Advertisement

மது – 6

மதுபாலாவிற்கும் ரிஷிநித்யனுக்கும் அந்த ஒரு நாளில் ஏகப்பட்ட கருத்து மோதல்கள் வந்துவிட்டன.. இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை.. யாரும் வேண்டுமென்றும் செய்யவில்லை.. ஆனால் இதெல்லாம் நேர்ந்துவிட்டது..

ரிஷிக்கு கேம்பில் இருந்தது வரைக்கும் ஒன்றும் தெரியவில்லை.. இங்கேயும் கூட மதுபாலாவின் வீட்டிலும் கூட அவனுக்கு செய்யவென்று எல்லாம் ஒன்றுமில்லை.. ஆனால் இப்படி தனியே சும்மா இருப்பது ஒவ்வோரு விசயத்திற்கும் அவளை எதிர்பார்ப்பது அவனுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை..

கிளம்பவேண்டும் என்று ஒருப்பக்கம் தோன்றினாலும், இன்னும் ஒருநாள் தானே இருந்துவிட்டு போய்விடலாம் என்றும் தோன்ற, இதற்கெல்லாம் மேலாய் என்னவோ மதுபாலாவின் பேச்சு, பாவனை செயல்கள் எல்லாம் எதோ ஒருவிதத்தில் அவனுக்கு அவனது குடும்பத்தை நினைவு படுத்திக்கொண்டே இருக்க,

எங்கே திரும்பவும் அங்கேயே போகும் எண்ணத்தை  நமக்கு தோன்றவைத்து விடுவாளோ என்றும் தோன்ற, இவள் என்னையே எனக்கு எதிராய் திருப்புகிறாள் என்று தானாய் ஒரு முடிவிற்கு வந்துவிட்டான்..

அதன் பலன்… அவள் சாதாரணமாய் எது சொன்னாலும், தான் வீட்டை விட்டு வெளிவந்தது தவறு என்பதுபோல் பேசுகிறாள் என்பதாய் பட, ஒன்றும் மௌனம் சாதித்தான் இல்லை கோவமாய் ஏதாவது பதில் பேசினான்..

மதுபாலாவிற்கு ஓரளவு அவனது எண்ணங்கள் புரிந்து முதலில் அமைதியாகவே தான் இருந்தாள்.. மதியம் வரைக்கும் பொறுத்து பொறுத்துப் பார்த்தவள்         

பின் முடிவாய்  “ரிஷி உனக்கு இங்க இருக்கப்  பிடிக்கலையா.. தாராளாம  கிளம்பலாம்.. அவ்வளோ கஷ்டப்பட்டு எல்லாம் இங்க இருக்கவேணாம்.. உனக்கும் டென்சன் ஆகி என் மூடும் ஸ்பாயில் ஆகுது…” என்று பொறுமையாய் தான் சொன்னாள்..

ஆனால் ரிஷிநித்யனுக்கோ இன்னதென்றே சொல்ல முடியாத ஒரு எரிச்சல் ஒரு கடுப்பு உள்ளே கனன்று கொண்டே இருந்தது.. ‘இவளா வான்னு கூப்பிட்டா இப்போ இவளா கிளம்புன்னு சொல்றா…’ என்ற எண்ணம் அவனுள் முளைக்க,

“உனக்கெல்லாம் மரியாதைன்னா என்னன்னே தெரியாதா???” என்று கத்திவிட்டான்.

‘எங்க வந்து என்ன பேச்சு பேசுறான்…..’ என்று அவளுக்கும் தோன்ற, பார்வையில் சிறு அதிர்வைக் காட்டியவள்,

“ரிஷி…” என்று மட்டும் சொல்லி அவனைப் பார்க்க,

“என்ன என்ன பாக்குற?? நானும் பார்த்திட்டு தான் இருக்கேன் கேம்ப்ல ஒருமாதிரி இருந்த.. அடுத்து நீயாதான் உன் வீட்டுக்கு கூப்பிட்ட.. சரின்னு தான் நானும் வந்தேன்.. ஆனா இப்போ கொஞ்சம் கூட நீ சரியா ட்ரீட் பண்ணலை… அதுசரி..” என்று எதுவோ சொல்ல வந்தவன், வேகமாய் வார்த்தைகளை விழுங்க,

“என்ன?? என்ன சொல்ல வந்த ரிஷி?? டெல் மீ.. என்ன சொல்ல வந்த…??” என்று மதுபாலா அவனை நோக்கி வந்தாள்..

