Advertisement

மீண்ட சுவர்க்கம்

               நெடிதுயர்ந்த மரங்கள் அணி வகுத்த பெருஞ்சாலை, காலை, மதியம், மாலை எப்பொழுதும் குளிர் நிழலைத் தந்து மனதைக் கௌவும் தென்றலை வீசி நெஞ்சை குளிர வைக்கும் சாலையின் ஒருபுறம் தாமரை, அல்லி, குமுதம் போன்ற மலர்களுக்கருகே காடென வளர்ந்து செழித்துக் கிடக்கும் அமலைக் குழைகள் நீர் நிறைந்து கண்ணையும், கருத்தையும் கவரும் குளம். மறுபுறம் பசுமை நிறைந்த வயல்வெளி. நெல், வாழை, பயிரிடப்படுவதால் கவின்மிகு அழகாகத் தோன்றும்.

               சாலைக்கும், வயல்வெளிக்கும் இடையே சிறிய மணல்மேடு. தேனீர்க்கடைகளும், வாழைத்தார், தேங்காய் ஏலம் விடுவதற்கென்று சில ஏலக்கடைகளும் ஆங்காங்கே குடிசைவீடுகளும் இப்பொழுது காரை வீடுகளாகிவிட்டன. இந்த ரம்யமான சூழ்நிலையில்தான்,

               நம் செல்லப்பாண்டியனின் தேனீர்க்கடை இருந்தது. கடையின் பின்னாலேயே குடியிருக்கும் சிறிய வீடும், பம்ப்செட்டுடன்கூடிய சிறிய தோட்டமும் அமைந்திருந்தது. கல்லூரி மாணவியான ஆனந்தப் பிரியா இயற்கையை ரசிப்பவள் மட்டுமல்ல, படிப்பிலும், பண்பிலும், விளையாட்டிலும் படுசுட்டி, செல்லப்பாண்டியன், வடிவுக்கரசியின் செல்லக்குட்டி. ஆனந்தக்குமார் அவர்களின் அருமைப் புதல்வன். பள்ளியில் படிக்கிறான்.

               ஏன்டி பிரியா தினமும் மதிய உணவிற்கு இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தின்னே கொண்டு வர்றே சோறு கிடையாதா, கிண்டலடித்த தோழியிடம், அது அது படித்தான் என்னால் இயன்றதைக் கொண்டு வருவேன்.

               ஏன் உங்கள் வீட்டில் சோறு பொங்க மாட்டீர்களா, பொங்குவோம், பொங்குவோம் மதியந்தான். எங்க அப்பாம்மா தேனீர்க்கடை வைத்திருக்கிறார்கள். மிகவும் அதிகாலையில் எழுந்திருந்து, தேனீர் தயாரித்து விற்கிறார்கள். பின் காலை டிபன் பண்ணித் தருகிறார்கள். மதியந்தான் உணவு தயாரிப்பார்கள். மாலை டிபன் என்று அதிகப்படியாக வேலை செய்வதால், நான் மாலை வீடு சென்ற பின்பே சோறு சாப்பிடுவேன். இது எனக்கு சிறு வயதிலிருந்தே பழக்கமாகிவிட்டது. மாற்றுவதற்கில்லை.

               அப்படியா ஒன்று செய்வோம். நீ உன் டிபனில் எங்களுக்கு ஆளுக்கொரு வாய் தந்துவிடு. நாங்கள் எங்கள் உணவில் ஆளுக்கொருவாய் தந்து விடுகிறோம். ஓகே.

               பேசியே நேரத்தை வீணாக்கிவிட்டோம். கிளாசுக்கு நேரமாகிவிட்டது. வேகமாகச் செல்கையில் சுடிதாரின் சால் கால்களில் சிக்கித் தடுமாறி விழ இருந்த பிரியாவை கவனமின்றி நடந்து வந்த பிரகாஷ் தாங்கிப் பிடித்தான். பிரியா நிதானித்து நன்றியுரைத்து விட்டு விலகி சென்றாள்.

