Advertisement

மௌனமாய் எரிகிறேன் 13

சேஷன் தனது திரைப்பயணத்தை தொடங்கிவிட்ட விஷயம் தெரிந்தும் தெரியாதவர் போல் தான் இருந்தார் பிரகதீஸ்வரி. அவருக்கு பேரனின் கவனம் எப்படியோ ஒரு வகையில் திசை திரும்பினால், அதுவே போதும் என்றுதான் இருந்தது.

அவருக்கு அமிர்தா மீது எந்த வன்மமும் கிடையாது. மற்றவர்களைப் போல் சாதி, அந்தஸ்து என்று அதெல்லாம் பார்ப்பவரும் கிடையாது. ஆனால், இது அத்தனைக்கும் மேலாக இருந்தது ஆத்மநாதன் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பு. வெறுப்பு என்பதைவிட ஒரு அருவருப்பு அந்த மனிதன் மீது.

அதன் காரணத்தையும் யாரிடமும் பகிர்ந்து கொள்வதாக இல்லை அவர். அது அவர் மட்டுமே அறிந்த ரகசியம். அவருக்குள் அவர் புதைத்துக் கொண்டது. எந்த நிலையிலும் அதை வெளியில் சொல்ல முடியாது அவரால்.

அதைக் கொண்டுதான் அமிர்தாவையும் அவர் வெறுப்பது. அவர் வாழ்வின் கடைசி நிமிடம் என்று வந்தாலும் சரி, அவரால் அமிர்தாவை மட்டுமல்ல ஆத்மாவை சார்ந்த யாரையும் ஆதரிக்க முடியாது.

அப்படியிருக்க, பேரன் அவன் மகளோடு காதல் என்று வந்து நிற்கிறான். அந்த மூதாட்டியின் வேதனையை யாரிடமும் வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளே வைத்து புழுங்கிக்கொண்டு, வெளியில் ஒரு மகாராணியின் கம்பீரத்தோடு வலம் வந்தார் அவர்.

இப்போதும் ஆத்மநாதனால் பல சிக்கல்கள் அவர் தொழிலில். ஏன், அவர் மகனின் கனவான சேஷன் நெட்ஒர்க்ஸ் கையை விட்டுச் செல்லும் நிலைதான். அதை காப்பாற்ற தன்னால் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டார் அவர்.

ஆனால், அவருக்கு அதுமட்டும் வேலையில்லயே. அதில் முழுதாக கவனம் செலுத்த தொடங்கினால், அவரின் மற்ற தொழில்களின் மீதான கவனம் சிதையவும் வாய்ப்புள்ளதே. இத்தனைக்கும் அப்படி ஒன்றும் லாபத்தில் இயங்கவில்லை சேஷன் நெட்ஒர்க்ஸ்.

அதை யாருக்கும் தாரை வார்க்கும் எண்ணம் வராமல் இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்த நேரம் தான் பேரன் காதல் என்று வந்து நின்றது. அதுவும் சேஷன் குழுமத்தை தன் நிறுவனத்திற்கு எழுதி கொடுத்து விடுமாறு பேரம் பேசிய, ஆத்மநாதனின் மகளோடு.

அவரின் அனுபவத்தில் இதுபோல் எத்தனையோ பார்த்திருக்கிறார் என்பதால், அமிர்தாவின் காதலை மெய்யென கொள்ள முடியவில்லை அவரால். பேரன் எப்போதும் போல் அவனது அவசரபுத்தியால் விழுந்திருக்கிறான் என்பது அவர் எண்ணம்.

அவர் கண்ணில்பட்ட காட்சிகளும் அதற்கேற்றாற்போல் தான் இருந்தது. அன்றைய தொழில்துறை அமைச்சரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தான் ஆத்மநாதன். அவர் மகனையே அவனுக்கு மருமகனாக்கி கொள்ள போவதாகவும் காற்று வழிச் செய்திகள் அவர் காதில் விழுந்திருந்தது.

அப்படி நடந்துவிட்டால் தனக்கான பலி கிடைக்காமல் போய்விடுமே என்று அவர் கவலைப்பட்டு நிற்கையில், பேரன் காதல் என்று வந்து நிற்கிறான்.