“நான் ஒண்ணும் சொல்ல வரல.. உடனே அதுக்கும் நீயா ஒரு கற்பனை பண்ணாத.. நான் இங்க வந்தே இருக்க கூடாது.. வந்ததுல இருந்து நானும் பார்த்திட்டேன் நான் வீட்டை விட்டு வந்தது தப்புங்கிறது போலவே நீ பேசுற.. என்னை என்கரேஜ் பண்ண வேணாம்.. ஆனா இப்படி பேசாம இருந்தாலே போதும்…” என்று தன்னிலை விளக்கமாய் அவன் சொல்ல,

‘என்ன??? நான் எப்போ இவன் வீட்டை விட்டு வந்ததை தப்புன்னு பேசினேன்…’ என்று கொஞ்சம் யோசித்துத் தான் நின்றாள்..

‘ஒருவேளை அவனுக்கே அது தப்புன்னு படுதோ…’ என்று தோன்ற, கொஞ்ச நேரம் அமைதியாய் அவனைப் பார்த்தவள்,

“இப்படி வந்து உட்கார்…” என்று சொல்ல,

“ம்ம்ச்….” என்று ஒரு சலிப்பை வெளிப்படுத்தியவன் அப்படியே நிற்க,

“சொல்றேன்ல வா ரிஷி…” என்று மதுபாலா கொஞ்சம் அழுத்தி சொல்ல,

“என்ன…” என்று கடுப்பாய் கேட்டபடி வந்து அமர்ந்தான்..

“இங்க பாரு ரிஷி… உன்னை நான் வீட்டுக்கு இன்வைட் பண்ணது உன்னை மரியாதையில்லாம நடத்தணும்னு இல்லை. எனக்கு அப்படி யாரையும் நடத்தணும்னு அவசியமும் இல்லை.. தென் இன்னொரு விஷயம் நீ உங்க வீட்டை விட்டு வந்தது அது முழுக்க முழுக்க உன்னோட விருப்பம்.. அதுல நான் சொல்றதுக்கு எதுவுமே இல்லை..

இப்போவரைக்கும் அது தப்புன்னோ சரின்னோ நான் சொன்னதேயில்லை.. நம்ம மனசுல என்ன தோணுதோ அதுதான் சில நேரம் நம்ம கண்ணுலயும் படும்..” என்று மதுபாலா பொறுமையாகவே சொல்ல,

“ம்ம் அப்போ நான் நினைக்கிறேனா?? நான் கிளம்பி வந்தது தப்புன்னு…” என்று ரிஷி கேட்க,

சாய்ந்து அமர்ந்திருந்தவள், இருவருக்கும் நடுவில் இருந்த மேஜையில் கைவைத்து அதனை தன் கன்னத்திலும் பொருத்திக்கொண்டாள்.

“நீ நினைக்கிறது எல்லாம் எனக்கெப்படி தெரியும் ரிஷி???” என்றவள், “சரி சொல்லு.. நான் யார் உனக்கு??” என்று ஒரு கேள்வியை முன்னே வைக்க,

‘இதென்ன கேள்வி…’ என்பதுபோல் பார்த்தான்..

“சொல்லு ரிஷி.. நான் யார் உனக்கு?? நீ இப்போ என்னோட கெஸ்ட்.. கேம்ப்ல உன்னை பார்த்து நான் கெஸ் பண்ண வரைக்கும் உன்கிட்ட தப்பா எதுவும் தெரியலை.. சம்திங் நீ குழம்பிட்டு இருக்கன்னு நினைச்சேன்.. அதேபோல என் வீட்டுக்கு உன்னை இன்வைட் பண்ணது ஒரு டைம்லி ஹெல்ப் அப்படின்னுலாம் இல்லை..

