Advertisement

மது – 8

தொலைபேசியை எடுப்பதா இல்லை வாசல் கதவை திறப்பதா?? எதை முதலில் செய்வது என்று மதுபாலா கொஞ்சம் யோசித்தாலும், அழைப்பது யாராக இருந்தாலும் திரும்பவும் அழைப்பர் என்றும் தோன்ற, நேராக சென்று வாசல் கதவைத் திறக்க, அங்கே சைலேந்திரன் நின்றிருந்தார்..

“சைலேந்தர்…” என்று ஆச்சர்யமாய் அவரைப் பார்த்தவள், “கம் கம்..” என்று அவரை உள்ளே வரவேற்க, அவரோ அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல், பக்கவாட்டில் திரும்பி,

“வாங்க…” என்றழைக்க, “யாரு…” என்று மதுபாலா லேசாய் எட்டிப் பார்க்க,  அங்கே இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் நின்றிருந்தனர்..

மதுபாலா சைலேந்திரனைப் கேள்வியாய்ப் பார்க்க, “ரிஷி  ஃபேமிலி..” என்று அவரும் மெதுவாய் சொல்ல, “ஓ…” என்று கண்ளை விரித்து, திகைத்தவள், அடுத்தநொடி சுதாரித்து,

“வாங்க வாங்க…” என்று அனைவரையும் உள்ளே வரவேற்க, வந்திருந்தவர்களை நொடிப் பொழுதில் எடை போட்டு, வந்திருப்பவர்கள், ரிஷியின் அப்பா அம்மா, அண்ணா அண்ணி என்று புரிந்துகொண்டாள்.

அனைவரும் உள்ளே வரவும் தொலைபேசி அடித்து நிற்கவும் சரியாய் இருந்தது..  அமைதியாய் உள்ளே வந்தவர்கள், ஹாலில் நின்று அவளைப் பார்க்க, “உட்காருங்க.. என் நிக்கிறீங்க..” என்றபடி சோஃபாவை கை காட்டியவள், வேகமாய் சென்று அனைவர்க்கும் குடிக்க முதலில் நீர் கொண்டு வந்து கொடுக்க,

“அதெல்லாம் எதுவும் வேணாம்…” என்று சாம்பசிவம் மறுக்க,

“பரவாயில்லை அங்கிள்.. ட்ராவல் பண்ணி வந்திருப்பீங்க எடுத்துகோங்க.. தண்ணி தானே… ” என்று மதுபாலா கொஞ்சம் பிடிவாதமாகவே அவளது விருந்தோம்பலை செய்ய,

அப்போது தான் கவனித்தாள், சைலேந்திரனும் ஸ்ரீநிவாஸும் ஒரு இருக்கையில் அமர்ந்திருக்க, கல்யாணியும் சம்பசிவமும் ஒன்றாய் அமர்ந்திருக்க, மைதிலி மட்டும் அமராமல் மாமியாரை ஒட்டி நின்றுகொண்டு இருந்தாள்..

தண்ணீர் கிளாசை அனைவரிடமும் ஆளுக்கு ஒன்றாய் நீட்டியபடி, “நீங்களும் உட்காருங்க.. மைதிலிக்கா” என்று மதுபாலா சொல்லி லேசாய் புன்னகைக்க, வந்திருந்தவர்கள் முகம் அப்படியே இருண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..

மைதிலி தலையை மட்டும் லேசாய் ஆட்டியவள், மதுபாலா கொடுத்த கிளாசை வாங்க கை நீட்டும் போது தான் மதுபாலா பார்த்தாள், மைதிலியின் புறங்கையில் ட்ரிப்ஸ் ஏற்றியதன் அடையாளமாய் பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருக்க,

“உடம்பு சரியில்லையா?? அப்போ ஏன் நிக்கிறீங்க.. உட்காருங்க…” என்ற மதுபாலாவின் குரலில் ஒரு அழுத்தமும் இருப்பதாய் அனைவருக்குமே பட,

