Advertisement

மௌனமாய் எரிகிறேன் 19-2

ஆத்மீயும், அவள் அன்னை ராதாவும் இளமாறனின் வீட்டில் இருக்க, தனது கணவரின் செயலை பொறுக்க முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் ராதா. அமிர்தா இறப்பை தற்கொலை என்று நம்பிக் கொண்டிருந்தவர் தானே அவரும்.

கணவன் மீது அவருக்கும் வருத்தம் இருந்தது தான். அவள் விருப்பப்படியே விட்டிருந்தால் கூட, எங்கேனும் உயிருடன் இருந்திருப்பாளே என்று பலநாட்கள் தனக்குள் குமுறி அழுதிருக்கிறார் ராதா. கணவரின் பிடிவாதத்தினால் தான் மகள் தற்கொலை செய்து கொண்டாளோ என்று பல சமயங்களில் கலங்கி இருக்கிறார்.

ஆனால், தன் அண்ணன் மகளை தன்னுடைய மகளாகவே வளர்த்தவர் என்பதால், கணவரிடம் வெளிப்படையாக அவரின் வருத்தங்களை தெரிவித்தது இல்லை ராதா. ஆத்மாவும் அமிர்தாவின் இறப்பில் அழுது கரைந்து ஓய்ந்து போய் அமர்ந்திருக்கவும், அதற்குமேல் அவரை வறுத்த விரும்பவில்லை அவர்.

அவர் அமிர்தாவை கண்மண் தெரியாமல் அடித்தபோது கூட, அவர்களுக்குள் நுழைய தயங்கி நின்றவர் ராதா. ஆனால், அப்போதே அவரை கண்டித்திருக்க வேண்டுமோ… அப்படி ஏதாவது செய்திருந்தால் கூட, மகள் தன்னுடனே இருந்திருப்பாளோ என்று நொடிக்கு நொடி அவரை குற்றவுணர்வு அரிக்க ஆரம்பித்திருந்தது.

மகளின் நினைவில் அவர் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்க, அவரை நினைத்து மிகவும் கவலைப்பட்டுப் போனாள் ஆத்மீ. இன்றைய நிலைக்கு அவளுக்கு என்று இருக்கும் ஒரே உறவு அவர் மட்டும்தானே. அவருக்கும்  ஏதாவது என்றால், தான் என்னாவோம் என்று அவளும் அழ ஆரம்பித்துவிட, இளமாறன் தான் இடையிட்டு இருவரையும் அதட்டினான்.

“நீங்க ரெண்டு பேரும் அழுதுட்டே இருக்கறதால என்ன மாறிடும் ஆன்ட்டி? எதுக்காக அழறீங்க?” என, பதில் இல்லை அவர்களிடம்.

“இதுவரைக்கும் நடந்ததை நினைச்சு வருத்தப்படறதைவிட, இனி என்ன செய்யணும்னு யோசிக்கலாம் ஆன்ட்டி.” என்று அவன் எடுத்துச் சொல்ல, அந்த இரவு நேரத்தில் அவன் வீட்டிற்கு வந்தாள் தேவசேனா.

ஆத்மீயின் அழுத முகம் பார்த்து, “ஈவினிங் அவசரப்படாதன்னு சொன்னேன்ல.” என்றாள் தேவா.

“தினம் தினம் அவர் போடுற நல்லவர் வேஷத்தை என்னால சகிக்க முடியல தேவாக்கா… எப்படி என்னை பொறுமையா இருக்க சொல்றிங்க?” என்று மீண்டும் அழுதாள் அவள்.

“நீ அழறதால எதுவும் மாறாது ஆத்மீ. அடுத்து என்ன? என்ன செய்யப் போற?” என்று தனது தோரணையான குரலில் தேவா கேட்க, ராதா தேவாவைத் தான் பார்த்திருந்தார்.

