Advertisement

மௌனமாய் எரிகிறேன் 24

நேரம் இரவு பத்து மணியைக் கடந்து விட்டிருக்க, மலர்விழியின் வீட்டிலிருந்து கிளம்பி தன் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் தேவசேனா. அவளே காரை எடுத்து வந்திருக்க, சற்றுத் தள்ளி அவளின் பாதுகாப்பு வாகனம் பின்தொடர்ந்து கொண்டிருந்தது அவளை.

இரவு நேர தனிமைக்கு மருந்தாக இளையராஜாவும், சித்ராவும் உருகிக் கொண்டிருக்க, “இனி எனக்காக அழ வேண்டாம்… துளி கண்ணீரும் விட வேண்டாம்…” என்று கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது பிளேயர்.

அவசரம் என்று ஏதுமில்லாததால் வெகு நிதானமாக அவள் காரை இயக்கி கொண்டிருக்க, அவள் வீட்டிற்கு முந்தைய திருப்பத்தில், யாருமில்லா தனிமையில் அழகாக அவள் காரை மறித்து நின்றான் ஆதிசேஷன்.

தேவா காரை நிதானமாக செலுத்தி வந்ததால் அங்கே ஒரு விபத்து தடுத்து நிறுத்தப்பட, அதை குறித்தெல்லாம் கவலையற்றவனாக காரிலிருந்து இறங்கி தேவசேனாவை நெருங்கினான் ஆதிசேஷன்.

ஆதிசேஷனின் வருகை பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை அவளிடம். மாறாக, அதுவரை இருந்த இளக்கம் மாறிப்போக, இறுக்கத்துடன் நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள் அவள்.

சில நொடிகளில் அவளை நெருங்கிவிட்ட ஆதிசேஷன் அவளது கார்க்கண்ணாடியை இரு விரல்களால் தட்டி சத்தமெழுப்ப, அவனைத் திரும்பிக்கூட பார்ப்பதாக இல்லை அவள்.

ஆனால், எவ்வளவு நேரம் அப்படி நடு சாலையில் நின்றிருக்க முடியும். தாண்டிச் செல்லவும் வழியில்லாமல் அவனது கார் மறித்து நின்றிருக்க, அவனிடம் வாதிட விருப்பமில்லாமல் ஸ்டியரிங் வீலில் தலை சாய்த்துக் கொண்டாள்.

சேஷனின் பொறுமையும் பறந்துவிட, சற்றே சத்தமாக அவள் காரின் கண்ணாடியை அடிக்க தொடங்கிவிட்டான் அவன். தேவசேனா அதில் கோபம் கொண்டவளாக, காரின் கதவைப் பட்டென திறந்துவிட, ஒருநொடி தாமதித்து இருந்தாலும் அந்த கதவு சேஷனின் மீது இடித்திருக்கும்.

சேஷன் வேகமாக பின்னே குதித்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தேவசேனா காரை விட்டு இறங்கியவள் முதலில் சாலையைத் தான் ஆராய்ந்தாள். இந்த நேரத்தில் இவனை யாரும் பார்த்து வைத்தால் என்னென்ன சிக்கல்கள் வரும் என்பதை உணராதவளா அவள்?

‘ஏன் இதெல்லாம் செய்கிறான்?’ என்று எரிச்சல் மிகுந்து நிற்க, சேஷனைக் கண்டனத்துடன் பார்த்திருந்தாள் தேவசேனா.

சேஷன் அவள் கண்டனத்தை காற்றில் விட்டு, “எப்படி இருக்க” என்றான் இயல்பாக.

தேவசேனா பதில்கூறாமல் பார்வையை மட்டும் அவன்மீது பதித்து நிற்க, தன் இரு கைகளையும் அவளுக்கு முன்பாக நீட்டினான் ஆதிசேஷன்.

தேவசேனா கேள்வியாக பார்க்கும்போதே, தனது கைகளால் அவள் இருகைகளையும் பற்றிக் கொண்டு, “சாரி” என்று உணர்ந்த குரலில் அவன் யாசிக்க, வேகத்துடன் அவன் கைகளை உதறித் தள்ள முயன்றாள் அவள்.

