Advertisement

மௌனங்கள் இசைக்கட்டுமே 03

தேவசேனா பட்டென்று முகத்திலடித்ததைப் போல் பேசிவிட்டதில் கோபித்துக் கொள்வானோ என்று பிரபாகரன் தேனமுதனின் முகத்தைப் பார்க்க, மாறாக புன்னகைத்துக் கொண்டிருந்தான் தேனமுதன். உன் கோபம் என்னை ஒன்றும் செய்யாது என்ற பாவனையை அவன் முகம் காண்பிக்க, தேவாவின் ஆத்திரம் மிகுந்து போனது.

அவள் கோபம் குறையாதவளாக தன் தந்தையைப் பார்க்க, “அவரை ஏன் முறைக்கிற. என்கிட்டே பேசு தேவா” என்று அவள் கவனத்தை தன் பக்கம் திருப்பினான் தேனமுதன்.

“நீ என்ன தைரியத்தில் என்கிட்டே இப்படியெல்லாம் நடந்துட்டு இருக்க தேனமுதன். என்ன நினைக்கிற நீ… நீ பேசற எல்லாத்துக்கும் தேவா அமைதியா இருப்பான்னா” என்று அழுத்தமாக தேவா வினவ, அவள் குரலின் பேதம் பிரபாகரனுக்குப் புரிந்தது.

“தேவாம்மா” என்று அவர் குரல் மன்றாட, தன் தந்தையை மறுப்பாக பார்த்தாள் தேவா.

தேனமுதன் அப்போதும் அடங்காமல், “நீ என் அங்கிளோட பொண்ணு. உன்கிட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு தேவா. அதோட உன்கிட்ட பேச ஏன் தைரியம் வேணும்? நீ என்ன பூச்சாண்டியா? நீ சோகமா இருந்தா, என் அங்கிள் டல் ஆகிடுவாரு. என் அங்கிள் அப்படி இருக்கறதை என்னால ஏத்துக்க முடியாது. புரியுதா?” என்று சிறுபிள்ளைக்கு அறிவுரை கூறுவதாக நினைத்து பேசி வைக்க,

“முடித்துவிட்டாயா” என்று நக்கல் பார்வை தான் பார்த்தாள் தேவசேனா.

தேனமுதன் அவள் பார்வையில், “என்ன” என,

“உன் அங்கிளுக்கு அவ்ளோ வருத்தம் இருந்தா, நான் வேணா இந்தியாவுக்கே கிளம்பிடவா?” என்று அசராமல் வினவினாள் அவள்.

தேனமுதன், “நீ நினைக்கிறதெல்லாம் அப்படியே பேசுவியா தேவா? எதிர்ல இருக்கிறவங்களை பத்தி யோசிக்க மாட்டாயா?” என்று அதட்ட,

“எதிர்ல இருக்க எவனோ ஒருத்தனைப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்? நீ யார் எனக்கு?” என்று கத்தியாக கிழித்தது அவள் குரல்.

“உன் அப்பாவை நினைச்சு கவலைப்படலாம் இல்லையா?”

“நான் கவலைப்படற நிலைமையில் என் அப்பா இல்ல. அவர் பிள்ளைங்க கூட இல்லைங்கிறத தவிர்த்து வேற எந்த கவலையும் கிடையாது உன் அங்கிளுக்கு. அதுவும் கூட அவரா இழுத்துக்கிட்டது தான்.”

“ஒரு கட்டத்துல அதையும் நீ வந்து ரீபிளேஸ் பண்ணிட்ட. இதுல பெருசா வருத்தப்படவோ, கவலைப்படவோ எதுவும் இல்ல.”

“அவர் செஞ்சது தப்புன்னு சொல்றியா தேவா?”