அவனையும் இனி நம்ப முடியாது என்ற நிலையில் தான் அவர் தன் நிறுவனத்தை தனது செல்லப் பேத்தியிடம் தூக்கிக் கொடுத்தது. ஆனால், அவர் முடிவு எத்தனை சரியானது என்பதை அடுத்து வந்த நாட்களில் அழகாக அவருக்கு நிரூபித்துக் காட்டினாள் அவர் பேத்தி.

அவளின் இரவு, பகல் என்று மொத்த நேரமும் சேஷன் அலுவலகத்தில்தான் கழிந்தது. நிர்வாகம் தொடங்கி நிகழ்ச்சிகள் வரை பல வகையிலும் மாற்றங்கள். அவளின் சிந்தனைகள் செயல்வடிவம் பெறுகையில், சேஷன் குழுமம் ஒளிரத் தொடங்கியது.

ஆனால், அதற்கும் முட்டுக்கட்டையாக அவ்வபோது ஆத்மநாதன் ஏதாவது சிக்கல்களை விளைவித்துக் கொண்டுதான் இருந்தான். பேத்தி எதையும் பாட்டியிடம் கொண்டு செல்லாமல் அவளே சமாளிக்க தொடங்கியிருக்க, மறுபுறம் சேஷன் திரைத்துறையில் அவனுக்கான இடத்தைப் பிடித்திருந்தான்.

அவனது முதல் படம் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடியிருக்க, அடுத்தடுத்தும் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தான். ஆனால், அவன் பாட்டி நினைத்தது போல் அவனது கவனம் சிதையவோ, சிதறவோ இல்லை.

மாறாக, இன்னும் அழுத்தமாக அவனில் பதிந்திருந்தாள் அமிர்தா. இந்த நிலையில் தான் ஆத்மநாதன் தன் மகளின் திருமணம் குறித்த பேச்சை எடுத்தது. அமிர்தா ஆரம்பத்திலேயே மறுத்துவிட, அவளின் விருப்பத்தை குறித்தெல்லாம் கிஞ்சித்தும் அக்கறைப்படவில்லை ஆத்மநாதன்.

“நான் சொல்வதை நீ செய்தாக வேண்டும்…” என்பதாகத் தான் இருந்தது அவரது பேச்சும், நடவடிக்கையும்.

அமிர்தா செய்தியை சேஷனுக்கு கடத்திவிட, மீண்டும் ஒருமுறை தனது பாட்டியிடம் சென்று நின்றான் சேஷன். ஆனால், அவன் பேச்சை காது கொடுத்தும் கேட்பதாக இல்லை பிரகதீஸ்வரி.

“தன்னால் இதில் எதுவும் செய்ய முடியாது.” என்று முடித்துக்கொண்டார் அவர்.

சேஷன் அடுத்ததாக தன் அன்னையை அழைக்க, தன் மாமியாரை மீறி எதையும் செய்து பழக்கமில்லாததால் தடுமாறி நின்றார் கலையரசி. மகனின் வேதனையை சகிக்க முடியாமல் அவர் மாமியாரை நாட, “அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா, என் உயிர் உடம்புல தங்காது. பரவாயில்லையா?” என்றார் பிரகதீஸ்வரி.

“ஐயோ…” என்று கலையரசி காதுகளை மூடிக்கொள்ள,

“நிறைய விஷயங்களை எனக்குள்ள புதைச்சுட்டு நடமாடிட்டு இருக்கேன் கலை. நீ தாங்கமாட்ட. உன் மகனுக்கு நீ செய்ய நினைக்கிறது நல்லது இல்ல. அவனை அவன் போக்குல விட்டுடாம, இழுத்துப் பிடிச்சுக்கோ.” என்று புதிராக கூறிச் சென்றார் அவர்.

கலையரசிக்கு தன் மாமியாரின் பேச்சை சந்தேகிக்க தோன்றவில்லை. எத்தனை வருட உறவு அவர்களுடையது. பிரகதீஸ்வரியின் குணம் பற்றி அறியாதவரா அவர். இந்த பொய், புரட்டு வேலையெல்லாம் தீயிலிட்டு பொசுக்கினாலும் வராது அவருக்கு.

கலையரசிக்கு தன் மாமியாரின் பேச்சை மீறும் துணிவில்லை. அடுத்தநாள் காலையில் தன்னிடம் வந்து நின்ற மகனிடம், “இது உனக்கு வேண்டாம் சேஷா. அந்த பொண்ணை மறந்திடு.” என்றுவிட்டார் அவர்.

