Advertisement

மௌனமாய் எரிகிறேன் 16

சேஷன் அலுவலக பொறுப்பேற்றுக்கொண்டு இரண்டு நாட்கள் கடந்திருந்தது. நிர்வாகம் அவன் பொறுப்பில் இருந்தாலும், அலுவல் விஷயம் அத்தனையும் மலரின் கைகளில் தான் இருந்தது. முதல்நாள் அவள் அலுவலகம் வந்தபோதே, “எனக்கு இதையெல்லாம் பார்க்க நேரமில்ல மலர். உன் பிரெண்ட் இடத்துல இருந்து இதை நீ கவனிச்சுக்கோ.” என்று மொத்தமாக அவளை நம்பி அவள் கையில் கொடுத்துவிட்டான் சேஷன்.

மலர் சில வினாடிகள் திகைத்து, பின் தெளிந்து, “சார்… நீங்க நினைக்கிற அளவுக்கு நான் ஒர்த் இல்ல. தேவா தான் இங்கே பாஸ். அவ என்ன சொல்றாளோ, அதை செய்யத்தான் தெரியும் எனக்கு. என்ன செய்யணும்னு இதுவரைக்கும் யோசிச்சதே இல்ல.” என்றாள் மலர்.

“ஓ..” என்று இழுத்து, “ஓகே. இப்போதைக்கு உங்க வேலையைப் பாருங்க.” என்று அவளை அனுப்பி வைத்திருந்தான் சேஷன்.

ஆனால், அவள் சொன்னது எதையும் அவன் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்பதை அவனது செயல் அவளுக்கு உணர்த்தியது. இரண்டு நாட்களாக அலுவலகத்தின் பக்கமே வரவில்லை சேஷன்.

மலர் சற்றே திணறியபடி அலுவல்களை கவனித்துக் கொண்டிருக்க, சென்னை கடற்கரை சாலையில் இருந்த ஒரு பங்களாவில் அமர்ந்திருந்தான் சேஷன்.

அவன் அருகில் ஆத்மீ அமர்ந்திருக்க, “இன்னும் என்ன சேஷா? இனி நம்ம கல்யாணத்துக்கு என்ன தடை இருக்கு?” என்று கேள்விகளால் அவனை சுட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

“ஆத்மீ… நான் சொல்றதை முதல்ல புரிஞ்சிக்கோ. நான் உன்னை எப்பவும் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சது இல்ல.” என்று உண்மையை அவன் உடைத்துவிட,

“கடைசியா உண்மையை சொல்லிட்டீங்க…” என்று வெறுப்புடன் சிரித்தாள் அவள்.

“ஆத்மீ ப்ளீஸ். நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.” என்று சேஷன் போராட,

“என்ன சொல்ல போற சேஷா? இன்னும் என்ன கதை இருக்கு உங்ககிட்ட? உன் பொண்டாட்டியை கழட்டிவிட என்னை யூஸ் பண்ணிட்டீங்க. அவ்ளோதானே.” என்று அவள் இரைய,

“நான் ஏன் தேவாவை கழட்டிவிடனும் ஆத்மீ. அவ என் வைஃப்…”

“அப்போ என் அக்கா யாருடா?” என்று மரியாதையை காற்றில் விட்டவளாக கொதித்தெழுந்தாள் ஆத்மீ.

“என் அக்கா வாழ்க்கையை நாசமாக்கி, அவளை சித்ரவதை பண்ணி, தற்கொலை பண்ணிக்கிற நிலைக்கு தள்ளி இருக்கீங்களே. அதுக்கான குற்றவுணர்ச்சி கொஞ்சம் கூடவா இல்ல உன்கிட்ட… உன்னை எப்படிடா அவ லவ் பண்ணா?” என்று உடைந்து நின்றாள் ஆத்மீ.

“உன் கேள்வியெல்லாம் சரி. ஆனா, நீ கேட்கிற ஆள் தப்பு. நீ என்ன நினைக்கிற ஆத்மீ? உன் அக்காவை நான் காதலிச்சேன்னா… எங்க உறவு அதையும்விட ஒருபடி மேலானது. நாங்க கணவன் மனைவியா வாழ்ந்திட்டு இருந்தோம். எங்களுக்கான அங்கீகாரம் வேணும்னு உன் அக்கா ஆசைப்பட்டதால தான் நாங்க இந்தியா வந்தது.” என்று அவன் நிறுத்த,

“அப்படி வாழ்ந்தவர்தான் என் அக்கா இறந்த இரண்டாவது மாசமே அத்தைப் பொண்ணை கல்யாணம் பண்ணிங்களா?”

