Advertisement

“அச்சோ… என்னண்ணா பேசறீங்க நீங்க. என்கிட்டே ஏன்” என்றவர் வார்த்தை வராமல் கலங்கி நிற்க,

“தாயில்லாத குறையே தெரியாம என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினதுக்கு உனக்கும், என் அத்தைக்கும் நான் காலத்துக்கும் நன்றியோடு இருக்கணும் கலை. அவன் தங்கச்சி மேல இருக்க பாசத்துல எதையோ பேசிட்டு போறான். நீ வளர்த்த பிள்ளைதான, அவனை மன்னிச்சிடும்மா” என்றார் மீண்டும்.

“நீங்களும் என்னை கஷ்டப்படுத்தாதீங்கண்ணா. உங்களோட இந்த வார்த்தைகளுக்காக நான் இவங்களை வளர்க்கல. உங்க பிள்ளைகளா நினைச்சும் வளர்க்கல. சேஷனை மாதிரிதான் பார்த்தேன். அவனை வளர்த்தபடி தான் வளர்த்தேன்.”

“தேவ் சொல்றபடி என் மகனுக்காக தேவவாய் பலி கொடுக்க எல்லாம் நினைக்கலண்ணா. அவ எல்லாத்தையும் சரி பண்ணிடுவான்னு என் மாமியாரைப் போலவே நானும் கண்மூடித் தனமா நம்பிட்டேன். ஆனா, சேஷனுக்காக தேவாவோட வாழ்க்கையை பணயம் வச்சது தப்புதான். அதுக்காக மன்னிப்பு கேட்கவும்…” என்று அவர் முடிப்பதற்குள், “அத்தம்மா” என்று அதட்டியபடி அவரை அணைத்து கொண்டாள் தேவா.

கலையரசி அதற்குமேல் அடக்க முடியாமல் உடைந்து அழுதிட, மெல்ல அவரை நெருங்கி அவரது இருகைகளையும் பிடித்துக்கொண்டார் பிரபாகரன்.

“நீ இப்படி கலங்கி நிற்க வேண்டிய தேவையே இல்லம்மா. இவங்க ரெண்டு பேரும் உன் பிள்ளைங்க. இவங்க வாழ்க்கையை முடிவு செய்ய உன்னைவிட யாருக்கும் உரிமை கிடையாது. நீ அவளுக்கு கெட்டது நினைச்சிருந்தா, இப்படி நீ அழறதை தாங்க முடியாம நிற்பாளா உன் பொண்ணு.”

“ஆரம்பத்துல எனக்கும் கோபம் இருந்தது தான். ஆனா, என் மக உனக்காக அவ வாழ்க்கையையே பணயம் வைக்க தயாராகி இருக்கணும்ன்னா, நீ எந்த அளவு பாசத்தை அவளுக்கு கொடுத்திருக்கணும். அப்படிப்பட்ட நீயா அவளுக்கு தப்பு பண்ணிடுவ. வேண்டாம்ம்மா… அழாத” என்றார் பிரபாகரன்.

அவர் வார்த்தைகளில் கலையரசி சற்றே தெளிய, அழுத்தமாக அவரது கண்ணீரை துடைத்துவிட்டாள் தேவா.

கண்ணீர் துடைத்த தேவாவின் கைகளைப் பிடித்துக் கொண்ட கலையரசி, “நீ நல்லாயிருக்கனும்டா. நீ நினைச்சதை செய். சந்தோஷமா இரு” என்றார் உணர்ந்த குரலில்.

வாய் சட்டென உரைத்துவிட்டாலும் மனம் மகனை நினைத்து கண்ணீர் வடிக்க, மெல்ல தன் மகனைத் திரும்பி பார்த்தார் கலையரசி. தன் வலியை மறைத்து சிறு சிரிப்புடன் அன்னையை பார்வையால் தேற்றிய சேஷன், “உட்காருங்க மாமா” என்றார் பிரபாகரனிடம்.

“இல்ல சேஷா. ஏற்கனவே ரொம்ப நேரமாகிடுச்சு. கிளம்புறோம்” என்றுவிட்டார் முடிவாக.

