Advertisement

மௌனமாய் எரிகிறேன் 15

என்னதான் சேஷாவைக் கண்டுகொள்ளாமல் தன் வேலைகளில் தேவா தீவிரம் காட்டினாலும், ஏதோ ஒரு வகையில் அனுதினமும் அவளை இம்சித்துக் கொண்டுதான் இருந்தான் சேஷன். இதில் ஆத்மநாதனின் ஆட்கள் வேறு. பிரகதீஸ்வரி இறந்துவிடவும், சிறு தைரியம் வரப்பெற்றவனாக, மீண்டும் தன் வேலையைக் காட்ட தொடங்கியிருந்தான் அவன்.

சேஷாவின் வாகனம் எதேச்சையாக ஒருமுறை விபத்துக்குள்ளாக, தேவசேனா சுதாரித்துக் கொண்டாள். தங்கள் அலுவலக விஷயங்களை கவனித்துக் கொள்ளும் பாதுகாப்பு நிறுவனத்திடம் பேசி, தங்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொண்டாள் அவள்.

சேஷனின் தனிப்பட்ட வாழ்வு எப்படியோ,அதற்கு நேரெதிராக ஏறுமுகத்தில் இருந்தது அவனது திரை வாழ்வு. தயாரிப்பாளர்களின் மனம் கவர்ந்தவனாகவும், நிரம்ப ரசிகர்களைக் கொண்டவனாகவும் வலம் வர தொடங்கியிருந்தான் அவன்.

ஆனால், அப்போதும் சேனாவின் தொழிலைப் பற்றியோ, அவளது வளர்ச்சியைப் பற்றியோ பெரிதாக எதுவும் கண்டுகொண்டவன் கிடையாது. ‘உன் தொழில் பார்ப்பதும் விடுவதும் உன் விருப்பம்’ என்பதாகத் தான் இருக்கும் அவன் செயல்கள்.

நான்கு ஆண்டுகளாக இதே நிலை தான். பார்த்துக்கொள்ளும் நேரங்கள் அனலடிக்கும் என்றால், இருவரும் பேசிக்கொள்ள முற்படும் வேளைகளில் புயல் மழையே அடிக்கும்.

ஆனாலும், விடாமல் அவனை இழுத்துப் பிடித்துக் கொண்டுதான் இருந்தாள் சேனா. எந்தப் புள்ளியில் மனம் விட்டுப் போனதோ, மொத்தமாக முடித்துக்கொள்ள முடிவெடுத்து விலகி வந்துவிட்டாள்.

ஆனால், இதையும் நிரந்தரம் என்று நிம்மதி கொள்ள முடியாமல் தான் அமர்ந்திருந்தாள் அவள். யாருமில்லா தனிமை அவள் கண்ணீரை கரை தாண்டச் செய்திருக்க, தன் அத்தம்மாவை பார்த்தபடி தான் அமர்ந்திருந்தாள்.

வெகுநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததில் கால்கள் மரத்துப் போயிருக்க, மெல்ல இருக்கையை விட்டு எழுந்து கொண்டவள் சில அடிகள் நடக்க எண்ணி, அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். சேஷன் அங்கிருந்த இருக்கையில் கண்மூடி சாய்ந்திருந்தது கண்ணில்பட, அவனை கண்டுகொள்ளாமல் மெல்ல நடக்க தொடங்கியிருந்தாள் அவள்.

அவள் காலடி ஓசையில் கண்திறந்து பார்த்தவன் சேனா எங்கோ செல்வதைக் கண்டு, வேகமாக எழுந்து அன்னையின் அறைக்குள் நுழைந்தான். அன்னை அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதைக் காணவும், நிம்மதியானவனாக மீண்டும் வந்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டான் அவன்.

சேனா ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த காரிடாரில் மீண்டும் நடந்து வர, இந்த முறை தேவ்வும் அவளுடன் இருந்தான். சேனா கலையரசி இருந்த அறைக்குள் நுழைந்து கொள்ள, தேவ் கையில் இருந்த தேனீரை சேஷனிடம் நீட்டினான்.

