Advertisement

தாயைக் கண்டவுடன் மனைவியுடன் தாயையும் ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்றனர். காத்திருந்து கொரோனா டெஸ்ட்டுக்கு கொடுத்துவிட்டு ஜி.ஹெச்சில் இடமில்லாததால் அருகினில் உள்ள கொரோனாவிற்குச் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தம் தம் பணிக்குச் சென்றனர். மாலையில் மருத்துவமனை சென்று பார்த்து வந்தனர்.

               அடுத்த நாள் கொரோனா டெஸ்ட் பாசிட்டிவ் என வந்துவிட்டது. மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தாலும், வசந்தகுமார் தம்பதி காலையிலும், மாலையிலும் அரிசிக்கஞ்சி, காய்கறி சூப், நிலவேம்பு கசாயம் என தயாரித்துக் கொடுத்துப் பார்த்துவிட்டு வந்தனர். ஐந்து நாட்கள் கழித்து காய்ச்சல் விட்டு சரஸ்வதியம்மாள் சிறிது தலைதூக்கி அமர்ந்தாள். பத்தாவது நாள் நாளை டிஸ்சாhஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என மருத்துவர்கள் கூறினார்கள். ஒன்பதாவது நாள் மாலை வசந்தகுமார் தாயைக் காணச் சென்றபோது தனக்கு தலைவலிப்பது போல் இருக்கிறது. கண்ணெல்லாம் கரிக்கிறது. தொண்டை அடைப்பது போல உள்ளது என்று டாக்டரிடம் கூறியதும் உடனே மருத்துவமனையில் உள்ளே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

               ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டால் சிகிச்சை செய்வது எளிதாயிருக்கும் என்று கூறி ஒரு ஊசியைப் போட்டு நான் ஸ்கேன் சென்றருக்கு எழுதித் தருகிறேன் ஆட்டோவில் போய் எடுத்துவிட்டு வாருங்கள் என்றார்.

               எழுந்து ஆட்டோவிற்கு வருவதற்கு முயற்சிக்கையிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று மருத்துவர் கூறிவிட்டார். அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதும் கொரோனா சிகிச்சைக்குரிய ஆடைகள் அணியப்பட்டு, கவச உடை அணிந்த செவிலியர்களால் சக்கர நாற்காலியில் அமர்த்தி கொண்டு சென்று, வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அந்தோ பரிதாபம் பத்து நிமிடத்தில் வசந்தகுமாரின் உயிர் பறந்து சென்று ஆவியுலகில் சஞ்சரித்தது.

               தாங்கொணாத் துயரத்தால் துடித்தாள், துவண்டாள், கத்தினாள், கதறினாள். அத்தனை வேதனையிலும் சடலம் அனாதையாய் கிடப்பதைக் கண்ணுற்றுத் தந்தைக்கு போன் செய்து விபரம் சொன்னாள். அப்பா யாருமேயில்லையப்பா, நான், நான் மட்டுமே செய்வதறியாது துயரப்பட்டு நிற்கிறேன் என்றாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் செல்லப்பாண்டியன் தன் குடும்பத்தோடும், சில உறவினர்களோடும் வந்து சேர்ந்தார். செய்யவேண்டிய ஈமச்சடங்குகள் நடந்தேறின.

               இரண்டு நாட்கள் சென்றபின்பே நன்கு குணமடைந்த சரஸ்வதியை வீட்டிற்கு அழைத்து வந்தனர். வந்த உடனேயே இவளால்தான் என் பிள்ளை போய்விட்டான். இவள் சொல் பேச்சு கேட்காதவள். இவள் இங்கு இருக்கக்கூடாது என்று கூவியவாறே பிரியாவின் கூந்தலைப் பிடித்து இழுத்து கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டாள். கூடியிருந்த அனைவரும் திக்பிரமை பிடித்து அப்படியே சிலையென நின்றுவிட்டனர். அழுவதற்கே திராணியற்று கண்ணீர் வற்றி வறண்ட நிலையில் ரத்தம் உறைய நின்றாள்.

