Advertisement

மௌனமாய் எரிகிறேன் 11

அந்த பெரிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கலையரசி. ஏற்கனவே ஒருமுறை மாரடைப்பால் அவர் அவதிப்பட்டு, தேவாவின் கவனிப்பில் தான் மீண்டு வந்திருந்தார். இதோ இப்போது இரண்டாவது முறையாக மருத்துவமனையில் இருக்கிறார்.

மருத்துவர்கள் இன்னும் உறுதியாக எதையும் கூறாததால், பதட்டமாகத் தான் அமர்ந்திருந்தான் சேஷா. அன்னையை அங்கே அனுமதித்து ஒரு மணி நேரம் கடந்திருக்க, ஸ்ரீனிவாஸ் மட்டுமே துணையிருந்தான் அவனுடன்.

இருகைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அனாதரவாக அவன் அமர்ந்திருந்த நிலை யாரையும் கலங்கச் செய்யும். ஸ்ரீனிவாஸ் நண்பனின் துயரம் தாங்க முடியாமல் தான் தேவாவுக்கு அழைத்தது. இரண்டு முழு அழைப்புகளுக்குப்பின் மூன்றாவது அழைப்பை ஏற்று, செய்தியைக் கேட்டுக் கொண்டவள் பதில் எதுவும் கூறாமல் அழைப்பைத் துண்டித்து இருந்தாள்.

ஆனால், அவன் பேசி முடித்த பதினைந்து நிமிடங்களில் அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துவிட்டாள் அவள். தேவ்வை அழைத்து வராமல் அவள் மட்டும் தனியே வந்திருந்தாள். அவள் ஸ்ரீநிவாஸைக் கடந்து வேகமாக கலையரசி அனுமதிக்கப்பட்டிருந்த பகுதியை நெருங்க, அங்கே இருக்கையில் அமர்ந்திருந்தவன் அரவம் உணர்ந்தவனாக நிமிர்ந்து பார்த்தான்.

அந்த நிமிடம் அவனது வருத்தம் மொத்தமும் கோபமாக தேவாவின் மீது திரும்ப, வேகமாக எழுந்து நின்றான் அவன். தேவசேனாவின் கையைப் பிடித்திழுத்து அவள் வேகத்தை தடை செய்து, “உள்ளே இருக்கறது சேஷாவோட அம்மா. உனக்கு இங்கே வேலையில்ல.” என்றான் ஆத்திரத்தோடு.

தேவாவால் அவன் நிலையை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. எனவே நிதானித்தவளாக, “கையை விடுங்க.” என்றாள் பொறுமையாக.

சேஷா அவளின் அமைதியான அணுகுமுறையில் இன்னும் தூண்டப்பட, “நீ என் அம்மாவை பார்க்கவே வேண்டாம். கிளம்புடி.” என்றான் சத்தமாக.

ஸ்ரீனிவாஸ், “சேஷா…” என்று வேகமாக அவர்களை நெருங்க, தேவா திரும்பி அவனைப் பார்த்த பார்வையில் அப்படியே நின்றுவிட்டான். அவள் பார்வை அவனது எல்லை எது என்பதை மீண்டும் ஒருமுறை அவனுக்கு தெளிவுபடுத்தியது.

தேவா சேஷாவைப்போல் பதட்டமோ, ஆத்திரமோ எதுவுமில்லாமல் வெகு நிதானமாக களமாடினாள்.

“உனக்கு அம்மாவா இருக்கலாம். ஆனா, என் பாட்டி என்னை நம்பி தான் அவங்களை விட்டுட்டு போயிருக்காங்க. இப்போ நான் அவங்களோட இருக்கணும். நான் வெளியே போகணும்ன்னா, அதை அவங்க வந்து சொல்லட்டும். நீ சொல்லாத.”

“நீ விட்டுட்டு போனதால தான் என் அம்மாவுக்கு இந்த நிலை.” என்று சேஷா குற்றம்சாட்ட,

“இருக்கட்டுமே… நீ அவங்க பையன் தானே. நான் போனா என்ன, நீ இருக்கேன்னு ஏன் அவங்க தைரியமா இல்ல? அந்த நம்பிக்கையை உன்னால ஏன் கொடுக்க முடியல? ஒரு மகனா அவங்களுக்கு இதுவரைக்கும் என்ன செய்திருக்க நீ? அவங்கள அதிகமா அழ வச்சதே நீதான். அவங்க இந்த நிலைக்கு வர முக்கிய காரணம் நீ… இப்பவும் நீ தப்பிக்கிறதுக்காக அடுத்தவங்க மேல பழி போடத்தான் பார்க்கிற சேஷா…”

“உன்னோட தப்பெல்லாம் உனக்கு எப்போ புரியும்? உன்னை சுற்றி இருக்கறவங்க அத்தனைப் பேரையும் உயிரோட எரிச்சுட்டு இருக்க நீ… உனக்கு அது புரியுதா?” என்று அழுத்தமாக, அமைதியாக தேவா கேட்டாலும், அவள் கண்களில் மட்டும் ஆக்ரோஷமும், ஆவேசமும் மிகுந்திருந்தது.

