Advertisement

மௌனமாய் எரிகிறேன் 05

சேஷன் குழுமம் நடத்தவிருந்த விருது வழங்கும் விழாவிற்கான வேலைகளால் நிற்கக்கூட நேரமில்லாதவளாக, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தாள் தேவசேனா. சேஷன் அவளிடம் பேசி இரண்டு நாட்கள் கடந்திருக்க, இதற்குள் பாதி வேலைகளை முடித்திருந்தாள் அவள்.

என்னவோ, அவன் ‘செய்யாதே…’ என்ற நிமிடமே, ‘செய்தால் என்ன…’ என்று தோன்றிவிட்டது அவளுக்கு. அந்த எண்ணத்தின் வெளிப்பாடு தான் அவளின் இந்த தீவிரம்.

அவளின் தொழில் இது. அவளின் பாதையில் இந்த விழா நிச்சயம் ஒரு மைல்கல்லாக அமையப்போகும் நிகழ்வு. இதில் யாருக்காகவும் அவள் யோசிப்பதாக இல்லை. தொழிலில் இரக்கம், கருணை இதற்கெல்லாம் இடம் கிடையாது என்பதில் உறுதியாக இருந்தாள் தேவசேனா.

இந்த துறையில் காலடி எடுத்துவைத்த முதல் இரண்டு வருடங்கள் தான் பட்ட காயங்களை முயன்று நினைவூட்டிக் கொண்டவள் தடையில்லாமல் தனது பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தாள். ஆனால், சேஷா விட வேண்டுமே.

அவனுக்கு தேவாவைப் போல் லட்சியங்களோ, கனவுகளோ எதுவும் கிடையாதே. அவனுக்கு அவனது சுக துக்கங்கள் மட்டுமே பெரியதாக இருக்க, எப்போதும்போல் இப்போதும் தன்னைப்பற்றி மட்டுமே யோசித்தான் அவன்.

அவனது எண்ணம் மொத்தமும் இந்த நிகழ்ச்சியை எப்படியும் கெடுத்து விட வேண்டும் என்பதாக மட்டுமே இருக்க, சரியான நேரத்தில் அவனிடம் பகடையாக சிக்கியிருந்தாள் ஆத்மிகா.

AN தொலைக்காட்சி குழுமத்தின் வாரிசு அவள். அவளுக்கும் தேவசேனாவோடு தீர்க்க வேண்டிய பழைய கணக்குகள் பல இருக்க, தெரிந்தே தான் இவர்களின் சதுரங்கத்தில் தானும் ஓர் அங்கமானாள் அவள். அதோடு சேஷாவை வைத்தும் அவள் சாதிக்க வேண்டியது நிறைய இருந்தது.

அந்த உயர்தர கேளிக்கை விடுதியில் இரவு நேரத்தில் சேஷாவுடன் நேரத்தை செலவிட்டவள் பாதி இரவில் தான் வீட்டிற்கு கிளம்பினாள். சேஷாவுடன் இருந்தாலும், அவன் அளவுக்கு மது எடுக்கவில்லை அவள்.

அந்த கேளிக்கை விடுதியின் வாயில் வரை சேஷாவுடன் இணைந்தபடியே நடந்தவள் அந்த விடுதியின் வாயிலில் வைத்து அவனை கட்டியணைத்து விடைபெற, சேஷா இயல்பாகவே இருந்தான்.

ஆத்மீ காரில் ஏறி கிளம்பவும், நிவாஸ் சேஷாவை காரில் அள்ளிவந்து அவன் வீட்டில் விட்டு கிளம்பிவிட்டான். அவனைப் பொறுத்தவரையில் அத்துடன் முடிந்தது. இது தினமும் நடக்கும் கூத்துதானே.

ஆனால், ஆத்மீ அத்துடன் விடுவதாக இல்லையே. அடுத்தநாள் காலையில் வெளிவந்த செய்தித்தாள்களில் மேலோட்டமாக ஒரு செய்தி.

ECR சாலையில் இருக்கும் ஒரு உயர்தர கேளிக்கை விடுதியில் நடிகர்களும், பெரிய தொழில் அதிபர்களின் பிள்ளைகளும் எல்லை மீறுவதாக எழுதி இருந்தனர்.

