Advertisement

மது – 9     

அழைப்பது ரிஷி என்று அனைவர்க்கும் தெரியவும், அனைவரின் முகத்திலுமே ஒரு ஆவல்.. ஒரு எதிர்பார்ப்பு… ஒரு சிறு கோவமும் கூட.. இங்கிருந்து தான் கிளம்பிப் போனான்.. ஆனால் ஒருவார்த்தை எங்களிடம் பேச தோன்றவில்லையே என்று..

கல்யாணியின் கண்கள் லேசாய் கலங்கியதுவோ என்னவோ, சாம்பசிவம் தன் உணர்வுகளை வெளிக்காட்ட பிடிக்காமல் நொடிப்பொழுதில் முகத்தை சாதாரணமாய் வைத்து அமர்ந்துவிட, ஸ்ரீநிவாஸ் மைதிலி இருவருமே மதுபாலாவை பார்த்தபடி இருக்க, சைலேந்திரன் அமைதியாக இருந்தார்.  

மதுபாலா அனைவரின் முகத்தையும் பார்த்தவள் அமைதியாகவே இருக்க, “மதுபி… மதுபி… லைன்ல இருக்கியா… ஹலோ…” என்று ரிஷி கேட்க, அவன் குரலில் தெரிந்த உற்சாகமும், பரபரப்பும் அவன் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்க,

கண்களை மூடி கொஞ்சம் தன்னை திடப்படுத்தியவள், “ஹ.. ஹலோ ரிஷி…” என,

“மதுபி…. ஹப்பா….. வாவ்.. ஃபைனலி உன்கிட்ட பேச இத்தனை நாள்.. நான் சரியான இடியட் மதுபி.. அங்க இருக்கப்போவே உன் நம்பர் வாங்கிருக்கணும்.. ஆனா நீ ஏன் மொபைல் யூஸ் பண்றதில்ல… இங்க வந்ததும் உன் நம்பர் வாங்க எவ்வளோ கஷ்டம் தெரியுமா???” என்று சந்தோசத்தில் அங்கலாய்க்க,

“ம்ம்.. நீ எப்படி இருக்க ரிஷி??? உன் வீட்டுக்கு பேசினியா???” என்றாள் இங்கே இருக்கும் சூழல் எதையும் வெளிக்காட்டாது.

ரிஷி பதில் சொல்லாது அமைதியாய் இருக்க, “ஹலோ ரிஷி…” என்று மதுபாலா திரும்பவும் பேச,

அந்தபக்கம் ஒரு தொண்டை செருமல் சத்தம் மட்டும் கேட்க, “சோ நீ பேசல..” என்றவளுக்கு “ம்ம்…” என்று மட்டும் பதில் சொன்னான்..

“ஏன்?? ஏன் பேசல?? நான் யார் ரிஷி உனக்கு.. ஜஸ்ட்  ஒன் வீக் தான் என்னை தெரியும்.. என் நம்பர் வாங்க இவ்வளோ ட்ரை பண்ணிருக்க.. ஆனா உங்க வீட்ல ஒரு வார்த்தை பேசணும் தோணலையா உனக்கு.. உன்னை தேடுவாங்கன்னு தெரியாதா உனக்கு..” என்று மதுபாலா வேகமாய் பேச, அங்கிருந்தவர்களுக்கே இது கொஞ்சம் ஆச்சர்யம் தான்..

கல்யாணி மெல்ல எழுந்து மதுபாலா அருகே வந்தவர், பேசாமல் அப்படியே நிற்க, அவரது எண்ணம் அவளுக்குப் புரிந்தது. மகன் பேசாவிட்டாலும், அவனது குரலை மட்டுமாவது கேட்கவேண்டும் என்று நினைக்கிறார் என்று..

“நீங்க பேசுங்க…” என்று சைகையில் அவரிடம் சொல்ல, வேகமாய் சாம்பசிவம் முகம் பார்த்தவர், பாவமாய் மதுபாலாவைப் பார்க்க,

‘பெற்ற பிள்ளையிடம் பேசுவதற்கு கூடவா கணவர் முகம்பார்க்க வேண்டும்..’ என்று நினைத்த மதுபாலா, கல்யாணியை ஒருநொடிப் பார்த்தவள், ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

இதெல்லாம் நிமிடத்தில் நடந்துவிட்டாலும், இதை எதுவுமே அறியாத ரிஷியோ,  மௌனமாய் இருக்க,

“ரிஷி பதில் பேசு….” என்ற மதுபாலாவின் குரலில்,

“என்ன பேச சொல்ற மதுபி…” என்றான் இத்தனை நேரமிருந்த உற்சாகம் துறந்து..

