Advertisement

மது – 3

அத்தனாவூர்… ஏலகிரியில் இருக்கும் இன்னொரு மலை கிராமம்… இங்கே பாராக்ளைடிங் திருவிழா மிக பிரபலம்.. அந்த  திருவிழா நாட்களில் மட்டுமே அங்கே கூட்டம் இருக்கும் மற்ற நாட்களில் எல்லாம் இயல்பாய் இருக்க, இமயா குழுவினர் இரண்டாம் நாள் தங்குவதற்கு அங்கே தான் ஏற்பாடு செய்திருந்தனர்.

முதல் நாள் போட்டிங் முடித்து, உண்டுவிட்டு நேரத்தை கடத்தாமல் இங்கே வந்துவிட்டனர்.. இரண்டாம் நாள் பகல் பொழுதில் அருகே இருக்கும் ஒருசில கிராமங்களை சுற்றிப் பார்த்து, மீண்டும் அத்தனாவூர் வந்து எங்கே சுற்றி பார்த்து தங்குவதற்கு தோதான இடத்தை தேர்ந்தெடுத்து என்று அதற்கே நேரம் மாலை ஆகிவிட்டது.

மலை பிரதேசம் அல்லவா கொஞ்சம் சீக்கிரமே இருட்டத் தொடங்கிவிட, சமையல் ஆட்கள் இரவு உணவை சமைத்துக்கொண்டு இருந்தனர். ரிஷியோ அவனுக்கான டென்ட்டை சுத்தி சுத்தி வந்து பார்த்துக்கொண்டு இருந்தான்.. அவனுக்கு இப்படியெல்லாம் படுத்து பழக்கமேயில்லை..

வந்திருப்பவர்களில் பெண்கள் மொத்தமே எழு பேர் இருக்க, அவர்கள் எல்லாம் ஒன்றாய் படுக்கவென்றும் பாதுகாப்பு காரணம் கருதியும் ஒரேதாய் பெரிதாய் அவர்களுக்கு டென்ட் ஏற்பாடு செய்திருக்க, ஆண்களுக்கோ அவரவர் வசதிக்கு ஏற்ப ஒருவரோ இல்லை இருவரோ படுத்துறங்கவென்று கூடாரம் போட்டிருந்தனர்.

ரிஷியிடம் சைலேந்திரன் கேட்டதற்கு ‘எனக்கொண்ணும் பிரச்னை இல்லை நான் தனியாவே படுத்துப்பேன்..’ என்று சொல்லிட, அவனுக்கோ இப்போது கொஞ்சம் உள்ளே தயக்கமாய் இருந்தது..

ஆனால் இப்போதோ ‘யோசிக்காம சொல்லிட்டோமோ..’ என்று யோசித்துக்கொண்டே அவனது டென்ட்டை சுத்தி சுத்தி வர,

“ப்ரோ.. என்ன சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கீங்க.. வாங்க கேம்ப் ஃபையர் ரெடி பண்ணலாம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிட்டிட்டு எல்லாம் ரவுண்டு கட்டி உட்கார்ந்தா டைம் போறதே தெரியாது…” என்று ஒருவன் வந்து அழைக்க,

“இதோ வர்றேன் ப்ரோ..” என்று எதையும் வெளிக்காட்டாது ரிஷியும் செல்ல, சற்று தள்ளி சமையல் ஆட்கள் வேலை செய்யும் இடத்தில்  மதுபாலா இருப்பதை கவனித்தான்..     

வந்திருப்பவர்கள் மூன்று குழுவாய் பிரிந்து, ஒருகுழு சமையலுக்கும், ஒரு குழு டென்ட் போட்டு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கும் மற்றொரு குழு அவர்கள் தங்கும் இடத்தை தூய்மை செய்து கேம்ப் ஃபையர் ஏற்பாடு செய்வதற்குமாய் ஏற்பாடாகி இருக்க, மதுபாலா விரும்பியே சமையல் குழுவில் போய் நின்றுகொண்டாள்.

