Advertisement

                               மது – 13

நிச்சயம் முடிந்து மதுபாலா சென்னை கிளம்பி சென்றும் இரண்டு நாட்கள் ஆனது.. அவளை கொண்டு சென்று விடவென்று சென்ற ஸ்ரீநிவாஸ், மைதிலி இருவரும் இரு தினங்கள் கழித்து தான் திரும்பினர்..

ரிஷிக்கோ அவனது வீட்டினர் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் மதுபாலாவை ஏற்றுகொண்டது சந்தோசம் தான் என்றாலும், அவனுக்கு வந்ததில் இருந்து ஒரு எரிச்சல் இருந்துகொண்டே தான் இருந்தது.. அது என்னவோ அவனை விட மதுபாலா அவனது வீட்டினருக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதாய் பட, அவள் ஊருக்கு செல்கையில் கூட அவன் வழியனுப்ப வரவில்லை.

அப்படி ஒரு பிடிவாதம்.. அப்படி ஒரு கோபம்.. அப்படி ஒரு எரிச்சல்..

ஊருக்கு வா வா என்றார்கள். ஆள் மாற்றி ஆள் வா வா என்று பிடிவாதம் செய்தார்கள்.. சரியென்று அவனும் முயன்று முயற்சித்து வந்தால், இங்கேயோ அவரவர் அவரவர் பாட்டில் இருக்கிறார்கள். அவனுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற ஒரு எண்ணம்.

சுவிஸில் இருந்து ரிஷி இந்தியா கிளம்புவது என்பது அத்தனை எளிதாய் இல்லை.. கிட்டதட்ட இந்த எழு மாதங்களில் அவன் வாங்கிய சம்பளம் பகுதிக்கும் மேலானதை அவன் கட்டிவிட்டு திரும்பியிருக்கிறான்.. அதுவும் கூட சென்னைக்கு மாற்றலாகி போகிறான் என்பதால் இந்தளவு. இல்லையேல் இப்போதும் அவனால் கிளம்பியிருக்க முடியாது..

இத்தனை பாடுபட்டு, இத்தனை டென்சனில் இங்கே கிளம்பிவந்தால், மதுபாலா இத்தனை நாள் இந்தியா வா பேசுவோம் என்றவள், இப்போது  சென்னை வா பேசுவோம் என்று கிளம்பி போகிறாள், அவனது வீட்டினரோ ஒருவார்த்தை இப்போது வரைக்கும் எப்படி இருக்கிறாய் என்றுகூட கேட்கவில்லை..

அங்கே இருந்தவரை யார் பேசினாலும் ‘சாப்பிட்டியா… என்ன பண்ற?? நல்லா தூங்கி எந்திரி.. தலைவலின்னா கொஞ்சம் ரிலாக்ஸா இரு…’ என்று அத்தனை சூதானம் சொன்னவர்கள் இப்போதோ அவனை ஒருவார்த்தையும் பேசாமல் இருக்கவும்,  அப்போ தான் இருப்பதும் இல்லாததும் ஒன்றுபோல் என்றால், ஏன் என்னை இவ்வளவு பிடிவாதம் செய்து வரவைக்க வேண்டும் என்ற கடுப்பு..

முகத்தை உர்ரென்று வைத்தே மாடியில் உலாத்திக்கொண்டு இருந்தான்..

சாம்பசிவம் மனைவியிடம் என்ன பேசினாரோ கல்யாணி கீழிருந்தே “ரிஷி…” என்றழைக்க,

“என்னம்மா…” என்றான் கடுப்பாய்.

“கீழ வா.. மாடில என்ன பண்ற… நேரமாகலையா.. தூங்கேன்…”

“தூக்கம் வரல…” என்றவன் மணியைப் பார்த்தான்.

