Advertisement

  ராசிப்பொருத்தம் அது, இது சடங்கு எதுவும் வேண்டாம். எங்கள் பையனுக்கும், உங்கள் பெண்ணுக்கும் நிச்சயம் நடந்ததாகவே இருக்கட்டும். திருமண நாள் என்று மட்டும் பேசி எப்படி நடத்த வேண்டும் என்பதையும் பேசி விடுவோமே.

               ப்ரியா இரவு முழுவதும் அழுதழுது விடியலில் தூங்கினாள். பார்வை தெளிவில்லாமல் கண்ணீர் பொங்கியது. இமைகள் இரண்டும் வீங்கி முகத் தோற்றமே மாறியது.

               அன்பே பிரகாஷ் நாம் உடலால் பிரியவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆண்டவன் என் தலையில் இரட்டை வாழ்க்கை என்று எழுதிவிட்டான். நான் மனதால் உங்களிடமும், உடலால் வசந்தகுமாரிடமும் வாழவேண்டிய அற்பமான, இழிந்த நிலையை என் தந்தை எனக்கு ஏற்படுத்திவிட்டார். நான் எவ்வளவு முயன்றும் அவரது ஏற்பாட்டையும் மீற முடியவில்லை. இனியும் நான் உங்களிடம் ஸெல்லில்தான் தொடர்பில் இருந்தால் இந்த வாழ்விலும் பெருத்த அவமானத்தை அடைய வேண்டியதிருக்கும். தயைகூர்ந்து என்னை மன்னித்து மறந்துவிடுங்கள். நீங்கள் உங்கள் மனம்போல் இரட்டை வாழ்க்கை வாழ்ந்தால் வாழுங்கள். இல்லையென்றால், உங்கள் விருப்பம். பிரியா என்று ஒருத்தி இருந்தாள். அவள் இந்த உலகத்தைவிட்டே சென்றுவிட்டாள் என்பதை மனதில் உறுதியாகப் பதிய வைத்துக் கொள்ளவும். அழுதழுது இரவே ஸெல்லுக்கு மெஸேஜ் அனுப்பிவிட்டாள்.

               வீங்கிய இமைகளுடன் கண்கள் துருத்தியபடி சோகையாய் நடந்து வந்த பிரியாவை பிரகாஷ் பார்த்து நெஞ்சம் கலங்கினாள். என்ன என்பது அவளுக்கு மட்டுமே புரியும். கண்ணசைவால் கேட்டவனுக்கு எல்லாம் முடிந்துவிட்டது என்று சைகையில் புரிய வைத்தாள்.

               வசந்தகுமாருடன் பிரியாவின் இல்வாழ்க்கை துவங்கியது. எந்தவித ஐயப்பாடும் ஏற்படா வண்ணம் உடலால் இணைந்து வாழ்ந்த பிரியா ஒரே வருடத்தில் பெண் சிசுவை ஈன்றெடுத்தாள். இருவீட்டாரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

               குழந்தையை அச்சு அசல் அம்மாவைப் போல் ரோஜா பூ மாதிரியே இருக்கிறாளே என்று பாராட்டினர்.

               பிரியாவும் என் செல்லக் கண்ணம்மா, செல்லக்குட்டி, பூஜிக்குட்டி கொஞ்சி விளையாடி பழையதை மறந்து புதிய வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்து திருப்தியானாள். வாழ்வில் வசந்தம் வீசியது.

               பிரியா வேலைக்குச் செல்லும் நேரங்களிலெல்லாம் பொன்னொரு தட்டு, பூவொரு தட்டு எனப் பேத்தியைக் கொஞ்சி மகிழ்ந்து பாராட்டிப் பேணி சரஸ்வதி வளர்த்தாள். பேத்தியின் மழலை மொழியில் ஒருசேர உலகத்து இன்பம் யாவும் கிடைத்தால் போல் குதுகலித்தாள். பிரியா திவ்யாக் குட்டியின் வளர்ச்சியும், வனப்பும் கண்டு புளங்காகிதமடைந்தாள். தனக்கு இப்படியொரு நல்வாழ்க்கை அமையச் செய்ததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்த கோவிலுக்குச் சென்று பூஜை செய்து, படையலிட்டுத் திரும்பினர்.

