Advertisement

மீட்டிங் நடைபெறும் ஹாலுக்கு பக்கவாட்டில் இருந்த அவளது தனிப்பட்ட அறையில் சென்று கண்களை மூடி சில நிமிடங்கள் அமர்ந்தவள் மனம் தன் கட்டுக்குள் வரவும், கையில் இருந்த கோப்புகளில் கவனம் செலுத்தினாள்.

அடுத்த இரண்டு மணிநேரம் பேச வேண்டியதையும், செய்ய வேண்டியதையும் முறைப்படி மனதில் வரிசைப்படுத்திக் கொண்டவள் முகம் கழுவி, லேசாக ஒப்பனை செய்துகொண்டு கண்ணாடியைப் பார்க்க, திருப்தியாக இருந்தது அவளது தோற்றம். ஆனால், கண்ணில் மட்டும் எதுவோ குறையிருப்பதாக தோன்ற, அழுத்தமாக கண்களில் மையிட்டு அதனை சமன்செய்து கொண்டாள்.

பத்து நிமிடங்களில் அவள் அறையின் கதவு தட்டப்பட்டு மலர்விழி உள்ளே நுழைய, “ஜூஸ் கொண்டு வர சொல்லு மலர்.” என்று எதுவும் நடவாததுபோல் கூறி அமர்ந்துகொண்டாள் அவள்.

“தேவா டெலிகேட்ஸ் எல்லாம் வந்துட்டாங்க.” என மலர் அறிவிக்க,

“வெய்ட் பண்ணட்டும். எனக்கு ஜூஸ் சொல்லு.” என்றவள் அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு அந்த அறையைவிட்டு நகரவில்லை.

அதன்பின்பும் வெகு நிதானமாக மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தவள் கம்பீரம் அங்கிருந்த ஆண்மக்களுக்கு சவால் விடுப்பதாக இருந்தது. உண்மையில் அவர்கள் யாருக்கும் தேவசேனாவை எதிர்க்கும் துணிவு கிடையாது. இப்போதும் கேட்பார் பேச்சைக்கேட்டு அவர்கள் தேவாவை எதிர்க்க துணிந்திருக்க, அதற்கு பதில் கொடுக்கத்தான் இந்த கூட்டம்.

அவளது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டவள், “சொல்லுங்க நடராஜன். மீட்டிங் அரேஞ்ச் பண்ண சொல்லிட்டு அமைதியா இருக்கீங்களே. எதுக்காக இந்த மீட்டிங்னு எல்லாருக்கும் நீங்களே சொல்லிடுங்க.” என்றாள் சாவகாசமாக,

அவளுக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்த நடராஜன், கையைப் பிசைந்தபடி தனக்கு எதிரில் அமர்ந்திருந்த சத்யதேவை பார்க்க, அவர் பார்வையைக் கண்டுகொள்ளாமல், “அவர் ஏன் சொல்லணும்? நான் சொல்றேன்… சேஷா குரூப்ஸ் லாஸ்ட் ஒன் இயரா லாஸ்ல போயிட்டு இருக்கு. யாரோ சிலரோட அஜாக்கிரதையால நாங்க ஏன் பாதிக்கப்படணும்? எங்களுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?”

“வெல் மிஸ்டர் சத்யதேவ். சேஷா க்ரூப்ஸ பத்தி என்னைவிட அதிகமா ரிசர்ச் பண்ணி இருப்பிங்க போல. குட்… நீங்க சொன்னபடி சேஷா க்ரூப்ஸ் லாஸ்ல இருந்து இருக்கலாம். ஆனா, அதெல்லாம் பழைய கதை. லாஸ்ட் டூ மந்த்ஸ் ரிப்போர்ட்ஸ்படி நாம மீண்டுட்டே இருக்கோம். எங்கமேல நம்பிக்கை இருக்கவங்க எங்களோட இருக்கலாம்.”

“நம்பிக்கை இல்லாத யாரா இருந்தாலும், எப்போ வேணாலும் வெளியே போகலாம். உங்களோட ஷேர் வால்யூஸ் அப்படியே உங்க அக்கௌண்ட்ல கிரெடிட் ஆகிடும். அண்ட் அதுக்கான பேப்பேர்ஸ் இங்க இருக்கு. ” என்றவள் மலரைப் பார்க்க, அவள் தன் கையில் இருந்த கோப்புகளை அங்கிருந்த அத்தனைப் பெருகும் விநோயோகிக்கத் தொடங்கினாள்.

“தேவா மேம்.. இதெல்லாம் எதுக்கு. நம்பிக்கை இல்லாம எல்லாம் இல்ல…” என்று ஒருவர் வாய் திறக்க,

“நம்பிக்கை இருந்திருந்தா, இந்த மீட்டிங்க்கு என்ன அவசியம் மிஸ்டர் சீதாராம். சேஷா குரூப்ஸ் என் பாட்டியோட உயிர். இந்த நிமிஷம் சேஷா க்ரூப்சோட மேஜர் ஷார்ஸ் என்கிட்டே இருக்கு.”

