராணியின் காதிலும் விழுந்ததுதான் விதி. 
ரிஷி வீட்டை விட்டு சென்ற கோபமும், அதற்கு காரணம் மலர்விழி என்ற கோபமும், வேட்டை நாய்கள் வேடிக்கை பார்த்திருந்த கோபமும் ஒன்று சேர்ந்து கீதாராணியின் மூளை மங்கிக் கொண்டிருக்கும் பொழுது துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த அமுதவள்ளியை கண்டு மொத்த கோபத்தையும் அவள் மேல் காட்டினாள்.
அந்த வேட்டை துப்பாக்கியை மாற்றி பிடித்தவள் அமுதவள்ளியை தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தாள். குட்டி மலர்விழி தடுக்க கீதாராணியின் ஒரு கையால் அவள் தள்ளி விடப்பட தூர விழுந்தாள்.  
ரத்னவேல் வீட்டிலில்லை. வேலையாட்களால் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது, தடுக்கவோ! வாய் திறக்கவோ முடியாது. 
அமுதவள்ளியின் முதுகிலும், இடுப்பிலும் பல அடிகள் விழ, குப்புற விழுந்தவளை முன் புறம் திருப்பி மார்பிலும் அடித்தாள். அதில் அவளின் மார்பெலும்பு முறிந்திருந்தது. 
இரத்த வெள்ளத்தில் அன்னையை கண்டு அதிர்ச்சியில் மலர்விழி மயங்கி விழ அதை கண்டு ஒரு வேலையாள் கத்தவும் தான் கீதாராணி சுயநினைவுக்கே வந்தாள். 
அதன் பின் தாய் மகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ரத்னவேலுக்கு தகவல் சொல்லப்பட்டு வந்து சேர்ந்தான். 
அமுதவள்ளி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க மலர்விழியும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாள். அவளின் மயக்கம் தெளியவே இல்ல. என்ன நடந்ததென்று அறிந்துக் கொண்ட ரத்னவேல் தங்கையின் மேல் கோபம் கொள்வதற்கு பதிலாக அவளின் தலையை தடவியவாறே அமைதிகாத்தான். 
தங்கையின் மூர்க்கமான கோபத்தால்  முடியாமல் படுத்திருப்பது தனது காதல் மனைவி என்றாலும் கீதாராணியின் மீதான அளவில்லா பாசம் ரத்னவேலை கட்டிப்போட தங்கைக்கு எதிராக ஒரு விரலைக் கூட அசைக்காமல் அமுதவள்ளியை வெறித்தவாறு அமர்ந்திருந்தான். 
கீதாராணி அடிக்கும் பொழுது திருப்பி அடிக்க வேண்டாம் தடுக்கக் கூடவா தோணவில்லை. அப்படி என்ன அந்த சங்கரனின் மேல் காதல் அவளுக்கு என்றுதான் அவனின் எண்ணம் சென்றதே ஒழிய கீதாவின் ஒரே அடியில் அதிர்ச்சியால் அமுதாவால் அசையக் கூட முடியவில்லை என்று தோன்றவே இல்லை.
அந்நேரத்தில் தான் இன்ஸ்பெக்டர் பாண்டியன் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட மனைவியை காண மருத்துவமனைக்கு வந்தார். அவரை அறிந்த மருத்துவர் ஒருவர் அமுதவள்ளியை பற்றி சொல்லி கொலை முயற்சி என்று சொல்ல தானாகவே விசாரணையை ஆரம்பித்தார். 
அவரின் விசாரணையில் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் குழம்பிய இன்ஸ்பெக்டர் பாண்டியன்  அமுதவள்ளி கண்விழித்தாள் என்று மருத்துவரின் மூலம் அறிந்துக் கொண்டு அவளிடம் வாக்குமூலம்  பெற அவளைக் காணச் சென்றார்.
கழுத்துக்கு கீழும் இடுப்புக்கு மேலும் கட்டோடு, நெஞ்செலும்பு முறிந்தமையால் அசைய முடியாதபடி படுத்திருந்தாள் அமுதவள்ளி. கீதா அடித்த ஒரு அடியாவது தலையில் பட்டிருந்தால் அந்த கணமே அமுதவள்ளியின் உயிர் பிரிந்திருக்கும்.  