“நீயே சொல்லும்மா. என்ன செய்யலாம்?” என்று அவர் ஆத்மீக்கு முன்பாக தேவசேனாவிடம் கேட்க,

“சிம்பிள் ஆன்ட்டி. எந்த சொத்துக்காக இதையெல்லாம் செய்தாரோ, அது எதுவுமே அவருக்கு கிடைக்கக்கூடாது. அமிர்தா விஷயத்துல என்ன தப்பு செய்தார்ன்னு அவரே ஒத்துக்கணும்” என்றாள் தேவா.

“நிச்சயமா உண்மையை எல்லாம் சொல்ல மாட்டார் தேவா. நாலு வருஷமா கொஞ்சம்கூட எனக்கு சந்தேகம் வரலையே. கொஞ்சம்கூட குற்றவுணர்வே இல்லாம இருந்திருக்கார். அவரே உண்மையை சொல்றதெல்லாம் நடக்காத காரியம்.” என்றார் ராதா.

“ஆத்மீ ஒருத்தி இல்லாம போயிருந்தா, சொத்து மொத்தத்தையும் ஏதாவது ட்ரஸ்டுக்கு எழுதிக் கொடுத்துட்டு போய்டுவேன். ஆனா, இவளுக்கு வாழ்க்கை இருக்கே.” என்று அவர் கலங்க,

“அதெப்படி நீங்க எழுதிக் கொடுக்க முடியும் ஆன்ட்டி?” என்று கவனமானாள் தேவா.

“ஹ்ம்ம்… அம்மா எழுதிக் கொடுக்க முடியும் தேவாக்கா… எங்களோட சொத்துல பாதிக்கும் மேல அம்மாவுக்கு தாத்தா கொடுத்தது தான். அப்பாவோட பிராபர்ட்டிஸ்ல கூட அம்மாவுக்கும் நிறைய ஷேர்ஸ் இருக்கு. கண்டிப்பா அம்மாவால முடியும்.” என்றாள் ஆத்மீ.

“என்னைப்பத்தி கவலைப்பட வேண்டாம்க்கா. சொல்லப்போனா, இந்த சொத்தைப் பத்தி பேசக்கூட பிடிக்கல எனக்கு. எனக்கு இது எதுவுமே வேண்டாம். அம்மாவையும் நானே பார்த்துக்குவேன். எனக்காக பார்த்து அவர் தப்பிக்கக்கூடாதுக்கா.” என்று கண்களைத் துடைத்தபடி கூறினாள் ஆத்மீ.

மகளின் பேச்சில் தாய் கண்ணீர் விட்டபடியே அமர்ந்திருக்க, தேவா இளமாறனை அர்த்தமாகப் பார்த்தாள்.

“நான் சொல்றதை கேட்பீங்களா ஆன்ட்டி?” என்றான் இளமாறன்.

“எனக்கு அதைத் தவிர வேற வழியில்லை இளா… நீதான் சொல்லணும்.”

“உங்களுக்கு என்மேல நம்பிக்கை இருக்கா?”

“நம்பிக்கை இல்லாமலா நீ கூப்பிட்டதும் என் மகளை கூட்டிட்டு உன் பின்னாடி வந்தேன்?”

“உங்க மகளை முழுசா என்கிட்டே கொடுத்திடுங்க.” என்று அசராமல் ராதாவை அதிரவிட்டான் இளமாறன்.

அவரைவிட அதிகமாக அதிர்ந்து பார்த்திருந்தாள் ஆத்மீ. அவள் அவசரமாக எதையோ பேச முற்பட, “அவங்க பேசட்டும் ஆத்மீ. முடிச்சதும் நீ சொல்லு.” என்று அவளை அடக்கி வைத்தாள் தேவசேனா.

ராதா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவராக அமர்ந்து இருக்க, சிறு சிரிப்புடன் அவர் கையைப் பிடித்தான் இளமாறன்.

