Advertisement

நிச்சயம் அந்த கணங்களில் அவள் மனதில் சேஷன் இல்லை. பொய்யாகிப் போன தனது வாழ்வு தான் பெரிதாக தெரிந்தது. அதுவும் பெற்ற தந்தையாக அவளிடம் பாசம் காட்டி வந்த ஆத்மநாதன் அவளை அனாதை என்றதை ஏற்கமுடியவில்லை அந்த பூஞ்சை மனம் கொண்டவளால்.

“செத்துப் போ…” என்ற அந்த அரக்கனின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் ஒலித்தபடி இருக்க, ‘நான் யாருக்கும் பாரமாக வேண்டாம்’ என்ற எண்ணம் மட்டுமே நிறைத்தது அவளை.

தன்னை வளர்த்த கடனுக்கு தனது உயிரை கொடுத்துவிடுவோம் என்று முடிவெடுத்துவிட்டாள் அவள். அவளால் சேஷனை விட முடியாது எப்போதும். அதற்கு இதுமேல் என்பதால் உயிரைவிடத் துணிந்துவிட்டது அந்த முட்டாள்பெண்.

நொடிநேர முட்டாள்தனத்தால் வாழ்நாள் முழுவதும் ஒருவனை குற்றவாளியாக்கப் போகிறோம் என்பதை அந்த நிமிடங்களில் உணராமல், மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்திருந்தாள் அமிர்தா.

விஷயம் அடுத்தநாள் செய்திகளில் முதன்மை இடத்தைப் பெற, முழுதாக உடைந்து போனது சேஷன்தான். படப்பிடிப்புக்காக சென்னைக்கு வெளியில் இருந்த முட்டுக்காடு படகுக்குழாம் அருகில் இருந்தான் அவன்.

விஷயம் கேள்விப்பட்ட நொடியில் உயிரே போனதுபோல் துடித்தவனாக, அவன் காரை எடுத்துக்கொண்டு சென்னைக்குள் நுழைய, சென்னையின் எல்லையில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது அவனது கார்.

மிக மோசமான நிலைமையில் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவன் உயிர் பிழைத்து வருவதே கடினம் என்ற மருத்துவர்களின் வார்த்தைகளில் நெஞ்சுவலி வந்து படுத்துவிட்டார் கலையரசி.

யாரைக் கவனிப்பது? எதை சரிசெய்வது? என்று புரியாமல் பிரகதீஸ்வரி திணறி நின்ற நேரங்கள் அவை. விஷயம் கேள்விப்பட்டு தனது தந்தையிடம் தொழில் கற்க சென்றிருந்த தேவ் விரைந்து வந்துவிட்டான். தேவா தனது அத்தம்மாவை விட்டு நகராமல் அமர்ந்துகொள்ள, பிரகதீஸ்வரி சேஷனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பையும் அவள் கையில் கொடுத்துவிட்டு பேரனை தன்னுடன் நிறுத்திக் கொண்டார்.

அமிர்தாவின் மரணத்தை தொடர்ந்து ஏகக்குழப்பங்கள் அவர்கள் தொழிலில். இதில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என்று அரசு ரீதியிலும் பல குடைச்சல்கள். அத்தனையும் சரியாக இருந்தாலும், மன உளைச்சல் என்பது இருப்பது தானே.

அத்தனைக்கும் பின்னால் இருப்பது ஆத்மநாதன் என்று தெரிந்தாலும், கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் தான் போராடினார் பிரகதீஸ்வரி. முதலில் தனக்கு தெரிந்த சிலரைப் பிடித்து, முதலமைச்சரை நேரில் சந்தித்தார்.

அந்த தொழில்துறை அமைச்சரையும், அவரது சகாக்களையும் பற்றி வாய்மொழியாக எடுத்துரைத்தவர், தனது பேரன் மற்றும் மருமகளின் நிலையையும் எடுத்துக்கூற, நிச்சயம் உதவுவதாக உறுதி கொடுத்தார் முதல்வர்.

அதன்பின் வந்த நாட்களில் அந்த தொழில்துறை அமைச்சரின் இலாகா மாற்றப்பட, ஆத்மநாதனுடன் அவருக்கு இருந்த தொடர்பும் விட்டுப் போனது. தன் தலை தப்பினால் போதும் என்று ஒதுங்கி கொண்டிருந்தார் அவர்.