“மைதிலி உட்காரு…” என்று கல்யாணி சொன்ன பிறகே மைதிலி அமர, சைலேந்திரனோ “மதுபாலா…” என்றழைத்தவர், “நீயும் வந்து உட்கார்…” என்று சொல்ல,

“ம்ம்…” என்றவள் மீதமிருந்த இன்னொரு ஒற்றை இருக்கையில் அமர, அவளுக்கு இவர்கள் எல்லாம் இங்கே வந்திருப்பதே விஷயம் அறிந்து தான் என்று எப்போதோ புரிந்துபோனது..

முதலில் மனதில் ஒரு சின்ன குழப்பம் இருந்தாலும், ரிஷி தான் இப்போது சுவிஸில் இருக்கிறானே பின்னே என்ன என்ற எண்ணத்தில் கொஞ்சம் தைரியமாகவே அவர்களை எதிர்கொண்டாள்.

மதுபாலா அமர்ந்த அடுத்த நொடி “ரிஷி எங்க??” என்ற கேள்வியை ஸ்ரீநிவாஸ் கேட்க, அவனைப் பார்த்து புன்னகைத்தவள், “அண்ணா???” என்று எதையோ பேச ஆரம்பிக்க,

“நாங்க இங்க உக்கார்ந்து சாவகாசமா பேசிட்டு போக வரலை.. அவனை சென்னை முழுக்க தேடியாச்சு… எங்களுக்குத் தெரிய வேண்டியது எல்லாம் ரிஷி இப்போ எங்க இருக்கான்னு தான்….” என்று சாம்பசிவம் அழுத்தம் திருத்தமாய் வினவ,

அவரை ஒரு பார்வை பார்த்தவள், அடுத்து சைலேந்திரனைப் பார்க்க, “ரிஷி கொஞ்ச நாளாவே எனக்கு போன் பண்ணி உன் நம்பர் கேட்டான் மது.. நீயோ வீட்ல இல்லை.. உன்னை கேட்காம தரமாட்டேன்னு சொன்னேன்.. ஆனா பிடிவாதமா மூணு நாள் முன்னாடிதான் நம்பர் வாங்கினான்.. இவங்களை ஹாஸ்பிட்டல்ல மீட் பண்ணேன்.. ரிஷியை தேடுறாங்கன்னு தெரிஞ்சது.. கீழ வாட்ச்மேன் கிட்ட சொல்லிருந்தேன் நீ வந்தா எனக்கு கால் பண்ண சொல்லி… அதான் உனக்கு எதுவும் டீடெயில்ஸ் தெரியுமான்னு கேட்க வந்திருக்காங்க…” என்று நடந்தவைகளை சுருக்கமாய் விளக்க,

“ஓ..” என்றவளுக்கு ரிஷி என்னிடம் பேச நினைத்திருக்கிறான் என்ற எண்ணமே ஒரு உற்சாகத்தை கொடுத்தது..

‘அவ்வளோதான்.. ரிஷி என்னை மறந்திடுவான்.. சுவிஸ் போயிட்டா அந்த லைப்ல நான் எல்லாம் அவனுக்கு மறந்திடும்..முதல்லயே சொன்னதுபோல அவன் எங்கயோ நான் எங்கயோ…’ என்று தனக்கு தானே இத்தனை நாள் சமாதானம் சொல்லி வந்தவள் இன்று அவன், அவளை தொடர்புகொள்ள வேண்டும் என்று இத்தனை நாள் முயற்சித்திருக்கிறான் என்று தெரியவும் மனதில் ஒரு துள்ளல்..

ஆக வந்தவர்களுக்கு முழுதாய் எதுவும் தெரியாது என்று இப்போது புரிய, அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள், “ரிஷி இந்தியால இல்லைதான்.. அவனோட நான் பேசியும் ஒன் மன்த் ஆச்சு அங்கிள்…” என்று பொறுமையாகவே சொல்ல,

“அப்போ அப்போ அவன் எங்க இருக்கான்னு உனக்கு தெரியுமா??” என்றார் கல்யாணி வேகமாய்..