எனக்கு அந்த நேரத்துல உன்னை இன்வைட் பண்ணனும்னு தோணிச்சு.. சோ பண்ணேன்.. ஓ தோணினா நீ யாரை வேணா இன்வைட் பண்ணுவியான்னு கேட்கலாம்.. ஆனா எனக்கு இதுவரைக்கும் யாரையும் இப்படி இன்வைட் பண்ண தோணினதில்ல..இனியும் இப்படி பண்ணுவேனா தெரியாது.

நீ மட்டும் என்ன ஸ்பெசல் அப்படின்னும் கேட்கலாம்.. ஆனா அதுக்கான பதிலும் என்கிட்ட இல்ல.. இப்போவரைக்கும் உன்மேல கோவமோ இல்ல வேறெதுவுமோ எனக்கில்ல.. ஆனா நீ இங்க வந்து இன்னும் டிஸ்டர்ப்பா பீல் பண்றன்னு இப்போ தோணுது… அது என்னாலையா இல்ல வேறெதுவுமா அப்படின்னும் எனக்கும் தெரியாது…

சோ இப்போ சொல்லு.. நான் யார் உனக்கு?? ஏன் இவ்வளோ கோபத்தை எரிச்சலை என்கிட்ட காட்டுற…??” என்று சொன்னவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் ரிஷி..

‘யாரிவள்….’ இதனை தானே வந்த முதல் நாள் இருந்து அவ்வளவு ஏன் அவளைப் பார்த்த முதல் நாள் இருந்து தனக்குள்ளே கேட்டுக்கொண்டு இருக்கிறான்..

இவளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்.. பார்த்த நொடியே மனதில் ஒரு பிரமிப்பு.. பின் பழகும் வாய்ப்பு கிடைக்கையில் அவளைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம்.. அறிந்துகொண்ட பிறகோ எப்படி இவள் இப்படி இருக்கிறாள் என்ற ஆச்சர்யம்..

அவள் அழைத்தாள் என்று யோசிக்காமல் வந்துவிட்டான்.. ஆனால் வந்த இடத்தில் அவன் மனம் குழம்பத் தொடங்கியது.. காரணம் அவன் வளர்ந்த விதம்..

சில கட்டுதிட்டங்களை நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் போது இருக்கும் சுகம், பிறர் நமக்கு அதையே சொல்கையில் அத்தனை இனிப்பதில்லை.. ஆனால் மதுபாலாவும் ரிஷிக்கு அப்படி எதுவும் கட்டுதிட்டங்கள் விதிக்கவில்லை.. உனக்கு எப்படி இருக்கவேண்டுமோ இரு என்பதுபோல் தான் அவள் இருக்கிறாள்..

ஆனால் ரிஷிக்கோ அவளின் ஒவ்வொரு செய்கையும் எதுவோ ஒருவிதத்தில் அவன் வீட்டினரை நினைவு படுத்த கடுப்பாய் இருந்தது… பத்தி சொல்லாமல் அவளைப் பார்க்க, அவள் அமர்ந்திருந்து அவனைப் பார்க்கும் விதம் அவனுள்ளே என்னவோ செய்தது..

பதில் வாங்கும் பார்வையா?? இல்லை பதிலை மறக்கடிக்கும் பார்வையா?? அவனுக்குப் புரியவில்லை..

மௌனமாகவே இருந்தான்.. அவன் மனமோ ‘யாரிவள் எனக்கு???’ என்ற கேள்வியை ஓயாது ஜபித்துக்கொண்டு இருக்க, அவனால் எந்த ஒரு விடைக்கும் வர முடியவில்லை..