“நீ நிஜமா கேட்கறியா இளா? என் மகளை நீ…” என்று எதையோ கேட்கத் தயங்கியவராக அவர் நிறுத்த,

“எனக்கு ஆத்மாவோட பொண்ணு வேண்டாம். என் ராதா ஆன்ட்டியோட பொண்ணு ஆத்மீயைத் தான் நான் கட்டிக்க கேட்கறேன். உங்களுக்கு உங்க இளா மேல நம்பிக்கை இருந்தா கொடுங்க.” என்றான் இளமாறன்.

ஆத்மீ பொறுக்காமல், “இங்கே நடக்கிற விஷயத்துக்கும், என் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்? இது இப்போ முக்கியமா?” என்றாள் இளமாறனிடம்.

“உனக்கு கொஞ்சம்கூட பொறுமையே கிடையாதா?” என்று அவளை கடுமையாக அதட்டினான் இளா.

ஆத்மீ முகம் சுருங்கிவிட, “உன்கிட்ட சேஷாண்ணாவும், தேவாவும் படிச்சு படிச்சு சொன்னாங்க இல்ல. அதையும்மீறி தேவையில்லாத விஷயம் பண்ணி வச்சு, அந்தாளை இன்னும் ஏத்தி விட்டு இருக்க நீ. கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு அமைதியா இரு.” என்றான் மீண்டும்.

அவனே ராதாவிடம், “உங்க ரெண்டு பேருக்கும் கூட ஆத்மாவால ஆபத்து வரலாம் ஆன்ட்டி. உங்களோட பாதுகாப்பும் இங்கே ரொம்ப முக்கியம். அதுவும் நீங்க அவருக்கு எதிரா செயல்படும்போது, நீங்க சரியான இடத்துல இருக்கணும்.” என்றான்.

ராதா புரிந்தும் புரியாமல் விழிக்க, “நீங்க சொன்னபடி உங்க சொத்து அத்தனையும் பிரகா அறக்கட்டளைக்கு எழுதி வைங்க. உங்களுக்கு எப்படியோ அப்படிதான் எனக்கும் ஆத்மாவோட சொத்துகள் வேண்டாம்.” என்றான் இளமாறன்.

அவனே மீண்டும், “அமிர்தாவோட சொத்து மொத்தமும் அவ பெயரால நடக்கிற நல்ல காரியங்களுக்கு பயன்படட்டும் ஆன்ட்டி.” என, ராதாவுக்கு புரியவில்லை.

“பிரகா அறக்கட்டளை தேவாவோட பாட்டி பேர்ல இருந்தாலும், அங்கே நடக்கிற நல்ல விஷயங்கள் எல்லாமே தணிகைவேல், அமிர்தா இரண்டு பேர் பேரால தான் நடக்குது.” என்றான் விளக்கமாக.

ராதாவுக்கு மீண்டும் கண்கள் கலங்க, அவர் கையில் அழுத்தம் கொடுத்தான் இளமாறன்.

“அவளை அவ விருப்பப்படியே நான் விட்டு இருக்கணும் இளா. அவ ஆசைப்பட்டவனோட வாழ்ந்து இருப்பா. என் பொண்ணை நானே கொன்னுட்டேனே..” என்று இளாவின் கையைப் பிடித்துக்கொண்டு அழுதார் அவர்.

இளா, “போதும் ஆன்ட்டி அழாதீங்க.” என்று அவரைத் தேற்ற,

“நீ சொன்னபடியே செய்யுறேன் இளா. நான் எல்லாத்தையும் எழுதிக் கொடுக்கறேன் தேவா. நீங்க வேண்டிய ஏற்பாடெல்லாம் பாருங்க.” என்றுவிட்டார் அவர்.

“என் கல்யாண விஷயத்தை கண்டுக்காம விடறீங்களே?” என இளா நினைவூட்ட,

“நீ சொன்னபடியே செய்யுறேன்னு சொல்லிட்டேனே…” என்று ராதா சம்மதம் கொடுத்துவிட்டார்.

