Advertisement

மது – 7

 

ஒரு மாதம் கடந்திருந்தது..

இமைகள் நொடிக்கும் பொழுது போல வேகமாய் கடகடவென்று கடந்துவிட்டது இந்த ஒருமாதம்.. ஆனால் இருவரைத் தவிர..

ஒன்று ரிஷி.. மற்றொன்று மதுபாலா..

ரிஷி சுவிஸ்ஸர்லாந் வந்தும் மாதம் ஒன்றாகியிருக்க, அவனால் மதுபாலாவின் நினைவில் இருந்து மட்டும் வெளிவரவே முடியவில்லை.. புது சூழல்.. புது ஆட்கள்.. அவன் விரும்பிய வேலை.. அவன் விரும்பிய சுதந்திரம்.. இத்தனை இருந்தாலும் அவனுக்கு மதுபாலாவின் வீட்டில் இருந்த நாட்கள் மட்டுமே மனதில் வந்து வந்து சென்றுகொண்டு இருந்தது.

அன்று மதுபாலாவிற்கு அடிபட்ட அன்றும் சரி, அதற்கு மறுதினமும் சரி கிளம்பும் வரையில் ரிஷி தான் அவளைப் பார்த்துக்கொண்டான்.. பார்த்து பார்த்து செய்தான் எல்லாமே..

அவளைக்கொண்டு போய் கட்டிலில் கிடத்தியவன், மீண்டும் “ஹாஸ்பிட்டல் போகலாம்..” என்று சொல்ல, அவளோ திட்டவட்டமாய் மறுத்துவிட்டாள்.

“காயம் சின்னதுதான்.. சோ வேணாம்.. நாளைக்கு நீ கிளம்புற வரைக்கும் சேப்பா இருக்கணும்…” என்று சொல்ல,

“ம்ம்ச் எனக்கு கில்டியா இருக்கு மதுபி…” என்றவன் அப்படியே அவள் அருகேயே அமர,

“எதுக்கு…??” என்றாள்..

“நான் ரொம்ப செல்பிஷ்ஷா பீகேவ் பண்றேனா???” என்றவனின் முகத்தில் கொஞ்ச நேரம் பார்வையை நிலைக்க விட்டவள்,

“அப்படின்னு உனக்குத் தோணுதா??” என,

“நீ சொல்லு.. எனக்கே என்னை இப்போ ஜட்ஜ் பண்ண முடியல.. கொஞ்ச நேரம் முன்னாடி ரொம்ப தெளிவா இருந்தேன்.. ஆனா இப்போ.. கண் முன்னாடி உனக்கு அடிபட்டு ரத்தம் வருது.. ஹாஸ்பிட்டல் கூப்பிட்டா வரலைன்னு சொல்ற.. ரீசன் நான்…” என்று ரிஷியும் விடாது பேச,

“இதுக்கும் கில்டிக்கும் என்ன இருக்கு?? லுக் ரிஷி.. நீ ரொம்ப திங் பண்ணி லைப்ப காம்ப்ளிகேட் பண்ணிக்கிற… ஜஸ்ட் எல்லாத்தையும் ஈசியா பாரு.. பாசிடீவ்வா நினை.. ஒரு முடிவு எடுத்தா அதுல தெளிவா இரு.. போதும்…”  என்றாள் நிதானமாய்..

மதுபாலாவிற்கு அடிபட்டதும் வலித்தது தான்.. ஆனால் இத்தனை நாள் சின்னதாய் கத்தி கீறினால் கூட அவளே துடைத்து மருந்திட்டு, பெரிய காயம் என்றால் அவளே மருத்துவமனை சென்று வந்து எதையோ உண்டு என்று பழக்கம் கொண்டிருந்தவளுக்கு இப்போதோ எதிரே இருப்பவன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய,

அவனோடு பேசும் இந்த தருணங்கள் எல்லாம் சுகமாய் தான் இருந்தது.. வலி கொஞ்சம் மட்டுப்பட்டிருக்க, பேச்சும் கொஞ்சம் சரளமாய் வர, ரிஷி ‘கில்டியா இருக்கு..’ என்று சொன்னது அவளுக்கு கஷ்டமாய் போனது..