சேஷா கல்லென நின்றுவிட, “பதில் சொல்ல முடியலை இல்ல. வெளியே போயிடு.” என்று ஒருவிரல் நீட்டி அவனை மிரட்டிவிட்டு, விலகி நடந்தாள் தேவசேனா.

கலையரசியை முதலில் சென்று பார்த்துவிட்டு, அதன்பின் அவரை கவனித்துக் கொண்டிருந்த மருத்துவரிடமும், அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடமும் கலையரசன் உடல்நிலையை விளக்கி கூறியவள், முன்பு அவருக்கு செய்த சிகிச்சை விவரங்களையும் பகிர்ந்து கொண்டாள்.

அத்தனையும் நடக்கும்போது, சேஷாவும் உடனிருக்க, அவள் அளவு எந்த விவரமும் தெரியாது அவனுக்கு என்பதுதான் உண்மை. கலையரசி ஏற்கனவே ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது மட்டும்தான் அவன் அறிந்தது.

தேவசேனா பேசிய வார்த்தைகளை விட அந்த நிமிடங்கள், அவனது அறியாமை அவனை மிகக் கேவலமாக உணர வைத்தது. ‘இனி தேவா பார்த்துக் கொள்வாள், சென்றுவிடு’ என்று அவனது மூளை அவனை விரட்ட, மனது கேட்கவில்லை.

முதல்முறையாக மனதின் குரலுக்கு மதிப்புக் கொடுத்து, அமைதியாக தன்னுடைய பழைய இருக்கையில் அமர்ந்துவிட்டான். தேவா அவனை ஏறெடுத்தும் பாராமல், கண்களை மூடி இருக்கையில் சாய்ந்திருந்தாள். அரைமணி நேரம் அப்படியே கழிய, தேவ் வந்துவிட்டான்.

அவன் பல்லவியையும் உடன் அழைத்து வந்திருக்க, “குழந்தையை விட்டுட்டு நீ ஏன் வந்த?” என்று கடிந்து கொண்டாள் தேவா.

“உன்னை தனியா விட்டுட்டு அங்கே என்னால நிம்மதியா இருக்கமுடியாது. குழந்தையை மலர்கிட்ட கொடுத்துட்டேன். அவ பார்த்துப்பா.” என்றாள் பல்லவி.

“அத்தை எப்படி இருக்காங்க தேவா?” என தேவ் கேட்க,

“இருக்காங்க… அதுமட்டும்தான் சொல்ல முடியும் இப்போ.” என்றாள் சோர்வுடன்.

தேவ் அவள் தலையை தடவிக் கொடுத்து, “சரியாகிடுவாங்க தேவா… இப்படி இருக்காத.” என, கண்களை மூடியபடியே தலையசைத்தாள் தேவசேனா.

தேவ்-பல்லவி இருவருமே அங்கு அமர்ந்திருந்த சேஷாவை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அப்படி ஒருவன் அங்கிருப்பதை உணராதது போலவே நடந்து கொண்டனர் இருவரும்.

சிலமணி நேரங்களுக்குப் பின் கலையரசிக்கு விழிப்பு வர, அவர் தேடியதும் அவரது மருமகளைத் தான். கண்விழித்த நிமிடம் அங்கிருந்த யாரையும் தேடாமல், “தேவா…” என்றே தவித்தது அவர் குரல்.

“இருக்கேன் அத்தம்மா…” என்று அவள் அவரது கையைப் பிடித்துக் கொள்ள,

“மன்னிச்சிடுடா…” என்று கூறுவதற்கே அத்தனை சிரமப்பட்டுவிட்டார் அவர்.

“நான் உங்களோடவே இருப்பேன். சீக்கிரம் வந்திடுங்க.” என்று தேவா மென்மையாக அவர் கையில் அழுத்தம் கொடுக்க, அதில் நிம்மதி கொண்டவராக மீண்டும் கண்களை மூடிக் கொண்டார் கலையரசி.

