Advertisement

மது – 5

கந்தஷஷ்டிக் கவசம் வீட்டை நிறைத்து ஒலித்துக்கொண்டு இருக்க, சாம்பிராணி மணம் நாசியைத் துளைக்க, ரிஷி கண்களைத் திறக்க முடியாமல் போர்வையில் இருந்து முகத்தை மட்டும் வெளி நீட்டிப் பார்க்க, அவனது அறை இருட்டாய் இருந்தது..

அறையில் தான் இருக்கிறோமா இல்லை வேறெங்கிலும் இருக்கிறோமா என்ற சந்தேகம் வர, வேகமாய் எழுந்து அமர்ந்தவன், கட்டிலின் அருகில் இருந்த ஸ்விட்சை தட்டவும், அறையில் வெளிச்சம் பரவ, இன்னும் சத்தமாய் கந்த சஷ்டிக் கவசம் கேட்க,

“என்ன பண்றா இவ???” என்று தனக்கு தானே கேட்டபடி அறையில் இருந்து வெளி வந்தான்..

ஆனால் அந்த வீட்டில் மதுபாலா இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாமல் போக, ‘எங்க போனா???’ என்று அடுத்த கேள்விக்கு அவன் மனம் தாவி அவளைத் தேடிக்கொண்டு செல்ல,

“மதுபி…..” என்ற அழைப்போடு ஹாலைத் தாண்டி கொஞ்சம் உள்ளே செல்ல, அவளோ பூஜையறையில் இருந்தாள்..

கிட்டத்தட்ட பத்து பதினைத்து மாடிகள் கொண்ட அப்பார்ட்மெண்ட்டில் ஐந்தாவது தளத்தில் இருந்தது மதுபாலாவின் வீடு… அந்த அப்பார்ட்மெண்டில் இருந்த அனைத்து வீடுகளுமே வசதியானவர்கள் மட்டுமே குடியேறும் வீடுகள்..

மதுபாலாவின் பிளாட்டோ மூன்று படுக்கையறைகள், பெரிய ஹால்.. சமலையறை, பூஜையறை என்று மிக மிக வசதியாகவே இருந்தது.

ரிஷி நித்யன் அவளைத் தேடிக்கொண்டு பூஜையறை பக்கம் போக, வேகமாய் உள்ளிருந்தே

“ஹேய் ஹேய் ரிஷி குளிக்காம உள்ள வராத…” என்று மதுபாலாவின் குரல் அவனை அப்படியே வெளியேவே நிற்க வைக்க, அவனோ அவளை திகைத்துப் போய் பார்த்தான்..

அடர் சிவப்பு நிற சேலை கட்டி, எண்ணெய் பச்சை நிற ப்ளவ்ஸ் அணிந்து. எப்போதுமே அவிழ்த்து விட்டிருக்கும் கூந்தலை கட்டை குட்டையாய் ஜடை பின்னி, அதிலும் கொஞ்சம் பூ வேறு வைத்து, நெற்றியின் நடுவே குங்குமம் வேறு வைத்து, அதற்கு மேலே லேசாய் திருநீறு கீற்று பளிச்சிட, முகத்தில் அங்கங்கே வேர்வை துளிகள் வேறு அவளுக்கு இன்னும் அழகு சேர்க்க,  

ரிஷிக்கு நேற்று வரை இருந்த மதுபாலா கண்ணுக்குத் தெரியாமல், இப்போது பார்க்கையில் அப்படியே அவர்கள் வீட்டில் ஏதாவது ஒரு பூஜை என்றால் அவனது அம்மா அண்ணி எல்லாம் எப்படி இருப்பார்களோ அப்படி குடும்பப் பாங்காய் தெரிய,

“மதுபி….” என்று ஆச்சர்யத்தில் வாய் பிளந்தவன், அவளை மேலும் கீழுமாய் பார்க்க,

“ஏய் என்ன??? எந்திரிச்சு அப்படியே வந்துட்டியா?? போ போ குளிச்சிட்டு தான் இங்கெல்லாம் வரணும்..” என்று அவள் மேலே மொய்க்கும் அவனது பார்வையை தவிர்த்தபடி சமையலறை நோக்கி சென்றாள்..