               தன்னிலை மறந்த செல்லப்பாண்டியன் மகளை இழுத்துக்கொண்டு குடும்பத்தினர் (தணிகாசலம்), உறவினர்களுடன் வீடு வந்து சேர்ந்தார். ப்ரியா கொதித்தாள். குமுறினாள். தனக்கு விருப்பமில்லாதத் திருமணம் என்றால்கூட, நீங்கள் விரும்பி ஏற்றுக்கொண்டீர்களே. ஏன் வந்தீர்கள், ஏன் ஏற்றுக்கொண்டீர்கள், இந்த ஐந்து வருடத்தில் என்னை சோதனைக்குள்ளாக்கி ஏமாற்றிவிட்டீர்களே. நான்கு வயதில் ஒரு குழந்தை, வயிற்றில் ஏழுமாதத்தில் ஒரு சிசு. நீங்கள் தந்தப் பரிசாக நிக்கலாம். ஆனால் நான் பாவியாகிவிட்டேனே. திருமணமாகாமல் இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருப்பேனே, இந்த விதி சதிசெய்து என்னை வீழ்த்திவிட்டதே. ஐயகோ நான், என்ன செய்வேன், பதறித் துடித்தாள். மூலையில் சோர்ந்து சரிந்தாள். திவ்யா குட்டியை மடியைவிட்டு இறங்க மறுத்தாள். தாயின் முகம் பார்க்கக்கூட பயந்து அலறினாள். அப்பா வேணும், அப்பா வேணும்னு அழுதாள்.

               எம்மா பிரியா பத்துநாள் மெடிக்கல் லீவிற்கு அப்ளை பண்ணிவிட்டேன். பிள்ளைத்தாச்சிப் பெண் நீ. பச்சைத்தண்ணீர்கூட குடிக்காமல் கிடந்தால், வயிற்றுப்பிள்ளை என்னாகும், உன் உடல்நிலை என்னாகும், ஏதாவது சாப்பிடம்மா கெஞ்சிக் கேட்டார். அப்பா நான் சாப்பிட்டு என்ன ஆகப்போகுது. சாப்பிடாமல் என்ன ஆகப்போகுது. நான் உங்களுக்குச் சுமக்கமுடியாத பாரமாகிப் போனேனே. என்னால் உங்களுக்குப் பாரஞ்சுமக்கும் நிலையையே உருவாக்கி விட்டேனே. அப்பா எனக்கு ஆனந்த பிரியா என்று பெயர் வைத்து ஆனந்தத்தை விட்டுவிட்டு ப்ரியா என்று ஆக்கினீர்களே. அதனால்தான் என் வாழ்வில் ஆனந்தமே இல்லாமல் ஆகிவிட்டதா, எனக்குப் பிரியா, குரியா என்ற பெயரெல்லாம் வேண்டாம். ஆனந்தி என்றே அழையுங்கள், அப்படியாவது ஒரு துளி ஆனந்தமாவது உண்டாகுதா என்று பார்ப்போம், என் செல்லம் திவ்யா தகப்பனில்லாத பிள்ளையாகி விட்டாளே புலம்பித் தீர்த்தாள்.

               விடுமுறை கழிந்து தாய் வீட்டிலிருந்தே பணிக்குச் சென்று வரலானாள். வேலை, வேலை என்று வேலையில் மூழ்கி மனித இயல்பைத் தாண்டி இயந்திர இயக்கமாய் மாறினாள்.

               பிரகாஷின் தாய், தந்தை அவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டி நச்சரித்தனர். நான் உங்களுக்கு மகனாக மட்டுமே வாழ ஆசைப்படுகிறேன். கணவர், தந்தை போன்ற பதவிக்கெல்லாம் தகுதியற்றவனாக தற்பொழுது இருக்கிறேன். எனக்கு வயதும் அதிகமாகிவிடவில்லை. எனக்கு என்று ஏதாவது வாய்ப்பிருந்தால், காலமும் நேரமும் ஒத்துழைத்தால் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்கிறேன். தாத்தா பதவி கூட கிடைக்க வேண்டும் என்றிருந்தால் கிடைக்கும். ஆனால் இப்பொழுது என்னை எந்தத் தொந்தரவும் செய்யக்கூடாது. கம்பெனி வேலை, வேலை முடிந்தால் வீடு என்ற சிறு கோட்டிலே என் வாழ்வு நடக்கட்டும். நானும் சந்தோஷமாயிருப்பேன், நீங்களும் நிம்மதியாயிருக்கலாம், எப்படி என் விருப்பம் நிறைவேறுமா என்று கேட்டான். உன் விருப்பப்படியே நடந்து கொள்கிறோம் என்றனர்.