அதோடு நிறுத்தாமல், திரைத்துறையின் முன்னணி நட்சத்திரமான பாற்கடல் நாயகனும், தொலைக்காட்சி அதிபர் ஒருவரது மகளும் அந்த விடுதியில் தங்கள் காதலை வளர்ப்பதாகவும் செய்தி வெளியிட்டு இருந்தது அந்த செய்தித்தாள் நிறுவனம்.

சேஷா அப்படி ஒரு செய்தி வெளிவந்ததே தெரியாமல் படப்பிடிப்புக்கு கிளம்பியிருக்க, நிவாஸுக்கும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இல்லாததால் சேதி தெரியவில்லை. ஆனால், தேவா அப்படியில்லையே.

காலையில் அலுவலகத்தில் நுழைந்த கணமே மலர் அந்த செய்தித்தாளை அவளிடம் நீட்டிவிட, முகத்தில் எந்த உணர்வுமில்லாமல் அந்த செய்தித்தாளை வெறித்து கொண்டிருந்தாள் அவள்.

அவளுக்கு சேஷாவின் செயலை நினைத்து வருத்தமோ, கவலையோ, கோபமோ ஏதும் இயல்பாகவே வரவில்லை. அவளை பொறுத்தவரை சேஷா அவளுக்கு உரிமையானவன் அல்ல என்ற எண்ணம் தான். அவளின் கோபம் மொத்தமும் அந்த செய்தி நிறுவனத்தின் மீது தான்.

‘இவர்களுக்கு எங்கிருந்து இத்தனை தைரியம் வந்தது.’ என்று கொதித்தவளாக, அவள் விஷயத்தை துருவ, அப்போதுதான் ஆத்மீ இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறினாள் மலர்விழி.

தேவசேனாவிற்கு அத்தனை முடிச்சுகளும் அவிழ்ந்த நிலை. மலர்விழியைப் பார்த்து ஏளனமாக சிரித்தபடி, “அக்கா இடத்துக்கு தங்கச்சியே வர நினைக்கிறா போல.” என்று அலட்சியமாக கூறியவள் தனக்கு முன்பு இருந்த செய்தித்தாளை மடித்து குப்பை கூடையில் வீசிவிட்டாள்.

“உனக்கு வருத்தமா இல்லையா தேவா?” என்று அவளைத் தெரிந்தும் மலர் வினவ,

“குப்பையில போட வேண்டிய விஷயத்துக்கெல்லாம் நான் ஏன் வருத்தப்படணும் மலர்.”

“சேஷா உன் புருஷன் தேவா.”

“அப்பப்போ சொல்லிட்டே இரு. எனக்கே மறந்திரும் போல.” என்று நக்கலாக கூறியவள் அடுத்த வேலையை கவனிக்க தொடங்கிவிட, “ஆத்மீ சும்மா இருக்கமாட்டா தேவா. அவ நிச்சயமா சேஷாவை வச்சு ஏதோ திட்டம்போட்டு இருக்கா.” என,

“என்னவும் செய்யட்டும் மலர். இது அவங்க விஷயம். இதுல நான் தலையிடறதா இல்ல.”

“உன் அத்தம்மா கேட்டாலும், இதே பதில்தானா?”

“இந்த விஷயம் எக்காரணம் கொண்டும் அவங்க காதுக்கு போகக்கூடாது மலர்.” என்று கடுமையாக எச்சரித்தாள் தேவா.

“அவன் சட்டையைப் பிடிச்சு சண்டையாவது போடேண்டி… கொஞ்சமாவது மனசு ஆறிடும் எனக்கு.” என்று அவளையும் மீறி கத்தி விட்டாள் மலர்.

“அதுக்கெல்லாம் எனக்கு நேரமுமில்ல… உரிமையும் இல்ல. இந்த கோபம், வருத்தம், இதுக்கெல்லாம் எங்க உறவில் இடம் கிடையாது மலர். இது இப்படித்தான்… தெரிஞ்சுதானே நானும் சம்மதிச்சேன். அதனால நீ நினைக்கிற அளவுக்கெல்லாம் வலிக்காது எனக்கு. போய் வேலையைப் பாரு.” என்று சாதாரணமாகவே பேசினாள் தேவசேனா.