“ம்ம்.. ரிஷி இங்கதான் இருந்தான் ஆன்ட்டி.. த்ரீ டேஸ்.. இங்க இருந்து தான் கிளம்பி போனான்.. ” என்று சொல்ல, அது சைலேந்திரனுக்கும் ஒரு அதிர்ச்சியை கொடுத்தது..

“மது…!!!” என்று அவர் பார்க்க,

“என்ன சைலேந்தர்…” என்றவளின் பார்வையில்,  என் வீட்டிற்கு விருந்தினரை அழைப்பது என்னிஷ்டம் என்ற செய்தி இருக்க, அதற்குமேல் அவர் எதுவும் பேசவில்லை.. அவருக்கும் மதுபாலாவை பற்றி நன்கு தெரியுமே.. ஆக அமைதியாய் இருந்துவிட்டார்..

“என்னது.. இங்க இருந்தானா?? அதுவும் மூணு நாள்.. தனியா இந்த வீட்ல நீங்க இருந்தீங்களா???” என்று கேட்ட சாம்பசிவத்தின் குரலில் அப்பட்டமாய் ஒரு கோவமும், எரிச்சலும் பார்வையில் ஒரு அருவருப்பும் தெரிய, அவரை நேருக்குநேராய் பார்த்தவள்,

“ஏன் அங்கிள்.. உங்க பையன் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா???” என்று அவள் கேட்ட கேள்விக்கு யாருமே பதில் சொல்ல முடியவில்லை.

உண்மையும் அதுதானே.. அதென்ன இப்படி ஒரு கேள்வி இப்படி ஒரு பார்வை.. ஒரு ஆணும் பெண்ணும் தனியாய் இருக்க நேர்ந்தால் உடனே அவர்களுக்குள் தவறாய் ஒரு உறவு நடந்ததாய் நினைப்பது என்ன மாதிரியாய் ஒரு அறிவீனம் என்றுதான் அவளுக்குத் தோன்றியது.. ரிஷியின் பெற்றோர் என்றில்லை அந்த இடத்தில் யார் கேட்டிருந்தாலும் மதுபாலா இப்படித்தான் ரியாக்ட் செய்திருப்பாள்..

நீண்ட மௌனம்… யாருக்கு அடுத்து என்ன பேசுவதென்பது தெரியவில்லை.. வந்தவர்களுக்கு மதுபாலாவை பற்றி தெரியாதே.. சைலேந்திரன் கூறிய அளவில் தனியா இருக்கும் பெண், அப்படி என்ன அவள் செய்துவிட போகிறாள் என்றுதான் வந்திருந்தனர்.. ஆனால் அவளோ தனியாய் இருந்தால் மட்டும் என்ன என்ற ரீதியில் இருக்க,

சாம்பசிவம் கல்யாணியைப் பார்க்க, அதற்குள் சைலேந்திரன் பேசத் தொடங்கியிருந்தார்..

“சார்.. நானும் ரிஷியை கேம்ப்ல பார்த்திருக்கேன்.. சச் எ நைஸ் கை…” என்று அவர் பங்கிற்கு கொஞ்சம் பேச,

“அங்கிள் நான் யாரோ ஒருத்தி.. நானே ரிஷி மேல் நம்பிக்கை வச்சு அவனை என் வீட்ல தங்க வச்சிருந்தேன்.. அந்த நம்பிக்கை உங்களுக்கு இல்லையா??” என்று மதுபாலா அடுத்து ஆரம்பிக்க,

அந்த நேரத்தில் அவனைப் பெற்றவர்களுக்கு உள்ளே கொஞ்சம் பெருமையாய் இருந்தது தான்.. சாம்பசிவம் எப்போதுமே பிள்ளைகள் எந்த ஒரு விசயத்திலும் சரியாய் இருந்திட வேண்டும் என்று நினைப்பவர்..