சேஷன், “அம்மா…” என்று துவண்டு நிற்க,

“உன் பாட்டி உனக்கு கெட்டது செய்யமாட்டாங்க. நானும் செய்ய மாட்டேன்.”

“கெட்டதுன்னு எதை வச்சு முடிவு பண்ணீங்க…”

“எனக்கு அதெல்லாம் தெரியாது. ஆனா, உனக்கு இந்த காதல் வேண்டாம் விட்டுடு.” என்று உறுதியாக நின்றார் கலையரசி.

அவருக்கு பதிலேதும் கூறாமல், வேகமாக வீட்டைவிட்டு வெளியேறினான் சேஷன். மறுபுறம் அமிர்தா வேறு அவனை நச்சரிக்க, அவளின் தீராத அழுகையால் நேரே அவள் வீட்டிற்கே சென்று நின்றான்.

அமிர்தாவின் அன்னை அவனை வரவேற்று உபசரித்து அமரவைக்க, அவன் கண்ணில்படும் இடத்தில் தவிப்புடன் நின்றிருந்தாள் அமிர்தா.

கண்களால் அவளைத் திடப்படுத்தி, அவன் ஆத்மாவிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்க, கதை கேட்பது போல் பொறுமையாக கேட்ட ஆத்மநாதன், “வெளியே போடா…” என்றான் அவமரியாதையாக.

சேஷானின் பொறுமை பறக்க, “மரியாதை முக்கியம் அங்கிள். நானும் நீ வா போ எல்லாம் பேசலாம். ஆனா, அமிர்தாவோட அப்பாவுக்கு மரியாதை கொடுக்கணும்னு நினைக்கிறேன்.” என்றுவிட,

“உன் மரியாதைக்கு இங்கே எவனும் தவம் கிடக்கல. இன்னும் ஒரு வாரத்துல என் மகளுக்கு நிச்சயம் வச்சிருக்கேன். இனி இதுல பேச எதுவும் இல்ல. வெளியே போ.” என்றார் அவர்.

“உங்க மகளோட விருப்பத்தை எல்லாம் கேட்கமாட்டீங்களா நீங்க?”

“எனக்கு யாரோட விருப்பமும் தேவையில்ல. என் பொண்ணு அவ, நான் சொல்றதை அவ செய்யணும்.” என்றவரிடம் என்ன பேசுவது என்று புரியவில்லை அவனுக்கு.

“வெளியே போடா..” என்று மீண்டும் அழுத்தமாக அவன் இரைய, அப்போதைக்கு அமைதியாக வெளியேறினான் சேஷன்.

அமிர்தா கண்களில் நிறைந்த நீருடன் சேஷாவைப் பார்த்து நிற்க, அவளை பார்த்தபடியே தான் வெளியேறினான் சேஷன்.

அவன் வெளியேறிய நிமிடம், இங்கே அமிர்தாவுக்கான சித்ரவதைகள் தொடங்கிவிட்டது. ஆத்மநாதனுக்குள் ஒளிந்திருந்த மிருகம் முற்றிலுமாக தனது கட்டை அவிழ்த்துக் கொண்டு வெளிப்பட்ட நொடிகள் அவை.

பெண் என்றும் பாராமல் குற்றுயிரும் குலையுயிருமாக மாறும்வரை மரணகாயம் அடைந்தாள் அமிர்தா. “வேண்டாம்ப்பா.. விட்டுடுங்க… அம்மா… அம்மா…” என்று அவள் கதறிய கதறல்கள் அந்த வீட்டில் வேலை செய்பவர்களையே கண்ணீர் வடிக்க வைத்தது.

ஆனால், எதற்குமே மனமிரங்காமல் தனது அரக்கத்தனத்தை மக்களிடம் வெளிப்படுத்திய ஆத்மநாதன் மகளைத் திரும்பியும் பாராது வீட்டை விட்டு வெளியேறினார். அவள் அன்னை அழுதபடியே மகளை கவனித்துக் கொள்ள, அவளின் அலைபேசி எண் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்தது.

அது மட்டுமில்லாமல், அவளும் அந்த வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டாள். சேஷன் ஓயாமல் அவளது அலைபேசிக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்க, அதுதான் உயிரை விட்டிருந்ததே.

அவள் வீட்டிற்கு சென்று பார்த்து விடுவோமா என்று எண்ணினாலும், ஏதாவது அடிதடி ஆகிவிட்டால் நிச்சயம் பத்திரிக்கைகளில் மாட்டிக்கொண்டு அவதிப்பட நேரிடும் என்று புரிந்தவனாக அமைதி காத்தான் அவன்.

