Advertisement

மௌனமாய் எரிகிறேன் 18

வெகுநேரம் ஆதிசேஷனைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கியிருந்த தேவசேனா ஏதோ முடிவுக்கு வந்தவளாக, தன் அலைபேசியில் இருந்து இளமாறனை அழைத்தாள். சில நிமிடங்களில் எதிர்முனை அழைப்பை ஏற்றுவிட, “சேஷாகிட்ட என்ன சொன்ன இளா?” என்றாள் சேனா.

“அவர்கிட்ட நான் ஏன் பேசப் போறேன் சேனா? நான் எதுவும் சொல்லலையே?” என்று ஒன்றுமறியாதவனாக மழுப்பினான் இளமாறன்.

“உன்னைத் தவிர யாரும் இதை செய்திருக்க முடியாது. ஏன்னா, யாருக்கும் இந்த விஷயம் தெரியாது.”

“நீயா எதையாவது நினைச்சா, நான் என்ன செய்ய முடியும் தேவா?”

“அப்போ நீ சொல்லல. அப்படித்தானே…”

“ஆமா…”

“உங்கிட்ட பேச எதுவும் இல்ல வைக்கிறேன்.” என்று தேவா அழைப்பைத் துண்டித்துவிட, அடுத்த நிமிடமே மீண்டும் அவளை அழைத்தான் இளமாறன்.

இரண்டு அழைப்புகளை எடுக்காமல் புறக்கணித்து, மூன்றாவது அழைப்பை அவள் ஏற்க, “நான்தான் சொன்னேன்.” என்றான் இளமாறன்.

“என்ன சொன்ன?”

“கிட்டத்தட்ட எல்லாமே. இரண்டு வருஷம் முன்னாடியே அவருக்கு தெரியும். என்கிட்டே மட்டும் அவர் விசாரிக்கல. நிறைய இன்வெஸ்டிகேட் பண்ணி இருக்கார். ஒரே ஆறுதல் அமிர்தா சூசைட் பண்ணிட்டதா நினைச்சுட்டு இருக்கார்.” என்றான் இளா.

“நம்பிட்டதா உன்கிட்ட அவன் சொன்னானா?”

“தேவா…”

“முழுமுட்டாள் இளா நீ. நீ எவ்ளோ பெரிய பைத்தியக்காரத்தனம் பண்ணி இருக்க புரியுதா உனக்கு?” என்று கத்தினாள் தேவா.

“என்ன இப்போ? அவருக்கு தெரிஞ்சதால என்ன ஆகிடும்? அவராவது அந்த ஆத்மாவை முடிக்கட்டும்.”

“என்ன அரசியல்வாதி புத்தியை காட்டுறியா? உன் அப்பனோட நிலைமைக்கு அவனை வச்சு பழி தீர்க்கலாம்ன்னு பார்த்தியா? கொன்னுடுவேன் இளா.” என்று தேவா எச்சரிக்க,

“அபத்தமா பேசற தேவா. ஆத்மாவை பழி வாங்க எனக்கு சேஷாண்ணா தேவையில்ல. உனக்கு தெரியும்.” என்று இளமாறன் அழுத்தமாக கூறிட,

“அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லி நீ எத்தனைப் பெரிய முட்டாள்தனம் பண்ணி இருக்க தெரியுமா இளா? இது எதுவுமே தெரியாம, நானும் பிசினஸ் மொத்தத்தையும் தூக்கி அவன்கிட்டே கொடுத்திருக்கேன்.”

“என்ன சொல்ற?”

“பிசினஸ் அவன் கைக்கு வந்த இரண்டாவது நாளே சேஷா அவனோட ஆட்டத்தை தொடங்கியாச்சு. இனி ஆத்மா என்ன செய்வானோ தெரியாது…” என்று கவலை கொண்டாள் தேவசேனா.

“நீ கவலைப்படற அளவுக்கு எதுவும் நடக்க வாய்ப்பில்ல தேவா. அண்ணா முன்னாடி மாதிரி இல்ல. ரொம்ப நிதானமா தான் இருக்காங்க. அவருக்கு எல்லா விஷயமும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். அவர் இதுவரைக்கும் எதுவும் செய்யலையே.”

“அதுதான் எனக்கும் புரியல இளா. எனக்கு தெரிஞ்சு சேஷா இப்படி காத்திருக்கிற ஆள் இல்ல.” என்று தேவாவும் சந்தேகம் கொண்டாள்.