மூத்தவன் அப்படியே இருக்க ரிஷியைப் பற்றி தான் அவருக்கு பெரும் தலைவலி.. படிப்பு முடியும் வரைக்கும் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தவன் அடுத்து ஒவ்வொன்றிருக்கும் வாக்குவாதம் செய்ய வீட்டில் தினம் தினம் பிரச்சனைகள் வரத் தொடங்கின..

ஒருநாள் திடீரென்று அவனே வீட்டில் இல்லை என்றதும் அனைவருக்குமே அதிர்ச்சியாகத் தான் போனது.. சரி வேண்டுமென்றே செய்கிறான் என்று இரண்டு நாட்கள் பொறுத்திருக்க, ரிஷியோ வீட்டிற்கு திரும்ப வருவதாகவே இல்லை. அதன்பின்னரே தான் தேடுதல் வேட்டைத் தொடங்கியது..

மனோகர் வரைக்கும் நெருங்கியவர்களால் அடுத்து ரிஷி எங்கே போனான் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.. நாள் செல்ல செல்ல கல்யாணி மிகவும் கலங்கிப் போனார்.. என்ன இருந்தாலும் அன்னை அல்லவா??

அவர்கள் வீட்டின் போக்கே மாறிட, மைதிலிக்கோ மிகவும் சூழல் இக்கட்டாய் போனது.. அவளுக்கும் ஸ்ரீநிவாஸுக்கும் திருமணம் முடிந்து ஒன்றை வருடங்களே நிரம்பியிருக்க, ரிஷி வீட்டை விட்டு போனதும் அந்த டென்சன் எல்லாம் ஸ்ரீநிவாஸ் அவள் மீது காட்ட, 

சும்மாவே இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும் என்று சொல்பவர்கள் இப்போது யார் மீது என்ன கோபத்தை காட்டுவது என்று தெரியாமல் சாம்பசிவம் ஒருநாள் மைதிலியை வெடுக்கென்று கோவமாய் பேசிட,

ஏற்கனவே சிரிப்பது கூட அரிதாகி போன மைதிலிக்கு, இந்த சூழலில் கணவனின் ஆறுதலும் இல்லாது போக, உச்ச பட்ச மன அழுத்தத்தில் கையில் கிடைத்த மாத்திரைகள் அனைத்தையும் விழுங்கி, தற்கொலை முயற்சி எடுத்துவிட்டாள்..

எப்படி இருந்திருக்கும் அவர்களது வீட்டு நிலை.. யாரிடமும் சொல்லவும் முடியாது.. அவர்களது கௌரவம் போய்விடும்.. இன்னார் வீட்டில் இப்படி என்று பேசமாட்டார்களா?? அதிலும் மைதிலியின் பெற்றோர் வேறு வெளிநாட்டு டூர் சென்றிருக்க, அவளை பிழைக்க வைப்பதற்குள் கொஞ்சம் அனைவருக்குமே உயிர் போய் உயிர் வந்த நிலை தான்..

ஆனால் அவள் கண் விழித்ததும் மருத்துவர் கூறிய முதல் விஷயம், மைதிலிக்கு கண்டிப்பாக சிறந்த மனோதத்துவ நிபுணரிடம் அவளுக்கு கவுன்ஸ்லிங் கொடுக்க வேண்டும் என்பது தான்..

அதை கும்பகோணத்தில் செய்ய முடியாதே.. ஆக அனைவரும் சென்னை வந்துவிட, அதுவுமில்லாமல் ரிஷியை தேடுவதும் அங்கிருந்தபடியே செய்வது சுலபம் என்பதால் அனைவரும் இங்கேயே வந்துவிட, இங்கே அவர்களுக்கு இருந்த கெஸ்ட் ஹவுசில் தான் இத்தனை நாள் தங்கிருந்தனர்..