“தப்புன்னு நினைச்சிருந்தா நான் இங்கே வந்திருக்கவே மாட்டேன். என்னால என் அப்பாவை புரிஞ்சுக்க முடியும். எங்களுக்கான அவரோட தேடல் புரியவும் தான் நான் இங்கே வந்தது. ஆனா, அதற்காக நீ பேசறதெல்லாம் கேட்டுட்டு இருப்பேன்னு அர்த்தம் கிடையாது”

“அஞ்சு வயசுல அப்பாவும் இல்லாம, அம்மாவும் இல்லாம தனிச்சு நிற்கிறதோட வலி என்னன்னு தெரியுமா உனக்கு. என் அம்மாவை ரீப்லேஸ் பண்ண என் பாட்டி கஷ்டப்படறாங்கன்னு எங்களோட தேவைகளை சுருக்கிக்கிட்டதும், கொஞ்சம் கொஞ்சமா அதையெல்லாம் நாங்களே பழகிக்கிட்டதும்னு எத்தனையோ இருக்கு. அதெல்லாம் உனக்கு புரியாது. சோ எனக்கு அறிவுரை சொல்ற வேலையெல்லாம் வேண்டாம்.” என்று பொட்டில் அறைந்ததுப் போல் தேவசேனா பேசிவிட, பிரபாகரனின் முகம் சோர்ந்து போனது.

அவரது முகம் பார்த்த தேனமுதனுக்கு இன்னும் கோபம் கூடிப்போக, “இந்த வியாக்கியானமெல்லாம் பேசறதெல்லாம் சரிதான். ஆனா, அந்த பொம்பளை பொறுக்கியை கல்யாணம் பண்ணிக்கிட்டது என்ன கணக்குல வரும். அதுக்கும்……” என்று முடிக்கும் முன்னமே, தனது இடது கையை அவனது முகத்தில் வீசிவிட்டாள் தேவசேனா.

தேனமுதன் அதிர்ச்சியில் காரை ஓரமாக நிறுத்திவிட, கண்கள் கலங்கி சிவக்கும் அளவிற்கு அவனை முறைத்தவள் மறுவார்த்தைப் பேசாமல் காரில் இருந்து இறங்கிவிட்டாள். ‘எங்கு இருக்கிறோம். என்ன செய்து கொண்டிருக்கிறோம்’ என்று எதைப்பற்றியும் கவலையற்றவளாக சாலையோரம் இருந்த நடைபாதையில் கலந்துவிட்டாள் அவள்.

“அமுதா அவளைப் பிடி. அவளோட பேக் கூட எடுக்காம போறா” என்று பிரபாகரன் பதற,

“போகட்டும் விடுங்க அங்கிள். கையில் அவளோட போன் இருக்கு. மேடம்க்கு அந்த தைரியம் தான்.” என்று அசட்டையாக கூறினாலும், தேவா அடித்துவிட்ட ஆத்திரம் அவனுக்குள்ளும் மிகுந்திருந்தது.

பிறந்தது முதலே பெரிதாக பேச்சுக்கூட வாங்கியிராதவனை ஒருத்தி கையை நீட்டி அடித்திருக்க, என்னதான் மனம் கவர்ந்தவளாக இருப்பினும் அந்த நேர கோபத்தை தடுக்க முடியாமல் அமர்ந்திருந்தான் அவன்.

சில நிமிடங்கள் அமைதியில் கழிய, “தேவா போன் எடுக்கல அமுதா. நான் என்னன்னு பார்க்கிறேன்” என்று பிரபாகரன் காரில் இருந்து இறங்க முற்பட,

“நீங்க எங்கே போய் தேடப் போறீங்க.” என்றவன் தேவா திரும்பிய வளைவை நோக்கி காரை செலுத்த ஆரம்பித்திருந்தான். ஆனால், அந்த சாலையின் முடிவு வரை தேடியும் தேவா அவர்களின் கண்ணில் சிக்காமல் போகவும், லேசாக ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது அவனை.

எத்தனை வேகமாக நடந்திருந்தாலும், இந்த ஐந்து நிமிட இடைவெளியில் அவளால் இந்த நீளமான சாலையை கடந்திருக்க முடியாதே என்று பிரபாகரனும் புலம்ப ஆரம்பித்துவிட்டார். அவர் அலைபேசியில் விடாமல் மகளுக்கு அழைத்துக் கொண்டிருக்க, அடுத்த பத்து நிமிடங்களில் இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு வருவதாக செய்தி அனுப்பி இருந்தாள் தேவசேனா.

அதன்பின்னரே இருவருக்கும் உயிர் வர, “இப்போ வீட்டுக்கு போவோமா?” என்று அதீத கடுப்புடன் கேட்டு நின்றான் தேனமுதன்.