ஆனால் அவனோ விடாது அவள் பின்னேயே போய், “என்ன இதெல்லாம்… நேத்து வர அப்படியிருந்த இப்போ இப்படி??” என்று கேட்க,

“நேத்து எப்படி இருந்தேன்..??” என்று அடுப்படியில் நின்று திரும்பிப்பார்க்க, அவளது பக்கவாட்டு தோற்றம் அவனை என்னவோ செய்தது..

“இல்ல அது….” என்று இழுக்க,

“இனிக்கு க்ருத்திகை.. எப்பவும் கும்பிடுவேன்…” என்று சொல்லி, சாமிக்கு படிக்கவென்று கிண்டி வைத்திருந்த கேசரியை எடுத்துக்கொண்டு மீண்டும் பூஜையறை நோக்கி மதுபாலா செல்ல,

“அட கேசரி…” என்று எட்டிப் பார்த்தவனை முறைத்தபடி நடந்தாள்..

“இதெல்லாம் ரொம்ப ஓவர் மதுபி.. உன் கெஸ்ட்ட இப்படியா ட்ரீட் பண்ணறது.. நேத்து தான் வந்தேன்.. இப்போ முறைக்கிற.. என் அம்மா போல பண்ற நீ…” என்றவனது பேச்சில் அப்படியே நின்றவள்,

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பூஜையறைக்குள் சென்றுவிட்டாள்..

“அடேங்கப்பா ரொம்பத்தான்…” என்றபடி ரிஷி சென்று குளித்துவிட்டு வர, அப்போதும் அவள் அங்கே சாமி கும்பிட்டுக்கொண்டு தான் இருந்தாள்..

வெறும் ஷார்ட்ஸும் டீ ஷர்ட்டும் அணிந்து வந்தவனை பார்த்தவள், பின் தீபாராதனைக் காட்டி அவனுக்கு முன்னே நீட்ட, அவன் வீட்டில் சிறு வயதில் இருந்து பழகிய பழக்கமாய்,

சிறு மந்திர முனுமுனுப்பு செய்து, கையில் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டான்.

அவன் செய்ததை பார்த்து அவளுக்குச் சிரிப்பு வந்திட, “என்ன சிரிப்பு??” என்று கேட்டவனுக்கு பதில் சொல்லாமல், அங்கே சுவாமி படங்களுக்கு முன் விழுந்து கும்பிட்டு, பின்னே வெளி வர,

“மதுபி ஏன் சிரிச்ச??” என்றபடி அவனும் வர,

“இல்ல… நீயெல்லாம் சுவிஸ் போய் ஒன் மன்த் கூட இருக்கமாட்டன்னு தோணிச்சு அதான் சிரிச்சேன்…” என்றவள் இன்னும் சிரிக்க,

“ம்ம்ச் ஏன் ஏன் அப்படி தோணுது???” என்றவன் அப்படியே டைனிங் டேபிளில் அமர, அவனுக்கு ஒரு பவுலில் கேசரி வைத்துக் கொடுத்தவள் தானும் எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள்..

“ம்ம் உனக்கு சமையல் நல்லா வருமா?? செமையா இருக்கு கேசரி.. எங்க வீட்ல என் அம்மா லேசா ஜாதிக்காய் பவுடர் போடுவாங்க…” என்று சொல்லியபடி ரிஷி உண்ண,

மதுபாலா அவனை உண்ணாமல் பார்த்தவள் “இதோ.. இதுக்குதான் சொன்னேன்.. உன்னால் சுவிஸ்ல இருக்க முடியாதுன்னு.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் அம்மா பண்றது போல பண்றன்னு சொன்ன.. இப்போ கேசரில அம்மா கைமணம் பாக்குற.. இப்போதானே ஸ்டார்ட் ஆகிருக்கு போக போக வீட்ல இருக்க எல்லாரையும் தேடுவ..” என்று மதுபாலா சொல்லிக்கொண்டே போக,

“வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் இட்…” என்று ரிஷி கத்தியவன்,  “கேசரியும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்…” என்று ஸ்பூனை தூக்கி எறிந்துவிட்டு வேகமாய் அவனது அறைக்குள் சென்று கதவை அடைத்தும் கொள்ள,

‘அட.. உண்மையை சொன்னா இப்படி பண்றான்???’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள்,  

“ஹ்ம்ம்…” என்று ஒரு பெருமூச்சு விட்டு அறைந்து சாத்திய அந்த அறையின் கதவுகளைப் பார்த்துக்கொண்டே கேசரியை விழுங்கினாள்..

