Advertisement

மது – 2

ஏலகிரி.. வெண்பஞ்சு மேகங்கள் தவள, பசுமை பட்டாடை உடுத்தி, தன்னகத்தே வருவோரின் கண்களையும் மனதையும் குளுர்வித்துக் கொண்டு இருந்தது.. மொத்தம் பதினான்கு கொண்டை  ஊசி வளைவுகளை கொண்டிருக்க,  இமயா குழுவினர் சென்ற வேன் பத்தாவது கொண்டை ஊசி வளைவை தாண்டிக்கொண்டு இருந்தது.

காலை உணவு வந்தவாசியில் முடித்துக்கொண்டு கிளம்பியிருப்பதால், வேனில் அனைவரும் உற்சாகமாய் பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் வர, ரிஷியோ அனைவரோடும் சீக்கிரமே இணைந்துவிட்டாலும், அவ்வப்போது அவனின் பார்வை அவனால் ‘மதுபி’ என்று நினைத்து கொண்டிருப்பவளின் மீது படர,

அவளோ வேனில் இருப்பவர்கள் போடும் ஆட்டத்தை ரசித்துக்கொண்டு வந்தாள்.

“மதுக்கா.. லாஸ்ட் இயர் நம்ம ஆரோவில் போயிருந்தப்போ நீங்க ஒரு ஃபோக் டான்ஸ் ஆடினீங்களே.. சேம டான்ஸ்.. இந்த டைமும் நீங்க கண்டிப்பா எங்களுக்கு ஒரு பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கணும்..” என்று வந்திருப்பவர்களில் சுமிதா என்று அழைக்கப் பட்டவள் கேட்க,

“ஆடிட்டா போச்சு.. பட் திஸ் டைம் ஃபோக் டான்ஸ் வேணாம்.. வேற ஏதாவது ப்ளான் பண்ணலாம்…” என்று சொல்லியவள், போட்டிருந்த போனி டெயிலை அவிழ்ந்து மீண்டும் இருக்கமாய் ஹேர் பேன்ட் போட ரிஷியின் பார்வை என்னவோ அவளை விட்டு நகரவே இல்லை..

அனைவரிடமும் இயல்பாய் பேசி சிரித்து, கேட்பவர்களுக்கு பதில் சொல்லி வந்தவனால் ஏன்னவோ அவளிடம் தானாக பேசிடவும் முடியவில்லை அவள் மேல் படியும் பார்வையை விளக்கவும் முடியவில்லை.

அனைவரிடமும் இல்லாத ஒன்று அவளிடம் எதுவோ வித்தியாசமாய் பட, அவனுக்கு அது என்னதென்று அவனால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. ஆக அவ்வப்போது அவளைப் பார்க்க, ஓரிரு முறை அவளும் கூட இவனைப் பார்த்தாள்.

ஆனால் முதல் முறை பார்த்த ஒரு அலட்சியம் இல்லை.. கொஞ்சம் அவனது நடவடிக்கைகளை கவனித்திருப்பாள் போல.. இப்போது, எங்களைப் போல் அவனும் கேம்ப் வருகிறான் என்ற ரீதியில் அவள் பார்க்க,

அவளது முழு பெயர் இப்போதும் அவனுக்குத் தெரியவில்லை. அனைவரும் அவளை மது மது என்றழைக்க, அவளது கையில் இருந்த டாட்டூவோ ‘மதுB’ என்றிருக்க, 

“இவங்க நேம் என்னவா இருக்கும்???” என்று யோசித்தவனின் மனம் வேகமாய் அவளுக்கு எத்தனை வயதிருக்கும் என்று ஒரு கணக்கு போட்டது..

‘என்ன ஒரு இருபத்தி மூணு…’ என்றெண்ணியபடி அவளை ஏற இறங்கப் பார்த்தவன் ‘ம்ம்ஹும் இருபத்தி அஞ்சு இருக்கும்…’ என்று ஒரு முடிவிற்கு வர,

‘அப்போ நம்மள விட சின்னவதான்.. ஓகே ஓகே..’ என்று தானாய் ஒரு முடிவிற்கு வர, அந்த நேரம் சரியாய் அவள் அவனைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்..    