ஆனால், ஆதிசேஷனின் பிடி வலுவாக இருக்க, தேவாவின் கைகள் விடுபட மறுத்தது. தேவசேனா கோபத்துடன், “கையை விடு” என, மீண்டும், “சாரிம்மா” என்றான் ஆதிசேஷன்.

“எனக்கு உன் மன்னிப்பு வேண்டாம் சேஷா. என்னை விடு” என்றாள் தேவசேனா.

“நிச்சயமா என்னால முடியாது சேனா” என்று சேஷன் பிடிவாதத்துடன் உரைக்க,

“என் கையை விடு” என்று நிதானமாக அவள் மீண்டும் உரைக்க, அவள் கைகளை விடுவிப்பதாக இல்லை அவன். அவள் கைகளை வேகமாக விடுவிக்க முயன்றதில், சேஷன் தடுமாறி அவள்மீதே விழ பார்க்க, இறுதி நொடியில் சுதாரித்து நின்று கொண்டான்.

தேவசேனா கடுமையாக அவனை முறைத்து நிற்க, “என்மேல தப்பில்ல. நீதான் இழுக்கற என்னை” என்றான் சேஷன்.

“எனக்கு அதற்கான தேவை எப்பவுமே இருந்ததில்ல சேஷா. உன்னை இழுக்க எப்பவும் நான் முயற்சி பண்ணதும் இல்ல. நீதான் இப்பவும் விடாம என்னை பிடிச்சு வைக்கப் பார்க்கிற”

“நான் பிடிச்சு வச்சுட்டா, நீ அப்படியே என் கைக்குள்ள அடங்கிடுவியா சேனா”

“நடக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் அதைப்பத்தி பேசி நேரத்தை வீணடிக்கணும்”

“ஆனா, நான் தயாரா இருக்கேன் சேனா. மொத்தமா உனக்குள்ள தொலைஞ்சு போகணும்னு தான் நினைக்கிறேன்”

“அமிர்தான்னு நினைச்சு என்கிட்டே பேசிட்டு இருக்கியா”

“அமிர்தா என்னோட கடந்தகாலம் சேனா. எப்போ உன் கழுத்துல தாலி கட்டினேனோ, அந்த நிமிஷத்துல இருந்து நான் உனக்கு உண்மையா இருந்திருக்கேன். உன்னையும், அம்ருவையும் நான் குழப்பிக்கிட்டதே கிடையாது”

“அப்போ உன்னோட அம்முவுக்கு என்ன அர்த்தம் சேஷா” என்று கிடுக்கிப் பிடித்தாள் சேனா.

“என்ன அர்த்தம்? நான் அம்முன்னு கூப்பிட்டது உன்னைத்தான். ஆயிரம் முறை உனக்கு விளக்கம் சொல்லிட்டேன் சேனா.”

“நான் அந்த அம்முவை நினைச்சு எப்படியெல்லாம் கலங்கி இருக்கேன்னு தெரியும் இல்ல உனக்கு. நீ அமிர்தாவை நினைச்சு என்னை அம்முன்னு கூப்பிடறதா குழம்பி, பலமுறை நான் அழுதிருக்கேன்.  நீ குடி மயக்கத்துல கிடந்தபோது, உனக்கு பக்கத்திலேயே கூட உட்கார்ந்து அழுதிருக்கேன். உனக்கு தெரியும் இல்ல…” என்று முடிக்காமல் சேனா நிறுத்த,

“சேனா நான்….”

“நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு”

“நான் சொல்றதை கேட்கவே மாட்டியா சேனா நீ?”