மெதுவாக கண்விழித்த மலர்விழி தான் மருத்துவமனையில் இருப்பதைக் கண்டு அன்னையை தேடி அழ ஆரம்பித்தாள். நர்ஸ் அன்னை ஐ.சி.யுவில் இருப்பதாக கூற அங்கு போக வேண்டும் என்று அடம்பிடிக்கலானாள். 
பக்கத்து அறை தான் இந்த கண்ணாடி வழியாக பார்க்குமாறு கூறியவர் அகன்றார். மலர்விழி பார்த்தபோது பாண்டியன் அமுதவள்ளியிடம் பேசிக் கொண்டிருந்தார். அவளால் எழுந்துக்கொள்ள முடியாததால் மீண்டும் கண் மூடி உறங்கலானாள். 
பாண்டியன் என்ன கேட்டும் அமுதவள்ளி வாய் திறக்க விரும்பவில்லை. திரும்பத் திரும்ப கூறியதாவது தான் அதிக நாள் உயிரோடு இருக்கப் போவது இல்லையென்றும், ரிஷியையும், மலரையும் அங்கிருந்து அழைத்து சென்று சரவணகுமரனிடம் சேர்க்கும்படியே!  
கணவனின் மீதோ கணவனின் வீட்டாரின் மீதோ புகார் கொடுக்க விரும்பாத இன்னுமொரு அபலைப் பெண் என்ற எண்ணத்துடன் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வெளியேற அமுதவள்ளியை பார்த்துக்கொள்ள நியமித்திருந்த ரத்னவேலின் கையாளின் மனைவி கணவனுக்கு தகவல் சொல்ல அது உடனே ரத்னவேலின் காதுக்கு சென்றது. 
இன்ஸ்பெக்டர் பாண்டியனை பற்றி நன்கு அறிந்திருந்த ரத்னவேல் இப்போதைய சூழ்நிலையில் பாண்டியனை கொன்றால் தான் பிரச்சினைக்கு ஒரே முடிவு என்று பாண்டியனின் இரண்டு மகன்களையும் கடத்தி பாண்டியனை அங்கே வர வழைத்து கொன்று விட்டார். 
 
அந்த நேரம் மனைவியின் பிரசவத்துக்காகவென்றே லீவில் இருந்தவர் இன்ஸ்பெக்டர் பாண்டியன்.  புகுந்த வீட்டில் நடந்த சம்பவத்தால் படுகாயமுற்ற பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நினைத்ததற்காக உயிரை நீத்தார். 
ரத்னவேலிடம் பாண்டியன் வந்து அமுதவள்ளியிடம் பேசியதை அடியாள் சொல்லிக் கொண்டிருக்க அதைக் கேட்ட கீதாராணி அமுதவள்ளி பாண்டியனிடம் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டாள் என்றெண்ணி கோபம் தலைக்கேற மருத்துவமனைக்கு வந்தவள் வலியில் கண் மூடி படுத்திருந்த அமுதவள்ளியின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தாள். 
தூங்கி எந்திரித்த மலர்விழி இக்காட்ச்சியை கண்டு கத்த கண்ணாடி தடுப்பால் அவளின் சத்தம் யாரையும் எட்டவில்லை. அன்னையை காப்பாற்ற கட்டிலிலிருந்து  இறங்கியவள் தலை சுற்றுவது போல் இருக்க, கால்களும் பலமில்லாமல் தள்ளாட கையில் ஏற்றப் பட்டிருந்த ட்ரிப்சையும் கழட்ட வழி தெரியாது கண்ணாடியை தட்டலானாள். 
அந்த சத்தத்தில் நிமிர்ந்த கீதாராணி மலர்விழியைக் கண்டு கண்கள் அச்சத்தில் விரிந்து தொண்டை அடைக்க கைகள் தானாகவே அமுதவள்ளியின் கழுத்திலிருந்து எடுத்துக் கொண்டாள். ஆனால் அமுதவள்ளியின் உயிர் பிரிந்த பின் தான் கையை எடுத்திருந்தாள். 
கீதாராணியின் கையை தடுத்துக் கொண்டிருந்த அமுதவள்ளியின் இரு கைகளும் கீழே விழவே! அன்னை இந்த உலகத்தை விட்டு சென்று விட்டாள். அத்தை அவளை கொன்று விட்டாள் என்று அந்த பிஞ்சு மனம் தாங்காது மீண்டும் மயங்கிச் சரிந்து விழிக்கும் போது அனைத்தையும் மறந்தும் போனாள்.