அவள் பார்த்ததும் வேகமாய் தன் பார்வையை திருப்பவேண்டும் என்று ரிஷி நினைத்தாலும் அது முடியாமல் போக, அவளோ ‘இங்கே வா…’ என்பதுபோல் தலையை ஆட்ட,

‘ஹா…’ என்று இன்னும் கொஞ்சம் திகைத்து முழிக்க,

“ரிஷி கம் ஹியர்…” என்ற அவளின் முதல் முதல் பேச்சு அவனிடம், ஒரு அழைப்பாக வேறு இருக்க,

மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அனைவரையும் ரிஷிப் பார்க்க, யாரும் அவர்களை கவனிக்கவில்லை என்று நன்றாகவே புரிய, மெல்ல எழுந்து ரிஷி அவளது இருக்கைக்கு செல்ல,

“ம்ம் சிட்…” என்று கொஞ்சம் தள்ளி அமர்ந்தவள்,

“சொல்லு என்ன தெரியனும் உனக்கு…” என்று நேரடியாகவே விசயத்திற்கு வர,

‘என்னடா இது ஒரு பேச்சுக்குக் கூட மரியாதை கொடுக்கமாட்டாளோ…’  என்று நினைக்கும் போதே,

சைலேந்திரன் வந்து “மது… டெலஸ்கோப் செண்டர் வந்திடுச்சு..” என்று சொல்ல,

“ஓகே சைலேந்தர்… பசங்க பார்க்கணும் நினைப்பாங்க.. நான் நிறைய தடவ பார்த்திருக்கேன் சோ அவங்களை கூட்டிட்டு போங்க.. நான் ஜஸ்ட் வெளிய இருக்கேன்…” என,

‘ஹ்ம்ம் நாப்பது வயசு ஆளையே பேரு சொல்லி கூப்பிடுறா.. என்னை நீ வா சொல்றதெல்லாம் அதிசயம் இல்லை…’ என்று ரிஷி எண்ணும் பொழுதே அனைவரும் வேனில் இருந்து இறங்கிட,

“நீ போகல??” என்ற கேள்வியில் ரிஷி அவளைப் பார்க்க,

“இல்.. அது.. இதோ போகணும்.. போறேன்…” என்று இறங்கப் போனவன், “நீங்க… நீ வரலையா???” என்று அவனும் ஒருமைக்குத் தாவ,

அத்தனை நேரம் சாதாரணமாய் பேசிக்கொண்டு இருந்தவள் முகத்தில் ஒரு சின்ன புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள,

“ஆல்ரடி நிறைய டைம்ஸ் பார்த்திட்டேன்.. சோ வெளிய சும்மா வேடிக்கை பார்த்திட்டு இருக்கேன். நீங்க எல்லாம் போங்க…” என்று அவளும் வேனை விட்டு இறங்க,

ரிஷியோ முதல் முறை பேசுவதால் அத்தனை உரிமை எடுத்துகொள்ளவும் முடியாமலும் குழுவினரோடு அவளைத் திரும்பி திரும்பிப் பார்த்தபடி சென்றான்..

ஆனால் அவளோ அதெல்லாம் கண்டுகொள்ளும் நிலையிலேயே இல்லை.. அவள் ஏற்கனவே பலமுறை ஏலகிரி வந்திருக்கிறாள்.. என்னவோ அவளுக்கு இப்போது வந்திருக்கும் குழு பிடித்துவிட, அந்த குழுவினர் எந்த கேம்ப் வருகிறார்களோ அவளுக்கான நேரத்தை பொருத்து அவளும் வந்துவிடுவாள்..

ஆனால் இன்னொரு விஷயம் அவள் வருகிறாள் என்பதற்காகவே இந்த குழு ஒன்று சேர்ந்து விடுவர்..

மது.. மதுபாலா.. காட்டாறு அவள்.. அவளை கட்டுபடுத்தவும், தடைகள் இடவும் எவருமில்லை.. அவளுக்கு அவளே வேலி.. அவளுக்கு அவளே ஓணான்.. அவளே அவளுக்கு சில கட்டுபாடுகள் விதிப்பாள். அவளே சிலதை உடைப்பாள்.

