Advertisement

மௌனமாய் எரிகிறேன் 06

ஸ்ரீனிவாஸ் பேசியதில் அன்று முழு நாளும் கடுகடுவெனவே சுற்றிக் கொண்டிருந்தாள் தேவசேனா. மலர்விழியால் கூட அவளை நெருங்க முடியவில்லை. அன்று இரவு பத்துமணி வரையிலும் அலுவலகத்தில் தான் அமர்ந்திருந்தாள் தேவசேனா.

இதுவரை கலையரசி இரண்டு முறை அழைத்து விட்டிருக்க, அவருக்கும் பதில் எதுவும் சொல்லியிருக்கவில்லை. வேலை வேலை என்று மொத்தமாக தனது கணினியின் முன் அமர்ந்து விட்டிருந்தாள். நேரம் பதினொன்றை நெருங்கும் வேளையில் அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் தான் மலர்விழி அவளது அறைக்கு சென்றது.

அங்கே வேலை பார்த்து சோர்ந்து போனவளாக அவளது அலுவலக மேசையின் மீதே கவிழ்ந்தபடி தேவா கண்களை மூடியிருக்க, நெஞ்சம் முழுவதும் எதுவோ அடைத்துக் கொண்டவளாக உணர்ந்தாள் மலர்விழி. அவளின் இந்த நிலைக்கு காரணமானவனை தன் மனம் விரும்பியதை ஒப்பவே முடியவில்லை அவளால்.

ஆம். ஸ்ரீநிவாஸை பிடிக்கும் மலர்விழிக்கு. வெறும் பிடித்தம் என்பதற்கும் மேலாகவே அவனை பிடிக்கும். அவன் சேஷாவுக்கு துணை நிற்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் தன் பிடித்தத்தை தனக்குள் பூட்டி வைத்திருந்தாள்.

ஆனால், இன்றைய அவனது செயல்களில் உண்மைக்கும் பயந்து தான் போயிருந்தாள் மலர்விழி. இவனும் சேஷாவைப் போன்றவன் தானோ என்று மனம் அடித்துக் கொள்வதை தடுக்கவே முடியவில்லை அவளால். தன் காதல் பொய்த்து போனதாக அப்போதே முடிவு செய்துவிட்டவள் அதன் வலி தாளாமல் தான் தனிமையை நாடியது.

இல்லையென்றால், தேவா அடித்தே விரட்டினாலும், அவளைவிட்டு விலகிச் செல்பவளா மலர்விழி. இந்த நிமிடம் தன் செயலுக்காக தன்னையே வெறுத்தவள் வேகமாக தேவசேனாவை நெருங்கினாள். தேவா கண்களை மூடியிருந்தாளே தவிர, உறக்கமெல்லாம் இல்லை.

அருகில் அரவம் உணர்ந்த கணமே, “டீ வேணும் மலர்.” என்று கண்களைத் திறக்காமல் சோர்வுடன் அவள் வாய்திறக்க, வாஞ்சையாக அவள் தலையைத் தடவிக் கொடுத்து வேகமாக வெளியேறினாள் மலர்விழி.

அலுவலக பணியாளர்கள் அனைவரும் எப்போதோ கிளம்பியிருக்க, மீதமிருந்தது தேவா, மலர்விழி மட்டுமே. இன்னும் வாசலில் காவலாளியும், தேவாவின் பாதுகாவலர்களும் இருந்தாலும், அத்தனைப் பெரிய அலுவலகத்தில் இவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர் அப்போதைக்கு.

மலர்விழி பத்து நிமிடங்களில் டீ வைத்து, கூடவே சில ப்ரோட்டீன் பிஸ்கட்டுகளையும் எடுத்துவந்து தேவாவின் அருகில் வைக்க, முகம் கழுவி வந்தவள் மெல்ல அந்த பிஸ்கட்டுகளை உண்டு முடித்து, டீயைக் குடித்தாள்.

அன்று நாள் முழுவதுமே உணவென்று எதையும் உட்கொள்ளவே இல்லையே அவள். காலையில் கலையரசி முகம் திருப்பிக் கொண்டதால், காலை உணவு கசந்து போயிருக்க, மதிய உணவுக்கு செல்ல நினைத்தபோது தான் அவர் மகன் அடிபட்டிருப்பதாக அழைப்பு.