“நான் கேட்கறேனே… பதில் சொல்லு”

“தெரியும் எனக்கு. தெரிஞ்சுதான் அமைதியா இருந்தேன்.” என்று மென்குரலில் அவன் கூறிட,

“ஏன் அப்படி செய்த? இந்த ஒரு விஷயத்துக்கு எனக்கு பதில் சொல்லிடு. இப்போவே உன்னோட வரேன். உன்கூட குடும்பம் நடத்தணுமா? குழந்தை பெத்துக்கணுமா? இல்ல, அமிர்தாவாவே உன்னோட வாழணுமா” அத்தனையும் செய்றேன். ஆனா, இந்த ஒரு கேள்விக்கு எனக்கு பதில் சொல்லு” என்றவளுக்கு பதில் கூற முடியாமல் தயங்கி நின்றான் சேஷன்.

“உன்னோட அம்மு நானா இருக்க பட்சத்துல ஏன் அப்போவே அதை என்கிட்டே சொல்லி இருக்கக்கூடாது. நீ சொல்லியிருந்தா என்ன செஞ்சிருப்பேன் நான். அப்படியே உன்னோட பெட்ல வந்து உன்னை ஒட்டிட்டு படுத்துப்பேன்னு நினைச்சியா? இல்ல, அதுக்கும் மேல ஏதாவது ட்ரை பண்ணுவேன்னு நினைச்சு அமைதியா இருந்தியா? எனக்கு பதில் சொல்லுடா” என்றாள் ஆத்திரத்துடன்.

“சேனா… டென்ஷன் ஆகாத. உனக்கு நல்லதில்ல.” என்று சேஷன் அவள் தோள் தொட முயல,

“நீ பதில் சொல்லிடு. என்னோட மொத்த டென்க்ஷனும் வடிஞ்சிடும்” என்று விலகி நின்றாள் அவள்.

“என்னால உன்னை எதிர்கொள்ள முடியல சேனா. நீ என்னோட மனைவியா உரிமை எடுக்கக்கூடாதுன்னு நினைச்சேன். உன்னை என்கிட்டே இருந்து விலக்கி நிறுத்த எனக்கு வேற வழி தெரியல. நீ அம்முவை தப்பா புரிஞ்சிட்டு விலகி நிற்கவும், நான் அதை வாய்ப்பா மாத்திக்கிட்டேன்.” என்று தன்னை ஒப்புக்கொடுத்து நின்றான் சேஷன்.

சேனா கொஞ்சமும் யோசியாமல் கைநீட்டி அவனை அறைந்துவிட, சலனமே இல்லை அவனிடம். செய்த தவறுக்கான தண்டனை என்று அசையாமல் நின்றுவிட்டான். ஆனால், அதிலெல்லாம் இளகுவதாக இல்லை எதிரில் இருந்தவள்.

“வெட்கமா இல்லையா சேஷா உனக்கு. அவ்ளோ மோசமானவளா நான். ஒருவார்த்தை என்கிட்டே சொல்லியிருந்தா, உன்னை திரும்பிக்கூட பார்த்திருக்கமாட்டேன். ஏன் அதுக்கு முன்னாடியும் கூட, நீ அடுத்தவளுக்கு சொந்தமானவன்ன்னு தான் நினைச்சிருந்தேன்.”

“இப்போவரைக்கும் உன்னை என் சொந்தமா நான் நினைச்சதே இல்லையே. எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை. எப்பவும் சிரிச்சிட்டே இருந்தா, எனக்கு வலிக்கவே செய்யாதுன்னு அர்த்தமா…” என்று தன்னைமீறி கத்தி அடங்கியவள், “என்னால இதையெல்லாம் மறந்துட்டு போலியா உன்னோட வாழவே முடியாது. அப்படி வாழ நினைச்சாலும், நான் ஒன்னுமில்லாம போயிடுவேன். என்னை விட்டுடு” என்று முடிவாக கூறியவள் மீண்டும் காரின் கதவில் கையை வைக்க, அவள் கைமீது தனது கையை வைத்து தடுத்தான் ஆதிசேஷன்.

“எனக்கு நீ வேணும் தேவா” என்று கொஞ்சமும் சளைக்காமல், அவள் உணர்வுகளை சட்டை செய்யாமல் அவன் நிற்க, “எனக்கு நீ வேண்டாம். எப்பவும் வேண்டாம். உன்னை பார்க்கக்கூட விருப்பமில்ல எனக்கு.” என்று மீண்டும் இரைந்தாள் தேவசேனா.

