Advertisement

மது – 11

ஆறு மாதங்கள்…

ரிஷி திரும்பவும் இந்தியா வந்து சேர ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.. மதுபாலா “எதுவாக இருந்தாலும் நீ இந்தியா வந்தபிறகு தான்…” என்று தெளிவாகவும், பிடிவாதமாகவும் சொல்லிவிட,  அவனோ அதற்குமேலான ஒரு பிடிவாதத்தில் இருந்தான்..  

“நான் வருவேன் மதுபி.. பட் நீ உன் முடிவை சொன்னாத்தான்…” என்று ஆரம்பித்து அடுத்தடுத்து எத்தனையோ சண்டைகள் வாக்குவாதங்கள்..

அன்று இரண்டாம் முறையாய் பேசும்பொழுது அவளால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. இத்தனை வருடங்களில் அவள் இப்படி அழுததேயில்லை.. ஆனால் கல்யாணியைக் கட்டிக்கொண்டு அழுதுவிட, அவரோ என்ன சொல்லி இந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்வது என்பதுபோல் மைதிலியைப் பார்த்தார்.

“மதுபாலா என்னாச்சு?? ரிஷி என்ன சொன்னான்?? ஏன் இப்படி அழற??” என்று மைதிலி கேட்க,  கல்யாணியும் “என்னாச்சும்மா அவன் எதுவும் சொன்னானா???” என,

இல்லை என்று தலையசைத்தவள், முகத்தை அழுந்த துடைத்து நிமிர, “எனக்கு.. எப்படியோ இருக்கு ஆன்ட்டி…” என, இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை..

“எனக்கு இதெல்லாம் பழக்கமேயில்லையா… எல்லாமே புதுசா நடக்கும்போது அதை உடனே ஏத்துக்கவும் முடியாம, விடவும் முடியாம கஷ்டமா இருக்கு.. எனக்கு ரிஷியைப் பிடிக்கும்.. ஆனா.. அவன் சடனா பேசினதுபோல என்னால பேச முடியலை..” என, கல்யாணிக்கு அவளின் மனநிலை நன்றாகவே புரிந்தது..

“ம்ம் ரொம்ப பிடிவாதமா பேசுறானா??” என்றவரின் குரலில் அவன் அப்படித்தான் பேசியிருப்பான் என்று தெரிந்தது போல் சொல்ல,

“பிடிவாதம்னு சொல்ல முடியாது ஆன்ட்டி ஆனா இதெல்லாம் போன்ல மட்டுமே பேசுற விசயமில்லையே…”  என்றாள்.

“மது… உனக்கு இங்க நாங்க எல்லாம் இருக்கிறது கம்பர்டபிளா இல்லையா?? ஒருவேளை அதுனால கூட உனக்கு ரிஷிக்கிட்ட மனசு விட்டு பேச முடியலையோ…” என்று மைதிலி கேட்டதில், வேகமாய் அவள்பக்கம் திரும்பியவள்,

“நோ நோ அக்கா.. அப்படியெல்லாம் இல்லை.. அது.. இத்தனை வருசமா.. ஐ மீன் அம்மா போனதுக்கு அப்புறம் நான் எனக்கு நானேன்னு இருந்திட்டேனா. இப்போ திடீர்னு ஒரு பேமிலி சூழல் வரவும் நான் அதுல சரியா பொருந்துவேனான்னு பயம்.. அவ்வளோ ஏன் ரிஷி இங்க இருந்தப்போவே, எந்தவித ரிலேஷன்ஷிப்பும் இல்லாமையே எங்களுக்குள்ள அவ்வளோ சண்டை அப்போ..

ஆனா நாளைக்கு எங்களுக்குள்ள ஒரு உறவு வந்து, ஒரே வீட்ல அதுவும் நீங்க எல்லாம் இருக்கும் போது, என்னால உங்க எல்லார்கூடவும் பொருந்தி போக முடியுமான்னு ஒரு பயம்..” என்று தன்னிலையை விளக்க,

“ம்ம் சரி.. எதுவும் இப்போ உடனே நடக்க போறதில்லையே…” என்ற கல்யாணி, “மைதிலி நீ இவள உள்ள கூட்டிட்டு போ.. நான் உங்க மாமாக்கிட்ட பேசிட்டு வர்றேன்…” என,

இருவரும் உள்ளே செல்ல, கல்யாணி தன் கணவருக்கு அழைத்து நடந்ததை கூற, அந்த பக்கம் சாம்பசிவமும் ஸ்ரீநிவாஸ், மதுபாலாவின் பூர்வீகம் பத்தி விசாரித்ததைக் கூறினார்.

