Advertisement

மௌனமாய் எரிகிறேன் 10

ஆதிசேஷன்- தேவசேனாவின் வாழ்க்கையை சமூக வலைத்தளங்கள் அக்கு வேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருக்க, தொலைக்காட்சிகளிலும் அவ்வபோது செய்திகள் வெளியாகிக் கொண்டே தான் இருந்தது. அதிலும் சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே மௌனம் சாதித்ததில், ஊடகம் சொல்வது அனைத்தும் உண்மை என்றே நம்பப்பட்டது.

அவரவரின் ஊகங்கள் அடிப்படையில், இப்படி நடந்திருக்கலாம், இதற்காக இருக்கலாம் என்று ஆயிரம் காரணங்கள். விஷயம் ஆத்மீயை மட்டும் தொட்டதோடு நிற்காமல், சேஷாவின் முன்னாள் காதலி அமிர்தாவையும் குற்றம் சாட்டியது.

தேவசேனாவின் நலம் விரும்பிகள், அவளால் பயனடைந்தவர்கள் என்று பலரும் அவளுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை கூறிக் கொண்டிருக்க, நேற்று விருது விழாவில் இருந்து அவள் பாதியில் கிளம்பியது வேறு, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டே இருந்தது.

தேவசேனாவுக்கான ஆதரவும், அனுதாபமும் அளவுக்கதிகமாக இருக்க, இது எதைப்பற்றியும் கவலையில்லாதவளாக, வேறு சில வேலைகளில் மூழ்கி இருந்தாள் அவள்.

அவள் நேற்று அலைபேசியில் பேசியிருந்த அனைவரிடமும் நேரிலும் ஒருமுறை பேசி, அவர்களிடம் ஒப்படைத்திருந்த வேலைகளை முடித்து வாங்கிக்கொண்டு, அதை சரிபார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

அத்தனையும் கச்சிதமாக இருக்க, இதற்குமேல் தயங்குவதாக இல்லை பெண். தன்னைச் சுற்றி பூட்டியிருந்த அத்தனை தளைகளையும் தகர்த்தெறிய தயாராகிவிட்டாள் அவள்.

நேற்றிலிருந்து கலையரசி வேறு விடாமல் அழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், என்னவோ மொத்தமாக வெறுத்த நிலைக்கு வந்திருந்தாள். அவர் அழைப்பை ஏற்று, அவர் அறிவுரை என்ற பெயரில் எதையாவது பேசி வைத்தால், நிச்சயம் தன்னால் அமைதியாக இருக்க முடியாது என்பதால் அவரைத் தவிர்த்து விட்டாள்.

அவர் ஒருபுறம் என்றால், மறுபுறம் சத்யதேவ். அவன் அழைப்புகளையும் ஏற்காமல் தான் அமர்ந்திருந்தாள் தேவசேனா. அவன் நேரில் தேடி வந்தபோதும், அவனைச் சந்திக்க மறுத்து துரத்தி விட்டிருந்தாள்.

இதில் அவளின் எந்த ஆணைக்கும் கட்டுப்படாமல் அவளுடனே சுற்றிக் கொண்டிருந்தது மலர்விழி ஒருத்திதான். தேவா கடுமையாக எச்சரித்தபின்னும் இருந்த இடத்தை விட்டு அசையாதவளாக அவளுடனே அமர்ந்திருந்தாள் மலர்விழி.

அன்று மாலை வரை அலுவலகத்தில் இருந்தவள் அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகள் அனைத்தையும் முடித்தபின்பே எழுந்து கொண்டாள். தனது அலுவலக அறையை வலியுடன் ஒருமுறை பார்வையால் வருடிக் கொடுத்து, அங்கிருந்த தன் பாட்டியின் நிழற்படத்தின் முன் இரண்டு நிமிடங்கள் கண்மூடி நின்றவள் அதன்பின்பே அங்கிருந்து கிளம்பினாள்.

கிளம்பும் நேரம், “நாளைக்கு மார்னிங் தேவோட கம்பெனிக்கு போயிடு மலர். இனி இந்த ஆபிஸ்க்கு நீ வர வேண்டி இருக்காது.” என, தோழியை அழுத்தமாக அணைத்து கொண்டாள் மலர்.

