Advertisement

மௌனமாய் எரிகிறேன் 03

சேஷன் நெட்ஒர்க்ஸ் அலுவலகத்தின் தலைமையகத்தில் அமர்ந்திருந்தாள் தேவசேனா. அவர்களுக்கு இருக்கும் பல்துறை நிறுவனங்களில் இந்த தொலைக்காட்சி குழுமமும் ஒன்று. சேஷன் நியூஸ், சேஷன் என்டர்டைன்மெண்ட், சேஷன் மியூசிக் என்று பல டிவி சேனல்கள் அந்த குழுமத்தில் இயங்கி கொண்டிருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பத்தோடு பதினொன்றாக இயங்கி கொண்டிருந்த நிறுவனம் தான். ஆனால், என்றைக்கு தேவசேனா படிப்பை முடித்து தொழிலுக்கு வந்தாளோ, அன்றுமுதல் புதுப்பொலிவுடன் மிளிரத் தொடங்கியிருந்தது. அவளுக்கும் மீடியாவின் மீது ஆர்வம் இருக்க, அவள் முதலில் ஏற்றுக் கொண்டதும் இந்த நிறுவனத்தின் பொறுப்பைத் தான். அதனால்தானோ என்னவோ, அந்த நிறுவனத்தின் மீது அப்படி ஒரு அலாதியான காதல் தேவாவுக்கு.

பாட்டியின் எச்சரிக்கையையும் மீறி அந்த நிறுவனத்திற்கு பொறுப்பெடுத்துக் கொண்டவள் முதலில் பட்டதெல்லாம் மரண அடிதான். முதல் இரு வருடங்கள் விழுந்து எழுந்து போராடியவள், மூன்றாவது ஆண்டில் நிலைப்பெற தொடங்கி இருந்தாள். சொந்த வாழ்வு எப்படி இருந்தாலும், தொழில்ரீதியில் அடுத்தடுத்து அவள் எடுத்து வைத்தது அத்தனையும் வெற்றிக்கான அடிகற்கள் தான்.

இன்று அங்கு வேலை பார்க்கும் பலரும் அந்தந்த துறையில் வித்தகர்களாக இருக்க, எப்போதுமே இவர்களுக்கென மீடியாவில் ஒரு தனிப்பெயர் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் முதன்மையானது சேஷன் நியூஸ்…

செய்திகளை கூட குறைய கொஞ்சமும் மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி அப்படியே மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்து விடுவதால், மக்களிடமும் நல்ல வரவேற்பு இருந்தது இவர்களுக்கு.

புதிது புதிதான சிந்தனைகள், காலத்திற்கு தக்கபடி தங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் தகவமைப்புத் திறன், மக்களின் ஆதரவு என்று யாரும் அசைக்கமுடியாத ஒரு இடத்தில் தான் இருக்கிறது சேஷன் நெட்ஒர்க்ஸ்.

இப்போது புதியதாக சேஷன் பெயரில் திரைப்பட விருதுகள் வழங்கவும், அதன் நிறுவனர் தேவசேனா முடிவு செய்திருக்க, அதற்கான சாதக பாதகங்களை பற்றி விவாதிக்கத் தான் அவள் இங்கு வந்ததும்.

ஆனால், விவாதம் என்பதெல்லாம் வார்த்தைக்குத் தான். தேவசேனா முடிவெடுத்து விட்டால், மறுத்துப்பேச அதிகாரம் அற்றவர்கள் அங்கிருப்பவர்கள். அவளின் சொல்லுக்கு செயல்வடிவம் கொடுப்பது என்பதற்கான முதல்படி தான் இந்த விவாதம்.

அதுவும் நல்லபடியாக முடிய, தேவசேனாவிற்கு ஏகதிருப்தி. எதையோ சாதிக்கத் துடிக்கும் ஒரு துடிப்பு எப்போதும் அவளிடம் இருப்பது தான் என்றாலும், இப்போதெல்லாம் தீக்கங்குகளாக அடிக்கடி ஜொலிக்கத் தொடங்கி இருந்தன அவள் கண்கள்.

