Advertisement

மௌனமாய் எரிகிறேன் 12

கலையரசி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே இருந்த இருக்கையில்தான் இன்னும் அமர்ந்திருந்தான் ஆதிசேஷன். கலையரசியின் புறக்கணிப்பு அவனை துண்டு துண்டாக சிதறடித்திருந்தது. அவன் மீதான கலையரசியின் பாசத்தை அறியாதவனா அவன். அவன் மீது கொண்ட அன்பினால் தானே அவர் தேவசேனாவை காயப்படுத்தியது.

உலகம் அறியாத அப்பாவி அவன் அன்னை. ஒருவகையில் தேவசேனா கூறியது மொத்தமும் உண்மைதான். ஒரு மகனாக இதுவரை எதையுமே செய்ததில்லை அவன். மனம் முழுவதும் அவனது காதலின் காயங்களே நிரம்பியிருக்க, பெற்றவளையும், தன்னை நம்பியவளையும் காக்க மறந்தவன் அவன்.

இருவருக்குமே அவன் நியாயம் செய்யவில்லை. நம்மிடையே நடமாடும் பலரைப்போல் பழைய காதலை கனவாக நினைத்து கடக்க முடியாமல், தனக்குள் போராடிப் போராடியே தோற்றுப் போன நல்லவன் அவன்.

அன்னை, தந்தை, பாட்டி என்று மூவரின் பாசத்தையும் ஒரே ஆளாக அனுபவித்து வாழ்வை ரசித்து வாழ்ந்தவன் அவன். பத்து வயதில் பாசத்தை மூன்றாக பங்கிட்டபோதும், புதிதாக வந்தவர்கள் மீது வன்மத்தை எல்லாம் வளர்க்கவில்லை சேஷன்.

வீட்டில் தனியாக போரடித்துக் கிடந்தவனுக்கு தேவ் உற்ற தோழனாகத் தான் தெரிந்தான். மூன்று வயது சிறுமியாக கண்களை சுருக்கிக்கொண்டு, தானும் விளையாட வருவேன் என்று அடம் பிடிக்கும் தேவாவையும் கொஞ்சமாக பிடித்தது அவனுக்கு.

எப்போதும் அன்னையின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு அவர் பின்னோடு அலைந்து கொண்டிருப்பவளை அவ்வபோது சீண்டுவது தான் ஆதிசேஷனின் மிகப்பெரிய பொழுதுபோக்கு. அவள் தலைமுடியைப் பிடித்திழுப்பது, கன்னத்தை கிள்ளி விடுவது என்று எக்கச்சக்கமாக சேட்டைகள் செய்வான் அவன்.

அவனைப் பொறுத்தவரை அந்த வயதில் தேவாவின் இழப்பெல்லாம் பெரிதாக புரியவில்லை. “என்ன இப்போ? என் பாட்டி நல்லாதானே பார்த்துக்கறாங்க. இங்கே நல்ல இருக்காங்களே!” என்ற எண்ணம் தான்.

அழகான குடும்பம் அவர்களுடையது. அந்த வயதுக்கேயுரிய துடுக்குத்தனங்களுடன் ஆதிசேஷன் வளர்ந்து வர, யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்தேறியது அவன் தந்தையின் மரணம்.

தணிகைவேலின் மரணம் யாரை எப்படி பாதித்ததோ, ஆனால், அதிகமாக அடிபட்டவன் சேஷன் தான். அவனுக்கு அத்தனைக்கும் அவன் தந்தை வேண்டும். கலையரசி மழையைப்போல் அன்பை பொழிந்தாலும், ஒரு அளவிற்குமேல் அவன் வளர்ச்சிக்கு அவரால் ஈடு கொடுக்க முடியாது.

அவன் தேவைகள், அவன் பொழுதுபோக்குகள், அவனது ரசனைகள் என்று அத்தனையையும் பகிர்ந்துகொள்ள அவனுக்கு தந்தை வேண்டும். இயல்பாகவே ஆண் பிள்ளைகள், அதிலும் மூத்த பிள்ளைகள் அன்னையின் செல்லமாக இருக்கும் பொது விதிக்கு மாறுபட்டவனாக தந்தையின் செல்லமாக வளர்ந்தவன் அவன்.

