Advertisement

மௌனமாய் எரிகிறேன் 02

தேவசேனா அரைமயக்கத்தில் கிடந்த சேஷாவின் ஆடைகளை சரிசெய்தவள் வெளியே இருந்த தனது பாதுகாவலர்களை அழைக்க, அவர்கள் சேஷாவை எழுப்பி நிறுத்த முயன்றனர். கைத்தாங்கலாக அவனை தோளில் சாய்த்துக் கொண்டு நடந்தவர்கள் அடுத்த சில நிமிடங்களில் அவனை காரில் ஏற்றியிருந்தனர்.

அந்த ஹோட்டலில் இருந்து சேஷாவின் வீட்டை அடைய அரைமணி நேரத்திற்கும் மேலாக, அதுவரையிலும் புலம்பியபடி தான் இருந்தான் சேஷா. அவன் புலம்பியது மொத்தமும் காதில் வாங்கியபடியே தான் காரை செலுத்திக் கொண்டிருந்தாள் தேவசேனா/

அவன் குடித்திருக்கும் நேரங்களில் பெரும்பாலும் மூன்றாம் மனிதர்கள் அவனை நெருங்க வாய்ப்பளிக்கமாட்டாள் தேவசேனா. இப்போதும் அவள் வந்த காரின் ஓட்டுனரை அடுத்த காரில் ஏற்றிவிட்டு அவளே, வண்டியை ஒட்டியிருக்க, கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கவும், பதைப்புடன் அவர்களை நெருங்கினார் சேஷாவின் தாய் கலையரசி.

“சேஷா…” என்று பதட்டத்துடன் அவர் மகனை நெருங்க, தனது ஒரே பார்வையால் அவரை தள்ளி நிறுத்தினாள் தேவசேனா.

“தேவா அவன்…” என்றவரை பேசவே விடாமல்,

“இன்னும் தூங்காம என்ன பண்றிங்க.” என்று கேள்வி எழுப்பினாள் அவள்.

“எனக்கு எப்படி தூக்கம் வரும் தேவா. இவன் இப்படி…” என்று மீண்டும் அவர் தொடங்குகையில்,

“அத்தம்மா.” என்றவள் அழைப்பின் கடினத்தில் அதற்குமேல் பேசவே இல்லை கலையரசி.

“போய் படுங்க.” என்று மீண்டும் தேவா அழுத்தமாக கூற, தயங்கி நின்றார் கலையரசி.

சற்று தள்ளி நின்றிருந்த அவள் பாதுகாவலர்களை ஒரு பார்வை பார்த்தவள், “போங்க அத்தம்மா.” என்றாள் கடினத்துடன்.

அவர் சொல்ல முடியாத துயரத்தை முகத்தில் தேக்கியவராக வீட்டிற்குள் சென்றுவிட, தூரத்தில் இருந்தவர்களை தலையசைத்து அருகில் அழைத்தாள் அவள்.

அவர்கள் வரவும், “ம்ம்ம்.” என்று காரினுள் இருந்தவனைக் கண்காட்டினாள். அவள் கண்ணசைவில் சேஷாவை அவன் அறைக்கு அழைத்து சென்று படுக்கையில் கிடத்தி அவர்கள் வெளியேற, சில நிமிடங்கள் சேஷாவை வெறித்தபடியே நின்றிருந்தாள் தேவசேனா.

அவன் இருந்த நிலை அவளை கொதிகலனாக மாற்ற முயற்சிக்க, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனை நெருங்கி அவன் சட்டையின் பொத்தான்களை விடுவித்தவள் அவனை எழுப்பி அமர்த்த முயல, இலகுவாக அவள் இழுப்புக்கு வந்தான் கணவன்.

ஆனால், அவனது வாய் அப்போதும், “அம்மு…” என,

“நான் அம்மு இல்ல.” என்ற குரலில் முயன்று பொறுமையை இழுத்துப் பிடித்திருந்தாள் தேவசேனா.

“ஆமா… நீ வேண்டாம். என் அம்முதான் வேணும். அவளை வரச் சொல்லு.” என்று குழறியபடியே பேசியவனை என்ன செய்வதென புரியாமல் திகைத்தவள், சட்டென அவனை விட்டு விலகி எழுந்து நின்றாள்.

வெகுவாகப் போராடி அவனை கட்டிலில் இருந்து எழுப்பி நிறுத்தியவள், அப்படியே அவனை இழுத்துச் சென்று குளியலறையின் ஷவரின் கீழ் நிறுத்தினாள்.