கூட்டம் முடியவும், அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியேற, அத்தனைப் பேரும் சென்றபின் தேவசேனாவின் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் மலர்.

“வாட் நெக்ஸ்ட்?” என்று மலர் எதிர்பார்ப்புடன் அவள் முகம் பார்க்க,

“ஒரு வெண்ணிலா மில்க் ஷேக்.” என்றாள் அசராமல்.

மலர் தேவசேனாவை அதிருப்தியுடன் பார்த்திருக்க, “நேத்து நைட், மார்னிங், அண்ட் இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் எதுவும் சாப்பிடல நான். என்கிட்டே நீ வேறெதை எதிர்பார்க்கிற மலர்.” என்று தேவசேனா புன்னகையுடன் கேட்க, அவளின் ஆருயிர்த்தோழி அதற்குமேல் அங்கே நிற்பாளா என்ன?

தேவாவிடம் எதையும் பேசாமல் வெளியேறியவள் இரண்டே நிமிடங்களில் அவளுக்கான உணவை கொண்டு வந்துவிட, “சாப்பிடவே மூட் இல்ல மலர்.” என்றாள் தேவசேனா.

“நீ சாப்பிட்டு முடிச்சுட்டு அடுத்த வார்த்தை பேசு தேவா.” என்று மலர் மிரட்ட,

“பயந்துட்டேன்…” என்று அவளை நக்கலடித்தபடியே உண்டவள் அங்கிருந்த தொலைபேசி வாயிலாக மலருக்கும் உணவை வரவைத்துக் கொடுத்தாள்.

“நான் அப்புறம் சாப்பிடறேன்.” என்று மலர் மறுக்க,

“ஏன் உன் பாஸ்க்கு கம்பெனி கொடுக்க உன் சுயகௌரவம் ஒத்துக்காதா? அப்புறம் என்ன டாஷ்க்கு எனக்கு மட்டும் சாப்பாடு கொண்டு வந்து தர்ற… இது உன் வேலையே இல்லையே?” என்று ஏகத்திற்கும் தேவசேனா கோபம் கொள்ள, அவளுக்கு பதில் எதுவும் கொடுக்காமல் அமைதியாக தனக்கு முன்னிருந்த உணவை உண்ண தொடங்கிவிட்டாள் மலர்.

தேவா அதன்பிறகும் அவளை முறைத்தபடியே உண்டு முடிக்க, பாதி சாப்பிடுவதற்குள்ளாகவே மூச்சு வாங்கியது மலருக்கு.

இதில் தேவா வேறு அவளைப் பார்த்தபடியே அமர்ந்திருக்க, அதை முடித்துவிடத் தான் முயன்றாள் மலர். என்ன முயன்றும் உணவு இறங்காமல் போகவும், “ஏனோப் தேவா… நான் மீட்டிங் முன்னாடிதான் சாண்ட்விச் சாப்பிட்டேன். இதுக்குமேல எல்லாம் சாப்பிட முடியாது.” என்று எழுந்துவிட்டாள்.

அவள் முழித்ததிற்கான காரணம் தெரிந்ததில் கோபம் குறைந்தாலும், அவள் மறுத்ததை மறக்கவே இல்லை தேவசேனா. அவள் முகம் இறுக்கமாகவே இருக்க, மலர்விழிக்கு புரிந்து போனது.

“இன்னிக்கு முழுநாளும் செய்யப்போறா என்னை.” என்று உள்ளுக்குள் உதறிக்கொண்டு தான் அவளுடன் கிளம்பினாள். அவள் எதிர்பார்த்தது போலவே, அவர்களுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திற்கு வந்து அமர்ந்தவள் அங்கிருந்தவர்களை காய்ச்சி எடுத்ததோடு, மலர்விழியையும் விடாது விரட்டிக் கொண்டிருந்தாள்.

மலர் அந்த நிறுவனத்தில் இருந்து அவளிடம் விவரம் கேட்டால்கூட, ஒப்புக்கொள்வாள் அவள். ஆனால், கட்டுமான நிறுவனத்தின் பெயரில் அவளை வேலைக்கு சேர்த்துவிட்டு, அந்த வேலையையும் செய்ய விடாமல் முழு நேரமும் அவளை உடன் வைத்துக்கொண்டே சுற்றி, அவளின் மொத்த வேலைக்கும் மலர்விழியை பழக்கி கொடுத்து அருகிலேயே வைத்துக் கொண்டவள் தேவசேனா தான்.

