Advertisement

மௌனமாய் எரிகிறேன் 04

வளைகாப்பு வீட்டில் இருந்து கிளம்பிய தேவசேனா அலுவலகத்தில் முக்கிய வேலைகள் ஏதுமில்லாததால், மலரை அனுப்பிவிட்டு தானும் தனது வீட்டை வந்தடைந்தாள். நேரம் மாலை ஐந்தை கடந்திருக்க, கலையரசி அவரின் வழக்கமாக ஓய்வெடுக்கச் சென்றிருந்தார்.

அது இன்னும் வசதியாக யாரையும் பார்க்கவேண்டிய தேவையிராமல் தனது பாட்டியின் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள் தேவசேனா. மீண்டும் ஒருமுறை அக்ஷயின் வார்த்தைகள் காதுகளில் ஒலிக்க, எப்போதும் கடந்து விடுபவள் தான். ஆனால், என்னவோ மனம் சோர்வாக உணர்ந்தது.

‘அவன் சொல்படி தானே இருக்கிறது உன் வாழ்க்கை’ என்று மனம் எள்ளி நகையாட, இந்த தன்னிரக்கம் தன்னைக் கொன்றுவிடும் என்று மீண்டெழுந்தவள் அந்த அறையின் மற்றொரு புறம் இருந்த அவளது அலுவலக அறைக்குள் ஒளிந்து கொண்டாள்.

அந்த அறையின் மேசையில் இருந்த கோப்புகளில் கவனம் செலுத்தியவள் அப்படியே அந்த வேலைகளில் மூழ்கிவிட, அவள் அந்த இடத்திலிருந்து மீண்டும் எழுந்தபோது நேரம் பதினொன்று. அதுவரை பொறுத்துப் பார்த்த கலையரசி அவளைத் தேடி அலுவலக அறைக்கே வந்துவிட்டார்.

“தேவா…” என்றபடியே அவர் வர,

“வாங்க அத்தம்மா…” என்றபடியே எழுந்து கொண்டாள் தேவசேனா.

“சாப்பாட்டைக் கூட மறந்து அப்படி என்ன வேலை தேவா.. நேரம் என்னாகுது பார்த்தியா?” என்று கலையரசி கோபம் கொள்ள,

“சாப்பிடலாம் அத்தம்மா.” என்றவள் அவள் தோளில் கையை போட்டுகொண்டு அவருடன் அந்த அறையை விட்டு வெளியே வர, கீழே சேஷாவின் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

அதுவரை இருந்த இலகுவான நிலை சட்டென விடைபெற, தனக்குள் இறுகி நின்றாள் தேவசேனா. கலையரசி அவளின் ஒதுக்கத்தை கண்டுகொள்ளாமல், அவள் கையைப் பிடித்தபடியே தொடர்ந்து நடக்க, அமைதியாக அவர்பின்னே நடந்தாள் அவர் மருமகள்.

கலையரசி படிகளில் இறங்குவதற்கும், சேஷா வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருக்க, தாயைப் பார்த்து தேங்கி நின்றான் அவன். கூடவே, பின்னால் வரும் மனைவியின் மீதும் ஒருநொடி பதிந்து மீண்டது அவன் பார்வை.

ஆனால், அவன் பார்வையைக் கண்டுகொள்ளாதவளாக உணவு மேசையில் சென்று அமர்ந்துவிட்டாள் தேவசேனா. அந்தநொடி அவள் சேஷாவிற்கு சவாலாகிப் போக, வெளியில் பத்து மணிக்கே உணவை முடித்திருந்தவன் வீம்புக்கென சென்று அவள் எதிரில் அமர்ந்தான்.

கலையரசி தேவாவிற்கு தட்டு வைத்து பரிமாற, தனக்கும் ஒரு தட்டை எடுத்துக் கொண்டவன், “எனக்கும் வைங்க.” என, மகன் சாப்பிட அமர்ந்ததில் மகிழ்ந்து போனவராக வேகமாக அவனுக்கும் பரிமாறினார் கலையரசி.

பசி இருந்தால் தானே அவன் உணவைத் தேட… அவன் கண்கள் தேவாவை தீவிரமாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. ஆனால், ‘உன் பார்வை என்னை பாதிக்காது.’ என்பதுபோல் வேகமாக உண்டு முடித்தவள் பத்து நிமிடத்திற்கெல்லாம் எழுந்துவிட்டாள்.