நேரம் ரொம்பத்தான் ஆகியிருந்தது.. இதற்குமேலும் இங்கே இருந்தால் பின் கல்யாணி கால் வலியோடு மேலேறி வருவார் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆக, கம்மென்று கீழிறங்கிப் போக,

“ரிஷி இவ்வளோ நேரம் என்ன பண்ண??” என்றபடி அவன் பின்னோடு கல்யாணி வர,

“சும்மாதான் வாக் பண்ணேன்…” என்றவன் கல்யாணி பின்னேயே வரவும் “என்னம்மா வேணும்…” என,

“உனக்கு என்ன ரிஷி பிரச்சனை.. உனக்கு பிடிச்ச பொண்ணத்தானே இப்போ பேசினோம்.. உன் முகத்துல அந்த சந்தோசம் கூட தெரியலை.. அவ கிளம்பி போறா, நீ கீழ கூட வரலை.. மது பாவம் மேல மேல பார்த்துட்டே போனா…” என்றபடி கல்யாணி அங்கேயே அமர, ரிஷியும் மௌனமாய் அங்கேயே அமர்ந்தான்.. 

“என்ன ரிஷி?? என்ன உனக்கு இப்போ… அதான் உனக்கு பிடிச்சது போல வேலை.. உனக்கு பிடிச்ச பொண்ணையே பேசியும் வச்சாச்சு.. இனியும் உனக்கு இங்க என்ன பிரச்சனை…??” என்று சாதாரணமாய் கேட்க,

கல்யாணியை நிமிர்ந்துப் பார்த்தவன், “அதெப்படிம்மா எல்லாமே பண்ணிட்டு எல்லாருமே ஒண்ணுமே தெரியாதது போல இருக்கீங்க…” என,

“நாங்க என்னடா பண்ணோம்…” என்று வாய் பிளந்தார் கல்யாணி..

“ம்ம்ச் ஒண்ணுமில்ல விடுங்க…”

“ஹ்ம்ம் உன்னை என்ன எதுன்னு கேட்டாலும் குத்தம்.. கேட்கலைனாலும் குத்தம்.. எங்களை என்ன பண்ண சொல்ற ரிஷி.. இங்க பாரு எல்லாமே உனக்கு பிடிச்ச மாதிரி இருக்காது.. சிலது நம்மளும் அனுசரிச்சு தான் போகணும்… நீ என்ன நினைச்ச, வந்ததுமே கண்ணா ராஜான்னு உன்னை தலையில தூக்கி வச்சு கொண்டாடுவாங்கன்னா..??” என,

“ம்மா…” என்று கண்களை விரித்தான்..

“ஆமாடா அம்மாதான்.. அதான் வெளிநாடு போனவன், எனக்கு ஒருவார்த்தை பேசாம, பார்த்து பழகி ஒருவாரமே ஆனா மதுபாலாக்கிட்ட பேசின.. அந்த நிமிஷம் நானும் அங்கதான் இருந்தேன்.. எனக்கு எப்படி இருந்தது தெரியுமா???.. அதுக்கப்புறமும் கூட மது சொன்னதுனால தானே என்கிட்டே பேசின..” என்று மனத்தில் இத்தனை நாள் அமிழ்த்தி வைத்திருந்த கோபத்தை எல்லாம் கல்யாணி வெளிக்காட்ட,

ரிஷிக்கே சங்கடமாய் போனது.. இதை மதுபாலாவும் அடிக்கடி சொல்லியிருக்கிறாள் தான்..

‘ரிஷி எதுவா இருந்தாலும் நீ உங்க ஃபேமிலில முதல்ல பேசு.. நான் யாரு உனக்கு இப்போ வந்தவ..’ என

‘நீ எப்போ வந்தவளா இருந்தாலும்.. யூ ஆர் மைன் மதுபி..’ என்று ரிஷி பல்லைக் கடித்து பதில் கூறுகையில் மதுபாலா கோபத்தை அடக்கி சும்மா இருப்பாள்..

ஆனால் ரிஷிக்குத் தெரியாதே தன் குடும்பம் மொத்தமும் அங்கே மதுபாலா வீட்டில் இருந்திருக்கிறார்கள் என்று.. அவனுக்கு என்னவோ அந்த நேரத்துக் கோபம் யாரோடும் பேசும் எண்ணம் அவனுக்கு வரவில்லை.. ஆனால் இங்கே வந்தபிறகோ அப்படியே இருக்க முடியுமா என்ன??       