அதுவும் தேவசேனா எந்த நேரமும் கலையரசியுடன் இருப்பதால், ஒரு வயதுக்கு மேல் இயல்பாகவே நெருங்க மாட்டான் அவன். அப்படிப்பட்டவனை தந்தையின் இழப்பு முற்றிலுமாக உடைத்துப் போட்டது.

அதிலும் அவர் இறப்புக்கு பின்னான நாட்களில் பிரகதீஸ்வரி அலுவலக பொறுப்பை கையில் எடுத்துக்கொள்ள, இயல்பிலேயே சற்றுக் கண்டிப்பானவர் பிரகதீஸ்வரி.

ஆதிசேஷனின் ஒவ்வொரு முடிவும் அதன்பின்னர் பிரகதீஸ்வரியின் விருப்பப்படி தான் எனும் நிலைக்கு வந்து நின்றது. பிறப்பிலேயே அழகன்தான் ஆதிசேஷன். பிரகதீஸ்வரிக்கும் பேரன் என்றால் பிடித்தம்தான். ஆனால், தெரியாது.

சேஷா என்றில்லாமல் தேவ், தேவா என்று அத்தனைப் பேரையும் விரட்டிக் கொண்டே தான் இருப்பார் அவர். இதில் அவரை ஏய்த்துவிடும் ஒரே ஆள் அவரின் பேத்திதான். அவருக்கே ‘பிரகா’ என்று செல்லப்பெயர் வைத்து அழைக்கும் அளவுக்கு அவளுக்கு மட்டுமே சுதந்திரம் இருந்தது.

உருவத்திலும் சரி, குணத்திலும் சரி தன்னைப்போலவே இருக்கும் பேத்தியிடம் ஒரு அளவுக்குமேல் கண்டிப்பை காண்பிக்க முடியாமல் திணறிப் போவார் பிரகதீஸ்வரி.

தேவ் பாட்டியின் கண்டிப்பாய் நல்லவிதமாகவே புரிந்துகொள்ள, அவனுக்கு அப்படியே நேர்மாறாக நின்றான் சேஷன். அவன் அதிகமாக புலம்பித் தள்ளுவதும் தேவ்விடம் தான்.

அவனுக்குள் அந்த வயது சிறுபிள்ளை கோபங்கள் இருந்துகொண்டே இருக்க, அவன் கல்லூரி சேர்க்கையின்போது அத்தனையும் மொத்தமாக வெடித்தது. சேஷன் தன் தந்தையிடம் விஸ்காம் படிப்பதற்கு ஏற்கனவே அனுமதி வாங்கியிருந்தான். அவனுக்கு இயல்பாகவே விளம்பரங்கள், மாடலிங் இதிலெல்லாம் ஆர்வம் அதிகம். அவன் பயணிக்க விரும்பியதும் அந்த துறையில் தான்.

ஆனால், பிரகதீஸ்வரி அவனை அவர் விருப்பத்திற்கு வளைக்க நினைக்க, முதல்முறையாக நேருக்கு நேராக முட்டிக் கொண்டனர் பாட்டியும், பேரனும்.

ஆனால், சேஷாவின் அத்தனைப் போராட்டங்களும் கலையரசியின் முன்னே வலுவிழந்து போக, கலையரசியை வைத்து எப்படியோ சேஷாவை வழிக்கு கொண்டு வந்துவிட்டார் பிரகதீஸ்வரி. கலையரசி கண்ணீருடன் மகனிடம் கெஞ்சவே ஆரம்பித்துவிட, அவரை மறுக்கமுடியாமல் அவன் பாட்டியின் விருப்பப்படி தொழிற்கல்வி கற்க சம்மதித்தான் சேஷன்.

ஆனால், இதை இப்படியே விடுவதில்லை என்று முடிவெடுத்தவனாக, லண்டனில் இருந்த ஒரு முக்கிய கல்லூரியில் அவன் விருப்பத்திற்கு தொழிற்படிப்புக்கு விண்ணப்பித்துவிட்டான். அவனுக்கு இப்படியே எப்போதும் பாட்டியின் கண்காணிப்பில், அவருக்கு கீழ் அவரது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ விருப்பமில்லை.