பிரபாகரன் அப்போதும் தயங்கி நிற்க, “உங்கப்பொண்ணு குழந்தை இல்ல அங்கிள். வாங்க” என்று தேனமுதன் இழுக்க, அவன் கன்னம் தொட்டு பார்த்தார் பிரபாகரன்.

“ரொம்ப பாஸ்ட் ஆஹ் ரியாக்ட் பண்ணிட்டீங்க” என்று அவன் முறுக்கிக்கொள்ள,

“உன்னால என்னை புரிஞ்சிக்க முடியும் அமுதா. ஆனா, அவ நிலை அப்படி இல்ல. அவளோட எல்லா பிரச்சனைகளுக்கும் முழுக்காரணமும் நான் தான். அவளோட கல்யாணம் கூட என்னோட இயலாமையால் தான். நான் சரியான அப்பாவா இருந்திருந்தா, என் மகளுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது. எனக்காக பேசறதா நினைச்சு அவளை கஷ்டப்படுத்தாத.” என்று தன்மையாக எடுத்து கூறினார் பிரபாகரன்.

தேனமுதன் அப்போதும் சமாதானம் ஆகாமல் பிரபாகரனை வருத்தத்துடன் பார்த்து நிற்க, “வா வீட்டுக்கு போவோம்” என்று அவன் தோளில் கைபோட்டுக் கொண்டார் பிரபாகரன்.

அவர் இழுப்பிற்கு தேனமுதன் நடக்க, அவர்கள் வீட்டை அடைந்து வெகுநேரம் கடந்தபின்னும் கூட தேவசேனா வீடு திரும்பவில்லை.

பிரபாகரன் மகளை நினைத்து கவலையுடன் அமர்ந்துவிட, தேனமுதன் விடாமல் அவள் அலைபேசிக்கு அழைத்து கொண்டிருந்தான். அவன் அழைப்புகளை ஏற்காதவள் அன்று மாலையில் வீடு வர, அவளைப் பார்த்த நிமிடம், “உன் போன் எங்கே” என்று கத்தினான் தேனமுதன்.

தேவாவிற்கும் அப்போதுதான் தன் அலைபேசி நியாபகம் வர, “எங்கே விட்டோம்” என்று யோசனையுடன் நின்றுவிட்டாள் அவள்.

“அப்படி என்ன பிடிவாதம் உனக்கு. உன்னை யாரும் எதுவுமே கேட்ககூடாதா தேவா” என்று தேனமுதன் கத்த, அவன் குரலை அலட்சியம் செய்து தேவா முன்னேற, “போன் எடுக்க என்ன கஷ்டம் தேவாம்மா.” என்று வருத்தத்துடன் கேட்டார் பிரபாகரன்.

“போன் மிஸ்ஸாகிடுச்சுப்பா” என்று நின்று அவருக்கு பதில் கொடுத்தவள், அதற்குமேல் அங்கே நிற்காமல் விலகி அவள் அறைக்கு வந்துவிட்டாள்.

எப்போதும்போல் குளியலறையின் ஷவரை திருகியவள் அதன் அடியில் நின்றுவிட, இரண்டு வாரங்களாக அவளை சூழ்ந்திருந்த வெறுமையும், தனிமையும் நீங்கி அந்த இடத்தை அவளது கோபமும், வருத்தமும் அடைத்துக் கொண்டது.

மீண்டும் அவனை சந்தித்த கணங்கள் மீண்டு வர முடியாதபடி அவளை கட்டி வைக்க, மெல்ல மெல்ல அவனை சந்தித்த கணங்களை அசைபோட தொடங்கியது அவள் மனது.

காரில் இருந்து இறங்கியவள் அடுத்த திருப்பத்தில் திரும்பியது வரை தான் நினைவில் இருந்தது அவளுக்கு. அதன்பின்னான நிகழ்வுகள் அனைத்தும் கனவோ என்று இந்த நிமிடம் வரை தன்னைத்தானே அகழ்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறாள் தேவசேனா.