அங்கே சமையல் ஆட்களோடு சேர்ந்து அவளும் வேலைகள் செய்துகொண்டு இருக்க, 

‘நீ சரியில்லை..’ என்று மதுபாலா சொன்னது இப்போது வரைக்கும் அவனில் இருந்து மறையவில்லை. அதன்பிறகு இருவரும் பேசிக்கொள்ள தனியாய் எந்த சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை என்பதால் அடுத்து இருவரும் பேசிக்கொள்ளவும் இல்லை..

அன்றைய தினம் காலையில் கூட ரிஷி அவளிடம் பேச முயற்சித்தான் தான். ஆனால் அவள் கண்டும் காணாது போல் இருக்க, ‘அடேங்கப்பா.. போ.. எனக்கென்னா..’ என்று இறுமாப்பும் அவனுக்கு வர, அடுத்து அவனாகவே அவளிடம் இருந்து ஒதுங்கிப் போனான்..

ஆனால் கவனித்து பார்க்கையில் அவள் அவனிடம் மட்டுமே அப்படியிருப்பது தெரிந்தது.. ஒருவேளை இவர்கள் எல்லாம் முன்னமே தெரியும் நான் மட்டுமே புதியவன் ஆகையால் இப்படி கொஞ்சம் ஒதுக்கம் வளர்க்கிறாளோ என்று ரிஷி நினைத்தாலும் அதுவும் அவனால் ஏற்றுகொள்ள முடியவில்லை..

கேம்ப் ஃபையர் போடலாம் என்று முடிவு செய்யப் பட்ட இடத்தில் நின்றவன் இப்படி மதுபாலாவை பற்றிய யோசனையில் இருக்க, “அண்ணா… இதெல்லாம் போதுமா இன்னும் வேணுமா??” என்று அவனை விட வயதில் சிறியவன் ஒருவன் வந்து கேட்க,

“என்ன…” என்று பார்த்தவனுக்கு அப்போது தான் புரிந்தது, இங்கே அனைவரும் ஒவ்வொரு வேலை செய்கின்றனர் தான் மட்டும் சும்மா இருக்கிறோம் என்று..

“இந்த விறகெல்லாம் போதுமா இல்லை இன்னும் எடுத்துட்டு வரணுமாண்ணா..” என்று மீண்டும் அவன் கேட்க,

“போதாதுன்னு தான் நினைக்கிறேன்.. நீ இரு நான் போய் எடுத்துட்டு வர்றேன்…” என்று ரிஷி நேராய் சமையல் நடக்கும் இடத்திற்கு தான் சென்றான். 

மதுபாலா பெரிய பாத்திரத்தில் கொதித்துக்கொண்டு இருந்த குருமாவை பெரிய கரண்டி வைத்து, சமையல் ஆட்கள் நின்று கிண்டுவது போல் கிண்டிக்கொண்டு இருக்க, அவனுக்கு அவளைப் பார்க்கவே இப்போதும் ஆச்சர்யமாய் தான் இருந்தது..

அவன் வீட்டில் அப்படியெல்லாம் இல்லை பெண்கள்.. ஆண்கள் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாலே, பெண்கள் எல்லாம் அந்தபக்கம் வரக்கூட மாட்டார்கள்.. ரிஷி தான் தேடி தேடி போயி அவர்களிடம் பேசுவான்..

ஆனால் இவளோ இப்படி சகஜமாய் ஆண்களுக்கு சரிசமமாய் பேசிக்கொண்டு வேலை செய்துகொண்டு இருக்க, தான் ஏன் அங்கு போனோம் என்றே மறந்து போய் ரிஷி நிற்க, அவனை பார்த்தவள்,

“என்ன வேணும் ரிஷி..” என்று சாதாரணமாகவே கேட்டாள்.

‘இவள் என்ன மாதிரி பெண்…’ என்று அவளைப் பற்றிய ஆராய்ச்சியிலேயே அவளைப் பார்த்தவன் “கேம்ப் ஃபையர் போட விறகு வேணும்…” என்றான் லேசாய் கண்களை சுருக்கி..