ஆத்மீ, “அம்மா…” என்று இடையிட,

“இனியாவது என் பேச்சைக் கேளு ஆத்மீ.” என்ற ராதாவின் வார்த்தையில் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள் அவள்.

இளா தேவாவைப் பார்க்க, கண்களை மூடித்திறந்து தான் பார்த்துக் கொள்வதாக தலையசைத்து அங்கிருந்து கிளம்பினாள் தேவசேனா. அவள் நினைத்திருந்த காரியங்கள் அனைத்தும் அவள் நினைத்தபடி ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறிக் கொண்டிருக்க, மிகுந்த கவனத்துடன் அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் அவள்.

இரவு பத்து மணிக்கு மேல் அவள் வீடுவர, அவளுக்காக காத்திருந்தான் சத்யதேவ்.

அவனைக் கண்டதுமே, “சேஷாவைப் பார்த்தாயா?” என்றாள் தேவா.

அவள் கேள்வியில் உண்மைக்கும் கடுப்பாகி விட்டான் தேவ். பின்னே, அங்கே சென்றால், “என் பொண்டாட்டி அனுப்பினாளா…” என்று சேஷா கேட்டிருக்க, இங்கே இவளும் வந்ததும் வராததுமாக அவனை விசாரிக்கவும் கொதித்துவிட்டான் அவன்.

“அவனை ஏன் பார்க்கணும்? அவன் எப்படிப் போனா எனக்கென்ன?” என்று கத்திவிட்டான் தேவ்.

தேவா அவனை அர்த்தமாக முறைத்து, “என் புருஷனைப் பார்க்க சொல்லல. உனக்கு அம்மாவா இருந்தவங்களோட மகனைப் பார்க்க சொன்னேன்.” என்று அழுத்தமாக கூறினாள் தேவா.

தேவ் அப்போதும் அமைதியாக நிற்க, “அவனுக்கு ஏதாவது ஆகிட்டா, உன் அத்தையை சமாளிக்க முடியுமா உன்னால. உயிரோட இருப்பாங்களா அவங்க.” என்ற தேவாவுக்கு பதில் கூற முடியவில்லை அவனால்.

ஆனாலும், தங்கையின் நிலை உள்ளுக்குள் இடித்தது.

“எனக்கு அவனைப் பார்க்கிற நிமிஷம் என் தங்கச்சி தான் கண்ணுல தெரியுறா. உன்னைத்தாண்டி தான் யாரும். எனக்கு அவன் யாரா இருந்தாலும், அவனோட எந்த உறவும் வேண்டாம்.” என்று கத்திவிட்டு வேகமாக அறைக்குச் சென்றுவிட்டான் தேவ்.

தேவா அவன் செயலில் சிரித்துக் கொண்டவளாக தன்னறைக்கு சென்றுவிட, அவள் பின்னோடே அவளுக்கு உணவை எடுத்து வந்தாள் பல்லவி.

“நான் கீழே வர மாட்டேனா பவி?” என்று கடிந்து கொண்டாள் தேவா.

“உன் பாசமலர் தான் கொடுக்க சொன்னது. நீ டயர்டா இருக்கியாம்.” என்றவளை முறைக்க முயன்று சிரித்துவிட்டாள் தேவசேனா.

“ஸ்கந்தாவுக்கும், உன் புருஷனுக்கும் எனக்கு பெருசா எந்த வித்தியாசமும் தெரியல.” என்று அலுத்துக்கொண்டே தேவா கட்டிலில் அமர, அவளுக்கு உணவை ஊட்டிவிட்டாள் பல்லவி.

“குளிக்கணுமேன்னு யோசிச்சேன் பவி.” என்று சிரிப்புடன் உண்டுவிட்டு, அப்படியே படுத்துவிட்டாள் அவள்.