மறுத்துவிட நினைத்தாலும், அந்த நிமிடம் தேவையாக இருக்க, கையை நீட்டி வாங்கிக் கொண்டான் சேஷன். தேவ்வுக்கும் அதுவே போதுமாக இருக்க, பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், மற்றொரு இருக்கையில் அமர்ந்து கண்மூடிக் கொண்டான் அவன்.

அவனுக்கு தேவாவின் கவலையே பெரியதாக இருந்தது. நாளை கலையரசி கண்விழித்தால், மீண்டும் என்ன சொல்லி அவளை குழப்பி விடுவாரோ என்று தான் கலங்கி கொண்டிருந்தான் அவன்.

சேஷனுடன் தேவாவால் வாழவே முடியாது என்பது அவன் எண்ணமாக இருக்க, அவனைவிட்டு தங்கை முழுமையாக விலகி வந்துவிட வேண்டும் என்றுதான் பிரார்தித்துக் கொண்டிருந்தான் அவன்.

அதற்கான நாளும் வந்துவிட்ட வேளையில், கலையரசி இப்படி குழப்புவார் என்று யோசிக்கவில்லை அவன். இப்போது மீண்டும் தேவா என்ன முடிவெடுப்பாளோ என்று பயந்து கொண்டிருந்தான் அண்ணன்.

ஆனால், அதற்கெல்லாம் தேவையே இல்லை என்று உரைப்பது போல் விழித்தெழுந்தார் கலையரசி. அருகில் அமர்ந்திருந்த சேனாவின் கைகளை விடாமல் அவர் பிடித்து வைத்திருந்த நொடிகள் எல்லாம் நெருப்பின் மீது தான் நின்றிருந்தான் தேவ்.

தங்கையை மீண்டும் அழைத்துச் செல்லாமல் விட மாட்டாரோ என்று அவன் பதறிக் கொண்டிருக்க, “உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல. என்னை மன்னிச்சுடு தேவா…” என்றார் கலையரசி.

தேவாவே இதை எதிர்பார்க்கவில்லை எனலாம். ‘உன்னால் தான்… நீ விட்டுச் சென்றதால் தான்…’ என்பது போன்ற குற்றச்சாட்டுகளை அவள் எதிர்பார்த்திருக்க, இந்த மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை அவள்.

“என்ன அத்தம்மா.” என்று அவள் கலையரசியை அணைத்துக்கொள்ள,

“நானும் உன்னை புரிஞ்சுக்கலையே. சேஷனை மட்டும் நினைச்சு, என்னென்னவோ பேசிட்டேனே…”

“அதெல்லாம் பேச வேண்டாம் அத்தம்மா. விட்டுடுங்க.” என்று மருமகள் தடைவிதிக்க, மருகி நின்றார் மாமியார்.

“இப்போ சொல்லுங்க. என்னோட வர்றிங்களா?” என்று சேனா அவரிடம் வினவ, மறுப்பாக தலையசைத்தார் கலையரசி.

தேவா அவரை அதிசயமாக பார்க்க, “நான் அவனோட இருக்கேன் தேவா. நானும் இல்லன்னா, இன்னும் மோசமாகிடுவான்.” என்று அந்த நிலையிலும் மகனைப் பற்றித்தான் கவலை கொண்டார் கலையரசி.

“நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. பார்க்கவே களைச்சுப் போயிருக்க. எனக்கு ஒண்ணுமில்ல, நீ கிளம்பு.” என்றார் கலையரசி.

“இல்ல அத்தம்மா. உங்களோட இருக்கேன். நீங்க தூங்கினதும் போறேன்.” என்று தேவா கூற, அவர் தேவாவை உடன் அழைக்கவில்லை என்ற நிம்மதியில் நின்றிருந்தான் தேவ்.