“மதுபாலாவோட அப்பாவும் அம்மாவும் பிரிஞ்சது மதுபாலா பிறந்தப்போ.. மதுவோட அப்பா அம்மா, ரெண்டுபேருமே பெரிய குடும்பம்தான்.. மது பிறக்கும்போது அவளோட அம்மாக்கு கொஞ்சம் ஹெல்த் பிராப்ளம் ஆகிடுச்சு.. இன்னொரு குழந்தை பெத்துக்க கூடாதுன்னு டாக்டர்ஸ் சொல்லவும், மது அப்பா வீட்ல, வாரிசு வேணும்னு அவருக்கு கட்டாயமா ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க..

அதுனால மதுவோட அம்மா, அங்க போகவேயில்ல.. கொஞ்ச நாள்ல  குடும்பதுக்குள்ளயே பேசி ரெண்டு பேருக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லைன்னு முடிவு பண்ணிட்டாங்க.. மது அப்பாக்கு இதுல கொஞ்சமும் விருப்பமில்லை.. ஆனா மது அம்மாதான் இனிமே இந்த வாழ்க்கை தேவையில்லைன்னு முடிவா சொல்லிருக்காங்க.. மது அப்பா வீட்டு சைட்ல இருந்து மதுக்குன்னு எழுதி வச்ச சொத்து எல்லாம் கூட வேண்டாம்னு திருப்பிக் கொடுத்திருக்காங்க மதுவோட அம்மா..” என்று சாம்பசிவம் சொல்ல,

“அதானே… இதெல்லாம் என்ன ஒரு எண்ணம்.. ஏன் பொண்ணு பிறந்தா அது வாரிசாகாதா?? இதுல சொத்து மட்டும் கொடுத்தா சரியா போயிடுமா என்ன?? மது அம்மா சரியாதான் பண்ணிருக்காங்க..” என்று ஒரு பெண்ணாய் கல்யாணி பொரிய,

“ஷ் கல்யாணி நான் சொல்றதை கேளு.. இதெல்லாம் அந்த பொண்ணுக்கு  தெரியுமா தெரியாதான்னு தெரியலை..” எனும்போதே,

“அவளுக்கு இவ்வளோ விபரம் எல்லாம் தெரியாதுங்க.. மதுவே அன்னிக்கு அவளுக்குத் தெரிஞ்சது எல்லாம் என்கிட்ட சொன்னா. ஆனா இவ்வளோ எல்லாம் அவளுக்குத் தெரியாதுன்னு தான் நினைக்கிறேன்.. தெரிஞ்சிருந்தா அவளே சொல்லிருப்பாளே…” என்றார் கல்யாணி.

“ம்ம்.. சரி.. மதுவோட அம்மாவழி பாட்டி இறந்ததுக்கு அப்புறம் தான் மதுவோட அம்மா, இங்க வந்துட்டாங்க… ஒரே ஊர்ல இருந்தாலும் கூட, மதுவோட அப்பாவை அவங்க அடுத்து பார்க்கக்கூட இல்லை.. ஆனா பண்ணின பாவம் சும்மா விடாது இல்லையா.. அதுதான் இப்போ மது அப்பா குடும்பத்துலையும் ஒருத்தரும் இல்லை.. மது அம்மா வீட்டு பக்கமும் அப்போவே ஆளுங்க கம்மிதான்..”

“ம்ம்ம்.. அதுக்கென்ன இப்போ.. மதுபாலாக்கு நம்ம இருக்கோம்.. அந்த பொண்ணு இன்னிக்கு அவ்வளோ அழுகை.. ரிஷி ரொம்ப பிடிவாதம் பண்றான் போல…” என,

“நீயும் உன் பையன் போல நீயாவே முடிவு எடுத்திட்டியா கல்யாணி…” என்ற சாம்பசிவத்தின் குரலில் ஒருநொடி கல்யாணி திடுக்கிட்டுத்தான் போனார்..

எங்கே இந்த மனிதர் பேசுவதெல்லாம் பேசிவிட்டு கடைசியில் முடியாது என்று சொல்லிடுவாரோ என்று பயம் மேலிட, “என்னங்க??!!!” என்று கல்யாணி கேட்க,

“இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவேண்டாம்.. முதல்ல ரிஷி இங்க வரட்டும்.. அந்த பொண்ணும் கொஞ்சம் ரிலாக்ஸாகட்டும்…” என,

“அதுங்க.. நான் மதுவை கும்பகோணம் கூட்டிட்டு வரவா.. பாவம் இங்க தனியாத்தானே இருக்கா. மைதிலியும் அவக்கூட பேசுறப்போ ரிலாக்ஸா இருக்கா…” என,

அமைதியாய் இருந்தவர் “என்னவோ பண்ணுங்க…” என்று சம்மதம் என்று சொல்லாமல் சம்மதித்து பேசி முடித்தார்..