“உங்க வீட்டுக்கு ஏன் பேசலை??? கிளம்பி போய்ட்ட சரி.. ஆனா அவங்களுக்கு இன்பார்ம் பண்ணிருக்கணும்…” என்றவளின் குரலில் காரம் தெரிய,

“ஹ்ம்ம் நீ சொன்னது உண்மைதான் மதுபி… ஒவ்வொரு விஷயத்துலையும் எனக்கு என் ஃபேமிலி திங்கிங் வருது… சுவிஸ் வந்ததுக்கு அப்புறம் தான் நிறைய விஷயங்கள் எனக்கு புரியுது..” என்றவன் அமைதியாக இருக்க,

“ஹ்ம்ம் அப்போ வீட்டுக்கு பேசு இல்லை இந்தியா கிளம்பி வா…” என்றவள் பேச்சில் அனைவருக்குமே ‘எப்படி இவளால் இப்படி பேச முடிகிறது..’ என்று தோன்றியது..

“வாட் இந்தியாவுக்கா…” என்று அதிர்ந்தவன், “எவ்வளோ ஈசியா சொல்ற நீ..??” என,

“இதுல ஈசி கஷ்டமெல்லாம் எதுவுமில்லை ரிஷி.. உன் ஃபேமிலிகூட செட் ஆகலைன்னு தான கிளம்பிப் போன.. இப்போ அவங்க நியாபகம் எல்லாம் வருது  சொல்ற.. சரி அப்போ அவங்கட்ட பேசு இல்லை கிளம்பி வா.. இதுமட்டும் தானே நான் சொல்ல முடியும்…” என்று மதுபாலாவும் பேச,

“செட் ஆகுறது வேற, நியாபகம் வர்றது வேற மதுபி…” என்றான் அழுத்தம் திருத்தமாய்..

“வாட் எவர்.. இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கே அவங்களை விட்டு இருக்க முடியாதுன்னு தோணும்.. அப்போ என்ன செய்வ??”

“தோணும் போது கண்டிப்பா வந்திடுவேன்..” என்றவன் “பட் ஒன் கண்டிசன்…” என்று பேச்சை நிறுத்த,

‘சரி என்னவோ சொல்ல போகிறான்…’ என்று மதுபாலாவும் சாதாரணமாய் “என்ன..??” என்று கேட்க,

“இப்போன்னு இல்லை.. இனி எப்பவுமே.. நான் இந்தியா வரணும்னா நீ என்னோட லைப்ல இருக்கணும்.. உன்னோட லைப்ல எனக்கு ஒரு ப்ளேஸ் வேணும்.. இதுக்கு சரின்னா சொல்லு ஐ வில் கம்…” என்று ரிஷி பேச்சை முடிக்க,

மதுபாலாவின் கண்கள் அப்படியே விரிந்து அதிர்ச்சியில் அவள் உறைந்துபோய் விட, ரிஷி பேசியதை கேட்ட மற்றவர்களுக்குமே இது அதிர்ச்சி தான்.

“மதுபி… ஹலோ…” என்று ரிஷி அழைக்க, அவளோ அப்படியேத்தான் இருந்தாள்..

ரிஷி என்ன நினைத்து இப்படி சொன்னானோ.. ஆனால் அவன் சொன்னதை கேட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வு தான்..

சாம்பசிவம் ‘என்னிடம் கேட்காமல் இத்தனை பெரிய ஒரு முடிவா???’ என்று நினைக்க,

கல்யாணியோ ‘எப்படியாவது ரிஷி திரும்பிவிட்டால் போதும்..’ என்றெண்ண,

ஸ்ரீநிவாஸோ ‘இதென்ன இப்படி பேசுகிறான்…’ என்று பெற்றவர்களைப் பார்க்க,

மைதிலியோ ‘ரிஷிக்காவது அவன் விருப்பப்படி வாழ்வு அமையட்டும்..’ என்று நினைத்தாள்..