“ஹ்ம்ம் நீ எல்லாத்தையுமே ஈசியா சொல்லிடற… பாலோ பண்றதுக்குள்ள…” என்று ரிஷி தலையை உலுக்க,

“ஹ்ம்ம் உறவுகள் இல்லாமையே இருக்கிறது வேற.. வேணாம்னு விட்டு வர்றது வேற ரிஷி.. நான் முதல் ரகம்.. நீ ரெண்டாவது ரகம்…. எனக்கு இது பழகிடுச்சு.. நீ இப்போதானே பழகிட்டு இருக்க சோ குழப்பம் கோவம் எல்லாம் வரத்தான் செய்யும்..” என்று மதுபாலா சொல்ல,

“ம்ம்ம்.. எனக்கு எல்லாமே இருந்தது கும்பகோணம்ல.. வீடு.. வசதி.. சொத்து.. பணம்.. உறவுகள்.. எல்லாமே… ஆனா எதுவுமே எனக்கு சின்ன வயசுல இருந்து ஒரு நிம்மதி கொடுக்கவேயில்லை.. ரோட்ல பசங்க விளையாடுறத பாக்கிறப்போ ஆசையா இருக்கும்..

நாமளும் போயி அவங்க கூட சேர்ந்து விளையாடனும்னு.. ஆனா கலக்டர் பையன் ரோட்ல விளையாடுறதா?? அவங்க கௌரவம் என்னாகும்… இதுன்னு இல்லை இப்படியே நிறைய சின்ன சின்ன ஆசைகள் எதுவுமே எனக்கு கிடைச்சதில்ல ஆனா நான் அசைபட்டத்துக்கு மேலா நிறைய கிடைச்சது, அது எதுவுமே எனக்கு பிடிக்கலை..

சரி கொஞ்ச நாள்ல புரிஞ்சுப்பாங்கன்னு நானும் விட்டு விட்டு, கடைசில பிடிச்ச படிப்பு படிக்க முடியல.. பிடிச்ச வேலை செய்யலாம்னு ட்ரை பண்ணேன் அதுக்கும் விடல.. இதுக்கே இப்படின்னா லைப்ல என்னோட லைப் பார்டனர் சூஸ் பண்றதும் அவங்க இஷ்டபடிதான் இருக்கும்னு தோணிச்சு மதுபி.. அது தான் போதும்னு கிளம்பி வந்துட்டேன்…” என்று முதல் முறையாய் ரிஷி தன் மனதை திறந்து பேசினான்..

அன்றும் சொன்னான்தான் அவனைப் பற்றி அவன் குடும்பத்தைப் பற்றி.. வீட்டை விட்டு கிளம்பி வந்தது பற்றி என்று எல்லாம் சொன்னான் தான்.. ஆனால் இத்தனை பீல் செய்து சொல்லவில்லை.. ஜஸ்ட் ஒரு சுய அறிமுகம் போல் சொல்லிக்கொண்டான்.. ஆனால் இன்றோ.. அவன் வார்த்தைகளில் அவன் மனதில் இருக்கும் இத்தனை ஆண்டுகால ஏமாற்றமும் வலியும் தெரிந்தது..

“ம்ம் ரிஷி.. எதுவும் வொர்ரி பண்ணாத.. இனிமே நடக்கிறது எல்லாம் நீ ஆசைப்பட்ட படி நடக்கும் ஓகே வா.. பீல் ப்ரீ மேன்…” என்று இடக்கையால் அவன் கரத்தினை தட்ட,

அவளது இடக்கை மோதிர விரலில் கொஞ்ச நேரம் முன்பு அவனிட்ட மோதிரம் அவளைப் பார்த்து நகைப்பது போல் இருக்க, வேகமாய் அவளது கரங்களை ரிஷியின் கரத்தில் இருந்து எடுத்துக்கொண்டாள். ஆனால் அதெல்லாம் அவன் உணர்வது போல் இல்லை..