அங்கே சென்று அவனைப் பார்த்து வந்தபின் அவள் உணவை மறந்து விட்டிருக்க, மாலை சிற்றுண்டி நேரத்தை ஸ்ரீனிவாஸ் முடித்து வைத்திருந்தான்.

பிரகதீஸ்வரி இருந்தவரை அவளின் உணவு நேரங்கள் மொத்தமும் அவரின் நேரடி கவனிப்பில் தான் கழியும். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர் வரையும் இந்த பழக்கம் தொடர்ந்தது. இப்போது அந்த ஒரு பெண்மணி இல்லாமல் போக, அவள் நாள் முழுவதும் உண்ணாமல் பட்டினி கிடந்தது கூட அவளைச் சேர்ந்த யாருக்கும் தெரியாமல் போனது.

மலர்விழி தேவசேனா உண்டு முடித்தபின்னும் அமைதியாகவே இருக்க, தேவா அவள் மௌனத்தை கணக்கில் கொள்ளாமல் மீண்டும் கணினியை நோக்கி திரும்பிவிட்டாள்.

“தேவா…” என்று மலர் அதட்ட,

“நீ வீட்டுக்கு கிளம்பு மலர். ட்ரைவரோட போ. உன் வண்டி வேண்டாம்.” என்று கணினியில் இருந்து கண்களைத் திருப்பாமல் தேவசேனா ஆணையிட,

“உன்னை இங்கே விட்டுட்டு நான் எப்படி போவேன்? நீ கிளம்பு… இல்ல, நானும் உன்னோட இருக்கேன்.” என்றாள் மலர்.

“என்னைத் தேட யாருமில்ல மலர். உன் கதை அப்படியில்ல. அம்மா பயந்திடுவாங்க கிளம்பு.” என்று மீண்டும் தேவா விரட்ட, அவள் முன்பே தன் அன்னைக்கு அழைத்து அலுவலகத்தில் இருப்பதாககூறிவிட்டாள் மலர்.

தேவாவின் முறைப்படி அலட்சியம் செய்தவளாக, தேவாவின் முன்னே இருந்த ஒரு கோப்பை கையில் எடுத்துக் கொண்டவள் அதை பார்வையிடுவதாக காண்பித்துக் கொள்ள, அங்கே இருந்த தனது பேனாவை எடுத்து அவள்மீது வீசினாள் தேவா.

மலர் வலிப்பது போல் பாவமாக முகத்தை மாற்றிக் கொள்ள, “நடிக்காம கிளம்பு.” என தேவா முறைக்க, “நீயும் வந்தா போகலாம்.” என்றாள் மலர்.

“உனக்கு பிடிவாதம் அதிகமா போச்சு மலர்.”

“எல்லாம் சகவாச தோஷம் தான்…” என்று மலர் சிரிக்க, அவளை அடிக்க கையோங்கிவிட்டு தானும் சிரித்தாள் தேவசேனா.

அவள் சிரித்த நிமிடம், “வா வா போகலாம். உன் அத்தம்மா வேற காத்திருப்பாங்க. கிளம்பு.” என்று தேவாவை இழுத்து வந்து காரில் ஏற்றிவிட்டாள் மலர்.

தேவசேனா மலர்விழியை அவள் வீட்டு வாயிலில் இறக்கிவிட்டு, அதன்பின்பே தனது வீட்டை அடைந்தாள். அவள் நேரமோ என்னவோ, சேஷா அந்த நேரம் வரை உறங்காமல் அவளுக்காக காத்திருந்தான்.

தேவசேனா எப்போதும் போலவே கலையரசன் அறையை எட்டிப் பார்க்க, ஆழ்ந்து உறங்கும் அவரை காணுகையில் லேசாக மனம் சுணங்கியது. ஆனாலும், அவர் வயதை கணக்கில் கொண்டு தன்னையே தேற்றிக் கொண்டாள் அவர்.

“வயசானவங்க தேவா. நீ நடுராத்திரி வீடு வந்தா, நீ வர்ற வரைக்கும் உனக்காக அவங்க காத்திருக்கணுமா. என்ன நினைக்கிற நீ?” என்று அவள் மனம் சாடியதில், மௌனமாக மாடியேறினாள் அவள்.