“எங்க மேரேஜ் முழுக்க முழுக்க என் பாட்டியோட விருப்பத்துக்காக நடந்தது ஆத்மீ. தேவாவுக்கும், உன் அக்கா விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.”

“அப்படியா? அவ்ளோ நல்லவளா உன் பொண்டாட்டி. அப்போ எல்லாத்துக்கும் நீ மட்டும்தான் காரணமா? நீதான் என் அக்காவை ஏமாத்தி சாக விட்டு வேடிக்கைப் பார்த்தியா?”

“இந்த கேள்வியை நீ உன் அப்பாகிட்ட தான் கேட்கணும்.” என்று ஆத்மநாதனை கைகாட்டினான் சேஷன்.

“உன்னை நல்லவனா காட்டிக்க என் அப்பா மேல பழி போடறியா? உனக்கென்னடா தெரியும் அவரைப்பத்தி?”

“உன்னைவிட அதிகமா தெரியும் ஆத்மீ. உன் அப்பா அமிர்தாவுக்கு அப்பா இல்ல. அதுவரைக்கும் எனக்கு தெரியும்.” என்றவன் வார்த்தைகளில் ஆத்மீ சிலையாக நின்றுவிட்டாள்.

அவள் அன்னையும், தந்தையும் மட்டுமே அறிந்த ரகசியம் இது. அவளுக்கே இப்போது ஒரு வருடத்திற்கு முன்பு தான் தெரிய வந்தது. அதுவும் அமிர்தாவின் பெயரில் இருந்த சொத்துக்களை ஆதமின் பெயரில் மாற்றி எழுத முற்படும்போது தான் அமிர்தாவின் பிறப்பு ரகசியம் ஆத்மீக்கு தெரியவந்தது.

“இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், இப்படி விட்டுவிட்டு போய்விட்டாளே?” என்று அன்னை புலம்பியது இன்னமும் நினைவில் இருக்கிறது அவளுக்கு. அப்படியிருக்கையில், எப்படி தெரியும் இவனுக்கு என்று அவள் மலைத்து நிற்க, டீபாயில் இருந்த தண்ணீர் கேனை எடுத்து அவளிடம் கொடுத்தான் சேஷன்.

“அமிர்தாவுக்கான பாசம் எப்பவும் உன் கண்ல தெரியும். அந்த ஒரு காரணத்துக்காக மட்டும்தான் உன்னை என்கிட்டே நெருங்க விட்டேன். உன்னைப்போலவே அமிர்தாவுக்காக தான் போராடிட்டு இருக்கேன் நானும்.”

“அமிர்தா என் அம்மா அப்பாக்கு பிறக்கலன்னு உங்களுக்கெப்படி தெரியும்?” என்றாள் ஆத்மீ. இப்போது கொஞ்சமே கோபம் குறைந்திருந்தது குரலில்.

“என்னோட கெஸ்ஸிங் சரியா இருந்தா, அமிர்தாவுக்கு இந்த விஷயம் தெரியாது இல்லையா?” என, ஆமென தலையை மட்டும் அசைத்தாள் ஆத்மீ.

மெல்லிய வலியுடன் கூடிய ஒரு புன்னகை அவன் இதழ்களில் உதயமாக, “உன் அக்காவுக்கு எதையுமே மறைக்க தெரியாது. இந்த விஷயம் அவளுக்கு தெரிஞ்சிருந்தா, என்கிட்டே முன்னாடியே சொல்லியிருப்பா. நானும் கவனமா இருந்திருப்பேன்.” என்றவன் தலையை உயர்த்தி சில நொடிகள் கண்களை மூடி நின்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

“உன் அக்காவோட இறப்பு நிச்சயமா தற்கொலை தானா?” என்று சில நொடிகள் கழித்து ஆத்மீயிடமே சேஷன் கேள்வியெழுப்ப, இதுவரையில் அப்படி ஒரு கோணத்தில் சிந்தித்துப் பார்க்காதவள் அதிர்ந்து நின்றாள்.

