Advertisement

மௌனமாய் எரிகிறேன் 21

நேரம் இரவு ஒன்பது மணியைக் கடந்திருக்க, சேஷாவுக்கு அப்போதுதான் லேசாக உறக்கம் களைய தொடங்கியது. படுக்கையில் புரண்டு அவன் எழுந்து அமர, கண்கள் இப்போது தேவசேனாவைத் தேடியது. அந்த அறையில் அவள் இல்லாமல் போக, தானாகவே எழுந்து தேடலைத் தொடங்கிவிட்டான் சேஷன்.

அவன் தனது அறையிலிருந்து வெளியே வந்த நேரம், சத்யதேவ் மாடியின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தான். சேஷாவை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், அவனைத் தாண்டி நடந்தவன் தனது பாட்டியின் அறைக்குள் நுழைய, சேஷாவும் இயல்பாகவே அவனைத் தொடர்ந்தான்.

அவன் எதிர்பார்த்ததுப் போலவே, அங்குதான் அமர்ந்திருந்தாள் சேஷா. அந்த அறையில் இருந்த ஒரே சாய்வு நாற்காலியில் அவள் அமர்ந்திருக்க, அவளுக்கு எதிரே அவள் அண்ணன் நின்றிருந்தான்.

இவன் அறைக்குள் நுழைய, “கிளம்பு தேவா. நாம நம்ம வீட்டுக்கு போவோம்.” என்று தேவாவை அழைத்துக் கொண்டிருந்தான் தேவ்.

தேவா பதில் கூற அவகாசம் கொடுக்க விரும்பாமல், “நீ கிளம்பு தேவ். அவ வரமாட்டா.” என்றான் சேஷன். அளவுக்கு மீறிய அதிகாரம் அவன் குரலில்.

அந்த தொனி சத்யதேவின் பொறுமையை பறக்கச் செய்துவிட, “ஒழுங்கா போயிடு. உன்னை அடிச்சுப் போட்டுட்டு, இவளைக் கூட்டிட்டு போகக்கூட தயங்கமாட்டேன்.” என்றான் கோபத்துடன்.

சேஷன் அதற்கெல்லாம் கவலை கொள்ளாமல், “கிளம்புடா…” என,

“சொல்லிட்டே இருக்கேன்” என்று அவனை நெருங்கிவிட்டான் சத்யதேவ்.

“தேவ்…” அப்போதுதான் உயிர் வந்தவளாக தேவா குரல் கொடுக்க, அந்த குரலில் தேங்கி நின்றான் தேவ்.

“என்னோட வந்திடு தேவா.” என்று மீண்டும் அவளிடம் கேட்டு நிற்க,

“நிச்சயமா வருவேன். இப்போ நீ கிளம்பு.” என்று அவளும் சேஷனைப் போலவே கூறி வைத்ததில், கட்டுக்கடங்காமல் ஆத்திரம் வந்துவிட்டது அவனுக்கு. தேவாவின் கையைப் பிடித்தவன், அவளை இழுத்துக் கொண்டு வெளியேற முற்பட, சேஷனை நெருங்கிய நிமிடம் அவன் நெஞ்சில் தன் கையை வைத்து அழுத்தமாக அவனைத் தடுத்து நின்றான் சேஷன்.

தேவ் தங்கையின் கையை விட்டு சேஷனின் டீ சர்ட் காலரைப் பற்றிவிட, சேஷனும் நொடிகூட தயங்காமல் எதிரில் இருந்தவன் சட்டையைப் பிடித்துவிட்டான்.

இவர்களின் செயலில் தேவா எரிச்சல் கொண்டவளாக, “வெளியே போங்க ரெண்டு பேரும்.” என்றாள் சத்தமாக.

இரண்டு ஆண்மகன்களும் திகைத்து நிற்க, “கையை எடு சேஷா.” என்ற அதட்டலில் தேவ்வின் சட்டையை விட்டுவிட்டான் சேஷன்.

தேவ் இன்னமும் சேஷாவின் டீ சர்ட்டை பிடித்தபடியே இருக்க, தேவாவின் கண்டிப்பான பார்வையில் அவன் கையும் விலகியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் விலகி நிற்க, “இப்போ நீ கிளம்பு தேவ். மார்னிங் நான் வருவேன்.” என்று அழுத்தமாக தேவா கூறிவிட, அதற்குமேல் ஒன்றும் பேசாமல் வேகமாக வெளியேச் சென்றுவிட்டான் தேவ்.