முதல் நாள் இருவரும் வீட்டிற்கு வந்துசேர்கையில் மாலை எழு மணி.. மதுபாலாவின் வீட்டிற்கு தான் செல்கிறோம் என்று முடிவான பின்னே ரிஷி மனதில் ஓர் அமைதி..

மதுபாலாவிற்குமே தானா இப்படி ஒருவரை வழிய வீட்டிற்கு அழைத்தது என்று இருந்தது.. அதிலும் ஒரு ஆடவனை.. அதிலும் பார்க்க அத்தனை ஸ்மார்ட்டாக இருக்கும் ஒருவனை.. அவன் என்னை என்ன நினைப்பான் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை..

அந்த நேரத்தில் அவனுக்கு எங்கே போகவென்று தெரியவில்லை.. அவள் வீட்டிற்கு இதுவரை யாருமே வந்ததில்லை. சரி மூன்று நாட்கள் தான் இருந்துவிட்டு போகட்டுமே என்று அழைத்துவிட்டாள். அவனிடம் தோன்றிய சிறு தயக்கம் கூட அவளுக்கு இல்லை..

மௌனமாய் கார் ஓட்டியவனிடம் “உனக்கு எதுவும் திங்க்ஸ் தேவைப்பட்டா இப்போவே வாங்கிட்டு போயிடலாம்…” என,

“எனக்கென்ன நத்திங்.. ட்ரெஸ் இருக்கு.. சாப்பாடு நீ எப்படியும் கொடுத்திடுவ சோ எதுவும் வேணாம்…” என்றபடி காரை செலுத்தியவனை, பார்த்து லேசாய் சிரித்தவள்,

“இதையும் தாண்டி எத்தனையோ இருக்கு.. நீ கார்ல இரு நான் வாங்கிட்டு வர்றேன்…” என்று சொல்லி ஒரு கடையில் வாசலில் காரை நிறுத்த சொன்னாள்.

பெரிய சூப்பர் மார்க்கட் தான் அது.. அவளோடு தானும் இறங்கிச் செல்லவே நினைத்தான்.. ஆனாலும் மதுபாலா வம்படியாய் மறுத்துவிட்டாள்.

போனவள் இரு இருபது நிமிடங்களில் வெளி வர, அவள் கையில் இருந்த பையை பின்னே சீட்டில் வைத்துவிட்டு “போலாமா..” என,

“ம்ம் என்ன வாங்கினேன்னு கேட்க மாட்டியா??” என்றபடி சீட் பெல்டை போட்டுக்கொண்டாள்..

“என்ன வாங்கின??”

“ஜஸ்ட் உனக்கு பிரஸ் பேஸ்ட்… சோப் ஷாம்பூ ஷேவிங் லோசன்… பாடி ஸ்ப்ரே இப்படி… கொஞ்சம் உன்னை நீயே அழகு பண்ணிக்க.. என் வீட்ல எனக்கான திங்க்ஸ் தானே இருக்கும்..” என்றவளை பார்த்து

“இவள் ஸ்பெஷல் இல்லை வித்தியாசமானவள்…” என்று தோன்றியது அவனுக்கு.. 

“ஹ்ம்ம்….” என்று தலையை மட்டும் ஆட்டியவன் “எவ்வளோ ஆச்சு??” என, வேகமாய் அவனை திரும்பிப் பார்த்தவள்,

“த்ரீ டேஸ் ஸ்டே பண்ண எவ்வளோ பே பண்ண போற???” என்று விழிகளை உருட்டி கேட்க,

“ஹேய் இது….” என்று என்னவோ சொல்ல வந்தவன் “ஓ… காட்… தெரியாம ஒரு ராட்சசி கிட்ட வந்து மாட்டிக்கிட்டேனே…..” என்று சொல்லி மெல்லியதாய் ஒரு புன்னகை சிந்தி காரை செலுத்த,

“சொல்லிக்கோ சொல்லிக்கோ..” என்றவள் வீட்டிற்கு சென்று அவனுக்கென்று ஒரு அறையை காட்ட, அவனோ அவனது பொருட்களை எல்லாம் அங்கே வைத்துவிட்டு வந்தவன், வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்த்தான்..