ஆனாலும், ஆத்மநாதன் விடாமல் பிரகதீஸ்வரியை சீண்டிக் கொண்டே இருக்க, ஒருகட்டத்தில், “நீ இதோட எல்லாத்தையும் விட்டுட்டா உனக்கு நல்லது ஆத்மா. இனியும் எங்க வாழ்க்கையில குறுக்கே வந்தா, என் மகனோட மரணமும், உன் மகளோட மரணமும் மறுபடியும் விசாரணைக்கு வரும்.” என்று மிரட்டினார் பிரகதீஸ்வரி.

அதில் கொஞ்சம் அடக்கினாலும், சேஷன் குழுமத்தை விடுவதாக இல்லை ஆத்மநாதன். அன்று தொடங்கி அவ்வபோது ஏதேனும் ஒரு வகையில் அவர்களை துரத்திக் கொண்டே தான் இருந்தான் அவன்.

ஆனால், அவன் அப்போதைக்கு அமைதியானதே போதும் என்பதுபோல், தன் தொழிலையும், குடும்பத்தையும் கவனிக்க தொடங்கிவிட்டார் பிரகதீஸ்வரி.

இனி ஒரு இழப்பை தாங்க முடியாது என்று தான் அவர் அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், நினைவு திரும்பிய பேரன் முதல் வார்த்தையாக, “அம்ரு…” என்று அவள் பெயரை உச்சரித்ததில், கலங்கித்தான் நின்றார் அவர்.

அவன் விழித்திருக்கும் நேரமெல்லாம் அவன் கண்கள் கலங்கியபடியே இருக்க, “என்னை கொன்றுவிடுங்கள்.” என்று மருத்துவரிடமே கெஞ்சி கேட்கும் நிலையில் தான் இருந்தான் சேஷன்.

தேவா அவனைக் கண்டு கவலை கொண்டாலும், “அப்படியென்ன சாகறதுக்கு அவசரம் இவங்களுக்கு…” என்று எரிச்சலாகத் தான் வந்தது.

ஒருமுறை தேவா, “அவர் கேட்கிறபடி ஊசி போடுங்க டாக்டர். கூடவே, அடுத்த ரூம்ல இருக்க அவங்க அம்மாவுக்கும் போட்டுடுங்க.” என,

“அம்மாவுக்கு என்னாச்சு?’ என்று பதறினான் சேஷன்.

“ம்ம்ம்ம்.. நீங்க இங்கே வந்து படுத்த நிமிஷமே அவங்களும் பக்கத்துக்கு ரூம்ல அட்மிட் ஆகிட்டாங்க. ஹார்ட் அட்டாக் அவங்களுக்கு. உங்க உயிருக்கு ஆபத்துன்னு சொன்னதுக்கே அந்த நிலைமை. இப்போ நீங்க சாக நினைக்கிறது தெரிஞ்சாலே, அவங்க செத்துடுவாங்க மாமா.” என்று தேவா உணர்வற்ற குரலில் கூற,

“தேவா…” என்று அவளை அதட்டிவிட்டான் சேஷன்.

தேவா பதில் கொடுக்காமல் அவனை முறைத்திருக்க, “அம்மாவை பார்க்கணும். என்னைக் கூட்டிட்டு போ.” என்றான்.

அதன்படி அடுத்த ஒருமணி நேரத்தில் வீல் சேரில் அமர்ந்தபடி தனது அன்னையைப் பார்த்து வந்தான். அதன்பின் தற்கொலை என்ற ஒன்றை யோசிக்கவில்லை என்றாலும், வாழும் ஆசை நிராசையாகிப் போனது.

அன்னையும், மகனும் ஒரு மாதத்திற்குப் பின் மருத்துவமனையில் இருந்து வீடு வர, யாரிடமும் பேசாமல் எந்நேரமும் அறையில் அடைந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான் சேஷன்.

கலையரசி அவ்வபோது அறைக்குச் சென்று அமர்ந்திருப்பார். அந்த நேரங்களில் அவர் மடியில் தலைசாய்த்துக் கொள்பவன் சத்தமில்லாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பான் தன் காதலை நினைத்து.

அவனது வேதனை பொறுக்க முடியாமல் அவனை வெளியே சென்று வரும்படி அறிவுறுத்தி, அவனது வேலைகளில் அவனை கவனம் செலுத்த வைத்தது கலையரசி தான்.