               அன்று காலை விழித்தெழும்பொழுதே தலை சுற்றல், குமட்டல் என்ற பிரச்சினையோடு எழுந்தாள். ஏங்க எனக்கு என்னவோபோல் இருக்கிறதே. பயமாயிருக்கு, நேற்று கோவிலுக்குப் போனதால் அலைச்சல் திரிச்சல் அதான் அசதியாயிருக்கும் ஒன்றும் செய்யாது. மெதுவா எழுந்திரு என்றாள்.

               பிரியா வழக்கமாய் அதிகாலை எழுந்து முற்றம் தெளித்துக் கோலமிட்டு, காலை டிபன் தயாரிப்பிலிருந்து மதிய உணவு வரை அத்தனையும் சமைத்து தனக்கும் மதிய உணவு எடுத்துக்கொண்டு, வசந்தகுமுhருக்கும் லஞ்ச் பேக்கில் எல்லாம் எடுத்து வைத்து தண்ணீர் முதல் தயாராய்க் கொடுத்து விடுவாள். அன்று கோலமிட்டு விட்டு சமையலறைக்குள் புகுந்து அனைவருக்கும் தேனீர் தயாரித்துக் கொடுத்து, தானும் குடித்தாள், அவ்வளவுதான் வாந்தி அப்படியொரு வாந்தியெடுத்து மயக்கமானாள். வசந்தகுமார் அருகிலுள்ள லேடி டாக்டரிடம் அழைத்துச் சென்றான். பிரியா மீண்டும் கருத்தரித்திருக்கும் நல்ல செய்தியை டாக்டர் சொன்னார்கள்.

               சந்தோசமாகவே வந்து அன்னையிடம் அம்மா பிரியா மீண்டும் கருவுற்றிருக்கிறாள். உனக்குச் சந்தோசம்தானே என்று கேட்டான்.

               சரஸ்வதி அம்மாவிற்கு எங்கிருந்துதான் அத்தனை கோபம் வந்ததோ, நாக்கில் சனி அமர்ந்து விட்டானோ, என்னடா சொல்கிறாய், எத்தனை நாட்களாகிறது. கருவைக் கலைத்துவிடு, இது நமக்கு வேண்டாம், ஒரு குழந்தை போதாதா? முதல் குழந்தை ஆணாய் பிறந்திருந்தாலும் இரண்டாவது பெண் பிறந்தால் பரவாயில்லை எனலாம். முதலிலேயே பெண் குழந்தை பெற்றவளுக்கு இரண்டாவது பெண் பிறந்தால் சமாளிக்க முடியுமா? வேண்டாம், வேண்டவே வேண்டாம், கருவை அழித்துவிடு, அம்மா என்னம்மா சொல்கிறீர்கள், அறுபது நாளாகிவிட்டதே என்றவனிடம் சோர்ந்து அத்தை கருவைக் கலைப்பது பாவமல்லவா, இந்த ஒன்றையும் பெற்றுக்கொண்டு மறுபடி கருத்தரிக்காமல் பார்த்துக் கொள்வோம். இரண்டு குழந்தைகள் நமக்கு வளர்க்கமுடியாதா, அவர்களும் ஒருவருக்கொருவர் பாசமாய், பண்பாய் வாழ்வர், துணையாய் நிற்பர். ஒரே ஒரு பிள்ளைதான் என்றால் நம் திவ்யாச் செல்லம் விளையாட, சேடிக்கைப் பேசி, இன்புற யாருமின்றித் தவிப்பாள் தானே. அத்தை உருவாகிவிட்டது. உருவானதை அழிக்கவேண்டாம், உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். அத்தை அழிக்க வேண்டாம், வளரட்டும் அத்தை என்றாள்.

               உனக்கு ஆம்பள பிள்ளை வேணும்னு ஆசை, உனக்கு ஆம்பளை பிள்ளை பிறந்தா எம்பிள்ளை செத்துருவாண்டி. வாயை மூடிக்கிட்டு பெரிய மனுஷி சொல்வதைக் கேட்டு கருவை அழிச்சிட்டு வாடி என்று கத்தினாள். பிரியா கதறி கதறி அழுதாள். என்னங்க அத்தை இப்படி பேசுகிறாங்க. நான் என்ன செய்யட்டும். நீங்க என்ன சொல்கிறீங்க. பதறித் துடித்தாள்.