தன்னைச் சுற்றி அத்தனைப் பேர் இருந்தும் யாருமில்லாமல் தனியனாக நிற்பது எத்தகைய கொடுமை என்பதை அன்று பரிபூரணமாக அறிந்துகொண்டான் ஆதிசேஷன். அங்கிருப்பது அத்தனையும் அவன் உறவுகள். அவன் அலட்சியப்படுத்தியும் பலமுறை மீண்டும் மீண்டும் அவனைத் தேடி நின்ற உன்னதங்கள் ஒவ்வொன்றும்.

இன்று அத்தனையும், அவன் தாய் முதற்கொண்டு அவனை தூக்கியெறிந்திருக்க, புறக்கணிக்கப்படுவதின் வலி இப்படி இருக்குமென்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை அவன்.

அவன் தன்னையே ஆராய்ந்தவனாக நிற்க, “நீ வீட்டுக்கு கிளம்பு தேவ். நான் இங்கே அத்தையோட இருக்கேன்.” என்றாள் தேவா.

“என்ன விளையாடறியா?” என தேவ் முறைக்க,

“பாப்பாவை விட்டுட்டு அவ இங்கே இருப்பாளா? கூட்டிட்டு கிளம்பு. மார்னிங் வா.” என்று அதட்டினாள் தங்கை.

பல்லவி, “உன்னை விட்டுட்டு வந்து அவர் நிம்மதியா இருப்பாரா? அவர் இருக்கட்டும். நான் வீட்டுக்கு போறேன்.” என்றாள் பல்லவி.

“நீ தனியா எப்படி இருப்ப? நீ கிளம்பு தேவ். நான் தேவையிருந்தா கூப்பிடறேன். கிளம்பு.” என தேவா முடிக்க, எப்போதும் அவளை மறுத்துப் பேசாதவன் அன்று மறுப்பாக தலையசைத்தான்.

“உன்னை இங்கே விட்டுட்டு நான் போக மாட்டேன். பல்லவியை மலர் வீட்ல விட்டுட்டு வரேன். அவ இருந்துப்பா.” என்று மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் தேவ்.

சேஷா அவர்களுக்கு முன்பே வெளியே சென்றிருக்க, இப்போது தேவா மட்டும்தான் இருந்தாள் கலையரசியுடன்.

கலையரசியுடனான அவளது வாழ்க்கை அத்தனை அழகானது. அவள் அன்னை இறக்கும்போது கிட்டத்தட்ட ஒரு மூன்று வயது இருந்திருக்கலாம் அவளுக்கு.

அந்த வயதில் அன்னையின் இழப்பு என்பதெல்லாம் கொடுமையில்லாமல் வேறென்ன? ஆனால், தேவா ஒருநாளும் தன் அன்னையை தேடியதே இல்லை. அவள் அன்னை இறந்து அவர் காரியம் முடியும்வரை தான் சோர்ந்திருந்தாராம் பிரகதீஸ்வரி.

அவள் அன்னையின் காரியம் முடிந்து தேவசேனாவையும், சத்யதேவையும் கேட்டு அவள் தந்தை வந்து நிற்க, அப்போதே முற்றிலுமாக தெளிந்து விட்டாராம். வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மகளை பிரபாகரனுக்கு கட்டிக் கொடுத்திருந்தார் பிரகதீஸ்வரி.

நல்ல வாழ்க்கைதான். தேவாவின் அன்னை வானதியும், பிரபாகரனும் அந்நியோன்யமான தம்பதிகள் தான். யாருமில்லாத தனிமை அவர்களின் புரிதலை பலமடங்கு அதிகரித்திருக்க, கணவரின் விருப்பம் அறிந்து செயல்படும் வானதியின் மீது அளவில்லா காதல் கொண்ட கணவர் தான் பிரபாகரன்.

அவர்களின் ஆறாண்டு திருமண வாழ்வுக்கு சாட்சியாக, தேவ்வும், தேவாவும் கண்களை நிறைக்க, அழகான இல்லறம் அவர்களுடையது. இந்த ஆறு வருடங்களில் பலமுறை மகளை இந்தியா வரும்படி அழைத்து, களைத்துப் போனவராக பிரகதீஸ்வரி தான் இரண்டுமுறை அமெரிக்கா சென்று வந்திருந்தார்.