“சொன்னா கேளு தேவா. நீ கிளம்பு. இங்கேதான் இத்தனைப் பேர் இருக்காங்களே. நானும் இனி இதெல்லாம் பழகிக்கறேன்.” என்று உணர்ந்த குரலில் கலையரசி கூற, அவரை விட்டுச்செல்லவே மனதில்லை தேவாவுக்கு.

ஆனால், கலையரசி விடாமல் வற்புறுத்தவும், தேவ்வுடன் கிளம்பிச் சென்றாள் அவள். அவள் கிளம்பிய சில நொடிகளில் சேஷன் அறைக்குள் நுழைய, “ம்மா…” என்று அணைத்துக்கொண்டான் அன்னையை.

“ஒன்னும் இல்ல சேஷா.” என்று மகனைத் தட்டிக் கொடுத்தார் கலையரசி.

உண்மைக்கும் பயந்து தான் போயிருந்தான் சேஷன். அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவன் அன்னை. அவரையும் இழப்பது என்பதை எல்லாம் யோசிக்கவே முடியவில்லை அவனால்.

அன்னையின் கைகளைப் பிடித்தபடி தான் அமர்ந்திருந்தான் அவனும். கலையின் மனம் தேவாவின் செயலை அவனுடன் ஒப்பிட்டுப் பார்க்க, தானாக ஒரு புன்னகை மலர்ந்தது அவர் இதழ்களில்.

ஒருவாரம் கழித்து கலையரசி வீடு திரும்ப, தேவாவுடன் தான் கிளம்புவார் என்று நினைத்தான் சேஷன்.

ஆனால், அன்று அவரது பரிசோதனைகள் அத்தனையும் முடிந்த பின்னும் தேவா மருத்துவமனைக்கு வரவில்லை. அவன் அன்னையை கேள்வியாகப் பார்க்க, “கிளம்புவோமா சேஷா?” என்றார் கலையரசி.

“ம்மா… நீங்க தேவாவோட போகலையா?” என்று மகன் கேட்டு நிற்க,

“ஏன்… நீ என்னை பார்க்க மாட்டியா?” என்றார் கலையரசி.

“ம்மா. பார்த்துக்கறது இல்ல விஷயம். உங்களால உங்க மருமகளை விட்டு இருக்க முடியாது. வீட்டுக்கு வந்தாலும் அவளைத்தான் யோசிச்சுட்டு இருப்பிங்க. அவளோடவே போங்க. நான் எதுவும் சொல்ல மாட்டேன்.” என்று சேஷன் கூற,

“அதுதான் அவளோட உறவையே முடிச்சு வச்சிட்டியே சேஷா. எந்த உரிமையில என்னை பார்க்க சொல்லி நான் அவகிட்ட கேட்க முடியும்?” என்று கலையரசி திருப்பிக் கொடுக்க,

“என்னை இப்போ என்னதான் செய்ய சொல்றிங்கம்மா?”

“நாம வீட்டுக்கு போவோம்.”

“தேவா கண்டிப்பா வரமாட்டாம்மா.” என்று சேஷன் கூறியதைக் காதில் வாங்காமல் கலையரசி சென்று காரில் அமர்ந்துவிட, நேரே தேவசேனாவின் வீட்டிற்கு தான் சென்றான் மகன்.

கலையரசி மகனை கேள்வியாகப் பார்த்திருக்க, “உங்களால அவளை விட்டு இருக்க முடியாதும்மா. வீணா, எந்த விஷப்பரீட்சைக்கும் நான் தயாரா இல்ல. நீங்க இங்கேயே இருங்க. நான் தினமும் வந்து பார்க்கிறேன்.” என்றுவிட்டு வாசலோடு கிளம்பியிருந்தான் அவன்.

கலையரசி செல்லும் மகனை புரியாமல் பார்த்திருக்க, சட்டென விடுதலைப் பெற்ற உணர்வுடன் காரை இயக்கிக் கொண்டிருந்தான் சேஷன்.

நிச்சயம் விடுதலையான உணர்வுதான் அவனுக்கு. இனி யாரையும் யோசித்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்பதே நிம்மதியாக உணரச் செய்தது அவனை.