ஆனால், அதுவே அங்கே அவளுக்கு வினையாகிப் போனது. இரண்டுநாள் காய்ச்சலில் விழுந்து எழுந்தவள் மூன்றாம் நாள் வீட்டு வேலையாள் ஒருவனின் அலைபேசியில் இருந்து சேஷாவின் எண்ணுக்கு அழைப்பு விடுக்க, அழைப்பை ஏற்கவில்லை அவன்.

அதில் கலங்கிப் போனவளாக, அந்த நள்ளிரவு நேரத்தில் அவள் வீட்டு மொட்டைமாடியில் நின்று, மீண்டும் மீண்டும் சேஷனை விடாமல் அழைக்க தொடங்கினாள் அமிர்தா. அவனிடம் என்ன சொல்ல நினைத்தாளோ? எதற்காக போராடினாளோ? அவளின் போராட்டம் நிராசையாகத் தான் போனது ஆத்மநாதனின் வரவால்.

இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்டவள், தந்தையின் மிருகத்தனத்தை நினைத்து இன்னும் நடுங்கிப் போனாள் அந்த நொடிகளில்.

“ப்ளீஸ்ப்பா… என்னை விட்டுடுங்க…” என்று மீண்டும் அவள் தந்தையின் கால்களில் விழ, மகளின் தலைமுடியைப் பிடித்து எழுப்பிய ஆத்மநாதன் தனது மொத்த கோபத்தையும் திரட்டி ஒரு அறை கொடுக்க, அதில் சுருண்டவளாக, பக்கவாட்டு சுவற்றில் சென்று விழுந்தாள் அவள்.

அப்போதும் கோபம் அடங்காமல், அவள் கழுத்தை நெரித்து, “அவனை விட்டுட்டுடறேன்னு சொல்லு. உன்னை விட்டுடறேன்…” என்று பேரம் பேசினான் ஆத்மநாதன். அமிர்தா பதில் சொல்லும் அளவுக்கு தெளிவாக இல்லை என்பதைக்கூட உணராமல், ஆத்திரத்தில் அறிவை இழந்து மகளின் தலையைப் பிடித்து வேகமாக சுவற்றில் அடித்திருந்தான் அந்த கொலைகாரன்.

அமிர்தா அவனின் கொடூரத்தில்  தனது சுயநினைவை இழந்து கொண்டிருக்கையில், “நாயே… அனாதையா சாக வேண்டிய உன்னை என் ராஜ்யத்துக்கே இளவரசியாக்கி அழகு பார்க்க நினைச்சா, நீ எனக்கே குழி பறிக்கிறாயா… நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாலும், அது புத்தி எங்கேயோ போகும்ம்னு நிரூபிச்சுட்ட நீ.” என்று வார்த்தையிலும் அவளை கொல்ல துணிந்துவிட்டான் அவன்.

“அப்பா…” என்று மகள் அலற,

“ச்சீ.. அப்படி கூப்பிடாதடி… தெருநாய் நீ… உன் அப்பனும் ஆத்தாளும் அவங்க அரிப்புக்கு உன்னை பெத்து போட்டுட்டு செத்து தொலைஞ்சிட்டாங்க. பாவமா இருக்கேன்னு உன்னை வளர்த்தேன் நான். ஆனா, எனக்கே குழி பறிக்க நினைக்கிறல்ல.” என்று மீண்டும் கால்களால் எட்டி உதைத்தார் அவர்.

அமிர்தாவுக்கு தான் ஆத்மநாதனின் மகள் இல்லை என்பதே மிகப்பெரிய அதிர்ச்சி. மூளை மரத்த நிலை கிட்டத்தட்ட. எப்படி எதிர்வினையாற்றுவது என்றுகூட புரியாதவளாக அவள் நிற்க,

“ஒழுங்கா நான் சொல்றவனை கட்டிக்க முடியம்ன்னா, என் வீட்டுக்குள்ள வா. இல்ல, இப்படியே விழுந்து செத்துடு.” என்று கொஞ்சமும் இரக்கமில்லாமல் ஆத்மநாதன் கூறிச் செல்ல, அந்த வார்த்தைகளின் விளைவை உணரவில்லை அவர்.

Advertisement