ஆனால், மலர் தன் தோழியின் நிலையை சகிக்க முடியாமல் கண்ணீர் சிந்த, “இதுக்கெல்லாம் தேவையே இல்ல மலர். டைம்  வேஸ்ட் பண்ணாம எனக்கு ஹெல்ப் பண்ணு.” என்று அதட்டினாள் தேவா.

அடுத்த சில நிமிடங்களில் மலர் முகம் கழுவி வந்துவிட, அதன்பின்னான நேரங்கள் மொத்தமும் வேலையில் கழிந்தது. அவர்கள் அத்துடன் சேஷாவையும், அவனைப் பற்றிய செய்தியையும் மறந்துவிட, ஆத்மீ அத்தனை சுலபத்தில் விடுவதாக இல்லை.

அன்றைய பத்திரிக்கை செய்தியைப் பற்றிய விவாதங்கள் சில வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியிருக்க, அன்று மாலை தொலைக்காட்சி செய்திகளும் இந்த விஷயத்தை கையில் எடுத்திருந்தது. சின்னதாக தோன்றிய தீப்பொறி பூதாகரமாக மாறியபின்பே, விஷயம் தன்னைப்பற்றியது என்பதை உணர்ந்தான் சேஷா.

 எப்போதும் தேவா இதுபோன்ற செய்திகளை வெளிவரவே விட மாட்டாள் என்பதால், எப்போதுமே இந்த ஊடகங்கள் குறித்தெல்லாம் கவலை கொண்டதே கிடையாது அவன். நேற்றும் அந்த எண்ணத்தில் தான் சற்று அலட்சியமாக நடந்து கொண்டது.

ஆனால், ஆத்மீ இப்படி தன்னை இழுத்துவிடுவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை அவன். தொலைக்காட்சியை வெறித்துக் கொண்டிருந்த அவன் கண்கள் எப்போதும்போலவே அலட்சியத்தை சுமந்திருந்தாலும், மனதின் ஒரு ஓரம் தன் பாட்டியின் நினைவு அரித்துக் கொண்டிருந்தது.

அவர் இருந்திருந்தால், நிச்சயம் துடித்துப் போயிருப்பார் என்று மனம் எடுத்துரைக்க, வெளிப்படையாக அவன் பெயரை எந்த ஊடகமும் கூறவில்லை என்பது மட்டுமே ஆறுதல். ஆனால், அவன்தான் என்று அத்தனைப் பேருக்கும் தெரியும்படியாக தான் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது.

நெடுநேரம் தனது அறையில் அமர்ந்திருந்தவன் எழுந்து வெளியே வர, அன்னையின் நினைவு வரவும் நேராக அவரது அறைக்கு சென்றான். அவன் சென்ற நேரம் தனது கண்ணீர் வடிந்த விழிகளைத் துடைத்துக் கொண்டிருந்தார் கலையரசி.

அறையின் வாசலில் வந்து நின்றவனைக் காணவும், “என்ன வேணும் சேஷா. சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்றார் இயல்பாக.

அப்போதைக்கு அவரிடம் பேசும் துணிவில்லாதவனாக, தலையசைத்து மறுத்து வெளியேறிவிட்டான். செல்லும் அவனையே வெறித்தபடி அமர்ந்திருந்தார் கலையரசி. கண்களை மூடி கட்டிலில் அமர்ந்திருந்தவர் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வடிந்தபடியே இருந்தது.

அவரது கண்ணீர் தேவா வீடு வரும்வரையும் தொடர, தேவா அவளின் வழக்கமாக தன் அத்தம்மாவின் அறையை எட்டிப்பார்க்க, அவர் உறங்காமல் இருப்பது தெரியவும், தனது அறைக்கு கூட செல்லாமல் அவர் அருகில் வந்து அமர்ந்தாள் தேவா.

அவளது அரவத்தில் கண் திறந்தவர், “என்ன தேவாம்மா.” என,

அவரின் கண்ணீரைக் கண்டு பதறிப் போனாள் மருமகள். “என்னாச்சு அத்தம்மா. ஏன் அழறீங்க?” என்று அவள் பதட்டம் கொள்ள,

“அழறதுக்கு காரணமா இல்ல.” என்று சலித்துக்கொண்டார் அவர்.

