Advertisement

மது – 1

அதிகாலை நேரம்…. பொழுது இன்னும் சரியாய் புலராத தருணம்.. புள்ளினங்கள் அப்போது தான் தங்களின் பூபாளத்தை தொடங்கியிருக்க, நீண்ட நெடிய வானத்தின் கிழக்குப்பக்கம் சிறு புள்ளியாய் ஆதவன் உதிப்பதற்கான அடையாளமாய் மெல்ல மெல்ல செந்நிறம் பூசிக்கொள்ளத் தொடங்கியிருந்தது.

பரபரப்பான சென்னை மாநகரம் அந்த காலை நேர அமைதியில் லயித்திருக்க, சாலைகளில் கனரக வாகனங்கள் சென்றுகொண்டு இருக்க, அங்கொன்றும் இங்கொன்றுமாய் சாலையோர சிறு சிறு காப்பி டீ கடைகள் திறந்து இருந்தன.     

பேப்பர் போடுபவர்களும், பால் பாக்கட் போடுபவர்களும், சாலை துப்புரவு பணியாளர்களும் தங்களின் அலுவலைத் தொடங்கியிருக்க, வேகமாய் வந்துகொண்டு இருந்த ஒரு லாரி தன் வேகத்தை குறைத்து கொஞ்சம் நிற்பது போல் நிற்க,

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா…” என்றபடி லாரியின் முன்பக்கம் இருந்து குதித்து இறங்கினான் ரிஷி நித்யன்.

‘ஆறடி உயரம்… அழகிய உருவம்.. ஆப்பிள் போலே இருப்பானோ….’ என்ற பாடலின் வரிகள் இவனுக்கு மிக மிக பொருந்தும்..

ஆனால் ஆப்பிள் போல் உருண்டையாய் இல்லாமல் வாட்ட சாட்டமாய் வஞ்சனையில்லாமல் உண்டு வளர்ந்திருக்கிறான் அல்லது வீட்டில் அப்படி வளர்த்திருக்கிறார்கள் என்று அவனைப் பார்த்தாலே நன்கு தெரியும்.

லாரியில் இறந்து இறங்கியவன், ஓட்டுனருக்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு நிற்க, அடுத்த நொடி லாரியும் தன் ஓட்டத்தை தொடங்வும், சாலையின் ஓரத்தில் நின்றிருந்தவன், அவன் கரங்களில் இருந்த பேக்கை முதுகு புறத்திற்கு மாற்றிவிட்டு,

“ஷ்ஷ்…” என்று சொல்லியபடி தன் கைகளை தேய்த்துக்கொண்டு, சுவாசக் காற்றை வாய் வழியாய் வெளியே விட, மெல்லிய புகைப்படலம் ஒன்று அவன் வாயில் இருந்து வெளிவந்தது.

சுற்றும் முற்றும் ஒருநொடி பார்த்தவன், தன் ஜீன்ஸ் பாக்கெட்டினுள் கைவிட்டு ஏற்கனவே கழட்டி வைத்திருந்த சிம் கார்ட்டை கீழே போட்டு தன் ஷூ காலால் அழுந்த மிதித்து ஒரு தேய் தேய்க்க அடுத்து அந்த சிம் எதற்கும் பயன்பாடாது என்று நன்றாய் தெரிந்தது..

அதே வேகத்தில் மற்றொரு புறம் இருந்த பாக்கெட்டில் இருந்து  அலைபேசியையும், கூடவே மற்றொரு புது  சிம்மையும் எடுத்து அலைபேசியில் பொருத்தி அதனை ஆன் செய்ய, ஒருசில நொடிகளில் அவனது அலைபேசி ‘நீ என்னை உபயோகிக்கலாம்..’ என்று சொல்லாமல் சொல்லி மின்னியது..

“சூப்பர்ப்..” என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு, நடக்கத் தொடங்கினான்.