இந்த மௌனம் தான் எத்தனை வகை. எதிர்பார்த்தது நடக்காத நேரங்களில் ஏமாற்றம் மௌனமாகிறது. எதிரில் நிற்பவரிடம் காண்பிக்க முடியாத ஆத்திரமும், அழுகையும் கூட மௌனமாகிவிடுகிறது. வெளிப்படுத்த விரும்பாத நேரங்களில் புன்னகை கூட மௌனத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறதே…

இப்போது தேவாவின் ஏக்கமும், தேடலும் கூட மௌனமாகித் தான் போனது. என்னவோ, சில நாட்களாகவே மனம் அவளை மீறி பிரகதீஸ்வரியைத் அடிக்கடி தேடுகிறது. தேடல் ஏக்கமாக உருவெடுத்துக் கொண்டிருக்க, அடிக்கடி சோர்ந்து போகிறாள் பெண்.

வானளவு உயர்ந்து, பரந்து விரிந்து கிடக்கும் ஆலமரம் தான் அவள். ஆனால், அதன் வேரில் ஏற்படும் சின்ன சின்ன வெட்டுக்காயங்கள் விலகி இருந்து பார்ப்பவர்களுக்கு புரிவதில்லையே.

அவள் பாட்டிக்கு அடுத்ததாக அவளிடம் அன்பு காட்ட, அவளது உடன் பிறந்தவன் இருக்கிறான் தான். ஆனால், அவன் அன்பு காட்டுவதோடு நிற்கமாட்டானே. அவளின் உரிமைக்காக நிச்சயம் போர்க்குரல் எழுப்பி விடுவான். ஏற்கனவே ஒருமுறை செய்தவன் தானே.

அது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதால் தான், அவனையும் விலக்கியே வைத்திருக்கிறாள். ஆனால், இப்போதெல்லாம் எதை சாதித்து விட்டோம் என்று ஒரு வெறுமையுணர்வு அடிக்கடி தலைதூக்க, மனம் தனக்கென இருக்கும் சொந்தத்தை தேட தொடங்கியிருந்தது.

திறந்திருந்த அவர்களின் அறைக்கதவை கூட கவனியாமல், எப்போதும்போல் தேவா அவள் பாட்டியின் அறைக்குள் நுழைய, அடுத்த நிமிடம் பட்டென கதவைத் திறந்து கொண்டு அவள் முன்னே நின்றான் சேஷா.

எப்போதும் சேஷா அந்த அறைக்கு வருபவன் இல்லை என்பதால் தான் தேவசேனா தனிமையைத் தேடி இங்கே சரணடைவது. ஆனால், இன்று அங்கும் சேஷா அவளைத் தேடி வந்து நிற்க, அப்போது அவளின் எரிச்சல் மௌனமாக வெளிப்பட்டது.

சேஷாவுக்கு அவள் அளவு பொறுமையோ, மௌனமோ கைவராததால், “நிவாஸ் உன்னைத் தேடி வந்தானா?” என, தலையும் வாலும் புரியாதபடி கேள்வியெழுப்பினான் அவன்.

இதற்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாதே. தேவாவின் பொறுமையும் கையில் அள்ளிய நீர்த்திவலைகளின் அளவுக்கு தானே.

“அனுப்பி வச்சதே நீங்கதானே.”

“உனக்கு அப்படி வேற எண்ணமிருக்கா சேனா..?”

“ஓஓ… நீங்க அனுப்பலையா? அப்போ ஏன் அவன் என்னைத் தேடி வந்தான்? அவன் எதுக்கு வந்திருந்தாலும் சரி. இனி வரக்கூடாது. க்ளியரா சொல்லிடுங்க. மீறி வந்தா இன்னைக்கு வாங்கினது மாதிரி நிறைய வாங்க வேண்டியிருக்கும்.” என்று நிவாஸின் மீது இருந்த கோபத்தில் அவள் வெடிக்க,

“சேனா… என்ன செஞ்ச அவனை?” என்று அவள் கையைப் பிடித்திருந்தான் சேஷா. இந்த சிறுபிள்ளைகளை பெரியவர்கள் மிரட்டுவார்களே அப்படி ஒரு தோணி அவனுடையது.

