Advertisement

மௌனமாய் எரிகிறேன் 01

அந்த பிரம்மாண்டமான திரையரங்கத்தின் முன்னே திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களின் விலையுயர்ந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துக் கொண்டிருக்க, விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஒரு பிரபலமான கதாநாயகனின் திரைப்படத்திற்கான முன்னோட்ட காட்சி அந்த திரையரங்கில் அன்று திரையிடப்படுவதாக இருந்தது.

அந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று அத்தனைப் பேருமே தமிழ் திரையுலகின் முக்கிய அங்கத்தினராக இருக்க, அவர்களுடன் சேஷாவும் இணைந்து கொண்டதில் அனைவரின் கவனமும் இவர்களின் பக்கம் திரும்பியிருந்தது.

அழைப்பு விடுத்திருந்த அத்தனைப் பேரும் மறுக்காமல் வந்து சேர்ந்திருக்க, திரைப்படத்தின் நாயகன் சேஷா சரியாக படம் திரையிடுவதற்கு பத்து நிமிடங்கள் முன்பு தான் அங்கே வந்து சேர்ந்தான்.

ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் அருகில் நடந்து வந்த அத்தனைப் பேரையும் தாண்டி வளர்ந்திருந்தவன் கண்களில் இயல்பாகவே ஒரு வசீகரம் குடிகொண்டு இருந்தது. ஆனால், அந்த வசீகரத்தையும் மீறி ஒருவித இறுக்கமும், கடுமையும் அந்த அழகான கண்களில் மறைந்திருப்பதை அவனை நன்கு அறிந்தவர்களால் மட்டுமே உணர முடியும்.

மனதில் இருக்கும் எதையும் வெளிக்காட்டாத ஒரு அழகான, அளவான புன்னகையுடன் அவன் அந்த வளாகத்திற்குள் நுழைய, அங்கிருந்த அத்தனைப் பேரின் பார்வையும் அவனிடம் தான். அங்கிருந்தவர்களை நோக்கி, வசீகரமாக புன்னகை சிந்தியவன் அவர்கள் அனைவரிடமும் கைகுலுக்கிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தான்.

அந்த நேரம் அவனது நண்பனும், உதவியாளருமான நிவாஸ் வேகமாக அவன் அருகில் வர, சேஷா அவனைத் திரும்பி பார்க்கவும், மறுப்பாகத் தலையசைத்தான் அவன்.

அந்த நொடி… சேஷாவின் முகம் செந்தணலைப் போல் சிவந்துவிட, அவனுக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த அவன் படத்தின் நாயகி தேஜஷ்வினி, இயக்குனர் இவர்களை மனதில்கொண்டு தன்னை இயல்பாக காட்டிக் கொண்டான்.

அவனது அந்த நொடிநேர மாற்றம் அங்கிருந்தவர்களுக்கு புரியாமல் போனாலும், அவனின் நிழலாக உடனிருக்கும் நிவாஸுக்கு புரிந்தது. “இன்னைக்கும் இவனை டென்ஷன் பண்ணனுமா.?” என்று அவன் யாரை நினைத்து புகைந்தானோ, அந்த புகைச்சலுக்கு காரணமானவள் கொஞ்சமும் அலட்டல் இல்லாமல், நிதானமாக அந்த திரையரங்க வளாகத்திற்குள் நுழைந்தாள்.

அவளை முதல்முறைப் பார்ப்பவர்களுக்கு சற்றே சுருள் சுருளாக, அவள் முதுகிற்கு கீழ் வரை படர்ந்து பரவியிருக்கும் அவளது கூந்தல் தான் முதலில் கண்களில்படும். அதையும் வெகு அலட்சியமாக ஒரு கிளிப்பில் அடக்கி, ஒருபுறமாக அவள் விரித்து விட்டிருக்க, கார்மேகக்கூட்டங்களுக்கு இடையில் இருந்து எட்டிப் பார்க்கும் பூரண சந்திரன் தான் அவள்.

உண்மையில் அப்படித்தான் இருந்தாள். பெரிதாக ஒப்பனையெல்லாம் எதுவுமில்லாமல், கருப்பில் கரையிடப்பட் ஒரு கரும்பச்சைநிற நிற டிசைனர் சேலை உடுத்திருந்தவள், அதற்கு ஏற்றார் போல் மரகதக்கற்கள் பதித்த கழுத்தணியும், காதணியும் அணிந்திருக்க, அவளுக்கு அதுவே போதுமாக இருந்தது.