சைலேந்திரனோ ‘இதை நான் எதிர்பார்த்தேன்..’ என்பதுபோல் அமர்ந்திருந்தார்..

இவர்கள் எல்லாம் இப்படியென்றால், மதுபாலாவோ அப்படியே பனிக்கட்டியாய் உறைந்துபோன நிலைதான்..

“மது… மதுபி.. ஆர் யூ தேர்… ஹலோ…” என்று ரிஷி திரும்ப திரும்ப அழைக்க, கல்யாணி தான் வேகமாய் சுதாரித்து, மதுபாலாவை உலுக்க, அவளோ திடுக்கிட்டு அவரைப் பார்த்தவள் பின் வேகமாய் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.                

அவளுக்கு அதற்குமேல் அனைவரின் முன்னும் ரிஷியோடு பேசமுடியவில்லை.. ‘என்ன இப்படி சொல்லிட்டான்..’ என்று அவள் மனம் வேகமாய் அடித்துக்கொண்டு இருக்க, அங்கேயோ பலத்த அமைதி நிலவியது..

அவளுக்கோ ரிஷியின் குடும்பத்தை நிமிர்ந்து பார்க்கவே முடியாவில்லை.. இவன் இப்படி பேசுவான் என்று தெரிந்திருந்தால் அவள் ஸ்பீக்கர் ஆன் செய்திருக்கவே மாட்டாள்.

‘எல்லாரும் என்ன நினைப்பாங்க…’ என்று நெற்றியை தேய்த்தவள் அமைதியாய் அமர்ந்துவிட்டாள். ஆனால்  யாருமே எதிர்பார்க்காதபடி மைதிலி தான் பேசினாள்.

“மது… ஏன் இவ்வளோ டென்சன்.. இந்தா கொஞ்சம் தண்ணி குடி…” என்று அவளிடம் ஒரு டம்ப்ளரை நீட்ட, அந்த நேரத்தில் அவளுக்கு அது ரொம்ப தேவையாய் இருந்ததுவோ என்னவோ,

“தேங்க்ஸ்…” என்று வாங்கியவள் வேகமாய் ஒரே மடக்கில் தண்ணீரை குடித்திட, மற்றவர்களுக்கும் கொஞ்சம் அவளது நிலையை புரிந்துகொள்ள முடிந்தது.

சைலேந்திரனுக்கு இதற்குமேல் அது அவர்களது குடும்ப பேச்சு என்று புரிந்திட, “ஓகே நான் கிளம்புறேன்…” என்று எழுந்தவர் “ஏதாவது அர்ஜென்ட்னா மட்டும் கூப்பிடு மது…” என்று சொல்லி கிளம்பிவிட்டார்..

ரிஷியின் குடும்பமும், மதுபாலாவும் மட்டும் தனித்து இருக்க, முதல்முறையாய் அவளுக்கு தன் வீட்டில் தான் இப்படி யாரோபோல் இருப்பதாய் பட்டது.. 

யாருமே எதுவும் கொஞ்ச நேரத்திற்கு பேசவில்லை.. ரிஷியின் குடும்பம் நினைத்து வந்தது ஒன்று இப்போது நடந்துகொண்டு இருப்பது ஒன்றாய் இருக்க, அனைவருமே முதலில் ஒருவித குழப்பத்தில் தான் இருந்தனர்..

மதுபாலா உட்பட..

‘ராஸ்கல்.. கொஞ்ச நேரத்துல என்னை இப்படி டென்சன் பண்ணிட்டான்.. இதுநாள் வரைக்கும் நான் இப்படி டென்சன் ஆனதில்ல…’ என்றெண்ணியபடி, என்னவோ மதுபாலாவை அனைவரும் பெண் பார்க்க வந்திருப்பது போல் குனிந்த தலை நிமிராமல் அவள் அமர்ந்திருக்க, அவளுக்கே தான் இப்படி இருப்பது புதிதாய் இருக்க,

ஒருபக்கம் எரிச்சல் வேறு வந்தது.. பழக்கமில்லாத ஒன்று செய்யும் பொழுதோ, இல்லை நடக்கும் பொழுதோ ஏற்படும் எரிச்சல்.. அவளால் அவள் வீட்டில் இப்படி அன்னியளாய் அமர்ந்திருக்க முடியவில்லை..