சில்லென்ற பனிச்சாரலாக தண்ணீர் இருவரையும் கொள்ளையிட, முதல் சில நொடிகள் உணர்வில்லாமல் நின்றிருந்தவன் மெல்ல தடுமாறி சுவற்றில் விழப் பார்த்தான்.

‘எங்கேனும் இடித்துக் கொள்ளப் போகிறான்?’ என்று தேவசேனா அவனைப் பிடித்திழுக்க, அவனது மொத்த எடையும் அவள்மீது விழுந்தது. மூச்சடைக்கும் உணர்வில் தேவசேனா உறைந்து நின்ற நிமிடங்களில் அவளை மிக மெதுவாக தழுவத் தொடங்கியது சேஷாவின் கரங்கள்.

சில நொடிகளுக்கு பின்பே அவன் செயலை அவதானித்தவள், “சேஷா நோ.” என்று அதட்டலாக கூற, அவன் காதில் விழுந்தததாகவே தெரியவில்லை.

மீண்டும் அவன் இதழ்கள், “அம்மு…” என்று கிறக்கமாக உரைத்ததுதான் தாமதம். நொடியும் யோசிக்காமல் சட்டென அவனை விலக்கித் தள்ளிவிட்டாள் தேவசேனா.

சுவற்றில் மோதி அவன் கீழே அமர்ந்துவிட, “நான் அம்மு இல்ல.” என்று மீண்டும் ஒருமுறை கத்தியிருந்தாள் அவள்.

அந்த குளியலறையை விட்டு வெளியேற நினைத்து கதவு வரை வந்து விட்டவளுக்கு அவனை அப்படியே விட்டுச் செல்லவும் மனம் வரவில்லை. காலை தரையில் உதைத்து ஒரு நிமிடம் அசையாமல் நின்றவள் மீண்டும் அவனை நெருங்கினாள்.

சுயநினைவில்லாமல் கிடந்தவனை எழுப்பி நிறுத்தியவள், ஷவரின் அடியில் இருந்து அவனை வெளியே இழுத்துவர, மீண்டும் தேவமகளை தழுவிக்கொள்ளத்தான் முயன்றது சேஷாவின் கரம்.

“சேஷா…” என்ற இரண்டு வார்த்தைகளை கிட்டத்தட்ட மென்று தின்றவள் அவன் சட்டையைக் கழட்டி தூர எறிய, “நோ அம்மு… இதெல்லாம் தப்பு.” என்று நெஞ்சில் கையைவைத்து மூடிக் கொண்டவனை கண்டு ஆத்திரம் கொண்டவள் அடிக்க ஏதாவது கிடைக்கிறதா என்று சுற்றும்முற்றும் தேட தொடங்கிவிட்டாள்.

அவள் தேடலை தொடங்கிய நொடியில் அவளை நெருங்கியிருந்தவன், “அம்மு…” என்று அவள் தோள்தொட, அவன் குரலில் இருந்த எதுவோ அவளை அசையவிடாமல் இழுத்து நிறுத்தியது.

அவள் அப்படி அசந்து நிற்பதெல்லாம் நிச்சயம் பேரதிசயம் தான். ஏன் போதையில் இருப்பவன் தெளிந்தபின் அவனிடம் கூறினால் கூட, அவனே நம்பமாட்டான். அப்படிப்பட்டவள் தான் தேவசேனா.

என்னவோ, அந்த நிமிடம் அவள் நின்றுவிட, சேஷாவின் கரங்கள் மீண்டும் அவளை வளைக்க முயன்றது. ஆனால், அடுத்தநொடியே தேவா தெளிந்திருக்க, “இதெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது.” என்று பறையறிவிப்பவளாக சேஷாவின் கரங்களை விலக்கியவள் அவனிடம் இருந்து விலகி நின்றுவிட்டாள்.

அதற்குமேல் அவனுக்கு முன்பாக நிற்க விருப்பமில்லாதவள் அந்த அறையோடு இணைந்திருந்த மற்றொரு அறையில் இருந்து அவனுக்கான உடைகளை எடுத்துவர, அதற்குள் கட்டிலில் குப்புற விழுந்திருந்தான் சேஷா.

அவனைக் கண்டு சத்தமில்லாமல் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அவன் உடலில் இருந்த மீத ஆடைகளையும் கழட்டிவிட்டு, தான் எடுத்து வந்த இரவு உடையை மாற்றிவிட்டாள்.