 “நீ நினைக்கிற மாதிரி அண்ணா நேரடியா நிற்க வாய்ப்பில்ல தேவா. அவனை ஒன்னுமில்லாம செய்து உட்கார வைக்கத்தான் நினைப்பார்.”

‘எனக்கு அந்த நம்பிக்கையில்ல.” என்றவள் அலைப்புறுதலுடனே அழைப்பைத் துண்டித்தாள்.

நேரம் இரவு ஒன்பதை நெருங்க, பல்லவி சாப்பிட அழைத்துவிட்டாள். கீழே சென்று உணவை முடித்துக்கொண்டு அமைதியாகவே தனது அறைக்கு வந்துவிட்டாள் தேவா.

பல்லவி மாலையில் ஆதிசேஷன் வந்து சென்றதைப் பற்றி யோசிக்கிறாளோ என்று நினைக்க, தேவ், சேஷனைப் பற்றி தான் கூறியதை நினைத்துக் கவலை கொண்டிருக்கிறாளோ என்று எண்ணமிட்டான்.

தேவா உறக்கம் வராமல் தனது அறையை அளந்து முடித்து, நள்ளிரவுக்கு மேல் கட்டிலில் விழுந்தாள்.

அடுத்தநாள் காலையில் அவளது அலைபேசி சத்தமெழுப்பி அவளை எழுப்பிவிட, தூக்க கலக்கத்துடன் தான் அவள் அழைப்பை ஏற்றது. ஆனால், எதிர்முனையில் கேட்ட குரலில் முற்றிலும் உறக்கம் தொலைந்தவளாக எழுந்து அமர்ந்துவிட்டாள்.

“குட்மார்னிங் பேபி…” என்று வெகு இலகுவாக கூறியவன் ஆதிசேஷன் தான்.

“சேஷா.” என்று அவள் கோபம் கொள்ள,

“சேஷாதான் அம்மு.” என்று மீண்டும் அவளை ஆத்திரமூட்டினான் சேஷன்.

அவனின் அம்மு என்ற அழைப்பில் அவள் பதில் பேசாமல் அழைப்பைத் துண்டித்துவிட, அதன்பின் அவனிடம் இருந்து அழைப்பு வரவில்லை.

ஆனால், என்ன செய்து வைக்கப் போகிறானோ என்று ஒவ்வொரு நிமிடமும் சிந்தனையிலேயே ஓடிக் கொண்டிருந்தது. சேஷனின் நினைவில் ஸ்கந்தாவை அவள் மறந்து போக, அத்தையைத் தேடி மாடிக்கே வந்துவிட்டான் அவளின் மருமகன்.

“டேவா…” என்ற அவன் குரல் கதவருகில் கேட்கவும், தேவா கண்திறந்து பார்க்க, பொக்கை வாயுடன் சிரித்துக் கொண்டு நின்றான் ஸ்கந்தா.

“ஸ்கந்தும்மா…” என்று விரைவாக நெருங்கி பிள்ளையை கையில் தூக்கிக் கொண்டாள் தேவசேனா. சற்று தூரத்திலிருந்து தேவாவின் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்த பல்லவிக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது. கையில் வைத்திருந்த உணவுக்கிண்ணத்துடன் அவர்களை நெருங்கினாள் அவள்.

“அத்தைக்கூட தான் சாப்பிடுவானாம். ஒரே அடம்” என்று மகன்மீது குற்றம் சொன்னாள் பல்லவி.

ஒரு வயது குழந்தை வாய் திறந்து சொல்லுமா? இது தன்னை சாப்பிட வைக்கவே என்று புரிய,

“நைட் தூங்க லேட் ஆகிடுச்சு பவி. இப்போதான் குளிச்சுட்டு வந்தேன்.” என்று உண்மையைக் கூறினாள் தேவா.

“ஏன் தூங்காம இருந்த? நேத்து சேஷா எதுவும் டென்சன் பண்ணிட்டாரா?” என்றாள் தயக்கத்துடன். பேசும் விஷயம் எதிரில் இருப்பவளுக்கு பிடிக்குமா… இல்லையா… என்ற தடுமாற்றம் அவளுக்கு.

“என்னை டென்சன் பண்ற உரிமையை நான் யாருக்கும் கொடுக்கறது இல்ல. நைட் கொஞ்சம் தலைவலி அவ்ளோதான்.” என்று முடித்துவிட்டாள் தேவசேனா. அதற்குமேல் அவளிடம் பேச முடியாது என்பதால், அமைதியாக வாயை மூடிக்கொண்டு உணவை அவளிடம் நீட்டினாள் பல்லவி.