அவன் சென்னையில் இருந்த எந்த கல்லூரியிலும் விண்ணப்பிக்காததை அறிந்து பிரகதீஸ்வரி அவனை மீண்டும் அழைத்து விசாரிக்க, “நான் லண்டன் போகப் போறேன். காலேஜ் எல்லாம் ஓகேதான். கண்டிப்பா கிடைச்சுடும்.” என்றான் அறிவிப்பாக.

“யாரைக்கேட்டு நீ அப்ளை பண்ண சேஷா?”

“யாரைக் கேட்கணும்? நான்தானே படிக்கப் போறேன். நான் முடிவெடுத்தா போதும். நீங்க சொல்றதை படிக்கிறேனா, அதை மட்டும் பாருங்க.” என்று தீர்த்துப் பேசியவன் மீது கோபம் கொண்டவராக, பிரகதீஸ்வரி கலையரசியைப் பார்க்க,

“யார் சொன்னாலும் நான் கேட்கமாட்டேன் பாட்டி. நான் லண்டன் போறதா முடிவெடுத்துட்டேன். நீங்க அனுப்பி வச்சா படிப்பேன். இல்ல, உங்கப் பேரன் என்னைக்கும் +2 மட்டும்தான் படிச்சிருப்பான். யோசிச்சு முடிவை சொல்லுங்க.” என்றவன் அவனது வண்டிச்சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டான்.

அன்று இரவு எட்டுமணி அளவில் அவன் மீண்டும் வீடு வந்தபோது, “உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாது சேஷா. அம்மாவை யோசிக்க மாட்டியா நீ?” என்று கலையரசி கண்ணீர்விட,

“அப்போ என்னோட வந்திடுங்க.” என்றான் சேஷா.

“சேஷா…”

“ஏன் உங்க மாமியாரை விட்டுட்டு வர முடியாதா? இல்ல, உங்க மாமியார் விடமாட்டாங்களா?”

“என்னால தேவாவை தனியா விட்டுட்டு வர முடியாது சேஷா. தாயில்லாத பொண்ணு அவ. என்னோடவே இருந்து பழகிட்டா.”

“அவ ஒருவகையில லக்கிமா. அவ அம்மா இல்லாம போனாலும், நீங்க அம்மாவா இருக்கீங்க. ஆனா, எனக்கு அப்பா இல்ல. அவரை ரீப்லேஸ் பண்ணவும் யாரும் இல்ல. உங்களுக்கு தெரியுமா? அப்பாகிட்ட நான் விஸ்காம் படிக்க பெர்மிஷன் வாங்கி இருந்தேன். என் அப்பா இருந்திருந்தா…” என்றவன் தொண்டையடைக்க வார்த்தையை நிறுத்திக் கொண்டான்.

அதில் பதறியவராக கலையரசி, “சேஷா…” என்று மகனை நெருங்க, அவர் கையைப் பிடித்துக் கொண்டான் மகன்.

“எனக்கு இங்கே மூச்சடைக்குதும்மா. என்னை அனுப்பி வைங்க.” என,

“சரி நீ போ…” என்றுவிட்டார் கலையரசி. மகன் அன்னையை அணைத்துக்கொள்ள,

“நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் சேஷா. உன் பாட்டிக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அவங்களும் பாவம்தானே…” என்று மகனுக்கு கலையரசி எடுத்துக் கூற,

“எனக்கு தெரியும்மா.” என்று முடித்துக்கொண்டான் சேஷா.

அதன்பின் கலையரசியே பிரகதீஸ்வரியிடம் பேசி, மகன் வெளிநாட்டிற்கு செல்வதற்கு அனுமதி வாங்கித் தர, “தேறிட்டிங்க அத்தம்மா…” என்று தேவா கூட கிண்டலடித்துக் கொண்டிருந்தாள் அவரை.

ஆனால், “நீ தப்பான முடிவெடுக்கிற கலை. உன்னால அவனை விட்டுட்டு இருக்க முடியாது. என்னவோ பண்ணுங்க.” என்று விலகிக்கொண்டார் பிரகதீஸ்வரி.