உடையை மாற்றி அவள் நிமிரும் நேரம் சேஷா அவளைப் பிடித்திழுத்திருக்க, அவன் மீது விழுந்திருக்க வேண்டியவள் கட்டிலில் கையை ஊன்றி தன்னை சுதாரித்துக் கொண்டு அவன் அருகில் அமர்ந்திருந்தாள்.

‘வேண்டுமென்றே செய்கிறானோ…” என்று முறைப்புடன் அவள் திரும்ப, ‘அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.’ என்பதுபோல் கிடந்தான் அவன்.

நேரம் மொத்தமாக வேலை நிறுத்தம் செய்துவிட்டதைப் போல முழுதாக இரண்டு நிமிடம் அங்கேயே அமர்ந்திருந்தவள் தலையை உலுக்கிக்கொண்டு வேகமாக எழுந்துவிட்டாள்.

அந்த அறைக்கு அருகில் இருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்தவள் சுவற்றில் மாட்டியிருந்த தன் பாட்டியின் படத்தைப் பார்த்தபடி கையைக் கட்டிக்கொண்டு சில நிமிடங்கள் நின்றிருந்தாள்.

கைகள் லேசாக நடுங்க ஆரம்பிக்கவும் தான் இன்னும் ஈர உடையிலேயே இருப்பதை உணர்ந்தவள் அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்து மீண்டும் ஒருமுறை குளித்து உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள். அந்த அறையின் தரையில் விரிக்கப்பட்டிருந்த வெள்ளைநிற மெத்தையில் அமர்ந்து கால்களை நீட்டி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே, “நீ சந்தோஷமா இருக்கியா பாட்டி..” என்றாள் தனது பாட்டியின் புகைப்படத்திடம்.

பாட்டி அவளைப் பார்த்து சிரிப்பதைப் போல் தோற்றம் கொடுக்க, “போயும் போயும் இவனோட என்னை கோர்த்து விட்டுட்டு போய்ட்டியே பிரகா… நீ ஜாலியா உன் புருஷனோட டூயட் பாடிட்டு இருப்ப. என் நிலைமையைப் பாரு.”

“உன் பிசினெஸை பார்க்கணும். உன் பேரனை தேடணும். அவன் இழுத்து வைக்கிற அத்தனை ஏழரையையும் சரிகட்டணும். அவனுக்கு இன்னைக்கு போல சேவையெல்லாம் செய்யணும். இதுல அவன் புலம்புறதை வேற சகிச்சுக்கணும்… என்னை எப்படி சிக்க வச்சிருக்க பார்த்தியா நீ…”

“அதுவும் உன் பேரன்… என் முன்னாடியே எவளோ அவனை கட்டிக்கிட்டு படுத்திருக்கா. அது போதாதுன்னு என்னை கட்டிக்கிட்டு அம்மு அம்முன்னு ஜெபம் பண்ணிட்டு இருக்கான். நான் என்ன செய்யணும் பிரகா… இவனைக் கூடையில சுமந்துட்டு போய் அவளுங்ககிட்ட விட்டுட்டு வரணுமா?”

“வாழ்க்கையை வெறுத்திடுவேனோன்னு பயமா இருக்கு பிரகா… என் பொறுமை என்னைக்கு மீறுதோ அன்னைக்கு மொத்தமா தூக்கி போட்டுட்டு போய்டுவேன். நீ என்கிட்டே கோபப்படக்கூடாது.” என்று பாட்டி அருகில் அமர்ந்திருப்பதாக நினைத்து தேவசேனா தன் மனதின் வேதனைகளை வாய்விட்டு கூறிக் கொண்டிருக்க, புகைப்படத்தில் இருந்த பிரகதீஸ்வரியின் சிரித்த முகம் கண்டு அவளது வேதனை இன்னும் அதிகமாகியது.

“நீ என்ன நினைச்சு அவனை எனக்கு கட்டி வச்ச பாட்டி.?” என்று மீண்டும் கேட்டவளுக்கு உறக்கம் வருவதாக இல்லை. நேரத்தைப் பார்க்க, கடிகாரம் பத்தை நெருங்கி கொண்டிருந்தது. மாலையில் குடித்த பழச்சாறு தான். அதன்பின் எதுவும் உண்டிருக்கவில்லை. ஆனால், இப்போது எழுந்து சென்று உணவுண்ணவோ, யாரையும் எதிர்கொள்ளவோ மனம் வராமல் அப்படியே படுத்துக் கிடந்தவளுக்கு மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது அந்த கணத்தில்.