சேஷன் அதற்குமேல் என்ன சொல்வது என்று புரியாமல் மௌனமாகிட, “இந்த வீட்ல எந்த உரிமையை வச்சு நான் உட்கார்ந்து உறவு கொண்டாட முடியும் சேஷா. என் மக எதுவுமில்லன்னு சொல்லிட்டாளே. நாங்க கிளம்புறோம்” என்றார் மீண்டும்.

சேஷன் அவர் வார்த்தைகளை மெல்ல உள்வாங்கியபடி நிற்க, “கிளம்பலாம் தேவா” என்றார் மகளிடமும்.

கலையரசியிடம், “நாங்க கிளம்புறோம்மா. உன் மகளா எப்போ வேணாலும் நீ உன் தேவாவை பார்க்க வரலாம். ஆனா, இந்த வீட்டோட மருமகளா இனி அவ இங்கே வரவேண்டாம்ன்னு நான் நினைக்கிறேன்.” என்றவரிடம் புரிந்ததாக தலையசைத்தார் கலையரசி.

தேவசேனாவின் பார்வை அவளையறியாமல் சேஷனிடம் திரும்ப, அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான். விழிகள் கலந்தாலும், மொழிகள் புரியாத நிலை அவர்களுடையது.

ஏமாற்றங்களை மட்டுமே சந்தித்து புண்பட்டுப் போனது அவள் நெஞ்சம். கிடைத்ததை தொலைத்துவிட்ட வெறுமையில் வெம்பிக் கொண்டிருந்தது அவனது நெஞ்சம்.

இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை. ஒன்று மற்றொன்றின் மீது மாறாத நம்பிக்கை கொண்டிருந்தது அந்த நிலையிலும். ஆனால், அது எதிர்மறையாக இருந்தது தான் பிழையாகிப் போனது அங்கே.

“இவன் எப்போதும் ஏமாற்றங்களை மட்டுமே பரிசளிப்பான். வாழ்நாள் முழுமைக்கும் இவனுடன் என்னால் போராட முடியாது. எனக்கு காதலோ, நேசமோ, ஆசையோ, பாசமோ எதுவுமே வேண்டாம்” என்று மொத்தமாக முடித்துக் கொள்ள அவள் விரும்பினால்,

“என்னால் ஏமாற்றத்தை தாங்க முடியாது. என்னை விட்டுச் செல்லாதே. எனக்கான காதலும், நேசமும், ஆசையும், பாசமும் என்று அத்தனையும் நீ மட்டுமே பெண்ணே… உணரமாட்டாயா என்னை.” என்று கண்களால் கேள்வி கேட்டபடி அவளை வெறித்து நின்றான் ஆதிசேஷன்.

அவனது ஆர்ப்பாட்டங்களையும், சத்தமான மிரட்டல்களையும் சுலபமாக முறியடித்து முன்னேறிச் செல்பவளுக்கு இந்த மௌனத்தைக் கடப்பது பெரும்பாடாக இருந்தது.

ஆனால், இவர்களின் இந்த மௌன நாடகத்திற்கு பிரபாகரன் நேரம் கொடுப்பதாக இல்லை போலும். மகளின் கையைப் பிடித்துக் கொண்டவர் கலையரசியிடம் தலையசைத்து நடக்க தொடங்கிவிட, சிறுபிள்ளையாக அவரின் பின்னே நடந்துவிட்டாள் தேவசேனா.

வெறுமை என்ற வார்த்தைக்கான அர்த்தம் அந்த நொடி முழுமையாக புரிய, சிலையைப்போல் அசையாது நின்றுவிட்டான் ஆதிசேஷன்.

அவர்கள் கண்ணிலிருந்து நீங்கவும் கலையரசி ஓய்ந்து போனவராக சோஃபாவில் அமர்ந்து கொள்ள, என்ன நினைத்தானோ, அவர் காலடியில் அமர்ந்து அவரது மடியில் தலைசாய்த்துக் கொண்டான் சேஷன்.