சற்று தொலைவில் ஒரு டீ கடை இருக்க, அந்த காலை நேரத்திலேயே அங்கே ஊதுபத்தி மணத்தோடு சேர்த்து, பாய்லரில் கொதிக்கும் பால் வாசமும் கலந்து வர,  “இறைவனிடம் கையேந்துங்கள்…” என்ற பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க, அதனை நோக்கி தன் நடையை எட்டிப் போட்டான் ரிஷி நித்யன்..

டீ கடையின் இரண்டு பக்கத்திலும் பெஞ்ச்கள் போடப்பட்டு இருக்க, ஒருசிலர் அமர்ந்து செய்தித்தாள் படித்துகொண்டு இருக்க, ஒருசிலரோ நின்றுகொண்டே டீயோ அல்லது காப்பியோ பருகிக்கொண்டு இருந்தனர்.

“ண்ணா ஸ்ட்ராங்கா ஒரு காப்பி…” என்று சொல்லி அங்கிருந்த பெஞ்சில் அமரும் போதே,

காலையில் வீட்டில் ஒலிக்கும் சுப்ரபாத ஓசையோடு, கமகம கும்பகோண பில்டர் காப்பியின் சுவையும் மணமும் அவனை எழுப்பும் வகையில் அவனின் அம்மா கையில் காப்பியோடு வந்து எழுப்புவது நினைவில் வர, வேகமாய் தன் தலையை உலுக்கிக்கொண்டான்.

“நோ நோ ரிஷி…” என்று தனக்கு தானே சொல்லிகொண்டவன், வேகமாய் ஒரு எண்ணிற்கு அழைப்பு விடுக்க,

அதுவோ வெகுநேரம் மணி அடித்து பின் கடைசி நேரத்தில் எடுக்கப்பட, “என்னடா நல்ல தூக்கமா???” என்று ரிஷி வினவவும், அப்பக்கம் என்ன பதில் வந்ததோ,

“சரி சரி.. கும்பகோணத்துக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு சென்னை வந்திட்டேன்.. செம பசி.. ஒரு காப்பி மட்டும் குடிச்சிட்டு உன் ரூம்முக்கு வர்றேன்..” என்றவன் ஒருநொடி மௌனத்திற்கு பிறகு

“ஓகே அங்க வந்திட்டு கால் பண்றேன்…” என்றுசொல்லி அழைப்பை துண்டிக்கும் போது, வேகமாய் அந்த கடையின் முன்னே வந்து நின்றது ஒரு வெள்ளை நிற பிஎம்டபிள்யூ.

சர்ரென்று வந்த நின்ற சத்தத்தில் அங்கிருந்த அனைவருமே ஒருநொடி தாங்கள் செய்துகொண்டு இருந்த வேலையை விட்டு காரைப் பார்க்க, அதிலிருந்து மிக மிக அலட்சியமாய் இறங்கினாள் ஒரு யுவதி.

பார்ப்பதற்கு பளீச் தோற்றம்.. நெற்றியின் நடுவே வைத்திருந்த சிறு சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு, இடது புற நாசியில் சின்னதாய் ஒரு வளையம், காதில் ஒரே ஒருசின்ன கல் தோடு, ஜீன்ஸும் குர்தாவும் அணிந்து,  தோள் வரை புரண்ட கேசத்தை ஸ்டெய்லாய் ஒதுக்கிவிட்டபடி இறங்கியவள் காரை ரிமோட் லாக் செய்துவிட்டு,

“அண்ணா ஒரு ஸ்ட்ராங் டீ.. சுகர் இல்லாம…” என்று சொல்லியபடி வந்து ரிஷியின் அருகே அமர, அத்தனை நேரம் அவளையே பார்த்திருந்தவர்கள் எல்லாம் வேகமாய் தங்களின் பார்வையை திருப்ப, ரிஷியும் அதேபோல் தனக்கு வந்த காப்பியில் கவனம் செலுத்த,

அடுத்து இரண்டொரு நொடியில் அவள் கேட்ட டீயும் வந்துவிட, “தேங்க்ஸ்…” என்று வாங்கியவள் டீயைப் பருகத் தொடங்க,

காப்பியைக் குடித்துக்கொண்டு இருந்தவன் பார்வை அவனையும் அறியாமல் தன்னருக்கே இருந்தவள் பக்கம் சென்றது..