மதியத்திலிருந்து அங்கும் இங்கும் அலைந்ததில் அசந்து போயிருந்தாள். பல்லவிக்கு கணவன் வார்த்தைகள் நினைவு வர, புன்னகையுடன் அவளுக்கு போர்வையை போர்த்தி வெளியே வந்தாள் அவள்.

தேவ் மனைவிக்காக காத்திருக்க, “சாப்பிட்டாளா” என்றான்.

“ஊட்டியே விட்டுட்டேன். அவளும் தூங்கிட்டா.” என்றாள் கடுப்பாக. பின்னே உறங்க முற்பட்டவளை எழுப்பி அவன் தங்கைக்கு சாப்பாடு கொடுக்க அனுப்பியிருந்தானே.

“ஹேய் லவிம்மா… கோவப்படாதடா.”என்றவன் மனைவியைத் தோளோடு அணைக்க,

“எனக்கு பசிக்குது. போய் தோசை ஊத்துங்க.” என்று கணவனை அவள் விரட்ட,

“நான் போட்டு தரேன் வா.” என்று மனைவியை அழைத்துக்கொண்டு சமையலறைக்கு வந்தவன் அவளை சமையல் மேடையில் தூக்கி அமர்த்திவிட்டு, அவளுக்கு பிடிக்கும்படி முறுகலாக போடி தோசை வார்த்து கொடுக்க, கணவனை காதலுடன் பார்த்தபடியே தோசையை விழுங்கிவைத்தாள் அவள்.

இடையிடையே, அவனுக்கும் ஊட்ட அரைமணி நேரத்திற்கு பின்னும் உறக்கம் வராமல் ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தனர் இருவரும்.

பவி தேவ்வின் தோளில் சாய்ந்திருக்க, “தேவாவை நினைச்சா பயமா இருக்கு லவி…” என்று அவன் தன் கவலையையும், அதற்கான காரணத்தையும் பகிர்ந்துகொள்ள,

“தேவா ரொம்ப மெச்யூர்ட் தேவ். அவளுக்கான முடிவை அவளுக்கு எடுக்க தெரியும். சேஷாவை பிரியணும்னு அவளே தானே முடிவெடுத்தா… அப்போ அடுத்து என்ன செய்யணும்னு கூட அவளுக்கு தெரியும். நீங்க சும்மா அவளை டென்சன் பண்ணிட்டே இருக்காதீங்க.”

“அவளை கொஞ்சம் நிம்மதியா விடுங்க. இங்கே ஸ்கந்தாவோட கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கா. கொஞ்சநாள் போகட்டும். அவ என்ன நினைக்கிறான்னு அவளே சொல்வா. அப்போ ஒரு அண்ணனா அவளோட நில்லுங்க. அது போதும்.” என்று மனைவி எடுத்துச் சொல்ல,

“அவளுக்கான வாழ்க்கையை அவ எப்போதான் வாழறது லவி?” என்று மீண்டும் கவலைகொண்டான் தேவ்.

“எல்லாமே சரியாகும் தேவ். அவ நல்லா இருப்பா. நீங்களும் கவலைப்பட்டு, அவளையும் கஷ்டப்படுத்தாதிங்க.” என்று சற்றே கண்டிப்புடன் பல்லவி கூற, அமைதியாக தலையசைத்துக் கொண்டான் தேவ்.

அதே நேரம் மருத்துவமனையில் படுத்திருந்தவனும் தேவாவைத் தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

அவளது நகர்வுகள் மொத்தமும் அதற்குள் அவன் காதுக்கு வந்திருக்க, தேவாவை நினைத்துதான் கவலை கொண்டான் அவனும். உண்மையில், அவனுக்கு நேர்ந்த விபத்துக்கான பதிலடி தான் அவளது நடவடிக்கைகள் என்றாலும் ஏனோ மொத்தமாக மகிழ முடியவில்லை.