பொதுவாய் வீட்டில் ஆட்கள் கம்மி என்றால் பொருட்களும் அப்படியே இருக்கும்.. ஆனால் இங்கோ ஏகப்பட்ட பொருட்கள்.. ஒருத்திக்கு இத்தனையா என்று இருந்தது..

சோஃபா செட்டே நான்கைந்து இருந்தது.. இரண்டு இடங்களில் டைனிங் டேபிள் போட்டிருந்தாள்.. சமையலறை பக்கத்தில் பெரிதாய் ஒன்றும்.. கொஞ்சம் தள்ளி ஒரு பால்கனி அருகே சின்னதாய் கண்ணாடியில் ஆன வட்ட வடிவ டேபிள் ஒன்றும் போட்டு நிறைய விஷயங்கள் அங்கே அவனுக்கு ரசிக்ககூடியதாய் இருந்தது..

அவன் வீட்டில் இருக்கும் பொருட்கள் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டும்.. இருபத்தி எழு வருடங்களாய் அப்படியே எந்தவித மாற்றமும் இல்லாது இருக்கிறது.. சொல்லபோனால் அவனுக்கு அதுவே ஒரு அலுப்பை கொடுத்தது..

அப்படியே சுற்றிக்கொண்டே வந்தவனை கையில் ஒரு காப்பி மக்கை கொடுத்தபடி “எப்படி இருக்கு என்னோட பேலஸ்…” என்று மதுபாலா கேட்க,

“ம்ம் நைஸ்.. பட் எப்படி மெயின்டைன் பண்ற???” என்றான் காப்பியை உறிஞ்சியபடி..

“ஏன்.. நான் ஒருத்தி தானே… சோ பொழுது போகணுமே.. யூ க்னோ இந்த வீட்டுக்கு வராம ஒன் மன்த் கூட சுத்திட்டே இருந்திருக்கேன்… வீட்டை விட்டு வெளிய போகாம ஒன் வீக் கூட இருந்திருக்கேன்.. சோ எல்லாமே என் மைன்ட் செட் பொருத்தது..”

“ம்ம்… நீ ரொம்ப டிப்ரன்ட்…” என்றவன் காப்பி குடித்த மக்கை டேபிளில் வைக்க,

“யார் வாஸ் பண்ணுவா??” என்று அவனை பார்த்தாள்..

“ஓ.. சாரி.. எங்க வீட்ல ஜென்ட்ஸ் கிட்சன் பக்கமே போகமாட்டாங்க.. நானே போனாலும் விடமாட்டாங்க..” என்று ஒரு காரணம் சொல்லியபடி வேகமாய் மக்கை கழுவி வைத்தவன் முன்னே ஹாலுக்கு வர,

ஹாலில் மற்றொரு ஓரத்தில் இருந்த திவானில் படுத்தபடி கையில் ஒரு புத்தகத்தோடு இருந்தாள் மதுபாலா..

ஏதாவது பேசுவாள் என்று ரிஷி பார்த்திருக்க, அவளோ புத்தகத்தில் மூழ்கிவிட, ரிஷியோ என்னடா செய்வது என்று இருக்க, புத்தகத்தை கீழிறக்கி விழிகள் மட்டும் தெரிய,

“என்ன பண்ற போர் அடிக்கலையா???” என்று கேட்டவளை லேசாய் முறைத்தான்.

“என்ன ரிஷி முறைக்கிற??? டிவி இருக்கு பாரு.. புக்ஸ் அந்த ரூம்ல இருக்கும் வேணும்னா எடுத்து படி.. இல்லையா தூக்கம் வருதா படுத்துத் தூங்கு.. அதைவிட்டு இப்படி எவ்வளோ நேரம் சும்மா இருப்ப???” என,

“ம்ம்ம்…” என்று தலையை உருட்டியவன், எழுந்து அவனுக்குக் கொடுக்கபட்ட அறைக்குச் சென்றுவிட்டான்..