அன்னையின் சொல்படி வெளியே வந்தவன் தனது துக்கத்தை வேறு வழிகளில் ஆற்ற தொடங்கியிருந்தான். இடைவிடாத குடிப்பழக்கம் அவனுடன் ஒட்டிக்கொண்டது அந்த நாட்களில்தான். பிரகதீஸ்வரி தொடங்கி தேவா வரை யாராலும் அவனை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

தினம் ஒரு ஹோட்டல், பார் என்று தேடித் திரிந்து அவனை வீட்டிற்கு அழைத்து வருவது தேவ்வின் வேலையாகி போனது. இதை தாங்காதவராக கலையரசி தினமும் அழுது கரைய தொடங்க, பிரகதீஸ்வரியையும் அவரது முதுமை தள்ளாடச் செய்தது.

சேஷாவிடம் எத்தனையோ முறை பேசிப் பார்த்துவிட்டார் அவர். எதற்கும் மசிவதாக இல்லை அவன். இறுதியாக, தொழிலை ஏற்று நடத்தும்படி பேரனை அவர் அழைக்க, “யாருக்கு வேணும் உங்க சொத்து?” என்று பாட்டியை ஊதாசீனப்படுத்தினான் அவன்.

“சொத்து சொத்துன்னு இதை சொல்லித்தானே அவளை சாகடிச்சிங்க. இன்னுமா உங்க பணவெறி தீரல. என்னை விட்டுடுங்க பாட்டி. எனக்கு இது எதுவுமே வேண்டாம்.” என்று ஒதுங்கிக்கொண்டான் அவன்.

தேவா அவளின் நிறுவனத்தோடு போராடிக் கொண்டிருக்க, தேவ் தன் பாட்டியுடன் இருந்தான். அவன் ஆராய்ந்தவரை தொழில் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்பது புரிந்துவிட, தனது பாட்டியை நினைத்து கவலை கொண்டான் அவன்.

அவனது கவலை சரிதான் என்று நிரூபிப்பவராக, அடுத்த இருபது நாட்களில் படுக்கையில் விழுந்தார் பிரகதீஸ்வரி. மொத்த குடும்பமும் நிலைகுலைந்து நிற்க, இனி தங்களால் முடிவது எதுவும் இல்லை என்று கைவிரித்து விட்டனர் மருத்துவர்கள்.

பிரகதீஸ்வரி என்ற இரும்பு அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. தான் இறக்கும் நொடிக்குள் தனது கடமைகளை முடித்துவிடவே நினைத்தார் அவர்.

தனது பேத்தியை அழைத்தவர் அடுத்த ஒருமணி நேரம் தனிமையில் அவளிடம் சில விஷயங்களை பேசி முடிக்க, அவர் கூறியது மொத்தத்திற்கும் கண்ணீருடன் தலையாட்டிக் கொண்டாள் தேவா.

“அம்மு… உன் பிரகா சொல்றதை கேட்ப இல்ல. சேஷா நல்லவன்டா. அவனை நீதான் பார்த்துக்கணும். அவனுக்கு உன் அளவுக்கு சமத்து கிடையாதுடா. என் அம்முக்குட்டி அவனை பத்திரமா பார்த்துக்கணும். கலைக்கு அவனைவிட்டா யாருமில்ல. நீ அவனை விடக்கூடாது.” என்று தனது கையை நீட்ட, அவர் கையின் மீது தன் கையை வைத்து சத்தியம் செய்து கொடுத்தாள் பெண்.

“எனக்கும் உன்னைவிட்டா யாரும் இல்ல பிரகா.” என்று தேவசேனா அழுகையில் குலுங்க, கலையரசியை அழைத்தார் பிரகதீஸ்வரி.

“எனக்கு சேஷனோட கல்யாணத்தைப் பார்க்கணும் கலை.” என்று அவர் வேண்ட,

“அத்தை… எனக்கு புரியலையே. அவன் எப்படி?” என்று திகைத்தார் கலையரசி.

“பொண்ணு தயாரா இருக்கா. உன் மகனை நீதான் ஒத்துக்க வைக்கணும். என்னோட நேரம் முடியறதுக்குள்ள, அவனுக்கு ஒருவழி பண்ணனும் கலை.” என்று பாட்டி துடிக்க, அவர் துடிப்பை உணர்வதாக இல்லை பேரன்.

முடியவே முடியாது என்று அவன் நிற்க, “அப்போ உன் பாட்டியோட சேர்த்து எனக்கும் கொள்ளி வச்சிடு.” என்றார் கலையரசி.