அவனது பார்வை வித்தியாசமாய் பட, “எடுத்திட்டு போனாங்களே…” என்று சற்று தொலைவில் கேம்ப் ஃபையர் போடும் இடத்தை அவனுக்குப் பின்னே பார்த்தவள்,

“இது கொஞ்ச நேரத்துல இறக்கிட்டா எல்லாம் சாப்பிட வர சொல்லலாமா??” என்று சமையல்காரர் ஒருவரை கேட்க,

“பத்து நிமிசத்துல ரெடியாகிடும்மா..” என்று அவரும் சொல்ல,

“சரி…” என்றவள், ரிஷியை நோக்கி வந்தாள்.. 

“சொல்லு ரிஷி…” என்றபடி அவன் முன்னே நிற்க, “சொல்றதுக்கு எல்லாம் ஒண்ணுமில்ல விறகு வேணும். அவ்வளோதான்..” என்றான் என்னவோ உன்னிடம் எனக்கு பேச எதுவுமில்லை என்பது போல்..

“ஓ..” என்றவள் “அதோ அந்த சைட் இருக்கு…” என்று என்றபடி போக, அங்கே இருட்டாய் இருக்க, ரிஷி வேகமாய் அவனது அலைபேசியில் இருந்த டார்ச்சை ஒளிர விட,

அவனை ஒரு பார்வை பார்த்தவள், அவளே அங்கிருந்த விறகுகளை எல்லாம் எடுக்க,

“ஹே விடு விடு நானே எடுத்துப்பேன்…” என்று ரிஷி சொல்லிக்கொண்டே முன்னே வர,

“இருக்கட்டும் உன்னை பார்த்தாலே இதெல்லாம் பழக்கமில்லைன்னு தெரியுது சோ நானே எடுத்திட்டு வர்றேன்..” என்றபடி மதுபாலா நான்கைந்து விறகுகளை தூக்கி நடக்க,

“உன்னை பார்த்தா கூடத்தான் இதெல்லாம் பழக்கமில்லன்னு தெரியுது.. பிஎம்டபிள்யூல வந்து டீ குடிக்கிற… உனக்கு மட்டும் இதெல்லாம் பழக்கமா???” என்றவன், வேகமாய் அவளிடம் இருந்த விறகுகளை எல்லாம் வாங்கிக்கொண்டு,

“ம்ம் நீ லைட் அடி…” என்று அவன் அலைபேசியை அவளிடம் நீட்ட,

“ம்ம்..” என்றவள் “நீ எப்போ நான் டீ குடிச்சதெல்லாம் பார்த்த??” என்று பேச்சைத் தொடங்கினாள்.

“உன் பக்கத்துல உட்கார்ந்து காப்பி குடிச்சது நான் தான்…” என்று ரிஷி சொல்ல,

“ஓஹோ… நீயா அது…” என்றவள் அதற்குமேல் பேசாமல் வர,

“ஏன் நீ என்னைப் பார்க்கலையா??” என்றான் வேகமாய்..

அத்தனை பக்கத்தில் உட்கார்ந்து டீ குடித்தாள், அடுத்த ஒரு ஒரு மணி நேரத்தில் அவனை நேரிலேயே கண்டாள் இப்போதென்னவென்றால் தெரியாதது போல் பேசுகிறாள் என்றதும் என்னவோ அவனுக்கு கோவமாய் வருவது போல் இருந்தது..

“கவனிக்கல ரிஷி..” என்று இயல்பாய் சொன்னவளின் முகத்திலோ இதெல்லாம் பெரிய விசயமா என்றொரு பாவனை..   

“ஹ்ம்ம் பட் நான் கவனிச்சேன்…” என்றவனுக்கு பதில் சொல்லாமல் அவள்  பார்வை என்னவோ அவன் மீதே நிலைத்திருக்க, அவனோடு சேர்ந்து நடந்தாலும், மதுபாலாவிற்கு ரிஷி தன்னிடம் உரிமை எடுத்துக்கொள்கிறானோ என்றும் தோன்ற, இதழில் மெல்லியதாய் ஒரு புன்னகை….