உணவுகிண்ணத்துடன் தேவா கட்டிலில் அமர்ந்துவிட, கட்டிலில் விளையாடத் தொடங்கியிருந்த ஸ்கந்தா மீண்டும் அவள் மடியில் வந்து அமர்ந்து கொண்டான்.

“அத்தை சாப்பிடட்டும் ஸ்கந்தா..” என்று பவி தூக்க முயல, அப்படி ஒரு சத்தம் மகனிடம். கண்களில் கண்ணீரே வராமல் அவன் சத்தமிட்டு ஊரைக் கூட்ட, அவனது அழுகைச் சத்தத்தில் கலையரசியும் வந்துவிட்டார்.

ஒருவழியாக, அவனை சமாதானம் செய்து உணவூட்டி முடித்து பல்லவி கீழே இறங்கிவிட,  “ஏன் தேவா கண்ணெல்லாம் சிவந்திருக்கே… நைட் ஒழுங்கா தூங்கலையா?” என்று அன்புடன் விசாரித்தார் கலையரசி.

தேவா, “கொஞ்சம் தலைவலி அத்தம்மா…” என, எதுவும் பேசாமல் அவளை மடியில் சாய்த்துக் கொண்டார் கலையரசி.

“லேப்டாப்பை கையில் வச்சுட்டு தூங்காம இருந்தியா?” என்று அதட்டியபடியே அவள் தலையைப் பிடித்துவிட தொடங்கினார் கலையரசி. தேவா கண்களை மூடிக்கொள்ள, அவளையும் அறியாமல் மனம் சேஷனை நினைத்துக் கொண்டது.

“அவனுக்கு ஒன்றென்றால் இவர் எப்படி தாங்குவார்?” என்பதே அவளது கவலையாக மாறிப் போக, மனம் தன்னையறியாமல் சேஷனை நினைத்துக் கொண்டது.

அவன் குணத்திற்கு நிச்சயம் ஆத்மநாதனை விட்டு வைக்க மாட்டான். அமிர்தா ஒருபக்கம் என்றால், அவன் தந்தை மறுபக்கம். சேஷன் அவன் தந்தையின் மீது கொண்டிருந்த அன்பும், பாசமும் அறியாதவளா அவள்? உண்மையில் அவள் அஞ்சுவதும் அதற்காகத் தான்.

ஆத்மநாதனை எதுவும் செய்ய நினைத்து, இவன் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதே அவளது மிகப்பெரிய கவலையாக இருந்தது. அவனைப் பற்றி நன்கறிந்தவள் என்பதால் தான் தேவாவும் இதுவரை ஆத்மநாதனை நேரடியாக எதிர்க்காமல் இருந்தது.

அவன் தொழில்களை முடக்கவும், அவன்  நிறுவனத்தை பின்னே தள்ளி தான் இந்த துறையில் நிலைபெற்று நிற்கவுமே அவளுக்கு மொத்தமாக மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆத்மநாதனை மொத்தமாக அழித்துவிட நினைத்து அவள் எடுத்து வைத்த முதல் அடிதான் அந்த விருது விழா.

ஆத்மநாதனின் அத்தனை தொழில்களையும் பின்னுக்கு தள்ளி, தனியொரு பெண்ணாக இந்த மூன்றாண்டுகளில் அவள் சாதித்து இருந்தது அதிகம்.

அவளுக்கும் குறி ஆத்மநாதன் தான். ஆனால், அவள் சேஷாவைப்போல் அடிதடியில் இறங்கவில்லை. அடித்ததே தெரியாமல், தனது வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும், ஆத்மநாதனை மெல்ல அடித்து கீழே தள்ளிக் கொண்டிருந்தாள் அவள்.

ஆனால், சேஷா அப்படியிருக்கமாட்டானே. அதுதான் அவளின் மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. ஆத்மநாதனும் அப்படி எளிதில் தோற்பவன் கிடையாது. தோல்வியை ஒப்புக்கொள்ளும் ரகமும் கிடையாது.

இந்த நான்காண்டுகளில் எத்தனை இடைஞ்சல்களை கொடுத்திருக்கிறான் என்று கணக்கிடவே முடியாது. அவளைக் கொன்றுவிடவே கூட முயன்று இருக்கிறான்.

ஆனால், அத்தனையும் கடந்து தான் அவளையும், தொழிலையும் காப்பாற்றிக் கொண்டதோடு, சேஷனையும் பாதுகாத்திருக்கிறாள் அவள்.