‘அம்மா.. நீ இருந்திருந்தா இதெல்லாம் நடந்தேயிருக்காது….’ என்று அவள் அம்மாவின் இறப்பிற்கு பிறகு முதல் முறையாய் அவள் அம்மா இருந்திருந்தால் நல்லதே என்று நினைக்க, அவளையும் அறியாமல் அவளின் கண்கள் அன்று ரிஷி அணிவித்த மோதிரத்தில் பார்வையைப் பதிக்க, 

அதனை தொட்டு, அப்படியே அவளின் அப்பா பற்றிய சங்கதிகளும் மனதில் வந்துபோக, ‘அச்சோ இதை எப்படி மறந்தேன்.. இவங்களுக்கு அதெல்லாம் தெரியாதே.. இந்த ரிஷி இருக்கானே.. எங்கயோ போய் உட்கார்ந்திட்டு இப்படி என்னை மாட்டிவிட்டுட்டான்…’ என்று மதுபாலாவின் மனம் அவனை குறைபட,

அவளது மனசாட்சியோ, ‘நீதான ஸ்பீக்கர் போட்ட….’ என்று எடுத்துரைக்க,

“ஓ… மை காட்…” என்று சொன்னவளுக்கு அனைவரின் முன்னும் தலையில் கூட அடித்துக்கொள்ள முடியவில்லை..

ஒருபக்கம் ரிஷி அப்படி கேட்டது அவளுள் ஓருவித படபடப்பை கொடுத்தது உண்மைதான்.. இதேது இந்த நேரத்தில் மதுபாலா மட்டும் தனித்து வீட்டில் இருந்திருந்தால், மகிழ்ச்சியில் ஒரு குதியாவது குதித்திருப்பாளோ என்னவோ ஆனால் இப்போதோ எதுவுமே செய்ய முடியாமல் பொம்மையாய் அமர்ந்திருக்க,

ஸ்ரீநிவாஸ் தான் வாய் திறந்தான் “அப்பா ரிஷி சுவிஸ்ல இருக்கான் போல…” என,

சாம்பசிவம் “ம்ம்…” என்று யோசனையாய் தலையை ஆட்டியவர், “அடுத்து அவன் பேசட்டும்.. நம்மலே பேசிடுவோம்…” என்று சொல்ல,

“வேண்டாம்…” என்ற தீர்கமான மறுப்பு கல்யாணியிடம் இருந்து வந்தது..

‘எதுக்கு வேண்டாம்???!!’ என்று அனைவருமே திகைத்துப் பார்க்க,

“நம்ம பேசினா அவன் சுவிஸ்ல இருந்தும் கிளம்பி எங்கயாவது போயிடுவான்..” என்றவரின் குரல் கலங்கிவிட்டது..

என்னதான் கட்டுதிட்டம், கௌரவம், டாம்பீகம் என்று அனைத்தும் பார்க்கும் குடும்பம் என்றாலும், ஒரு அன்னையாய் கல்யாணியால் அதற்குமேல் இதெல்லாம் பிடித்து வைத்துக்கொண்டு இருக்க முடியவில்லை.. அனைத்திற்கும் மேலாய் ‘அம்மா…’ என்ற உணர்வு மட்டுமே இப்போது அவருக்கு மேலோங்கி இருந்தது..

காரணம்.. ஸ்ரீநிவாஸ் அவனின் அப்பாவை கொண்டு பிறந்தவன்.. ரிஷிநித்யன் அப்படியே கல்யாணியின் பாங்கு.. இருவருக்கும் உருவம் ஏறக்குறைய ஒன்றுபோல் இருந்தாலும், பலவாரியான செய்கைகள் எல்லாம் வேறு வேறுதான்.. அதில் எப்போதுமே கல்யாணி ரிஷியிடம் தன்னைக் காண்பார்.

அதனால் தான் என்னவோ ரிஷிக்குமே இங்க வந்ததில் அனைத்திலும் அவன் அன்னையை கண்டானோ என்னவோ..

மதுபாலாவிற்கு இதனையெல்லாம் பார்க்கையில் ஒன்றுமட்டும் தான் தோன்றியது,

“இவ்வளோ பாசம் வச்சிட்டு இந்த ஆன்ட்டியாவது ரிஷிக்கிட்ட கொஞ்சம் க்ளோஸா இருந்திருந்தா இப்போ இந்த பிரச்சனை எதுவும் வந்திருக்காதே…” என்று..