“ஹ்ம்ம் எதுவும் நினைக்கல.. உனக்கு வலிக்குதா???” என்று அவள் முகத்தைப் பார்க்க,

“ரொம்ப இல்ல..” என்று தலையை ஆட்டியவள், “உனக்கு பசிக்குதா???” என,

“ஹ்ம்ம் கொஞ்சம்..” என்றவன், “ஷ்.. கிட்சன் கிளீன் பண்ணனுமே.. மறந்துட்டேன்..” என்றவன் வேகமாய் அங்கே செல்ல கிளம்ப,

“பார்த்து பண்ணு ரிஷி…. கால்ல ஸ்லிப்பர் போட்டுக்கோ…” என்று மதுபாலா சொல்வதைப் பார்த்து சிரித்துவிட்டு போனான்..

அவன் வீட்டில் செருப்பெல்லாம் வாசல் வராண்டாவோடு கழட்டிவிட வேண்டிய ஒன்று… அவனது அம்மா கல்யாணி, கால் வலி வருகிறது என்று சொல்லி மருத்துவமனை போக, அங்கே எப்போதும் வீட்டில் அணிந்திருக்கும்படி ஒரு செருப்பை பரிந்துரை செய்ய,

“வீட்டுக்குள்ள செருப்பு போட்டு நடக்க சொல்றாங்க.. அப்பா.. அப்படியே வந்துட்டேன்.. நைட் நைட் சுடு தண்ணி ஒத்தடம் குடுத்தா போதும்..” அவராகவே சமாதானம் செய்துகொண்டது நினைவில் வந்தது அவனுக்கு..

ரிஷிக்கு இன்னமும் கொஞ்சம் சிரிப்பு அவன் முகத்தில் ஒட்டியிருக்க, அதன்வாக்கில் தான் சமையல் அறையை சுத்தம் செய்தான்.. இதெல்லாம் அவன் வீட்டினர் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.. அவ்வளவு தான் நீ என்ன நாட்டை விட்டு போவது.. நாங்களே உன்னை தேசாந்திரம் அனுப்புகிறோம் என்று அனுப்பியிருப்பரோ என்னவோ..

“ஹ்ம்ம் அண்ணிதான் பாவம்.. இந்த கூட்டத்துல வந்து சிக்கி.. ஸ்ரீனி கொஞ்சமாவது அவங்களை புரிஞ்சு நடந்துக்கலாம்…” என்று தானாகவே சொல்லிக்கொண்டு இருக்க,

“என்ன ரிஷி நீயா பேசிட்டு இருக்க???” என்றபடி அங்கே சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள் மதுபாலா..

“நீ ஏன் எந்திரிச்சு வந்த.. போ போய் படு.. நான் ஏதாவது செஞ்சு எடுத்திட்டு வர்றேன்..” என்று கண்டிப்பான குரலில் ரிஷி சொல்ல,

“அதுசரி.. இனிக்கு நீ செஞ்சிடுவ நாளைக்கு யார் செய்வா??” என்று வேகமாய் மதுபாலா சொல்லிவிட,

“மதுபி…???!!!!” என்று ஒரு வலியோடு பார்த்தவனை,

“ஷ்.. சாரி சாரி.. நீ என்ன செய்யணுமோ செய்.. ஆனா என்னை இப்படி ரொம்ப கேர் மட்டும் பண்ணாத.. சரியா???” என்று அவள் சொல்லும் போது, அவள் முகத்தில் பலவித பாவனைகள்..

“ம்ம்… எனக்கு புரியுது..” என்றவன் வேகமாய் சுத்தம் செய்து, கைகளை கழுவி, என்ன சமைப்பது என்று யோசித்து, ‘கிச்சடி பண்ணவா??’ என்று அவளைப் பார்த்து கேட்க, அவளது முகம் கொஞ்சம் அஷ்டகோணலாய் போகவும்

“சரி சரி.. நீ என்ன பண்ண ட்ரை பண்ணி இப்படி ஆச்சு..” என்று பேச்சை மாற்றினான்..