ஒருபக்கம் மைதிலிக்கான மருத்துவமும், ரிஷியை தேடும் வேலையும் நடந்துகொண்டு இருக்க, மைதிலியை பரிசோதித்த மனோதத்துவ நிபுணர், கவுன்ஸ்லிங் அவளுக்கு அல்ல உங்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று மற்ற மூவரையும் நன்கு வாட்டி எடுத்துவிட்டார்..

அதிலும் முக்கியமாய் ஸ்ரீநிவாசை..

“எந்த காலத்துல சார் இருக்கீங்க நீங்க எல்லாம்.. அவங்களுக்கு மனசுல எதுவும் பிரச்சனை இல்லை.. நீங்க எல்லாரும் தான்.. முதல்ல உங்க முகத்தை மறைசிருக்கிற வறட்டு கௌரவம், பேர், டாம்பீகம் அதெல்லாம் கலட்டி போட்டி மனுசங்களை மனுசங்களா பாருங்க… மனுசங்களா இருந்தா அழுகை சிரிப்பு கோவம் வெக்கம் காதல் எல்லாம் உணர்வும் இருக்கத்தான் செய்யும்.. இருக்கணும்..” என்று ஆரம்பித்து,

அடுத்து தொடர்ந்து வாரம் மூன்று முறை என்று சென்று வந்த கவுன்ஸ்லிங் அனைத்திலும் மைதிலிக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் அவர்களுக்கு தெரியாமலே கொஞ்சம் மன மாற்றம் ஏற்பட்டது உண்மை தான்..

முதலில் சாம்பசிவம், அத்தனை எல்லாம் இலகிடவில்லை.. கல்யாணி கூட மகன் வீட்டை விட்டு போனதில் கொஞ்சம் தன் வட்டத்தில் இருந்து வெளியே வரத் தொடங்க, ஆகமொத்தம் இந்த ஒருமாதத்தில் அவர்களிடம் ஒரு மாற்றம் வந்தது உண்மை தான்..

ஸ்ரீநிவாஸ் மட்டும் கொஞ்சம் இறுக்கமாகவே இருக்க, அதன் பிரதிபலிப்பு மைதிலி சாப்பாட்டில் வெறுப்பை காட்ட, விளைவு நான்கு நாட்களுக்கு முன்பு அவளுக்கு ட்ரிப்ஸ் ஏற்றும் நிலை..

அப்போது மருத்துவமனைக்கு சென்றிருக்கும் போது தான் ஸ்ரீநிவாஸ் சைலேந்திரனைப் பார்த்தான்..

ஏறக்குறைய ஸ்ரீநிவாஸ் ரிஷி இருவரும் உருவத்தில் ஒன்றுபோல் இருப்பர்.. சைலேந்திரன் பின்னிருந்து ஸ்ரீநிவாசைப் பார்த்து ரிஷியோ என்றெண்ணி “ஹாய் ரிஷி…” என்று பேசப் போக, அப்போது தொடங்கியது அனைத்தும்..

சாம்பசிவமும், கல்யாணியும், ரிஷியைப் பற்றி சைலேந்திரனிடம் விசாரிக்க, அவரோ “மே பி மதுபாலாக்கு தெரிஞ்சிருக்கும்…” என்று சொல்ல, இருவருமே வெகுவாய் கலங்கித்தான் போனார்கள்..

‘என்ன… ரிஷியைப் பற்றிய விபரம் ஒரு பெண்ணுக்குத் தெரியுமென்றால், அப்போ அவளுக்கும் அவனுக்கும் இடையில் என்ன?? அவளால்தான்.. அவளுக்காகத்தான்  ரிஷி வீட்டை விட்டு வந்தானா?? ஐயோ இதெல்லாம் ஊரில் தெரிந்தால் என்னாவது….’ என்று இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டு இருக்க, ஸ்ரீநிவாஸ் அமைதியாய் தான் இருந்தான் அப்போது..