“வேண்டாம் மலர். என்னை பலவீனப்படுத்தாத.” என்று அவள் அணைப்பிலிருந்து விலகிக் கொண்டாள் தேவசேனா.

“ஏன் தேவா இப்படி ஒரு முடிவு? சேஷா வேண்டாம்ன்னு சொல்றது சரி. ஆனா, இப்போ நீ செய்ய நினைக்கிறது ரொம்ப பெரிய விஷயம். நீ எங்கேயிருந்து மீட்டுக் கொண்டு வந்தாயோ, கிட்டத்தட்ட அதே இடத்துக்கு போய்டும். இது பெரிய ரிஸ்க். இந்த சேஷா க்ரூப்ஸ் ஒன்னுமில்லாம போறதை நிச்சயமா உன்னால பார்க்க முடியாது தேவா.” என்று தன் தோழியை அறிந்தவளாக அறிவுரை கூறினாள் மலர்விழி.

“இதையெல்லாம் பார்க்க நான் இருக்கணும் இல்ல மலர்.” என்று ஒரே வரியில் பதில் கொடுத்தவளிடம், என்னவென்று மலர் வாதிட முடியும்?

மலரின் அமைதியில் புன்னகைத்தவளாக, தேவசேனா தனது காரில் ஏறிக்கொண்டாள். அவள் கையில் இருந்த லேப்டாப் பையுடன் அவள் தனது வீட்டை அடைய, அவளுக்கு முன்பே அவளது வழக்கறிஞர் வந்து அமர்ந்திருந்தார் அங்கே.

தேவசேனாவைக் காணவும் எழுந்து நின்றவர், “மேம்… நீங்க சொன்னபடியே எல்லாம் ரெடி பண்ணிட்டேன் மேம்.” என்று தனது கையிலிருந்த கோப்புகளை அவளிடம் கொடுக்க, அதை வாங்கி டீப்பாயின் மீது வைத்துவிட்டு, அவரை வழியனுப்பினாள் தேவா.

கலையரசி வழக்கறிஞர் செல்லும் வரை அமைதியாக நின்றவர், அவர் தலை மறையவும், “என்ன விஷயம் தேவா? எதுக்காக அவரை வர சொன்ன? முதல்ல நேற்றிலிருந்து ஏன் வீட்டுக்கு வரல?” என்று கேள்விகளாக அடுக்கினார் கலையரசி.

ஆனால், அவரது எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காமல், “உங்க பையனை வீட்டுக்கு வர சொல்லுங்க?” என்றாள் தேவா.

“அவன் நேத்துல இருந்து வீட்டைவிட்டு எங்கேயும் போகல தேவா. நான் கேட்டது உன்னைப்பத்தி…” என்று கலையரசி அதட்ட,

“உங்க மகனை வர சொல்லுங்க.” என்று சோஃபாவில் அமர்ந்துவிட்டாள் அவள்.

அவளின் நடவடிக்கைகள் புரியாமல், கலையரசி தன் மகனை  தொலைபேசியில் அழைக்க, அடுத்த சில நிமிடங்களில் கீழே வந்தான் சேஷா.

அந்த ஒற்றைச் சோஃபாவில் கொஞ்சமும் வருத்தமோ, உளைச்சலோ, கவலையோ, குறைந்தபட்சமாக கோபமோ எதையும் வெளிப்படுத்தாமல் நிச்சலனமாக அமர்ந்திருந்த தேவசேனா நிச்சயம் சவாலாகத் தான் தெரிந்தாள்.

அந்த நிலையிலும் அவளது கம்பீரமும், ஆளுமையும் குறையாமல் இருப்பதைக் கண்டு வியப்படைந்தாலும், அவளைப் போலவே உணர்ச்சி துடைத்த முகத்துடன் தான் வந்து நின்றான் சேஷா.

தேவசேனா தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து நின்றவள் தன் அலுவலக பையில் இருந்து ஒரு பாத்திரத்தை எடுத்து நீட்டினாள் அவனிடம்.

