Advertisement

மௌனமாய் எரிகிறேன் 14

பிரகதீஸ்வரியின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்திருக்க, எந்நேரமும் அழுகையில் கரைவதையே முழுநேர வேலையாக்கிக் கொண்டிருந்தாள் தேவசேனா. கலையரசி அதட்டி, மிரட்டி ஊட்டிவிடும் இரண்டு வாய் உணவுதான் அவளின் ஆகாரமாக இருந்தது அந்த நாட்களில்.

ஆதிசேஷன் பேரனாக பாட்டிக்கு கொள்ளி வைத்து இறுதிக் கடமையை செய்ததோடு சரி. அதன்பின் அவள் கண்களில் படவே இல்லை அவன். இதில் பிரபாகரன் வேறு.

மகளின் திடீர் திருமணத்தில் கொஞ்சமும் ஒப்புதல் இல்லை அவருக்கு. முன்பே தன்னிடம் சொல்லாமல் விட்ட மகனைத் திட்டி தீர்த்தவர், மகளை தன்னுடன் வந்துவிடும்படி அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால், மகள் வாயைத் திறக்காமல் மௌனம் சாதிக்க, சுவற்றில் மோதிய பந்தாய் மீண்டும் கீழே வந்து அமர்ந்து கொண்டார் அவர்.

இரண்டு நாட்கள் கடந்து மூன்றாம் நாள் மதியப் பொழுதில் தான் வீடு திரும்பினான் ஆதிசேஷன். வீட்டின் ஹாலிலும், மற்ற இடங்களிலும் இருந்த உறவுகள் யாரையும் கண்டுகொள்ளாமல் அவன் தன்போக்கில் சேனாவைத் தேடிச் சென்றான்.

சேனா அவள் பாட்டியின் அறையில் வெற்றுத்தரையில் படுத்துக் கிடக்க, அவளுக்கு முன்னே சென்று நின்றான் அவன். தேவா அப்போதும் அவன் வரவை உணராமல், கண்ணீரில் கரைந்து கொண்டிருக்க, “இதில் சைன் பண்ணு சேனா…” என்றான் அழுத்தமாக.

சட்டென கேட்ட அவன் பேச்சுக்குரலில் பதறியவளாக, அவள் நிமிர்ந்து பார்க்க, அவள்  அமர்ந்தான் சேஷா. தேவா அவன் முகம் பார்க்கையில், “உன் பாட்டி அவ்ளோ நல்லவங்க இல்ல தேவா…” என்றான் சட்டென.

“உங்களுக்கு இப்போ என்ன வேணும்?” என்று தேவா அந்த பேச்சை கத்தரிக்க,

“இதுல சைன் பண்ணு.” என்றான் அதிகாரமாய்.

“என்னதிது”

“படிச்சுப் பாரு.”

“நீங்களே சொல்லுங்க மாமா.”

“என்னை மாமான்னு எல்லாம் சொல்லாத.” என்றான் முகத்திலடித்ததுப் போல்.

“நான் பிறந்த நிமிஷமே எனக்கு மாமாவாகிட்டிங்க நீங்க. இடையில வந்து போனவளுக்காக நான் என் பழக்கத்தை மாத்திக்க முடியாது.”

“அவளைப் பத்தி எதுவும் பேசவேண்டாம் சேனா.”

“சரி பேசல. என்ன விஷயம் சொல்லுங்க?”

“இதுல கையெழுத்துப் போட்டுக் கொடு. என்னால உன்னோட வாழ முடியாது. எனக்கு விவாகரத்து வேணும்.” என்றான் ஒரே முடிவாக.

தேவா அழுது சிவந்திருந்த தன் கண்களை கன்னத்துடன் சேர்த்து அழுத்தமாகத் துடைத்துக்கொண்டு,  அவிழ்ந்திருந்த கூந்தலையும் அள்ளி முடிந்து கொண்டாள்.

எதிரில் இருப்பவனை கண்டுகொள்ளாமல் அவள் எழுந்து கொள்ள, “இதுக்கு என்ன அர்த்தம் சேனா?”

“என்னால கையெழுத்துப் போட முடியாது. எனக்கு விவாகரத்து வேண்டாம்.” என்றாள் அவள்.

“ஏன்? என்னை லவ் பண்றியா?” என்று அடுத்த கேள்வி வர, மௌனம்தான் பதில்.

“விளையாட்டெல்லாம் வேண்டாம் சேனா. கையெழுத்துப் போடு. வீணா ரெண்டு பேரோட வாழ்க்கையையும் நாசமாக்காத.”

“உங்க வாழ்க்கை இதுக்குமேல நாசமாக என்ன இருக்கு?”