மாதத்திற்கு இரண்டு முறை மலர் அந்த நிறுவனத்துக்கு வருவதே அரிதாகி இருக்க, அவளிடம் அந்த வாரத்தின் வேலை நிலவரங்களை கேட்டுக் குடைந்தால் அவளும் தான் என்ன செய்வாள் பாவம்.

“மேம்… ஒர்க் ப்ராகிரஸ் நேத்து நைட் தான் எனக்கு மெயில் வந்தது. இனிமே தான் செக் பண்ணனும்.” என்றவள்  தேவசேனாவின் கத்தலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க,

“நீங்க மெயில் செக் பண்ணி அப்டேட் பண்ற வரைக்கும் நான் கேள்வியே கேட்ககூடாதுன்னு சொல்றிங்களா?”

“அப்படியில்ல மேம்..”

“எல்லா கேள்விக்கும் மலர்தான் பதில் கொடுக்கணும்ன்னா, இங்கே நீங்க எதுக்காக மிஸ்டர். விக்ரம்.” என்று அந்த நிறுவனத்தின் மேலாளரின் பக்கம் திரும்பியது அம்பு.

“மேம்… இல்ல மேம்…” என்று அவர் திணற,

“ஆமா… உங்க வேலை திருப்தியா இல்ல. அதனாலதான் இங்கே நிற்கிறீங்க.” என்று கடினத்துடன் கூறினாள் தேவசேனா.

மலர், ‘என்ன சொல்றாங்க இவங்க.’ என்று தேவாவைப் பார்க்க,

“நேத்து முகலிவாக்கம் சைட்ல என்ன பிரச்சனை?” என, பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற தொனி.

அந்த விக்ரம் பதறியவனாக, “இல்ல மேம். நம்ம சைட்ல எந்த ப்ராப்ளமும் இல்ல. கான்டிராக்டர் தான்…” என அடுத்தவன் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்க, அவன் சொல்லி முடிப்பதற்குள் அந்த கான்டிராக்டரே அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

வந்தவன், “வணக்கம் மேடம்.” என்று பவ்யமாக தேவசேனாவுக்கு வணக்கம் வைக்க, விக்ரமுக்கு, “என் கதை முடியும் நேரமிது…” என்று உள்ளுக்குள் பாடல் கேட்டது.

“என்ன நடந்தது மூர்த்தி?” என்று அவள் வந்தவனிடம் விசாரிக்க,

“எங்க ஆளுங்க மேல எந்த தப்பும் இல்ல மேடம். இவர் சொன்ன வேலையை சொன்ன நேரத்துக்கு நாங்க முடிச்சுட்டோம். இவர் திடீர்னு வந்து நின்னு எக்ஸ்ட்ரா வேலை கொடுத்துட்டு அதுவும் இன்னிக்கே முடிக்கணும்ன்னா, நாங்க என்ன செய்ய முடியும் மேடம்?”

“உங்களை நம்பி பொழைக்கிறவங்க நாங்க. என்னை நம்பி நானூறு பேர் வேலை செய்யுறாங்க. இவர் இந்த சின்ன விஷயத்துக்காக எங்களை வேண்டாம்ன்னு சொல்லிட்டு வேற ஆளுங்களை உள்ள இறக்கி இருக்காரு. நாங்க பார்த்துட்டு சும்மா இருப்போமா?”

“சும்மா தான் இருந்தாகணும் மூர்த்தி…” என்று கட்டளையாக கூறியவள்  “விஷயத்தை என் காதுக்கு கொண்டுவந்த பிறகு, நீயும், உன் ஆளுங்களும் எதுக்காக அங்கே போகணும்?”

“யாரை மிரட்ட கூட்டம் கூட்டிட்டு இருக்க?” என்றாள் அலட்சியமாக.