“சேஷா க்ரூப்ஸ் உங்களோட பத்து பிஸினெஸ்ல ஒன்னு. ஆனா, எங்களுக்கு உயிரே சேஷா க்ரூப்ஸ் தான். உங்களைவிட அதிகமா எனக்கு பொறுப்பு இருக்கு.”

“என்மேல நம்பிக்கை இல்லாதவங்களோட என்னால ட்ராவல் பண்ண முடியாது. யாருக்கோ இங்கே இருக்க பயமா இருக்கோ, பேப்பேர்ஸ்ல சைன் பண்ணி கொடுங்க. அமவுண்ட்டை ட்ரான்ஸ்பர் பண்ணி விடச் சொல்றேன்.” என்றவள் மீட்டிங் முடிந்தது என்று அறிவிப்பவளாக இருக்கையில் இருந்து எழுந்துவிட்டாள்.

அங்கிருந்த அத்தனைப் பேரும் எழுந்து நிற்க, நடக்கத் தொடங்கியவள் சத்யதேவை நெருங்கவும், “வா.” என்ற ஒற்றைச்சொல்லோடு அவனைக் கடந்து சென்றாள்.

அடுத்த சில நிமிடங்களில் அவள் அறைக்கதவைத் தட்டிவிட்டு சத்யதேவ் அவள் அறைக்குள் நுழைய, அவனை என்ன ஏதென்று எதுவும் கேளாமல் ஓங்கி அறைந்துவிட்டாள் தேவா.

“தேவா.” என்று அதிர்ந்தவனாக அவன் நிற்க,

“மேடம்.” என்று அவனைத் திருத்தினாள் தேவா.

அவன் வாய்திறக்காமல் நிற்க, “என்ன அக்கறையா.? என்னை எதிர்க்கிற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா உனக்கு?”

“உன் நல்லது..”

“நான் கேட்டேனா உன்கிட்ட… எனக்கு நல்லது பண்ண சொன்னேனா… சேஷா க்ரூப்ஸை எதிர்த்து நிற்க முடியுமா உன்னால.” என்று சவாலாக கேட்டவள் “எப்போ இப்படி ஒரு விஷயத்தை செஞ்சியோ, இனி உனக்கு இங்கே இடமில்ல. சைன் பண்ணு.” என்றவள் ஒரு கோப்பை எடுத்து அவன்முன் வீசினாள்.

சற்று கலக்கத்துடன் அதை கையில் எடுத்தவன், அதன் சாராம்சம் புரியவும், “என்னால முடியாது தேவா.” என்று உறுதியுடன் மறுக்க,

“சைன் பண்ணுன்னு சொன்னேன்.”

“நான் இதுல சைன் பண்ணிட்டா எல்லாமே முடிஞ்சிடும் தேவா. என்ன ஆனாலும் நான் இதை செய்ய மாட்டேன்.” என சத்யதேவ் உறுதியாக மறுக்க,

“என்னைவிட இந்த ஷேர்ஸ் பெருசா தெரியுதா உனக்கு?” என்றவள் “நான் வேணும்ன்னா நீ இதை கொடுத்து தான் ஆகணும்.” என்றாள் உத்தரவாக.

“தேவா.” என்றவனைப் பார்க்காமல் அவள் அலட்சியத்துடன் தன் இருக்கையில் அமர்ந்துகொள்ள, அதற்குமேல் அவளிடம் பேசாமல் அந்த கோப்பில் கையெழுத்திட்டவன், “எப்போதும் எனக்கு என் தேவா தான் முதல்ல. அவளுக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்ல. ஆனா, நான் உனக்கு எப்பவுமே அப்படி இருந்ததில்ல இல்லையா…” என வலி மிகுந்த குரலில் வினவியவன் “இனி சேஷா க்ரூப்ஸ்க்குள்ள எனக்கு வேலையில்ல.” என்று கனத்த குரலில் கூறியபடி வெளியேறிவிட்டான்.

செல்லும் அவனைக் கண்டு கொஞ்சமும் வருத்தம் கொள்ளாமல் அவன் கையெழுத்திட்ட கோப்புகளை தன்னுடைய பெர்சனல் லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு அடுத்ததடுத்த வேலைகளை கவனித்தவள் நேரம் ஏழைக் கடக்கவும், அலுவலகத்தில் இருந்து புறப்பட்டாள்.

மலர்விழி அவள் கார்வரை வந்தவள் அவளிடம் விடைபெற்றுக்கொண்டு தனது வண்டியில் ஏறிக் கிளம்ப, தேவசேனாவின் கார் சாலையில் கலந்தது. அவள் வாகனத்திற்கு பின்னால் அவளின் பாதுகாவலர்கள் நால்வர் மற்றொரு வாகனத்தில் வர, இவள் செல்லும் காரில் டிரைவரும், இவளும் மட்டுமே.