“ஏன் உன் வாழ்க்கை இல்லையா?”

“அதைப்பத்தி உண்மையிலேயே கவலை இருக்கா உங்களுக்கு. அப்படி கவலை இருந்தா, கல்யாணமான மூணாவது நாள் விவாகரத்து கேட்டு நிற்பீங்களா?”

“ஏய்… என்ன விரும்பியா கட்டிக்கிட்டோம்?” என்று சேஷன் ஏளனம் செய்ய,

“என் பாட்டிக்காக கட்டிகிட்டேன். நான் மறுக்கலையே.”

“அப்புறம் ஏன் சீன போடணும்? கையெழுத்துப் போட்டுக் கொடு.”

“நீங்க என்ன செஞ்சாலும் சரி. நான் விவாகரத்து கொடுக்கறதா இல்ல.” என்றுவிட்டாள் தேவசேனா.

“அவ்ளோ திமிரா உனக்கு? என்கூட வாழ்ந்திட முடியும்ன்னு தோணுதா?” என்று மிரட்டலில் இறங்கினான் சேஷன்.

“வாழுறதை பத்தி நான் பேசவே இல்லையே.”

“உன் பாட்டி மாதிரியே விதண்டாவாதம் பண்ணாத சேனா. நான் உனக்கும் நல்லதுதான் சொல்றேன் புரிஞ்சிக்கோ.” என சேஷன் இறங்கிவர,

“பாட்டியை இதுல இழுக்க வேண்டாம் மாமா. நம்ம கல்யாணம் நடக்கும்போது, ரெண்டு பேரும் சுயநினைவோட தானே இருந்தோம். பிறகு, அவங்களை ஏன் குறை சொல்லணும்? நாம குழந்தைகள் இல்லையே.”

“என் பாட்டி இந்த கல்யாணத்துக்கு காரணமா இருக்கலாம். ஆனா, அதையும் தாண்டி எனக்கான சொந்த காரணங்களும் இருக்கு. நன்றிக்கடன்னு வச்சுக்கோங்களேன்.”

“பைத்தியம் பிடிச்சிருக்கா சேனா உனக்கு? நன்றிக்கடனுக்காக வாழ்க்கையை பணயம் வைக்கப் போறியா?

“என் வாழ்க்கையே நன்றிகடன் தான். உங்களுக்கு இதெல்லாம் புரியாது? என்றாள் சேனா.

மேலும், “இப்போ விவாகரத்துக்கு என்ன அவசியம்? நான் உங்களை ஏதாவது கேட்டேனா… மனைவியா எனக்கான அந்த அதிகாரத்தையும், அங்கீகாரத்தையும் நான் உங்ககிட்ட எதிர்பார்க்கலையே. பிறகென்ன, என்னை விவாகரத்து பண்ணிட்டு வேற யாரையாவது நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?”

“ஏய்.”

“அப்போ விவாகரத்துக்கு என்ன அவசியம் மாமா?” என்றாள் சேனா.

“ப்ளீஸ் சேனா. நான் சொல்றதைக் கேளு. என்னால உன் வாழ்க்கை ஏன் வீணாகனும். உன் பாட்டி இருக்கும்போதும் என்னை வாழ விடல. செத்தும் என்னை வாழ விடல. நீயாவது எனக்கு நிம்மதியைக் கொடு.” என்று சேஷன் இறைஞ்ச, சேனாவுக்கும் கோபம் வந்துவிட்டது.

“பாட்டியைக் கைநீட்டி குறை சொல்ல இங்கே யாருக்கும் தகுதியில்ல மாமா. நான் உங்களையும் சேர்த்துதான் சொல்றேன்.”

“உன் பாட்டி தப்பே பண்ணலையா?”

“உங்க கண்ணை காதல் மொத்தமா மறைச்சிருக்கு மாமா… அமிர்தாவை தள்ளி நிறுத்திட்டு யோசிங்க. ஒரு மகனா, பேரனா, இந்த குடும்பத்தோட வாரிசா நீங்க என்ன செஞ்சிருக்கீங்க இதுவரைக்கும்? உங்க அம்மா எத்தனை நாள் நைட் முழுக்க தூங்காம அழுதுட்டே இருந்திருக்காங்க தெரியுமா?”

“உங்க ஆசைப்பட்டதை படிக்க பாட்டி ஒத்துக்கல. அதுதானே உங்களோட முதல் கம்ப்ளெயிண்ட். அவங்களை ஒத்துக்க வைக்க நீங்க என்ன செஞ்சீங்க? சரி ஓகே. அவங்ககிட்ட போராடி உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சாங்களே என் அத்தம்மா… அவங்களுக்கு நீங்க உண்மையா இருந்திங்களா?”