“என்ன நீ இப்படி லைட் அடிக்கிற.. நேரா அடி..” என்றபடி ரிஷி நடக்க, வேகமாய் தன் பார்வையை அவனிடம் இருந்து திருப்பியவள், கேம்ப் ஃபையர் போடும் இடம் செல்லவும், அப்படியே தான் நின்றிருந்தாள்.

ரிஷி மற்றவர்களோடு சேர்ந்து ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்க, மதுபாலா அங்கேயே நிற்க, சைலேந்திரன் அங்கே வந்தவர்

“மது சாப்பிட எல்லாம் ரெடியா.. நீ என்ன இங்க வந்து நிக்கிற…??” என,

“ம்ம் ரெடி சைலேந்தர்.. எல்லாரையும் அசம்பில் ஆக சொல்லுங்க..” என்றவள், ‘நீ ஏன் இங்க நிக்கிற..’ என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவில்லை..

என் இஷ்டம்.. நான் எங்கே வேண்டுமானாலும் நிற்பேன் என்ற தோரணையில் நின்றிருந்தாள்.. ரிஷி வேலை செய்துகொண்டு இருந்தவன், சைலேந்திரன் வந்து மதுபாலாவிடம் பேசவும் என்னவென்பது போல் திரும்பிப்பார்க்க,

“எல்லாரும் சாப்பிட வாங்க…” என்று சொல்லிவிட்டு சைலேந்திரன் முன்னே நடக்க,

இரண்டொரு நிமிடத்தில் வேலையை முடித்துக்கொண்டு அனைவரும் உண்ண செல்ல, மதுபாலா ரிஷியோடு தான் சேர்ந்து நடந்தாள்.

‘என்ன இவ..’ என்று ரிஷி பார்க்க, “என்ன…” என்று பார்த்தவள், “உன் போன்…” என்று அவனிடம் நீட்ட,

“ஓ இதை கொடுக்கவா கூடவே இருந்தா…” என்று நினைத்தவன், அவள் நீட்டிய அவனின் அலைபேசியை வாங்கிக்கொள்ள,

“சோ ரிஷி.. சொல்லு இந்த கேம்ப் பிடிச்சிருக்கா.. நாளைக்கு முடிஞ்சிடும் .. சோ இந்நேரம் சென்னைல இருப்போம்…” என்று மதுபாலா சொல்ல, ரிஷி பதில் சொல்வதற்குள் உணவுகள் பரிமாறப்பட, அந்த மலை வாசஸ்தளத்தில் இயற்கையான சூழலில் வெட்ட வெளியில் அமர்ந்து அந்த சூடா சப்பாத்தியும் குருமாவும் உண்ண அமிர்தமாகத் தான் இருந்தது அனைவருக்கும்..

ஆனால் ரிஷிக்கோ அதெல்லாம் ரசிக்கும் நிலையில் அவனில்லை.. நாளை சென்னை சென்றிடுவோம் என்று மதுபாலா சொன்னதே மனதில் ஓட, சென்னை சென்று அடுத்த மூன்று நாட்கள் எங்கே செல்வது என்று யோசனையாய் இருந்தது.

நிச்சயம் மனோகரைத் தேடி போக முடியாது.. இந்நேரம் அவன் வீட்டினர் கண்டிப்பாய் அவனிடம் பேசியிருப்பர்.. என்ன பதில் சொல்லி வைத்திருக்கிறானோ என்றும் தெரியாது.. ஆகமொத்தம் சென்னை சென்றதும் முதலில் தங்குவதற்கு ஒரு பாதுகாப்பான இடமாய் பார்க்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு எந்த ஹோட்டலிலும் லாட்ஜிலும் தங்க எண்ணம் போகவில்லை..