‘இந்த நேரத்துல.. அதுவும் பிஎம்டபிள்யூ ல டீக்கடைக்கு… ஹ்ம்ம் ரிஷி நீ எல்லாம் பையனா பொறந்து என்னடா பிரயோஜனம்…’ என்று எண்ண, அவனது கண்களோ பக்கத்தில் இருப்பவளை எடை போடுவது போல் பார்க்க,

அவன் பார்வையில் கொஞ்சம் வித்தியாசமாய் பட்டது, அப்பெண்ணின்  இடது கை கட்டைவிரலை ஒட்டி ‘மதுB…’ என்றிருந்த டாட்டூ.

‘மதுபி…’ என்று வாசித்தவன் ‘இப்படியொரு பேரா…’ என்று நினைத்துக் கொண்டான்..

அவன் நினைத்துக்கொண்டு இருக்கும் அதே நேரம் எழுந்து நின்றவள், பேப்பர் டம்ப்ளரை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, டீக்கான பணத்தை கொடுத்துவிட்டு காரை நோக்கி செல்ல, மீண்டும் அங்கிருந்தவர்களின் பார்வை அவளையும் அவளது காரையும் தொட்டு மீண்டது..

யார் இருந்தால் எனக்கென்ன.. யார் பார்த்தால் எனக்கென்ன.. எனக்கு இந்த நேரத்தில் டீ வேண்டும். ஆக நான் குடிக்க வந்தேன்.. என்று வேறெதையும் கண்டுகொள்ளாது காரைக் கிளப்பிக்கொண்டு அவள் சென்றுவிட,

ரிஷியும் தான் கிளம்ப வேண்டும் என்றுணர்ந்து அவன் பருகிய காப்பிக்கான பணத்தை கொடுத்துவிட்டு நடக்கத் தொடங்கினான்.. என்னதான் நடை முன்னோக்கி இருந்தாலும், மனம் பின்னோக்கி கும்பகோணம் செல்ல,

‘ரிஷி.. சீக்கிரம்.. அப்பா பூஜை முடிக்கப் போறார்டா.. குளிச்சிட்டு ஹாலுக்கு வா..’ என்று அரவில்லாமல் அவனின் அம்மா கல்யாணி வந்து, பெட் காப்பி பருகிவிட்டு மீண்டும் போர்வைக்குள் தன்னை நிரப்பியிருப்பவனை தட்டிவிட்டு செல்வார்.

அதெல்லாம் இப்போது நினைவில் வர, “டேய் ரிஷி.. அந்த லைப் உனக்கு வேணாம்னு தானே வந்த.. பின்ன என்ன…..” என்று தன்னை தானே திட்டிக்கொண்டவன் வேகமாய் நடக்கத் தொடங்கினான்.

ரிஷி நித்யன் ப்ரம் ஆர்தோடக்ஸ் பேமிலி.. இப்படித்தான் யார் கேட்டாலும் மனதில் சொல்லிக்கொள்ளுவான். என்னதான் காலங்கள் மாறினாலும், அவர்கள் வீட்டில் பரம்பரை பரம்பரையாய் அவர்களின் முன்னோர்கள் எப்படியான பழக்க வழக்கங்களை கடைபிடித்து வந்தனரோ அதனையே இன்றும் கடைபிடித்து, இப்படியெல்லாம் இருப்பதால் தான் மேலும் மேலும் முன்னேறி இந்த நிலையில் இருக்கிறோம் என்று அடுத்த தலைமுறைக்கும் சொல்லி, அவர்களையும் அதே வழியில் செல்ல வழியுறத்த, அது ரிஷி நித்யனுக்கு மட்டும் பாகற்காயாய் கசந்தது..

