Advertisement

மௌனமாய் எரிகிறேன் 25

தேவசேனா கலையரசியுடன் செல்லம் கொஞ்சிக்கொண்டு அமர்ந்திருக்க, கண்ணெடுக்காமல் அவளைப் பார்த்தபடி சற்றுத்தள்ளி உணவுமேசையில் அமர்ந்திருந்தான் சேஷன். கலையரசியிடம் பேசியபடியே எதேச்சையாக திரும்பிய தேவாவின் கண்களில் அவன் அமர்ந்திருந்த காட்சிப் பதிய, வேண்டாத நினைவாக மேலெழுந்தது என்றோ ஒருநாள் நடந்த ஆத்மீயின் வருகை.

இன்று அவன் அமர்ந்திருந்த இடத்தில் அன்று தான் அமர்ந்திருந்ததும், அன்றைய தனது மனநிலையும் கேட்காமலே கண்ணில் நிழலாட, சட்டென மௌனமாகிவிட்டாள் அவள். கலையரசி பேச்சு தீவிரத்தில் இருந்தவர், “டாக்டர் என்ன சொன்னாங்க தேவா” என்று இரண்டுமுறை கேட்டுவிட, அவளிடம் பதிலில்லாமல் போகவும், “தேவாம்மா” என்று அவள் தோளின் மீது கை வைத்தார் அவர்.

“ம்ம்ம்… என்ன கேட்டீங்க அத்தம்மா” என்று மௌனம் தொலைத்து வினவியவள், அவர் பதில் கொடுக்கும் முன்பே, “நான் அமெரிக்கா போகப் போறேன் அத்தம்மா. இன்னும் ரெண்டுநாள் மட்டும்தான் இங்கே இருப்பேன்” என்றுவிட்டாள்.

கலையரசி சட்டென ஏமாற்றம் கொண்டாலும், முயன்று தன்னை சமாளித்துக் கொண்டார். மெல்ல தலையசைத்துக் கொண்டவர், “அப்பாவோட கிளம்புகிறாயா தேவா” என,

“ம்ம்… ஆமாம் அத்தம்மா. அங்கே அப்பாவால தனியா சமாளிக்க முடியல. அவருக்கும் வயசாகுது இல்லையா. நான்கூட இருந்தா, கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க” என்று பொறுமையாக பதில் கூறினாள் தேவா.

“சரிதான்டா… நீங்கதானே அவரை கவனிச்சுக்கனும்” என்று சிறு புன்னகையுடன் முடித்துக் கொண்டவரை தேவசேனா ஆச்சர்யமாகப் பார்த்து வைக்க, சிரித்தபடியே அவள் கைமீது தட்டிக் கொடுத்தார் கலையரசி.

“அத்தம்மா அன்னைக்கு சத்யா பேசியது…”

“நிச்சயம் தப்பு இல்ல தேவா. சொல்லப்போனால், நிறைய விஷயங்களை எனக்கு புரிய வச்சிருக்கான். நான் வளர்த்த பிள்ளைங்கன்னு நினைச்சேனே தவிர, என் பிள்ளைங்கன்னு நினைக்க தவறிட்டேன் போல.” என்றவரை “அத்தம்மா” என்று தேவா அதட்ட,

“நிஜம்தான் தேவாம்மா. நான் பெத்து வளர்த்திருந்தா, உன் வாழ்க்கையை இப்படி பணயம் வைக்க துணிஞ்சிருக்க மாட்டேனோ என்னவோ… நான் என் மகன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு மட்டும் தானே நினைச்சேன்.” என்று அவர் தன்னையே கடிந்துகொள்ள,

“இப்படியெல்லாம் பேசாதீங்க அத்தம்மா. அவன் அறிவு கெட்டவன் ஏதோ பேசி இருக்கான். அதுக்காக நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்களா” என்று தனது அத்தம்மாவின் மடியில் தேவா சாய்ந்துகொள்ள, மெல்ல அவள் தலையைத் தடவிக் கொடுத்தார் கலையரசி.

இவர்களின் இந்த நெருக்கமும், புரிதலும் கண்டு முதன்முறையாக ஏக்கம் கொண்டான் சேஷா. யார் என்ன சொன்னாலும் அவன் அன்னையை அவன் அறிவானே. தேவாவின் மீது அவர் கொண்ட பாசத்தின் எல்லையை அறியாதவனா அவன். அவளுக்காக அறியாத வயதில் அவனைவிட்டே தள்ளி நின்றவர் கலையரசி.

மகனுக்கு பார்ப்பதா? மகளுக்கு பார்ப்பதா? என்று புரியாமல் பல நேரங்களில் தள்ளாடி தடுமாறி இருந்தாலும், முடிவு எப்போதும் தேவாவுக்கு சாதகமாகவே இருக்கும்.