“என்ன அத்தம்மா?” என்று தேவா மீண்டும் ஒருமுறை கேட்க,

“என்ன சொல்ல சொல்ற தேவா? நான் வாங்கி வந்த வரம் அப்படி இருக்கே. ஒரே பிள்ளையைப் பெத்து அவன் என் கண் முன்னாடியே நாசமாகிறதை பார்த்தும் எதுவும் செய்ய முடியாத இருக்கேனே. நான் கண்ணீர் விட அது ஒன்னு போதாதா?

“அவன் வாழ்க்கையைப் பத்தி அவனுக்கே கவலையில்ல அத்தம்மா. நீங்க ஏன் அவனை நினைச்சு உங்க உடம்பை கெடுத்துக்கணும்.?”

“உன்னை மாதிரி என்னால அவனை விட முடியாது தேவா. நான் பெத்த பிள்ளை அவன். நடக்கிறதெல்லாம் பார்க்கும்போது, நல்லவளோ, கெட்டவளோ அவன் ஆசைப்பட்ட பெண்ணையே அவனுக்கு கட்டி வச்சிருக்கலாம்னு நினைக்க தோணுது எனக்கு.” என்றுவிட்டார் கலையரசி. அவரைச் சொல்லியும் குற்றமில்லையே. ஒரு தாயாக அவரின் ஆதங்கம் அது.

ஆனால், தேவா… அவளுக்கும் தாய் இருந்திருந்தால் அவளைப் பற்றியும் கவலை கொண்டிருப்பாரோ என்னவோ…

என்னதான் வலிக்கவில்லை என்று கூறிக்கொண்டாலும், கலையரசியின் இந்த வார்த்தைகள் தேவாவுக்கு நிச்சயமாக வலித்தது. ஆனால், எப்போதும்போல் தனக்குள் மறைத்துக் கொண்டவள், “இப்போ யோசிச்சு எதுவும் பயனில்லையே… படுத்து தூங்குங்க அத்தம்மா.” என்று முடிக்க நினைக்க, கலையரசிக்கு தனது இயல்பாய் மீறி கோபம் வந்துவிட்டது.

“நீ ஏன் தேவா இப்படி இருக்க? உனக்கு ஒருதுளிகூட பாசமில்லையா என் மகன் மேல? மொத்த சொத்தும் உன் கைக்கு வந்துடுச்சே… அதனால என் மகன் எப்படியும் போகட்டும்ன்னு நினைக்கறியா?” என்று தேவாவை பிடித்து உலுக்கினார் அவர்.

“என்னை என்ன செய்ய சொல்றிங்க அத்தம்மா?” என்று பொறுமையாகவே தேவா கேட்க,

“என் மகனுக்காக என்ன செஞ்ச நீ? உன் பாட்டிக்கா தொழிலைப் பார்க்கிற. உன் பேர்ல இருக்க சொத்துக்காக ஓயாம உழைச்சுட்டு இருக்க… என் மகனை மட்டும் விட்டுட்டியே.” என்று அவர் மீண்டும் குற்றம் சாட்டுகையில், தேவசேனா மௌனம் காக்கவில்லை.

“இதைப்பத்தி நாம பேச வேண்டாம் அத்தம்மா.” என்று அழுத்தமாக கூறியவள் அதற்குமேல் நிற்காமல் அந்த இடத்தைவிட்டு வெளியேறி விட்டாள்.

ஆனால், அவள் மேலும் சில நிமிடங்கள் அவருடன் செலவழித்து இருக்கலாம். அவரின் கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளித்து இருக்கலாம். அப்படி செய்திருந்தால், பின்னர் எழவிருந்த மிகப்பெரிய ஒரு பிழை நேராமல் போயிருக்கும்.