அவனது தாத்தா ரிடையர்ட் ஜட்ஜ்.. தாத்தாவின் அப்பா.. அவரின் அப்பா எல்லாம்  அந்தகாலத்தில் அரச குடும்பத்தில் உயர் பதவியில் இருந்தவர்கள்.. அவனின் அப்பாவோ ரிடையர்ட் கலக்டர்..  ஆக தன்னப் போல் அவன் குடும்பத்தில் ஒரு கம்பீரமும், கர்வமும் வந்து ஒட்டிக்கொள்ள இப்படித்தான் இருக்கவேண்டும் இதுதான் சரி என்று அவர்கள் வாழ்வு முறையே இன்னமும் ஒருமாதிரி தான் இருக்கும்.

ஆனால் அதை இந்த காலத்து பிள்ளைகள் ஏற்றுகொண்டு பின்பற்ற வேண்டுமென்றால் மிக மிக கடினம்.. அதிலும் ரிஷி நித்யனை போன்று வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் குதூகலமாய் அனுபவிக்க வேண்டும் என்று இருப்பவனுக்கு ரொம்பவே கடினம்.

படிப்பு எல்லாம் அவன் அப்பா என்ன கை காட்டினாரோ அங்கேதான்.. சாரதாரண ஆர்ட்ஸ் காலேஜில் படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டான் அவனைக்கொண்டு போய் ஐஐடியில் படிக்க வைத்தனர்..

சரி வேலையாவது மனதிற்கு பிடித்தமாய் ஒரு வேலை செய்யலாம் என்று நினைத்தால் அங்கேயும் வந்து குடும்பத்தினர் மூக்கை நுழைக்க,    பொறுத்து பொறுத்துப் பார்த்தான்.. கிளம்பிவிட்டான்.

வீட்டில் அவனுக்கு முன்னே பிறந்தவனோ அப்படியே அவனின் அப்பாவின் மறு உருவம்..

“ரிஷி.. ஏன்டா.. நான் சொன்ன மாதிரி படிச்சிருந்தா அழகா IAS எக்ஸாம் பாஸ் பண்ணிருக்கலாம்..” கண்டிப்பாய் பேசும் ஸ்ரீநிவாஸ் கும்பகோணத்தில் பிரபல வக்கீல்.

“எனக்கு IAS ஆகணும்னு ஆசை இருந்தாதானே ஸ்ரீனி நான் நீ சொன்ன மாதிரி படிக்கணும்.. எனக்குத் தான் ஆசையே இல்லையே…” என்பவனை,  நீயெல்லாம் எங்க உருப்பட போற என்பதுபோல் பார்த்துவிட்டு செல்வான் அவனின் அண்ணன்..

‘நான் உருப்படவே வேணாம்டா…’ என்று இப்போதும் சொல்லிக்கொண்டவன், மீண்டும் அவனின் நண்பனுக்கு அழைத்து,

“வந்துட்டேன்டா..” என்று சொல்லி ஒரு தெரு முனையில் நிற்க, அடுத்த ஐந்து நிமிடத்தில் பாதி தூக்கம் கலைந்த முகத்துடன் ஒருவன் வந்து ரிஷியின் முன் நின்றான்..

“மச்சி மனோ… எப்படிடா இருக்க…” என்று ரிஷி வேகமாய் எதிரில் இருந்தவனிடம் கை குலுக்க,

“ம்ம் ம்ம்.. நல்லா இருக்கேன்.. நீ கும்பகோணம்னு அங்க யார்கிட்டயும் சொல்லிடாத.. நம்ம ஊர் காரனுங்க நிறைய பேர் அந்த மேன்சன்ல இருக்காங்க..” என்று முதல் எச்சரிக்கை விடுக்க,

“ஓகே.. ஐம் ப்ரம் ஆப்ரிக்கான்னு சொல்லிகிறேன் போதுமா..” என்றபடி நடந்தவனை நின்று முறைத்தான் மனோகர்..