சேஷா அதைக் கையில் வாங்காமல் தயங்கி நிற்க, “டிவோர்ஸ்… நீங்க கேட்டது தான், இப்போ நான் கொடுக்கிறேன்.” என,

“தேவாம்மா…” என்று அதிர்ந்து போனவராக அலறினார் கலையரசி.

“பேசிட்டு வரேன்.” என்று அவரிடம் கூறியவள், மீண்டும் சேஷாவிடமே திரும்பினாள்.

“நாலு வருஷத்துக்கு முன்னாடியே கொடுத்திருக்கணும்… தப்புதான்… ஆனா, இதுக்குமேல இப்படி போலியா நடிச்சுட்டு இருக்க முடியாது. அதோட, என் வாழ்க்கையை யாரோடவும் பங்கு போட எனக்கு விருப்பமில்ல. இதுல நான் சைன் பண்ணிட்டேன். நீங்களும் சைன் பண்ணிட்டா பைல் பண்ணிடலாம்.”

“இன்னொரு விஷயம்… நான் பிரகதீஸ்வரியோட பேத்தி. என் பாட்டிக்கு கொடுத்துதான் பழக்கம். அவங்க பேர் என்னால கெட்டுப் போனதா இருக்க வேண்டாம்.” என்று டீபாயில் இருந்த கோப்புகளை சுட்டிக் காட்டினாள் தேவா.

“உங்க சேஷா க்ரூப்சோட மொத்த சொத்து விவரமும் இங்கே இருக்கு. பாட்டி என் பேருக்கு எழுதிக் கொடுத்த பேப்பர்ஸ்… இந்த நாலு வருஷத்தோட வரவு, செலவு, லாபம், நஷ்டம், எல்லாமே இதுல இருக்கு. இனி எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதுக்கான பேப்பர்ஸ் இது.” என்று மற்றுமொரு பத்திரத்தையும் அவனிடம் கொடுத்தாள் அவள்.

“நான் ஏமாத்திட்டதா நீங்க சொன்ன உங்களோட ப்ராபர்ட்டிஸ் எல்லாமே இனி உங்களோடது. நியாயமா, இந்த வீட்டு பெண் வாரிசான என் அம்மாவுக்கான பங்கையும் நான் உனக்கே கொடுத்து இருக்கேன். தேவ் எப்பவும் இதெல்லாம் கேட்டு இங்கே வந்து நிற்கமாட்டான்.”

“உன் பரம்பரை சொத்து, உன்னோட பணம், புகழ் எதுவும் தேவையில்ல எனக்கு. நீ கேட்டது அத்தனையும் உன்கிட்ட கொடுத்துட்டேன். இனி உனக்கும் எனக்கும் எதுவும் இல்ல. ” என்றவள் சற்றும் தயங்காமல் தன் கழுத்திலிருந்த தாலிச் சங்கிலியை கழட்டி அதே டீபாயில் வைத்துவிட்டாள்.

“என்ன வேலை செய்யுற தேவா நீ?” என்று அவள் கையைப் பிடித்து உலுக்கியெடுக்க,

“என் பாட்டி அத்தனை ஆசையா நடத்தி வச்ச கல்யாணம். ஏதோ ஒரு வகையில அர்த்தம் இருக்கறதா நினைச்சு தான் இத்தனை நாளும் சுமந்திட்டு இருந்தேன். அப்படி எதுவுமே இல்லன்னு இப்போ புரிஞ்சிடுச்சு. இனியும் என்னால முடியாது.” என்றாள் தேவசேனா.

“இது தப்புடா.. நம்ம வீட்டு பொண்ணு நீ. நீ இப்படி பண்ணலாமா?”

“நாந்தான் ஒழுக்கமில்லாதவளாச்சே… உங்க மகனுக்கு நான் தேவையில்ல. நல்ல பொண்ணா, உங்க மகனோட மனசை புரிஞ்சு நடக்கிறவளா பார்த்து கட்டி வைங்க.” என்றாள் அலட்டாமல்.