சேஷன் இன்னமும் விலகாமல் அங்கே நிற்க, “வெளியே போங்க…” என்றாள் அவனிடமும்.

சேஷன் பார்வையை மொத்தமாக அவள்மீது பதித்து நிற்க, அவனிடம் வாதிட மனமில்லாமல் அறையினுள் சென்று அமர்ந்து கொண்டாள் அவள்.

அந்த வெண்ணிற மெத்தையின் மீது அவள் அமர்ந்திருக்க, அவள் அருகே சென்று நின்றவன், “நீ மார்னிங் எங்கேயும் போகக்கூடாது.” என்றான்.

“எந்த உரிமைல என்கிட்டே இப்படி சொல்ல முடியுது உங்களால?”

“நீ எந்த உரிமையை வச்சு என்னை கொலைகாரன் ஆகாம தடுத்த?”

“உரிமையும் கிடையாது, ஒன்னும் கிடையாது. நீ கொலைகாரனாகிட்டா என் அத்தை செத்தே போயிருப்பாங்க. அதுக்காக மட்டும்தான் உன்னை தடுத்தேன்”

“அதைத் தாண்டி எதுவுமே இல்லை இல்லையா?”

“நிச்சயமா இல்ல. அதைத்தாண்டி நீங்க என்ன எதிர்பார்க்கிறிங்க?” என்று தேவா கேட்டுவிடவும், லேசான ஏமாற்றத்தைக் காண்பித்தது சேஷாவின் முகம்.

“அதுதான் எதுவுமே இல்லன்னு சொல்லிட்டியே. எதிர்பார்த்து மட்டும் என்னவாகிட போகுது.” என்று விட்டேற்றியான குரலில் கூறியவன், “ஆனா, ஒரு விஷயம். எது எப்படி இருந்தாலும் இனி நீ என்னோட தான்” என்றான் முடிவாக.

“நான் ஏன் உன்னோட இருக்கணும்? நான் விவாகரத்து கேட்டேன் உன்கிட்ட?”

“நான் கொடுக்கறதா இல்ல.”

“நீ கொடுக்காம போனாலும், நான் உன்னோட இருக்க மாட்டேன்.”

“உன் அத்தை மகன் மேல உனக்கு அக்கறை இல்லையா?”

“அதுக்காக உன்னை ஒட்டிட்டே அலையணும்னு சொல்றியா? உன்னோட பக்கெட் லிஸ்ட்ல அடுத்து நான் இருக்கேனா?”

“நான் அப்படி ஏதாவது சொன்னேனா உன்கிட்ட? எனக்கு என் வைப் என்னோட இருக்கணும் அவ்ளோதான்”

“நான் எப்போ உன் மனைவியானேன்?”

“நாலு வருஷத்துக்கு முன்னாடியே… வாழ்நாள் முழுமைக்கும் நீதான்னு தெரிஞ்சுதான் கட்டினேன் சேனா”

“ஓஒ… தெரிஞ்சுதான் என்னை கொஞ்சம் கொஞ்சமா சாகடிச்சீங்களா?” என்று சேனா விரக்தியுடன் கேட்ட நிமிடம், அவள் அருகில் மண்டியிட்டான் சேஷன்.

தேவசேனாவின் கன்னத்தை அவன் தன் கையில் தாங்கிக்கொள்ள முற்பட, “வேண்டாம்” என்று அவன் கையை விலக்கிவிட்டாள் தேவசேனா.

“இந்த அன்பும், ஆறுதலும் எனக்கு வேண்டாம்” என்றாள் உறுதியாக.

“சேனா…”

“சேனா தான். எப்பவுமே சேனா மட்டும்தான். நான் உங்களோட மனைவியா இதுவரைக்கும் உணர்ந்தது  இல்ல. இப்போ, உணர எனக்கு விருப்பமில்ல.” என்றாள் ஒரே முடிவாக.

“நானும் உன்னை இப்படியே விடறதா இல்லை”

“விடாம பிடிச்சு வச்சுக்கோங்க… ஆனா, எந்த பலனும் இல்ல”

“பலன் இருக்கா இல்லையான்னு நான்தானே முடிவு பண்ணனும்?” என்றவனை வெறுப்புடன் நோக்கினாள் தேவசேனா.