“இல்ல மேடம்…”

“லாஸ்ட் வார்னிங் மூர்த்தி. நீ வேலை செய்யுறது சேஷன் க்ரூப்ஸ்க்காக… இந்த பெயர் ரொம்ப முக்கியம் எனக்கு. எங்க நிறுவனத்தோட பெயர் பாதிக்கும்படியா உன்னோட நடவடிக்கைகள் இருந்தா, அடுத்தடுத்த வேலைகள் நடக்கும். ஆனா, நீ இருக்கமாட்ட.”

“ஐயோ.. அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாதிங்க மேடம்.” என்று அவன் பம்ம,

“இந்த வாய்ப்புகூட உன்மேல தப்பில்லன்னு தெரியவும் தான் கொடுக்கறேன். பார்த்து நடந்துக்கோ. என்ற தேவாவின் வார்த்தைகளைப் புரிந்தவனாக,

“மன்னிச்சிடுங்க மேடம். இனி இப்படி நடக்காது.” என்று கூறி, கையெடுத்து கும்பிட்டுவிட்டான் மூர்த்தி. தேவாவின் கண்ணசைவில் அவன் வேகமாக வெளியேறியும் விட, அங்கு வியர்த்து விறுவிறுத்து நின்றிருந்தது விக்ரம் தான்.

“இவருக்கான ஒன் மந்த் சேலரியை இன்னைக்கே செட்டில் பண்ணிட்டு, ரெசிக்னேஷன் லெட்டர் வாங்கிக்கோ மலர்.” என்று ஆணையிட்டவள் விக்ரமை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

“மேம் ப்ளீஸ்.” என்று அவன் தொடங்க,

“அவுட்…” என்று முடித்துக் கொண்டாள் தேவசேனா.

அவன் தலையை குனிந்தபடியே வெளியேற, “மேம்… விக்ரமுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாமே. ஒர்க்ல ரொம்ப சின்சியர் அவர்.” என்று மலர் அவனுக்காக பேச,

“இஸ் இட்…” என படுநக்கலாக வினவினாள் தேவா.

மலர் என்ன என்று விழிக்கையில், “என் கம்பெனி கான்ட்ராக்ட்ல கமிஷன் அடிக்கப் பார்த்து இருக்கான். மூர்த்தியை விட்டுட்டு வேற எவனையோ சைட்ல இறக்கி இருக்கான். அவன் சின்சியரா?” என்று தேவா கேட்க, அவளை அதிர்ச்சி மாறாமல் பார்த்திருந்தாள் மலர்.

“சாரி மேம்.” என்று அவள் சரணடைய,

“நாளைக்கே அவன் போஸ்ட்டுக்கு வேற ஆளை செலக்ட் பண்ணு.” என்றவள் அதோடு முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

மூன்று மணிக்கு ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதாக ஏற்கனவே திட்டமிட்டு இருக்க, அதற்காக வீடு வந்து உடையை மாற்றிக்கொண்டு தயாரானவள், கலையரசி உறங்கிக் கொண்டிருக்கவும் அவரைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக கிளம்பிவிட்டாள்.

வளைகாப்பு நிகழ்ச்சி ஒரு பெரிய மண்டபத்தில் ஏற்பாடாகி இருக்க, அந்த நிறுவனத்தினரோடு இரண்டு தலைமுறையாக தொழில் தொடர்பு கொண்டிருந்தனர் தேவசேனாவின் குடும்பத்தினர். தொழிலைத் தாண்டி நெருங்கிய நட்பும் அவர்களுக்குள் இருக்க, அதன்பொருட்டே அவளின் இந்த விஜயம்.

வாசலில் நின்றிருந்த அந்த குடும்பத்தின் மூத்த தலைமுறையான முரளிதரன் விரிந்த புன்னகையுடன் தேவசேனாவை வரவேற்க, “தேவாக்குட்டி… வா வா…” என்றபடியே வந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டார் அவர் மனைவி சகுந்தலாதேவி.