ஆத்மா இன்னும் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருப்பதே அவனது மிகப்பெரிய கவலையாக இருந்தது. ஆனால், இந்த முறை அவனுக்கு அஞ்சுவதாக இல்லை அவனும்.

நான்காண்டுகளுக்கு முன்பு, “உன் குடும்பம் பொழைக்கணும்னு எண்ணமிருந்தா, இதோட இந்த வேலையை நிறுத்திக்கோ. இல்ல, அடுத்தடுத்து கொள்ளி போட்டுட்டே இருக்க வேண்டி இருக்கும்.” என்றவனை எதுவும் செய்ய முடியாமல் நின்ற நிலையில் இன்று அவன் இல்லையே.

அன்றுமே அவனுக்கு பெரிதாக பயமெல்லாம் இருக்கவில்லை. ஆனால், தன்னைப்பற்றி யோசிக்காதவன் குடும்பத்தை யோசித்து நிதானித்து நின்றான். அவனுக்கு அதற்குமேல் யாரையும் இழக்கும் துணிவு இல்லாததால் தன்னை மொத்தமாக தொலைக்க தொடங்கியிருந்தான்.

ஆனால், இன்று கதையே வேறு. இதற்குமேல் அவன் ஆத்மாவை விட்டு வைக்க முடியாது என்று முடிவெடுத்து விட்டவன் தேவாவின் பாதுகாப்பை அதிகப்படுத்தினான்.

தேவாவும் அடுத்த இரண்டு நாட்களில் ராதா, ஆத்மீயின் சொத்துகளை மாற்றி எழுதும் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்க, மூன்றாம் நாள் மதியம் பத்திரப்பதிவுக்கு ஏற்பாடு செய்து முடித்துவிட்டாள்.

ராதா முழுமனதுடன் எழுதிக் கொடுக்க, ஆத்மீ தான் இளமாறனை முறைத்துக்கொண்டே கையெழுத்திட்டாள். அவன் திருமணத்திற்கு அவளை நெருக்கிய கோபத்தில் தான் இருந்தாள் அவள்.

தேவா தனது அறக்கட்டளையின் அலுவலகத்திற்கு அவர்களை அழைத்துவர, அங்கே தேவா வீட்டு பெரியவர்களின் படத்திற்கு அருகில் இருந்த அமிர்தாவின் படத்தைப் பார்த்து கண்களைத் துடைத்துக் கொண்டார் ராதா.

“நீ நல்லா இருக்கணும் தேவா.” என்று அவள் தலையில் கைவைத்து அவர் ஆசிர்வதிக்க, தனது நிலையை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினாள் தேவசேனா.

அவள் இருந்த காரை ஓட்டுநர் இயக்க, அவளுக்குப் பின்னே அவளின் பாதுகாப்பு வாகனம்.

தேவா அலைபேசியில் கவனமாக இருந்த நேரம், ஓட்டுநர் காரை சற்றே வேகமாக ஒடித்து திருப்பிட, கார் ஒருமுறை குலுங்கி அடங்கியது.

“என்னண்ணா?” என்று அவள் பேசியதைக் காதில் வாங்காமல்,

“ஒன்னுமில்லம்மா…” என்றபடியே அதிவேகத்தில் காரை இயக்கியவர், அடுத்த பத்து நிமிடங்களில் அவளை வீடு சேர்த்துவிட்டார்.

தேவா குழம்பி நிற்கையிலேயே, “அம்மாவை வீட்டுல விட்டுட்டேன் சார்.” என்று சேஷாவுக்கும் தகவல் கொடுத்தாகி விட்டது.

“என்ன நடக்குது இங்கே?” என்று அவள் கத்தியதற்கும், திட்டியதற்கும் பதிலே கொடுக்கவில்லை அவர்.

போராடி சலித்தவளாக அவள் வீட்டிற்குள் நுழைய, அன்று மாலையே தனது ஆட்களை வைத்து ஆத்மநாதனை தூக்கியிருந்தான் சேஷா.

Advertisement