               ஏண்டி, அவனை இழுக்கிறாய். நீ பெத்து போட்டுட்டு ஜாலியா வேலைக்குப் போயிட்டு வாறேன்னுட்டு குலுக்கிக்கிட்டு போயிருவ. நான் உனக்கு ஆயா வேலை பார்த்திட்டு அடிமையாக் கிடப்பேன்று நினைச்சியா. எனக்கு வேறு வழியில்லைன்னு நினைச்சியா, நான் என் மூத்த பையன்ட்ட போய் சமத்தா இருப்பேன், நீ தான் சீரழியப் போறவ உன் வழியைப்பாரு என்றாள்.

               கதறிக்கதறி அழுத தன் அருமை மனைவியை அணைத்து ஆறுதல் கூறிய வசந்தகுமார். அம்மா இப்படித்தான் பிடித்த பிடியில் நிற்பார்கள். எனக்கும் கருவை அழிப்பது பாவமாகத் தோன்றுகிறது. அம்மா மனம் மாறுகிறதா என்று பார்ப்போம். இல்லையென்றால் கடவுள் விட்டவழி என்று நடப்போம். கருவை அழிக்க வேண்டாம், ஆகவேண்டியதைப் பார் என்றான்.

               பிரியா எழுந்து சமையலறைக்குள் நுழையும்போது சரஸ்வதியம்மாள் தனது உடமைகளாகத் துணிமணி அடங்கிய ஒரு பேக்கைத் தூக்கிக் கொண்டு வந்தாள். அம்மா என்ன இது கேட்ட மகனிடம் நீயெல்லாம் ஒரு மகனாடா, பெற்றதாயின் சொல்லைத் தட்டிவிட்டு இன்னைக்கு வந்த பொண்டாட்டிச் சொல்லைக் கேட்டு கொண்டாடிகிட்டு இருக்க. நான் போறேன். உன் அண்ணன் வீட்டிற்கு என்று கிளம்பிவிட்டாள்.

               அம்மா நீங்க மட்டும் ஒரு பிள்ளையிடம் போபமென்றால் இன்னொரு பிள்ளையிடம் செல்கிறீர்களே. நாளை எங்களுக்கும் இதே நிலை வரலாமில்லையா என்று கேட்ட மகனைத் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள்.

               பிரியா க்ளினிக்குக்கு விடுமுறை சொல்லிவிட்டு, ஹோட்டலிலிருந்து உணவு தருவித்து உண்டுமுடித்தனர். நீங்கள் பணிக்குச் செல்லுங்கள், நான் திவ்யாக் குட்டியோடு அம்மா வீடு சென்று வருகிறேன். இரவில் என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்று திட்டமிடுவோம் என்றாள்.

               திவ்யா செல்லத்திற்கு ஒரு வயது நிரம்பிய உடனேயே தாய்மாமன் ஆனந்தகுமாருக்கும், வர்ஷாவிற்கும் திருமணம் நடந்தது. அவனுக்கும் பவானி பிறந்து ஒரு வயதாகிறது. துருதுருவென கருவண்டு கண்களுடன் பஞ்சுப்பொறியாய் இருந்த தனது மூன்று வயது திவ்யாவை அழைத்துக் கொண்டு தாய்வீடு வந்தாள் பிரியா. தாய், தந்தை அளப்பரிய பாசத்தைப் பொழிந்தாலும் தம்பியின் மனைவி வரவேற்பாளா, என்ற திகிலும் பிரியாவின் மனதில் இருந்தது.

               கனியும் மழலை மொழிக்கேட்டு ஓடி வந்த செல்லப்பாண்டியனும், வடிவுக்கரசியும் பேத்தியைக் கொஞ்சி மகிழ்ந்தனர். ஆனந்தமடைந்தனர். எனினும் மகளின் வாடிய முகம் கண்டு கலங்கினர். என்னம்மா திடீரென்று வந்து நிற்கிறாய். ஒரு போன் போட்டிருக்கலாமே, கேட்டுக் கொண்டிருக்கும்பொழுது வர்ஷா தன் அருமை மகள் பவானியை தளிர் நடையுடன் கூட்டி வந்தாள். என் செல்லம் அத்தையைப் பாருங்க என்று தூக்கிக் கொஞ்சினாள் பிரியா.

               இரண்டு பேத்திகளிடமும் சிறிது நேரம் கொஞ்சி விளையாடி மழலை மொழகேட்டு மகிழ்ந்திருந்தனர். செல்லப்பாண்டியன் தன் மகளின் முகம் பார்த்து என்ன என்று வினவ அன்று நடந்த கதையனைத்தும் சொல்லி முடித்தாள்.