கொஞ்ச நேரம் உள்ளே பேச்சு சத்தம் கேட்டது.. சரி யாருடனோ பேசுகிறான் என்று நினைத்தவள், அடுத்து கொஞ்சம் நேரம் வாசிப்பில் கவனம் செலுத்த,

ரிஷி மீண்டும் வந்து  பொத்தென்று அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான்.. இதற்கு பேசாமல் ஏதாவது ஒரு ஹோட்டலில் கூட போய் தங்கியிருக்கலாம் போல் தோன்றியது அவனுக்கு.. என்னடா இது ஒவ்வொன்றிற்கும் இவளை எதிர்பார்த்து என்று எரிச்சல் கூட வர வந்து முழுதாய் மூன்று மணி நேரமாகவில்லை அதற்குள் எப்படியோ இருந்தது.  

அவன் வந்து அமர்ந்த சத்தத்தில் மதுபாலாவும் எழுந்து அமர, அவளைப் பார்த்தவன் உம்மென்றே இருந்தான்..

“ஹ்ம்ம் இப்போ என்னாச்சு உனக்கு?? இங்கிருந்தும் போகணும் தோணுதா…” என்றபடி தன் கேசத்தை ஒரு க்ளிப் கொண்டு அடக்கியவள், நேராக சமையலறை நோக்கி செல்ல,

‘எனக்கு பசிச்சதுன்னு இவளுக்கு எப்படி தெரியும்..’ என்று எட்டிப் பார்த்தான்.. 

சூடாக சாதமும், ரசமும், பருப்புத் துவையலும் கொஞ்ச நேரத்தில் அவன் முன்னே வந்து ஹாய் சொல்ல,

“காய்கறி எதுவுமில்ல சோ இன்னிக்கு இதுதான்…” என்றவளைப் பார்த்து,

“இதுக்கு மேல என்ன வேணும்.. ஆனா உன்ன பார்த்து சீஸ் பீட்சா.. சிக்கன் பர்கர்னு ஆர்டர் பண்ற பொண்ணுன்னு நினைச்சிட்டேன்.. ஆனா இப்படி ரசம் சாதமும் பருப்புத் துவையலும் சான்சே இல்லை…” என்று சொல்லிக்கொண்டே உண்டவனை பார்த்து சிரித்துக்கொண்டாள்..

ஆனால் இப்போதோ அவள் எதோ சொல்லிவிட்டாள் என்று ஸ்பூனை தூக்கிப் போட்டுவிட்டு இப்படி கோபமாய் அறைக்குள் சென்றவனை கண்டும் சிரிப்பு வந்தது..

“எனக்கு கெஸ்ட்ட எப்படி ட்ரீட் பண்றது தெரியலையா இல்ல அவனுக்கு எப்படி நடந்துக்கணும் தெரியலையா??” என்று யோசித்தவள்,

“வாட் எவர்….” என்று தலையை ஆட்டிக்கொண்டு, ரிஷியின் அறைக்கு வெளியே நின்று,

“ரிஷி.. நான் கொஞ்சம் திங்க்ஸ் ஷாப் பண்ணிட்டு வர்றேன்.. வந்து டோர்லாக் பண்ணிக்கோ..” என்று சத்தம் கொடுக்க,

முகத்தை உர்ரென்று வைத்தபடி வேகமாய் கதவை திறந்து வந்தவன், அவள் வெளியே போவதற்காக காத்திருக்க, அவளோ வழக்கமாய் தன் ஜீன்ஸ் டி ஷர்ட்க்கு மாறி வந்தவள்,

“சீக்கிரம் வந்திடுறேன்.. பசிச்சா கேசரி இருக்கு சாப்பிடு…” என்று சொல்லி கிளம்ப அவன் எதுவும் பேசவில்லை..

