Advertisement

மௌனமாய் எரிகிறேன் 07

நேற்று இரவு சேஷாவிடம் சண்டையிட்டு முடித்தபின்பும் கூட, வெகுநேரம் உறக்கம் பிடிக்காமல் அவளின் ஊஞ்சலில் கண்விழித்தபடியே தான் படுத்து கிடந்தாள் தேவா. ரணமாய் கழிந்த சில கணங்களுக்குப் பின் கிட்டத்தட்ட நடுஇரவில் தான் உறக்கத்தை தழுவியிருப்பாள் அவள்.

ஆனால், அதையும் கெடுப்பதுபோல ஏதேதோ கனவுகள் அவளைத் துரத்தியதில் அரைகுறையாகத் தான் உறங்கி எழுந்தாள் அவள். காலையில் கண்விழித்த நிமிடம் தொட்டு தலைவலி படுத்தி வைக்க, உடலும் லேசாக சூட்டை உணர்த்தியது.

ஆனால், அதற்காகவெல்லாம் தேங்கி நிற்கும் பழக்கம் இல்லாதவள் ஆகையால், தன் வழக்கமாக குளித்து முடித்து, அலுவலக உடையில் அவள் கீழிறங்கி வந்த நேரம், ஆத்மீயின் கார் அவள் வீட்டு வாயிலில் வந்து நின்றது.

கார் வந்து நின்ற சப்தத்தில் வாயிலை எட்டிப் பார்த்த தேவசேனா, ஆத்மீயைக் காணவும் கண்டுகொள்ளாமல் திரும்பி நடந்துவிட்டாள். உணவு மேசையில் அமர்ந்துகொண்டு, தனக்கான காஃபியை கையில் வாங்கிக் கொண்டவள் ஆத்மீயை திரும்பியும் பார்க்கவில்லை.

ஆனால், ஆத்மீகாவும் அவளின் வரவேற்பை எல்லாம் எதிர்பார்த்து வந்ததாக தெரியவில்லை.அவள் வந்த வேகத்திற்கு, “சேஷா…” என்று அவளது கீச்சுக் குரலில் அதிகாரமாக ஆதிசேஷனை அழைக்க, அவள் கூக்குரலில் கலையரசி அறையிலிருந்து வெளிவந்தார்.

அவரைக் கண்டதும், “ஹாய் ஆன்ட்டி… எப்படி இருக்கீங்க?” என்று கேட்டபடியே அவரை நெருங்கியவள் அவரைக் கட்டியணைத்து விடுவிக்க, அவள் யாரென்பதே தெரியவில்லை கலையரசிக்கு. புரியாமல் சில நொடிகள் விழித்து அவர் தன் மருமகளை திரும்பி பார்க்க, அதை உணர்ந்தவளாக, “நான் ஆத்மீகா ஆன்ட்டி. அமிர்தாவோட தங்கை.” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள் ஆத்மீ.

கலையரசி அதிர்ச்சியடைய, ‘அமிர்தா’ என்ற பெயரே போதுமாக இருந்தது. அவர் தனது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் அப்பட்டமாக முகத்தில் வெளிப்படுத்தியவராக, “இங்கே எதுக்காக வந்திருக்கம்மா?” என்றுவிட,

“நான் சேஷாவை பார்க்க வந்தேன் ஆன்ட்டி. இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. எங்கே அவர்? மேல இருக்காரா?” என்றபடியே அவள் படிகளை நெருங்க,

“நில்லும்மா.” என்றுவிட்டார் கலையரசி.

“வெளியாட்களை படுக்கை அறை வரைக்கும் நாங்க அனுமதிக்கிறது இல்ல. நீ ஸோஃபாவில் உட்காரு. சேஷா வருவான்.” என்று தன்னையும் மீறி கட்டளையாக அவர் பேசிவிட, தன் கொதிப்பை வெளிப்படுத்த இது நேரமில்லை என்பதால், அவர் சொல்படி சோஃபாவில் சென்று அமர்ந்தாள் ஆத்மீ.

கலையரசி ஆத்திரம் குறையாமல் தேவாவை பார்க்க, ‘எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.’ என்பதுபோல் அழகாக காஃபி அருந்திக் கொண்டிருந்தாள் அவள். அதில் இன்னும் கொதிப்படைந்தவராக அவர் சேஷாவை தொலைபேசியில் அழைக்க, அப்போதும் எதுவும் காதில் விழாதது போல் தான் அமர்ந்திருந்தாள் தேவசேனா.