அவனது கண்ணீர் மெல்ல மெல்ல கலையரசியின் மடியை நனைக்க, மகனுக்கு குறையாமல் தானும் மௌனக்கண்ணீர் வடித்தபடி அமர்ந்திருந்தார் கலையரசி.

கையில் இருக்கும் பொருளின் அருமை அது தொலைந்தபின்பே தெரியும் என்ற வாசகத்தின் பொருளை உணர, மகன் பெரும் விலை கொடுத்துவிட்டதாக தோன்றியது கலையரசிக்கு.

மெல்ல அவர் தன் மகனின் தலையை வருடிக் கொடுக்க, “ஒன்னுமில்லம்மா” என்று சிலநொடிகளில் சுதாரித்து எழுந்து கொண்டான் மகன்.

அன்னையின் முகம் பாராமல் அவன் தனது அறையில் அடைந்துகொள்ள, அவனின் மாற்றங்களை அறியாதவரா கலையரசி.

ஆனால், காலம் கடந்துவிட்டதே…

இனியும் யாருக்காகவும் யாரையும் பிடித்து வைப்பதாக இல்லை அவர். அவரவர் வாழ்வை இனியாவது அவர்களே வாழட்டும் என்று முற்றாக ஒதுங்கி கொண்டார் அவர்.

கலையரசியைப் போலவே பிரபாகரனும், “உன் வாழ்க்கை தேவா. நீ என்னோட வந்தே ஆகணும்னு நான் சொல்லமாட்டேன். நீ முடிவெடு… சேஷன் வேண்டாம்னு உறுதியா நீ முடிவெடுத்தா, என்னோட வந்திடு. இல்ல, ஒரே ஒரு சதவீதம் நம்பிக்கையோ, வாழற எண்ணமோ இருந்தால் சொல்லு. நான் சேஷன்கிட்ட பேசறேன்” என்று மகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவளின் முடிவை கேட்டு நின்றார்.

அடுத்த இரண்டு நாட்களும் தீரவே தீராதா என்று எண்ணும்படி அத்தனை நிதானமாக ஊர்ந்து செல்ல, இரண்டாம் நாளின் முடிவில், “நான் உங்களோட வர்றேன்ப்பா. என்னால இங்கே இருக்க முடியாது” என்று வந்து நின்றாள் மகள்.

நிச்சயம் மகளின் முடிவு ஏமாற்றம் தான் பிரபாகரனுக்கு. இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவின் நிகழ்வுகளை வைத்து மகள் சேஷனுடன் வாழ விரும்புகிறாளோ என்று சந்தேகம் கொண்டிருந்தார் அவர். ஆனால், தேவ்வைப் போல் இல்லாமல், அந்த சந்தேகம் அவருக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது.

மகள் கணவன் குடும்பம் என்று வாழத்தான் ஆசை கொண்டார் அவர். சேஷாவும் அப்படியொன்றும் முறுக்கி நிற்பதாக தெரியவில்லையே… என்று அவர் தனக்குள் ஒரு கணக்கிட, அவரது கணக்கை பிழையாக்கி நின்றாள் மகள்.

“நல்லா யோசிச்சுக்கோ தேவா” என்று அவர் மீண்டும் முயற்சிக்க,

“நான் உங்களோட வர்றது உங்களுக்கு பிடிக்கலையா?” என்றுவிட்டாள் தேவா.

“கிட்டத்தட்ட இருபது வருஷம் அனாதையா வாழ்ந்துட்டேன் தேவா. இப்போ என் மகள் என் வீட்டுக்கு வரப்போறா. இதைவிட என் வாழ்க்கையில வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும்” என்று சற்றே நெகிழ்ந்த குரலில் அவர் வினவ,

“சாரிப்பா” என்று அவரை கழுத்தோடு கட்டிக் கொண்டாள் மகள்.

அடுத்தநாள் கிளம்புவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் தானே முன்னின்று சத்யதேவ் முடித்துவிட, தந்தையுடன் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தாள் தேவா.

