Advertisement

மௌனமாய் எரிகிறேன் 17

சத்யதேவின் மகன் தோட்டத்தில் அன்னநடை போட்டுக் கொண்டிருக்க, அவன் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாள் தேவசேனா. சேஷாவின் வீட்டை நீங்கி வந்தது முதலே அவளின் ஒரே பொழுதுபோக்காக மாறிப் போனான் ஸ்கந்தா.

“டேவா…” என்று அழைத்தபடி, திராட்சை விழிகளை சுழற்றிக்கொண்டு அவன் தேடுவதைக் காண்பதே அத்தனை அழகாக இருக்க, இயல்பாக அவனுடன் பொருந்திக் கொண்டாள் தேவா. தொழிலை அவள் விட்டிருந்தாலும், அவளின் தொழில் தொடர்புகள் விடாமல் துரத்தியது அவளை.

அவளின் தொழில் தொடர்பாக மட்டுமில்லாமல், அவளைத் தங்கள் நிறுவனத்திற்கும் அழைத்தனர் சிலர். சேஷா-சேனாவின் பிரிவுதான் ஊரறிந்த ரகசியமாகி விட்டதே.

இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சேனாவை தங்கள் பக்கம் இழுக்க முயன்றனர் சிலர். அவர்களிடம் பேசி அலுத்தவளாக அலைபேசியை அணைத்து விட்டிருந்தாள்.

முழுநேரமும் வீட்டிலேயே அடைந்து கிடக்க மனமில்லாமல் அண்ணன் மகனை அழைத்துக்கொண்டு அவ்வபோது வெளியில் சென்று வரவும் தொடங்கியிருந்தாள்.

சென்னையின் பெரிய மால்கள், சிறுபிள்ளைகளுக்கான விளையாட்டு அரங்கம் என்று அத்தனையும் சுற்றி வந்தனர் இருவரும்.

இன்று வெளியே செல்லும் எண்ணமில்லாமல் போகவே, அவர்கள் வீட்டு தோட்டத்தில் ஐக்கியமாகி இருந்தனர் இருவரும். கலையரசி தனது அறையின் ஜன்னல் வழியே இவர்கள் விளையாட்டைப் பார்த்தபடி தான் நின்றிருந்தார்.

என்ன முயன்றாலும், மனம் மகனிடமே சென்று நின்றது. தேவ்வை விடவும் பெரியவன் சேஷன். சரியான வயதில் திருமணம் முடிந்து, நல்லபடியாக அவன் வாழ்ந்திருந்தால், அவனுக்கும் இப்படி ஒரு பிள்ளை இருந்திருப்பானே என்று ஏங்கியது அவர் மனம்.

ஆனால், யாரைச் சொல்லி நொந்து கொள்ள முடியும்? மகன் அவன் வாழ்வை அவனே அழித்துக் கொண்டானே என்று நொந்தவராக கண்களைத் துடைத்துக் கொண்டார் அவர்.

அறைக்குள் நுழைந்த பல்லவி அவர் கண்ணீரைக் கண்டு பதட்டமடைய, “என்னம்மா… ஏன் அழறீங்க?” என்று வேகமாக அவரை நெருங்கினாள்.

“ஒன்னும் இல்ல பவி… சேஷாவை நினைச்சுட்டு இருந்தேன்.” என்று கலையரசி கூறவும்,

“அவருக்கு என்னம்மா… நல்லாதானே இருக்கார். வேணும்னா வரச் சொல்லவா?” என்றாள் பல்லவி.

“வேண்டாம்டா… அவனே வரட்டும்.” என்றதோடு முடித்துவிட்டார்.

“தேவ் இன்னும் வரலையா?” என்று அவரே பேச்சை மாற்றிவிட, புரிந்தவளாக வேறு பேசினாள் பல்லவி.

சில நிமிடங்கள் பேச்சில் கழிய, “இங்கே ஏன் உக்காந்திட்டு இருக்கீங்க? கீழே வாங்க.” என்று கையோடு கலையரசியை வீட்டின் ஹாலுக்கு அழைத்து வந்துவிட்டாள் பல்லவி.

அவர்கள் கீழே வந்த நேரம், விளையாட்டை முடித்துக்கொண்டு ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தனர் அத்தையும், மருமகனும். பல்லவி மகனுக்கு பால் எடுத்துவர, சேனாவின் மடியை விட்டு இறங்காமல் அமர்ந்திருந்தான் அவள் மகன்.

“இங்கே வாடா.” என்று பல்லவி அழைக்க, தலையாட்டி வர மறுத்து சேனாவுடனே ஒட்டிக்கொண்டான் ஸ்கந்தா.