ஆம்… அவனையும் திரைத்துறை அத்தனை சுலபத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. இலைமறைகாயாக, புது முகங்களுக்கு அங்கும் பற்பல இடைஞ்சல்கள் இருக்கிறதுதானே. தயாரிப்பாளர்கள் தொடங்கி நடிகைகள் வரை அத்தனை பிரிவினைகள்.

சேஷாவும் சளைத்தவன் இல்லை என்பதால், அவனுக்கான பாதையை அவனே வகுத்துக் கொண்டு அதில் பயணிக்க ஆரம்பித்து விட்டான். அவன் பெயரைக் கெடுக்க நடந்த திரைமறை சங்கதிகளை தேவசேனா கவனித்துக் கொண்டாள் இதுநாள் வரை.

இதோ… வேண்டாம் என்று அவள் விட்டு வந்த இரண்டே வாரங்களில் மொத்தமாக முரடனாக மாறி நிற்கிறான் ஆதிசேஷன். இப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்றுதான் பிரகதீஸ்வரி அவனுக்கு எதையும் தெரியவிடாமல் பார்த்துக் கொண்டது.

அவனைத் தவிர்த்து, அவளை நம்பியதற்கும் கூட அது ஒன்றுதான் காரணம்.

ஆனால், அத்தனையும் வீணாக்கிவிட துணிந்து நிற்கிறானே என்று மனம் கிடந்து அடித்துக் கொண்டது தேவசேனாவுக்கு.

என்ன செய்ய? என்று புரியாத நிலை தான். ‘வேண்டாம்’ என்று அவள் சென்று சொல்ல வேண்டுமா? அப்படி  சொன்னால் கேட்டுக் கொள்வானா? என்று அநேக குழப்பங்கள் அவளுக்குள்.

அப்படியே நேரம் கழிய, மதியம் மீண்டும் ஒரு தலைப்புச் செய்தி. ஆத்மநாதனுக்கு சொந்தமான கல்குவாரியில் வெடி விபத்து நிகழ்ந்திருந்தது. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றது தொலைக்காட்சி செய்தி.

இரண்டு பேர் படுகாயம் அடைந்திருக்க, இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் நிகழவில்லை என்பது மட்டுமே ஆறுதல். தொலைக்காட்சியைப் பார்த்திருந்த தேவசேனாவுக்கு இன்னுமின்னும் தலைவலி கூடிப் போனது தான் மிச்சம்.

ஒரு நிலைக்கு மேல், “என்னவோ செய்டா…” என்று அவள் அமர்ந்து கொள்ள, அலுவலகத்தில் இருந்து மலர் அழைத்துவிட்டாள்.

“சொல்லு மலர்.” என்று தேவா அலுப்புடன் பேச,

“AN நெட்ஒர்க்ஸ் ஷார்ஸ வாங்கிட்டு இருக்கார் தேவா. அதுவும் இரண்டு மடங்கு விலை கொடுத்து.” என்று பதட்டத்துடன் பேசினாள் அவள்.

“என்கிட்டே ஏன் சொல்ற?” என்று அப்போதும் சிரத்தையில்லாமல் தேவா கேட்க,

“தேவா…” என்று நிறுத்திவிட்டாள் மலர்.

“உன் கம்பெனி விஷயங்களை என்கிட்டே சொல்லாத மலர்.” என்று அன்றுபோலவே கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

ஆனால், என்னதான் அவள் விலகிச் செல்ல முயன்றாலும், காலம் அவளை விடுவதாக இல்லையே. அடுத்த இரண்டு நாட்களில் இளா அழைத்துவிட்டான்.

“விஷயம் சீரியஸ் தேவா. சேஷாண்ணா உயிருக்கே கூட ஆபத்தா முடியலாம். ஆத்மநாதனுக்கு இந்நேரம் தெரிஞ்சிருக்கும். சும்மா இருக்க மாட்டான்.” என்றான் அமைச்சன்.

“என்னை கேட்டுதான் அவனை இதுக்குள்ள இழுத்து விட்டாயா? இப்போ மட்டும் ஏன் என்கிட்டே சொல்ற?” என்று எரிந்து விழுந்தவளாக அழைப்பைத் துண்டித்து விட்டாள் அவள்.

இளமாறன் அங்கே மண்டையைப் பிய்த்துக் கொள்ள, சேஷன் யாரையும் கண்டுகொள்வதாக இல்லை. தன் போக்கில் தனது வேலைகளை செவ்வனே செய்து கொண்டிருந்தான் அவன்.