மதுபாலா பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை அவள் வாழ்வில் அவளே உடைத்தவள்.. தனியாய் இருப்பதால்.. கேட்க யாருமில்லை என்பதால் எப்படியும் இருக்கலாம் என்ற கூற்றை மாற்றி சிலதில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தனக்கு தானே சில வரையறைகளை விதித்தவள்.

அதை அவளும் மீறியதில்லை.. வேறு யாரையும் இன்றுவரை நெருங்கவிட்டது இல்லை… மதுபாலா இப்படித்தான் என்று யாராலும் இன்றுவரைக்கும் அனுமானிக்கவே முடியாது..

அவளுக்கே தான் இப்படித்தான் என்று சொல்ல முடியாது. இதோ இப்படி கேம்ப் என்று கிளம்பிவிடுவாள். பின்னே ஒருநாள் ஒருவாரம் என்றாலும் வீட்டை விட்டு வெளியே வராது இருப்பாள்..

அவளது உலகில்.. அவளது வீட்டில் அவள் மட்டுமே… இப்போதும் கூட அவள் மட்டுமே நின்றிருக்க, டெலஸ்கோப் மையம் சென்றவர்கள் இப்போதைக்கு திரும்பி வரமாட்டார்கள் என்று தெரியவும், கையில் இருந்த கேமரா கொண்டு இயற்கை காட்சிகளை படம் பிடித்துக்கொண்டு இருக்க,

மற்றவர்களோடு உள்ளே சென்றிருப்பான் என்று நினைத்த ரிஷி, கொஞ்சம் தள்ளி நின்று யாருடனோ அலைபேசியில் கார சாரமாய் பேசிக்கொண்டு இருந்தான். அவன் பேசுவது என்னதென்று தெரியவில்லை என்றாலும், அவன் முகத்தில் தோன்றிய பாவனைகள் என்னவோ சீரியசான விஷயம் என்றே காட்ட,

அவனை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தவள், பின் ‘என்னவோ பண்ணட்டும்..’ என்று தோளை குலுக்கிவிட்டு நகர்ந்துவிட்டாள்..

“டேய் மனோ… நான் சொல்றத நல்லா கேளு.. அவங்க வந்து கேட்டா கேசுவலா பதில் சொல்லு.. தெரியவே தெரியாதுன்னு அடிச்சு சொல்லு.. நான் சென்னை வர மூணு நாள் ஆகும்.. அடுத்து மூணு நாள்ல கிளம்பிடுவேன்..

கண்டிப்பா உன்னை பார்க்க வரமாட்டேன்.. அது உனக்கும் டென்சன்னு நல்லா தெரியும். சோ டோன்ட் வொர்ரி.. கால் ஹிஸ்டரில இருந்து என் நம்பரை டெளிட் பண்ணிடு..” என்று ரிஷி சொல்லிக்கொண்டு இருக்க,

அவன் முகமோ யோசனையாய் இருந்தது.. எப்படி இத்தனை சீக்கிரத்தில் மனோவை பிடித்தார்கள் என்று தெரியவில்லை.. அவன் சென்னை வந்து கிளம்பி முழுதாய் ஒருநாள் கூட ஆகவில்லை அதற்கும் அவன் வீட்டினர் மனோவை தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்றால் எப்படி என்று தோன்ற,

வேகமாய் புத்தியில் ஒரு காட்சி பளீரிட்டது.. நள்ளிரவு வீட்டை விட்டு கிளம்பி யாரும் அறியாமல் வெளியே வந்து, ஏற்கனவே அவன் மனதில் ஒரு வழியை கணக்கிட்டு அதன்படி சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து, சாலைக்கு வந்து,

லோட் லாரிக்காரன் அதிலும் அயலூர் காரன் ஒருவனைப் பிடித்து, ‘சென்னைக்கு அவசரமா போகணும்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா??? பஸ் டிக்கட் அமௌன்ட்ட  விட ஜாஸ்தியா கொடுக்கிறேன்…’ என்று சொல்ல,