“ஹ்ம்ம்.. பிசிபேளாபாத் பண்ணலாம்னு நினைச்சேன்..” என்றவளைப் பார்த்து,

“நல்லா நினைச்ச போ.. நான் இருந்ததினால சரி.. இல்லைன்னா என்ன பண்ணிருப்ப….” என்று சொல்லிக்கொண்டே திரும்பியவன், தான் கூறிய வார்த்தைகளை உணர்ந்து வேகமாய் அவளைப் பார்க்க,

அவளோ இதழில் பூத்த மென்னகையோடு, “சீக்கிரம் ஏதாவது ரெடி பண்ணு.. உனக்கு பசி வந்தா பின்னாடியே கோபமும் சேர்த்து வந்திடுது…” என்று சொல்லிவிட்டு, மெல்ல மெல்ல காலைத் தாங்கிப் பிடித்து நடந்து போனாள்..

அடுத்து வந்த நாளும், அவனை காயப்படுத்தி விடக்கூடாது என்று அவளும், வார்த்தைகளை பார்த்து பேசிடவேண்டும் என்று அவனும் மிக மிக தங்கள் செயல்களில் கவனமாய் இருக்க, அதுவே ஒரு சுமுக சூழலை அங்கே உருவாக்க, அந்தா இந்தாவென்று ரிஷி கிளம்பும் நேரமும் வர, அத்தனை நேரமும் மாறி மாறி பேசிக்கொண்டு இருந்தவர்கள், அப்படியே மௌனமாகிவிட,

“மதுபி…” என்ற ரிஷியின் அழைப்பில் தலை நிமிர்ந்துப் பார்த்தாள் மதுபாலா.

“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என,

“இவ்வளோ நேரம் அதைத்தான் செஞ்சோம் ரிஷி.. இப்போ கிளம்பினாத்தான் டைம் சரியா இருக்கும்.. நான் கீழ போய் கார் எடுக்கிறேன்..” என்று மதுபாலா எழ,

“வேணாம் நானே போயிப்பேன்.. உனக்கு இன்னும் காயம் சரியாகல… என் பிரன்ட் கிட்ட பேசிருக்கேன்.. அவனே கார் அனுப்புறேன் சொல்லிருக்கான்…” என்று ரிஷி மறுக்க,

“ஹ்ம்ம் நானே உன்னை டிராப் பண்ணலாம்னு நினைச்சேன்…” என்றபடி மதுபாலா மீண்டும் அமர,

“நீ என்னை டிராப் பண்ண வேணாம்னு தான் நான் கார் அரேஞ் பண்ணேன்..” என்றவன் “கொஞ்சம் நான் பேசுறதை கேளு மதுபி…” என்றவன்,

அவளது கண்களை நேருக்குநேராய் பார்த்து “இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படி இருப்ப??” என்றான்..

“ஏன்?? எனக்கென்ன நல்லாத்தானே இருக்கேன்..” என்ற பதில் அவளிடம் இருந்து வேகமாய் வந்தது..

“நீ நல்லாத்தான் இருக்க.. ஆனா கண்டிப்பா உன்னோட லைப்ல ஒரு சேஞ் தேவை மதுபி.. இப்படியே ரொம்பநாள் இருந்திட முடியாது.. உனக்குன்னு ஒரு லைப் அமைச்சுக்கோ… கண்டிப்பா உன்னைப்போல ஒரு லைப் பார்ட்னர் கிடைக்க கொடுத்துதான் வச்சிருக்கணும் யாரா இருந்தாலும்…” என்றவன் ஒரு ஆழ மூச்சை எடுத்துவிட்டு, அவளைப் பார்க்க,

அவளோ மௌனமாய் தலைகுனிந்து அவளது இடக்கை மோதிரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.. அது ரிஷியின் பார்வைக்கு எப்படி பட்டதோ, “உன் அம்மா எப்பவும் உன்கூடவே தான் இருப்பாங்க.. ஆனா அவங்களையும் தாண்டி உனக்குன்னு ஒரு லைப் வேணும்.. யோசி மதுபி… சுவிஸ் போயிட்டு நான் எப்போ இங்க வருவேன் சொல்ல முடியாது.. ஆனா வர்றபோ நேரா இங்கதான் வருவேன்… உன்னை பேமிலியா பார்த்தா சந்தோசமா இருக்கும் அப்போ…” என்றவனைப் பார்த்து சிரித்தவள்,