               ஆனால் பிரகாஸ் தன்னிலை மறந்தான். அவன் மனம் என்னென்னவோ எண்ணியது. ஏக்கப் பெருமூச்சுடன் அது இனக்கவர்ச்சியா, காதலா சிந்த்ததவாறே வகுப்பிற்குள் நுழைந்தவன் அருமை நண்பன் தனுஷ் ஏன் லேட் என்று கேட்க வாய்க்குழறி பிரியா என்றான்.

               என்னடா பிரியா கரண்ட் ஷாக்கடித்த மாதிரி மிரண்டுபோய் பேந்த விழிக்கிறாய். அது வந்து என்று கலங்கியபடியே வாசலைப் பார்த்தவுடன், பிரகாஷ் புரோபஸர் வந்துவிட்டார். வகுப்பறையைக் கவனிப்போம். சரி, சரி நோட்ஸ் எடுப்போம், வகுப்பறை பாடம் நடந்தது. பிரகாஷைத் தவிர மற்ற அனைவரும் கவனித்து நோட்ஸ் எடுத்தனர். ஆனால், பிரகாஷ் மனத்திரையில் பிரியாவைத் தாங்கியது. அவள் பட்டுமேனி தன் கரத்தில் படர்ந்தது என கனவுலகில் மூழ்கி இருந்தான்.

               கல்லூரி வகுப்புகள் முடிந்தபின்பு வண்ண வண்ணச் சிறகடித்துப் பகட்டாய்ப் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளென மாணவ மணிகள் அன்னநடை நடந்து பேரூந்து நிலையம் செல்வோரும், வாகனங்களில் பறப்பவர்களுமாய் கலைந்தனர். விடுதியில் தங்கிப் படிக்கும் பிரகாஷின் கால்கள் அவனையறியாமலே பிரியாவை நோக்கி இழுக்க சிறிது இடைவெளியில் பின்னே நடந்தான். பிரியா ஏறிய பேரூந்தில் தானும் ஏறி அவள் இறங்கிய இடத்தில் இறங்கி அவளது வீடு வரை பார்த்திருந்துவிட்டு அடுத்து பஸ் ஏறி விடுதிக்கு வந்தான். பின் அதுவே அவனுக்கு வாடிக்கையாயிற்று.

               ப்ரியாவுடன் பேசுவதற்கு முயன்று தோற்றான். பிரியா இது பற்றி ஏதுமறியாமல் இயல்பாய் இளமையின் வளமையுடன் பவனி வந்தாள். அவள வீடோ போக்குவரத்து நிறைந்த பெருஞ்சாலைக்கருகில், பல வகையான மனிதர்கள் கூடும் கடைத்தெருவும் இருந்ததால், பிரகாஷின் வருகை பலர் கண்ணை உறுத்தியது.

               அந்தப் பையன் தினமும் வந்து செல்கிறான். என்னத்தை விசாரிக்கிறது. பருவம் படுத்தும் பாடு. அந்தப் பொண்ணு ஒன்றும் கண்டுகிட்ட மாதிரி தெரியல்ல. பிறகு நாம் வீண் வம்பை இழுத்து விட்ட மாதிரி ஆயிறுமில்ல. என்ன அப்படி சொல்கின்றாய். நம் ஊரு பிள்ளைக்கு கெட்ட பேரு வராம பாத்துக்கிடுற பொறுப்பு நமக்கிருக்கில்ல. ஏய்யா அதெல்லாம் அந்தக் காலம் இப்படி நாம ஏதாவது செய்யப்போக எங்க வீட்டு காரியத்தில் ஏன் மூக்கை நுழைக்கிறீங்கன்னு சொல்லி நம்ம மூக்கை உடைச்சிப் போடுவாங்க. நடக்கட்டும், சிறிது பொறுத்துப் பார்க்கலாம். பலரும் குசு, குசுவென பேசியது செல்லப்பாண்டியன் காதிற்குள் அரசல் புரசலாக எட்டியது.

