Advertisement

மௌனங்கள் இசைக்கட்டுமே 04

சேஷன் வாய்ப்பு கேட்டு நிற்க, வாய் திறக்கமாட்டேன் என்ற உறுதியுடன் நின்றாள் அவன் மனைவி. சேஷனே மீண்டும், “கிவ் மீ ஒன் பைனல் சான்ஸ்” என்றான். தேவா தன் கன்னத்திலிருந்த அவன் கைகளை விலக்கிவிட முயற்சிக்க, கன்னத்திலிருந்து தானே கைகளை எடுத்துக் கொண்டவன் அவளது கைகளை பிடித்துக் கொண்டான்.

தேவா, “இதெல்லாம் வேண்டாம் சேஷா. என்னால முடியும்னு தோணல. என்னால நடந்த எதையும் மறக்க முடியல. எதுவுமே வேண்டாம்ன்னு மட்டும்தான் நினைக்க முடியுது.” என்று தன் கைகளை விலக்கி கொள்ள,

“நான் மறக்க வைக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடு” என்று மன்றாடினான் சேஷன். இன்னும் அவள் கைகளைப் பிடித்திருந்த பிடி இறுகியது.

“நீ என்னை மறந்து போனது தான் பிரச்சனையே. உன் மனைவியா நினைச்சிருக்க வேண்டாம். ஆனா, ஒரு சக மனுஷியா கொஞ்சமே கொஞ்சம் மரியாதை கொடுத்திருக்கலாம் இல்லையா. எவ்ளோ கீழ்த்தரமா நடந்திருக்க நீ. இன்னைக்கு நீ வந்து கூப்பிட்டதும் நான் அதையெல்லாம் மறந்துட்டு உன்னோட வந்திடணுமா… இது எப்படி நியாயமாகும்.”

“நான் நியாயம் பேச வரல சேனா. நடந்தது மொத்தமும் என்னோட தப்பாவே இருக்கட்டுமே. நீ எனக்கு மன்னிப்பு கொடு. நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் செய்த அதே தப்பை இப்போ இந்த நிமிஷம் நீ செய்ற. இப்படி பண்ணாத” என்று சேஷன் விடாது வாதிட,

“நீ செஞ்சதும் நான் ஒதுங்கிப் போக நினைக்கிறதும் ஒன்னு இல்ல சேஷா. சும்மா கண்டதை பேசிட்டு இருக்காத. இது நீ நடிக்கிற சினிமா இல்ல. ஒரு சாங், நாலு பைட் முடிஞ்சதும் ஹீரோ ஹீரோயின் ஒன்னு சேர்ந்திட முடியாது.”

“என்னால உன்னோட சேர்ந்து வாழறதை எல்லாம் யோசிக்கவே முடியல. நான்… என்னை ஒதுக்கி வைக்க யாரோ ஒருத்தி பேரை சொல்லி சொல்லி வதைச்சிருக்க நீ. நாளைக்கு நான் உன்னோட வந்தாலும், அவளை என்னால மறக்க முடியாது போல.”

“நீ அம்மு அம்முன்னு சொல்லி சொல்லியே உன்னை அமிர்தாவோட காதலனா மட்டும் தான் பார்க்க முடியுது என்னால. உன் மேல ஆசைப்படறது கூட அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படறது போலத்தான். அப்படியே உரிமையானவ உயிரோட இல்லையேன்னு சொல்லிட்டாலும், எவளோ ஒருத்தியோட பொருளை நான் ஏன் பிடிச்சு வைக்கணும்…” என்று லேசாக கலங்க முயற்சித்த கண்களை மூடித் திறந்தபடி தேவசேனா கேட்டுவிட,

“சோ இதெல்லாம் தான் உன்னோட உறுத்தல்கள் இல்லையா…” என்று இலகுவாக கேட்டான் சேஷன்.

அவன் பாவனையில் கொதித்து போனவளோ, “என் வலியை உன்னால எப்பவுமே உணர முடியாது சேஷா.” என்றாள் ஆக்ரோஷத்துடன். கண்களில் என்ன முயன்றும் கண்ணீர் கரை தட்டிட, கைகளை அவனிடம் இருந்து உதறிக் கொண்டாள்.