இளா அவளைக் காண ஆத்மீயுடன் வந்திருக்க, அவனிடம் பேசியபடி சில நிமிடங்கள் நின்றிருந்தாள் அவள். அவனும், “ஏன் இந்த முடிவு” என்று பழகிய முறையில் பலமுறை கேட்டுப் பார்த்துவிட்டான். ஆனால், அவனுக்கும் மௌனமே பதிலாகிப் போக, ஆத்மீக்கு தன்னால் தானோ என்று ஒரு குற்றவுணர்வு எழுவதை ஏனோ தடுக்கவே முடியவில்லை.

“என் கல்யாணத்துக்கு மட்டுமாவது வருவியா? இல்ல, இதுதான் கடைசி சந்திப்பா” என்று கடுப்புடன் இளா கேட்டு நிற்க,

“என்கிட்டே சொல்லாம கல்யாணம் பண்ணுவ நீ” என்று அவனை பட்டென ஒன்று வைத்தாள் தேவா. அழகான நட்பு அவர்களுடையது. எங்கோ தொடங்கி எங்கோ ஓர் புள்ளியில் இருவரையும் ஆழமாக பிணைத்திருந்தது. இருவருக்குமே மற்றவர் மீது அடிப்படை நம்பிக்கையும், அன்பும் இருக்க, அந்த உறவு அவர்களைப் போலவே அழகாக பயணித்துக் கொண்டிருந்தது அதுவரை.

மலர்விழியும் கடைசி நேரத்தில் அவசரமாக வந்து நிற்க, தேவ் சட்டென முகம் திருப்பிக் கொண்டான். மலர் அவனை கண்டுகொள்ளாமல் தன் தோழியை அணைத்து விடைகொடுக்க, இருவருக்குமே கண்கள் கலங்கிப் போனது.

வார்த்தைகள் இல்லாமல் மௌனத்திலேயே அவர்கள் தங்கள் உணர்வுகளை கடத்திக் கொண்டிருக்க, இறுதி வரை தங்கையை நெருங்காமல் நின்றான் தேவ்.

பல்லவி ஸ்கந்தாவை கையில் வைத்தபடி நின்றிருந்தாலும், அவ்வபோது கண்கள் கலங்கி கொண்டே தான் இருந்தது அவளுக்கு. கணவனைப் போல் உணர்வுகளை மறைத்து நிற்க வேண்டிய அவசியம் ஏதுமில்லாமல், அண்ணன் தங்கை இருவரையும் முறைத்தபடி ஓரமாக நின்றிருந்தாள் அவள்.

தேவா அவளையும் சமாளித்து, ஸ்கந்தாவை கொஞ்சி முடித்து, கடைசியாக தேவ்விடம் வந்து நிற்க, தங்கையின் முகம் காண்பதை தவிர்த்தபடி, “கிளம்பு தேவா. நிம்மதியா இரு. எதையும் யோசிச்சு உன்னை வ்ருத்திக்காத. எதுவா இருந்தாலும் எனக்கு ஒரு போன் பண்ணு” என்று வேகமாக பேச தொடங்கினான் தேவ்.

“என்னைப் பாருடா” என்று தங்கை அதட்ட, சிறுபிள்ளையாக உதடுகள் பிதுங்கியது அண்ணனுக்கு.

தேவா சிரிப்புடன் அண்ணனின் தோளில் சாய்ந்து, “அழுமூஞ்சியா இருக்காத தேவ். நான் நல்லா இருக்கேன்.” என்று மீண்டும் ஒருமுறையும் கூற,

“நீ நல்லா இருக்கணும் தேவா. சந்தோஷமா இருக்கணும்.” என்றபடியே அவள் உச்சியில் முத்தமிட்டு அவளை வழியனுப்பி வைத்தான் அந்த அண்ணன்காரன்.

ஆனால், இத்தனை பேர் சுற்றியிருந்தாலும், தேவாவின் மனம் இன்னும் யாரையோ தேட, அவள் தேடலுக்கு சொந்தக்காரன் இந்த முறையும் ஏமாற்றினான் அவளை.

தனது முடிவு சரியென்ற எண்ணம் இன்னும் ஸ்திரமாக பதிய, மொத்தமாக வெறுத்தவளாக விமானம் ஏறினாள் தேவசேனா.

                                                     முதல் பாகம் முடிந்தது…

Advertisement