ஏனெனில் இந்நேரம் சென்னையின் பிரபல ஹோட்டல்கள் லாட்ஜ்களில் எல்லாம் சாம்பசிவம் ஆள் வைத்து விசாரித்து இருப்பார் என்று தெரியும்.. அதற்கென்று அவனால் சாதாரண லாட்ஜ்களில் தங்குவதற்கும் மனம் ஒப்பவில்லை..

இதெல்லாம் மனதில் ஓட, தட்டில் இருந்த சப்பாத்தி அப்படியே இருக்க, மற்றவர்கள் எல்லாம் உண்டு முடித்து எழுந்து செல்லத் தொடங்கியிருந்தனர்..

“ஹ்ம்ம் இதுக்குதான் நீ சரியில்ல சொன்னேன்…” என்று மதுபாலாவின் குரல் கேட்க,

“வாட்???!!!” என்று ரிஷி புரியாமல் பார்க்க,

“இப்படி அப்பப்போ திங்கிங் போயிடுற.. நீ நார்மலா இல்ல.. அதான் சரியில்ல சொன்னேன்…” என்றவளின் பேச்சு இயல்பாகவே இருக்க, மறுபடியும் அவள்மீது ஒரு ஆராய்ச்சி பார்வையை ரிஷி செலுத்த,

“அப்புறம் இது…” என்றவள் அவன் கண் முன்னே தன் விரலை நீட்டி சொல்ல, என்ன என்பதுபோல் ரிஷி பார்க்க,

“இப்படி நீ அப்பப்போ என்னை ஆராய்ச்சி பண்றதுபோல பாக்குறது…இதும் சரியில்ல…” என்று நேராகவே மதுபாலா கூறவும் ரிஷி சிரித்துவிட்டான்.

“ஹா ஹா…” என்று ரிஷி சிரித்தவன், “மதுபி… நிஜமாவே நீ…” என்று அவன் எதுவோ சொல்ல வருகையில்,

சைலேந்திரன் அங்கே வந்து “இன்னும் சாப்பிடலையா…??” என்றவரின் பார்வை, ரிஷி, மதுபாலாவை பார்க்க,

“நான் சாப்பிட்டேன் சைலேந்தர்… ரிஷிதான் சாப்பிடலை…” என்று மதுபாலா சொல்ல,

‘இவர் வேற எப்போ பார் நடுவில வந்திட்டு…’ என்று ரிஷி நினைக்க,

“ஓகே மது நீ கேம்ப் ஃபையர் போ… நான் ரிஷியை கூட்டிட்டு வர்றேன்…” என்று சைலேந்தர் சொல்ல,

“ஓகே…” என்று தோளை குலுக்கியவள், முன்னே நடந்துவிட, ரிஷி அப்போதும் கையில் தட்டை வைத்து அவள் போவதைப் பார்த்துகொண்டு இருக்க,

“ரிஷி…” என்ற சைலேந்திரனின் பார்வையில் ஒரு கடினம் தெரிந்தது..

“பொதுவா கேம்ப் வர இடத்துல இப்படி பசங்க பொண்ணுங்க தனியா நின்னு பேச நான் அலோ பண்றது இல்ல…” என,

“நாங்க தனியா எங்கவும் போய் பேசலையே… எல்லார் முன்னாடியும் நின்னுதானே பேசினோம்…” என்று பதில் சொன்னவனுக்கு என்னவோ கோவம் வந்துவிட்டது.

நாங்கள் என்ன டீனேஜ் பிள்ளைகளா எப்போது பார் இப்படி வந்து அறிவுரை செய்துகொண்டு என்று தோன்ற, அவனுமே இயல்பாய் பேசுவதை விட்டிருந்தான்.. ஏற்கனவே வீட்டில் இடும் கட்டுபாடுகள் பிடிக்காது தான் கிளம்பி வந்திருக்கிறான்.

இங்கேயோ சாதாரணமாய் மதுபாலாவோடு பேசினால் அடுத்த நிமிடமே இந்த சைலேந்திரன் வந்து நிற்பது போல் இருக்க, இதேது மற்றாவர்களோடு பேசினால் மட்டும் சும்மா இருக்க, என்ன இது என்று அவனுக்கு எரிச்சலாய் போனது.