“எதுக்கு இந்த பார்வை?” என சேஷன் இயல்பாக கேட்க, எதிரில் இருந்தவள் அவள் இயல்பில் இல்லை.

“என்ன திடீர்ன்னு பொண்டாட்டி மேல இவ்ளோ அன்பும், அக்கறையும்?”

“எப்போ உன்மேல அக்கறை இல்லாம இருந்திருக்கேன்”

“உங்க அகராதியில அக்கறைக்கு என்ன அர்த்தம் சேஷா? எனக்கு புரியல”

“நான் எங்கே எப்படி இருந்தாலும், உன்னை விட்டது கிடையாது தேவா.”

“சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிட்டு இருக்காதிங்க. பொண்டாட்டி மேல அக்கறை இருந்திருந்தா, நான் அழுத நேரங்கள்ல எனக்கு ஆறுதலா இருந்திருப்பீங்க… நான் கஷ்டப்பட்ட நேரங்கள்ல எனக்கு துணையா இருந்திருப்பீங்க… அப்படியே இல்லாம போயிருந்தாலும் என்னை நிம்மதியா வாழ விட்டு இருக்கலாம்.”

“ஆனா, நீங்க என்ன செய்திங்க? நீங்க போற பப்புக்கும், பாருக்கும் என்னை அலைய வச்சதுதான் அக்கறையா? நீங்க எந்த ஹோட்டல்ல யார்கூட இருக்கீங்கன்னு என்னை தேட வச்சது அக்கறையா?” என்று நான்கு வருடங்களுக்கும் சேர்த்து வைத்து தேவா கேள்வி கேட்க,

“தேவா நான் குடிச்சுட்டு விழுந்து கிடந்ததெல்லாம் தப்பு தான். ஆனா, அன்னிக்கு ஒருநாள் தவிர, எப்பவும் யாரோடவும் நான் இருந்தது இல்ல. அதுவும் அன்னைக்கு எனக்கே தெரியாம நடந்த தப்பு அது.”

“அசிங்கமா இருக்கு சேஷா… வெளியே சொல்லாதீங்க.”

“எதுடி அசிங்கம்? எனக்கே தெரியாம என் ட்ரிங்க்ஸ்ல என்ன கருமத்தையோ கலந்து கொடுத்து ரூமுக்கு கூட்டிட்டு போயிருக்கா. இது நான் அசிங்கப்பட என்ன இருக்கு?”

“ஓஹ்… அது அசிங்கம் இல்லையா… அப்போ அமிர்தா… கிட்டத்தட்ட மூணு வருஷம் தாலியே கட்டாம அவளோட குடும்பம் நடத்தி இருக்கீங்களே அது எப்படி? இல்ல, அவளும் எதையாவது கலந்து கொடுத்து…”

“சேனா…”

“வலிக்குதா? நல்லா வலிக்கட்டும்.”

“அமிர்தாவைப் பத்தி பேசாத… ப்ளீஸ்”

“ஏன் நான் பேசக்கூடாது? பேசுவேன்.”

“அவளைப்பத்தின எல்லா விஷயமும் கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு தெரியும். தெரிஞ்சும் ஏன்டி என்னை கல்யாணம் பண்ண? வேண்டாம்ன்னு எத்தனை முறை சொன்னேன்?” என்று அவனும் கோபம் கொள்ள,

“எனக்கு தெரிஞ்சு நான் செஞ்ச ஒரே தப்பு அது மட்டும்தான். ஆனா, அதுக்காக நீங்க கொடுத்த தண்டனை ரொம்ப அதிகம். நான் நிறையவே அனுபவிச்சுட்டேன். இனி என்னால முடியாது. என்னை என் விருப்பத்துக்கு விட்டுடுங்க” என்று சோர்ந்தவளாக வேண்டினாள் தேவசேனா.

“உன் விருப்பத்துக்கு விடணுமா? இங்கே இதுவரைக்கும் எல்லாமே உன் விருப்பத்துக்கு தான் நடந்துட்டு இருக்கு சேனா… நம்ம கல்யாணநாள் தொடங்கி, இன்னைக்கு மதியம் வரைக்கும் நீ என்ன நினைக்கறியோ, அது மட்டும்தான் நடந்திருக்கு. ஆனா, இனி அப்படி நடக்காது” என்று சேஷா உறுதிகூற,

“என் விருப்பமா? அது எங்கே இருக்கு சேஷா… உன் மனசாட்சியை கேட்டுப் பாரு. நம்ம கல்யாணம் என் விருப்பத்தோட நடந்ததா… நான் உன்னை காதலிச்சேனா. உன்னை உன் அமிர்தாவுக்கு விட்டு கொடுக்க முடியாம, அவ வாழ்க்கையை நான் தட்டிப் பறிச்சேனா?”