மைதிலியும் அமைதியாய் அனைத்தையும் பார்த்திருந்தவள் அப்போதுதான் கவனித்தாள், தொலைபேசியின் ரிசிவர் அதனிடத்தில் இல்லாமல் தனியே இருக்க,

“இதையேன் மது இப்படி வச்சிட்ட.. ரிஷி அடுத்து லைன்னுக்கு ட்ரை பண்ணா என்ன பண்றது…” என்று மீண்டும் ரிசிவரை அதனிடத்தில் வைக்க,

“அதானே.. அவன் மறுபடியும் கூப்பிடுவான்…” என்று கல்யாணியும் அங்கேயே அழுத்தமாய் அமர்ந்துவிட,

‘அவன் லைனுக்கு மட்டுமா ட்ரை பண்றான்…’ என்று எண்ணியது வேறு யாராய் இருக்க முடியும்?? ரிஷியின் மதுபி தான்..

பெண்களுக்கு இருக்கும் இந்த மனநிலை அங்கிருந்த ஆண்களுக்கு இல்லை போல, மைதிலி ஓரளவு இப்போது நன்றாய் இருக்கிறாள், கும்பகோணம் சென்றுவிட்ட பின் கொஞ்சம் கொஞ்சமாய் அனைவருமே கொஞ்சம் அனுசரித்து போகலாம் என்றிருந்த நிலையில்,

ரிஷி இப்போது இப்படியொரு குண்டைத் தூக்கிப் போட, இதனை அப்படியே சும்மாவும் விட்டு செல்ல முடியாதே..

“அப்போ நம்ம என்னதான் பண்றது??” என்று ஸ்ரீநிவாஸ் கேட்க,

“ஒண்ணும் பண்ண வேணாம்.. அவனே வருவான்…” என்று கல்யாணி சொல்ல,

“எப்படி எப்படி வருவான்?? அதான் இப்போ அவன் பேசினதை கேட்டோமே… இந்த பொண்ணு அவன் வாழ்கையில் இருக்கனுமாம் அப்போதான் வருவானாம்..” என்று சாம்பசிவம் சற்றே காட்டமாய் பேச,

“இருக்கட்டுமே… அவனுக்கு அது தான் பிடிச்சிருக்குன்னா தாராளமா இருக்கட்டும்… ஏன் இத்தனை வருசமா நம்ம சொன்னதை கேட்டு இருந்தான்ல.. இப்போ இனிமே அவனுக்கு பிடிச்சமாதிரி இருக்கட்டும்….” என்று கல்யாணி அடித்துப் பேச,

‘என்னது…!!!!!’ என்று அதிர்ந்து பார்த்தவள் மதுபாலாதான்..

கிட்டதட்ட ‘என்னடா நடக்குது இங்க…’ என்ற நிலைமை தான்..

ஒருவன் என்னவென்றால், குடும்பத்தோடு கோவித்துக் கொண்டு, வெளிநாடு சென்றுவிட்டு இப்போது திரும்பி வரவேண்டும் என்றால் நீ என் வாழ்வில் இருக்கவேண்டும் என்கிறான்.. அவனின் குடும்பமோ அவளிடம் ஒருவார்த்தை கேளாது அனைவரும் பேசிக்கொண்டு இருக்க,

‘டேய் ரிஷி ராஸ்கல்…’ என்று நினைத்த நொடி, மீண்டும் தொலைபேசி சிணுங்கியது..

மதுபாலா எடுப்பதற்கு முன்னேயே கல்யாணி எடுத்து ஸ்பீக்கர் ஆன் செய்திட, அவளுக்கோ எழுந்து ஓடி விடலாமா என்று இருந்தது..

முதல் முறையாய் மதுபாலா இப்படியான உணர்வுகளை அனுபவிக்கிறாள்.. அதும் மூன்றே நாள் அவள் வீட்டில் இருந்த ஒருவனால். இனியென்ன சொல்ல போகிறானோ என்று காதை மட்டும் தீட்டி கேட்டிருந்தவளுக்கு, ஏமாற்றமே.. ஏனெனில் அழைத்தது ரிஷியல்ல..