அந்த நீண்ட சாலையில் இலக்கில்லாமல் அவள் நடந்து கொண்டிருந்த நேரம் தான் மீண்டும் அவள் முன் பிரசன்னமாகி இருந்தான் அவளது ஆதிசேஷன். முதலில் அவனை உணராமல் கடந்துவிடத்தான் முயன்றாள் தேவா.

ஆனால், விட்டு விடுபவனா அவன். தேவாவிடம் அவனுக்கான உரிமைகள் எப்போதும் ஏகபோகம் அல்லவா. தன்னையே உணராமல் தகித்தபடி அவள் நடக்கையில் இடையில் வந்து நின்றான் அவன். அவனையும் உணராதவளாக அவள் கடக்க முற்படுகையில் எட்டி அவள் இடக்கையைப் பிடித்திழுத்தான் அந்த வம்பன்.

யாரோ என்று திகைத்து திரும்பியவள் எதிரில் நின்றவனை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சி விலகாமல் அவள் நின்ற நொடிகளை தனக்கு சாதகமாக்கிக் கொண்டவன் மெல்ல அவளை அணைத்து கொள்ள, அப்போதுதான் உணர்வு பெற்றாள் அவள்.

அவன் அணைப்பிலிருந்து திமிறி விலகியவள் அவன் கையை உதறிவிட முயல, “இந்த ஊர்ல வயலன்ஸ்னு போலீஸ் வந்திடும் சேனா. உன் புருஷனை கம்பி எண்ண விட்டுடாத.” என்று சிரிப்புடன் நின்றான் சேஷன்.

“கையை விடு சேஷா” என்று பற்களை கடித்தபடி தேவா எச்சரிக்க, அவள் கோபத்தை கண்டுகொள்ளாமல் அவள் தோளில் கைபோட்டு அணைத்து கொண்டான் சேஷன்.

“சேஷா” என்ற இரண்டு எழுத்துகளை கிட்டத்தட்ட அவள் கடித்து துப்ப,

“என்னோட வா. நானே திரும்ப கொண்டு வந்து விட்டுடறேன்” என்று நின்றான் சேஷன்.

“நான் ஏன் உன்னோட வரணும். விடுடா என்னை” என்றவள் நகர்ந்து கொள்ள,

“வாடி பொண்டாட்டி” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து காரில் ஏற்றிவிட்டான் சேஷன்.

“சேஷா… நீ வேண்டாத வேலை பண்ற. என்னை நிம்மதியாவே விடமாட்டியா நீ” என்று தேவா கத்திக் கொண்டிருக்க, அதை காதில் வாங்காதவனாக காரை செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.

“காரை நிறுத்துடா” என்று அவள் மறுபடியும் சத்தமிட, “வாயை மூடிட்டு வாடி ராட்சசி” என்று அவளை அணைக்க முயன்றான் சேஷன்.

“கையை எடுடா…” என்று கத்தியவள் காரின் கதவோரம் நகர்ந்து கொள்ள, அவளை சீண்டாமல் சாலையில் கவனம் செலுத்தினான் சேஷன்.

“எங்கே கூட்டிட்டு போற என்னை. என்னதான் வேணும் உனக்கு?” என்று சில நொடிகள் கழித்து தேவா நிதானமாக வினவ,

“என் பொண்டாட்டியை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.” என்றான் சேஷன்.

“திரும்ப திரும்ப இதையே சொல்லாத சேஷா. காது வலிக்குது எனக்கு.” என்றவள், “பொண்டாட்டியாம்…” என்று தனக்குள் முனகிக்கொள்ள, “என் பொண்டாட்டி தான்” என்று அழுத்தமாக பதில் கொடுத்தான் சேஷன்.

“எத்தனை நாளா… எப்போ இருந்து?” என்று மீண்டும் ஆத்திரத்துடன் கேட்டவள், “மரியாதையா சொல்றேன். வண்டியை நிறுத்திடு.” என்றாள் எச்சரிக்கையாக.

“முடியாது…” என்று சட்டமாக பதில்வர,

“நான் 911 க்கு  கால் பண்றேன்” என்று தன் அலைபேசியை எடுத்தாள் தேவா.

“சேனா” என்று அதட்டி, அவள் கைபேசியை பிடுங்கி காரின் பின்பக்கம் வீசிவிட்டான் சேஷன்.