அவனது முகத்தில் என்ன கண்டாளோ, “ஹ்ம்ம் பதில் சொல்ல தெரியலைல… இப்படித்தான் ரிஷி லைப்ல நிறைய கேள்விகள் இருக்கும் பதிலே தெரியாம?? அதுக்கான பெஸ்ட் எக்ஸாம்பில் என்னோட லைப்.. ஆனா நான் எந்த கேள்விக்கும் பதில் தேடல.. ஜஸ்ட் எனக்கு பிடிச்சதுபோல இருக்கேன் அவ்வளோதான்..

நீயும் அதுக்குதான் ட்ரை பண்றன்னு தெரியுது.. சோ இங்க இருக்கிற இந்த டைம்ம கொஞ்சம் நல்ல விதமா ஸ்பென்ட் பண்ணு.. உனக்கு நீயே ரிலாக்ஸ் பண்ணிக்கோ.. குழப்பங்கள் எல்லாத்தையும் தூக்கி போடு…” என்றவளின் குரலில் கண்டிப்பாய் அவன் சரியென்று சொல்லும் நிலை தான்…

“ம்ம்ம்..” என்றுமட்டும் சொன்னவன் எழுந்து அறைக்குள் சென்றுவிட, மதுபாலா கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தவள் எழுந்து தன் வேலைகளை பார்க்கப்  போனாள்.

மதுபாலாவிற்கு இப்படி யாரிடமும் பொறுமையாய் பேசி எல்லாம் பழக்கமே இல்லை. முதலில் அவளுக்கு இப்படி பேசவும் யாருமில்லை.. ஆனால் ரிஷி அவளிடம் இப்படியெல்லாம் நடந்துகொள்ளவும் அவளுக்கே ஒருமாதிரி தான் இருந்தது. ஒருவேளை தானாய் அவனை அழைத்ததினால் எதுவும் அவன் மனதில் ஒரு மட்டமான எண்ணம் தன்னைப் பற்றி வந்துவிட்டதோ என்று கூட அவளுக்குத் தோன்றவும் தான்

‘நான் யார் உனக்கு??’ என்று கேட்டாள்..

அதே கேள்வி அறைக்குள் சென்றவனுக்கும் வண்டாய் குடைந்து கொண்டு இருந்தது.

கண்களை மூடி கட்டியில் விழுந்தவனுக்கு மதுபாலா பேசியதெல்லாம் மீண்டும் மனதில் ஓட, கடைசியில் அவள் சொன்னது நினைவில் வந்தது.. கொஞ்சம் மனதை கட்டுக்குள் வைத்தான்.. நிதானமாக சிந்திக்கத் தொடங்கினான்..

அப்படி சிந்தித்ததில் மதுபாலாவின் மொத்த பேச்சின் சாராம்சம் இது தான் என்று நன்கு புரிந்தது..

‘நான் உனக்கு யார்?? நீ எனக்கு யார்… இன்று நீ இங்கே.. நாளை எங்கேயோ.. நானும் அப்படியே.. அப்படியிருக்கையில் ஏன் இத்தனை கோவம் குழப்பம்.. இருப்பதை மகிழ்வாய் ஏற்றுகொள்ள.. இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாய் ஏற்றுகொள். பிறரையும் முடிந்தளவு சந்தோசமாய் வைத்திரு.. அவ்வளவே..’

இது தான் அவள் சொல்லவந்ததும்.. அவள் வாழ்ந்துகொண்டு இருக்கும் விதமும் என்று அந்த நொடி தான் அவனுக்கு நன்றாய் புரிந்தது..

இது அவனுக்கும் மதுபாலாவிற்கும் மட்டுமல்ல.. அனைவருக்குமே பொருந்தும்.. அதை உணர்ந்துகொண்டால் மலை போல் இருக்கும் பிரச்சனை கூட மடுவாய் தெரியும்.. யாரிடமும் துவேசம் பாராட்ட மனம் வராது.

ரிஷிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் மனம் லேசாவது போல் உணர,  “ச்சே இப்படியா சம்பந்தமே இல்லாம அவக்கிட்ட கத்துறது.. லூசுடா ரிஷி நீ.. எப்படி பீகேவ் பண்றதுன்னு தெரியலையா உனக்கு…” என்று தனக்கு தானே திட்டிக்கொண்டவன்

‘மதுபிக்கிட்ட ஒரு சாரியாவது கேட்கணும்…’ என்றெண்ணி அறையை விட்டு வெளியே போகும் வேளை,

சிலீர் என்று எதுவோ கண்ணாடி பாத்திரம் உடையும் சத்தமும், அதனை ஒட்டி மதுபாலாவின் ‘அம்மா..’ என்ற மெல்லிய அலறல் சத்தமும் கேட்க,

“மதுபி.. என்னாச்சு…” என்று வேகமாய் சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடினான்..

சமயலறையில் தான் மதுபாலா இருந்தாள்.. அவளது வலக்கையில் மோதிர விரலில் மேலிருந்து கீழாய் ரத்தம் பொங்கி வழிந்துகொண்டு இருக்க, கீழே ஒரு கண்ணாடி பவுல் விழுந்து உடைந்து கிடந்தது..

பவுல் விழுந்ததில், கண்ணாடி துண்டு சிரதியத்தில் அவள் காலிலும் கொஞ்சம் ரத்த துளிகள் எட்டிப்பார்க்க,

“ஹேய் என்னாச்சு…” என்று ரிஷி வேகமாய் சமையலறை உள்ளே போக விளைய,

“ரிஷி நோ நோ.. கீழ ஃபுல்லா கண்ணாடி…” என்று அவனை விட பதறி மதுபாலா சொல்ல,

“நீ.. நீ பார்த்து எதுவும் பண்ண வேண்டியது தானே…” என்றவன், முதலில் அவளை பாதுகாப்பாய் சமலையறை விட்டு வெளியே அழைத்துவர முயற்சிக்க,

“வேணாம் நானே வந்துப்பேன்.. நீ இங்க வராத ரிஷி…” என்று அவனைத் தடுக்க,

“ம்ம்ச்.. நான் சொல்றத கேட்பியா மாட்டியா…” என்று கத்தியவன்,

“இப்படி வா.. என் கை பிடி…” என்று சொல்லி அவளை கண்ணாடி துண்டுகள் இல்லாத பக்கமாய் கை பிடித்து மெல்லமாய் இழுக்க, அவளும் பார்த்து பார்த்து எட்டு வைத்து வந்தாலும், எங்கோ சிதறி விழுந்திருந்த கண்ணுக்கே தெரியாத ஒரு சிறு கண்ணாடி சில் அவள் காலில் முத்தமிட,

“ஸ்…” என்று மதுபாலா வழியில் முகத்தை சுருக்க,

“என்னாச்சு…” என்றவன், வேகமாய் அவளை அப்படியே இரு கைகளிலும் தூக்கி ஹாலிற்கு கொண்டு வந்துவிட்டான்..

“ரிஷி என்ன பண்ற???” என்று வழியிலும், ஒருவித சங்கோஜத்திலும் வினவ,

அவனுக்கோ அவள் கைகளில் வழியும் ரத்தமும், காலில் இருக்கும் கண்ணாடி துண்டுகளும் மட்டுமே நினைவில் இருக்க, வேகமாய் அவளை திவானில் கிடத்தியவன்,

“பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எங்க இருக்கு…” என்று கேட்டபடி பார்வையை அங்கும் இங்கும் ஓட்ட,

“அந்த ஷெல்ப்ல…” என்று சொல்லி முடிப்பதற்குள் ரிஷி அங்கே சென்று பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வந்தவன், வேகமாய் பிரிட்ஜில் இருந்த ஐஸ் கட்டிகளையும், டைனிங் டேபிள் மீதிருந்த ஒரு கின்னத்தையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வந்தவன், அடுத்து அவனுக்குத் தெரிந்த வகையில் முதலுதவி செய்து கையில் காலில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்து மருந்து வைத்து கட்டும் போட்டுவிட,

மதுபாலாவிற்கு ஒன்றுமே பேசமுடியவில்லை.. வலிக்கிறது என்றுகூட அவளால் சொல்ல முடியவில்லை.. அவன் ஒருவித பதற்றத்தோடும், அவளுக்கு வலிக்குமோ என்ற பயத்தோடும் அனைத்தையும் செய்ய, இமைக்காமல் தான் அனைத்தையும் பார்த்துகொண்டு இருந்தாள்..