“டேய் டைம் ஆச்சு.. இன்னும் ஒன் ஹவர்ல நான் குளிச்சிட்டு கிளம்பனும்..” என்று ரிஷி சொல்ல,

“இருபது நிமிசம்தான் அதுக்குள்ள என்னென்ன செய்யணுமோ செஞ்சிட்டு கிளம்புற.. ஆப்ரிக்காவாம்.. டேய் உன் கலருக்கு யாராவது நம்புவாங்களாடா.. நான் என்ன சொன்னாலும் ஆமான்னு மட்டும் சொல்லு..” என்று இரண்டாவது எச்சரிக்கை செய்து மனோகர் நடக்க,

“இந்த தொல்லைக்கு தான் நான் வீட்டை விட்டே வந்தேன்.. இங்கயுமா.. சரி சரி குளிச்சிட்டு கிளம்பிடுவேன்..” என்று அவனும் நடக்க,

“ஆமா எங்க போகப் போற..” என்று கேட்டவனைப் பார்த்து, “முதல்ல டாய்லெட் போகணும்.. கொஞ்சம் சீக்கிரம் வர்றியா…” என்று ரிஷி கடிய,

‘என் தலையெழுத்து..’ என்று தலையில் அடித்துக்கொண்ட மனோகர் ரிஷியை அவன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அடுத்த அரைமணி நேரம் கடகடவென்று கழிந்துவிட, இதோ ரிஷி கிளம்பும் நேரமும் வந்துவிட்டது..

“இந்த ட்ரெஸ்ஸ வாஸ் பண்ணி வை டா.. ரிட்டர்ன் வர்றபோ வாங்கிக்கிறேன்..” என்றவன், வேகமாய் அந்த மேன்சனை விட்டு வெளியே வர, சென்னை மாநகரம் அதன் பரபரப்பை தொட்டிருந்தது..

முதுகில் தொத்தியிருக்கும் பேக்கை கொஞ்சம் இறுக்கி தன் இடையோடு சேர்த்து ஒரு லாக் செய்து மாட்டியவன், வேகமாய் நடந்து சாலைபுறத்திற்கு வர, வாகனங்கள் வேக வேகமாய் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தது.

அதனை விட மனிதர்கள்..  சந்திர மண்டலத்தை பிடிக்கப் போவதுபோல் அத்தனை வேகம். அருகே யார் நிற்கிறார்கள் யார் வருகிறார்கள் யார் கடந்து செல்கிறார்கள் ம்ம்ஹும் அதெல்லாம் இல்லாது எதனையோ பிடிக்கும் வேகத்தில் நடந்துகொண்டு இருக்க,  அவனை கடந்து செல்ல முயன்ற ஒரு ஆட்டோவை கை காட்டி நிறுத்தினான்..

“இமயா ட்ரெக்கிங் & கேம்பிங்… போகணும்..”

“இன்னா ஏரியா சார்???”

“எக்மோர் கிட்ட… நீங்க போங்க நான் ரூட் சொல்றேன்..” என்றபடி ஆட்டோவில் ரிஷி ஏற,

“இன்னா சார் ஆட்டோகாரனுக்கே ரூட்டா..” என்றபடி ஆட்டோ கிளம்ப, ரிஷியும் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வர, கண்ணில் படும் எதுவும் கருத்தில் படவில்லை..

கும்பகோணமும்.. அவன் வீடும்.. அவன் வீட்டு மனிதர்களும் மாறி மாறி அவன் மனதில் வந்துபோக, இந்நேரம் தான் அங்கேயில்லை என்று தெரிந்திருக்கும்.. அதன் பின் என்ன நடக்கும் என்பது அவனது அனுமானத்தில் இல்லை..

மிஞ்சி போனால் இன்னும் ஒருவாரம் தான் இங்கே இருப்பான்.. சுவிஸர்லாந் விசா இன்னும் நான்கு நாட்களில் வந்துவிடும்.. எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு தான் கும்பகோணம் விட்டு கிளம்பியதே.

சென்னையிலேயே இருந்தால் கூட எப்படியும் கண்டுபிடித்துவிடுவர் என்றுதான் இப்போது ஏலகிரி கேம்ப் செல்கிறான்.. மொத்தம் நான்கு நாட்கள் கேம்ப்.. அதுமுடிந்து இங்கே வந்தால் அப்படியே சுவிஸ் பறந்திடுவான்..