“கொழுப்பை பாரேன்.” என்று அவன் பின்பக்கம் தட்டி, சேனாவின் கையிலேயே சிப்பரை கொடுத்துவிட்டாள் பல்லவி.

தேவாவின் மார்பின் மீது ஒய்யாரமாக சாய்ந்து அமர்ந்தபடி, ஸ்கந்தா பால் அருந்திக் கொண்டிருந்த நேரம் தான் சேஷா அங்கே வந்து சேர்ந்தான்.

ஏதோ அவனுக்கு உரிமையான வீடு போல வெகு இயல்பாக வீட்டிற்குள் நுழைந்தான் அவன். கலையரசியின் முகம் மகனைக் கண்டதுமே மலர்ந்துவிட, பல்லவி அவனை உபசரிப்பதா? வேண்டாமா? என்று புரியாமல் தடுமாறி நின்றாள்.

ஆனால், அவளைப்போல் எந்த தயக்கமும் இல்லாமல், “ஒரு காஃபி கொடு பவி.” என்று வெகு இயல்பாக யை அவளை அதிரவைத்தான் சேஷன்.

பல்லவி தன்னிச்சையாக சேனாவைப் பார்த்துவிட, “எனக்கு காஃபி கொடுத்தா, உன் பிரெண்ட் சண்டைக்கு வரமாட்டா. எடுத்துட்டு வா…” என்று அதிகாரமாய் ஆணையிட்டான் ஆதிசேஷன்.

பல்லவி சேனாவைப் பார்த்தபடியே இன்னும் நின்றிருக்க, உண்மையில் சேனாவுக்குத்தான் சங்கடமாக இருந்தது. “இவ ஏன் என்னைப் பார்க்கணும். கொடுத்தா கொடுக்கட்டும்.” என்பதுபோல் அவள் ஸ்கந்தாவிடம் திரும்பிக்கொள்ள, என்ன செய்வது என்று புரியாமலே சமையலறைக்குள் நுழைந்தாள் பல்லவி.

சேஷா அவளைக் கண்டு சிரித்துக்கொண்டே, “என்னம்மா எப்படி இருக்கீங்க? உங்க மருமகளோட சந்தோஷமா இருக்கீங்களா?” என்றான் வம்புக்கென.

கலையரசி மகனின் இந்த சலசலப்பை வியப்புடன் பார்த்து அமர்ந்திருக்க, “ஏன்ம்மா இப்படி முழிக்கிறிங்க?” என்று சிரித்தபடி அவர் தோளில் கைபோட்டுக் கொண்டான் சேஷன்.

அவனின் இத்தனை அம்புக்கும், அசையாமல் அமர்ந்திருந்த ஒரே ஜீவன் தேவசேனா தான். அவன் வந்து ஐந்து நிமிடங்கள் கடந்திருக்க, இன்னும் நிமிர்ந்து அவன் முகம் பார்க்கவில்லை அவள். அவன் ஒருவன் அந்த இடத்தில் இல்லையென்பதைப் போல் தான் அமர்ந்திருந்தாள் அவள்.

இடையே, ஸ்கந்தாவின் கண்களும் உறக்கத்திற்கு அலைய, அவனை அணைத்தபடியே எழுந்துவிட்டாள் தேவா. சட்டென எழுந்ததில் அவள் லேசாக தடுமாற, வேகமாக அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்தான் சேஷன். அவன் தேவாவின் கையிலிருந்த பிள்ளையை வாங்க முற்படும் வேளையில், தன் கையை குறுக்கே நீட்டி அவனைத் தடுத்து நிறுத்தினாள் தேவசேனா.

அந்த நிமிடம் தான் அவன் விழிகளை சந்தித்தது அவள் கூரிய விழிகள். வழக்கமாக அவள் பார்வையைத் தவிர்த்துவிடும் சேஷன், இன்று அசராமல் அவளை எதிர்கொண்டான்.

ஆனால், அதற்காகவெல்லாம் தயங்கவே இல்லை சேனா. “வழியை விடுங்க.” என்றாள் கடினமாக. சேஷனும் அன்று விடுவதாக இல்லை போல. அசையாமல் தான் நின்றிருந்தான்.

சேஷாவின் இந்த அழுத்தம் புதியதாக தெரிந்தது தேவாவுக்கு. அவள் முறைத்திருக்கும்போதே, சேஷா அவளை நெருங்க, அவளும் வீம்புக்கென அசையாமல் தான் நின்றாள்.

சேஷா அவள் கையில் இருந்த ஸ்கந்தாவை தான் வாங்கிக்கொண்டு முன்னே நடக்க, அவனைப் புரியாமல் பார்த்தாள் தேவா. அவன் கீழே இருந்த ஒரு அறைக்குள் நுழைய, ஸ்கந்தாவை மனதில் கொண்டு தானும் அந்த அறைக்குள் நுழைந்தாள் அவள்.