               ப்ரியாவின் தாய்மாமனாகிய தணிக்காசலம் பெரிய திருமணத் தரகர். மாப்பிள்ளை நம் பிரியாவிற்கு பெரிய இடத்திலிருந்து வரன் தேடி வந்திருக்கு. என்ன மச்சான் சொல்றிய. எம் பொண்ணு காலேஜ்ல படிச்சிட்டிருக்கு. நல்லா படிக்கிற பொண்ணு படிச்சு முடிச்சப்பறம் வரன் பார்க்கலாமுன்னு இருந்தேன். நீங்க இப்படிச் சொல்றீக. வரன் தேடி வரும்பொழுது வசமாய் பிடிச்சிக்கிடனும், மாப்பிள்ளையை தேடிப் போனால் முறுக்கிக்கிடுவாங்க. அதுவும் இல்லாம பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணத்திற்கப்புறம் படிக்க ஆசைப்பட்டா நாங்க படிக்க வைச்சிடுறோமுன்னு சொல்லாறாங்க. அப்படியா எம்பொண்ணு சின்ன வயசிலே, காலையில் எழுந்து பல் விளக்கிட்டு அப்பா ஒரு டீ தாங்கன்னு கேட்டு, டீ குடிச்சிகிட்டே குளத்துக்கிட்டே போய் நின்னு இயற்கையை ரொம்ப ரசிப்பா. நம்ம ஊர் ரொம்ப அழகு என்னப்பா, கொஞ்சு மொழியில் கேட்கும்பொழுது என் உள்ளம் உருகும். எம் பொண்ணு பெரிய படிப்பெல்லாம் படிச்சு பெரிய ஆளாய் வரணும். என் மனம் பீத்திக்கும். இன்று வரை அவளைப் பார்த்துச் சின்னப் பெண்ணாகத்தான் நினைச்சிட்டிருக்கேன். நீங்க வரன் பார்த்துட்டு வந்திருக்கீங்க.

               பிரியா காலேஜ் முடிந்து வந்ததும், அவளிடம் ஒரு வார்த்தைக் கேட்டுட்டு நாம் கலந்து பேசி பெண் பார்க்க வரச்சொல்லி ஒரு நாளை பிக்ஸ் பண்ணுவோம். பெண் பார்த்திட்டு அவங்களும் நிச்சயத்துக்கு நாள் குறிச்சிடுவாங்க. அப்படியே, திருமண தேதியையும் உறுதி செய்திடலாம். ஆனால் பெண் பார்த்திட்டு போனபிறகு காலேஜ்க்கு செல்லக்கூடாது, திருமணத்திற்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

               பிரியா வழக்கத்தைவிட மிகவும் மகிழ்ச்சியாக மாமா உட்கார்ந்திருப்பதைக் கூட கவனிக்காமல் அம்மா என்று கூறியபடி வந்தாள். காலேஜில் அன்று நடந்த க்விஸ் புரோகிராமில் பர்ஸ்ட் பிரைஸ் வாங்கிய மகிழ்ச்சியை அம்மாவிடம் உடனே சொன்னால்தான் அவளுக்கு மனதிருப்தி.

               ஏண்டி வரும்போதே என்னை ஏலம் விட்டுக்கிட்டு வாரே. மாமா வந்திருக்காரே பார்க்காமலேயே ஆங் மாமா வாங்க எப்ப வந்தீங்க நான் கவனிக்கல. ஊருல மாலினி அத்தை, அஜித் எல்லோரும் நல்லார்க்காங்களா, நல்லார்க்காங்க பிரியாம்மா மாமா எதுக்காக வந்திருக்கேன்னு தெரியுமாம்மா? தெரியாதே. தாய்மாமா நீங்க வந்திருப்பது பெரிய காரியமா என்ன உங்களுடைய தங்கையைப் பார்க்க ஆசைப்பட்டிருப்பீங்க. அத்தோடு ஒட்டுதலா எங்கள் மூவரையும் பார்த்திட்டு வந்திரலாமேன்னு வந்திருப்பீங்க. இதிலென்ன பெரிய ரகசியம்.