“ஏன்ம்மா என்னை சித்ரவதை பண்றிங்க எப்பவும். உங்களுக்கு சுயமா யோசிக்கவே தெரியாதா? எப்பவும் அவங்க சொல்றபடி தான் ஆடுவீங்களா?” என்று அவன் கத்த,

“என் அத்தை எனக்கு தப்பு பண்ணமாட்டாங்க.”

“அப்போ என்னைப்பத்தி கவலையே இல்லையா உங்களுக்கு. நான் செத்துட்டா என்ன செய்விங்க.”

“உன்னோட சேர்ந்து என் பிணமும் சுடுகாட்டுக்கு போகும்.” என்று முடித்தார் கலையரசி.

“என்னை என் நிலைமையை கொஞ்சமாவது யோசிச்சு பாரேன்ம்மா…”

“எனக்கு எதைப்பதியும் கவலை இல்ல சேஷா. நான் சொல்றதை நீ செய். நமக்காகவே வாழ்ந்த அவங்க நிம்மதியா போகணும். அது உன்னால தான் நடக்கும். நீ நடத்திக் கொடு.” என்று அவர் கையேந்த,

“என்னவோ பண்ணுங்க.” என்று தளர்ந்து போனவனாக அமர்ந்துவிட்டான் சேஷா.

அடுத்தநாள் காலையில் வடபழனி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடந்து முடிந்திருந்தது அவனுக்கும்  தேவசேனாவுக்கும். அவன் பலமுறை எடுத்துச் சொல்லியும் காது கேளாதவள் போல் அமர்ந்திருந்த தேவசேனாவின் மீதும் ஆத்திரம் மிகுந்திருக்க, யாரிடமும் வாய் திறக்கவில்லை அவன்.

இவர்கள் திருமணம் முடித்து மருத்துவமனையை அடைந்த நேரம் தனது வழக்கறிஞருடன் பேசிக் கொண்டிருந்தார் பிரகதீஸ்வரி.

இவர்களைக் காணவும், பிரகதீஸ்வரியின் கண்ணசைவில் தேவாவிடம் தன் கையில் இருந்த பத்திரங்களை ஒப்படைத்துவிட்டார் அந்த வக்கீல். அதன் சரத்தையும் அங்கிருந்தவர்களுக்கு அவர் விளக்கிவிட, யாரின் முகத்திலும் எந்த உணர்வுமில்லை.

பிரகதீஸ்வரி கலையரசியை அருகில் அழைத்து, “உங்களை ஏமாத்திட்டேன்னு நினைக்கறியா?” என, மறுப்பாக தலையசைத்து கண்ணீர் வடித்தார் கலையரசி.

தேவாவை அருகில் அழைத்த பிரகதீஸ்வரி, அவள் கையை கலையரசியிடம் பிடித்துக் கொடுத்தார்.

“உன்னைவிட்டா யாருமில்ல இவளுக்கு. தேவ் அவன் அப்பாவோட இருப்பான். இவளுக்கு ஒத்து வராது. அவ பசிக்கு கூட அவளுக்கு சாப்பிட தெரியாது. நீதான் அவளை பார்த்துக்கணும். நீ அவ ஒருத்தியை பார்த்துக்கோ, அவ உங்க மொத்த பேரையும் பார்த்துக்குவா…” என்று கூறும்போதே அதீதமாக மூச்சு வாங்கியது அவருக்கு.

தேவா பதறியவளாக, “பிரகா…” என்று அலற, அவளை அருகில் அமரும்படி சைகை செய்தார் அவர். அவள் அமரவும், அவள் மடியில் தலைசாய்க்க அவர் முயற்சிக்க, தேவ் பாட்டியை தங்கையின் மடிக்கு நகர்த்தினான்.

அவன் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டவர், ஆதிசேஷனை திரும்பி பார்க்க, தன்னையறியாமல் பாட்டியின் அருகில் வந்து நின்றான் அவன்.

அந்த நொடி ஆயிரம் விளக்கின் வெளிச்சம் அவர் கண்களில். தன் கையை நீட்டி அவன் கையை அவர் பிடித்துக் கொள்ள, படுக்கையில் இருந்து எழுபவர் போல் உயர்ந்தவர் மறுநொடி வேரில்லாத கிளையாக தன் அம்முவின் மடியில் விழுந்திருந்தார்.

“பிரகா…” என்று அலறிய தேவாவின் குரல் அந்த மருத்துவமனையின் ஒவ்வொரு சுவற்றிலும் பட்டு எதிரொலிக்க, பாட்டியின் மீதே மயங்கி சரிந்தாள் அவள்.

Advertisement