“எப்படி இருக்கீங்க பாட்டி.” என்று அவரிடம் தேவா விசாரிக்க,

“ஆளைப் பார்க்கவும்தான் பாட்டி கண்ணு தெரியுறேனா உனக்கு? என்னை வந்து ஒருமுறையாவது பார்த்தாயா நீ?” என்று அவர் செல்லமாக கோபிக்க,

“அச்சோ ஜக்கு செல்லம்… உன் பேத்திக்கு வேலை கொஞ்சம் அதிகம். அதுதான் ஓடிட்டே இருக்கேன்.” என்று பேசியபடியே நின்றுகொண்டாள் அவள்.

அடுத்தடுத்து, முரளிதரனின் மகன் பரணீதரன், அவர் மனைவி கீர்த்தி என்று அத்தனைப் பேரும் ஒவ்வொருவராக வந்து தேவசேனாவிடம் பேசிச் செல்ல, பாட்டியிடம் பேசிய அளவுக்கு மற்றவர்களிடம் பேச்சுக் கொடுக்காமல் முதல் வரிசையில் சென்று அமர்ந்துவிட்டாள் தேவா.

அதில் பரணீதரனின் மனைவி கீர்த்தி அவமானமாக உணர, “அப்படி என்ன பெரிய ஆளு இவ. உங்கம்மா வேற விழுந்து விழுந்து உபசரிச்சுட்டு இருக்காங்க.” என்று தன் நொடிப்பை கணவரிடம் வெளிப்படுத்தினார்.

“வாயை மூடு கீர்த்தி. உண்மைக்கும் தேவா பெரிய ஆள் தான். இன்னைக்கு நிலைமைக்கு சேஷா க்ரூப்ஸ் அவ கையில்தான். என்கிட்டே உளறின மாதிரி வேற யார்கிட்டேயும் பேசி வைக்காத.” என்று கடுமையாக மனைவியை அதட்டிவிட்டார் பரணீதரன்.

அவர் பயம் அவருக்கு. பின்னே அவரின் தொழில்கள் பெரும்பாலும் தேவசேனாவை நம்பியே அல்லவா…

இங்கு முதல் வரிசையில் அமர்ந்து புன்னகை மாறாமல் நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் சகுந்தலாவின் அழைப்பில் மேடையேறினாள். சகுந்தலா அவளை நலங்கிடுமாறு வற்புறுத்த, நாசுக்காக மறுத்துவிட்டு கையிலிருந்த பரிசுப்பொருளை மட்டும் அந்த வளைகாப்பு பெண்ணிடம் கொடுத்து கீழிறங்கிவிட்டாள்.

அவள் மீண்டும் இருக்கைக்கு செல்ல, சகுந்தலா அவள் கையைப்பிடித்து கிட்டத்தட்ட இழுத்துச் சென்றவர் அவளுக்கும் மலருக்கும் உணவு பரிமாற்ற வைத்துவிட, அவரை மறுக்க முடியாமல் உணவில் கையை வைத்தாள் தேவா.

அதற்குள் அவரது பேரன் அக்ஷய் அதாவது வளைகாப்பு பெண் ஆராதனாவின் கணவன் அந்த இடத்திற்கு வந்துவிட்டான். தேவாவை தான் கவனித்துக் கொள்வதாக கூறி, சகுந்தலாவை அப்புறப்படுத்தியவன் தேவா அமர்ந்திருந்த வட்ட மேசையின் பக்கவாட்டில் இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

அவன் முகம் தேவசேனாவின் முகத்தை தீவிரமாக ஆராய, அவன் எதிர்பார்த்த எந்த உணர்வும் வெளிப்படவில்லை அவளிடம்.

“என்ன தேவா? சாப்பாடு எப்படியிருக்கு?” என்று தன் மனதை மறைத்து அவன் கேள்வியெழுப்ப, தேவா அவனை அறியமாட்டாளா என்ன?

“சாப்பாட்டுக்கு என்ன அக்ஷய். முரளிதரன் வீட்டு விசேஷம். சொல்லவா வேணும்?” என்று பட்டென பதில் வந்தது. அதிலேயே உனக்கென தனி அடையாளம் ஏது? என்று கேளாமல் கேட்டதுபோல் உணர்ந்தான் அக்ஷய்.

“என்ன தேவா குத்தலா?” என்று நக்கலாக அவன் சிரிக்க,

“அச்சோ… உனக்கு அப்படி தோணுதா அக்ஷய்?” என்றாள் தேவா.