அவளுக்குத் தெரிந்து அவளது அம்மாவின் ஸ்பரிசத்திற்கு பிறகு, அக்கறையாய் அன்பாய் அவள் உணரும் ஸ்பரிசம் ரிஷியினுடையது.. அவளுக்கு அடிப்பட்டதற்கு அவளே இத்தனை பதறுவாளா  என்றால் இல்லை தான்..

ஆனால் அவன் கண்களில் தெரியும் பதற்றம்.. கடைசியாய் அவள் அம்மா இருக்கையில் கீழே விழுந்து காலில் முட்டி பேந்து வந்தபோது அவள் அம்மாவின் கண்களில் தெரிந்த பதற்றம்..

அவளுக்கு வலிக்குமோ என்று நினைத்து நினைத்து அவள் காலில் குத்தியிருந்த சிறு கண்ணாடித் துண்டை மெதுவாய் ரிஷி எடுக்கையில் அவன் தொடுவுணர்வில் தெரிந்த ஒரு இதம், அவள் அம்மாவின் கரங்களில் அவள் உணர்ந்த இதம்..

பல ஆண்டுகள் ஆனது.. அதன் பிறகு யாரும் அவளை ஆதரவாய் தோள் சாய்த்ததும் இல்லை.. ஆசிர்வதிக்க என்று தலை தொட்டதும் கூட இல்லை.. அப்படியான உறவுகள் யாருமே இல்லை..

ஆனால் இன்று.. ஒரு சின்ன காயம் என்றதும் ரிஷி பதறி அடித்து ஓடிவந்து எல்லாம் செய்ய, என்னவோபோல் ஆனது அவளுக்கு..

‘யாருமேயில்லைன்னா என்ன?? எனக்கு நானிருக்கேன்…’ என்று சொல்லிக்கொண்டிருந்தவள், முதல்முறையாய் பதில் சொல்ல முடியாது படுத்திருந்தாள்..

கையில் வழிந்த ரத்தத்தை சுத்தம் செய்தவன், மருந்திட்டு கட்டுபோட போகும் வேளையில்  “மதுபி இந்த ரிங் கலட்டிடவா?? உனக்கு இன்னும் பெய்ன்னா இருக்கும்…” என்று சொல்ல, அவளோ பதிலே சொல்லாமல் பார்திருந்தாள்.

“மதுபி…” என்று அவள் தோளைத் தொட்டு உலுக்க,

“ஹா ரிஷி…” என்று இமைகளை வேகமாய் அடித்து அவனைப் பார்க்க,

“இது இந்த ரிங்.. கலட்டிடவா…” என்று ரிஷி கேட்டதும், “நோ நோ…” என்றவள் வேகமாய் எழுந்து அமர்ந்துவிட,

‘அயோ இவளுக்கு ரொம்ப வலியோ…’ என்று ரிஷி மீண்டும் பதற்றமாய் பார்க்க, “இது.. என் அம்மா ரிங்.. இதுவரை நான் கலட்டினதில்லை…” என்று கம்மிய குரலில் மதுபாலா சொல்ல,

திவானின் கீழே அவள் காலடியில் அமர்ந்தவன், “நீ.. நீ செண்டிமெண்ட் எல்லாம் பார்ப்பியா??” என்றான் ஆச்சர்யமாய்..