கீதாராணியின் வாக்குமூலத்தை பதிவு செய்து அவளை போலீஸ் கைது செய்யும் பொழுது தனக்கு எல்லாம் நியாபகம் வந்த உண்மையை சொல்ல வேண்டும் என்று மலர்விழி எண்ணி இருந்தாள்.
அது போலவே பெத்தத்திலிருந்தே தன்னை திரும்பியும் பாராத, தன் சகோதரனை கொடுமைப படுத்திய தாயை கைது செய்ய தான் தான் காரணம் என்று அவள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அமுதனும் எண்ணினான். அதனால் தான் ப்ரதீபனும், அமுதனும் கீதாராணி பதுங்கி இருந்த  கட்டிடத்துக்கு சென்றதே!
கீதாராணியின் வாக்குமூலத்தின் படி அண்ணனும் தங்கையும் எல்லா விஷயங்களையும் சேர்ந்தே செய்வார்கள். அண்ணன் நலனுக்காக, தங்கை செய்தாலும், தங்கையின் நலனுக்காக அண்ணன் செய்தாலும் செய்த பின் அதை பகிர்ந்தும் கொள்வார்கள்.  
ரிஷியை நகைக் கடை திறப்பு விழாவில் சந்தித்தது. அவனே வந்து நலம் விசாரித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. அதன் பின் சரவணகுமரனின் மகன் என்ற ஒரே காரணத்தால் அவனை அச்சுறுத்த பதிலுக்கு அவனும் எச்சரித்தது. அவன் உயிரோடு இருக்கக் கூடாதென்று அவனை கொல்ல திட்டமிட்டது. கொன்ற பின் அதை கீதாராணியிடம் பகிர்ந்திருந்தான் ரத்னவேல். 
அதையும் குடி போதையில் உளறிய கீதாராணி அமுதவள்ளியை பற்றி மூச்சு விடவில்லை. ஆனால் மலர்விழிக்கு புரிந்து போனது. அன்னையின் இறப்பு எவ்வாறு நடந்தது. யார் அன்னையை கொன்றது என்பது தந்தைக்கு நன்கு  தெரியும். தெரிந்திருந்தும் அவரின் தங்கை மீதான பாசம் பிரம்மிப்பை ஏற்படுத்த தான் தான் எல்லாவற்றையும் செய்தது என்று தந்தை அறிந்து கொண்டால் கண்டிப்பாக அவர் முந்திக் கொள்வார். என்ன செய்வது என்று யோசிக்கும் வேளையில் தான் கீதாராணி கால் இடறி விழுந்து அமிலத்தில் குளித்திருந்தாள். 
இடது பக்கம் கன்னம் முதல் இடது கை, கால் என எல்லா இடங்களிலும் அமிலத்தால் ஏற்பட்ட ஏறி காயங்கள். இடது கை முற்றாக தசை கிழிந்து எலும்பு வெளியே தெரிந்துக் கொண்டிருந்தது. விழும் பொழுது படியில் பட்டு வலது கால் எலும்பு முறிந்து தொங்கிக் கொண்டிருந்த நிலைமையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள் கீதாராணி. 
அமுதனும், ப்ரதீபனும் உள்ளே வரும் போதே கமிஷ்னருக்கு லொகேஷனை பகிர்ந்துவிட்டே வந்திருந்தமையால் செல்வமும் தொண்டர்களும் அந்த இடத்திலையே கைது செய்யப் பட்டு சென்னைக்கு அனுப்பப்பட விஷயமறிந்த விமானம் மூலம் வந்து சேர்ந்தார் ரத்னவேல். 
கிழிந்தனராக படுத்துக்க கிடக்கும் தங்கையை கண்டு  துடிதுடித்துப் போனவர் தான் வகிக்கும் பதவியையும் மறந்து கதறி அழலானார். தேற்றத்தான் யாருமில்லை. பெற்ற மக்களின் சிந்தனையும் வரவில்லை.  