மைதிலி தான் கொஞ்சமும் அவர்கள் பேசுவதை சகிக்காமல் “அய்யோ போதும் கொஞ்சம் எல்லாம் நிறுத்துறீங்களா?? என்ன எதுன்னு தெரியாம ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க.. ரிஷியை கொஞ்சம் அவனுக்கு பிடிச்ச மாதிரி இருக்க விட்டிருந்தா இன்னிக்கு இந்த நிலைமை வந்திருக்காது.. ஆனா ஒரு நல்ல விசயம் அவன் கிளம்பிட்டான்.. இல்லைன்னா அவனும் என்னை மாதிரி தான் செஞ்சிருப்பான்… ” என்று கத்திவிட,

முதல்முறையாய் ஸ்ரீநிவாஸ் “அப்பா… ரிஷி அப்படியெல்லாம் நடந்துக்கிறவன் கிடையாது. அந்த பொண்ணுக்கிட்ட கேட்போம்…” என்று மனைவிக்கும் தம்பிக்கும் கொஞ்சமே கொஞ்சம் ஏற்றுக்கொண்டு பேசி தான் இங்கே அழைத்து வந்திருந்தான்..                

 ஆனாலும் சாம்பசிவம், கல்யாணி இருவருக்குமே மனதில் ரிஷி என்ன செய்து வைத்திருக்கிறானோ என்றே இருக்க, இங்கே மதுபாலா, சைலேந்திரன் எல்லாம் பேசியது கேட்டு  எந்த இடத்திலும் தங்கள் மகன் தங்களின் கௌரவத்திற்கு பாதகமாய் நடந்திடவில்லை என்று புரிந்து அவனை எண்ணி பெருமையாக இருந்தது..

வந்ததுமே அனைவரின் பார்வையும் மதுபாலாவை எடை போட்டிருக்க, அவளிடம் தப்பு தவறாக எதுவுமில்லை என்று அனைவருக்குமே தெரிந்தது. அவளது நிமிர்வு, தெளிவான பார்வை பேச்சு இதனோடு எப்போதுமே தவறுகளை ஒப்பிட முடியாது என்று சாம்பசிவம் வந்த சில நேரத்திலேயே உணர்ந்துவிட, ஆனால் ரிஷி இங்கேதான் மூன்று நாட்கள் இருந்தான் என்று தெரிந்ததும் தான் எண்ணியது தவறோ என்று நினைத்து தான் அப்படி பேசிவிட்டார்..

ஆனால் அதற்குமே மதுபாலா திடமாய் பதில் கொடுத்துவிட, அடுத்து அவருக்கு பொறுமையாய் போவதைத் தவிற வேறு வழி இருக்கவில்லை..

“நீ சொல்றது எல்லாம் சரிம்மா.. ஆனா ரிஷி.. அவன்… எங்க இருக்கான்.. வீட்டை விட்டுத்தான் போனான்.. ஆனா ஒரு போன் கூட இல்லை.. நீயாவது சொல்லிருக்கலாமே இப்படியெல்லாம் போகாதன்னு…” என்று மதுபாலா சொல்லும் அனைத்தும் அவன் கேட்பான் என்றெண்ணி பேச,

“ஆன்ட்டி…” என்றவள், பின் என்ன நினைத்தாளோ எழுந்து அவரருகே வந்து,

“எனக்கு ஃபேமிலி இல்லை.. நான் சிங்கிள் தான்.. ஆனா ஒரு ஃபேமிலியோட வேல்யு என்னன்னு தெரியும்.. என் அம்மா என்னை அப்படித்தான் வளர்த்தாங்க.. உங்களுக்கு தெரியுமா.. ரிஷி இங்க வந்ததுல நான் கவனிச்ச ஒண்ணு அவனுக்கு உங்க எல்லாரையும் ரொம்ப பிடிக்கும்.. ஒவ்வொரு விசயத்துக்கும் அவன் உங்களைப் பேசுவான்..