சேஷனும் விடாமல் மீண்டும் அவள் கைகளை பற்றிக்கொண்டு, “அழுகை வந்தா சத்தம் போட்டு அழுதிடனும். எதுக்கு எல்லாத்தையும் அடக்கி வச்சு உன்னை நீயே ப்ரெஷர் பண்ற” என்றபடி அவளை அணைக்க முற்பட,

“உன்னோட ஆறுதல் எனக்கு வேண்டாம்.” என்றபடி விலகி நின்றாள் தேவசேனா. கண்களில் வரவிருந்த கண்ணீரும் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது இதற்குள்.

சேஷன் அவளை முறைத்து, “அப்படியென்ன அழுத்தம் உனக்கு. யார்கிட்ட இருந்து எல்லாத்தையும் மறைக்க நினைக்கிற சேனா நீ. இப்படி உனக்குள்ள எல்லாத்தையும் போட்டு வச்சுதான் ஹாஸ்பிடல்ல படுத்திருந்த.” என்று கத்தினான் சேஷன்.

அவன் கத்தலை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவள் நின்றிருக்க, “என் பொண்டாட்டியா வந்து வாழ சொல்லல நான். உன்னோட அத்தனை வருத்தத்துக்கும், வேதனைக்கும் நாந்தான் காரணம். நீ திரும்ப திரும்ப சொல்லாம போனாலும் கூட எனக்கே தெரியும்.”

“ஆனா, அதுக்காக நீ சொல்றபடி உன்னை விட்டுட்டு எல்லாம் போக முடியாது. இது நம்மோட வாழ்க்கை சேனா. நாம சரி பண்ணுவோமே.”

“எப்போ உங்க வாழ்க்கைல எனக்கு இடம் கொடுத்தீங்க”

“இந்த நிமிஷம் தான்ன்னு வச்சுக்கோயேன். புதுசா தொடங்குவோம்.”என்று தன் கைகளை சேனாவின் முன்பாக சேஷன் நீட்டிட, ஓரடி பின்னால் தள்ளி நின்றாள் சேனா.

அவள் செயலில் வருத்தம் கொண்டாலும், “ஒரு நண்பனா ஏத்துக்கோ. உன் வாழ்க்கையில் எனக்கு ஒரு இடம் கொடு.” என்று அவள் முன்பாக மண்டியிட்டான் சேஷன்.

‘நீ என்னை தவிர்க்கவே முடியாது’ என்பது போல் அவன் செய்கைகள் இருக்க, அப்போதைக்கு தள்ளிப்போட நினைத்தாள் தேவசேனா.

“எனக்கு நேரமாச்சு நான் கிளம்பனும்.” என்றவள் வாசலை நோக்கி நடக்க, மீண்டும் அவள் கைப்பற்றி நிறுத்தினான் சேஷன்.

“தப்பிச்சு ஓட நினைக்கறியா பெண்ணே…” கண்கள் நிறைய காதலுடன் அவன் கேட்க,

“உன்கிட்ட மாட்டிக்க கூடாதுன்னு நினைக்கிறேன். திரும்ப ஒருமுறை என்னால முடியாது” என்று தலையை இடவலமாக அசைத்து அவள் கூற, கன்னம் குழிய சிரித்தபடி அவளை நெருங்கினான் சேஷன்.

“தள்ளி நில்லு.” என்று ஒருவிரல் நீட்டி அவள் மிரட்ட, “ஏன்” என்று கேட்டபடி அசராமல் அவளை நெருங்கினான் சேஷன்.

“என்னை தொடாத சேஷா. எனக்கு பிடிக்கல.” என்று அவள் கடுமையாக எச்சரிக்க, அவளின் எச்சரிக்கையை மீறி அவன் அடுத்த அடி எடுத்து வைத்திட, கன்னம் பழுக்கும்படி ஒரு அடி கொடுத்துவிட்டாள் சேனா.

சேஷன் அடியை வாங்கிக் கொண்டும் புன்னகையுடன் நிற்க, அதற்குமேல் அவனை என்ன செய்வதென புரியவில்லை சேனாவுக்கு.