அவள் சென்றதும் கதவை அடைத்து விட்டு வந்தவன், அங்கிருந்த திவானில் சாய்ந்து அமர, அவனது மனதிற்குள்

‘யாரிவள்?? எதுக்காக இதெல்லாம் பண்றா?? நானும் அவ சொல்றதுக்கெல்லாம் ஆடிட்டு இருக்கேன்… இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவேன் தான்.. ஆனா அதுக்காக இப்படி முன்னபின்ன தெரியா ஒருத்தி வீட்ல வந்து வெக்கமே இல்லாம அவ செஞ்சு கொடுக்கிறத சாப்பிட்டிட்டு இருக்கேன்..’ என்று நினைக்கும் போதே

அவன் வீட்டில் நடைபெறும் தோரணைகள் எல்லாம் நினைவு வந்தது.. கேம்பில் இருந்த மதுபாலாவிற்கும் இப்போது வீட்டில் இருப்பவளுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.. ஆனால் கேம்பில் அவள் பார்ப்பாளா பேசமாட்டாளா என்றெல்லாம் நினைத்தவனுக்கு என்னவோ இப்போது அவளோடு அதுவும் தனியே இருக்கையில் என்னவோ எரிச்சலாக வந்தது..

“ச்சே நான் இங்க வந்தே இருக்கக்கூடாது…” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன், பூட்டியிருக்கும் யாரோ ஒருத்தியின் வீட்டில், அவள் அழைத்தாள் என்று வந்து இப்படி அவள் எப்போது சமைத்துப் போடுவாள் என்று காத்திருப்பது என்னவோபோல் இருக்க,

“அவ வர்றதுக்கு முன்னாடி நானே ஏதாவது செய்யணும்…” என்று எழுந்து சமையலறை சென்று பார்க்க,

வெறும் ரவை மட்டும் இருக்க, அதை வைத்து தான் கேசரி செய்திருப்பாள் என்று தோன்றியது.. பிரிட்ஜை திறந்து பார்த்தான்.. முட்டைகள் இருந்தது.. எடுத்து ஆம்லட் போடலாமா என்றது தோன்றிய அடுத்த நொடி கொஞ்ச நேரம் முன்பு அவள் செய்த பூஜைகள் நினைவு வந்து அதுவும் செய்யமுடியாமல் போக,

“ம்ம்ச்…” என்றபடி மீண்டும் அந்த வீட்டை சுற்றி வந்தான்..

ஒரு அறையில் அவளது.. இன்னொரு அறையில் இப்போது அவன் இருக்கிறது.. மற்றொரு அறை சும்மா மூடியிருக்க, இன்னும் அவன் அதனுள்ளே சென்று பார்க்கவில்லை..

ஆக உள்ளே சென்று பார்ப்போம் என்று உள்ளே போனால், அங்கே அந்த அறையில் சுவர் முழுவதும் புகைப் படங்கள் தான்..

நிறைய நிறைய புகைப்படங்கள்.. கிட்டத்தட்ட அவளது பதினைந்தாவது வயதில் இருந்து எடுத்திருக்கவேண்டும் என்று தெரிந்தது.. அவளோடு இருப்பது அவளது அம்மா என்றும் புரிந்தது..

முக்கால்வாசி புகைப்படங்கள் அவளும் அவள் அம்மாவும், பின் அவள் மட்டுமே தனியாய் நிறைய..  பின் மற்ற கொஞ்சத்தில் ஒருசில புதிய ஆட்கள்.. அதில் ஒன்றில் சைலேந்திரன் கூட இருந்தார்..

கடைசியாய் மதுபாலா புகைப்படம் எடுத்திருப்பது ஒரு சின்ன பூனைக்குட்டியோடு..

அனைத்தையும் பார்த்தவன் இவள் என்ன மாதிரி பெண் என்று யோசித்துக்கொண்டு நிற்க, அவன் வீட்டில் பூனையின் சத்தம் கேட்டாலே காதை மூடும் தந்தையும், வேகமாய் தண்ணீர் எடுத்து வரும் அம்மாவும் தான் நினைவு வந்தனர்..