ஆனால், அவளைச் சொல்லியும் குற்றமில்லையே. சுற்றி நிற்கும் அத்தனைப் பேரும், அடுத்தவன் பிழைக்கு அவளை பொறுப்பாளியாக்க முயன்றால், அவளும் தான் என்ன செய்வாள்…

தனது அறைக்கு வந்தவள் எதையும் சிந்திக்க பிடிக்காதவளாக, மருத்துவர் கொடுத்திருந்த சில மாத்திரைகளை வெறும் வயிற்றில் விழுங்கிவிட்டு, மெத்தையில் விழுந்துவிட்டாள்.

அடுத்த சில நிமிடங்களில் அவளையும் மீறி, மாத்திரையின் பயனால் அவள் உறங்கிப்போக, அங்கே தேவா அறைக்கு வருவாள் என்று வெகுநேரம் காத்திருந்தான் சேஷா.

ஆனால், அடுத்தநாள் காலை அவன் கிளம்பும் வரையிலும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தாள் தேவா. அன்று காலை பதினோரு மணிக்கு மேல்தான் அவள் வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பியது.

கலையரசிக்கு அவர் நேற்று பேசியது தவறென்று மனம் உறுத்திக் கொண்டே இருந்ததில், காலை எட்டுமணி முதலே தேவாவுக்காக காத்திருந்தார் அவர். ஆனால், தேவா அத்தனை தாமதமாக வந்ததும், நன்கு உறங்கி எழுந்த அவளது முகமும் அதிருப்தியைக் கொடுக்க, அவளிடம் எதுவும் பேச மனமற்றவராக மீண்டும் தனது அறையில் அடைந்து கொண்டார் கலையரசி.

தேவா எப்போதும்போலவே, சலனமில்லாத முகத்துடன் அலுவலகம் வந்துசேர, அதற்குமேல் எதையும் சிந்திக்கக்கூட நேரமில்லாமல் வேலைகளை இழுத்துக் கொண்டாள்.

ஆனால், அவளின் அந்த நிலையை நீடிக்க விடாமல் அவளுக்கான அடுத்த தலைவலியை இழுத்து விட்டிருந்தான் சேஷா. அன்று மாலை நான்கு மணி அளவில் சேஷாவின் கார் எதிலோ மோதி நிற்பதாக வந்த தகவலில் சற்றே பயந்தவளாக தான் அவள் கிளம்பியது. ஆனால், மருத்துவமனையில் மதுவின் வாடையுடன் அமர்ந்திருந்தவனைக் காணவும், அத்தனையும் மாறிப் போனது.

சட்டென மூண்ட கோபத்துடன் தேவா அவனை நெருங்க, அந்த அறையின் மற்றொரு பக்கம் இருந்த ஓய்வறையில் இருந்து வெளியே வந்தாள் ஆத்மீகா.

அதற்குள் தேவாவின் கரங்கள் சேஷாவின் சட்டையைப் பிடித்திருக்க, “என்ன பண்றிங்க தேவா?” என்று அவர்களை நெருங்கினாள் ஆத்மீ.

தேவா சேஷாவை மறந்தவளாக, “உனக்கு இங்கே என்ன வேலை?” என்று வினவ,

“நாங்க கார்ல வரும்போது தான் ஆக்சிடெண்ட். நான்தான் சேஷாவை இங்கே அட்மிட் பண்ணேன். பயப்படாதீங்க. கேஸ் எல்லாம் என் அப்பா பார்த்துக்கறதா சொல்லிட்டார். நீங்க கவலைப்படாதீங்க.” என்ற நொடி சேஷாவின் சட்டையில் இருந்த தேவாவின் கைப்பிடி தளர்ந்துவிட்டது.

“குட்…” என்ற ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டவள் அதற்குமேல் அங்கே நிற்காமல் கிளம்பிவிட்டாள்.

இந்த விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே உண்மையில் புரியவில்லை அவளுக்கு. ஆனால், அங்கே நின்று அவளுடன் சண்டையிடும் அளவிற்கு தான் தரம் தாழவில்லை என்பதில் உறுதியாக இருக்கவும், அங்கு நிற்க முடியாமல் வெளியேறி இருந்தாள்.

ஆனால், அவளின் அன்றைய சோதனைகள் இன்னும் நீள வேண்டும் என்பது அவளின் விதிப்பயன் போலும். அவள் அலுவலகம் வந்த ஒருமணி நேரத்தில் ஸ்ரீனிவாஸ் அவளைத்தேடி வந்தான்.