அவளின் இந்த அலட்சியம் கலையரசிக்கு பிடிக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை அந்த வீட்டிற்கும் சரி, அவர் மகனுக்கும் சரி உரிமைப்பட்டவள் தேவசேனா தான். அவள் எதிலும் பற்றில்லாமல் இப்படி விலகி நிற்பதுதான் அத்தனை சங்கடங்களுக்கும் காரணம் என்பது அவரது மனத்தாங்கல்.

ஊரில், உலகில் பிடிக்காத திருமணங்கள் நடப்பதே இல்லையா. பெற்றவர்களுக்காக, பிள்ளைகளுக்காக, பணத்திற்காக, இன்னும் பல காரணங்களுக்காக எத்தனையோ திருமணங்கள் நடந்து கொண்டே தானே இருக்கிறது. ஆனால், எப்படியோ ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு வாழ்ந்துவிடவில்லையா… ஒருவருக்காக ஒருவர் பொறுத்துக் கொள்வதில்லையா. அப்படி தன் மகனை இவள் பொறுத்துக்கொண்டு அவனை தன் கைப்பிடியில் இருத்திக் கொள்ள வேண்டாமா என்றுதான் சிந்திக்க முடிந்தது அவரால்.

கணவனை மட்டுமே மையமாக கொண்டு சுழன்ற அவரின் உலகம் அவருக்கு அப்படி யோசிக்க மட்டும்தான் கற்றுக் கொடுத்திருந்தது. இல்லையெனில், தவறு செய்யும் மகனை விடுத்து, மருமகள் மீது கோபம் கொள்வாரா அவர்?

அவர் மனதின் ஓட்டத்தைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாதவனாக, வெகு இலகுவான முகபாவத்துடன் கீழிறங்கி வந்தான் சேஷா. அங்கே கடுகடுவென நின்றிருந்த தன் அன்னையைக் கண்டுகொள்ளாமல், அவன் ஆத்மீயை நெருங்க, “சேஷு டார்லி.” என்று அவனை கட்டியணைத்து விடுவித்தாள் ஆத்மீ. மேலும், தேவா, கலையரசியை நோக்கி ஒரு துச்சமான பார்வை வேறு.

தேவா இன்னமும் உணவு மேசையில் இருந்து எழுந்து கொள்ளாமல், அலைபேசியை பார்த்தபடி தான் அமர்ந்திருந்தாள். சேஷா படியில் இறங்கும்போதே தேவாவைப் பார்த்திருந்தாலும், அவள் ஒருத்தி அங்கே இல்லாதது போல்தான் நடந்து கொண்டான் அவனும்.

கலையரசி இவர்களின் செயலில் நொந்து போனவராக நின்றிருக்க, “கிளம்புறேன்மா…” என்றதோடு ஆத்மீயை அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான் சேஷா.

கலையரசி, “சேஷா…” என்று தயக்கத்துடன் அழைத்தது எல்லாம் அவன் காதிலேயே விழவில்லை. அங்கிருந்த யாரையும் ஒரு பொருட்டாகக்கூட மதியாமல் கிளம்பியிருந்தான் அவர் மகன்.

அவன் வாசலைத் தாண்டவும் கலையரசன் பார்வை மருமகளிடம் திரும்ப, அவளும் அப்போதுதான் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்தாள்.

கலையரசியை கடக்கையில், “நானும் கிளம்புறேன் அத்தம்மா.” என்று தேவா இயம்ப,

“இப்போ உனக்கு சந்தோஷமா தேவா…” என்றார் கலையரசி.

தேவா நின்று அவரை நேர்ப்பார்வை பார்க்க, “என் மகன் நீ நினைச்சபடியே குட்டிச்சுவரா போயிட்டு இருக்கானே! நியாயமா நீ சந்தோஷப்படணுமே…” என்றார் அவர்.

“நாம இது விஷயமா பேச வேண்டாம்ன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேனே அத்தம்மா.”

“ஏன் பேசக்கூடாது? எனக்கு இதைத்தவிர உன்கிட்ட கேட்க எதுவுமே இல்ல தேவா. என் மகன் வாழ்க்கையை நீ இப்படி விடலாமா?” என்று கண்ணீருடன் அவர் கேட்க,

“அவரை இதெல்லாம் செய்ய சொல்லி நான் சொல்லலையே அத்தம்மா!”

“செய்ய வேண்டாம்ன்னு கூட நீ சொல்லலையே. அவன் தப்பே செஞ்சிருந்தாலும் நீ அவனை விட்டிருக்க கூடாது இல்லையா?”