ஆதிசேஷன் பட்டென தனது கையால் அவள் வாயை மூடி, “இதையெல்லாம் சொல்ல உனக்கு உரிமை கிடையாது சேனா.” என்றான் கண்களில் வலியுடன்.

“வேற யாருக்கு உரிமை இருக்கு… உனக்கா?”

“எனக்கு மட்டும்தான் இருக்கு. எனக்கு என்  மனைவி வேணும். என்ன நடந்தாலும் சரி. எனக்கு நீ வேணும். நான் உன்னை விடறதா இல்ல.”

“நீ யார் என்னை விட? உனக்கு என்னைப்பத்தி நல்லா தெரியும் சேஷா. என்னோட முடிவுகளை எப்பவும் யாரும் எடுக்க முடியாது. நீ எனக்கு வேண்டாம்.” என்று அழுத்தமாக உரைத்து அவள் மீண்டும் கார்க்கதவைத் திறக்க,

“எப்போ அமெரிக்கா கிளம்புற” என்றான் கேள்வியாக.

“இன்னும் ரெண்டு நாள் டைம் இருக்கு. உன்னால முடிஞ்சதை செய்.”

“நான் என்ன செய்யணும்? ஏதாவது செய்வேன்னு எதிர்பார்க்கறியா சேனா”

“நீ வெறும் வாய்ச்சொல் வீரன் இல்ல. மறந்துட்டேன்” என்று நக்கலடித்தபடி காரில் ஏற முயன்றவளின் இடையை வளைத்து தூக்கியவன், காரைவிட்டு அவளை இரண்டடி தள்ளி நிறுத்த, “சேஷா” என்று அதிர்ச்சியில் கத்திவிட்டாள் தேவசேனா.

அவள் சத்தத்தை கண்டு கொள்ளாமல் காரின் மீது சாய்ந்தபடி அவன் நின்றுகொள்ள, தங்களை விட்டு சற்று தள்ளி நின்றிருந்த தனது பாதுகாப்பு வாகனத்தை தான் பார்த்தாள் அவள். நல்லவேளையாக, அந்த வாகனம் இவர்களை விட்டு வெகுவாக தள்ளி நிற்க, இவர்களை யாரும் பார்த்திருக்கவில்லை.

சட்டென தோன்றிய நிம்மதியுடன் அவள் சேஷாவிடம் திரும்ப, “உனக்கான மரியாதை என்னால எப்பவும் கெட்டுப்போகாது சேனா.” என்றான் சேஷன்.

“வழியை விடு” என்று அவள் நெருங்க,

“உன் அத்தம்மாவை பார்க்க வேண்டாமா உனக்கு” என்றவன் வார்த்தைகளில் அவள் தயங்கி நிற்க,

“நம்ம விஷயத்துக்காக அவங்களை பழிவாங்காதா சேனா” என்றான் மீண்டும்.

“மனசாட்சி இருக்கா உனக்கு. நான் அத்தம்மாவை பழி வாங்குறேனா” என்று சேனா கோபம் கொள்ள,

“உன் அண்ணனை பேசவிட்டு வேடிக்கைப் பார்த்ததுக்கு வேற என்ன அர்த்தம். அப்போ நீ சுயநினைவோடை இல்லாம இருந்திருந்தாலும், அதுக்கு பிறகு அவங்ககிட்ட பேசியிருக்கணும்ல. பேசலையே” என்று சேஷன் நிறுத்த, இதற்கு என்ன பதில் சொல்வாள் அவள்.

“உன்னைத் தவிர்க்க நினைத்து அவரை தவிர்த்துவிட்டேன்” என்றா சொல்ல முடியும். தேவசேனா பதிலில்லாமல் நிற்க, “வா என்னோட” என்றான் சேஷன்.

“இல்ல… நான் காலையில அத்தம்மாவை பார்த்துக்கறேன். இப்போ வரமுடியாது.”

“ஏன் என்னோட வா. நான் கூட்டிட்டு போறேன்”

“நான் ஏன் உன்னோட வரணும்?”