யாரும் தன்னை கண்டுகொள்ளவில்லை என்ற கடுப்பில் இருக்க, கல்யாணியோ உனக்கிருப்பது போலத்தான் எல்லாருக்கும் உணர்வுகள் இருக்கும் என்று சொல்லாமல் இப்போது சொல்லிட, ரிஷிக்கு கொஞ்சம் சங்கடமாய் தான் போனது..

“ம்மா என்னம்மா…???” என்று கேட்டபடி கல்யாணி அருகில் வந்து அமர,

“பின்னே என்னடா.. உன்னை கண்டுப்பிடிக்கிறக்குள்ள எங்களுக்கு எப்படி இருந்தது தெரியுமா.. நீ போன கொஞ்ச நாள்ல மைதிலியும் அப்படி பண்ணிட்டா.. சில விசயங்கள் நாங்களும் புரிஞ்சு நடந்துக்கணும்தான்.. தப்பு எங்க பேர்லயும் இருக்கு.. அதுக்காக வீட்டை விட்டு போறதும், சூசைட் ட்ரை பண்றதும் சரியாகிடுமா சொல்லு…” என, ரிஷி ஒன்றுமே பேசாமல் அமைதியாய் தலையை தொங்க போட்டு அமர்ந்திருந்தான்..

கல்யாணியும் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.. ரொம்பவும் ஒரேதாய் சொன்னால், அதுவேறு ‘நான் பண்ணது எல்லாம் தப்பு…’ என்று தேவையில்லாததை எல்லாம் எண்ணி வருந்துவானோ என்றும் இருக்க,

“சரி போ.. போய் தூங்கு..” என்று எழுந்து சென்றுவிட்டார்…

ரிஷியும் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தவன் பின் உறங்கச் சென்றுவிட, அடுத்து இரண்டு நாள் கழித்துத்தான் ஸ்ரீநிவாஸ், மைதிலி வீடு வந்தனர்..

மதுபாலாவும் சென்னை சென்ற பிறகு, அத்தனை இவனோடு பேசவில்லை.. பேசும் நேரமும் கிடைக்கவில்லை…

இவன் அழைக்கும் நேரத்தில் “ரிஷி.. நானும் அக்காவும் ஷாப்பிங்ல இருக்கோம்.. வீட்டுக்கு போயிட்டு கால் பண்றேன்…” என்பாள்,

‘வீட்டுக்கு போயாச்சா???’ என்று கேட்டால்,

“இப்போதான் ரிஷி வந்தோம்… யப்பா செம டயர்ட்… ஸ்ரீனி அண்ணா அவங்க பிரன்ட்ட பாக்க போயிட்டாங்க.. சோ நானும் அக்காவும் தான் ஏதாவது செஞ்சு சாப்பிடனும்…” என்பாள்..

இதெல்லாம் போதாது என்று, சாம்பசிவமோ ரிஷியை அழைத்து “உனக்கு பிடிச்ச வேலை.. உனக்கு பிடிச்ச பொண்ணு.. ரெண்டுமே இப்போ உன் லைப்ல இருக்கு.. சோ இதுக்குமேல உன் வாழ்க்கை உன் விருப்பம் ரிஷி.. நாங்க எதுவும் சொல்லமாட்டோம்…. ஆனா உனக்குன்னு இருக்கிற பொறுப்புகள் நீ எங்க போனாலும் உன்கூட தான் வரும்..” என்றவர்,

“வேலைல எப்போ ஜாயின் பண்ணனும்..” என,

“இன்னும் ஃபோர் டேஸ்ல ப்பா…” என்றான் ரிஷி..

“ம்ம்.. எங்க ஸ்டே பண்ணுவ???”

“தெரியலை.. அங்கப் போய்தான் பார்க்கணும்…”

“சரி.. பார்த்துக்கோ…” என்றுவிட்டு சென்றுவிட்டார்..