               திவ்யா, பவானி இரு குழந்தைகளின் மழலை மொழியில் குழலினிது யாழினிது என்பர். தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார் என்பதற்கேற்ப செல்லப்பாண்டியன் குடும்பத்தார் பொழுதைக் கழித்து வந்தனர். நாட்கள் கடந்து ஆனந்தி நிறைமாதக் கர்ப்பிணியானாள். பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். ஏங்கி, ஏங்கி அழுததாலும் ஒழுங்கான உணவு சரியான பராமரிப்பு இல்லாததால் பிரசவம் மிகவும் சிக்கலாய் அமைந்தது. மிக மிக உடல் வேதனையடைந்து ஆண் மகவைப் பெற்றாள். குழந்தையைப் பார்த்து பட்ட துன்பம் மறக்கமுடியாது, மாமியாரின் கடுஞ்சொற்களும், அறைந்த அறையுமே அவள் எண்ணத்தில் ஓடி மேலும் துன்புற்றாள். அரசு வேலை என்பதால் பிரசவ விடுப்பு ஆறுமாதம் கிடைத்தது. ஓரளவு உடல் உபாதையும், மனத்துயரும் குறைந்து சாதாரணமாய் இருப்பதற்கு முயன்றாள்.

               ஆறுமாதம் நிறைவடையவும் பணிக்குத் திரும்பினாள். பிரகாஷ் பிரியாவின் இந்த நிலையறிந்து மிகவும் துயருற்றான். ஸெல்லில் பேசுவதற்கு முயன்றான். பலனில்லை. மெஸெஜ் அனுப்பினான். பிரயோஜனம் இல்லை. மருத்துவமனை வளாகத்தில் சந்திக்க முற்பட்டான். சந்தர்ப்பம் கை கொடுக்கவில்லை.

               பிரகாஷ் பெற்றோரிடம் பேசினான். அவர்கள் முதலில் மறுத்தாலும் எறும்பு ஊரக் கல்லும் தேயுமே என்பதாய் மனமிரங்கினர். நீ தனி மரமாய் இருப்பதைவிட ஒரு அபலை பெண்ணுக்கு வாழ்வளிக்கிறேன் என்கிறாய், கேட்பதற்கும், பேசுவதற்கும் நன்றாய்த்தான் உள்ளது. ஆனால் யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துவருமா? உற்றார் உறவினர் என்ன கூறுவர். ஊருல உலகத்துல பெண்ணா இல்லை, இரண்டு பிள்ளைகளுடன் தாயை மணக்கிறான், கேட்கவே அருவருப்பாயிருக்கிறது என்பார்களே.

               அம்மா அவள் வாழ்வில் புகுந்து கரும்புள்ளியை உருவாக்கியது நான். அவளின் அத்தனை இன்னல்களுக்கும் காரண கர்த்தா நான். அவள் வாழ்வு நலமடையச் செய்வதற்கு நான் உறுதுணையாயிருக்க வேண்டுமல்லவா? அவசரம் வேண்டாம், நின்று நிதானித்துச் செயல்படுவோம் என்றான்.

               திவ்யா பள்ளியில் சேர்க்கப்பட்டாள். சுதர்சன் நடைபயின்று கொஞ்சும் மழலையில் மிழற்றினான். மக்களின் மெய்தீண்டி அவர்தம் விளையாட்டில் ஆனந்தம் கொண்டாள் ஆனந்தி.

               பிரகாஷின் தாய் தந்தை ஆனந்தியின் வீட்டை அடைந்து மகனின் உள்ளக்கிடக்கையை எடுத்துக் கூறினர். அவர்களுக்கும் நம் பிள்ளை சிறுவயது எத்தனை காலத்திற்கு இப்படியே இருக்கமுடியும் பெயருக்கு ஒரு துணையிருந்தால் நல்லதுதானே என்று நினைத்தனர். இன்னும் கொஞ்சம் நன்றாக யோசித்துச் செய்வோம் என்றனர்.

               விதவை மறு திருமணம் பற்றி மகளிர் காவல்நிலையத்தில் எடுத்தியம்பி, ஒரு நல்ல நாளில் பிரகாஷ் ஆனந்தி திருமணம் நடந்தேறியது.

               சிறுவர் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினான். விதவை மறுமணத்தை ஏற்று ஏற்றம் பெற்றான் பிரகாஷ்.

               யாருக்குமே கிடைக்காத பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறதே மலர்பொதி. இன உன்னைத் தொடலாமல்லவா கொஞ்சிக் கேட்டான். வார்த்தை ஏதுமின்றி அவன்மேல் சாய்ந்தாள். நான் இப்பொழுது மலர்ப்பொதியல்ல. என்னை ஆனந்தி என்றே அழையுங்கள். நம் பிள்ளைகள் உங்களை என்ன திணறுகிறாய் அப்பா என்றுதான் அழைக்க வேண்டும் அதில் மாற்றமில்லை. நமது இல்லறம் காதல் கனிந்த நல்லறமாக நடக்கட்டும். மனமும் கருத்தும் ஒத்த தம்பதியராய் இருப்போம் என்றுகூறி இன்ப லாகிரியில் மூழ்கினர்.

Advertisement