ஆனால் மதுபாலாவோ இதெல்லாம் பெரிதாய் எடுப்பதாய் தெரியவில்லை.. ரிஷியும் அப்படி இருக்கவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லையே.. முகத்தை கடுகடுவென வைத்தபடி நின்றிருந்தான்..

அவனைப் பார்த்தவரோ “ரிஷி நான் இதுவும் நல்லதுக்கு தான் சொல்றேன்.. இப்போ நீங்க ரெண்டு பேர் இப்படி பேசிட்டு இருக்கீங்க.. யூ பீப்பிள் ஆர் மெச்சூர்ட். ஆனா வந்திருக்கவங்க எல்லாம் அப்படின்னு சொல்ல முடியாது இல்லையா?? இருபது வயசு பசங்க பிள்ளைங்கன்னு கூட வந்திருக்காங்க சோ நான் சொல்றது புரியும்னு நினைக்கிறன்…” என்றவர், அங்கே கேம்ப் ஃபையரில் கூடி இருந்தவர்களை பார்க்க,

ரிஷியும் அங்கே பார்த்தவன், தட்டில் இருந்த சப்பாத்தியை வேகமாய் விழுங்கிவிட்டு தட்டையும் கையையும் கழுவிக்கொண்டு அங்கே சென்றான்..

சைலேந்திரன் அவரது பொறுப்பைத் தான் செய்கிறார்.. இது ரிஷிக்கு முதல் முறை என்பதால் அவனுக்கு அதெல்லாம் கடுப்பாய் இருந்தது போலும்.. முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே அவன் அங்கே வந்து அமர,

அவனைப் பார்த்த மதுபாலா “என்னாச்சு…” என்பதுபோல் தலையை ஆட்டி கேட்க,  “ம்ம்ச்…” என்று தலையை ஆட்டியவன் பதில் பேசாமல் இருந்துவிட்டான்.. 

‘என்னதிது நல்லாதானே இருந்தான்…’ என்று மதுபாலா இம்முறை அவனை ஆராய்ச்சியாய்ப் பார்த்தபடி இருக்க, ரிஷி அவளைப் பார்த்தவன் முகத்தை திருப்பிட, மதுபாலா அவனிடம் வந்து அமர்ந்தவள்,

“என்னாச்சு???” என,

“ஒண்ணுமில்ல…” என்றவனின் பேச்சில் கோபம் தெரிய,

“சைலேந்தர் எதுவும் சொன்னாரா??” என்றவளை உனக்கெப்படி தெரியும் என்பதுபோல் பார்க்க,

“நான் பலவருசமா இந்த கேம்ப் வர்றேன்.. சோ ஐ கேன் கெஸ்…” என்றவள், “ப்ரீயா விடு.. கண்டுக்காத…” என்று  இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதுபோல் சொல்ல,

‘எப்படி இப்படி இருக்கா???’ என்று ரிஷி யோசிக்கும் வேளையில்,     

“ஓகே கைஸ்… ஸ்டார்ட் பண்ணலாமா???” என்றபடி சைலேந்திரன் அங்கே வர,   அடுத்து வந்த ஒருமணி நேரமும் ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான்..

நேரம் போனதே தெரியவில்லை.. ஆனால் சரியாய் ஒருமணி நேரத்தில் சைலேந்திரன் அனைவரையும் உறங்கச் செல்ல சொல்ல, அனைவரும் அனைவருக்கும் இரவு வணக்கம் சொல்லி உறங்கச் செல்ல, ரிஷியும் எழுந்து சென்றான்..      