ஆனால், சேஷாவின் கண்களுக்கு அப்படியே நேர்மாறாக மொத்தமும் திமிரும், அலட்சியமும் தான் வெளிப்பட்டது அவள் கண்களில். அங்கிருந்த யாரையும் பற்றி கவலையற்றவளாக, வலது கையால் தலைமுடியை ஒதுக்கிக்கொண்டு, இடது கையால் சேலையின் நுனியைப் பிடித்துக்கொண்டு அழகாக நடந்து வந்தவள் நிச்சயம் அப்சரஸ் தான்.

நிவாஸின் அருகில் வந்தவள் அவனைத் தாண்டி அடுத்த அடி எடுத்து வைக்கப்போக, சட்டென சுதாரித்துக் கொண்டான் நிவாஸ். அத்தனை நேரம் இருந்த புகைச்சல் மறைந்து போக, “சார் இங்கே இருக்காங்க மேம்.” என்றான் போலி பணிவுடன்.

அவனைப் பார்த்து நக்கலாக  சிரித்தவள் தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றாள். அவளது பார்வையில் நிவாஸ் அவளுக்கு வழிவிட்டு விலகி நிற்க, அங்கிருந்தவர்களைப் பார்த்து அழகாக கரம் குவித்தாள் தேவசேனா.

‘இது உலகநடிப்புடா யப்பா’ என்று நிவாஸ் மனதிற்குள் அலற, அவனை கண்டுகொள்ளாமல் வெகு இயல்பாக நடந்து வந்து, சேஷாவின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

அவள் இருக்கையில் அமர்ந்து கொள்ளவும், தேஜஷ்வினி அவளைப் பார்த்து கையசைக்க, பதிலுக்கு தானும் கையசைத்தவள் திரையைப் பார்த்து அமர்ந்துவிட்டாள்.

நிவாஸ் ஒரு நிம்மதி பெருமூச்சை வெளியேற்ற, அதைக் கெடுக்கவென்றே வந்து சேர்ந்தாள் தேவசேனாவின் உதவியாளர் மலர்விழி. நிவாஸின் பேயறைந்த முகத்தைப் பார்த்து கிண்டலாக சிரித்தவள் புன்னகை மாறாமல் தேவசேனாவின் இருக்கைக்கு பின்னர் இரண்டு வரிசைகள் தள்ளி தனியாக அமர்ந்து கொண்டாள்.

அவளது கேலியான சிரிப்பில் நிவாஸுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தாலும், இருக்கும் இடம் உணர்ந்தவனாக அமைதியாகிப் போனான் அவன்.

அடுத்த சில நிமிடங்களில் திரைப்படம் திரையிடப்பட, அனைவரின் கவனமும் திரையில் பதிந்தது. சேஷா தனக்கு அருகில் அமர்ந்திருந்தவளைத் திரும்பியும் பாராமல் திரையை வெறித்திருந்தான். எப்போதும் போலவே, “அடங்காப்பிடாரி…” என்று மனதுக்குள் அவளை திட்டிக் கொண்டவன் முயன்று படத்தில் கவனம் செலுத்தினான்.

தேவசேனாவின் கண்கள் திரையில் பதிந்து இருக்க, முகம் அத்தனை நிர்மலமாக இருந்தது. காதல் கதை என்ற பெயரில் அதீதத்திற்கும் காதல் காட்சிகள் இருக்க, இதில் மொத்தமாக சேஷாவின் மீது இழைந்து ஆடும்படி ஒரு கவர்ச்சியான நாயகியின் அரைகுறையான ஒரு பாடல் காட்சி வேறு.

அந்த பாடல் காட்சி வரும்போது வேண்டுமென்றே சேஷா தேவசேனாவை அலட்சியமாகத் திரும்பி பார்க்க, அவன் பார்வையை உணர்ந்து, ‘என்ன’ என்பதுபோல் புருவத்தை உணர்த்தினாள் அவள்.

சேஷா அவளது செயலில் கடுப்பாகி மீண்டும் திரையைப் பார்த்து திரும்பிக்கொள்ள, புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தவளின் மனம்  ஆழிப்பேரலையாக ஆர்பரித்துக் கொண்டிருந்தது.