ஆனால், அடுத்த நிமிடமே என்ன பிதற்றுகிறான் இவன் என்று மனம் ஆத்திரம் கொள்ள, “என்ன சொல்ல வர்றிங்க நீங்க? என் வீட்ல என் அக்காவை கொலை பண்ணிட்டாங்களா?” என்று சினத்துடன் கேட்டாள் ஆத்மீ.

“இதுக்கு பதில் உன் அப்பா தான் சொல்லணும்.” என்று அழுத்தமாக உரைத்தான் சேஷன்.

“திஸ் இஸ் தி லிமிட் சேஷா. என் அப்பாவை பத்தி இப்படி பேசாத.” என்று ஆத்மீ கோபம் கொள்ள,

“நீ நினைக்கிற அளவுக்கெல்லாம் உன் அப்பன் ஒன்னும் உத்தமன் கிடையாது.” என்றான் சேஷன்.

ஆத்மீ தடுமாறி நின்ற வேளையில், அந்த வீட்டின் ஒரு அறைக்குள் நுழைந்து வெளியே வந்தவன், தன் கையிலிருந்த கோப்புகளை அவள் கையில் திணித்தான் சேஷன்.

“அமிர்தா இறந்த நாள் தொடங்கி உன் அப்பனை கண்காணிக்கிறது மட்டும்தான் என் வேலையா இருந்திருக்கு. ஆத்மநாதனை பத்தி விசாரிச்சவங்க கொடுத்த ரிப்போர்ட்ஸ் இது. இதுல இருக்கிறது எல்லாம் நூறில் ஒரு பங்குதான் ஆத்மீ. படிச்சுப்பாரு. படிச்சு முடிச்சுட்டு உன் அப்பன் நல்லவன்னு நினைச்சா என்கிட்டே பேசு.” என்று சேஷா முடித்துவிட, அந்த கோப்புகளை திறந்து பார்க்கவே கைகள் நடுங்கியது ஆத்மீக்கு.

அமிர்தாவை எண்ணி கலங்கியவளாக, அந்த கோப்புகளை அவள் மேலோட்டமாக படித்து முடிக்க, தாயாக தாங்கிய தமக்கையை நினைத்து வருந்தியது அவள் உள்ளம்.

கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அவள் அழ, அவள் தலையில் கைவைத்து நின்றான் சேஷா. அவன் விரல்கள் அன்புடன் அவள் தலையை வருடிக் கொடுக்க, அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள் ஆத்மீ.

“அப்பா தப்பானவரா இருந்திருக்கலாம் சேஷா. ஆனா, அமிர்தா மேல ரொம்ப பாசமா இருப்பாரு. அவளை கொலை பண்ற அளவுக்கெல்லாம் என்னால யோசிக்கவே முடியலையே…” என்று அழுதாள் அவள்.

“அப்பா அக்காவை மினிஸ்டர் பையனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கறதா இருந்தாரு. அவ சொத்து மேல ஆசையிருந்தா, அவளுக்கு கல்யாணம் பண்ண நினைச்சிருப்பாரா?”  என்று அவள் காரணங்களைத் தேட, அவள் கூறிய அமைச்சர் மகனை காணொளிக் காட்சி வாயிலாக அழைத்தான் சேஷன்.

அன்றைக்கு அமைச்சரின் மகனாக இருந்தவன் இன்று அமைச்சராக இருக்க, “சொல்லுங்கண்ணா…” என்றான் சேஷாவிடம்.

“நீதான் சொல்லணும் இளா. ஆத்மநாதன் அமிர்தாவை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா இருந்தாராமே.”

“ம்ம்ம்… அமிர்தாவை நான் கட்டிக்க நினைச்சது உண்மைதான். ஆனா, உங்க அப்பா அவங்களை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க தயாரா இல்ல. என் அப்பா எப்போ கல்யாணப்பேச்சு எடுத்தாலும், எதையாவது சொல்லி தள்ளிப் போட்டுட்டே தான் இருந்தார். என் அப்பாவும் சாதாரணமானவர் கிடையாதே.”