இதேது முன்மாதிரி என்றால், ‘நம்ம கெஸ்ட் ஹவுஸ் இருக்கே அங்க இரு..’ என்றிருப்பார், இல்லையா,

‘அங்க போய் நீ அலஞ்சு திரிஞ்சு எல்லாம் பார்க்கிறது கஷ்டம்..’ என்று சொல்லி அவருக்குத் தெரிந்தவரை வைத்து எப்படியேனும் ரிஷி தங்குவதற்கு ஒரு இடம் பார்த்திருப்பார்..

ஆனால் இப்போதோ, சரி உன் விருப்பம் பார்த்து செய் என்று சென்றுவிட, ரிஷிக்கு இப்போது அனைத்துமே சங்கடம் தருவதாய் இருந்தது..

தான் வீட்டை விட்டு போனால் தான் இவர்களுக்கு எல்லாம் புரியும் என்று எண்ணியவனுக்கு, தான் கிளம்பிப் போனதே தவறோ என்று தோன்ற ஆரம்பித்திருந்தது..

ஒருவேளை இதைத்தான் மதுபாலா அன்று சொன்னாளோ என்று தோன்ற, சரியாய் அந்த நொடி அவளே அழைத்துவிட்டாள்.

ஆனால் ரிஷி இருக்கிறானே, உடனே மலை இறங்குவானா என்ன?? சிறிது நேரம் விட்டே தான் ஃபோனை எடுத்தான்..

“ஹலோ ரிஷி.. நீ எப்போ சென்னை வர…” என்றவளின் குரலில் உற்சாகம் தொனிக்க,

“ஏன்?? சென்னை வந்து நான் என்ன செய்ய??” என்றான் அவளது எண்ணங்கள் புரியாதவன் போல்.

“அட… நீ ஜாயின் பண்ணனுமே…”

“ம்ம் ஆமா…” என்றவன் “வரணும்.. வருவேன்.. எப்போ எப்படின்னு தெரியலை..” என்று வசனமிட,

“ஹா ஹா சரி.. வர்றபோ சொல்லு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்…” என்றவள், “அந்த டீ கடைல வெய்ட் பண்ணு..” என,

“அடிப்பாவி மதுபி.. அப்போ என்னை மறுபடி லாரில வர சொல்றியா??” என்றான் வேகமாய்..

உடனே அவளிடம் சமாதானமாய் போகிவிட கூடாது என்று நினைத்தவன், மதுபாலா பேசியதும் அதுவும் அவளை முதன்முதலில் கண்ட இடத்தில் காத்திருக்க சொல்லவும் அவனது கோபம், பிடிவாதம் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை..

“ஹா ஹா.. அது உன் இஷ்டம்.. எப்படிவேனா வா.. ஆனா வா…”

“ஹ்ம்ம் உனக்கென்னம்மா சொந்தமா பிஎம்டபிள்யூ எல்லாம் வச்சிருக்க.. நான் அப்படியா???” என்று வேண்டுமென்றே வம்பு பேச,

“சம்பாரிச்சு வாங்கு.. அவ்வளோதான் சிம்பிள்…” என்று வெகு சிம்பிளாய் முடித்துவிட்டாள்..

“ஹ்ம்ம் சரிங்க மதுபி மேடம் வாங்கிடலாம்..” என்றவன் “இப்போதான் எனக்கு ஃபோன் பண்ணத் தெரிஞ்சதா…” என்றான் கொஞ்சம் அழுத்தமாய்..

“வாட் ஐ டூ ரிஷி.. அக்கா அண்ணா இங்க இருந்தாங்க.. நான் உன்கூட பேசிட்டு இருந்தா முடியுமா?? நம்ம என்ன பேசாமயே இருந்திட போறோமா என்ன??”

“எது சொன்னாலும் ஒரு ரீசன் சொல்லிடு மதுபி… பட் எல்லாருமே ரொம்ப மாறிட்டீங்க..”

“ஓ.. காட் ஆரம்பிச்சுட்டியா..?? நீ இங்க வா ஃப்ரீயா பேசிக்கலாம்.. தென் ஒன்திங் மாற்றம் ஒன்றே மாறாதது..” என்றவள் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டே அலைபேசியை வைக்க, ரிஷிக்கு கொஞ்சம் நிம்மதியான உணர்வு தோன்றியது..