அந்த லாரிக்காரரோ ஒருசில நொடிகள் யோசித்து பின் சரியென்று சொல்ல, சரியாய் அதே நேரம் அவர்களைத் தாண்டி ஒரு இருசக்கர வாகனம் சென்றது.. யார் செல்கிறார்கள் என்றெல்லாம் ரிஷி கவனிக்கவில்லை.. ஆனால் வண்டியில் சென்றவர்கள் இவனைத் திரும்பிப்பார்ப்பது போல் இருக்க அதையும் தன் கற்பனை என்றே இப்போது வரைக்கும் எண்ணினான்.

ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கையில் யாரோ நமக்குத் தெரிந்தவர்கள் தான் சென்றிருக்கிறார்கள் என்று தோன்ற, மனோகர் எதுவும் சொதப்பாமல் இருக்கவேண்டுமே என்று இருந்தது ரிஷிக்கு..

மூன்று நாட்கள் எப்படியாவது இங்கே பொழுதை ஓட்டிவிட்டால், விசாவும் வந்துவிடும். அடுத்து மூன்றோ இல்லை நான்கோ நாட்களில் அவன் கிளம்பிடலாம்.. அனைத்து ஏற்பாடுகளும் அவன் சுவிஸ்ஸில் இருக்கும் அவன் நண்பனை வைத்து செய்துவிட்டான் தான்…

ஆனாலும்  அவன் வீட்டினரைப் பற்றித் தெரியாதா?? மனோவிடம் பேசியவர்கள் இங்கே வர எத்தனை நாள் ஆகிடும்…  என்றெல்லாம் தோன்ற, யோசனையாய் நெற்றியைத் தேய்த்துக்கொண்டு அங்கேயே நின்றிருந்தான்..

“தம்பி நீங்க போகலையா???” என்று வேன் டிரைவர் கேட்க,

“இல்.. இல்லண்ணா இது ஆல்ரடி நான் பார்த்துட்டேன்…” என்று எதையோ வாய்க்கு வந்ததை சொல்ல,

“நீங்களும் நம்ம மதுபாலா போலத்தானா…” என்று டிரைவர் சொல்ல,

“அவங்க யாரு…??” என்று புருவத்தை சுருக்கினான்..

“அட என்னத் தம்பி.. இவ்வளோ நேரம் வேன்ல பேசிட்டு வந்தீங்களே…” என,

‘ஓ மதுபி… மதுபாலாவா…’ என்று நினைத்தவன், பொத்தாம் பொதுவாய் தலையை அசைக்க,

“சரி தம்பி எல்லாம் வரவும் ஒரு சவுண்ட் விடுங்க.. நான் அப்படி கொஞ்சம் நடந்து போயிட்டு வர்றேன்…” என்று சொல்லி அவர் நகர்ந்திட,

இத்தனை நேரம் இருந்த யோசனை போய், அவளின் பெயர் தெரிந்துகொண்ட ஒரு திருப்பதியில் “இங்கதானே இருந்தா..” என்று பார்வையை ஓட்ட, அவளோ சற்று தூரத்தில் அங்கிருந்த சிறு பாறை ஒன்றை புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தாள்.

‘மதுபாலா….’ என்று சொல்லிப்பார்த்தவன்.. ‘ம்ம்ஹும் நமக்கு எப்பவும் மதுபி தான்…’ என்று சொல்லிக்கொண்டு, அவளை நோக்கி நடந்தவன்

“ஏங்க மதுபி என்ன பாறையை போட்டோ எடுக்குறீங்க….” என்று கொஞ்சம் சத்தமாகவே பேசிக்கொண்டு போக, வேகமாய் அவன் புறம் திரும்பியவள்

‘ஷ்…’ என்று அவள் வாயில் விரல் வைத்து, கண்களை சற்றே விரித்து, பேசாதே என்பதுபோல் பாவனைக் காட்ட, அவள் காட்டிய அதே பாவனை அவன் முகத்திலும் பிரதிபலித்து அவன் கண்களும் விரிந்து

‘என்ன..’ என்று கையை மட்டும் ஆட்டி சைகையில் கேட்க,

‘அங்க பாரு…’ என்பதுபோல் அந்த பாறையை காட்டினாள்.