“கடைசியா, மிரட்டவே தொடங்கிட்டார். சேஷாண்ணாவோட அப்பா இறந்ததுல உன் அப்பாவோட பேர் எங்கேயும் வராம இருக்கலாம். ஆனா, அவரோட மனஅழுத்தத்துக்கு முக்கிய காரணம் என் அப்பாவும், உன் அப்பாவும் தான். சேஷன் நெட்ஒர்க்ஸ உன் அப்பாவுக்கு எழுதிக் கொடுக்க சொல்லி, நேரடியாவே மிரட்டியிருக்காங்க. அவர் மறுக்கவும், தொழில் ரீதியா அவருக்கு நிறைய குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சு இருக்காங்க. இவங்க கொடுத்த அழுத்தம் தாங்காம மன ரீதியா உடைஞ்சு போயிருந்தவரை அதோட விடாம, மறுபடியும் கம்பெனியைக் கேட்டு மிரட்டியிருக்காங்க…”

“கம்பெனியைக் கொடுக்காம போனால், அவரோட குடும்பத்தையே இல்லாம பண்ணிடுவேன்னு மிரட்டி, அந்த அதிர்ச்சியில் தான் அவர் இறந்ததும். முறையா, புகார்ன்னு ஏதாவது வந்திருந்தா கூட, அந்த நேரம்  இவங்க விசாரிக்க விட்டிருப்பாங்களா தெரியல.”

“ஆனா. சேஷாண்ணா வீட்லயும் அப்போ இதைப்பத்தி யாரும் யோசிக்காம இருந்தது இவங்களுக்கு சாதகமா போச்சு. எனக்கும் அப்போ இந்த அளவுக்கெல்லாம் எதுவும் தெரியாது. மினிஸ்டர் பையன்னு ஜாலியா சுத்திட்டு இருந்தவன் தான்.”

“அமிர்தாவோட இறப்புக்கு பிறகுதான் என் அப்பாவைப் பற்றிய எல்லா விஷயங்களும் எனக்கு தெரிய வந்தது. அமிர்தாவோட பணத்துக்காக தான் அவங்களை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சதும். அது இல்லாம போகவும், என் அப்பா ஆத்மநாதனை நேரடியாகவே மிரட்ட ஆரம்பிச்சுட்டாரு.”

“ஆனா, ஆத்மா எதுக்கும் அடங்கறதா இல்ல. சேஷண்ணா பாட்டியால என் அப்பாவோட இலாகா மாறினதும் உன் அப்பாவுக்கு வசதியா போச்சு. இருந்த இடத்திலிருந்தே என் அப்பாவை அடிக்க ஆரம்பிச்சாரு உன் அப்பா. மத்தியில இருந்த அரசாங்கத்துல சிலரோட பழக்கத்தை ஏற்படுத்திக்கிட்டார்.”

“அதை வச்சு என் அப்பாவை சில வழக்குகள்ல அவர் நினைச்சபடி சிக்க வைச்சார். என் அப்பா பதவியிழந்து, கோர்ட்டுக்கும், ஜெயிலுக்கும் மாறி மாறி அலையவே நேரம் சரியா இருந்தது. ஆத்மநாதன் நினைச்சது அத்தனையும் நடந்தது.”

“இதுல நடக்காம போன ஒரே விஷயம் சேஷன் நெட்ஒர்க்ஸ் தான். அதற்கும் ஏகப்பட்ட நெருக்கடி கொடுத்திருக்கார் உன் அப்பா. ரொம்ப கேவலமான சில காரியங்களையும் செய்திருக்காரு. நான் சொல்றதெல்லாம் உண்மையா பொய்யான்னு கூட உனக்கு சந்தேகம் வரலாம். ஆனா, எனக்கு உன்கிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியம் எதுவுமில்லை.” என்று முடித்தான் அந்த இளா.

ஆத்மீக்கு தலையே சுழல்வதாகத் தான் தோன்றியது அந்த நிமிடம். தலையைப் பிடித்துக்கொண்டு அவள் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.

எதிரில் இருப்பவன் பொய்யுரைப்பதாக தோன்றவில்லை அவளுக்கு. என்னவோ, அவன் கண்களில் நேர்மையிருப்பதாக அழுத்தமாக ஒரு எண்ணம்.

அவளை சுற்றியிருந்த மொத்தமும் அவள் தந்தையை குற்றவாளியாக்கிட, அப்போதுதான் அவள் தாயின் நினைவு வந்தது அவளுக்கு. ‘எப்படி தாங்குவார்’ என்பதே உளைச்சலைக் கொடுத்தது ஆத்மீக்கு

‘என்ன செய்வது’ என்று அறியாதவளாக அவள் கண்களைத் திறக்க, எதிரில் ‘நானிருக்கிறேன்.’ என்று நம்பிக்கையளிப்பவனாக அமர்ந்திருந்தான் சேஷா.