“நீ சுவிஸ் எதுக்குப் போற???” என,

“இதென்ன கேள்வி வேலைக்குத்தான்.. அங்க எல்லாமே ரெடி தெரியுமா??” என்று ரிஷி கெத்தாய் சொல்ல,

“ஓ.. நான்கூட ப்ளாக்மனி எல்லாம் கொண்டு வர போறியோன்னு நினைச்சிட்டேன்…” என்று மதுபாலா சொன்னதும் அவனுக்கும் அந்த சிரிப்பு ஒட்டிக்கொள்ள,

“ஹா ஹா நீ இருக்கியே… சரியான ஆளு.. ஆனா கண்டிப்பா நான் சொல்றதை திங் பண்ணு…. முடிஞ்சா சுவிஸ்க்கு ஒரு ட்ரிப் வா..” என்ற அழைப்பு விடுக்க,

“ஹா ஹா இதுவல்லவோ பெரிய ஜோக்.. முதல்ல நீ போய் அங்க செட்டில் ஆகு ரிஷி.. தென் பாப்போம்..” என்றவள், “டைம் ஆச்சு ரிஷி… கிளம்பு..” என, அவனுக்கு என்னவோ அவளை அப்படியே தனியே விட்டு போக மனமேயில்லை..

அதிலும் கையிலும் காலிலும் இன்னும் காயமும் ஆறவில்லை. அவள் முகமும் ஒருவித சோர்வில் இருக்க, அவள் முகத்தைத்தான் பார்த்தபடி இருந்தான். அவன் வீட்டை விட்டு கிளம்புகையில் கூட அவனுக்கு இத்தனை தயக்கம் இல்லை.. ஆனால் இங்கே மதுபாலாவை விட்டு கிளம்ப மனமேயில்லை.

“என்ன ரிஷி கிளம்பு…” என்று சொல்லும்போதே, அவனது அலைபேசி ஒலிக்க, அதனைப் பார்த்தவன் “கார் டிரைவர்..” என்று சொல்லியபடி அழைப்பை ஏற்று,

“யா பைவ் மினிட்ஸ்…” என்று அழைப்பை துண்டிக்க,

“இந்த அஞ்சு நிமிசத்துல என்ன ஆகப்போகுது ரிஷி..” என்றவளுக்கு ஒரு வெற்று சிரிப்பை கொடுத்தவன்,

“நான் சென்னை வர்றபோ நினைக்கவேயில்லை.. இப்படி ஒருத்திய மீட் பண்ணுவோம்னு..” என்றபடி ரிஷி எழ,

“ஹா ஹா.. இனிமேலும் என்னை போல யாரையும் மீட் பண்ணுவியான்னும் சொல்ல முடியாது..” என்றபடி மதுபாலாவும் எழ, அவள் எழுவதற்கு உதவியாய் ரிஷி தன் கரங்களை கொடுக்க,

“ம்ம்.. இனிமே நானே தானே எல்லாம் ஹேண்டில் பண்ணனும்…” என்றவள் அவளாகவே எழுந்து கதவு வரைக்கும் வந்தாள்.

ரிஷிக்கு என்னவோ தொண்டை அடைத்து, இதயத்தை யாரோ போட்டு இருக்குவதைப் போல் இருந்தது.. அவளை இப்படியே விட்டு போவதா.. இனி என்ன செய்வாள்?? காலம் முழுமைக்கும் இப்படியே இருந்துவிடுவாளோ என்றெல்லாம் தோன்ற, மெல்ல மெல்ல எட்டு வைத்து நடந்தான்..