பெண்கள் எல்லாம் தங்களின் பெரிய கூடாரம் பார்த்து நடக்க, ஆண்கள் அவரவர் கூடாரம் போக, மதுபாலா மற்ற பெண்களோடு நடந்தவள், ரிஷியைப் பார்த்து ஒரு புன்னகை சிந்திவிட்டு செல்ல,

‘என்னடா இது.. ஒண்ணு தானே வந்து பேசுறா… இல்ல யாரோ போல இருக்க.. மதுபி…. ஏன்மா என்னை இப்படி குழப்புற…’ என்று மனதிற்குள் இழுத்தவன், அவள் சிரித்ததை எங்கே அந்த சைலேந்திரன் பார்த்து அதற்கும் தன்னிடம் வந்து எதாவது சொல்வாரோ என்று சைலேந்திரன் எங்கே என்று பார்க்க, அவரோ வேறு ஆட்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்..

“ஹ்ம்ம்…” என்று ரிஷி பெருமூச்சு ஒன்றை விட்டு தன் கூடாரம் உள்ளே சென்றிட, அங்கே பெண்களின் கூடாரத்தில் கொஞ்ச நேரம் வரைக்கும் பேச்சு சத்தம் கேட்டுகொண்டே இருந்தது..

மதுபாலாவும் அனைவரோடும் பேசியபடி படுத்திருக்க, அவளுக்கு என்னவோ அத்தனை எளிதில் உறக்கம் வருவதாய் இல்லை..

மனதில் கலவையான எண்ணங்கள்.. இத்தனை நாள் நினைக்காதது எல்லாம் சேர்த்துவைத்து, இன்று மனதில் வந்துபோக, நாளை சென்னை சென்றதும் மீண்டும் அதே வாழ்க்கை என்று தோன்ற அவளையும் அறியாது ஒரு சலிப்பு..

அவள் வாழ்வில் அவள் என்னவேண்டுமானாலும் செய்யலாம் தான்.. யாரும் கேட்க போவதில்லை.. ஆனால் இப்படியே ஊர் சுற்றுவது என்றாலும் எத்தனை நாள் சுற்றிட முடியும்..

வீட்டிற்கு போனாலும் தனிமை தான்.. நினைத்தால் சமைத்து உண்பாள் இல்லையா ரோட் சைட் கடைகளில் நின்று கூட உண்டுவிட்டு வருவாள்.. ஆகமொத்தம் அவளுக்கு எதையும் கேட்க யாருமில்லை..

‘அம்மா…’ என்று மனதில் சொல்லி கண்களை இறுக மூடியவளுக்கு, அப்பா யார் என்று தெரியாது..

ஒருமுறை அவள் அம்மா சொல்லியிருக்கிறார் தான்..  ஆனால் எப்போதுமே அவரிடம் தாங்கள் செல்லக்கூடாது என்றும் சொல்லிட, கொஞ்ச நாளில் அவர் இறந்ததாய் ஒரு தகவல் மட்டும் வர,  எங்களை வேண்டாம் என்று போனவர் எங்களுக்கும் வேண்டாம் என்று சிறு வயதில் இருந்து மனதில் பிடிவாதமாய் இருந்ததினாலோ என்னவோ இப்போது அவளுக்கு தந்தை என்ற உறவின் முக்கியம் கூட பெரியதாய் தெரியவில்லை..

அவளும் அவள் அம்மாவும் சென்னை வந்தபோது, மதுபாலாவிற்கு பத்து வயது.. நிறைய சொத்துக்கள் அவளின் அம்மா பெயரில் இருந்தது.. அவளுக்குத் தெரிந்து பத்து வயதிற்கு முன் அவர்கள் கன்னியாகுமரியில் இருந்ததாய் நினைவு மட்டுமே.. எதுவுமே இப்போது நியாபகத்தில் இல்லை..

அவள் அம்மா பெயரில் இருந்த சொத்துக்கள் எல்லாம் சென்னையில் தான் இருந்தன.. அதெல்லாம் எப்படி என்று கொஞ்சம் விவரம் வந்தபோது தான் கேள்வி எழும்ப,

“ஏன் மது இங்க உனக்கு பிடிக்கலையா???” என்று அவளின் அம்மா கேட்க,

“நமக்கு யாருமே இல்லையாம்மா…” என்றுகூட கேட்டிருக்கிறாள்..