பிள்ளையை கட்டிலில் கிடத்தி அவன் நிமிர, அந்த அறையில் இருந்த இருக்கையில் சாவகாசமாக சென்று அமர்ந்தாள் சேனா. சேஷாவையோ, அவன் செயலையோ துளியும் பொருட்படுத்தவில்லை அவள்.

சேஷா கட்டிலின் மறுபக்கம் நின்றிருக்க, அவன் பார்வை அழுத்தமாக பதிந்தது தேவாவின் மீது. அவனை கண்டுகொள்ளாமல் அவள் அலைபேசியை கையில் வைத்து அமர்ந்திருக்க, என்ன நினைத்தானோ வேண்டுமென்றே மீண்டும் ஒருமுறை அவளை நெருங்கினான் அவன்.

சேனா அப்போதும் அவன் முகம் காண மறுத்துவிட, சட்டென அவள் கைப்பிடித்து எழுப்பி நிறுத்தினான் அவன். சட்டென நடந்துவிட்ட நிகழ்வில் பதறிப் போனவள், மெல்ல தன்னை நிதானப்படுத்திக் கொள்ள, அவள் மார்பு மெல்ல ஏறி இறங்கியது.

மெல்ல சீரான அவள் மூச்சுக்காற்று சட்டென உஷ்ணம் கொள்ள, “என்ன வேணும்?” என்று அவன் கண்களை சந்தித்தாள் அவள்.

“கேட்டதெல்லாம் கொடுத்துடுவியா நீ?” என்று ஆழம் பார்த்தான் அவன்.

“உனக்கு உரிமையானது அத்தனையும் கொடுத்தாச்சு. இனி நீ கேட்க எதுவும் இல்ல. கிளம்பு.” என்று கத்தரித்தாள் அவள்.

“அப்படியெல்லாம் சுலபமா முடிஞ்சிடாது சேனா… இன்னும் நிறைய கொடுக்கல் வாங்கல் இருக்கு நமக்குள்ள…” என்று அழுத்தமாக உரைத்தான் சேஷா.

சேனா அவனுக்கு இணையாக அவனை முறைத்திருக்க, “நீ உன்னை கொடுக்காம கணக்கு முடியாது.” என்று மீண்டும் அவளை அதிரவைக்க முயன்றான் சேஷன்.

ஆனால், அவன் பேச்சில் தன்னை மீறி கிண்டலாக சிரித்துவிட்டாள் அவள்.

“நல்ல டாக்டரா பாருங்க…” என்றும் கூற,

“பைத்தியம்ன்னு சொல்றியா?”

“உன்னோட யூகங்களுக்கு நான் ஏன் பதில் சொல்லணும்? வெளியே போ.”

“நிச்சயமா போய்டுவேன். ஆனா, நீயா என்னைத் தேடி வருவ சேனா.”

“கண்டிப்பா பைத்தியம் தான் பிடிச்சிருக்கு போல. என்ன உன் அம்மு நியாபகம் வரலையா இன்னும்? உன் வீட்டுக்கு போய் ஒரு பாட்டில் உள்ளே அனுப்புங்க. அப்போதான் நார்மல் ஆகும் போல.” என்று அவன் கையை விலக்கினாள் தேவசேனா.

அவள் விலகலை கண்டு கொள்ளாமல், “என் அம்முவுக்கான இடம் எப்பவும் எனக்குள்ள இருக்கும் சேனா. எப்பவும் நான் அவளை மறந்தது இல்ல.” என்றான் சேஷன்.

“தெரியும். உன்னைவிட நல்லாவே தெரியும் எனக்கு.” என்றாள் தேவா.

“உனக்கு ஒண்ணுமே தெரியாது. இனி ஒவ்வொன்னா தெரிய வரும்.” என்றவன் அவள் என்ன ஏதென்று உணரும் முன்னமே அவளை அணைக்க முற்பட, பளீரென்று அவன் கன்னத்தில் ஒரு அடி வைத்தாள் தேவா.

“செருப்பு பிஞ்சிடும்…” என்று விறல் நீட்டி மிரட்டி, “எப்பவும் என்னை தொடக்கூடாது நீ. என் விரல் நுனியை தொடக்கூட உனக்கு உரிமையில்லை. வெளியே போடா…” என்று தன்னைமீறி அவள் கத்திவிட, அவள் பேச்சை காதில் வாங்காமல் நின்றான் சேஷன்.