ஆனால், அதெல்லாம் சிலநாட்கள் தான். பேரன் அன்று லண்டன் கிளம்புவதாக இருக்க, விமான நிலையத்திற்கு அவனை வழியனுப்ப வந்திருந்த பாட்டி அங்கேயே தாள முடியாமல் கண்ணீர்விட, அணைக்க வந்த பேரனை, “போடா… என் பக்கத்துல வராத. என்னை விட்டுட்டு போற இல்ல.” என்று செல்லமாக  அடித்தார் பாட்டி.

“நீங்க சொன்னதை தானே படிக்கபோறேன் பாட்டி.”

“நான் உன்னை என்னோட இருக்க சொன்னேன்…”

“படிச்சு முடிச்சுட்டு ஓடி வந்துடறேன். நான் வந்ததும் உங்களுக்கு ரெஸ்ட் தான்.” என்று உறுதி கொடுத்து கிளம்பினான் பேரன்.

பேரன் படிப்பில் கெட்டி என்பதால் அவனை குறித்து எந்த கவலையும் இல்லாதவராக தொழிலைக் கவனித்துக் கொண்டிருந்தார் பிரகதீஸ்வரி.

ஆனால், சொன்னதுபோலவே முதல் இரண்டு ஆண்டுகள் படிப்பில் கவனம் செலுத்தியவன், அதன்பின்னான நாட்களில் தன் கனவைத் தேட தொடங்கிவிட்டான்.

அங்கிருந்த முகங்களில் இருந்து மாறுபட்டிருந்த அவனது தோற்றம் அவனுக்கான வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க, ஓரிரு விளம்பரங்களிலும், சில பத்திரிக்கைகளின் அட்டைப்படங்களிலும் இடம்பெற்றான் அவன்.

அவன் மாடலிங்கில் மெல்ல மெல்ல வளர, அவனது படிப்பு இரண்டாம் பட்சமாகிப் போனது. மூன்றாண்டுகளில் வந்துவிடுவதாக சொல்லிச் சென்றவன் இந்தியா திரும்பாமல் ஐந்தாண்டுகளை லண்டனில் கழித்துவிட, அந்த நாட்களில் அவனுக்கு பழக்கமானவள் தான் அமிர்தா.

அவன் படித்த அதே கல்லூரியில் தான் படித்தாள் அவளும். தனது இருபதாவது வயதில் மேற்படிப்புக்காக லண்டன் வந்திருந்தாள் அவள். கல்லூரியில் அவ்வபோது கண்களில்படும் சேஷன் அவளது கவனத்தை ஈர்க்க, மெல்ல மெல்ல அவனுக்கு விசிறியாகிப் போயிருந்தாள் அமிர்தா.

அவன் தொடர்பான அத்தனை தகவல்களையும் தேடித் தேடி சேகரித்தவளுக்கு அவனைப் பற்றிய விவரங்கள் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. ‘சென்னை தானா இவரும்’ என்று பூரித்துக் கொண்டாள் அவள்.

அதன்பின்னான நாட்களில் அவளாகவே சேஷனிடம் முயன்று நட்பை வளர்த்துக் கொள்ள, அவர்களின் நட்பு ஓராண்டுக்குப் பின் காதலாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது.

தன்னையே சுற்றிவரும் அமிர்தாவை மறுக்க எந்த காரணமும் இல்லை சேஷனிடம். அதுவும் அவளின் தெளிவான பேச்சும், நடவடிக்கைகளும் அவளை தவறவிட வேண்டாம் என்று அறிவுறுத்த, பிடித்தேதான் அவளில் கரைய நினைத்தான் சேஷன்.

அவர்களின் காதல் மெல்ல மெல்ல வலுப்பெற, அமிர்தாவுக்கு பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை விளக்கவென்று, பல நேரங்களில் அவளது அறையில் தான் இருப்பான் சேஷா. முதலில் பாடம், படிப்பு, அவனது மாடலிங் என்று தொடங்கிய பேச்சு நாட்கள் நகர நகர அவர்களின் காதல், அன்பு என்று அவர்களை மையப்படுத்தி தொடங்கியிருக்க, அதன் விளைவு அவர்களின் காதல் அத்துமீற தொடங்கியது அவ்விடத்தில்.

Advertisement