சேஷாவும் அவளுடனே எழுந்துவிட, தேவா கலையரசியை அவர் அறையில் விட்டு மாடியேறிய நேரம், அவளுக்காக அவர்கள் அறையில் காத்திருந்தான் சேஷா.

தேவா அறைக்குள் நுழைந்தவள் அவனை கண்டுகொள்ளாமல் உடையை மாற்றி வந்து அந்த அறையில் இருந்த திவானில் படுத்துவிட்டாள்.

முகத்தில் அடித்ததுப் போன்ற அவளது இந்த செயலில் அதுவரை கைவசமிருந்த நிதானத்தை பறக்க விட்டவனாக எழுந்து அவளை நெருங்கினான் சேஷா.

படுத்திருந்தவளின் முழங்கையைப் பற்றி எழுப்பியவன், “என்ன நினைச்சுட்டு இருக்க சேனா நீ. யாரைக்கேட்டு இந்த அவார்ட் பங்க்ஷனை பிளான் பண்ண? இந்த அவார்ட் பங்க்ஷன் நடக்கக்கூடாது…” என்று அழுத்தந்திருத்தமாக கூற, தேவாவின் பதில் ஒரே ஒரு பளீரென்ற புன்னகைதான்.

சேஷா அவளின் சிரிப்பை கண்டு குழப்பம் கொள்ள, “நீ இப்படி பதறித் துடிக்கிறது கூட நல்லாதான் இருக்கு.” என்று இன்னும் அவனை வெறுப்பேற்றினாள் தேவா.

“சேனா…” என்று சேஷா கோபம் கொள்ள, தன் மீதிருந்த அவன் கையை தட்டிவிட்டவள் எழுந்து நேராக அமர்ந்தாள்.

“இந்த அதட்டி மிரட்டுற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். என் கம்பெனிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? என்னை இதை செய், செய்யாதன்னு சொல்ல நீ யாரு?” என்று கொஞ்சமும் தயங்காமல் தேவசேனா கேட்டுவிட,

“என்னையா யாருன்னு கேட்கிற? உன்னோட இத்தனை ஆட்டத்துக்கும் காரணமான சேஷா குரூப்ஸ உனக்கு பிச்சையா போட்டவன் நான்…”

“குட் ஜோக்… நீ எனக்கு பிச்சை போட்டியா? நான் மட்டும் இல்லாம போயிருந்தா, நீயே பிச்சையெடுக்கத்தான் போயிருக்கணும். உன்னை பெத்து வளர்த்த பாவத்துக்கு என் அத்தம்மாவையும் சேர்த்து நடுத்தெருவில் நிறுத்தி இருப்ப நீ… உனக்கெல்லாம் என்னை கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கு.?’

“உன் கழுத்துல தெரியா தனமா தாலி கட்டி தொலைச்சு இருக்கேனே… அது போதாது…”

“தாலி கட்டிட்டா… புருஷனா நீ? கேட்கவே காமெடியா இருக்கு.. வெளியே சொல்லாத.” என்று சேனா அவனை மட்டம் தட்ட முயற்சிக்க, அவள் கழுத்தைப் பிடித்து விட்டான் சேஷா.

“என்னை கொலைகாரனா மாத்தாத சேனா.” என்று கண்களை மூடி சேஷா கத்தி முடிக்க, அவன் எதிர்பார்த்த அளவிற்கு எந்த உணர்ச்சியும் இல்லாமல் நின்றிருந்தாள் தேவசேனா.

“முடிஞ்சதா… சேஷா குரூப்ஸ் என்னோடது. நான் நினைக்கிறது தான் அங்கே நடக்கும். என்னைமீறி யாரும் எதுவும் செய்ய நான் விடமாட்டேன். அதோட இந்த அவார்ட் ஷோ… யார் தடுத்தாலும் நடக்கும்.” என்றவள் நின்ற இடத்திலிருந்து நகர தொடங்க, அவள் கைப்பிடித்து நிறுத்தினான் சேஷா.

“நீ தப்பு பண்ற சேனா. இது தேவையே இல்லாத விஷயம்.”