“எப்போதுமே உங்களுக்கு உங்களோட கவலைகளும், உங்களோட வருத்தங்களும் தான் பெருசா இருந்திருக்கு. உங்க சந்தோஷத்துல நம்ம குடும்பம் எங்கே இருக்கு? ஆனா, என் பாட்டிக்கு எல்லாமே இந்த குடும்பம் தான். இங்கே இருக்க அத்தனைப் பேரோட சந்தோஷமும் தான் அவங்க சந்தோஷம்.”

“சொத்துக்காக அமிர்தாவை பாட்டி ஏத்துக்கலன்னு நினைக்கிறீங்களா நீங்க. என் பாட்டி சொத்தை ஒரு விஷயமா நினைச்சிருந்தா, கலையரசியோ, பிரபாகரனோ இந்த குடும்பத்துக்கு மருமக்களா வந்திருக்க மாட்டாங்க. உங்க அம்மா பெரிய பணக்காரங்களா? அவங்க சொத்துக்காகவா பாட்டி அவங்கள மாமாவுக்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க? உங்க மனசாட்சியை கேளுங்க.”

“பெத்த மகன் காதலையே எதிர்க்காதவங்க என் பாட்டி. பேரனோட காதலுக்கு சாதியும், அந்தஸ்தும் காரணமா சொல்றிங்க நீங்க. போங்க மாமா?” என்று சலித்துக் கொண்டாள் பெண்.

“நீ சொல்ற கதையெல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு. ஆனா, இதைத்தவிர வேறென்ன காரணம் இருக்கு அமிர்தாவை மறுக்க, உனக்குதான் உன் பாட்டியோட அசைவுகள் எல்லாமே அத்துப்படி ஆச்சே. நீயே சொல்லு.”

“அது என் வேலையில்ல. உங்களுக்கு தேவையா இருந்தா, நீங்க யோசிங்க.” என்றவள் நகர,

“நில்லு சேனா.” என்று அவள் கரம் பற்றினான் சேஷன்.

“நீ சொல்றது அத்தனையும் சரியாவே இருக்கட்டும். ஆனா, என்னால உன்னோட வாழ முடியாது. நீ எனக்கு டிவோர்ஸ் கொடுத்துதான் ஆகணும்.” என்றான் சேஷன்.

“நான் கொடுக்கறதா இல்ல. என்ன வேணாலும் செய்ங்க.” என்றவள் அவன் கரம் விலக்கி வெளியே வர, வாசலில் நின்றிருந்தார் கலையரசி.

தேவா அவரைக்கண்டு அதிர்ந்தவளாக நிற்க, கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டார் அவர்.

“அழாதீங்க அத்தம்மா…” என்று அவள் ஆறுதலளிக்க,

“என் மகன் இப்படி ஆகிட்டானே தேவாம்மா… இப்படியே போய்டுமா இவன் வாழ்க்கை?” என்று தன் அஞ்சுதலை முன்வைத்தார் கலையரசி.

“அது எப்படி போகும்? அதுதான் நீங்களும், நானும் இருக்கோமே… நாம அப்படி விட்டுடுவோமா?” என்று அவரைத் திடமாக்கினாள் தேவா. ஆனால், வார்த்தையில் இருந்த திடம் அவள் மனதில் நிச்சயம் இல்லை. சேஷனை அத்தனை எளிதில் இயல்புக்கு கொண்டுவர முடியாது என்று ஐயம் திரிபற உணர்த்தியிருந்தானே அவன்.

“நாம சொல்றதை அவன் கேட்கிற நிலைமையிலா இருக்கான் தேவா?” என்று கலையரசி மீண்டும் கவலைப்பட,

“எல்லாம் சரியாகிடும் அத்தம்மா…”

“எனக்கு ஒரு உறுதி கொடுப்பியா தேவா” என்றபடி கலையரசி அவர் கையை நீட்டிட, அடுத்த தளையோ என்று உள்ளூற அழுதாலும், மௌனமாய்த் தான் நின்றது பெண்.

“எப்பவும் அவனை விட்டுடாத தேவா. அவனை வெறுத்து, அவனைப் பிரியணும்னு எப்பவும் நீ நினைக்கக்கூடாது.” என்று அவர் சத்தியம் கேட்க,

“கண்டிப்பா நினைக்கமாட்டேன் அத்தம்மா… நீங்க நிம்மதியா இருங்க. நீங்க அதிகமா யோசிக்கக்கூடாதுன்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க. அதை மறக்காதீங்க.” என்று தன்னை மறைத்துக் கொண்டாள் அவள்.

Advertisement