அவளது கார் வீட்டை நெருங்கும் சமயம், அவள் அலைபேசி அழைக்க அதில் தெரிந்த எண்ணை வெறித்தவள் சலிப்புடன் அலைபேசியைக் காதில் வைத்தாள்.

எதிர்முனை கூறிய செய்தியை அமைதியாக கேட்டுக்கொண்டு, “…….. ஹோட்டலுக்கு போங்கண்ணா.” என்று டிரைவரிடம் கூறியவள் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.

பத்து நிமிடங்களில் ஹோட்டல் வந்துவிட, தனது பாதுகாவலர்களிடம் சில விஷயங்களை கூறியவள் வேகமாக ஹோட்டலுக்குள் நுழைய, அடுத்த சில நிமிடங்களில் அந்த ஹோட்டலின் ஆடம்பரமான அறை ஒன்றின் முன் நின்றிருந்தாள் அவள்.

அவளது பாதுகாவலர்களில் ஒருவன் அந்த அறையின் மாஸ்டர் கீ கொண்டு அறையின் கதவைத் திறந்துவிட, அவர்கள் அத்தனைப் பேரையும் வெளியிலேயே நிறுத்தியவள் அறைக்குள் நுழைய, அங்கே தலைகால் புரியாத அளவிற்கு குடித்துவிட்டு படுக்கையில் கிடந்தான் சேஷா.

அவன் மீது படுத்துக்கொண்டு அவன் அங்கங்களை தழுவிக் கொண்டிருந்தவள் அவன் முகம் பற்றி இதழ்களை நெருங்க, அதற்குமேல் பொறுக்க முடியவில்லை தேவாவால். அவர்களை வேகமாக நெருங்கியவள் அந்த பெண்ணை பிடித்து இழுத்து கீழே தள்ளி இருந்தாள்.

கீழே விழுந்தவளும் குடித்து இருந்தாலும், சேஷாவைப் போல் கண்மண் தெரியாத அளவு குடியில்லை.விழுடன்ஹா வேகத்திற்கு எழுந்து நின்றவள், “ஏய் யார் நீ.? எப்படி எங்க ரூம்குள்ள வந்த?” என்று சத்தமிட,

கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “தேவசேனா… சேஷா குரூப்ஸ் MD…” என்று நிதானமாக கூற,

“நீ யாரா இருந்தா எனக்கென்ன.? வெளியே போடி.” என்று அவள் மரியாதைக்குறைவாக பேச, அடுத்தகணம் தேவசேனா தன் மொத்த பலத்தையும் திரட்டி ஒரு அறை கொடுத்துவிட்டாள்.

“ஏய்… நான் யார் தெரியுமா?” என்று அறை வாங்கியவள் கத்த,

“பொதுப்பணித்துறை அமைச்சர் நாராயணன் பொண்ணு. என்ன உன் அப்பாவுக்கு போன் போட்டு கொடுக்கணுமா இப்போ.” என்று அலட்சியமாக கேட்டாள் தேவா.

அதில் சற்று சுதாரித்துக் கொண்டவள், “நீ யாரு?” என்று மீண்டும் கேட்க,

“இவன் பொண்டாட்டி…” என்று கட்டிலில் கிடந்தவனை கண்ணால் காண்பித்தாள் தேவா.

அந்தப்பெண் இப்போது அதிர்ச்சியடைந்து நிற்க, “வெளியே போ.” என்றாள் அவள் அதிர்ச்சியைக் கண்டுகொள்ளாதவளாக.

அவள் அணிந்திருந்த அரைகுறை ஆடையை சரிசெய்து கொண்டு வெளியே செல்ல, “நீ இன்னைக்கு இந்த ஹோட்டலுக்கு வரவே இல்ல… புரியுதா?” என்று அழுத்தமாக தேவா கேட்க, அமைதியாக தலையாட்டி அவள் வெளியேறவும் தான் சேஷாவின் பக்கம் திரும்பினாள் தேவா.

தன்னிலை புரியாமல் கிடந்த அவனது தோற்றம் அவள் ஆத்திரத்தை அதிகரிக்க, அவனை நெருங்கியவள் கண்களை மூடி திறந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவன் உடையை சரிசெய்தாள். அவன் சட்டை பட்டன்களை அவள் சரியாக பொருத்திக் கொண்டிருக்க, “அம்மு.” என்று அவன் இதழ்கள் லேசாக முணுமுணுக்கவும், அதுவரை இருந்த நிதானம் பறந்து போக, அவன் கன்னத்தில் வேகமாக அடித்தவள், “கண்ணைத் திறந்து பாருடா.” என்று அவனை எழுப்ப, மீண்டும் அவன், “அம்மு.” எனவும், “செத்து தொலைடா…” என்று அவன் கழுத்தை நெறித்துவிட்டாள்.

Advertisement