தேவாவின் திருமணம் கூட, இந்த இருபெண்மணிகளும் தேவாவின் மீது கொண்டிருந்த அசையாத அன்பினாலும், நம்பிக்கையாலும் தான். நிச்சயம் சேஷனை மீட்டுவிடுவாள் என்று நம்பித்தான் அவர்கள் தேவாவை பணயம் வைத்தது.

ஆனால், சேஷன் மொத்தத்தையும் குழப்பிவிட, ஏதோ ஒரு புள்ளியில் அத்தனையும் சிக்கலாகிப் போனது. அப்போதும் ஏதோ ஒரு நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு நடமாடிக் கொண்டிருந்த கலையரசி மொத்தமாக உடைந்து போனது சத்யதேவின் வார்த்தைகளில் தான்.

ஆனால், அவன் உரைத்தது மொத்தமும் நிதர்சனம் தானே என்று எப்படியோ தன்னை தேற்றிக் கொண்டிருந்தார் கலையரசி. மற்ற எதையும்விட தேவசேனாவின் உடல்நிலை பெரிதாக தெரிய, சத்யதேவ் கூறியதுபோல் தேவாவைவிட்டு ஒதுங்கி கொள்ளத்தான் நினைத்தார் கலையரசி.

“அவள் வாழ்க்கையை அவள் விருப்பப்படி அவள் அமைத்து கொள்ளட்டும்” என்று தான் அவர் விலகி நின்றது, அதற்கேற்றாற்போல், தேவாவும் அவரைத் தேடி வராமல் போகவும், நிம்மதியாக உணர்ந்தார் கலையரசி.

மகன் அவ்வபோது சீண்டினாலும் கூட, தனது வளர்ப்பு மகளை விட்டுக்கொடுக்காமல் அவனுக்கு பதில் கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுவார். இன்றைய தேவாவின் வருகை நிச்சயமாய் அவர் எதிர்பார்த்திராதது.

ஒதுங்கியிருக்க முடிவெடுத்திருந்தாலும், அவளைக் கண்ட நொடியில் அவளுக்கான அன்பு ஊற்றாக பெருக, முயன்று தன்னை கட்டுபடுத்திக் கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்தார் கலையரசி.

இதோ இப்போதும் தேவா மடியில் படுத்திருக்க, நடுங்கிய விரல்களால் மெல்ல அவள் சிகையைக் கோதிக்கொண்டே தான் அமர்ந்திருந்தார் அவர்.

சேஷன் “இவளின் பிரிவை எப்படி இவர் தாங்குவார்?” என்று நிம்மதியிழக்க, “உன்னால் முடியுமா?” என்று கேள்வி கேட்டது அவனது ஆழ்மனம்.

சண்டையோ, சச்சரவோ எதுவாக இருந்தாலும், இந்த நான்கு ஆண்டுகளில் எப்போதும் அவளை பிரிய நினைத்ததில்லை அவன். ஆரம்பத்தில், விவாகரத்து கேட்டிருந்தாலும், பலமுறை “பிரிந்து போ” என்றிருந்தாலும் எப்போதுமே பிரிவை அவன் விரும்பியதில்லை.

என்னவோ ஒரு கர்வம்… என் மனைவி என்னை விட்டுவிட மாட்டாள் என்று. அந்த எண்ணம் கொடுத்த தைரியமும், திமிரும் அத்தனை வலிமையானது. அது மட்டுமே ஆட வைத்தது சேஷனை.

ஆனால், இன்று மொத்தத்தையும் கொடுத்தவளே எடுத்துச் சென்றிருக்க, உண்மையில் நிராதரவாகத் தான் நின்றிருந்தான் ஆதிசேஷன்.

என்ன செய்தும் அவளைத் தக்கவைத்துக் கொள்ள தயாராக இருக்கிறான் அவன். ஆனால், என்ன செய்வது? எப்படி என் தவறுகளைத் திருத்துவது என்று புரியாத நிலைதான் அவனுடையது.

இரண்டு நாட்கள் மட்டுமே உனக்கான அவகாசம் என்று மனம் வேறு விடாது அடித்துக்கொள்ள, அடுத்து தான் மருத்துவமனையில் படுத்துவிடுவோமோ என்று கூட சில நேரங்களில் அச்சம் கொண்டான் அவன்.

சேஷன் அவனில் மூழ்கியிருக்க, தேவா மெல்ல தன் அத்தம்மாவின் கை சுகத்தில் தன்னைமீறி உறக்கத்தை நெருங்கிய சமயம், “தேவா” என்று அதட்டலாக சத்தமிட்டபடியே அந்த வீட்டிற்குள் நுழைந்தான் சத்யதேவ்.

அதுவரை அமைதியாக இருந்த வீட்டில் அவனது குரல் பெரும் சத்தமாக எதிரொலிக்க, சட்டென பதறி எழுந்தாள் தேவா. அவளின் பதட்டமும், உறக்கம் தொலைத்துவிட்ட கண்களும் சேஷனை பட்டென கோபம் கொள்ள செய்ய, அமர்ந்த இடத்திலிருந்து வேகமாக எழுந்து தேவ்வை நெருங்கினான் அவன்.