               பிரியாம்மா நான் உனக்கு வரன் பார்த்திட்டு வந்திருக்கேன். உனக்கு திருமணம் நிச்சயமாகப் போகிறது. மாப்பிள்ளை உன்னை கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற இறகு பந்து போட்டியில் பார்த்திருக்கிறார். உன்னை மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். அவர் தாய், தந்தையரிடம் எனக்குத் திருமணம்னு ஒன்று நடந்தால் அந்தப் பெண்ணுடன்தான் சொல்லிட்டார். நல்ல வசதியான இடம், தவமிருந்து பெற்ற ஒற்றை மகனின் மணம் கோணாது அவன் விரும்பிய பெண்ணேயே மணம் முடித்திட வேண்டும் என என்னை நாடி வந்தனர். நானும் இங்கே வந்து விட்டேன். நீங்கள் விரும்பும் அந்தப் பெண் நீங்கள் கூறும் குறிப்புகளின்படி பார்த்தால் என் தங்கையின் மகளாகத்தான் இருக்க வேண்டும். இருப்பதென்ன என் தங்கை மகள்தான். நான் இன்றே கிளம்புகிறேன் என்று கிளம்பி வந்துவிட்டேன். பையன் மிகவும் அருமையானவன். எங்கள் ஊர்தான். கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஹோல் சேல்ஸ் மாதிரி கடை ஒன்று நடத்திக்கிட்டு இருக்கான். நல்ல வருமானம். திருமணத்திற்குப் பின் நீ படிக்க விரும்பினால் படிக்க வைப்பானாம் நீ என்ன சொல்கிறாய்.

               மாமா எனக்கு இன்னும் திருமண வயது ஆகவில்லை. டிகிரி முடித்த பின்பு திருமணம் நடந்தால் நன்றாக இருக்குமே. கேட்டுக் கொண்டிருந்த தாயும், தந்தையும் வந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாதம்மா. நாம் விரும்பும்போது வாய்ப்பு எப்படி அமையுமோ நாங்கள் உன் நன்மைக்குத் தானே சொல்கிறோம் என்று இருவரும் ஒத்த வாக்காகக் கூறி முடிக்கவும் பிரியாவால் ஒன்றும் பேச முடியவில்லை.

               அன்றிலிருந்து பிரியா கல்லூரி செல்லவில்லை. பிரியாவைக் காணாது கண்பூத்த பிரகாஷ் அவளின் தோழியரிடம் சென்று பிரியா ஏன் கல்லூரி வரவில்லை. அவளுக்கு உடல்நலமில்லையா அன்றி வேறு காரணம் உண்டா என்று வினவி நிற்க, பாரடி சாருக்கு பிரியா மீது எவ்ளோ அக்கறை. மூன்றாம் ஆண்டு படிக்கும் இவருக்கு இரண்டாம் ஆண்டு படிக்கும் பிரியா மீது வேறு அக்கறை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. காதல் பயிர் விளைவிக்க விரும்பியிருப்பார். பிரியா இவரை புறக்கணித்திருப்பாள். சார் தேவதாசன் வேடம் பூண்டிருக்கிறார் என்று நையாண்டி செய்தனர்.

               சார் உங்களுக்கு முக்கியமான விஷயம் தெரியாதா, பிரியாவுக்கு டிசம்பர் மாதம் இருபத்து மூன்றாம் நாள் திருமணம் நடக்கவிருக்கிறது. நிச்சயதார்த்தம் நடந்த நாளிலிருந்து அவள் கல்லூரி வரவில்லை. எங்களுக்கு அழைப்பிதழ் தருவதற்கு வருவாள். நாங்கள் உங்களுக்கும் ஒன்று வாங்கித் தருகிறோம்.