“என் தேவை எதுன்னு தீர்மானிக்கிற உரிமையை நான் எப்போ உன்கிட்ட கொடுத்தேன்?” என்று சிரிப்புடன் தேவா கைகளை கட்டிக்கொள்ள,

“வேண்டாம் சேனா…” என்று விரல் நீட்டி அவளை எச்சரித்தான் சேஷா.

“இந்த விஷயமா பேச எதுவும் இல்ல. என் நேரத்தை வீணடிக்காத.” என்று சேனா முடித்துவிட,

“நீ இதுக்காக வருத்தப்படுவ சேனா.” என்று எதிரில் நின்றவன் மிரட்டலில் இறங்க, மொத்தத்திற்கும் மோசமாகிப் போனது.

“என்ன பண்ணுவ? என்ன செய்ய முடியும் உன்னால?” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றுவிட்டாள் அவன் மனைவி.

“என்ன வேணாலும் பண்ணுவேன்…”

“ஹா… என் புருஷன் இன்னொருத்திகூட பெட்ல இருந்ததை பார்த்துட்டேன். சேஷா குரூப்ஸ் வாரிசு குடிச்சுட்டு பொருக்கி மாதிரி பப்ல விழுந்து கிடந்ததையும் பார்த்தாச்சு. இது எல்லாத்துக்கும் மேல, உனக்கு அதீதமா போதை தலைக்கு ஏறுற நேரம், அம்மு… அம்முன்னு புலம்பிட்டு என் பக்கத்துல வர்றியே… இதைவிட மோசமா என்ன நடந்திட முடியும்?”

“நீ என்ன செஞ்சாலும் சரி. நீ செய்யுற எந்த விஷயமும் என்னை பாதிக்காது. உன்னால முடிஞ்சதைப் பாரு.” என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் நடக்க, அவளை வெளியேற விடாமல் அவளுக்கும் கதவுக்கு இடையில் வந்து நின்றான் சேஷா.

சேனா சோர்ந்து போனவளாக அவனைப் பார்க்க, “இதுக்குமேல நீ வருத்தப்படும்படி என்னால நடக்க முடியும் சேனா… நீ இந்த அவார்ட் ஷோவை நடத்தாமலே இருந்திருக்கலாம்ன்னு நினைக்கும்படி செய்வேன் நான்.”

“எனக்கு ஒரு விஷயம் புரியல. நீ ஏன் இந்த அளவுக்கு துடிக்கிற? அதுதான் உன் அம்மு, உன்னோட தெய்வீக காதலுக்காக உயிரையே விட்டுட்டாளே… இதுக்குப்பிறகு என்ன நடந்தா உனக்கு என்ன?”

“சேனா ப்ளீஸ்…” என்று இறங்கி ஒலித்தது சேஷாவின் குரல்.

அந்த குரல் ஏதோ ஒருவகையில் அவளை திருப்தியாக உணரச் செய்தாலும், அவள் பின்வாங்குவதாக இல்லை.

சேனா அசையாமல் நிற்க, “இது வேண்டாம் சேனா… விட்டுடு.” என்று நிதானமாக சொல்லிப் பார்த்தான் சேஷா.

“இது என்னோட தொழில். உன்னோட சுய விருப்பு வெறுப்புகளுக்கு எல்லாம் இதில் இடம் கிடையாது. இந்த விஷயத்துல என்னால எதுவும் செய்ய முடியாது.” என்று முடித்துக் கொண்டாள் சேனா.

சேஷாவும் அதற்குமேல் அவளிடம் எதையும் கேட்டு நிற்கவில்லை. அவள் வழியில் இருந்து விலகியவன் கதவை பெரிதாக திறந்துவிட, வேகமாக சேனா வெளியேறவும், “பெஸ்ட் ஒப் லக்…” என்று ஏளனமாக நகைத்தது சேஷாவின் குரல்.

சேனா யோசனையுடன் திரும்பி பார்க்க, “சின்ன பொண்ணு சொல்லிப் பார்க்கலாம்ன்னு நினைச்சேன். தப்புன்னு இப்போ புரியுது. இனி ஆக்ஷன் தான்.” என்றவன் எப்போதும்போல் வசீகரமாக புன்னகை சிந்த, சேஷா அவனை ஒரு பொருட்டாகவே கருதாமல் அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டாள்.

Advertisement