இந்த அப்பார்ட்மென்ட் செக்கரட்ரி… ‘அப்பாடி…’ என்று ஒரு மூச்சை விட்டவள், அவரிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்க,

கல்யாணி ஏமாற்றமாய் அமர்ந்திருந்தார்.. மைதிலி தான் “கவலைப்படாதீங்க அத்தை.. ரிஷி மறுபடியும் கூப்பிடுவான்…” என்று சொல்ல, ஆனால் அடுத்த ஒருமணி நேரம் வரைக்கும் அவன் அழைக்கவேயில்லை…

அனைவருக்குமே ரிஷி அழைப்பான் அழைப்பான் என்று காத்திருக்க, அவனோ அழைக்காமலே இருக்க, மதுபாலாவிற்கு கூட என்னடா இது என்றானது. வீட்டிற்கு வந்திருப்பவர்களை வெறும் தண்ணீர் மட்டும் கொடுத்து அமர வைத்திருப்பதும் அவளுக்கு கஷ்டமாய் இருக்க,

வரும்போது பால் பாக்கட், கொஞ்சம் காய்கறி  எல்லாம் வாங்கி வந்தது நினைவில் வர, “எல்லாருக்கும் டீ போடட்டுமா..??” என்றாள் கொஞ்சம் பவ்யமாய்..

என்னவோ ரிஷி பேசியபின்பு அவளது உடல்மொழியில் பவ்யமும், கொஞ்சம் அடக்கமும் வந்து ஒட்டிக்கொண்டது..

“அதெல்லாம் எதுவும் வேணாம்…” என்று சாம்பசிவம் மறுத்தாலும், மனதின் ஒரு ஓரத்தில் மகன் மறுபடியும் அழைப்பானோ என்றிருக்க, அங்கேயே அமர்ந்திருந்தார்.. எத்தனை நேரத்திற்குத் தான் அனைவரும் இப்படியே அமர்ந்திருக்க, நேரம் செல்ல பொறுமையும் கரைந்தது..

சாம்பசிவம் தான் இத்தனை நேரம் அமர்ந்திருந்ததே பெரிய விஷயம் என்பதுபோல் மனைவியைப் பார்த்தவர், பின் மகனையும் பார்க்க, கல்யாணியோ இடத்தை விட்டு நகருவதாய் இல்லை.

மதுபாலா அனைவரையும் பார்த்தவள், “டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்…” என்றபடி எழுந்து சமையலறை செல்ல,

சாம்பசிவமோ “இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை.. இப்படி யாரோ ஒரு பொண்ணு வீட்ல வந்து உட்கார்ந்திட்டு.. என்ன பழக்கம் இது…” என்று பொதுவாய் மனைவியையும் மருமகளையும் பார்த்து மெல்ல கடிய,

மைதிலி அமைதியாய் மாமியார் முகம் பார்க்க, அவரோ “நீங்களும் அவனும் வேலை இருந்தா கிளம்புங்க… நான்.. நான் அடுத்து ரிஷி பேசவும் தான் வருவேன்…” என்றார் பிடிவாதமாய்.

‘அட இதென்ன பேச்சு…’ என்று அப்பாவும் மகனும் பார்க்க,

“அத்தை மட்டும் இங்க எப்படி இருப்பாங்க.. கூட நானும் இருக்கேனே…” என்று மைதிலி கணவன் முகத்தைப் பார்க்க,

இவர்கள் எல்லாம் பேசி ஒரு முடிவிற்கு வருவதற்குள் மதுபாலா டீ போட்டு எடுத்து வந்து அனைவர்க்கும் கொடுத்திட, சாம்பசிவம் வேண்டாவெறுப்பாய் எடுத்தவர், ஒரு மடக்கு குடித்துவிட்டு, மகனையும் ஒருபார்வை பார்த்துவிட்டு  “நாங்க கிளம்புறோம்…” என்று எழுந்துவிட, அவரோடு சேர்த்து அவனும் எழ,

சரி அனைவரும் கிளம்புகிறார்கள் போல என்று பார்த்தால், பெண்கள் இருவரும் அமர்ந்திருக்க, ஆண்கள் இருவரும் கிளம்பிவிட்டனர்.