அவனும் என்னவோ என்று பாறையை பார்க்க, அவனுக்கு ஒன்றும் தெரியாமல் போக, மீண்டும் அவள் முகத்தைப் பார்த்தான்..

“ம்ம்ச்…” என்று இதழ் பிரிக்காமல் சொன்னவள், அப்படியே அங்கேயே குனிந்து அமர, அவனும் அதுபோலவே செய்ய,

‘இப்போ பார்…’ என்று அந்த பாறையின் இடுக்கை காட்டினாள்.

அந்த பாறைக்கு அடியில் இருந்த ஒரு சிறு செடி ஒன்று மெல்ல மெல்ல பாறையை முட்டி மோதிக்கொண்டு வெளியே வருவது தெரிந்தது.. சாதரணமாய் பார்த்தால் எதுவுமில்லாதது போல் தெரியும்.. ஆனால் அவள் காட்டுகிறாளே என்று சற்று கவனமாய் இம்முறை பார்த்தவன் கண்களில் அது பட,

‘வாவ்…’ என்றவன் அவளைப் பாராட்டாய் பார்க்க,

“ம்ம்…” என்று சிரித்தவள்,

“இங்க பாரு..” என்று கேமராவில் எடுத்திருந்த விடியோவைக் காட்டினாள்.

முதலில் லேசாய் அந்த சிறு செடி வெளிவரும் இடத்தில் அங்கிருந்த மண் லேசாய் அசைவதும் பின் மெல்ல மெல்ல உள்ளிருந்து கொஞ்சூண்டு மண் வெளியே வந்து, பின் மெதுவாய் மிக மெதுவாய் ஒரு பச்சை நிற மொட்டு போல் வெளிவருவதுமாய் இருக்க,

“வாவ்….” என்று இம்முறை வாய் விட்டே சொன்னவன், “எப்படி எப்படி இதை நோட்டீஸ் பண்ண??” என்றான் ஆர்வமாய்..

“நத்திங்.. ஜஸ்ட் இங்க நின்று பார்த்திட்டு இருந்தேன்.. கால்ல எறும்பு கடிச்சது, குனிஞ்சு லேசா காலை அறிக்கிறப்போ, அந்த இடதுல மண்ணு லைட்டா குட்டியா லேசா ஆடிச்சு… சரி உள்ள இருந்து என்னவோ வரப்போகுதுன்னு தோணவும் தான் வீடியோ எடுத்தேன்.. புல்லா எடுக்கிறக் குள்ள நீ வந்திட்ட…” என்று விளக்க,

“ம்ம் சாரி மதுபி…” என்றான் முகத்தை சோகம் போல வைத்து..

“வாட்?? என்ன சொன்ன???” என்று மதுபாலா திரும்பக் கேட்க,

“அது…” என்று தன் தலையை கோதியவன்,  “அது உன் கைல டாட்டூ..” என்று அவள் கை கட்டை விரலைக் காட்ட,

“ஹா ஹா..” என்று சிரித்தவள், கொஞ்சம் சத்தமாகவே சிரித்தாள்.

ரிஷிக்கு சட்டென்று அவன் வீட்டு நியாபகம் தான் வந்தது.. அங்கே யாரும் இப்படியெல்லாம் சத்தமாய் சிரித்திட முடியாது.. அவனது அண்ணன் ஸ்ரீநிவாஸ் திருமணம் முடிந்து, அவனது அண்ணி மைதிலி மருமகளாய் வந்த புதிதில், வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்க, வந்தவர்களில் ஒருவர் கொஞ்சம் ஹாஸ்யமாய் பேசிட,

மைதிலி கொஞ்சம் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள். அவ்வளவுதான் என்னவோ ரிஷியின் வீட்டினர் அனைவரும் அவளை ஒரு பெரும் குற்றம் செய்தவள் போல் பார்க்க, அதற்குமேலாய் ஸ்ரீநிவாஸ், அடுத்து வந்த இரண்டு நாட்களும் அவளை காய்ந்து கொண்டு தான் இருந்தான்.