இதுதான் இன்னதுதான் என்று தெரியாமல் அவன் மனதில் ஒருவித அலைப்புருதல் இருக்க, அதுவே அவனுக்கு பலவேறான உணர்வுகள் தர, இப்போதோ அதெல்லாம் கொஞ்சம் மட்டுப்பட்டதாய் இருந்தது.. 

ஸ்ரீநிவாஸ் மைதிலி வந்தபிறகும் வீட்டில் எவ்வித வித்யாசமும் அவனுக்குத் தெரியவில்லை. அவரவர் அவரவர் வேலையை பார்த்துகொண்டு இருந்தனர்.. என்ன மைதிலி முன்னைவிட கொஞ்சம் இப்போதெல்லாம் வாய் திறந்து பேசுகிறாள்..

அடிக்கடி சிரித்த முகமாய் காணப்படுகிறாள்.. ஸ்ரீநிவாஸ் கூட கொஞ்சம் மாறியிருப்பதாய் பட்டது.. வீட்டிற்கு வந்து மனைவியோடு கொஞ்சம் நேரம் செலவழிக்கிறான். ரிஷியும் எல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்..

இடையில் மைதிலி ஒருநேரம் சும்மா ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருக்க, ரிஷியும் அங்கே அமர்ந்திருந்தவன், கேட்போமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்க மைதிலியே “என்ன ரிஷி யோசனை பலமா இருக்கே..” என,

“ஹம்மா சும்மாதான் அண்ணி.. கொஞ்சம் பேசனும்.. ஆனா பேசலாமா வேணாமான்னு யோசனை..” என்றான்..

“எதுவா இருந்தாலும் பேசு ரிஷி.. நம்ம வீட்ல முன்னாடி இருந்த பிரச்சனையே இதுதான் யாரும் யார்கூடவும் மனசு விட்டுப் பேசாதது.. இப்போதான் கொஞ்சம் மாறிருக்கு…”

“நானும் கவனிச்சேன் அண்ணி.. பட்..” என்று தலையை கோதியவன், “சாரி அண்ணி.. நான் இங்க இருந்திருந்தா கண்டிப்பா உங்களுக்கு இப்படி ஒரு தாட் வர விட்டிருக்கமாட்டேன்…” என,

“ஹா ஹா…” என்று மைதிலியும் மதுபாலா போலவே சிரிக்க, ரிஷி ஆச்சர்யமாய் பார்த்தான்..

“என்ன ரிஷி பார்க்கிற???” என்றவள் அதே சிரிப்போடு, “தப்பு சரின்னு பார்த்தா அது எல்லார் மேலவும் தான்.. என் மேலயும் தப்பிருக்கு…” என,

“இல்ல அண்ணி அது…” என்று ரிஷி மேலே பேச வர,

“விடு ரிஷி.. எல்லாமே எல்லாருக்கும் ஈசியா செட்டாகிடாது.. எந்த ஒரு விசயத்துக்கும் சில டைம் வேணும்.. அந்த டைம் தான் இப்போ எல்லாருக்கும் கிடைச்சது.. நீ போனது.. நான் இப்படி பண்ணது.. தென் மது நம்ம எல்லார் லைப்ல வந்தது..” என்றவள், மீண்டும் தானாகவே புன்னகைத்து,

“அவளைப் பார்த்து தான் எனக்கு மனசுல ஒரு தைரியம்.. யாருமே இல்லாம இந்த பொண்ணு எவ்வளோ அழகா லைப் ஹான்டில் பண்ணிட்டு இருக்கா.. நம்ம இப்படி எல்லாத்தையுமே நெகட்டீவா பார்த்து நம்ம பிரச்சனை இழுத்துட்டோமேன்னு..” என்று சொல்ல, ரிஷியும் புன்னகைத்துக் கொண்டான்..

அடுத்து அங்கே ஸ்ரீநிவாஸ் வந்திட, அவனோடும் கொஞ்சம் நேரம் பேச,               அந்தா இந்தாவென்று அடுத்து ரிஷி சென்னை கிளம்பும் நாளும் வந்துவிட, இரவு பஸ் ஏறினால் போதும் என்று அவனுக்குத் தேவையானதை மிக மிக அத்தியாவசியமானதை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டான்..