ஆனால், சேஷா சிறுபிள்ளையில்லையே. “அடிச்சேன்… காது கிழியிற அளவுக்கு அறைஞ்சேன்.” என்றாள் கொஞ்சமும் பயமில்லாதவளாக.

அவள் பதிலில் சேஷா அவள் கையை உதறி, “அவ்ளோ திமிராடி உனக்கு? அவனைக் கைநீட்டி அடிக்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தது?” என்று கேட்கும்போதே, தேவாவை கன்னத்தில் அறைந்திருந்தான்.

அவன் அடித்ததில் தேவா அதிர்ச்சியானது எல்லாம் ஒரு நொடிக்கும் குறைவாகத் தான். அடுத்த நொடியே அவன் கொடுத்ததை அவனுக்கும் திருப்பிக் கொடுத்திருந்தாள்.

அவள் தன்னை கைநீட்டி அடித்துவிட்டதை நம்ப முடியாமல் சேஷா நிற்க, “என்னை அடிக்கிற உரிமையை உனக்கு யாருடா கொடுத்தது? என் கழுத்து தாலி கட்டிட்டா, என்னை அடிப்பியா நீ?” என்று கண்கள் சிவக்க கத்தினாள் அவள்.

சேஷா வாய் திறவாமல் நின்றுவிட, “இந்த அடிதடி, மிரட்டல் எல்லாம் இதையெல்லாம் வேற இடத்துல வச்சுக்கோ. என்கிட்டே வேண்டாம். உன் பிரெண்ட் என்ன பேசினான் தெரியுமா உனக்கு?”

“ஏன் அடி வாங்கினதை சொன்னவன் ஏன் அடிச்சேன்னு சொல்லாம விட்டுட்டானா?”

“எனக்கு ஒன்னும் இல்ல. நான் சொல்றேன், நீ கேட்டுக்கோ… உன் சொத்தையெல்லாம் பிடுங்கிட்டு உன்னை தெருவுல விட பிளான் பண்ணிட்டேனாம் நான். நீ குடிக்கிறதுக்கும், தினம் ஒருத்தியோட சுத்துறதுக்கும் கூட நான் தான் காரணமாம். என் வாழ்க்கையை பத்தி கருத்து சொல்ற அளவுக்கு அவனுக்கு இடம் கொடுத்தது நீ.”

“அவன் என்னை துச்சமா பார்க்கிறதுக்கும், மதிக்கிறதுக்கும் காரணம் நீ. என் வாழ்க்கையில நடந்த அத்தனை விஷயங்களும் உன்னால மட்டும்தான்.”

“என்ன… எல்லாரும் சொத்து சொத்துன்னு சொத்தைப் பற்றி மட்டுமே பேசிட்டு இருக்கீங்க. நீ மட்டும்தான் இந்த வீட்டு வாரிசா? இல்ல, இந்த சொத்து இல்லாம போனா, நான் பிச்சையெடுத்துட்டு இருப்பேனா? என்ன நினைக்கறீங்க நீங்க?”

“நீ பிச்சையெடுக்க வாய்ப்பில்ல. ஆனா, உன் அப்பன் வீட்டு சொத்து இப்போ நீ அனுபவிக்கிறதுல பத்துல ஒரு பங்கு கூட வராது. அதைத் தெரிஞ்சு தானே, அதை மொத்தமா உன் அண்ணனுக்கு கொடுத்துட்டு, நீ இங்கே ராஜ்ஜியம் பண்ணிட்டு இருக்க…” என்று ஏளனமாக சேஷா கேட்டுவிட,

“பரவாயில்லையே சேஷாக்கு இந்தளவுக்கு யோசிக்க முடியுதே.” என்றபடியே அவனை நெருங்கி வாசம் பிடிப்பதுபோல் பாவனை காட்டியவள், “ஏன் இன்னைக்கு எவளும் கம்பெனிக்கு கிடைக்கலையா?” என்றாள் கேவலமான பார்வையுடன்.

“ஏன் என் கேள்விக்கு பதில் சொல்ல முடியலையா?”