               பிரகாஷ் உடனே அருமை நண்பன் தனுஷ்ஷை நாடிச் சென்று, அவள் மலர்மேனியைத் தான் பிடித்த அன்றிலிருந்து நடந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றுவிடாமல் கூறி முடித்தான்.

               திருமண நாள் நெருங்கிக் கொண்டு வருகிறது. எனக்கு இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லை. எப்படியாவது இந்தத் திருமணத்தைத் தடுத்தே ஆக வேண்டும் என என் உள்மனம் கொக்கரித்துக் கூவுகிறது. என்ன செய்யலாம்? ம் யோசி, யோசி வழிகண்டுபிடி.

               தனுஷீம், பிரகாஷ_ம் மூளையைக் கசக்கிப் பிழிந்தவாறே நடந்தனர். டேய் பிரகாஷ் நாம் தர்ட்யியர் படிக்கிறோம். நமக்கு இருபது வயதுதான் நடக்கிறது. முடியவில்லை. அப்படியானால் பிரியாவிற்கும் பத்தொன்பது வயது முடிந்திருக்காது அல்லவா, அவளது பிறந்தநாள் தெரிந்ததைக் கண்டுபிடித்து விடலாம். அவள் வயதைக் கண்டுபிடித்து என்ன செய்யப்போகிறோம். உனக்குத் தெரியாதா, பெண்களுக்குப் பத்தொன்பது வயது முடிவடைந்தால்தான் திருமணம் செய்ய முடியும். முடிவடையாவிட்டால் குழந்தை திருமணம் தவறு. திருமணத்தை தடுத்துவிடமுடியும். ஓ அப்படியானால் அவளது பிறந்தநாளை எப்படிக் கண்டுபிடிப்பது. அதற்கும் ஒரு வழி செய்வோம், நாம் கல்லூரி அட்டென்டரைத் தேடிச் செல்வோம்.

               ராஜசேகர் அண்ணே வணக்கம், எங்களுக்கு ஒரு உதவி வேண்டுமே. என்ன உதவி முடிந்தால் செய்றேன். இருவரும் மாற்றி, மாற்றிப் பேசி, பேச்சுத் திறனால் ராஜசேகரிடமிருந்து செக்கண்ட் யியர் மாணவர்களின் அட்டென்டன்ஸ் ரிஜிஸ்டரைப் பெற்றனர். பிரியாவின் பெயர் பிறந்ததேதி மற்றும் சமாச்சாரங்களை ஸெல்லில் போட்டோ எடுத்து வந்தனர். பிரியாவின் தோழி வந்தனா கொடுத்த பிரியாவின் அழைப்பிதழையும் வைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமூக பொதுநல விரும்பிகள் என்று முத்திரையிட்டு மனு ஒன்றையும் எழுதி கொடுத்துவிட்டு வந்தனர்.

               வீட்டின் மூத்த மகள் திருமணம் முதல் சம்பந்தம் மிகச் சிறப்பாக அமைய வேண்டும். மண்டபம் பிடித்தல், பந்தல் அலங்காரம் வீடியோ என்று முக்கியமாக மூன்று வேளை விருந்து என்று உறவினர்களை அழைத்து தடபுடலாக எல்லாக் காரியங்களும் நடைபெற்றன. மணமகளுக்குரிய நகைகள், புடவைகள், சீர்வரிசை பொருட்கள் என வீடு நிரம்பி வழிந்தது. முகூர்த்தநாள் வந்தேவிட்டது. மண்டபம் மின் விளக்குளாலும், இன்னோரன்ன பல உபகரணங்களாலும் தேவலோகமோ என்ற கருதக்கூடிய வகையில் மின்னி மிளிர்ந்தது. ஒரு பக்கத்தில் அறுசுவையோடு கூடிய விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. சமையலின் மனம் வரவேற்புச் சாதனங்கள் பல வாசனைத் திரவியங்களின் மணத்தையும் தாண்டி நாவில் எச்சில் ஊற்றெடுக்க வைத்தது.