சாம்பசிவம் “கார்ல போகவேண்டியது தானே…” என்றார் பொதுவாய் யாருக்கோ சொல்வது போல்..

“இல்லப்பா வேணாம்.. நான் சம்பாரிச்சு வாங்கிக்கிறேன்…” என்று ரிஷி சொல்ல,

“ரிஷி எடுத்துட்டு போடா.. அங்க நீ வெளிய போறதுன்னா வேணுமே…” என்று ஸ்ரீநிவாஸ் சொல்ல,

“இல்லண்ணா.. நான் பார்த்துக்கிறேன்…” என்றவன், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்..

என்னவோ மனதில் ஒரு பிடிவாதம் இனி எதுவாக இருந்தாலும் தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று.. அன்று எப்படி வீட்டில் இருந்து கிளம்பி வருகையில் இனி எல்லாமே நானே சமாளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததோ அதுவே இப்போதும்..

அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.. பஸ் டிக்கட் கூட முன்னேயே பதிவு செய்யவில்லை.. கிடைக்கும் பஸ்ஸில் போகலாம் என்றிருந்தான்.. மதுபாலாவிற்கும் கிளம்பிவிட்டேன் என்று சொல்லவில்லை.. நேராய் போய் அவள் வீட்டிலே நின்று சின்னதாய் அவளை ஆச்சர்யப் படுத்த ஆசை..

ஆக அப்படியே கிளம்பிவிட்டான்..

கிடைத்த பேருந்தில் ஏறி மாறி மாறி பயணம்.. அதுவே ஒருவித புத்துணர்வு கொடுத்தது.. பிடித்த பாடல்களை இயர் போன் வழியாக கேட்டபடி நள்ளிரவில் ஒரு பயணம்..

அதுவும் அவனுக்கு பிடித்தவள்… பிடித்த வேலை.. இனி அங்கே அமையும் வாழ்வும் பிடித்திடுமோ.. எப்படியாக இருந்தாலும் அதை அவனுக்கு பிடித்தமாக மாற்றிகொள்ள வேண்டும் என்ற உறுதி அவனுள் இருந்தது..

இனி எதை கொண்டும்.. எத்தனை கண்டும் எதற்காகவும் எதைவிட்டும் போய்விடக்கூடாது… போகவும் மாட்டேன் என்ற திடம் அவனுள் இப்போது..

“மதுபி…. ஐம் கம்மிங்.. இந்த டைம் புது ரிஷியா.. புது மனுசனா.. புது புது லவ்வோட… புதுசான ஒரு வாழ்க்கைக்காக… ஐம் கம்மிங் மதுபி…” என்று சொல்லிக்கொண்டான் இதழில் எட்டிப்பார்த்த சிரிப்போடு…

அங்கே மதுபாலாவிற்கோ உறக்கமே இல்லை.. நாளை ரிஷி வருகிறான்.. யாரென்றே தெரியாத போது அவனை எதிர்கொள்ள எளிதாய் இருந்தது அவளுக்கு ஆனால் இப்போதோ என்னோவோ ஒரு புதுவித பரவசம்.. ஒரு எதிர்பார்ப்பு..

படுத்திருந்தவள் வேகமாய் எழுந்து போய், முன்னே அவன் வந்தபோது தங்கியிருந்த அறையில் மீண்டும் அனைத்தும் சரியாய் இருக்கிறதா என்று பார்த்து வந்தாள்..

அவன் வந்து இங்கு தாங்குவானா அதெல்லாம் தெரியாது இருந்தாலும் ஒருமுறை அந்த அறையை சரிபார்த்துவிட்டு வந்து படுத்தாள்.. ஒரு வித பரவசம் ஒருவித படபடப்பு.. சின்னதாய் ஒரு புன்னகை… முதல் முறையாய் அவள் வாழ்வில் இப்படியான உணர்வுகள்..

ஆசையாய்.. ஆவலாய் காத்திருந்தாள் ரிஷிநித்யனுக்காக..    

Advertisement