“ஏய்” என்று அலறியவள் தன் அலைபேசியை எடுக்க திரும்ப, “ஓவரா பண்ற சேனா நீ. என்னோட வர என்ன பிரச்சனை உனக்கு. உன்னைமீறி என்ன செய்ய முடியும் என்னால” என்று சேஷா அதட்டிட, தன் கையின் மீதிருந்த அவன் கையை தட்டிவிட்டு வெளிப்புறமாக திரும்பி கொண்டாள் அவள்.

அவள் கோபத்தில் மெல்லியதாக புன்னகை சிந்தியபடி காரை செலுத்தியவன் பத்து நிமிடங்களில் ஒருவீட்டின் முன்பு காரை நிறுத்த, காரிலிருந்து இறங்காமல் கண்களால் கேள்வியெழுப்பினாள் சேனா.

“எல்லாம் சொல்றேன் வா” என்று அவள் கைப்பிடித்து வீட்டினுள் அழைத்துச் சென்றான் சேஷன்.

அந்த வீட்டின் ஹாலை அவன் கடக்கும் வினாடியில் அவன் கையை உதறி அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டவள், “என்ன விஷயம்” என்றாள் கறாராக.

‘விடமாட்டாளே’ என்று நொந்தபடி, அவள் அருகில் இருந்த மற்றொரு சோஃபாவில் அமர்ந்தவன், “லவ் பண்ணுவோமா?” என்றான் அழகான ஒரு புன்னகையுடன்.

சேனா அசராமல் அவனைப் பார்த்திருக்க, “பொண்டாட்டியா தான் இருக்க முடியாதுன்னு சொல்லிட்ட. அட்லீஸ்ட் என் லவ்வரா இருந்து பாரேன். நான் பாஸ் பண்ணிட்டா, ஹஸ்பண்டா ப்ரமோட் பண்ணிக்கோ.” என்றான் மீண்டும்.

“அவ்ளோதானா… முடிஞ்சதா” என்று சேனா எழ, அவளை நகரவிடாமல் தூணாக நின்றான்.

“சேஷா வழியை விடு” என்று தேவா மிரட்ட, தன் சட்டைப்பையில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்தவன் அவள் எதிர்ப்பையும் மீறி அவள் கரம் பற்றினான்.

“எனக்கு நீ வேண்டாம்” என்ற அவள் வார்த்தைகளை மீறி அவள் கையில் அந்த மோதிரத்தை மாட்டி, அந்த விரலின் மீது முத்தமிட்டு, “லவ் யூடி பொண்டாட்டி…” என்றவன், “சாரி.. மை லவ்” என்றான் காதலுடன்.

அவன் கண்களில் இதுவரை அவள் கண்டிராத உணர்வுகள் குவியஸ்மிட்டு இருக்க, அவளையும் அறியாமல் லேசாக பதட்டம் கொண்டாள் தேவசேனா.

ஆனாலும், “எனக்கு இதெல்லாம் வேண்டாம். நீயும் வேண்டாம்” என்றவள் தன் கையிலிருந்த அந்த வளைய வடிவ மோதிரத்தை கழட்ட முற்பட, அவள் கையின் மீது வலிக்காமல் ஒரு அடி வைத்தவன், அவள் கன்னத்தை இருகரங்களாலும் தாங்கினான்.

தேவா அவன் கையை விலக்கிட முற்பட, அழுத்தமாக அவள் கன்னம் தீண்டியவன், “இதை எப்பவும் கழட்டவே கூடாது.” என,

“நான் வேண்டாம்னு சொல்றேன் உனக்கு புரியுதா” என்றாள் அவள்.

“உனக்கு முடிவெடுக்க அதிகாரம் கிடையாது. நாலு வருஷத்துக்கு முன்னாடியே  உனக்கு கொடுத்த வாய்ப்பை நீ இழந்துட்ட.” என்றவனை சேனா அலட்சியமாகப் பார்த்திருக்க, மீண்டும் ஒருமுறை அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “என்னால முடியல சேனா. நான் என்னோட தோல்வியை ஒத்துக்கறேன். எனக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டாம். ஒரு வாய்ப்பு கொடேன்” என்று நின்றான் சேஷன்.

Advertisement