அவனிடமே, “நான் என்ன செய்யறது?” என்று அவள் கேட்டு நிற்க, அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவனுக்கு.

அவள் தோளில் தட்டிக் கொடுத்து, “நீ எதுவும் செய்ய வேண்டாம். என்ன செய்யணுமோ, நான் செய்யுறேன். அமிர்தாவைப் போல, நீ உன் அப்பாவை நம்பிடக் கூடாதே… அதுக்காகத் தான் இதெல்லாம் உன்கிட்ட சொன்னது. அதுவும், இப்போ உன்னோட பெயரும் என்னோட சேர்ந்து அடிபடுது. நீ இன்னும் கவனமா இருக்கணும்.” என்று சிறுபிள்ளைக்கு சொல்வது போல் அவன் சொல்லிக் கொண்டிருக்க,

“நான் உங்களை பழிவாங்கணும்னு நினைச்சுதான் உங்களை தொடர ஆரம்பிச்சேன். தேவாவுக்கும் உங்களுக்கும் டெர்ம்ஸ் சரியில்லாம போனதால, அதை வச்சு உங்களை அசிங்கப்படுத்தணும்னு…” என்று மேலே பேச முடியாமல் அவள் திணற,

“எனக்கு தெரியும் ஆத்மீ… நீ கஷ்டப்படாத. எப்போ என்ன பிரச்சனை வந்தாலும், உனக்கு நான் இருக்கேன். அதை மட்டும் மனசுல வச்சுக்கோ. அமிர்தாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். எனக்கு அது ஒன்னு போதும்.” என்றவனை கண்கொண்டு பார்க்க முடியாமல் மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டாள் ஆத்மீ.

“நேரமாச்சு… நீ கிளம்பு.” என்று சேஷன் அவளை அங்கிருந்து அனுப்பி வைக்க, அவள் சென்ற அரைமணி நேரத்திற்கெல்லாம் ஸ்ரீனிவாஸ் வந்து சேர்ந்தான்.

“மனுஷனாடா நீ. இருபது போன் பண்ணிட்டாடா மலர். என்னன்னு கேளு.” என்று அவன் தன் அலைபேசியை சேஷனிடம் நீட்ட, அதை கையில் வாங்காமல் சாவகாசமாக தன் அலைபேசியில் இருந்து மலர்விழியை அழைத்தான் சேஷன்.

“சொல்லு மலர்.” என்று இலகுவாக அவன் கேட்க,

“ஒரு கொட்டேஷனுக்கு உங்க அப்ரூவல் தேவைப்படுது சார். நீங்க ஆபிஸ் வரணும்.” என்றாள் அவள்.

“ஓகே.” என்று மறுவார்த்தை பேசாமல் ஒப்புக்கொண்டவன் அடுத்த அரைமணி நேரத்தில் தன் அலுவலகத்தில் இருந்தான்.

“மலர் அந்த கொட்டேஷனை அத்தனை நேர்த்தியாக தயாரித்திருக்க, அதில் அவள் குறிப்பிட்டிருந்த தொகையை திருத்தி, சற்றே அதிகமாக மாற்றினான் சேஷன்.

“சார்… இந்த கான்ட்ராக்ட்க்கு போட்டி அதிகம். நீங்க கோட் பண்ற அமவுண்ட் சரியா இருக்காது.” என்று தயங்கியபடியே மலர் கூற,

“சொல்றதை செய்ய மட்டும்தான் தெரியும்னு சொன்னது நீங்கதானே.” என்றான் சேஷா.

அதற்குமேல் அவனிடம் என்ன பேசிவிட முடியும்? உன் கம்பெனி உன் இஷ்டம் என்ற மனப்பான்மையில் அவன் சொன்ன தொகையை மாற்றி, அந்த கொட்டேஷனை அந்த நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டாள் மலர்விழி.

அனுப்பும்போதே, “கண்டிப்பா நமக்கில்ல” என்ற எண்ணத்துடன் தான் அனுப்பிவைத்தாள் மலர்விழி.

மனது தாங்காமல் அந்த விஷயத்தை அவள் தேவாவிடமும் கூறிவிட, “உன் ஆபிஸ் விஷயங்களை என்கிட்டே அப்டேட் பண்ணாத மலர்.” என்று குரலில் இறுக்கத்துடன் கூறி அழைப்பைத் துண்டித்து விட்டாள் தேவா.

Advertisement