“நமக்கு நம்மதான்… நானே இல்லைன்னாலும் நீ ரொம்ப ரொம்ப தைரியமா இருக்கணும்.. கண்டிப்பா நீ யார் நிழல்லையும் நிக்கவேண்டிய அவசியம் இல்லை. உன்னோட வாழ்க்கை முழுக்க முழுக்க உன் கைல.. அது எப்படி வாழணும்னு மட்டும் தான் யோசிக்கணும்.. எப்படிவேணா வாழலாம்னு யோசிக்காத..” என்று அன்று மதுவின் அம்மா சொன்ன அறிவுரை அதுதான் இப்போது வரைக்கும் அவள் மனதில்..

அதன் பின் அவளது இருபத்தி ஒன்றாம் வயது வரைக்கும் அவளது அம்மா இருந்தார்.. பின் அவரும் இறந்துவிட, மதுபாலா அழக்கூட இல்லை.. சைலேந்திரன் வந்து தான் அனைத்து உதவிகளையும் செய்தார். கிட்டத்தட்ட அவளது பதினேழாம் வயதில் இருந்து இமயா குழுவினரோடு சேர்ந்து மதுபாலாவும் அவளது அம்மாவும் கேம்ப் செல்வர்..

ஆக அவளுக்குத் தெரிந்தது சைலேந்திரன் மட்டுமே.. பள்ளி கல்லூரியிலும் கூட அவளுக்கென்று உற்ற நட்புக்கள் யாருமில்லை.. அவளின் அப்பா பற்றிய கேள்வி வந்தபின் யாரும் அவளோடும் அத்தனை ஒன்றும் பழகிடவில்லை..

ஆனால் மதுபாலாவின் அம்மா அவருக்கும் மதுவின் அப்பாவிற்குமான உறவு அவர்கள் இருவர் மட்டுமே அறிந்தது.. ஒருநிலையில் அவரைவிட்டு வரவேண்டிய சூழல் ஆக வந்துவிட்டார்..

ஆனால் அவர் பெயரில் இருக்கும் சொத்துக்கள் எல்லாம் மதுபாலாவின் அம்மாவின் அம்மாவுடையது என்று கொஞ்ச வருடத்திற்கு முன்புதான் அவளுக்குத் தெரியும்.

உறவுகளில் ஒருவர் கூடவா இல்லை என்று அவளுக்குத் தோன்றும்.. இருந்தால் இந்நேரம் வரைக்குமா வராது போயிருப்பர் என்றெண்ணி இப்போதெல்லாம் மிக மிக திடமான தைரியமான யாருக்கும் அஞ்சாத யாரையும் சாராத பெண்ணாய் மாறிவிட்டாள் மதுபாலா..      

இப்படியே சிந்தனை போக, அவளுக்கு உறக்கம் வருவதாய் தெரியவில்லை.. ஆக எழுந்தவள், கூடாரம் விட்டு வெளியே வர, அங்கே கேம்ப் ஃபையர் அருகில் லேசாய் எரிந்துகொண்டு இருந்த நெருப்பின் அருகே ரிஷி அமர்ந்திருப்பது தெரிய,

‘ரிஷி…’ என்று எண்ணியவள், ‘இவன் என்ன செய்றான் இங்க???’ என்று நினைத்தபடி அவனை நோக்கி செல்ல,

யாரோ வருவதுபோல் தெரியவும், அந்த காட்டு பகுதியில் அதுவும் நள்ளிரவு வேளையில் இப்படி தனியே அமர்ந்திருப்பது கூட ரிஷிக்கு ஒருவித திகிலாய் இறுக, அதிலும் தன்னை நோக்கி யாரோ வருவது போல இருக்க வேகமாய் நிமிர்ந்து பார்த்தவன் வருவது மதுபாலா என்று தெரிந்து,

‘மதுபி…’ என்று அவன் இதழ்கள் முணுமுணுக்க,

“தூங்கல….???” என்று இருவரின் இதழ்களுமே ஒரே கேள்வியை வெளிப்படுத்தின..             

 

               

          

              

                

         

Advertisement