அவள் தடுமாறி நிற்க, “இப்படி அடிவாங்கிட்டே இருக்க ஒரு அடிமை வேணும் இல்ல. அந்த வேலையை எனக்கு கொடுத்திடேன்.” என்று கிண்டல் தொனியில் கூறினான் சேஷன்.

“ஹா. அடிமையாம். நடிக்கிறான் பாரு” என்று மிக மெல்லிய குரலில் சேனா முணுமுணுக்க,

“உன்கிட்ட ஏன்டி நான் நடிக்கணும்.” என்று அவளை இடையோடு பிடித்துக் கொண்டான் சேஷன்.

“மரியாதையா கையை எடு” என்று அவள் மிரட்ட,

“என்ன அடிக்க போறியா… அடிச்சுக்கோ” என்று திரும்பி தன் கன்னத்தை காட்டினான் சேஷன்.

“சேஷா… தள்ளிப் போ” என்று அவனைப் பிடித்து சேனா தள்ளிவிட, சட்டென விலகி கையை கட்டிக்கொண்டு நின்றான் சேஷன். முகம் முழுவதும் புன்னகை. சேனா இடத்தில் வேறு யாரேனும் இருந்தால் நிச்சயம் அவனிடம் கவிழ்ந்திருக்க கூடும். ஆனால், நிற்பது சேனாவாகிற்றே. அசையாமல் தான் நின்றிருந்தாள் அவள்.

“என் பக்கத்துல வரக்கூடாது நீ.” என்று மீண்டும் அவள் விரல் நீட்டி மிரட்ட,

“பிரெண்ட்ஸ்” என்று அவள் பேச்சை காதில் வாங்காமல் கையை நீட்டினான் சேஷன்.

அவனை முறைத்து, “உன்னை பார்க்கவே பிடிக்கல எனக்கு. டிஸ்கஸ்டிங் ராஸ்கல்” என்றவள் மீண்டும் வெளியேற முயற்சிக்க,

“நான் கூட்டிட்டுப் போறேன்” என்று அவளை நெருங்கியவன் அவள் இடக்கையுடன் தன் வலக்கையை கோர்த்துக் கொள்ள,

“உனக்கு கொஞ்சம்கூட  சொரணையே இல்லையா..” என்றாள் மனைவி.

“பொண்டாட்டிகிட்ட அதெல்லாம் பார்த்தால் முடியுமா” என்றவன் அவளை கண்டுகொள்ளாமல் நடக்க, அங்கிருந்து விலகினால் போதும் என்று அவனுடன் நடந்தாள் சேனா.

சேஷாவுக்கும் போதும் என்று தோன்றியதோ என்னவோ, அதற்குமேல் அவளை படுத்தி வைக்காமல் நல்ல பிள்ளையாக அவளுக்கு கார் கதவை திறந்துவிட்டான்.

காரில் ஏறி அமர்ந்தபின்னும் ஓர் வார்த்தைகூட பேசாமல் அவள் மௌனம் சாதிக்க, “உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காத்திருப்பேன்

என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குளிப்பேன்

நான் விரும்பும் காதலியே  நீ எனை ஏற்றுக்கொண்டால் நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்…” என்று மெல்லிய குரலில் பாடியபடியே காரை செலுத்திக் கொண்டிருந்தான் ஆதிசேஷன்.

தேவசேனாவிற்கு அவன் பாடலும் காதில் விழுந்தது. அதன் பொருளும் புரிந்தது. ஆனால், அவனுக்கு பதில் கொடுக்க விருப்பமில்லாமல் மௌனம் காத்தாள் அவள்.

அவள் வீட்டை அடையும் வரை அந்த மௌனம் தொடர, காரிலிருந்து இறங்க முயன்றவளின் கையைப் பிடித்தபடி, “விட்டுடாத என்னை” என்றான் சேஷன்.

அவன் கண்களில் கலந்து கரைய விருப்பமில்லாமல் சட்டென காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் ஓடி வந்திருந்தாள் சேனா.