“என்ன ரிஷி அடிப்பிரதச்சனம் பண்றியா? கிளம்பு நீ முதல்ல…” என்றபடி மதுபாலா கதவை திறந்து வைக்க,

“ஹ்ம்ம் காயம் சரியாகவும் வீட்லயே இருக்காம அடிக்கடி கேம்ப் போ மதுபி.. தனியா இருக்காத.. உன்னை நீயே பிசியா வச்சிக்கோ…” என்றவன் திடீரென்று ஒரு நியாபகம் வர,

“ஆமா நீ ஏன் சைலேந்திரன் சார பேர் சொல்லி கூப்பிடுற…” என்று கேட்க,

‘கிளம்புற நேரத்துல கேட்கிற கேள்வியா இது..’ என்று அவனைப் பார்த்தவள் பின் ஒரு சிரிப்போடு “மரியாதை இங்க இருந்தா போதும்…” என்று நெஞ்சை தொட்டு சொல்ல,

“ம்ம்..” என்று சொன்னவன், “டேக் கேர் மதுபி…” என்று அவளை ஒருமுறை அணைக்க,

“அடுத்து தேங்க்ஸ் எல்லாம் சொல்லிடாத ரிஷி…” என்றவளின் கரங்களும் அவனை அணைக்க, கொஞ்சம் நேரம் இருவருமே அந்த அணைப்பில் விலக முடியாது தான் நின்றிருந்தனர்..

“டைமுக்கு சாப்பிடு மதுபி.. ஹெல்த் பார்த்துக்கோ..” என்று திரும்ப திரும்ப ரிஷி சொல்ல,

“ஐ கேன் ஹேண்டில் மைசெல்ப் ரிஷி.. நீ அங்க போய் முதல்ல செட்டில் ஆகு..” என்றவள், மெல்ல அவனிடம் இருந்து விலக,

“ம்ம்… ரியலி யூ ஆர் டிப்ரென்ட் மதுபி…” என்றவன், அவளைப் பார்த்தபடி வாசலைத் தாண்ட, மௌனமாய் கையசைத்தாள் மதுபாலா..

வாசல் தாண்டியும் ரிஷி அப்படியே நிற்க, “போ…” என்பதுபோல் சைகை செய்தவள், அவன் கொஞ்சம் நகரவும் கதவை அடைத்து அப்படியே அதன்மீதே சாய்ந்து நின்றவளுக்கு கண்கள் கண்ணீரை சொரிந்தது..

ரிஷி சுவிஸ் வந்தும் ஒரு மாதம் ஆகிவிட, அவன் அங்கு இறங்கிய முதல் நொடி நினைத்தது மதுபாலாவிடம் சொல்லவேண்டும் என்றுதான்..

“மதுபிக்கு சொல்லணும்…” என்று நினைத்தவன், வேகமாய் அவனது நண்பனின் அலைபேசியை வாங்க கை நீட்டும் போது தான் தெரிந்தது, இதுவரைக்கும் அவளிடம் இருந்து அவளது எண்ணை அவன் வாங்கவேயில்லை என்று..

“ஷிட்…” என்று தன் தலையில் தானே அடித்துகொண்டவன், கண்களை இறுக மூடித் திறக்க,

“வாட் ஹேப்பன்டா…” என்ற அவனது நண்பனின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

“ஓகே.. நாளைக்கு மார்னிங் நானே வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்.. இப்போ எதையும் நினைக்காம தூங்கு..” என்று சொல்லி அவனது நண்பன் விடைபெற,

“ம்ம் ஓகே டா..” என்று சொல்லி அவனை அனுப்பி வந்தவனுக்கு மதுபாலாவை எப்படி தொடர்புகொள்வது என்ற எண்ணம் மட்டுமே..

யோசித்துப் பார்க்கையில் அவளிடம் அலைபேசி இருந்ததாய் நினைவில் இல்லை.. அவள் வீட்டில் ஒரு லேண்ட் லைன் போன் இருந்தது மட்டும் நினைவில் வர,

“ஓ காட்… மூணு நாள் அங்க இருந்தேன்.. நம்பர் வாங்கணும்னு தோனிச்சா.. சரியான செல்பிஷ்டா ரிஷி நீ…” என்று தனக்கு தானே கடிந்துகொண்டவன்,

என்ன செய்வது என்ன செய்வது என்று யோசிக்க,  அவனுக்கு சைலேந்திரனின் நினைவு வந்தது..