“ஏன்டா இப்படி கத்தி வைக்கிற? அவ தூங்கிட்டு இருக்கறது கண்ணு தெரியலையா உனக்கு” என்றவனை அசட்டையாக பார்த்தான் சத்யதேவ்.

“உன்னால எத்தனையோ நாள் தூக்கமில்லாம தவிச்சு இருக்கா அவ. இனி அப்படி ஒருநிலை அவளுக்கு வேண்டாம்னு தான் கத்திட்டு இருக்கேன்.” என்று பதில் கொடுத்தபடியே தங்கையை நெருங்கியவன் அவள் கையைப் பிடித்து அவளை எழுப்பி நிறுத்தினான்.

தேவ்வின் திடீர் வருகையை எதிர்பாராமல் அதிர்ந்து நின்றிருந்த தேவா மேலும் முன்னமே, “உன் போன் எங்கே?” என்று மீண்டும் அதட்டினான் தேவ்.

அவளுக்கு அப்போதுதான் தன் அலைபேசியின் நினைவு வந்தது. ‘எங்கே வைத்தோம்’ என்று அவசரமாக தேவா யோசிக்க, தன் சட்டைப்பையில் இருந்து தேவசேனாவின் அலைபேசியை எடுத்து நீட்டினான் ஆதிசேஷன்.

அவனின் இந்த செயலில் தேவ்வின் உஷ்ணம் இன்னும் கூடிப்போக, தங்கையை திரும்பி பார்த்தவன் பார்வையில் கண்டனம் மிகுந்து காணப்பட்டது.

“கார்ல விட்டுட்டேன் போல தேவ்” என்று மெல்லிய குரலில் தேவா இயம்ப,

“உனக்கு இங்கே என்ன வேலை?” என்று இரைந்தான் தேவ்.

அவனின் நிதானம் எல்லாம் எங்கோ பறந்திருக்க, மொத்தமாக மூர்க்கனாகி நின்றிருந்தான் அவன். தங்கையின் வாழ்வைக் குறித்த பயம் அவனை இப்படி மாற்றியிருக்க, தங்கை சேஷன் வீட்டிலிருக்கிறாள் என்று தெரிந்த நொடி முதலே கொதித்துக் கொண்டு தான் இருக்கிறான் அவன். அவனது கொதிப்பும், கோபமும் அவனது வார்த்தைகளிலும், செயலிலும் அப்படியே வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

“அவளை இங்கே வரக்கூடாதுன்னு சொல்வியாடா நீ” என்று சேஷன் ஓரடி முன்னே வைக்க,

“நீ யாருடா அவளை கூட்டிட்டு வர?” என்று அவனிடம் பாய்ந்தான் தேவ்.

“என் பொண்டாட்டியை நான் கூட்டி வர உங்கிட்ட அனுமதி வாங்கணுமா?”

“நீ கட்டின தாலியையே கழட்டி கொடுத்தாச்சு. இன்னும் அவளை பொண்டாட்டின்னு சொல்லிட்டு திரிய உனக்கு வெக்கமா இல்ல. என்னவோ, ஏகபத்தினி விரதன் மாறி பேச்சு வேற… உனக்கெல்லாம் எது…” என்றவன் இன்னும் என்ன பேசியிருப்பானோ, “தேவ்” என்று ஒரே நேரத்தில் அவனை அதட்டினர் தந்தையும், மகளும்.

தேவ் குறையாத ஆத்திரத்துடன் தங்கையை முறைக்க, அவசரமாக அவனை நெருங்கினார் அவன் தந்தை. “நீ கிளம்பும்போதே வேண்டாம்ன்னு சொன்னேன். இப்படி பிரச்சனை பண்ணத்தான் கிளம்பி வந்தாயா நீ” என்று அவனை கடிந்தார் பிரபாகரன்.

“நீ கார்ல இரு போ.” என்று அவர் மகனை வெளியேற்ற முற்பட, தங்கையின் கையை இன்னும் அழுத்தமாகப் பற்றினான் தேவ்.

“அவளை விடு. நீ கிளம்பு.” என்ற தந்தையை அவன் மறுப்புடன் பார்த்து வைக்க,

“அவ என்னோட வருவா தேவ். நீ முதல்ல கிளம்பு” என்றார் பிரபாகரன்.

அவரை அதற்குமேல் மறுக்க முடியாமல் சத்யதேவ் கோபத்துடன் தங்கையின் கையை விட்டு வெளியேற, செல்லும் அவனைப் பார்த்து நின்றவர் அவன் வெளியேறிய நொடி, “என்னை மன்னிச்சிடும்மா” என்றார் கலையரசியிடம்.

தேவ் தன்னை ஒரு பொருட்டாக கூட மதியாமல் பேசிச் சென்றது வலிக்கச் செய்தாலும், பிரபாகரனின் வார்த்தைகளில் துடித்து நிமிர்ந்தார் கலையரசி.

Advertisement