ரிஷிக்கு சிரித்தது ஒரு குத்தமா என்று இருந்தது.. இப்போதெல்லாம் மிருகங்கள் கூட சிரிப்பது போல் புகைப்படங்கள் வருகிறது.. மைதிலி ஒரு மனுசி அவள் சிரித்தது தப்பா என்று தோன்ற,

அவன் அண்ணனைப் பார்த்தவன் ‘இவனெல்லாம் பல நூற்றாண்டு முன்னாடி கூட பிறந்திருக்க கூடாது…’ என்று நினைத்தவன்,

அன்றே இரவு அனைவரும் தரையில் வரிசையாய் அமர்ந்து உண்கையில் திடீரென்று வேண்டுமென்றே “ஹா ஹா ஹா…” என்று சத்தம் போட்டு சிரிக்க,   அனைவரும் அவனை ஒரு விஷ ஜந்து போல் பார்க்க,

அவனது அப்பாவோ சாம்பசிவமோ “ரிஷி….” என்று அழுத்தமாய் அவனைப் பார்க்க, அவனோ நான் இப்படித்தான் சிரிப்பேன் என்பதுபோல் பார்க்க,  சாம்பசிவம் அடுத்து கல்யாணியை முறைக்க, அவரும் ரிஷியைத் தான் ஒரு கண்டன பார்வைப் பார்த்தார்..

அதெல்லாம் இப்போது நியாபகம் வர, தன் தலையை வேகமாய் உலுக்கியவன் முன்னே அவனையே ஆராய்ச்சி செய்வது போல் கண்களை சுருக்கி பார்த்தபடி நின்றிருந்தாள் மதுபாலா..

அவளைப் பார்த்தவன் தன் எண்ணங்களை விடுத்தது, லேசாய் சிரிக்க, “நீ சரியில்ல…” என்று மட்டும் சொல்லிவிட்டு அவள் முன்னே நடந்துவிட,

“ஹலோ ஹலோ மதுபி.. என்ன நான் என்ன சரியில்ல..???” என்று கேட்டுகொண்டே அவள் பின்னே அவன் நடக்க, அதற்குள் டெலஸ்கோப் மையம் பார்த்து அனைவரும் திரும்பிக்கொண்டு இருக்க, மதுபாலா வேனில் ஏறி அமர்ந்துவிட்டாள்..

ரிஷிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.. இப்போது தான் இருவரும் இயல்பாய் பேசத் தொடங்கும் வேளையில், இப்படியா தனக்கு தன் வீட்டு நினைவு வந்து அது அவள் கணக்கில் தப்பாய் ஒரு விடை கொடுக்க, ‘நீ சரியில்லை..’ என்று சொல்லிச் செல்ல வேண்டும் என்று இருந்தது.

வேனில் ஏறியவன், பழைய இடத்திலேயே அமர்ந்துகொள்ள, “ரிஷி அண்ணா நீங்க ஏன் வரலை…” என்று ஒருவன் கேட்க,

“ஆல்ரடி பார்த்திருக்கேன் அதான்…” என்றான் மழுப்பலாய்..

மதுபாலா அடுத்து அவன் பக்கம் திரும்பவே இல்லை.. என்னவோ வேடிக்கை பார்த்து அமர்ந்திட, அடுத்து கொஞ்ச நேரத்தில் சைலேந்திரன் வந்து அவளிடம் அமர, என்னவோ ரிஷிக்கு வேகமாய் ஒரு பொறாமை புகை அவன் உடல் மனம் புத்தி என்று அனைத்திலும் பரவ,

அவனது பார்வையோ அவர்களிடமே தான் இருந்தது. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெளிவாய் எதுவும் கேட்கவில்லை, வேனில் பாடல் ஓடிக்கொண்டு இருந்தது.. அதுவும் இல்லாமல் அடுத்து கொஞ்ச நேரத்தில் இறங்கிட வேண்டும் என்பதால் எல்லாரும் அந்த பரபரப்பில் இருக்க, ரிஷிக்கோ என்னவோ சைலேந்திரன் மதுபாலாவிடம் விளக்கம் சொல்லிக்கொண்டு இருப்பது போல் இருந்தது.