               நீங்கள் சொல்லுங்கள் அப்பா, என் சிற்றறிவுக்கு எதுவுமே தோன்றவில்லை. என்ன செய்வது என்று புரியவும் இல்லை.

               நன்கு சிந்தித்த செல்லப்பாண்டியன் திவ்யா செல்லத்தை வைத்துக்கொண்டு வேலைக்குச் செல்ல முடியாதல்லவா. திவ்யாவை எங்களிடம் விட்டு விட்டுச் செல். நாங்கள் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம். நீ வாரமொருமுறை வந்து பார்த்துச் செல்லுங்கள், அதற்குள் உங்கள் மாமியார் மனது மாறினால் நல்லதுதான. பிறகு வருவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

               அதுவும் சின்னக்குழந்தை இதுவும் சின்னக்குழந்தை ஒரே வீட்டில் எப்படி என்றாள் வர்ஷா. மேலும் தாயின் அரவணைப்பிலே தூங்கியெழுந்து துள்ளி விளையாடிய குழந்தை எப்படி தாய், தந்தை முகம் பாராமல் இருக்கும் என்றாள். கொஞ்சம் கஷ்டம் தான் நம் பராமரிப்பில் சரியாகி விடுவாள். வேறு வழியில்லை. கிரஷ் வேறு எங்கும் கொண்டு விடுவதைவிட இது மேல் அல்லவா.

               சரி செய்யுங்கள் உங்கள் மகனிடமும் ஒரு வார்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள் என்றாள்.

               ஆபீஸ் சென்றுவிட்டு ஐந்து மணிக்கு மேல்தான் ஆனந்தகுமார் வந்தான். அக்கா என்றழைத்துப் பாசமுகம் காட்டினான். மருமகளைத் தூக்கி கொஞ்சினான். அவனிடம் பிரியாவின் வருகைக்கான காரணம் தெரிவிக்கப்ப்பட்டது. அவனுக்கு அக்கா மேல் பிரியம் அதிகம். அவன் இந்த ஏற்பாட்டிற்கு முழுமனதோடு சம்மதித்தான். வர்ஷாவும் வேலைக்குச் செல்லவில்லை. வீட்டில் தானே இருக்கிறாள். இரு குழந்தைகளையும் பார்த்துக் கொள்வாள், அவளுக்கும் நன்கு பொழுதுபோகும் என்று ஆர்வத்துடன் கூறிவிட்டான்.

               பிரியாவும் மாலை டிபன் காப்பி குடித்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பினாள், நாட்களும் கடந்தது, சில மாதங்களும் கடந்தன. நன்றாக நடைபெற்று வந்த வாழ்க்கையில் சரஸ்வதி அம்மாள் வந்து சேர்ந்தாள்.

               இரவு உணவிற்குப் பின் நன்றாகவே உறங்கச் சென்றாள். விழித்தெழும்போது தொண்டைவலி தாங்கமுடியவில்லை. தலைபாரமும் கூட இருந்தது. பார்த்த மூத்த மகன் அம்மாவுக்குக் கொரோனா வந்திருக்கிறது போல தெரிகிறது என்று மனைவியிடம் சொன்னான். அவள் ஐயய்யோ பயமாயிருக்குதுங்க, இளைய மருமகள் நர்ஸ்தானே அங்கே கொண்டு விட்டு விடுங்கள். அவர்கள் பார்த்துக்கிடட்டும் என கூறிவிட்டாள். மகனும் தாயை அழைத்துவந்து பிரியா வேலைக்குச் செல்லும் முன்பே கொண்டு விட்டுச் சென்றுவிட்டான்.

               கொரோனா என்ற கொடிய நோய் வெகுவேகமாகப் பரவி வந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். பல உயிர்களையும் கொரோனா பலி வாங்கியது. அதிகப்படியான வேலைப்பளு இருந்ததால் அரசாங்கம் புதிய நர்சுகளுக்கு அரசு வேலை தந்து சிகிச்கை அளிக்க ஊக்கமளித்தது. அந்த வகையில் பிரியாவிற்கும் அரசு வேலை கிடைத்தது. இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டியதிருந்தது. புள்ளைத்தாச்சி பெண்ணான அவள் தானே சமைத்து, தானே எல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டியதிருந்ததால் மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். பணிக்குச் செல்வதற்கும், வசந்தகுமார்தான் தன் கீரோஹோண்டாவில் கொண்டுவிடுவான். வீட்டிற்கு வருவதற்கும் வண்டியிலேயே கூட்டி வருவான்.

Advertisement