அழும் ரத்னவேலை வெறித்துப் பார்த்தவாறே அமர்ந்திருந்த மலர்விழிக்கு அன்னையின் இறப்புக்கு நியாயம் கிடைத்த நிம்மதி நெஞ்சில் பரவ கண்களை துடைத்துக் கொண்டவள் தந்தையை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.
“அத்த இப்படி கட்டோட படுத்துகிட்டு இருக்குறத பாக்குறப்போ அம்மா படுத்துக்க கிட்டு இருந்தது நியாபகம் வருதில்லப்பா…” 
திடுமென மக்களின் குரல் அருகில் கேட்டதும் அவள் சொன்ன விஷயம் ரத்னவேலின் மூளையில் சரியாக  ஏறவில்லை. 
“ஆமாம்மா… என் அமுதா… என்ன விட்டு போய்ட்டா… இப்போ… என் கீத்துமா…கு இப்படி ஆகிருச்சே. நீ அங்க இருந்தும் இப்படி ஆக விட்டியே!” மீண்டும் கதற 
“நான் அங்க இருந்தப்போ தான் அத்த அம்மாவ அடிச்சாங்கப்பா அதிர்ச்சில அவங்களால ஒன்னும் பண்ண முடியல என்னாலையும் தான்” 
கண்ணாடி வழியே கீதாராணியின் மீது வைத்த பார்வையை அகற்றாது பார்த்தவாறே மலர் பேச  அவள் சொன்ன விஷயம் அப்போதுதான் ரத்னவேலுக்கு உரைத்தது. 
“இப்போ… இப்போ… நீ என்ன சொன்ன?”  கதறிக் கொண்டிருந்தவர் சர்ரென்று நிறுத்தி வினவ 
“அம்மா இன்னொருத்தர் காதலிச்சத தெரிஞ்சி அவர அவங்க கண்ணு முன்னாடியே கொன்னு அது அவங்களுக்கு மறந்து போய் அது தெரியாமளையே உங்க டாச்சரெல்லாம் தாங்கிக் கிட்டு  புள்ளய பெத்துக் கிட்டாங்களே! அத சொல்லவா?
இல்ல. அத்த பண்ண எல்லா கொடுமைகளையும் தாங்கிக் கிட்டு உங்க கிட்ட அவங்கள பத்தி ஒரு வார்த்தக் கூட தப்பா சொல்லாம அமைதியா இருந்தவங்கள அத்த அவங்க கையாலையே கழுத்து நெருச்சி கொன்னாங்களே அத சொல்லவா?” 
ரத்னவேலின் அதிர்ச்சியான முகத்தைக் கூட பார்க்காமல் கீதாராணியையே பார்த்தவாறு கூறிக் கொண்டிருந்தவளை ஏறிட்ட ரத்னவேல் 
“இதெல்லாம் உனக்கு யார் சொன்னா? எல்லாம் உனக்கு நியாபகத்துல வந்ததா? எப்போ? அப்போ கீதாவுடைய இந்த நிலைமைக்கு நீதான் காரணமா?” 
முதலில் அதிர்ச்சியடைந்தவர் கோபம் அனல் பறக்க “உங்கம்மா ஒரு துரோகி அவனை நெனச்சிக்கிட்டே என் கூட வாழ்ந்தவ அவள பத்தி பேசாத”  
“ஒரு தடவையாவது அன்பா அவங்க கிட்ட பேசி இருக்கீங்களா? அவங்க மனசுல என்ன இருக்குனு கேட்டீங்களா? கேட்டிருந்தாத்தானே தெரிஞ்சிருக்கும்”
“ஏய்… என் பொண்ணா இருக்குறதுன்னா இரு இல்ல….” கையை மலரின் கழுத்துக்கு நேராக கொண்டு செல்ல அவரின் கைகை பற்றிய கமிஷ்னர் விலங்கிட்டிருந்தார். 