‘என்னவா இருக்கும்…??’ என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே, வேன் ஏலகிரி மழையில் இருக்கும் பொன்னேரி என்ற கிராமத்தில் தன் ஓட்டத்தை நிறுத்தியது.

“ஓகே கைஸ்.. எல்லாரும் திங்க்ஸ் எடுத்துக்கோங்க.. இனிக்கு ஃபுல்லா ஸ்டே இங்கதான்… லஞ்ச் முடிச்சிட்டு போட்டிங் போகலாம்.. நைட் ஸ்டே பண்ணிட்டு மார்னிங் கிளம்பிடலாம்….” என்று சைலேந்திரன் சொல்ல, அனைவரும் வேனில் இருந்து இறங்கத் தயாராகினர்.. 

இவர்கள் வருவதற்கு முன்னேயே சமையல் ஆட்கள் வந்து அவர்களுக்கான மதிய உணவை தயார் செய்து வைத்திருக்க, எளிய உணவென்றாலும் அந்த இயற்கை சூழ்ந்த இடத்தில் அருமையாய் இருந்தது உணவு..

ரிஷி உண்டுவிட்டு அமர்ந்திருக்க, அவனருகே வந்த சைலேந்திரன், “ரிஷி ஃபார்ஸ்ட் டைம் வர்றீங்க பிடிச்சிருக்கா???” என்று கேட்க,

“ரொம்ப ரொம்ப சார்…” என்றவனின் பார்வை சற்று தள்ளி நின்றிருந்த மதுபாலாவின் மீது படிய,

அவனைப் பார்த்த சைலேந்திரன் “ரிஷி சொல்றேன்னு தப்பா நினைக்கவேணாம்.. மது.. அவக்கிட்ட ஒரு லிமிட்டோட இருக்கிறது தான் நல்லது…” என்று இலகுவாகவே சொல்ல,

“சார்…” என்று திரும்பியவன் முகத்தில் அப்பட்டமாய் கோவம் தெரிந்தது..

அப்படியென்ன நான் தப்பு செய்துவிட்டேன்.. அவளோ  ‘நீ சரியில்லை…’ என்று போகிறாளோ, இவரோ ‘நீ லிமிட்டாய் இரு…’ என்கிறார்,

நான் என்ன செய்துவிட்டேன் என்ற கோபம் வர, “எனக்கு என்னோட லிமிட்ஸ் என்னன்னு தெரியும் சார்…” என்றான் பல்லைக் கடித்து..

“ஹா ஹா நான் சொன்னதை தப்பா நினைச்சிட்டீங்க போல ரிஷி.. மது நம்ம நினைக்கிற போல நம்ம வீட்ல இருக்கவங்கள போல நார்மல் பொண்ணு இல்லை. அவ டோட்டலா வேற.. அதனால தான் சொன்னேன்.. மத்தபடி எனக்கும் கொஞ்சம் ஆளுங்களை ஜட்ஜ் பண்ண தெரியும்.. சோ உங்களை தப்பா நினைக்கல…” என்று சொல்லிவிட்டு செல்ல,

ரிஷிக்கு ‘அப்படி என்ன இவ ஸ்பெஷல்…’ என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் பிறந்தது..

கண்டிப்பாய் அவளிடம் எதுவோ ஒன்று வித்தியாசமாய் இருக்கிறது தான்.. ஆனால் சைலேந்திரன் வேறு இப்படி சொல்லிச் செல்ல, மனதில் அவனையும் மீறிய ஒரு ஆர்வம் பிறந்தது..

ஆர்வம் ஆசைக்கு முதல்படி.. ஆசை அனைத்திற்கும் காரணகர்த்தா… காதல் காரணம் பார்க்காது… ஆசை வெட்கம் அறியாது..            

 

 

                                   

           

   

Advertisement