அவரவர் நியாயம் அவரவர்க்கு அல்லவா. சேஷனின் மனஉணர்வுகளும், அவனின் நியாயங்களும் அவனாக வாய் திறந்தால் அன்றி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையே.

சேஷன் தேவ்வின் வீட்டிலிருந்து கிளம்பியவன் நேரே தங்களது அலுவலகத்திற்கு தான் வந்து நின்றான். ஸ்ரீனிவாஸ் ஏற்கனவே அங்கு அவனுக்காக காத்திருக்க, நீண்ட நெடிய நான்கு வருடங்கள் கழித்து, அவனது சாம்ராஜ்யத்திற்குள் நுழைகிறான்.

நிச்சயம் ஒரு அரசனைப் போல் தான் உணர வைத்தது அவன் அரண்மனை. இத்தனை நாட்கள் இதை கட்டியாண்டவளையும் மனம் நன்றியுடன் நினைத்துக் கொண்டது.

அவள் ஒருத்தி இல்லாமல் போயிருந்தால்…. சேஷா என்ற ஒருவன் என்றோ மரணித்திருப்பான். தெரியும் அவனுக்கு. உறவுக்காக மட்டுமே அவனுக்கு உயிர் கொடுக்க நினைத்து தன்னை அவள் பலியிட்டுக் கொண்ட கதையை அறிவான் அவன்.

ஆனால், யுத்தத்தில் அதற்கெல்லாம் இடமில்லையே. அவன் பழி தீர்த்தாக வேண்டும்.

இதற்கிடையே, உறவுச் சுழலில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை அவன் மனம்.

தொழில் கைக்கு வந்த நிமிடமே, மனம் பலமடங்கு பலம் கொண்டதாக உணர, தனது வேலைகளை அன்றே தொடங்கினான் அவன்.

“வீட்டுக்கு காவலுக்கு இன்னும் கொஞ்சம் பேரை போடச் சொல்லு நிவாஸ். இந்தமுறை அடி தப்பாம விழணும்.” என்றான் சேஷா.

“நீ இருக்க இடத்தை யோசிச்சுக்கோ சேஷா. உன் பேர் கெட்டுப் போகக்கூட வாய்ப்பு இருக்கு.” என்று நிவாஸ் அவன் வேகத்தை தணிய வைக்கும் முயற்சியில் இறங்க,

“உயிரே போக இருந்ததே நிவாஸ். அதைவிடவா, என் பேர் முக்கியம். என்ன தைரியம் இருந்திருந்தா, மேல கையை வைக்க நினைச்சிருப்பான் அவன்? அவனுக்கு ஆட இடமே கொடுக்கப் போறது இல்ல நான்.” என்று வெறி கொண்டவனாக உறுமினான் சேஷன்.

“இந்த பிசினெஸ் தலைவலி எல்லாம் என்னால பார்க்க முடியாது. அவ வேற முறுக்கிட்டு போயிட்டா. ஆனா, இப்போதைக்கு அதுதான் நல்லதும். அந்த பொண்ணை வரச் சொல்லு. இதெல்லாம் அவளை பார்த்துக்க சொல்லு.”

“டேய்… எந்த பொண்ணைடா சொல்ற?”

“ஓவரா சீன போடாம உன் பிளவரை வர சொல்லுடா.” என்றான் சேஷன்.

“அவ என் நம்பரையே பிளாக் பண்ணிட்டா. கண்டிப்பா வரமாட்டா.” என்றான் நிவாஸ்.

“அந்தளவுக்கு என்ன பிரச்சனைடா…”

“என்னவோ புருஷன் பொண்டாட்டி பிரச்சனையை விசாரிக்கிற மாதிரி கேட்குற. எங்கேடா எங்களை லவ் பண்ண விட்டிங்க புருஷனும் பொண்டாட்டியும். உனக்கு ஏத்திட்டு பேசப்போய் உன் பொண்டாட்டிகிட்ட உதை வாங்கினேனே, அன்னையோட என் கண்லயே படல அவ.”