“யோவ் என்னய்யா பண்ணுற?” ரத்னவேல் கத்த 
“கண்ணு என்ன அவிஞ்சு போய்யிருச்சா… விலங்கு மாட்டுறாங்க மாமோய்” அமுதன் சட்டை கையை மடித்தவாறே அவ்விடத்துக்கு வர 
“நீ… நீ… செத்துட்டல்ல…”
“யோவ் மாமா அதிர்ச்சியாகி நெஞ்ச புடிச்சுகிட்டு விழுந்துடாத அப்பொறம் இந்த ஆஸ்பிடல்ல தங்கச்சிக் கூடவே படுக்க வேண்டி இருக்கும்” 
“டேய்…” அமுதனை அடிக்க கை ஓங்க… அவரை லாவகமாக அடுத்த பிரதீபன் 
“அன்னைக்கி நான் இல்லாம போய்ட்டேன் அதான் ரிஷி மேல கை வச்ச…. இன்னைக்கி இவன் மேல வைக்க பாக்குறியா? என்  ஸ்டைலே தனி உன்ன மாதிரிதான் கொன்னுட்டுதான் என்னான்னே கேப்பேன். உன் நல்ல நேரம் போலீஸ்ல புடிச்சி கொடுத்தா மட்டும் போதும்னு உன் பொண்ணு சொல்லிட்டா… இல்ல…. உள்ள போய் அடங்கி இருக்கணும் உன் வாலுத்தனத்தை காட்ட நினைச்ச உள்ள வச்சே போட்டுடுவேன்” 
ப்ரதீபனின் மிரட்டலுக்கெல்லாம் அசரும் ஆளா அவரு “யாருடா நீ… இவனுக்கு அடியாளா?” கையில் விளங்கிட்டிருந்தாலும் திமிரு அடங்காமல் உறும 
“அதெல்லாம் உனக்குத்தான் தேவ எங்களுக்கில்லை. யாதவ் மாதவ ஊர் பூரா தேடினியே ஊட்டுக்குள்ள தேடினியா?”
“நீயாடா அது?” 
“என் வீட்டுக்குள்ள இல்லடா உன் வீட்டுக்குள்ள” கேலியாக சிரிக்க அதிர்ச்சியாக மலர்விழியை திரும்பிப் பார்த்தார் ரத்னவேல். 
“இன்ஸ்பெக்டர் பாண்டியன் நியாபகம் இருக்கா பா…. நேர்மையான போலீஸ் அதிகாரி. விசாரிச்சதுக்கே அவர் பசங்கள கடத்தி கொன்னீங்களே! அவருடைய பசங்க பேர் தான் யாதவ் மாதவ். அவங்களுக்கும் நான் பார்த்த வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. ஆனா நீங்க பண்ண ஒவ்வொன்னத்துக்கும் சம்பந்தப் படுத்திதான் வேல பார்த்தேன். நீங்க செஞ்ச, செஞ்சிகிட்டு இருக்குற எல்லா ஆதாரங்களையும், அத்த கொடுத்த வாக்குமூலம் உட்பட எல்லாம் கமிஷ்னர் கிட்ட கொடுத்துட்டேன்” என்றவள் 
கமிஷ்னரை ஏறிட்டு “கூட்டிட்டு போங்க சார்” சொல்லும் போதே மனதில் பெரும் நிம்மதி பரவியது. 
 
“நன்றிமா… ஒரு பொண்ணா நீ இவ்வளவும் செஞ்சிருக்கியே அதுவே பெரிய விஷயம். பழிவாங்கணும்னு சட்டத்தை கைல எடுக்காம தப்பு பண்ணவங்கள சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தணும்னு நினச்சியே உன்ன நெனச்ச ரொம்ப பெருமையா இருக்கு” இவ்வளவு நேரமும் அமைதியாக அங்கே நடப்பவற்றை பார்த்திருந்த கமிஷ்னர் மலரிடம் கூறிவிட்டு அமுதன் ப்ரதீபனிடம் திரும்பியவர். 
“மினிஸ்டர் எந்த வழியிலும் தப்ப முடியாத படி சட்டம் அவர பார்த்துக் கொள்ளும் ஆனா… அவருடைய ஆளுங்கள வச்சி உங்களை ஏதாவது பண்ண ட்ரை பண்ணுவார் சோ ஜாக்கிரதையா இருங்க. போலீஸ் ப்ரொடெக்சனுக்கு ஏற்பாடு பண்ணுறேன்” ஒரு சிறு புன்னகையுடன் விடை பெற ரத்னவேலை கைது பண்ணி வண்டியில் ஏற்றி செல்வது புகைப்படங்களாகி சமூக வலைத்தளங்களில் வளம் வர ஆரம்பித்தது. 

Advertisement