“எப்படியும் ரெண்டு நாள்ல மொத்தமா விட்டுட்டு போகப் போற. கடைசியா ஒருமுறை என்னோட வா” என்றவன் அவளை யோசிக்கவிடாமல் அவள் கையைப் பிடித்து காரில் அமர்த்திவிட,

“இதெல்லாம் வேண்டாம் சேஷா. நடக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் நம்மை நாமே ஏமாத்திக்கனும்.” என்றாள் சேனா.

“ஏன் நடக்காதுன்னு சொல்ற. நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”

“எனக்கு உன்மேல ஒரு இயல்பான ஈர்ப்பு கூட இல்ல… வாழ முடியும்னு ஒரு சதவீதம் கூட நம்பிக்கையும் இல்ல”

“ஆத்மநாதனை முடிக்கச் சொன்னது நீதானே”

“அதுக்கும் நாம பேசற விஷயத்துக்கும் என்ன தொடர்பு சேஷா”

“யாருக்காக அவனை முடிக்க சொன்ன”

“நிச்சயமா உனக்காக இல்ல.” என்றவளின் வலது கையைப் பிடித்து கொண்டவன் அந்த கையை தன் தலைமீது வைக்க, அசராமல் தான் அமர்ந்திருந்தாள் தேவசேனா.

“திரும்ப சொல்லு. நீ ஆத்மாவை முடிக்க சொன்னது எனக்காக இல்லல்ல. உன் அத்தம்மா பையன் சேஷனுக்காக இல்லல்ல. சொல்லு” என்றவனை கொலைவெறியுடன் முறைத்தவள், “கையை விடுடா” என்று உதறி தன் கையை விடுவித்துக் கொண்டாள்.

சேஷன் மௌனம் காக்க, “அவனை முடிக்க சொன்னது உனக்காக தான். ஆனா, உன்னோட வாழறதுக்காக இல்ல. நீ கொலைகாரனாகாம தடுக்கத்தான் அதை செய்தேன். போதுமா”

“எனக்கு போதும்” என்று சிரிப்புடன் அவன் காரை இயக்க, கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள் தேவசேனா.

சேஷனும் அதன்பிறகு அவளை இம்சிக்காமல் சாலையில் கவனம் பதிக்க, அரைமணி நேரத்தில் சேஷனின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும்.

அந்த இரவு நேரத்தில் கலையரசி மகனுக்காக காத்திருக்க, மகளுடன் தன் மருமகள் வந்து நிற்பாள் என்று எதிர்பார்க்காமல் ஆனந்தத்தில் தடுமாறி நின்றார் அவர்.

சேனா அவரைப் பார்த்த நிமிடம், “அத்தம்மா” என்று ஓடிச்சென்று அவரை அணைத்துக்கொள்ள, “பார்த்தாயா” என்பதுபோல் தன் மகனைப் பார்த்தார் கலையரசி.

தேவ் பேசியது மொத்தத்தையும் கலையரசியின் வாயிலிருந்து சேஷன் அன்றே பிடுங்கி எடுத்திருக்க, தேவ் மீது அடங்காத ஆத்திரம் தான். அதை அப்படியே வெளிப்படுத்தவும் அவன் தயாராக, “வேண்டாம் சேஷா. தேவாம்மா சரியாகிட்டா என்கிட்டே வருவா. என் மகள் என்னை தேடி வருவா. நீங்க சண்டை போடாதீங்க” என்று அவனை அடக்கி வைத்திருந்தார் கலையரசி.

தேவா வீடு திரும்பியபின்னும் அவரை வந்து சந்திக்காமல் இருந்ததை சுட்டிக்காட்டி அவ்வபோது அவன் நக்கலடிக்க, “தேவா கண்டிப்பா வருவா” என்று நம்பிக்கையுடன் அப்போதும் கூறியிருந்தார் கலையரசி.

அவர் சொன்னபடியே இப்போது தேவசேனா வந்து நிற்க, மகனை பெருமிதமாக பார்த்தார் அவர்.

Advertisement