“சரி… அது உங்க குடும்ப விஷயம் நீ பார்த்துக்கோ. எனக்கு அந்தப்பொண்ணு வேலைக்கு வந்தாகணும். சொல்லிடு.” என்றான் முடிவாக.

நிவாஸ், “அடேய்…” என்று விழிக்க,

“அந்த பொண்ணு நம்பர் சொல்லு.” என்றான் அவனிடம்.

அவன் எண்ணை கொடுக்கவும், மலர்விழியை அலைபேசியில் அழைத்து அலுவலகம் வரும்படி கூறினான் ஆதிசேஷன்.

மலர்விழி அவன் பேச்சைக் காதில் வாங்காதவளாக, “நான் ஒர்க் பண்ணது தேவாகிட்ட. அவளுக்காக மட்டும்தான் அங்கே ஒர்க் பண்ணேன். இனி அங்கே வரமாட்டேன்.” என,

“ஓ… ஓகே. அப்போ உனக்கு அவ கம்பெனி மேல அக்கறை இல்ல. அவ்ளோதான.” என்றான் சேஷன்.

“இல்ல. அப்படி இல்ல.” என்று மலர் குறுக்கிட,

“இங்கே பார் மலர். எனக்கும், உன் பிரெண்டுக்கும் இருக்கறது எங்களோட தனிப்பட்ட விஷயம். அதை பிஸினெஸ்ல போட்டு குழப்பாத. இப்போ நீ இங்கே இருக்கறது ரொம்ப அவசியம். ஒழுங்கா மார்னிங் ஆபிஸ் வா.” என்று கட்டளையாக கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டான் சேஷன்.

மலர் சேஷனின் இந்த அதிரடியில் திகைத்து நின்றதென்னவோ சில நொடிகள் தான். உடனடியாக தேவாவை அழைத்துவிட்டாள் அவள்.

தேவாவிடம் விஷயத்தைக் கூற, “உன் விருப்பம் மலர். உனக்கு பிரச்சனையெல்லாம் எதுவும் வராது. நீ போகணும்னு நினைச்சா போ…” என,

“நான் வரலன்னு சொல்ல வாய்ப்பே கொடுக்கல தேவா.”

“சேஷாவோட பேச்சே அப்படித்தானே.”

“எனக்கு நீயில்லாம அங்கே…”

“என்னைப்பத்தி யோசிக்காத.” என்று அதட்டினாள் தேவா.

“என்னடி ஆளாளுக்கு மிரட்டுறீங்க?” என்று விழித்தாள் மலர்.

“மிரட்டலுக்கெல்லாம் பயப்பட வேண்டாம். உனக்கு பிடிச்ச வேலை. அடுத்தவங்களுக்காக அதைக் கெடுக்க வேண்டாம். கிளம்பி போ. உனக்கு பிடிக்காம எதுவும் நடந்தால், அடுத்த நிமிஷம் வந்திடு.” என்றாள் தேவா.

“ம்ம்ம்.” என்று மலர் ஒப்புதல் கொடுக்க, அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் அழைப்பைத் துண்டித்து விட்டாள் தேவா.

அவள் மனம் சேஷாவை எண்ணிப் பார்த்தது. அவள் அரிடன்ஹா சேஷன் இல்லையே இது என்று மனம் குழம்ப, எங்கேயோ, எதுவோ இடித்தது.

ஆனால், அடுத்த நிமிடமே என்ன நடந்தால் உனக்கென்ன என்று மனம் இடித்துரைக்க, தனிமையை வெறுத்தவளாக அண்ணன் மகனுடன் சென்று ஐக்கியமாகி விட்டாள் அவள்.

ஆனால், இங்கே சேஷன் அடுத்தடுத்து செய்து வைத்த வேலைகளில், சிலர் அவர்களின் நிம்மதியை அடியோடு இழந்து நிற்க, அத்தனையும் அவனுக்கெதிராக திரும்பி நின்றது.

ஆனால், இதையெல்லாம் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தவன் தானே அவனும்…

Advertisement