“ஏன் சொல்லாம… சொல்லுவோம்… எஸ்… நான்தான் ராஜ்ஜியம் பண்ணுவேன். என்னோட சொத்து இது. “என் பாட்டி எனக்கு கொடுத்தது. உன்னை மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ண சம்மதிச்சதே இந்த சொத்துக்காகத்தான். இப்பவும் இந்த நேரம் வரை உழைச்சுட்டு வந்து இருக்கேன். உன்னைப்போல உன்னோட அல்ப சந்தோஷங்களுக்காக யாரோட நிம்மதியையும் பறிக்கல. யாரையும் அழ வைக்கல…”

“முக்கியமா யாரோட நம்பிக்கையையும் நான் அழிக்கல. இந்த வீடு, என் பிசினெஸ் எல்லாமே என் பாட்டி எனக்கு கொடுத்தது. அதோட கடல்ல மூழ்கின கப்பல் போல, நீ மூழ்கடிச்ச தொழிலையும் சேர்த்து நான் சரி பண்ணி இருக்கேன். இதை யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாது.”

“பைனலி… இதுதான் விஷயம். உன் வாயால கேட்கும்போது சந்தோஷமா இருக்கு. உன் முகத்தை பார்க்கும்போது எனக்கு பாம்பு படமெடுக்கிறது தான் நியாபகம் வருது. உனக்கும், நல்ல பாம்புக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு தெரியுமா?”

“ரியலி… ஒவ்வொண்ணா லிஸ்ட் போட்டு வைங்க. காலையில கேட்கிறேன். இப்போ நான் தூங்கணும். வெளியே போங்க.” என்று கொஞ்சமும் அவன் வார்த்தைகளால் காயம் கொள்ளாமல் தேவசேனா அலட்சியம் காண்பிக்க, அவளை அப்படியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை சேஷாவுக்கு.

“ஏன் வெளியே போகணும்? சொத்துக்காக கல்யாணம் பண்ணாலும், கல்யாணம் பண்ணியாச்சே. என்னோட லீகல் வைப் நீ. லீகலா மத்த விஷயங்களையும் ப்ரொசீட் பண்ணுவோம். உனக்கு சொத்து கிடைச்சிடுச்சு. எனக்கும் கிடைக்க வேண்டியது கிடைக்கணும் இல்ல.” என்றவன் அவளை மேலிருந்து கீழாக பார்வையால் அளக்க, “உன்னால முடிஞ்சதை பாருடா.” என்றுதான் நின்றிருந்தாள் தேவசேனா.

அவளின் அந்த அலட்சியமும், ஏளனமும் சேஷாவின் பிறவிக்குணத்தை மீட்டிருந்தது. அவனுக்கே உரிய ஆணவமும், திமிரும் குறையாமல் அவன் தேவசேனாவை நெருங்க, அசையாமல் தான் நின்றிருந்தாள் தேவா.

அவள் பயந்திருந்தாளோ, இல்லை வேறெதுவும் உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தாலோ, நிச்சயம் அவனும் விலகிச் சென்றிருப்பான். ஆனால், ‘என்னை என்ன செய்துவிடுவாய்.’ என்று அவள் பார்வை சவால் விடுக்க, நிச்சயம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று தான் தோன்றியது சேஷாவுக்கு.

திருமணமான நொடி தொட்டு கணவனாக எந்த கடமையையும் கடைபிடிக்காதவன் இன்று கட்டிலில் மட்டும் உரிமை கோர நினைக்க, வருவது வரட்டும் என்றே நின்றிருந்தாள் தேவசேனா.

சேஷா அவனை நெருங்கியபோதும் அசைவில்லை. அவன் இடை தொட்டபோதும் அசைவில்லை. இறுதியாக அவன் இதழ்களை தீண்டியபோதும் அசைவில்லை. உணர்வுகளற்ற உணர்ச்சிகள் மரத்த நிலை அவளுடையது. அவளின் திருமண வாழ்வு பரிசளித்த காயங்களும், வருத்தங்களும் அந்த நிமிடம் மௌனமாக மாறியிருந்தது.

ஆனால், சேஷா என்றைக்கு அவள் உணர்வுகளை உணர்ந்திருக்கிறான். இன்றும் தன் ஆணவத்தால் அவளை வதைக்க அவன் முயல, அதற்கு இடம் கொடுக்காமல் அவள் துணிந்து நிற்கவும் தான் லேசாக விலகினான் அவன்.