“ஹ்ம்ம்… உன்னோட திமிர் எனக்கு தெரியாதா? என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு கேவலம் ஒரு குடிகாரனைத் தானே கல்யாணம் பண்ணிகிட்ட… அவன்கிட்ட கேட்டியா அடையாளம் இருக்கான்னு.” என்று எள்ளலாக அவன் பேசிவிட,

“யூ க்னோ அக்ஷய். அவன் குடிச்சாலும், அவனோட சொந்த காசுல குடிக்கிறான். நீ உன் பொண்டாட்டி கைச்செலவுக்கு கூட உன் அப்பா தொழில்ல இருந்துதான் எடுத்தாகணும். சோ, அவனோட உன்னை நீயே சேர்த்துக்காத.”

“ஆமா… ஆமா… நிச்சயமா அவனோட நான் சேரவே முடியாது. என் லெவல் வேற தான்.” என்றவனைக் கண்டு தேவா சிரித்துவிட,

“ஆனா தேவா… உன்னை மதிக்காத புருஷனுக்கே நீ இவ்வளவு பேசறியே. இன்னும் நல்ல புருஷன் கிடைச்சிருந்தா…” என்றவன் குரூரத்துடன், “உனக்காக… நீ என்னை மிஸ் பண்ணிட்டோம்ன்னு நினைச்சு வேதனைப்படத்தான் இந்த கல்யாணமே தேவா. இப்போ எனக்கு பிள்ளையும் வரப்போறான். ஆனா, என்னை மறுத்த நீ…” என்றவன் எகத்தாளமாக தேவாவை பார்வையிட, மலருக்கு கொதித்துக் கொண்டு வந்தது. ஆனால், தான் வாய்திறப்பது தேவாவுக்கு பிடிக்காது என்பதால் மௌனம் காத்தாள் அவள்.

“சோ… நீ ஆம்பளைன்னு எனக்கு நிரூபிக்கத்தான் பிள்ளை பெத்துக்க போற இல்லையா?” என்று அசராமல் கேட்டபடியே தேவா எழுந்துவிட,

“ஆமா… ஆமா… ஆமா…” என்று அழுத்தியவன், “உன் மூக்கை உடைக்கத்தான் என் மாமன் பொண்ணையே கட்டிக்கிட்டதும்.” என்று வாயைவிட, அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்தாள் தேவா.

கையில் இருந்த டிஸ்யூ கொண்டு நாசுக்காக வாய் துடைத்துக் கொண்டே, “நான் தப்பிச்சேன்…” என்று சிரித்தாள் தேவா.

அக்ஷய் புரியாமல் நிற்க, “உன் பொண்டாட்டி ரொம்ப பாவம். அவளை அசிங்கப்படுத்த நீ ஒரு ஆள் போதும். காதலுக்காக, கல்யாணத்துக்காகன்னு எந்த காரணமும் இல்லாம, என்னை பழிவாங்குறதா நினைச்சு அவளோட குடும்பம் நடத்தி இருக்க நீ. இதைவிட அவளுக்கு வேற என்ன அவமானம் இருக்க முடியும்?” என்று தேவா கேட்டபின்பே தனது தவறை உணர்ந்தான் அக்ஷய்.

ஆனால், அதற்கும் முன்பே அவன் பாட்டி காதில் அவன் பேசியது மொத்தமும் விழுந்துவிட்டிருக்க, தனது பேத்தியை நினைத்து கலங்கி நின்றார் அவர்.

தேவா அவரைக் கவனித்துவிட்டவள், “பாட்டி…” என்று அசையாமல் நிற்க, அக்ஷய் வேகமாக சகுந்தலாவை நெருங்கவும், அவனை தீயாய் முறைத்தபடி அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார் சகுந்தலா.

தேவாவை அவமானப்படுத்த நினைத்து தான் கேவலப்பட்டு நின்றதை தாங்காமல் அக்ஷய் தேவாவைப் பார்க்க, வெகு அலட்சியமாக தோளைக் குலுக்கியபடி அங்கிருந்து வெளியேறினாள் தேவசேனா.

Advertisement