“எஸ்… எஸ்.. கண்டிப்பா அவருக்கு மதுபி நம்பர் தெரியும்…” என்று சொல்லிக்கொண்டவன், அவனது அலைபேசியில் இருந்த அவரின் எண்ணை தேடி எடுத்து,

அவன் தங்கியிருக்கும் வீட்டில் இருந்த லேண்ட் லைனில் இருந்து சைலேந்திரனுக்கு அழைக்க, முதலில் அழைப்பு எடுக்கப்படவே இல்லை.. மீண்டும் மீண்டும் முயற்சிக்க ஒருவழியாய் நான்காவது அழைப்பில் சைலேந்திரன் எடுக்க,

“ஹலோ சார்…” என்று பேச ஆரம்பித்தவன், கொஞ்ச நேரம் சாதாரணமாய் பேசிவிட்டு பின் மதுபாலாவின் வீட்டு எண்ணை கேட்க, அவரோ ஆயிரம் கேள்விகள் கேட்டார்..

ரிஷியும் ஆயிரம் காரணங்கள் சொல்ல, சைலேந்திரனோ அவளிடம் கேட்டுவிட்டு கொடுப்பதாக சொல்ல, ரிஷியும் சரி என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை.. ஆனால் ஒருமாதம் ஆகியும் மதுபாலாவிடம் அவனால் பேசிட முடியவில்லை..

“மதுபி என்ன பண்ற நீ….” என்று தினமும் அவனே கேட்டுக்கொள்வான்..

ஒவ்வொரு முறை சைலேந்திரனை தொடர்புகொள்ளும் போதும் “மது போன் எடுக்கல.. அவ வீட்ல இல்லை போல..” என்ற பதிலே வந்துகொண்டு இருந்தது..

உண்மையும் அதுதான்… மது ரிஷி கிளம்பிய மறுநாள் கிளம்பிவிட்டாள்.. காயம் இருந்தாலும், அதெல்லாம் அவளுக்குப் பெரிதாய் தெரியவில்லை.. அவள் வீட்டில் ஒரு அசாதாரண அமைதியையும் தனிமையையும் அவள் உணர நேர்ந்தது.. அதை தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..

ஒவ்வொரு இடத்திலும் ரிஷி இருப்பதுபோலவே தோன்ற, அவனது நினைவுகளே அவளுக்கு பெரும் பாரமாய் போக, அவளால் அங்கே அதற்குமேல் இருக்கமுடியவில்லை.. ஆக மறுநாள் விடிந்ததும் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

எங்கே போனாள் என்று யாருக்குமே தெரியாது.. அவளோ கார் போன போக்கில் போனாள்.. திரும்ப எப்போது வீடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ அப்போது திரும்பலாம் என்றெண்ணி, வேண்டிய உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு பயணத்தை தொடங்கிவிட்டாள்..

ஆனால் எங்கே சுற்றினாலும் ஒருநாள் சொந்த இடம் வந்துதானே ஆகவேண்டும்.. ஆக ஒருவழியாய் ஒருமாதம் கழித்து தான் மதுபாலா அவள் வீட்டிற்கு வந்தாள்..

உள்ளே வந்து பார்க்கையில், வீட்டை முழுவதும் சுத்தம் செய்யவேண்டும் என்று தோன்ற, அவளுக்கு அடுத்தடுத்து வேலைகளை நிறைய இருக்க, ஒருவழியாய் அனைத்தையும் முடித்தவள், ஒரு குளியலையும் போட்டுவிட்டு, கொஞ்சம் ஓய்வாய் திவானில் அமர,  அதே நேரம் சரியாய் அவளது வீட்டு காலிங் பெல்லும், அவளது வீட்டு தொலைபேசியும் சேர்ந்து ஒலித்தது..  

                                                                    

 

 

Advertisement