அவ்வளோ ஏன்.. கேசரி.. அது கூட எங்கம்மா இப்படி பண்ணுவாங்கன்னு சொன்னான்… என்ன அவனும் ஒரு தனி மனுசன்.. சோ அவனுக்கான விருப்பு வெறுப்புகளோடு அவனை விட்டிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது.. இப்பவும் ஒண்ணுமில்ல ஆன்ட்டி அவனே கொஞ்ச நாள்ல வந்திடுவான்.. இல்லை கால் பண்ணுவான்…” என்று அவரின் கரங்களை தட்டிக்கொடுக்க,

கல்யாணி ரிஷியின் பேச்சில் இருந்து அவளது வாழ்விற்குத் தாவி “நீ.. நீ இவ்வளோ பெரிய வீட்ல தனியாவா இருக்க?? எப்படி?? எப்படி இருக்க??” என்று ஆச்சர்யமாய் கேட்க,

“ஏன் ஆன்ட்டி இருக்கக்கூடாதா.. எனக்கான லைப் ரொம்ப சிம்பிள்.. எனக்கு பிடிச்சிருந்தா இங்க இருப்பேன்.. இல்லையா காரை எடுத்திட்டு போயிடுவேன்.. எங்கயாவது கொஞ்ச நாள் இருப்பேன்.. ஆனா எப்படி இருக்கணும் எப்படி இருக்க கூடாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் ஆன்ட்டி.. நான் சரியா இருக்கேன் அப்படின்னு எனக்கேத் தெரியும் போது, நான் ஏன் பயப்படனும்..” என்று சொல்ல,

வந்திருந்தவர்கள் அனைவருக்குமே மதுபாலா கொஞ்சம் வித்தியாசமான பெண் தான் என்பது உறுதியானது.. ஆனால் இப்போதுவரைக்கும் அவள் ரிஷி எங்கே என்று சொல்லாமல் இருப்பது கண்டு,

சைலேந்திரன் “மது.. இப்போவாது சொல்லேன் ரிஷி எங்க??” என்று கேட்க,

“அதை நான் எப்படி சொல்ல சைலேந்திரன்.. அப்படி சொன்னா ரிஷியோட நம்பிக்கையை உடைச்ச மாதிரி ஆகாதா…..” என்று மதுபாலா பேசிக்கொண்டு இருக்கும் போதே,

மீண்டும் அவள் வீட்டு தொலைபேசி ஒலிக்க, அத்தனை நேரமில்லாமல் அனைவருக்குமே அழைப்பது ரிஷியாய் இருக்குமோ என்று தோன்ற, அனைவருமே மதுபாலாவைத் தான் பார்த்தனர்..

அவளுமே அப்படித்தான், அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள், ஒருவேளை ரிஷியாய் இருக்குமோ என்றெண்ணி அழைப்பை எடுப்பதா வேண்டாமா என்று யோசிக்க, தொலைபேசியோ விடாமல் அடித்துக்கொண்டே இருக்க,

சாம்பசிவம் “யாரா இருந்தாலும் பரவாயில்லை எடுத்துப் பேசும்மா…” என,

அதற்குமேல் தான் சும்மா இருந்தால் மரியாதையாய் இருக்காது என்றெண்ணி, அழைப்பை மதுபாலா ஏற்க,

“மதுபி….” என்று உற்சாகமாய் ரிஷியின் குரல் கேட்க, அது அவள் காதுகளில் விழுந்து மனது உணர்ந்த அடுத்த நொடி, அவளின் பார்வையில் ஒரு திடுக்கிடல் தெரியவும் அனைவருக்குமே புரிந்தும் போனது அழைத்தது ரிஷி என்று..

உறவுகள் நாமாக ஏற்படுத்திக்கொள்வது வேறு, தானாக அமைவது வேறு.. நாமாக ஏற்படுத்திக்கொண்டதை விட தானாக அமைவது சில நேரம் அழகாய் அமைந்துவிடுகிறது..                                              

         

       

        

   

Advertisement