அவன் முடிவு செய்தபடி காரியங்கள் கச்சிதமாக நிறைவேறிக் கொண்டிருந்ததில் பூரண திருப்தி அடைந்தவனாக அமர்ந்திருந்தான் சேஷன். இன்னும் இரண்டு நாட்களில் AN நெட்ஒர்க்ஸ் மொத்தமாக அவன் கைக்கு வந்துவிடும் நிலையில் தான் இருந்தது.

அந்த யோசனையில் அமர்ந்திருந்தவனை ஸ்ரீனிவாஸ் தான் கலைத்தது. நாளைச் செல்ல வேண்டிய படப்பிடிப்பை நினைவூட்டினான் அவன். சேஷன் கேட்டுக் கொண்டு மெல்ல தலையசைக்க, “நாம கொஞ்சம் கவனமா இருக்கணும் சேஷா. இப்போ ஷூட்டிங்கை கேன்சல் பண்ண சொல்லி கேட்கலாம். அடுத்த ஷெட்யூல்ல முடிச்சு கொடுப்போம்.” என்று மெல்ல ஸ்ரீனிவாஸ் கூற,

“அவனுக்கு பயந்து நடக்க சொல்றியா நிவாஸ். மூணு வருஷத்தை வீணடிச்சுட்டேன். என் குடும்பத்தை யோசிச்சு, அவனை அப்படியே விட்டுட்டேன். இனி எதுக்காகவும் அவனை விட முடியாது.”

“நானே இல்லாம போனாலும் சரி. அவன் இருக்கக்கூடாது.” என்றவன் முடிப்பதற்குள்,

“என்ன பேசறடா நீ?” என்று அதட்டினான் நிவாஸ்.

“நான் இல்லாம போனா, பெருசா எதுவும் மாறிடாது நிவாஸ். என் கம்பெனியைப் பார்த்தியா? மூணு மடங்கு வளர்ச்சி… நான் எப்படி போனாலும், என் கம்பெனி என் கையை விட்டு போகாம என் பொண்டாட்டி காப்பாத்தி இருக்கா. இன்னும் கொஞ்சநாள் டைம் கொடுத்திருந்தா, அவளே ஆத்மாவை அடிச்சும் இருப்பா.”

“ஆனா, அவனை அப்படி குறைச்சு எடை போடக்கூடாது. என் அப்பாவை கொன்னதும் இல்லாம, என் குடும்பத்தை வச்சு என்னையே மிரட்ட நினைச்சிருக்கான். அவனுக்கு பதில் சொல்லாம போனா, நான் என்னடா ஆம்பளை…”

“என் குடும்பத்துக்கு இதுவரைக்கும் நான் எதுவுமே செய்யலடா. போறதுன்னு முடிவாகிட்டா, இவனை முடிச்சுட்டு போறேன். இனி, இவனால சேனாக்கும், என் அம்மாவுக்கும் எதுவும் ஆபத்து வரக்கூடாது.” என்று உணர்ச்சிவசப்பட்டவனாக பேசினான் சேஷன்.

“டேய்” என்று நிவாஸ் அவனை அணைத்துக் கொள்ள,

“எனக்கு ஆறுதல் எல்லாம் தேவையில்ல நிவாஸ். அம் ஆல்ரைட்…”

“சுத்தி எல்லாமே இருந்தும் எதுவுமில்லாம நிற்கிறது எல்லாம் ரொம்ப கொடுமைடா… அதைவிட கொடுமை நம்மோட பலவீனத்தை வச்சு அடுத்தவன் நம்மை மிரட்டி, அவனை எதுவுமே செய்ய முடியாத நிலையில நிற்கிறது… இது ரெண்டைவிட சாவு கூட பெருசில்ல நிவா…”

“சேனாவைப் பொறுத்தவரை நான் இருந்தும் இல்லாத நிலை தான். அமிர்தாவுக்கும் பெருசா நான் துணையா நிற்கல. இது ரெண்டையும் விட பெரிய தப்பு. என் அம்மாவை நான் கண்டுக்காம விட்டது, ஆனா, இப்போ அதுவும் பெரிய பிரச்சினையில்ல. தேவா எல்லாத்தையும் பார்த்துப்பா.”

“எந்த கவலையும் இல்லடா எனக்கு. இவனை முடிச்சுட்டா, எல்லாம் முடிஞ்சிடும்.” என்றான் அந்த மூர்க்கன். நிவாஸுக்குதான் அவன் பேச்சில் முழி பிதுங்கி கொண்டிருந்தது.

இவனுக்கு ஒன்றென்றால் அப்படியெல்லாம் இலகுவாக சேனா விட்டுவிட மாட்டாள் என்பது அவனுக்கும் தெரியுமே.

Advertisement