“இல்லையே… இதுவரைக்கும் யாரையும் திரும்பிக்கூட பார்த்ததில்லை நான். சேஷாவை மட்டுமில்ல, வேற எவனையும் கூட நினைச்சதுக் கிடையாது. அப்படியிருக்க, நான் ஏன் உன்னை கல்யாணம் பண்ணனும்? அதுவும் இன்னொருத்தியோட வாழ்ந்து முடிச்ச உன்னை நான் ஏன் கல்யாணம் பண்ணனும்?”

“நீ உண்மையை சொல்லிட்டா, எல்லாமே மாறிடுமா? அன்னைக்கு என் பாட்டியைத் தவிர என்னால வேறெதையும் யோசிக்க முடியல. இந்த கல்யாணம் எப்படியாவது அவங்க உயிரை பிடிச்சு நிறுத்திடாதான்னு மட்டும்தான் யோசிச்சேன்.”

“ஆனா, அதுவும் நடக்கல… என் பாட்டி என்னை விட்டு ஒரேடியா போயிட்டாங்க… எனக்கு எவ்ளோ பெரிய இழப்பு தெரியுமா அது? உன் அமிர்தா உன்னைவிட்டு போனதைவிட, ரொம்ப அதிகமான வலி அது.”

“அதற்குக்கூட முழுசா என்னை அழவிடல நீ. நீ என்ன நினைக்கிற? வலி, வேதனை எல்லாமே உனக்கு மட்டும்தானா… மத்தவங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தோமா? உனக்கு உன்னோட காதல் மட்டும்தான் பிரச்சனை, அது ஒண்ணுதான் வலி”

“ஆனா, உன்னைவிட பலமடங்கு அதிகமா அனுபவிச்சு இருக்காங்க என் பாட்டி… சொந்த மகனோட மரணத்துக்கு யார் காரணம்னு தெரிஞ்சும், அவனை எதுவுமே செய்ய முடியாம அமைதியா ஒதுங்கி போக எவ்வளவு சகிப்புத்தன்மை வேணும். அதே குடும்பத்து பொண்ணை பேரன் காதலிக்கிறேன்னு வந்து நிற்கிறதை ஜீரணிக்க அவங்க எவ்வளவு போராடி இருக்கணும்?”

“அவங்களை விடவா உங்க வலி பெருசு?” என்றவள் பாட்டியின் நினைவில் கண்ணோரம் துளிர்த்துவிட்ட நீரை பட்டென சுண்டிவிட்டு கொண்டாள்.

“உன் பாட்டியை மொத்தமா நியாயப்படுத்த நினைக்காத.” என்று சேஷன் இடையிட.

“எல்லா தப்பையும் செஞ்ச நீயே உன்னை நியாயப்படுத்தும்போது, ஒரு பாவமும் அறியாத என் பாட்டியை நான் ஏன் நியாயப்படுத்தக்கூடாது?”

“நீ ஆயிரம் காரணம் சொன்னாலும், உன் பாட்டி எனக்கு செஞ்ச எதுவும் இல்லன்னு ஆகிடாது சேனா”

“உங்களை நீங்க விரும்பியதை படிக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க அவ்வளவு தானே. உங்களை பாரின் போகக்கூடாதுன்னு சொன்னாங்க… அதுதானே உங்க கோபம்.’

“ஆனா, பாட்டியை மீறி உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சாங்க என் அத்தை. அவங்களுக்கு நீங்க என்ன செய்திங்க?”

“என் பாட்டி சொன்னபடி படிச்சீங்களா… இல்ல, ஒழுக்கமா வாழ்ந்து காட்டினீங்களா… எதுவுமே இல்லையே. பிறகு, அவங்களை பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கு…”

“சரி… அதெல்லாம் கூட போகட்டும். படிச்சு முடிச்சு வந்து உங்க தொழிலை பார்க்க நினைச்சீங்களா. உங்களுக்கு உங்க காதலை தவிர வேற எதுவும் யாரும் நியாபகத்துல இல்ல சேஷா. என் பாட்டியும் உங்களைப்போலவே தன்னோட சுயநலம் பெருசுன்னு நினைச்சிருந்தா, நீங்களும், நானும் இப்படி இருந்திருக்க மாட்டோம்.”