“என்ன பேசுற தேவா. அவன் என் மகன்னா நீ யாரு? உன்னை விட்டுட்டு வேறொருத்தியை நானே கட்டி வைக்கணுமா… புரிஞ்சுதான் பேசறியா?” என்றார் கலையரசி.

“நான் ஆதிசேஷனோட அம்மாகிட்ட பேசிட்டு இருக்கேன். புரியுது எனக்கு.” என்று ஒற்றை வரியில் கலையை வாயடைக்கச் செய்தாள் தேவசேனா.

“தேவாம்மா நான் அது ஏதோ கோபத்துல பேசினதுடா.”

“நான் அதை தப்புன்னு சொல்லலையே. ஆனா, எனக்கு அம்மா இருந்திருந்தா, என்னைப்பத்தியும் யோசிச்சு இருப்பாங்க இல்ல. அட்லீஸ்ட் என் வாழ்க்கை ஏன் இப்படியாச்சுன்னு கவலைப்பட்டு இருப்பாங்க.” என்றாள் வலியுடன்.

சேஷா அவள் பேச்சில் இருந்த வழியை உணர்ந்தவனாக மௌனம் சாதிக்க, “எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்ல. எனக்கு உங்க மகனோட வாழப் பிடிக்கல. இவர் மேல குறைந்தபட்ச ஈர்ப்புகூட வரல எனக்கு. அது என்னோட தப்பு இல்லையே.”

“அதோட நீங்க சொன்னபடி, கட்டில்ல உங்க மகனுக்கு பொண்டாட்டியா இருந்து எதையும் சாதிக்கவும் என்னால முடியாது. அவரே யாருன்னு தெரியாத அளவுக்கு குடிச்சு இருந்தாலும், அவரோட அம்முவை அவர் மறக்கவே இல்ல. அப்புறம் என்னை எப்படி உங்க மகனோட குடும்பம் நடத்த சொல்றிங்க?” என்று கண்களைப் பார்த்து கேள்வி கேட்டவளுக்கு பதில் கொடுக்க முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் கலையரசி.

“அன்னைக்கு உங்களுக்காகவும், பாட்டிக்காகவும் தான் என் வாழ்க்கையை உங்ககிட்ட கொடுத்தேன். இன்னைக்கு எனக்காக, என் வாழ்க்கையோட முடிவை நான் எடுக்கிறேன். எனக்கு இந்த உறவு வேண்டாம்.” என்று அழுத்தமாக அவள் கூறிய நேரம், “தேவா…” என்றபடி வந்து நின்றான் சத்யதேவ்.

அங்கு நடந்த விஷயங்களைப் பற்றி ஒருவார்த்தைக்கூட அவனிடம் எதுவும் பேசவில்லை தேவா. “வெய்ட் பண்ணு.” என்றபடி படிகளில் ஏறினாள் அவள்.

கலையரசி, “தேவ்…” என்று அழுகையுடன் சத்யதேவை நெருங்க, உண்மையில் ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. அவன் விழிப்பிலிருந்தே இன்னும் அவனுக்கு விஷயம் தெரிவிக்கப்படவில்லை எனப் புரிந்து கொண்டான் சேஷா.

கலையரசி, “தேவ்…” என்று அவன் தோள் சாய்ந்து அழுகையைத் தொடர, அப்போதுதான் அந்த டீபாயில் இருந்த பத்திரங்களையும், தங்கையின் தாலிச் சங்கிலியையும் பார்த்தான் தேவ்.

அத்தையின் அழுகைக்கான காரணம் புரிந்துவிட, அவருக்கு ஆறுதல் சொல்லும் எண்ணம் வரவே இல்லை அவனுக்கு. இனியாவது அவள் வாழ்வு வளமாகட்டும் என்ற நினைப்பு தான்.

ஒரு அண்ணனாக தங்கையின் இந்த முடிவு அத்தனை நிம்மதியாக இருந்தது சத்யதேவுக்கு.

தன் மீது சாய்ந்திருந்த கலையரசியை தள்ளி நிறுத்தியவன், “தேவாவைப் பார்த்துட்டு வரேன் அத்தை.” என்று அவசரமாக படிகளில் ஏறினான்.