எப்போதும் தேவசேனாவின் மீது பெரிதாக மதிப்பெல்லாம் கிடையாது அவனுக்கு. அவன் நண்பன் வாழ்வு இப்படி இருக்க முக்கிய காரணம் தேவசேனா தான் என்பது அவனது எண்ணம்.

இன்று அவன் கண்ட காட்சிகள் அவனை பொறுமையிழக்கச் செய்யவும், இரண்டில் ஒன்று கேட்டுவிடும் எண்ணத்தில் தான் அவன் தேவசேனாவைத் தேடி வந்தது.

தேவா வந்தவனை வாவென்றும் அழைக்காமல் அமர்ந்திருக்க, அவளின் மரியாதையை எதிர்பாராமல் அவள் முன்னே நின்றவன், “சேஷாவை என்ன செய்யுறதா இருக்கீங்க? அவன் சொத்தையெல்லாம் பிடுங்கிட்டு அவனை துரத்திவிடுறது தான் உங்க எண்ணமா?” என்றான் எடுத்த எடுப்பில்.

‘உனக்கென்னடா நான் பதில் சொல்றது.’ என்ற ரீதியில் அவள் நிற்க, “மரியாதையா பேசு நிவாஸ்.” என்று அதட்டினாள் மலர்.

“ஏய்… வாயை மூடு முதல்ல. உனக்கும் இந்த விஷயத்துக்கும் என்ன சம்பந்தம். உன் மேடம் வாயைத் திறக்கட்டும்.” என்று அவளையும் பேசிவிட்டான் நிவாஸ்.

“அவளை பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல நிவாஸ்.” என்று தேவா வாய்திறக்க,

“நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லுங்க. எனக்கு அவகிட்ட பேசணும்னு எந்த அவசியமும் இல்லையே.” என்றான் அவன்.

“எதுக்காக உனக்கு பதில் சொல்லணும்? அவன் போற இடத்துக்கெல்லாம் கூடவே போய் கூத்தடிக்கிறியே… அதுக்காகவா.”

“அதற்கு காரணம் நான் இல்ல…”

“ஓ.. சரி நாந்தான் காரணம். இப்போ புதுசா ஒருத்தியை கூட வச்சிருக்காரே… அதற்கும் நாந்தான் காரணமா?”

“நீங்க ஒழுங்கா இருந்தா அவன் ஏன் அடுத்தவ பின்னாடி போறான்…” என்று அந்த நேர ஆத்திரத்தில் நிவாஸ் கூறிவிட, “ஏய்…” என்று தேவா வாய்திறப்பதற்கு முன்பே மலர் கத்தியிருந்தாள்.

தீராத கோபத்துடன் அவள் கையோங்கிவிட, நிவாஸ் அவளின் பேச்சில் கோபமாக இருந்தவன் அவள் கையை உயர்த்தவும் அவளை பிடித்து தள்ளியிருந்தான்.

தேவா மலர் அவனை நெருங்கும்போதே எழுந்திருந்ததால், மலர் கீழே விழாமல் தாங்கிப் பிடித்து கொண்டாள். ஆனால், நிவாஸின் மீதான கோபம் அடங்க மறுக்க, கன்னம் பழுக்கும் அளவுக்கு நிவாஸை அறைந்திருந்தாள் அவள்.

“கொன்னுடுவேன் ராஸ்கல்… என் வாழ்க்கையை விமர்சிக்கிற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா உனக்கு. என் இடத்துல நின்னு, என் பிரெண்ட் மேல கையை வைக்கிற அளவுக்கு வந்தாச்சா? யார் கொடுத்த தைரியம் இது.” என்றவள் பேசிக்கொண்டே இன்னும் ஒரு அறை விட்டிருந்தாள்.

“இனி ஒருமுறை நீ என் கண்ல படக்கூடாது. வெளியே போடா.” என்று அவள் கத்திவிட, அவளை எதுவும் செய்ய முடியாத ஆத்திரத்துடன் தான் வெளியேறினான் ஸ்ரீனிவாஸ்.

Advertisement