“இதெல்லாம் இல்லாமலே இருந்திருக்கலாம் சேனா. நிம்மதியாவது மிஞ்சி இருக்கும்.”

“உங்க நிம்மதி போனதுக்கு முழு காரணமும் நீங்க மட்டும் தான். அனாவசியமா அடுத்தவங்களை கைநீட்டிட்டே இருக்காதீங்க.” என தேவசேனா விடாமல் சேஷனின் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்க, ஆவலுடன் வாதம் செய்ய விரும்பாமல் சோர்ந்தவனாக கால்களை நீட்டி தரையில் அமர்ந்து விட்டான் அவன்.

அடித்தது அவள்தான் என்றாலும், ஏனோ அவனது வலி நிறைந்த முகத்தை காணச் சகியாமல் எழுந்து தனக்கு பிடித்தமான பால்கனி ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டாள் தேவசேனா.

என்னவோ, அவளால் சேஷனின் தவறுகளை அப்படி எளிதாக கடந்துவிட முடியவில்லை.

இத்தனை நாள் இல்லாமல் இன்றென்ன வந்தது இவனுக்கு என்று எரிச்சல் வந்து சேர்ந்து கொண்டது தான் மிச்சம்.

இவனது கடமைகள், பழிவாங்கல் என்று அத்தனையும் முடிந்த நிமிடம், நான் தேவைப்படுகிறேனா? என்று கோபம்.

இத்தனை நாட்களின் மௌனமும் மொத்தமாக இன்று உடைந்திருந்தது. ஆனாலும், மனது ஆறவில்லை.

சேஷன் சொல்வதுபோல் இயல்பாக “என் புருஷன்” என்ற உரிமையும் கைவர வில்லை அவளுக்கு. அவள் எதிர்பார்த்தபோது கிடைக்காதது, இன்று கிடைக்கையில் கசந்து போயிருந்தது.

சேஷனின் உணர்வுகளும், அவன் கூறும் உரிமையும் புரியவே இல்லை தேவாவுக்கு. வேண்டாமே என்ற எண்ணம் தான்.

எப்போதும் வேண்டும் என்று நின்றவள் கிடையாது தான். ஆனால், பாட்டிக்காக, குடும்பத்திற்காக, நன்றிக்காக என்று ஏதோ ஒரு உந்துதல் இருந்தது இதுவரை. என்று அவனை அவன் வீட்டை விட்டு மொத்தமாக வெளியேறினாளோ, அன்றே அத்தனையும் துறந்து விட்டிருந்தாள் அவள்.

அவள் மனதில் அத்தை மகன் என்பதைத்தாண்டி, ஒரு கணவனாக பதியவே இல்லை அவன்.

தேவாவுக்கு அவன் வாழ்வை சீராக்க வேண்டும். அவன் தொழிலை மீட்க வேண்டும் என்று கனவுகள் இருந்ததே தவிர, சேஷனின் காதல் மனைவியாக வலம் வர என்றுமே எண்ணம் இருந்தது இல்லை.

அவனும் தன் கவலைகளே பெரிதென நினைத்ததால், இதுநாள் வரை அவளைப்பற்றி பெரிதாக ஆராய்ச்சி எல்லாம் செய்ததில்லை.

இன்று அத்தனையும் முடித்து அவன் நிதானித்து நிமிர்ந்து பார்க்கையில், வாழ்வு தூரமாகிப் போயிருந்தது.

ஏனோ, அந்த அறைக்கும், பால்கனிக்கும் இடையே ஓராயிரம் கிலோமீட்டர் இடைவெளி இருப்பதாக தோன்றியது சேஷனுக்கு.

பால்கனியின் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் பார்வை எங்கோ தொலைவில் தெரிந்த இருட்டை வெறித்துக் கொண்டிருக்க, அறையில் விளக்கெரிந்தபோதும் அந்த இருட்டில் தொலைந்து போகவே விருப்பம் கொண்டான் ஆதிசேஷன்.

.

Advertisement