“விடாம என்ன செய்யணும் அத்தம்மா. உங்க மகன் எப்படி இருந்தாலும் சரின்னு, நான் அவருக்கு பொண்டாட்டியா இருக்கணுமா?”

“இருந்தா என்ன தப்பு தேவா? அவன் உன் புருஷன் தானே. அவன்கிட்ட இறங்கிப் போனால் நீ குறைஞ்சிட மாட்ட.”

“நான் குறைஞ்சு எல்லாம் போக மாட்டேன் அத்தம்மா. மொத்தமா இல்லாம போய்டுவேன்…”

“நான் என்ன பேசறேன், நீ என்ன சொல்ற தேவா?”

“உங்க மகன் எவகிட்ட போனாலும் நான் அவனோட குடும்பம் நடத்தணும். அதுதானே சொல்ல வர்றிங்க அத்தம்மா…” என்று பட்டவர்த்தனமாகவே அவள் கேட்டுவிட,

“நீ ஒழுங்கா இருந்தா அவன் ஏன் கண்டவளோட போறான்?” என்று பேச்சுப்போக்கில் வாயை விட்டுவிட்டார் கலையரசி.

நேற்று ஸ்ரீனிவாஸ் கேட்ட அதே கேள்வி. வார்த்தைகள் சற்று மாறியிருந்தாலும், பொருள் என்னவோ ஒன்றுதான். மொத்தத்தில் இவர்கள் அத்தனைப் பேருக்கும் ஒத்த கருத்து தான்.

நேற்று ஸ்ரீனிவாஸ் பேசிய வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் கையை நீட்டியவள் தான். இன்றும் அவள் நினைத்தால் கலையரசிக்கு பதில் கொடுத்துவிட முடியும் அவளால். ஆனால், அதையும் செய்ய விடாமல் எதுவோ தடுக்க, மௌனமாக நின்றுவிட்டாள் தேவசேனா.

அவளின் இயலாமை மௌனமாக அங்கே வெளிப்பட, கலையரசியின் கண்களுக்கு அவள் மௌனம் குற்றத்தின் குறுகுறுப்பாக பட்டது போலும்.

அவர் பேசிய வார்த்தைகளின் வீரியம் உணராமல் அவர் நிமிர்ந்து நிற்க, சில நிமிடங்களின் மௌனத்திற்கு பின், “இந்த ஒழுக்கமில்லாதவ உங்க மகனுக்கு வேண்டாம் அத்தம்மா…” என்றதோடு வெளியில் நடந்துவிட்டாள் தேவசேனா.

அவளின் வார்த்தையில் கலையரசி செய்வதறியாமல் திகைத்து நின்றுவிட, அவரின் தவிப்பை கவனிக்கத்தான் அங்கு ஆளில்லாமல் போனது.

தேவசேனா வெளியே வந்த நிமிடம், அவளின் கார் ஓட்டுநர் காரின் அருகில் வர, கைகாட்டி அவரை தடுத்துவிட்டு தானே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துவிட்டாள் தேவசேனா. வேகம்… எதைப்பற்றியும் கவலை கொள்ளாத அதிவேகம்… இலக்கில்லாத ஒரு நீண்ட பயணம்.

அவளுக்காக காத்திருந்த வேலைகள், அவளின் கடமைகள், அவளின் உறவு, நட்பு எதைக் குறித்தும் கவலையில்லாமல் ஒரு குறுகியகால துறவறம்… எதிரில் தெரிந்த தொடுவானம் மட்டுமே இலக்காகிப் போக, வேகமாக அதைத் தொடுவதற்கு விரைந்து சென்று கொண்டிருந்தாள் தேவசேனா.

என்றுமே அதிவேகம் ஆபத்து தானே… ஆனால், தேவசேனா அதை குறித்தெல்லாம் கவலை கொள்ளும் நிலையைத் தாண்டி இருந்தாள் என்பது நிதர்சனம்.

இலக்கில்லாத அவளது பயணம் எங்கோ தொடங்கி, எங்கோ முடிய துடிக்கும் வேளையில், உற்ற துணையாக அவளை லேசாக உரசியபடி குறுக்கே வந்து நின்றான் உடன் பிறந்தவன். தேவசேனாவுக்கும் அந்த நொடியில் தான் நிகழ்த்தவிருந்த அனர்த்தம் பிடிபட்டுவிட, நடுக்கத்துடன் தான் ஸ்டியரிங்கில் இருந்து கைகளை விலக்கினாள்.