அவளது தடுமாற்றம் அவளுக்கே புதிதாக இருந்தது. அதை சேஷனிடம் இருந்து மறைப்பது இன்னும் கொடுமையாக இருந்தது. இதில் வீட்டிற்குள் நுழையும்போதே தேனமுதன் வேறு கேள்வி கேட்டு எரிச்சல் மூட்ட, சட்டென்று ஒரு கோபம் வந்து ஒட்டிக்கொண்டது.

அதே கோபத்துடன் தான் வந்து ஷவரில் நின்றுகொண்டாள். அவள் குளியலறைக்கு வந்து ஒருமணி நேரம் கடந்திருக்க, இன்னும் சேஷனின் மீதான ஆத்திரம் குறையவில்லை.

“எதற்கு வந்தான்” என்பதே பிரதானமாக இருக்க, வேறெதிலும் கவனமில்லாமல் போனதில் உடல் நடுக்கமெடுக்க தொடங்கியது.

குளிர் மெல்ல மெல்ல உடலை ஊடுருவி உயிரைக் குடித்துவிட முயன்ற வேளையில், தண்ணீரிலிருந்து விலகி வந்து அறையின் ஹீட்டரை உயிர்பித்து இருந்தாள் அவள். உடையை மாற்றிக்கொண்டு கட்டிலில் விழுந்தவள் மெல்ல உறக்கத்தை தழுவிக்கொள்ள, இரவு உணவுக்காக அவளை எழுப்ப வந்த பிரபாகரன் மகளின் நிலை கண்டு பதறிவிட்டார்.

அவள் உடல் காய்ச்சலில் தகித்துக் கொண்டிருக்க, மகள் ஈரத்தலையுடன் படுத்திருப்பதும் தெரிய, பயந்து போனவராக மருத்துவரை அழைத்துவிட்டார் அவர். கூடவே தேனமுதனையும் அழைத்துவிட, ஐந்து நிமிடத்தில் வந்துவிட்டான் அவன்.

தேவாவின் அருகில் அமர்ந்து அவள் நெற்றியை தொட்டுப் பார்த்தவன் மீண்டும் ஒருமுறை மருத்துவரை அழைத்து பேச, அவரும் பத்து நிமிடத்திற்கெல்லாம் வந்து நின்றார். தேவாவின் உடல்நிலை சற்றே மோசமாக இருப்பதாக தெரிவித்து, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடலாம் என்று மருத்துவர் கூறியதில் அடுத்த ஒருமணி நேரத்தில் அவரது மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டாள் தேவசேனா.

தன்னிலை மறந்து கிடந்தவளுக்கு ஊசியின் வழியே தொடர்ந்து மருந்துகள் ஏற்றப்பட, அதன் விளைவாக ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள் தேவசேனா.

பிரபாகரன் மகளை நினைத்து கவலை கொண்டவராக அமர்ந்திருக்க, தேனமுதன் அவரை வற்புறுத்தி தன் தந்தையுடன் தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். தேவாவை அங்கிருந்த செவிலியர்கள் கவனித்துக் கொள்ள, அந்த மருத்துவமனையின் ஓய்வறையில் தங்கிகொண்டான் தேனமுதன்.

அதிகாலையில் தேவசேனா கண்விழிக்க, அந்த நேரம் அவள் அருகில் அமர்ந்திருந்தது ஆதிசேஷன் தான். அவனைக் கண்டு அதிர்ந்து போனவள் கனவோ என்று மீண்டும் கண்களை மூடிக்கொள்ள, அவள் நெற்றியில் முத்தமிட்டு நிஜம் என்றான் சேஷன்.

அவன் முத்தத்தின் ஈரத்தில் கண்களைத் திறந்தவள், “என்னை நிம்மதியா விடமாட்டியா சேஷா.” என்றாள் சோர்வுடன்.

“இப்போ எதுவும் பேச வேண்டாம். சீக்கிரம் சரியாகி வா. வந்து நிறைய சண்டை போடு” என,

“நான் உன்கிட்ட சண்டை போடறேனா” என்று மீண்டும் தொடங்கினாள் சேனா.