கலையரசிக்கு அப்போதுதான் அவன் அழைப்பு சுருக்கென தைத்தது. தேவாவின் அத்தம்மாவை கடைசியாக எப்போது கேட்டோம் என்று யோசிக்கத் தொடங்கிவிட்டார் அவர். கிடைத்த பதில் ஊசியாக அவர் நெஞ்சை துளைத்தெடுக்க, நெஞ்சை பிடித்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்துவிட்டார் கலையரசி.

இங்கே தேவ் தங்கையின் அறைக்கு வர, தன் பாட்டியின் படத்திற்கு முன் நின்றிருந்தாள் அவள். கண்களில் சத்தமில்லாமல் மௌனக்கண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. என்னவோ, அவள் பாட்டி அவள்மீது கோபம் கொண்டிருப்பார் என்று தோன்ற, அவரிடம் தன் பக்கத்தை கண்ணீருடன் விளக்கி கொண்டிருந்தாள்.

தேவ் அறையின் வாசலில் வந்து நிற்கவும், அவசரமாக கண்களைத் துடைத்துக்கொண்டு அவள் நிமிர, அதையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவனாக அவள் அருகில் வந்து நின்றான் அண்ணன்.

தங்கை தடுமாறியிருப்பது புரிந்தவனாக, மெல்ல கையை நீட்டி ஆதரவாக தங்கையை அணைத்துக் கொண்டான். அவன் தோளில் முகம் சாய்த்தவள் சில நிமிடங்கள் கண்ணீர் வடிக்க, அதுவும் கூட மௌனமொழியாகத் தான் வெளிப்பட்டது.

தேவ் தங்கையின் தோளில் தட்டிக் கொடுத்து, “அழாத தேவா. நீ அழறதை என்னால பார்க்க முடியாது.” என்று அவனும் கண்ணீர்விட, சட்டென சுதாரித்துக் கொண்டாள் தங்கை.

அவனைவிட்டு விலகி நின்று கண்களைத் துடைத்துக் கொண்டு, “அழுது வைக்காத தேவ். அடிச்சுடுவேன்.” என்று அவள் மிரட்ட, தங்கையின் நெற்றியில் கண்ணீருடன் முத்தமிட்டான் அண்ணன்.

“நம்ம வீட்டுக்கு போகலாம் தேவாம்மா…” என்று அவன் அழைக்க, வாழ்வில் முதல்முறையாக அவன் பேச்சுக்கு சம்மதமாக தலையசைத்தாள் அவன் தங்கை.

அதற்குமேல் தங்கையிடம் எதையும் தோண்டி துருவி தாமதப்படுத்தவில்லை சத்யதேவ்.

வேகமாக அவளை அழைத்துக்கொண்டு கீழிறங்கினான். அவளின் அத்தியாவசியத் தேவைக்கென சில பொருட்கள் மட்டும் தேவ் கையில் இருக்க, தன்னை ஏக்கத்துடன் பார்த்து நின்ற கலையரசியை நிமிர்ந்தும் பாராமல் வெளியேறினாள் தேவா.

கலையரசி, “தேவாம்மா…” என்று அவள்பின்னே வர,

“அவ இனியாவது வாழட்டும் அத்தை.” என்று முகத்திலடித்ததுப்போல் பேசிவிட்டான் தேவ்.

அதற்குமேல் எதுவும் பேச முடியாமல் கலையரசி வாயைக் கைகளால் மூடிக்கொள்ள, சேஷா நடந்த எதற்கும் எதிர்வினையாற்றாமல் சிலையாகத் தான் நின்றிருந்தான்.

தேவா அவன் கையில் திணித்த பத்திரங்கள் இரண்டும் அவன் கையின் இறுக்கம் தாளாமல் கசங்கி கிழிந்திருக்க, அவன் மனதும் அப்படிதான் இருக்கிறதோ?

அவனை சிந்திக்கவிடாமல், கலையரசி நின்ற இடத்தில் சுயநினைவை இழந்து மயங்கி சரிந்திருந்தார். மற்றது அனைத்தும் மறந்தவனாக அன்னையை நோக்கி ஓடினான் சேஷா.

Advertisement