எழுந்து அமர்ந்தவள் எப்போதும் போல் பாட்டியின் படத்திற்கு அருகில் இருந்த பிளேயரை இயக்க, சில நொடி இடைவெளியில் அவள் பாட்டியின் குரலில், “தலாங்கு தக்கதிக்கு தக்க ததிங்கினத்தோம்… தா குத…”என்று ஆதித்தாளம் இன்னிசையாய் அந்த அறையை நிறைத்தது. பாட்டியின் படத்திற்கு கீழே இருந்த தனது சலங்கையை மெல்ல வலது கையால் வருடிக் கொடுத்தவள் அந்த அறையின் பால்கனியில் வந்து அமர்ந்துவிட்டாள்.

தேக்குமரத்தில் இரண்டு பக்கமும் பித்தளை சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்டிருந்த அந்த ஊஞ்சலில் முனைகளில் சிறுத்தைகளின் உருவம் அத்தனை தத்ரூபமாக செதுக்கப்பட்டிருக்கும். இன்று நேற்று என்றில்லாமல் எப்போதுமே அந்த ஊஞ்சலில் மீது அலாதிப் பிரியம் தேவசேனாவுக்கு.

அவள் பாட்டி உயிருடன் இருந்த காலங்களில் பெரும்பாலான அவளின் இரவுகள் அந்த ஊஞ்சலில் தான் கழியும். என்ன… அப்போதெல்லாம் மடியில் சாய்த்துக் கொண்டு அவள் தலையை வருடிக் கொடுக்க அவள் பாட்டி அருகில் இருப்பார்.

ஆனால், இன்று தனிமையும், வெறுமையும் மட்டுமே துணையாக இருந்தது. தூரத்தில் தெரிந்த இருளை வெறித்துக்கொண்டே படுத்திருந்தவளுக்கு அறையில் ஒலித்த பாட்டியின் குரல் தாலாட்டாக மாறிப்போக, சில நிமிடங்களில் உறங்கிவிட்டாள்.

அடுத்தநாள் காலையில் விடிந்து வெகு நேரமாகியும் விழிப்பு வராமல் கிடந்த சேஷா, ஒருவழியாக தயாராகி கீழே வருகையில் நேரம் மதியம் பன்னிரண்டு. அன்று அவனுக்கு படப்பிடிப்புகள் எதுவுமில்லாததால் நிதானமாக வந்து உணவு மேசையில் அமர்ந்தான் அவன்.

கலையரசி அறையில் அமர்ந்திருந்தவர் மகனைக் கண்டதும் எழுந்து வெளியே வர, அவரை கண்டுகொள்ளாமல் தான் அமர்ந்திருந்தான் மகன்.

கலையரசி அவனின் அலட்சியத்தை பொருட்படுத்தாமல் அவரே மகனுக்கு உணவை எடுத்து வைக்க, அமைதியாக உண்டு முடித்து எழுந்து கொண்டான் மகன்.

‘சென்றுவிடுவானோ…’ என்று பயந்தவராக, “சேஷா…” என்று கலையரசி அழைத்துவிட, ஒரு நொடி தேங்கி நின்றான் மகன்.

அங்கு வைத்து எதுவும் பேச விருப்பமில்லாதவனாக, “ரூம்க்கு போங்கம்மா.” என்றவன் கையை கழுவிக்கொண்டு வர அதுவரையிலும் அங்கு தான் நின்றிருந்தார் கலையரசி.

சலித்து கொண்டவனாக அவர் தோளில் கைபோட்டு அணைத்தபடி பிடித்துக் கொண்டவன் அவரை அவருடைய அறைக்கு அழைத்து சென்று கட்டிலில் அமர்த்த, மகனின் கையை விடாமல் பிடித்துக் கொண்டார் கலையரசி.

அவரின் முகம் கண்டு பாவமாக இருக்க, “என்னம்மா?” என்றான் பரிவாக.

அவன் குரலில் தெரிந்த அந்த லேசான ஆதரவிற்கே கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது கலையரசிக்கு.

“ஏன்ம்மா… சின்னப்பிள்ளையா நீங்க.” என்று மகன் உரிமையாக அதட்ட,

“நீங்க அப்படித்தான் நினைக்கறீங்க சேஷா. ரெண்டு பேரும் அவங்கவங்க விருப்பத்துக்கு நடந்துக்கறிங்க. என்னைப்பத்தி யார் நினைக்கிறா?” என்றவரது குரலில் மொத்தமும் விரக்திதான் விரவியிருந்தது.