என்னதான் இருந்தாலும் தன்னை தேடுவார்கள் என்று தெரியும்.. அத்தனை எளிதில் அவனை கண்டுகொள்ள கூடாது என்றுதான் சென்னை வந்து பின் ஏலகிரி செல்வது.. அதிலும் ஏலகிரி செல்வது கூட நேற்று காலை முடிவான ஒன்றுதான்..

ஒருவழியாய் ஆட்டோக்காரர் ‘இமயா ட்ரெக்கிங் & கேம்பிங்..’ கண்டிபிடித்து ரிஷியை அங்கே இறக்கிவிட, அவனும் எவ்வளோ என்று கேட்டு  பணத்தை கொடுக்க,

“சேஞ் இல்ல சார்..” என்றவரிடம், “நீங்களே வச்சுக்கோங்க..” என்று சொல்லி, வேகமாய் அந்த காம்பவுண்டினுள் நுழைய,

அவனை  முதலில் வரவேற்றது அன்று காலையில் பார்த்த வெள்ளை நிற பிஎம்டபிள்யூ.. அதனருகே ஒரு முப்பது பேர் அமர்ந்து செல்வதற்கான ஒரு வேன் வேறு நிற்க, ரிஷியின் பார்வையோ முழுக்க முழுக்க அந்த பிஎம்டபிள்யூவில் இருக்க,

“சார் நீங்க ரிஷி நித்யன் ப்ரம் கும்பகோணம் தானே..” என்று அவன் பின்னே ஒரு குரல் கேட்க,

‘யாருடா அது..’ என்று அவனும் திரும்பிப் பார்க்க, ஒருவர் நின்றிருந்தார்..

“நீங்க ரிஷி நித்யன் தானே..” என்று மீண்டும் கேட்க, “ஆமா…” என்றவனின் பார்வை அவரை யோசனையை வருட,

“சார் எல்லாரும் வந்திட்டாங்க.. நீங்க மட்டும் தான் லேட்.. சீக்கிரம் உள்ளவாங்க சார்.. சைன் பண்ணவும் எல்லாரும் கிளம்பனும்.. அப்போயிருந்து சைலேந்திரன் சார் உங்க நம்பருக்கு கால் பண்ணிட்டு இருக்கார்..” என்று அந்த மனிதர் கொஞ்சம் கடுப்பாகவே பேச,

“ஓ சாரி சாரி.. அந்த சிம் வொர்க் ஆகல.. சோ வேற நம்பர் மாத்திட்டேன்..” என்று அவரோடு பேசியபடி உள்ளே சென்றவனை,

“ஹாய் ரிஷி…” என்ற ஒரு ஆளுமையான குரல் வரவேற்க, அவர்தான் சைலேந்திரன் என்று யாரும் சொல்லாமலே ரிஷி புரிந்துகொண்டான்..

“ஹாய் சார்.. சாரி ஃபார் தி லேட்..” என்றபடி கை குலுக்க,

“நோ பிராப்ளம்.. உங்களுக்கு கால் போகலை அதான் கொஞ்சம் யோசனையா இருந்தது..” என,

“அந்த சிம் வொர்க் ஆகலை..” என்றவன் இப்போது இருக்கும் எண்ணை அவருக்குக் கொடுக்க,

“சைலேந்தர் இட்ஸ் கெட்டிங் லேட்.. இப்போ கிளம்பினாத்தான் ஏலகிரி ரீச் ஆக சரியா இருக்கும். நடுவில பிரேக் பாஸ்ட் எடுக்கணும்..” என்றபடி வந்து நின்றவளை ரிஷி நித்யன் அதிசயமாய் பார்க்க, அவளோ இவனை ஒரு பொருட்டாய் கூட மதிக்கவில்லை..