அந்த இடத்தில் அமரவே முடியாதபடி ஒரு இறுக்கம் பெண்ணவளை சூழ்ந்துகொண்டு அவள் கழுத்தை நெறிக்க, அவளின் போராட்டம் அத்தனையையும் உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு வெளியே இயல்பாக இருப்பது போல் வேடம் கட்டுவது இன்னும் கொடுமையாக இருந்தது.

ஆனால், அதற்கெல்லாம் அசந்து போனால் அவள் தேவசேனா இல்லையே. எத்தனைப் பெரிய தொழில் சாம்ராஜ்யம் அவர்களுடையது. இன்றைய நிலையில் அத்தனைக்கும் ஏக வாரிசு அவள். அவள் இப்படி பொதுவெளியில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி விடுவாளா? அதை அவளிடம் சேஷா எதிர்பார்க்கலாமா?

ஒருவழியாக படம் முடியவும், தேவசேனா அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து கொள்ள, அவளை அசையாத பார்வையால் வெறித்தான் சேஷா. அவன் பார்வையை அலட்சியப்படுத்தி, 2’0 க்ளாக் ஒரு மீட்டிங் இருக்கு. சேஷா க்ரூப்ஸ் MD கண்டிப்பா இருக்கணும்.” என்றவள் அங்கிருந்தவர்களை பார்த்து மீண்டும் ஒருமுறை புன்னகைத்து தலையசைப்புடன் கிளம்பியேவிட்டாள்.

அங்கிருந்த அத்தனைப்பேரும் ‘என்ன இது’ என்று சிந்தித்தாலும், அவர்கள் பார்வைகூட சேஷாவின் பக்கம் திரும்பவில்லை. அவர்கள் மனதில் என்ன நினைத்தாலும், பார்வை தேவசேனாவின் மீது ஒருவித மரியாதை கலந்த பயத்துடன் தான் பதிந்து மீண்டது.

அவர்கள் இருக்கும் துறைக்கு அவளை பகைத்துக்கொள்ள முடியாது. தேவசேனாவைப் பற்றி யோசிக்கக்கூட அவர்கள் யாருக்கும் துணிச்சல் கிடையாது. அப்படியே யாராவது அவள் வாழ்க்கையை விமர்சிக்க முற்பட்டாலும், அவர்களை மொத்தமாக அழித்துவிட்டுத் தான் அமர்வாள் அவள்.

ஆண், பெண் யாராக இருந்தாலும் ‘எட்டி நில்’ என்று எச்சரிப்பதாகத் தான் இருக்கும் அவள் பார்வையும், பேச்சும். அவளிடம் இருக்கும் கர்வமும், திமிரும் அவளின் பரம்பரை சொத்துபோல. அவை அவளுடனே பிறந்தது. சில நேரங்களில் அவளது அந்த திமிரும், கர்வமும், ஆத்திரமும் அவளுக்கே அலுத்துப் போகும். ஆனால், அவளை உயிருடன் வைத்திருப்பதே அவளின் திமிர் தான் என்பதால், எப்போதும் கர்வமாக நிமிர்ந்து நின்றே பழகிவிட்டாள் அவள்.

சேஷாவிடம் சொன்னதுபோலவே தனது அலுவலகத்தை அடைந்தவள் தனது அறையில் சென்று அமர, மலர்விழி அவளுக்கான உணவை அவள் முன்னே வைத்தாள்.

“மூடில்ல மலர். இப்போ எதுவும் வேண்டாம். மீட்டிங் நோட்ஸ் எடு.” என்றவளை மறுத்துப் பேசாமல் மலர் அவள் கேட்டதை எடுத்து கையில் கொடுக்க, ஒரு கையால் அதை மேலோட்டமாக பார்த்துக் கொண்டிருந்தவளின் கைகளில் ஒரு பழச்சாறு அடங்கிய கண்ணாடிக்குவளையை வைத்தாள் மலர்.

“பசிக்கல சொல்றேன்ல.” என்று சற்றே குரலுயர்த்தியவள் கையில் இருந்ததை பட்டென மேஜை மீது வைத்ததில், அந்த அழகான கண்ணாடி மேஜையின் மீது லேசாக சிந்தியது அந்த திரவம். மலர் கண்டனத்துடன் தேவசேனாவைப் பார்க்க, அவள் பார்வையைக் கண்டுகொள்ளாமல் எழுந்து வெளியே நடந்துவிட்டாள் தேவசேனா.

Advertisement