‘அப்போ இவங்க…’ என்று மதுபாலா அவர்களைப் பார்க்க,

“நாங்க இங்கதான் இருக்கபோறோம்.. ரிஷி அடுத்து கால் பண்ற வரைக்கும்…” என்று மைதிலி கொஞ்சம் தயங்கியபடியே சொல்ல,

‘அதுசரி…’ என்று நினைத்தவளுக்கு, ரிஷிநித்யன் கொடுத்த அதிர்ச்சியை விட, அவனது குடும்பம் கொடுக்கும் அதிர்ச்சி தான் பயங்கரமாய் இருந்தது..

அவன் அழைப்பான் என்று காத்திருக்க, அவனோ அழைத்தபாடில்லை.. மகனிடம் பேசவேண்டும் என்று காத்திருந்த கல்யாணி மதுபாலாவிடம் பேசத் தொடங்கிட, கொஞ்ச நேரம் மைதிலி அமர்ந்திருந்தவள் முகத்தில் சோர்வை கண்ட மதுபாலா,

“அக்கா சாரி.. ஏதாவது சீக்கிரமா ரெடி பண்றேன்… உங்க முகமே டல்லாகிடுச்சு…” என்று மறுபடியும் விழுந்தடித்து சமையலறை செல்ல,

“பேசிட்டு இருந்ததுல உன்னை மறந்து போயிட்டேன் பாரு.. கொஞ்சம் இப்படி படு.. இல்லைன்னா உள்ள போய் ரூம்ல படுக்கிறியா?? இதுல எந்த ரூம் தெரியலையே…” என்றபடி எழுந்தவர்,

“மதுபாலா…” என்றழைக்க,

“ஆன்ட்டி…” என்று மதுபாலா வேகமாய் உள்ளிருந்து வர, “மெதுவா…” என்று அவளைப் பார்த்தவர், “மைதிலி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணுமே…” என,

வேகமாய் அவளைப் பார்த்தவள், “சாரிக்கா…” என்று சொல்லி, “இந்த ரூம் போங்க…” என்று ரிஷி தங்கியிருந்த அறையை காட்டியவள், “ஆன்ட்டி நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க.. நான் சமையல் முடிச்சிட்டு கூப்பிடுறேன்…” என,

“இல்ல இருக்கட்டும்…” என்றவர், மைதிலி அங்கே செல்லவும், மதுபாலாவை தேடி சமையலறை வந்துவிட்டார்..

மதுபாலாவிற்கு இப்போது ரிஷி பேசியது எல்லாம் மறந்து, வீட்டில் ஆட்கள் இருப்பதும், அவர்களுக்கு ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து செய்வதும், இப்படி தன்னோடு அமர்ந்து பேசுவதற்கும் ஒரு ஆள் இருக்க, முழுக்க முழுக்க ஒரு குடும்ப சூழலில் அவள் வந்துவிட்டது போல் உணர,

‘இதையா ரிஷி வேண்டாம் என்று போனான்…’ என்று தோன்றியது அவளுக்கு..

கல்யாணியோ, எப்போ ரிஷியை பார்த்த?? என்று ஆரம்பித்து, அவன் இங்கு வந்தது பேசியது, இவர்கள் கேம்ப் போனது தொடங்கி அப்படியே மதுபாலாவின் அம்மா என்று பேச்சு வர, முதலில் கொஞ்சம் தயங்கியவள் பின் நிமிர்வாகவே அனைத்தையும் சொல்லிவிட்டு, கல்யாணியின் முகத்தைப் பார்க்க,

கொஞ்ச நேரம் யோசனையாய் இருந்தவர், பின்னே “இப்போ அதுனால என்ன.. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்லை…” என்று சிம்பிளாய் முடித்திட மதுபாலா தான் ஆச்சர்யமாய் பார்த்து நின்றாள்..

“என்ன பாக்குற… சில விஷயங்கள் நமக்கு அடிபடும் போது தான் தெரியும் புரியும்.. நீ எதையும் நினைச்சு கவலைப்படதா.. நான் பேசிக்கிறேன்.. ஆனா அவனை மட்டும் இங்க வரவச்சிடேன்..” என்று மதுபாலாவின் கரங்களை கல்யாணி இறுகப் பற்றிகொண்டார்.. 

             

                    

                                                          

 

Advertisement