ஒரு முழுநிமிடம் அவளை பார்த்தபடி நின்றவன் திரும்பி வெளியே நடக்கவும், சேனா பிடித்து வைத்திருந்த மூச்சை வெளிவிட, அதற்கு இடம் கொடாமல் மீண்டும் அவளை அணைத்திருந்தான் சேஷன்.

“சேஷா…” என்று சேனா ஆத்திரம்கொள்ள, அவளை அசையவிடாமல் பிடித்திருந்தவனோ, நிதானமாக அவள் கழுத்தில் முத்தமிட்டிருந்தான். கூடவே, அவனிதழ்கள், “என்னோட அம்மு…” என்று உரிமையாக அவள் காதில் உரச,

“ச்சீ… விடுடா என்னை…” என்று அவனை ஒரே தள்ளாக தள்ளி விட்டிருந்தாள் சேனா.

சேஷன் காலுக்குப் பின்னே இருந்த டீபாயில் தடுக்கி கட்டிலில் விழ, காட்டில் அதிர்ந்ததில் உறங்கி கொண்டிருந்த ஸ்கந்தா விழித்து அழ தொடங்கிவிட்டான்.

பல்லவி அதுவரை தயங்கி நின்றவள் பிள்ளையின் அழுகுரலில் வேகமாக அந்த அறைக்குள் நுழைந்துவிட, அவள் கண்டது கட்டிலில் விழுந்து கிடந்த சேஷனைத் தான்.

சேனாவின் முகம் முழுதாக கோபத்தில் சிவந்திருக்க, அதற்கு நேர்மாறாக வெகு இயல்பாக இருந்தான் சேஷா. அழுத பிள்ளையை கையில் தூக்கிக்கொண்டு அவன் வெளியேற, “என்னாச்சு தேவா… அண்ணாவை வரச் சொல்லவா.?” என்று பிள்ளையை மறந்து தோழியை தாங்கினாள் அவள்.

“பிள்ளையைப் பாரு பவி.” என்ற சேனா, யாரையும் பார்க்க விரும்பாமல் தனது அறையில் வந்து அமர்ந்து கொண்டாள்.

இங்கே சேஷனோ, மேலும் அரைமணி நேரத்தை தன் அன்னையுடன் செலவழித்து அதன்பின்னர் தான் அங்கிருந்து கிளம்பினான்.

அவன் கிளம்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் சத்யதேவ் வீடுவர, தங்கையைத் தான் தேடினான் அவன்.

தேவா அறையில் இருப்பதாக பல்லவி கூறவும், நேரே தன் தங்கையின் அறைக்கு விரைந்தான் சத்யதேவ். தேவா கண்களை மூடிக்கொண்டு காதுகளில் ஹெட்போன் மாட்டியபடி அமர்ந்திருக்க, “தேவா…” என்றபடியே அவள் அருகில் சென்று அமர்ந்தான் சத்யதேவ்.

அவனின் பதட்டத்தில், “என்னாச்சு தேவ்.” என்று காதுகளில் இருந்த ஹெட்போன்ஸை சேனா மெல்ல விடுவிக்க,

“ஆத்மநாதனோட OMR வில்லா இடிஞ்சு விழுந்து ஆக்சிடெண்ட் ஆகியிருக்கு. பதினெட்டு மாடிக் கட்டிடம் மொத்தமா முடிஞ்சுது.” என்றான் தேவ்.

“அவன் அந்த அளவுக்கு முட்டாள் இல்லையே.” என்று சேனா இழுக்க,

“சேஷா தான்…” என்று தேவ் நிறுத்தவும், சேனாவின் கண்கள் கூர்மையானது.

“அவனுக்கும்… அவன் ஏன்?”

“தெரியல… ஆனா, அவன்தான் செஞ்சிருக்கான். ஆத்மா நிச்சயம் சும்மா இருக்கமாட்டான் தேவா.” என்று தேவ் கூறிட,

“என்கிட்டே ஏன் சொல்ற?” என்று அவனிடம் எரிந்து விழுந்தாள் தேவா.

“எப்படியோ ரெண்டு பேரும் அடிச்சுட்டு சாகட்டும் விடு…” என்று சிறிதும் கலங்காமல் கூறிவிட்டாள் அவள்.

அவள் பேச்சில் தேவ் அதிர்ந்து நிற்க, “என்னை யோசிக்கவிடு. நீ போ.” என்று அவனை அனுப்பி வைத்து, தனது அலைபேசியை கையில் எடுத்துக்கொண்டாள் தேவா.

“சேஷனுக்கு எதுவரைத் தெரியும்.” என்று தெரிய வேண்டியிருந்தது அவளுக்கு. நிச்சயம் அவனை விட்டுவிட முடியாது எனும் நிலையில் மீண்டும் அவளை நிறுத்தி இருந்தான் சேஷன்.

Advertisement