               மணமகள் வியத்தகு ஒப்பனையில் வண்ண மயிலென அன்ன நடை நடந்து வந்து மெத்தென்று பஞ்சணை அரியணையில் அமர்ந்தாள். உற்றார், உறவினர், நண்பர்கள் கூட்டம் குலவையிட்டு, மகிழ்ச்சிக் கூத்தாடி இருக்கையில் அமர்ந்தனர். பரிசம் போடும் சடங்கிற்கே மணமகன் வீட்டார் மேளதாளத்துடன் வரவேற்கப்பட்டனர்.

               கூட்டத்தில் ஏதோ சலசலப்பு தோன்றியது போலிருக்கவும் செல்லப்பாண்டியன் உறவினர்கள் சந்தோசத்தில் திளைக்கின்றனர் என்று கருதியபடி திரும்பினாள்.

               காவலர் இருவர் வந்து மணமகளை கைது செய்கிறோம் என்று மணமகளின் கையைப் பிடித்து எழுப்பி கைகளில் விலங்கை மாட்டத் தயாராயினர்.

               சற்று முன்று மகிழ்ச்சித் தாண்டவமாடிய கூட்டமனைத்தும் வாய்மூடி மௌனித்து நின்றனர். தாய்மாமா தணிக்காசலம் தான் என்ன காரணத்திற்காக மணப்பெண்ணைக் கைது செய்கிறீர்கள், நடந்தது என்ன ஒரே அத்துமீறலாக இருக்கிறதே கூறுங்கள் என்றார், பெற்ற தந்தை செல்லப்பாண்டியனோ பேச்சிழந்து மூர்ச்சை ஆகிவிட்டார்.

               குழந்தைத் திருமணம் கூடாது என்று சட்டம் கூறுவது உங்களுக்குத் தெரியாதா? திருமண ஏற்பாடுகள் செய்வதற்கு முன் இது அத்தனையும் தெளிவுபடுத்தியிருக்க வேண்டாமா? பெண்ணுக்கு இன்னும் பத்தொன்பது வயது நிறைவடையவில்லை. ஆறு மாதங்கள் கழித்துத் தான் பத்தொன்பது வயது முடிகிறது. இன்னும் ஆறு மாதங்கள் கழித்துத்தான் திருமணம் நடத்த வேண்டும். இப்பொழுது மகளிர் காவல் நிலையத்திற்கு கூட்டிச் செல்கிறோம். அங்கு வந்து உரிய ஆவணங்களில் கையெழுத்திட்டு அழைத்து வந்து ஆறுமாதங்கள், பாதுகாப்பாக வைத்திருந்து எங்களின் அனுமதியைப் பெற்றுத் திருமணத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்றனர். பத்தொன்பது வயது நிறைவடையவில்லை என்பதற்கான சர்டிபிக்கட்டையும் திருமணத்தை நிறுத்துவதற்கான புகார் சர்ட்டிபிக்கட்டையும் காட்டிவிட்டு மணப்பெண்ணை அழைத்துச் சென்றனர்.

               செல்லப்பாண்டியனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். மணவிழாவைக் காணக் காத்திருந்த மண்டபம் மங்களம் பொங்கியிருக்க மனிதக் கூட்டம் துக்கத்தால் துவண்டு, துயரமடைந்தது.

               ஆறு மாதங்கள் தானே கண் இமைக்கும் நேரத்தில் ஓடிவிடும். அதன்பின்பு ஆடம்பர ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையாகக் கோவிலில் வைத்துத் திருமணத்தை நடத்திவிடலாம் என்று இரு வீட்டாரும் பதப்பட்டு பக்குவமடைந்தனர்.

Advertisement