அவள் கன்னம் தட்டி சிரித்தவன், “நாந்தான் சண்டை போடா வைக்கிறேன். போதுமா” என, அவன் பேச்சில் முகத்தை சுளித்தபடி அவள் திரும்ப, அந்த அறையின் ஒரு மூலையில் ஏதோ எழுதியபடி அமர்ந்திருந்தார் ஒரு செவிலியர்.

“கடவுளே” என்று அதிர்ந்தவள் சேஷனைப் பார்க்க, “இது லாஸ் ஏஞ்சல்ஸ் மா.. என்னோட முத்தமெல்லாம் முத்தத்திலேயே சேராது. அவங்களும் பெருசா கண்டுக்கமாட்டாங்க.” என்று கண்ணடித்தான் அவன்.

“அப்பா எங்கே” என்று அடுத்த கேள்வி வர,

“அவர் வீட்டுக்கு கிளம்பிட்டார். அவரோட அம்மாஞ்சியை விட்டுட்டு போயிருக்கார்.”

“தேனுவா”

“தேனமுதன்”

“எனக்கு தேனு தான். என் பிரெண்ட் அவன்.”

“எனக்கு பொறாமை எல்லாம் வரல. வீணா ட்ரை பண்ணாத.”

“தேனு எங்க”

“ரெஸ்ட்ரூம்ல இருப்பான்.”

“நீ எப்படி வந்த இங்கே”

“என் பொண்டாட்டின்னு சொன்னேன். நம்மோட மேரேஜ் போட்டோஸ் காட்டினேன்.” என்று தோள்களை குலுக்கியவன் அவள் முறைப்பில், “நம்மோட அக்ரீமெண்ட் எல்லாம் அவங்களுக்கு புரியாது சேனா” என்றான் நல்ல பிள்ளையாக.

“என்ன அக்ரீமெண்ட்.”

“அதுதான் பிரெண்ட்ஷிப் அக்ரீமெண்ட். நான்கூட அடிமையா இருக்க சம்மதிச்சேனே.”

“நான் அக்செப்ட் பண்ணேனா?”

“அதுக்கு பயந்து தான் ஹாஸ்பிடல்ல வந்து படுத்திட்டியோ?”

“நான் சொன்னேனா உங்கிட்ட. கிளம்பு முதல்ல.”

“பிரெண்ட்ஸ்…” என்றபடி மீண்டும் சேஷன் கையை நீட்ட,

“சேஷா நீ.” என்று எதையோ சொல்ல முற்பட்டாள் தேவா.

அவளை பேசவே விடாமல் அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து குனிந்து ஒரு பூங்கொத்தை கையில் எடுத்து தேவாவிடம் நீட்டினான் சேஷன்.

முழுவதும் வெள்ளைநிற ரோஜாக்களால் நிறைந்திருந்தது அந்த பூங்கொத்து. அதன் அழகில் மயங்கியவளாக சேனா ஒருநொடி மௌனிக்க, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டவன், “லவ் யூ சேனா…” என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்திருந்தான்.

“சேஷா” என்று மீண்டும் அவள் வாய்திறக்க, “கெட் வெல் சூன்” என்று மீண்டும் முத்தமிட முயன்றான் அவன்.

ஆனால், அவள் இதழ் தீண்டும் முன், “ஆ” என்று மெல்லிய சத்தத்துடன் விலகி அமர்ந்தவன் தன் கையைப் பார்க்க, இடது முழங்கையின் உள்பகுதியில் லேசாக ரத்தம் வெளிப்பட தொடங்கியது.

சேஷன் சேனாவைப் பார்க்க, தன் கையிலிருந்த ஊசியை அவனிடம் காண்பித்து, “என் அனுமதி இல்லாம என்னை தொட முயற்சி பண்ணாத.” என்று எச்சரித்தாள் அவள்.

“பயந்துட்டேன்” என்று அவன் நக்கலடிக்க,

“பயப்படவே வேண்டாம். இதே மாதிரி பயம் காட்டாம உயிரை எடுக்கிறேன் நான்.” என்று கண்கள் மின்ன சூளுரைத்தாள் அவன் ராட்சசி.

Advertisement