இவளோ பூனையை கட்டி ஒட்டி முத்தமிட்டு என்று ஏகப்பட்ட புகைப்படங்கள்.. அவன் வளர்ந்த சூழலுக்கும், இப்போது அவன் கண் முன்னே இருக்கும் ஒருத்திக்கும் எத்தனை வித்தியாசம் என்று நினைத்துக்கொண்டே மீண்டும் ஒருமுறை அந்த புகைப்படங்களில் பார்வையை ஓட்டினான்..

அதில் ஒன்று மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது அவள் அன்னை இருந்தவரைக்கும் மதுபாலா குறும்பும் சிரிப்புமாய் இருந்தாள்.. புகைப்படத்திலும் கூட.. அவருக்குபின்னே அவளிடம் தெரிந்ததெல்லாம் நிமிர்வும், திடமும் தான்.. புகைப்படத்திலும் அதில் சிரிப்பில்லை..

ஆனால் அவன் கண்ட ‘மதுபி’ சத்தம் போட்டு சிரிப்பவள்.. எது சொன்னாலும் எதற்கெடுத்தாலும் சிரிப்பவள்…

இதெல்லாம் நினைக்க நினைக்க ரிஷிக்கு இன்னும் ஒருவித குழப்பம் வந்து மனதில் சூழ்ந்தது..

‘இதெல்லாம் எதுக்கு நான் நினைக்கணும்.. நாளைக்கு ஒருநாள் அடுத்து கிளம்பிடுவேன்.. அவ சொன்னதுபோல நான் எங்கயோ அவ எங்கயோ… அவ்வளோதான்..’ என்று திரும்ப திரும்ப சொல்லியபடி அந்த அறையில் இருந்து ரிஷி வெளிவர, வீட்டின் காலிங் பெல் அடித்தது..

அவள்தானா இல்லை வேறு யாருமா என்று கதவு திறக்க கொஞ்சம் தயக்கமாய் ரிஷி நிற்க, “ரிஷி…” என்று மெல்ல அவள் அழைப்பது கேட்டதும் வேகமாய் கதவைத் திறந்தான்..

“கிட்டதான் கடை.. சோ சீக்கிரமே வந்துட்டேன்…” என்றபடி உள்ளே வந்தவளை முன்னிருந்த ஆராய்ச்சி பார்வை எல்லாம் இல்லாமல் ரிஷியும் திடமாகவே எதிர்கொண்டான்..

நீ எப்படி இருந்தால் எனக்கென்ன.. நான் நாளை ஒருநாள் மட்டுமே இங்கிருப்பேன்.. உன்னாலான தாக்கம் எனக்கு எதுவும் வேண்டாம்.. இந்த மூன்று நாட்களும், நீ செய்த உதவியும் எனக்கு என்றும் மறக்காது என்ற தெளிவோடு அவளைக் காண,

“என்ன ரிஷி.. இந்த வீடு… நான்… உனக்கு அவ்வளோ பிடிக்கல போல???” என்ற அவளது கேள்வி மறுபடியும் அவனைத் திகைக்கத் தான் வைத்தது..

“என்ன ரிஷி சரியா சொன்னேனா???” என்று கேட்டவளைப் பார்த்தவன்,

“அப்படியெல்லாம் இல்லை.. ஆனா என்னவோ செட் ஆகலை…” என்றான் மெல்ல..

“ம்ம் சரி.. சாப்பிட்டுட்டு கிளம்பு.. உன்னை எங்க இறக்கி விடனுமோ சொல்லு அங்க விடுறேன்…” என்றவள் உள்ளே சென்றுவிட்டாள்..

ஆனால் அவன் எங்கே செல்வான்??? இன்னும் ஒரே ஒருநாள் தான்.. நாளைக்கு மாலை கிளம்பிடுவான்.. அதுவரைக்கும் இதுபோன்றோதொரு இடம் கிடைக்குமா என்ன??

சுயநலம் பொதுநலம் இரண்டிற்கும் ஒரே வித்தியசம் ஆட்கள் மாறுபடுகின்றனர் அவ்வளவே.. எனக்கு இது வேண்டும் என்று சொல்வது சுயநலமாய் படுவது, இது உனக்கு தேவைப்படும் நீயே வைத்துகொள் என்று பிறர் சொல்வது பொதுநலமாய் போய்விடுகிறது.. 

                 

      

             

                        

             

                                          

         

Advertisement