இரு குழந்தைகளின் பிரசவத்தின்போதும் பிரகதீஸ்வரி அழைத்தபோதும், கணவரைப் பிரிய மனமில்லாதவராக பிடிவாதமாக அன்னையை தன்னுடன் அழைத்துக் கொண்டார் வானதி.

வாழ்வு எப்போதும் வசந்தத்தை மட்டுமே பரிசளிப்பதில்லையே. கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதை தானே. வசந்தகாலம் சில நேரம் வந்தாலும், புயலடிக்கும் நேரங்களும் இல்லாமல் இல்லையே.

பிரபாகரனுக்கு அப்படிப்பட்ட நேரம் போலும். எப்போதும் போலவே காலையில் மனைவியின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு விடைபெற்றுச் சென்றிருந்தார் அவர். மனைவிக்கு கார் ஓட்டுவதற்கு கற்றுக்கொடுத்திருக்க, பிள்ளைகளை எப்போதும் வானதி தான் பள்ளிக்கு அழைத்துச் செல்வது.

அன்றும் வழக்கம்போல் பிள்ளைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவரின் கார், எதிர்பாராமல் ஒரு விபத்தில் சிக்கியிருக்க, மற்றவர்கள் நெருங்கும் முன்பே வானதியின் உயிர் பிரிந்திருந்தது.

விஷயம் கேள்விப்பட்டு விரைந்து வந்த பிரபாகரன் கண்டது உயிரில்லாத தன் மனைவியின் உடலைத்தான். அவருக்கு தன் சோகத்தை பார்ப்பதா? பிள்ளைகளை பார்ப்பதா? என்று புரியாத நிலை. தீந்து போனவராக அமர்ந்துவிட்டவர் தனது மாமியாருக்கு அழைத்துவிட்டிருந்தார்.

விஷயத்தை பிரகதீஸ்வரியிடம் கூறியதுமே, அவர் மகனை வைத்து அத்தனை காரியங்களையும் செய்து முடித்ததில் மூன்று நாட்கள் கழித்து இந்தியா வந்தது வானதியின் உடல். பிரகதீஸ்வரிக்கு மகள் மட்டுமே தெரிய, வேறெதிலும் கவனம் கொள்ளவில்லை அவர்.

ஆனால், காட்சிகள் நம்மை அப்படியே விடுவதில்லையே. தாயில்லா இரு பிள்ளைகள் ஆங்காங்கே தயங்கியபடி நிற்பது அவரின் கண்களில்பட, முயன்று தெளிந்துவிட்டார் அவர்.

தன் சோகத்தையெல்லாம் ஒதுக்கியவராக பிள்ளைகளை அவர் தன்னுடன் இருத்திக் கொள்ள, பிரபாகரன் வீட்டிற்கு நிம்மதி தான். பின்னே, மகனின் வாழ்க்கை இப்படியே நின்றுவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தனரே அவர்கள்.

பிரபாகரன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் பிள்ளைகளை அழைத்துச் செல்வதில் விருப்பம் இல்லை. பிரபாகரனும் முதலில் மறுத்தவர், பின் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவர்களை பிரகதீஸ்வரியிடமே ஒப்படைத்துவிட்டார்.

தன் வீட்டிற்கு வந்தவரை சொந்தங்கள் ஆளுக்கொன்றாக கூறி அவதிப்படுத்த, மனைவி இறந்த ஒரே மாதத்தில் மீண்டும் அமெரிக்கா சென்றுவிட்டார் அவர். அவர் வீடு தொடர்பை முற்றிலுமாக முறித்துக் கொண்டவர் அவ்வபோது பிரகதீஸ்வரியிடம் பேசி பிள்ளைகளின் நலன் விசாரித்துக் கொள்வார்.

பிரகதீஸ்வரி என்று ஒருவர் இல்லாமல் போயிருந்தால், தேவ்வும், தேவாவும் ஒன்றுமில்லாமல் போயிருப்பர். பிரகதீஸ்வரி பிள்ளைகளைத் தன்னுடன் இருத்திக் கொண்டதில் கலையரசியின் பிறந்த வீட்டிற்கு சுத்தமாக விருப்பமில்லை. தங்கள் பெண் இவர்களுக்கு ஏன் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான்.

சில சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே அவர்கள் கூறிவிட, தனது மகன் தணிகைவேலனை அழைத்து பேசினார் அவர். தணிகைவேல்- கலையரசியை தனியாக சென்றுவிடும்படி அவர் வற்புறுத்த, முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார் தணிகைவேல்.