வேகமான அவளின் சுவாசம் மெல்ல சீரடைய இதற்குள் கார் கதவை தட்டியபடி அவள் அருகில் வந்து நின்றான் சத்யதேவ். தேவா அப்போதுதான் அவனை கவனித்தவளாக காரின் கண்ணாடியை இறக்கிவிட, தானாகவே கதவைத் திறந்து கொண்டவன் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை தங்கையின் கையில் திணித்தான்.

அந்த நேரம் தேவாவுக்கும் அது தேவையாக இருக்க, நீரை அருந்தியவள் மெல்ல காரின் சீட்டில் தலை சாய்த்துக் கொண்டாள். சத்யதேவ் அவள் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை பிடுங்கி, மெல்ல தன் கைகளை நனைத்து அவள் முகத்தை துடைத்துவிட, கண்களைத் திறக்கவே இல்லை தேவா.

அவள் முகத்தை தண்ணீரால் ஒற்றியெடுத்தவன் பின் அவனது கைக்குட்டை கொண்டு அவளுக்கு முகம் துடைத்துவிட, அப்போதும் கண்திறக்காத மௌனம்தான். ஆனால், சத்யதேவுக்கு அவள் மௌனத்தை குறித்தெல்லாம் கவலையில்லை.

அவள் மகளுக்கு என்ன செய்வானோ, அதைத்தான் அவளுக்கும் செய்து கொண்டிருந்தான் அவன். அவன் குழந்தை அவனிடம் பேசவில்லை என்று கோபித்துக் கொள்கிறானா என்ன? அவனைப் பொறுத்தவரை அவன் தங்கையும் அப்படிப்பட்ட குழந்தைதான். என்ன… சற்றே பிடிவாதக்கார குழந்தை அவன் மூத்தமகள்.

முகம் துடைத்து முடிக்கவும், அவள் மெல்ல கண்களைத் திறக்க, “தள்ளி உட்கார்.” என்றான் அண்ணன்.

“எனக்கு வேலையிருக்கு. நான் கிளம்புறேன். நீ போ.” என்று தங்கை அந்த நிலையிலும் மறுக்க, யோசிக்காமல் தன் அலைபேசியில் இருந்து தன் மனைவியை அழைத்துவிட்டான் சத்யதேவ்.

தேவா, “அவளுக்கு போன் பண்ணாத.” என்று கத்த,

“உன்னை கூட்டிட்டு வர சொன்னதே அவதான். நீ அவகிட்ட பேசிக்கோ.” என்று அழைப்பைத் தொடர,

“போனை கட் பண்ணுடா…” என்று அவன் கையைப் பிடித்து இழுத்து, அவன் அலைபேசியை காரினுள் தூக்கி அடித்திருந்தாள் தேவசேனா.

சத்யதேவ் அலட்டிக் கொள்ளாமல் தோளை குலுக்கிக்கொண்டு மறுபுறம் வந்து அமர்ந்துகொள்ள, “நான் என்ன உனக்கு ட்ரைவரா…” என்று அவனை முறைத்தபடியே காரிலிருந்து இறங்கியவள் பின்பக்கம் சென்று அமர்ந்துகொண்டாள்.

சத்யதேவ் அவள் செயலில் சிரித்தவனாக, மறுபுறம் நகர்ந்து காரை எடுக்க, “எனக்கு இரண்டு மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு.” என்றாள் அறிவிப்பு போல்.

“உன் பிரெண்ட்கிட்ட பேசிக்கோ.” என்றதோடு அவனும் முடித்துக்கொள்ள, அரைமணி நேரத்திற்கு பின் அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் இருவரும். அவளின் பாதுகாப்பு படைகளும் அவர்கள் பின்னோடு வர, வீட்டு வாசலில் கார் நின்ற நிமிடம், கணவனையும், அவன் தங்கையையும் கண்டுகொள்ளாமல் தேவாவின் பாதுகாவலர்களை நெருங்கினாள் பல்லவி.

“இவளை தனியா விடுறதுக்கு தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறோமா?” என்று அதட்டலாக அவள் கேட்டு நிற்க, எதிரில் இருந்த யாரும் வாய் திறக்கவில்லை.