“நீங்க தானே அவளை என் தலையில கட்டி வச்சீங்க. அப்போ இதையும் எதிர்பார்த்து இருக்கணும் தானே.” என்று இலகுவாக முடித்தான் மகன்.

“அவளை மட்டும் குறை சொல்ல முடியாதே சேஷா. நீயும் சரியில்லையே. அதோட அவளை யாரும் உன் தலையில கட்டல. சொல்லப்போனா…” என்று அவர் நிறுத்திக் கொள்ள,

“சொல்லுங்க… ஏன் நிறுத்திட்டீங்க? உங்க செல்ல மருமக தலையில தான் என்னை கட்டிட்டீங்க இல்லையா..” என்றவனின் முகம் சிரித்தாலும், கண்களில் வலியே நிறைந்திருந்தது.

“இன்னும் எவ்ளோ நாளைக்கு இதையே சொல்லுவ சேஷா. உன்னைப் பெத்தது நான்… வளர்த்து ஆளாக்கினதெல்லாம் உன் பாட்டி… நாங்களா உன் வாழ்க்கையை கெடுத்திடுவோம்.” என்று ஆதங்கத்துடன் பெற்றவள் பேச,

“நீங்க வளர்த்த மகன் தானேம்மா நான். ஏன் என்னை என் முடிவை நம்பாம போனீங்க? நான் காட்டின பொண்ணை நீங்க ஏன் ஒத்துக்கல.?” என்று மகனும் கேட்டு நின்றான்.

“உன் நல்லதுக்கு நாங்க எதுவுமே சொல்லக்கூடாதா சேஷா.”

“என் நல்லதுக்காக என் வாழ்க்கையை நீங்க கையிலெடுத்துப்பீங்களா… நியாயமாம்மா இது.” என்ற சேஷாவின் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை கலையரசியால்.

ஒருவேளை அவர் இடத்தில் தேவசேனாவின் பிரகா இருந்திருந்தால், சம்மட்டியடியாக பதில் வந்து விழுந்திருக்கும். ஆனால், அவர் ஆசை மருமகள் கலை அப்படியில்லையே. வீட்டைத் தவிர வெளியுலகம் அறியாத கூண்டுக்கிளி அவர்.

வாழ்நாளின் முதல்பாதி பெற்றவர்களின் அரவணைப்பில் கழிந்துவிட, அடுத்த சில வருடங்கள் கணவர் கைக்குள் வைத்து தாங்கிக் கொண்டார். அவரது மறைவுக்குப்பின் அவர் இடத்தை மாமியார் ஏற்றுக்கொள்ள, மருமகள் என்றில்லாமல் மகளாகத் தான் நடத்தினார் பிரகதீஸ்வரி.

ஆனால், இவர்களில் யாருமே கலையரசிக்கு தனித்து வாழ கற்றுக்கொடுக்கவில்லை என்பது கசப்பான நிஜம். அத்தனைப் பேரும் அவரைத் தாங்கியே பழக்கப்படுத்தி விட்டிருக்க, இன்று யாருமில்லா தனிமையில் தவித்து நிற்கிறார் அவர்.

அவரையும் மீறி அவர் மனதின் சுணக்கங்கள் சில நேரங்களில் இன்று போல் வெடித்து வெளிவந்து விட்டாலும் கூட, மகனும், மருமகளும் அவர் கேள்வி கேட்கவே முடியாதபடி பேசி அவரின் வாயை அடைத்து விடுவதில் வல்லவர்கள்.

இரண்டுமே அவரின் வளர்ப்பு தான். ஒன்று புடம் போடப்பட்ட தங்கம் என்றால், இன்னொன்று மண்ணுக்குள் மறைந்திருக்கும் உறுதியான வைரம்தான்.

ஆனால், இரண்டும் ஒன்றையொன்று ஏற்க மறுத்து தன்னிலையில் இருந்து இறங்காமல் இருக்க, அதன் விளைவு தான் அவர்களின் இந்த அலங்கோலமான வாழ்வு.

கலையரசிக்கு அவரின் இந்த வாழ்நாள் முழுமைக்கும் சேர்த்து இருக்கும் ஒரே வேண்டுதல் இவர்களின் வாழ்வு சிறக்க வேண்டும் என்பது மட்டுமே.

ஆனால், தங்கமும், வைரமும் ஒன்றுடன் ஒன்று கலந்து உருகி குழைந்தால் தானே ஆபரணமாகி அழகு சேர்க்கும்… இங்கே அதற்கே வாய்ப்பில்லாமல் இருக்கிறதே!!!

Advertisement