‘ஊருக்கு புதுசா…’ என்று பார்ப்பதுபோல் ‘இந்த கேம்புக்கு புதுசா..’ என்று அவனைப் பார்த்தவள், நொடிப்பொழுதில் தன் பார்வையை சைலேந்திரன் மீது திருப்பிவிட,

“நோ மது.. இதோ டூ மினிட்ஸ் ரிஷி சைன் பண்ணிட்டா கிளம்பிடலாம்.. நீங்க எல்லாம் வேன்ல ஏறுங்க…” என்று தன்மையாகவே அவர் சொல்ல,

“ம்ம்…” என்று மட்டும் சொன்னவள், அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகே இருந்த அறைக்குள் செல்ல, அடுத்த சில நொடிகளில் உள்ளிருந்தவர்கள் வெளி வந்தனர்.

முக்கால்வாசி வசதிபடைத்த வீட்டு பிள்ளைகள், ஒருசிலர் இயற்கை ஆர்வம் இருப்பவர்கள் என்று பார்த்தாலே தெரிந்தது. கிட்டத்தட்ட ஒரு இருபது பேர் இருப்பார்கள்.. இருபதில் இருந்து நாற்பதுகுள் தான் இருக்கும் அனைவரின் வயதும்.. இவர்களுக்கு எல்லாம் நான் தான் லீடர் என்பதுபோல் அவள் வர, 

“மேடம் நீங்க எல்லாம் முன்னாடி போங்க..” என்று சற்று முன் ரிஷியை அழைத்து வந்தவர் சொல்ல,

‘என்னா பவ்யம் அந்த மதுபி கிட்ட.. ஹ்ம்ம்..’ என்று கழுத்தை ரிஷி திருப்ப,

“இதுல ஒரு சைன் மட்டும் பண்ணுங்க ரிஷி.. நீங்க புதுசு இல்லையா.. இப்போ போற பேட்ச் கிட்டத்தட்ட டூ இயர்ஸா கேம் வர்றாங்க.. சேம் டீம்.. மது தான் ஆர்கனைஸ் பண்ணுவாங்க.. இந்த டீம் எப்பவுமே அவங்க ஸ்பெஷல்.. நீங்க லாஸ்ட் மின் ஜாயின் பண்ணதுனால இதெல்லாம் உங்களுக்கு தெரியலை..” என்று சைலேந்திரன் விளக்க,

‘ஓ.. அதுதான் அவ்வளோ மரியாதையா…’ என்று எண்ணியபடி ரிஷி அவர் கொடுத்த ஒரு படிவத்தில் கையெழுத்து இட்டான்.

“ஓகே ரிஷி.. வேன்ல போய் உட்காருங்க.. நாங்களும் வந்திடுறோம்..” என்ற சைலேந்திரன், உள்ளே சென்றிட, அவனோ தன் பேக்கை தூக்கிக்கொண்டு வேனினுள் செல்ல, அனைவரும் இவனை புதிதாய் பார்க்க,

“ஹாய் ஐம் ரிஷி நித்யன்…” என்று மட்டும் சொன்னவன்,

“ரொம்ப சந்தோசம் உங்களோட ஜாயின் பண்றதுல..” என்று அனைவருக்கும் பொதுவாய் சொன்னவனின் பார்வை வந்து முன் இருக்கையில் ஜன்னல் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த ‘மதுபி..’ மீது வந்து நிற்க,

அவளோ அவனை மேலிருந்து கீழாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தன் பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டாள்.

“ஹாய்…” என்று கேட்ட கோரஸ் ஒலிக்கு ஒரு புன்னகையை பரிசாய் அளித்தவன், எங்கே அமர்வது என்பதுபோல் பார்க்க,

“ரிஷி இங்க வாங்க..” என்று அவன் வயது மதிக்கத்தக்க ஒருவன் அவனுக்கு இடம் கொடுக்க,  

“தேங்க்ஸ்…” என்று சொல்லி அவனருகே அமர்ந்த ரிஷியின் பார்வையோ முதல் இருக்கையில் இருந்தவளின் மீதே இருந்தது.                                    

         

 

 

 

                                              

            

                         

Advertisement