“அவளுக்கு பாதுகாப்புக்கு தான் நீங்க இத்தனைப் பேரும். அவ கார் எடுத்துட்டு தனியா கிளம்ப, அவளுக்கு எதுக்கு ட்ரைவர். உங்க எல்லாரையும் இன்னைக்கே வேலையை விட்டு அனுப்பிடலாமே…” என்று தேவாவின் பாதுகாவலர்களை பல்லவி வறுத்தெடுக்க, “பவி அவங்க மேல தப்பு இல்ல. அவங்களை எதுவும் பேசாத.” என்று பல்லவியின் முன்னே வந்து நின்றாள் தேவா.

பல்லவி தேவாவை கண்டிப்புடன் முறைத்து நிற்க, “சாரி…” என்று சத்தமே வராமல் வாயசைத்தாள் தேவா.

ஆனால், அவளது மன்னிப்பை ஏற்காமல் பல்லவி கோபமாக வீட்டிற்குள் நுழைந்து கொள்ள, அவள் பின்னே ஓடினாள் தேவா. ஆனால், பல்லவியைத் தொடர விடாமல் தேவாவைத் தடுத்தது ஸ்கந்தாவின் வருகை.

அரைத்தூக்கத்தில் கண்களை நிமிட்டிக்கொண்டு, இன்னும் தீராத அழுகையுடன் அந்த ஒன்றரை வயது பூச்செண்டு அறையிலிருந்து வெளியே வர, அவனது அழுகைக்குரலில் அவனை நோக்கித் திரும்பிவிட்டாள் தேவா.

தேவா அவனைக் கைகளில் அள்ளிக் கொள்ளவும், “டேவா…” என்றவன் தனது முன்பற்கள் இரண்டைக் காட்டி சிரிக்க, “ஸ்கந்துமா…”என்று அவனை தூக்கிப் போட்டு பிடித்தாள் தேவா. அதில் குதூகலமானவன் கைகளைத் தட்டி சிரிக்க, அதன்பின்னான நேரம் மொத்தமும் அவனைவிட்டு அசையவே இல்லை தேவா.

அவளின் அத்தனை வருத்தங்களும், வெறுமையும் தற்காலிகமாக தள்ளி நிற்க, ஸ்கந்தா அவளுக்கு நெருக்கமாகிப் போனான். பல்லவி மதிய உணவை எடுத்து வைத்துவிட்டு அழைத்தபின்பும், அவள் கையில் குழந்தையை தூக்கிக்கொண்டே வர, அவள் கையிலிருந்து தன் மகனை வாங்கி கொண்டாள் பல்லவி.

“ஏன்டா உன் அப்பனை போலவே சூடு சொரணை எதுவும் இல்லாம இருக்க. அவ வருஷத்துக்கு ஒருமுறை வந்தாலும், பல்லை இளிச்சுட்டு அவகிட்ட போவியா…” என்றவள் மகனின் முதுகில் ஒன்று வைக்க, அதற்கே ஊரைக் கூட்டினான் அவள் மகன்.

“இதெல்லாம் ஓவர் பவி. போன மாசம்கூட வந்தேன்.” என்ற தேவா, பிள்ளையை அவள் கையிலிருந்து வாங்கி கொண்டாள்.

பல்லவி அவள் முகத்தை கூர்ந்து பார்த்தவள், “கடைசியில நாங்க யாரும் தேவையே இல்லன்னு முடிவு பண்ணிட்ட இல்ல. நீ இல்லாம உன் அண்ணன் நிம்மதியா இருக்கமாட்டான். அவனை காலத்துக்கும் சாகடிக்காம, நீ போகும்போதே கூட்டிட்டு போயிடு… நானும் என் பிள்ளையும் எப்படியோ போறோம்.” என்று பல்லவி சட்டென கண்ணீர் வடிக்க, “ப்ச் பவி… உன் இஷ்டத்துக்கு பேசாத. நான் சாகப் போனதா நீயே முடிவு பண்ணிட்டியா.. ஏதோ கோபம்… கொஞ்சம் வேகமா போனேன். அவ்ளோதான். சாகுற அளவுக்கு உன் பிரெண்ட் கோழை கிடையாது.” என்று முறைப்புடன் பதில் கொடுத்தாள் தேவா.

“அப்படி என்னடி கோபம் உனக்கு? ஏதாவது ஆகியிருந்தா?”

“அவ்ளோ சீக்கிரமெல்லாம் சாக மாட்டேன் பவி…” என்று சிரித்தாள் தேவா.

“எதுக்காக இத்தனை போராட்டம்? தூக்கி போட்டுடு தேவா…” என்றதற்கும் வெறும் சிரிப்பு தான் பதிலாக கிடைத்தது.

Advertisement