கலையரசி அப்போதுதான் சுதாரித்துக் கொண்டது. தன் பிறந்த வீட்டு சொந்தங்களை ஓர் எல்லையில் நிறுத்த அவர் பழகிக் கொண்டதும் அப்போதுதான். ஆனால், அவர் என்னதான் செய்தபோதும், பிரகதீஸ்வரி மட்டும் பிள்ளைகளின் பொறுப்பை கலையிடம் கொடுக்கவில்லை.

பேரப்பிள்ளைகளுக்கான அத்தனையும் அவர்தான் பார்த்து பார்த்து செய்வார். இங்கே பேரப்பிள்ளை என்பது ஆதிசேஷனையும் சேர்த்து. மூவருக்கும் பிரகதீஸ்வரியிடம் பிரியம் அதிகம்.

கலையரசியின் சுபாவத்திற்கு இந்த புறக்கணிப்பை தாள முடியாமல் துவண்டு போனார் அவர். சில நாட்களிலேயே அவர் காய்ச்சலில் விழ, மாமியார் கவனித்தபோது தனது மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டார்.

“அந்த தாயில்லா பிள்ளைகளை நான் என்ன செஞ்சிடுவேன்னு என்னை தள்ளி வைக்கறீங்க அத்தை.?” என்று கண்ணீருடன் அவர் கேட்டு நிற்க, “பைத்தியம்…” என்று தலையில் தட்டி மருமகளை அணைத்துக்கொண்டார் பிரகதீஸ்வரி.

அதன்பின்னான நாட்களில் பிள்ளைகளை கலையரசி கவனித்துக்கொள்ள, கலையிடம் அதிகமாக ஒட்டிக்கொண்டது தேவசேனா தான். தேவ் அத்தை என, சேஷா அம்மா என்பான். இதில் எதைச் சொல்லி அழைப்பது என்று குழம்பியவளாக, “அத்தம்மா…” என்று தேவா மழலை மாறாமல் அழைப்பது அத்தனைப் பிடித்தம் கலையரசிக்கு.

தேவசேனாவுக்கும் கலையரசியை பிடிக்கும். அவளின் பெரும்பாலான நேரங்கள் கலையரசியுடன் கழிந்தாலும், தேவசேனாவின் குணங்கள் அனைத்தும் அப்படியே பிரகதீஸ்வரியைக் கொண்டு தான். இயல்பாகவே அந்த ஆளுமைக்குணம் அவளுக்குள் இருந்தது.

கலையரசி தன் விருப்பத்திற்கு ஒரு ஆசிரியரை வைத்து அவளுக்கு பாட்டும், நடனமும் கற்பிக்க, தேவா அவள் விருப்பத்திற்கு கிட்டார் வாசிப்பது, நீச்சல் பழகுவது, கராத்தே, டேக்வாண்டோ, என்று அவளுக்கு பிடித்த பலதும் கற்றுத் தேர்ந்திருந்தாள்.

பிள்ளைகள் அழகாக வளர்ந்துவர, சேஷா அவனது மேல்நிலை வகுப்பில் சேர்ந்த நேரம், மீண்டும் ஒரு இடியாக நிகழ்ந்தது தணிகைவேலின் மரணம். வேலை வேலை என்று ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தவர் ஓய்வெடுக்க நினைத்தாரோ என்னவோ, அத்தனை சீக்கிரத்தில் அவர்களை விட்டு விலகியிருந்தார் அவர்.

பிரகதீஸ்வரி மொத்தமாக உடைந்து போனாலும், தன் முகம் பார்த்து நின்ற தன் பேரப்பிள்ளைகளையும், சுற்றம் உணராமல் பேதலித்தவராக நின்ற கலையரசியையும் கண்டு மீண்டும் ஒரு முறை மீண்டெழுந்தார் பிரகதீஸ்வரி.

தொழிலை தன் கையிலெடுத்துக் கொண்டவர் வீட்டு நிர்வாகத்தை மருமகளிடம் ஒப்படைத்தார். மாமியாரின் போதனைகளில் கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்த கலையரசி தானும் பிரகதீஸ்வரிக்கு உறுதுணையாக இருக்க, பிரகதீஸ்வரி முழுமையாக தொழிலில் கவனம் செலுத்தினார். இன்னும் மூன்று வருடங்கள் பேரன் படித்துவிட்டு தொழிலுக்கு வந்துவிடுவான் என்ற காத்திருப்புடன் அவர் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்த நேரம், வெளிநாடு செல்வதாக வந்து நின்றான் ஆதிசேஷன்.

Advertisement