அவனைப் பொருத்தவரைக்கும் இந்த மாதிரி விசயங்களை எல்லாம் மதுபாலா பெரிதாய் எடுக்கமாட்டாள் என்ற ஒரு எண்ணம்.. அதான் இப்படி கேட்டுவிட, அவளோ,

“ஏன்?? ஏன் ரிஷி தனியா இருக்க பொண்ணுன்னா செண்டிமெண்ட் எல்லாம் பார்க்க கூடாதா…??” என்று கேட்டவளின் பார்வையில் ‘நீயா என்னை இப்படிக் கேட்டது…’ என்ற அர்த்தம் இருக்க..

“ஹே மதுபி.. நான்.. நான் தப்பா சொல்லல.. பட் இந்த ரிங்….” என்றவன் தயக்கமாய் அவளது முகத்தைப் பார்க்க,

“இதுவரைக்கும் இதை நான் கலட்டி வச்சது இல்லை ரிஷி..” என்று அவள் மறுபடியும் சொல்ல,

“கலட்டி வைன்னு யார் சொன்னா…??” என்றவன், அவள் காயத்தில் பட்டு வலிக்காதபடி மெதுவாய் அவளது மோதிரத்தை கலட்டி இடக்கை மோதிர விரலில் அணிவித்தவன்,

“இவ்வளோதான் சிம்பிள்…” என்று சொல்லிப் பார்க்க, அவளுள் மொத்தமாய் ஒரு நடுக்கம் ஏற்பட்டது அவன் உணர உணர வாய்ப்பில்லை..

ஆனால் அவள் உணர்ந்தாளே….

திகைத்துப் போய் ரிஷியைப் பார்க்க, அவனோ மிக மிக பொறுப்பை அவள் விரலில் கட்டுப் போட்டவன்,

“ஜஸ்ட் ஒரு டென் மினிட்ஸ் கிட்சன் கிளீன் பண்ணிட்டு வந்திடுறேன் மதுபி.. தென் ஹாஸ்பிட்டல் போலாம்…” என்றபடி நகரப் போக,

“வேணாம்…” என்ற அவளது பதில் அப்படியே அவனை நிறுத்தி வைத்தது..

“ஏன் வேணாம்?? என்ன வேணாம்??”

“இல்ல அது….”

“நான் கிட்சன் கிளீன் பண்ண கூடாதா?? எல்லா நேரமும் நான் கெஸ்ட்டாவே இருக்க முடியாது மதுபி…”

“இல்ல அது சொல்லல.. ஹாஸ்பிட்டல் வேணாம்…” என்றவள் அவனைத் தயங்கிப் பார்க்க,

“ஏன்??” என்றான் புரியாமல்..

“அது.. வெளிய போறப்போ உன்னை யாரும் பார்த்திட்டா???!!!” என்று மதுபாலா மெதுவாய் சொல்ல, ரிஷியின் கண்கள் விரிந்து அவளைப் பார்க்க,

“மருந்து போட்டிருக்குல்ல சோ சரியாகிடும்…” என்று மதுபாலா மெல்ல எழ  முயல,

“மெதுவா மதுபி…” என்றவன் அவளைத் தாங்கிப் பிடிக்க, “ரூமுக்கு போகனுமா???” என,

“இல்ல…” என்றவள் பின் “ஆமா…” என்று சொல்ல,

“ம்ம் இப்போ நீ என்ன குழம்புற??” என்றபடி அவளை இரு கைகளில் தூக்கியவன், அவளது அறை நோக்கி செல்ல,

மதுபாலா ‘நான்… நான் குழம்புறேனா…??’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள்.

ரிஷி மதுபாலாவின் வீட்டிற்கு வந்ததில் இருந்து அப்போது தான் முதல் முறையாய் அவளின் அறைக்குள் நுழைகிறான்.. அவன் இருக்கும் அறையைவிட பெரியது… அறையை தன் பார்வையால் அளந்தபடி அவளை சுமந்துகொண்டு ரிஷி நடக்க, அவளுக்கோ அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு யுகமாய் கழிவது போல் இருந்தது.

 

 

                              

Advertisement