ஆனால், முழுதாக அவளை விடுவிக்கவும் மனம் வராமல் அவன் தயங்கி நிற்க, “என்ன.. உன் அம்மு நியாபகம் வந்துட்டாளா?” என்றாள் தேவசேனா.

“உனக்கெல்லாம் இதயமே இல்லையாடி. உணர்ச்சியே இல்லாத ஜடமா நீ?”

“உன்கூட குடும்பம் நடத்த உணர்ச்சி, இதயம் எதுவும் தேவையில்ல… தினம் ஒருத்தியோட குடும்பம் நடத்துறியே… இதயபூர்வமா தான் நடக்குதா? காமெடி பண்ணாத மாமா.” என்று சிரித்தாள் அவள்.

“நீ பார்த்தீயா நான் குடும்பம் நடத்துனதை… சும்மா வாய்க்கு வந்ததை உளறாத.”

“குடும்பமெல்லாம் நடத்தல. வெறும் ஒட்டிக்கிறதும், கட்டிக்கிறதும் மட்டும்தான்னு சொல்றியா. அன்னிக்கு பார்த்தேன் அந்த மினிஸ்டர் பொண்ணை. சும்மா ஒட்டிட்டு மட்டும்தான் இருந்தா?” என்று நேரம் பார்த்து தேவா குத்தியதில் லேசாக வலித்தது சேஷாவுக்கு.

ஆனால், அதற்காகவெல்லாம் விட்டுவிட்டால் அவள் தேவா இல்லையே. “அதோட, இப்போ புதுசா ஒருத்தியை பிடிச்சு இருக்கியே… ஆத்மீகா… அவளும் சும்மா ஓட்டிட்டு தானே போஸ் கொடுத்தா… பார்த்தேன்.” என்று மீண்டும் சிரித்தாள் தேவா.

“குடும்பம் நடத்தாம இப்படி ஒட்டிக்கிறதும், கட்டிக்கிறதும் கூட நல்லாதான் இருக்கு இல்ல. எனக்கும் நீ நல்ல புருஷனா நடக்கலையே. நான் ஏன் இன்னொருத்தனோட ஒட்டிக்க கூடாது…” என்று ஆட்காட்டி விரலால் அவள் கன்னம் தொட்டு யோசிக்க, அவள் கழுத்தை பிடித்துவிட்டான் சேஷா.

அவன் கையை அலட்சியமாக தட்டிவிட்டவள், “சொன்னதுக்கே இவ்ளோ வலிக்குதே… ஆனா, என் கண்ணு முன்னாடியே இன்னொருத்தியை கட்டிட்டு நிற்கிறியே. எனக்கு எவ்ளோ வலிக்கனும்…” என்று உதட்டை பிதுக்கியவள், “ஆனா, வேஸ்ட்… எனக்கு வலிக்கவே இல்ல. ஏன், எந்த உணர்ச்சியும் வரல. அப்போ எனக்குள்ள உனக்கான இடம் என்னவா இருக்கும்?” என்றாள் வெற்றுக்குரலில்.

“இந்த உறவுக்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்ல. எனக்கு இதுல நம்பிக்கையும் இல்ல. சோ, புருஷன்னு சொல்லிட்டு என்னை நெருங்க வேண்டாம். மீறி வந்தாலும் நான் மறுக்கமாட்டேன். என் பாட்டி விருப்பத்துக்காக உன்னை கல்யாணம் பண்ணேன். இப்போ உன் விருப்பத்துக்காக உன்னோட இருப்பேன். முடியும் என்னால. உனக்கு அதுதான் விருப்பம்ன்னா, இப்பவும் நான் தயாரா தான் இருக்கேன்.” என்றவளை என்ன செய்ய முடியும்.

சேஷா ஆத்திரம் குறையாதவனாக நிற்கும்போதே, “இனி இந்த கழுத்தை பிடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம். எனக்கு இருக்க ஆத்திரத்துக்கு கத்தியை எடுத்து குத்தினாலும் ஆச்சர்யம் இல்ல.” என்று அவள் எச்சரிக்க, அவளுக்கு பதில் கொடுக்காமல் வெளியே நடந்தவன் முகத்தில் தானாக ஒரு புன்னகை தவழ தொடங்கியது.

Advertisement