ஆனால் மதுபாலாவை கிளப்புவது என்பது அத்தனை எளிதானதாய் இல்லை.. அதிலும் கிளம்புவது என்றால் மறுபடியும் ரிஷி அழைத்த பின்னே தான் கிளம்ப முடியும் என்றிருக்க,  ரிஷி மறுநாளும் அழைத்து தான் சொன்னதையே சொல்ல, “இங்க பாரு ரிஷி.. இப்போ நீ உங்க வீட்ல பேசல, நான் மறுபடியும் கிளம்பி எங்கயாவது போய்டுவேன்.” என்று மதுபாலா மிரட்ட,

“ம்ம் அப்போ நீ ஒரு மொபைல் ஃபோன் வாங்கு…” என்றான் அவன்.

“நீ வீட்டுக்கு பேசு…” என்று அவளும், “நீ மொபைல் ஃபோன் வாங்கு…” என்று அவனும் மாறி மாறி சண்டை போட்டு, கடைசியில் இருவருமே இரண்டையும் செய்தனர்.

ரிஷி ஒருவழியாய் கல்யாணியின் அலைபேசிக்கு அழைத்திட, கல்யாணிக்கு முதலில் பேசவே வரவில்லை.. அம்மாவும் மகனும் பேசட்டும் என்று மைதிலியும், மதுபாலாவும் கிளம்பி வெளியே சென்றிட, வரும்போது மதுபாலா புதிதாய் ஒரு அலைபேசி  வாங்கிக்கொண்டு வந்தாள்.

என்ன இருந்தாலும் அம்மா இல்லையா.. முதலில் அவருக்குத் தானே அவன் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். அந்த கோபம் மனதில் வர, முதலில் எடுக்காமலே இருக்க, அவனோ விடாது அழைக்க, பின்னே ஒருவழியாய் எடுத்தார்..

“ஹலோ அம்மா…” என்று ரிஷி சொல்லும்போதே “போடா..” என்று கோபத்திலும், மகன் பேசிவிட்டான் என்ற மகிழ்ச்சியும் கலந்து ஒலிக்க,

“ம்மா…” என்று சொன்ன ரிஷிக்கும் அடுத்து பேச்சு வரவில்லை..

அவனுக்கு அவனது வீட்டில் ரொம்ப ரொம்ப பிடித்ததே அம்மா தான்.. ஆனால் அவருமே கூட தன்னை புரிந்துகொள்ளாமல் இருக்கிறாரே என்ற வருத்தம் தான் அவனை முதலில் வீட்டை விட்டு கிளம்பச் செய்தது. ஆனால் இப்போது கல்யாணியோடு பேசவும் அவனுக்கு மனதிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது..

“சாரிம்மா…” என்ரவனது குரலில் அத்தனை வருத்தம் தெரிய,

“தப்பு எங்க மேலையும் தானே ரிஷி…” என்றவர் மேற்கொண்டு அவர்கள் வீட்டில் நடந்தவைகளை எல்லாம் கூற, மைதிலியை எண்ணி ரிஷிக்கு மிகுந்த வருத்தமாய் போனது.. ஒருவேளை தான் அங்கிருந்தால் இதெல்லாம் நேர்ந்தேயிருக்காதோ என்று தோன்ற,

“அண்ணிகிட்ட பேசணுமேம்மா…” என்றவனுக்கு முதலில் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்த கல்யாணி, “மைதிலி ஸ்ரீனி ரெண்டுபேரும் வெளிய போயிருக்காங்கடா.. நீ.. நீ அப்பாக்கிட்ட பேசு..” என,

“ம்ம்ம் இல்லம்மா இப்போ வேணாம்.. ஆனா கண்டிப்பா பேசுறேன்..” என்று சொல்ல, கல்யாணி  தப்பித்தவறி கூட மதுபாலாவை சந்தித்ததை பற்றி கூறவேயில்லை.

அவனுமே வேறெதுவும் பேசாமல், தங்கள் வீட்டை பற்றி மட்டும் பேச, அது முழுக்க முழுக்க அம்மா மகனுக்கான பேச்சாய் மட்டுமே இருந்தது. கல்யாணி முடிந்தமட்டும் சீக்கிரம் கிளம்பி வா என்று சொல்லியிருந்தார்.. கல்யாணியோடு பேசியபிறகு, ரிஷிக்குமே இப்போது மனதில் ஒரு நம்பிக்கை. கண்டிப்பாய் தன்னையும் புரிந்து மதுபாலாவையும் ஏற்றுகொள்வார்கள் என்று.

ஆனால் வெளிநாட்டு வேலையில் அப்படியெல்லாம் உடனே கிளம்பி வந்திட முடியாதே.. ஆனாலும் முயற்சித்தான்…

இதற்கிடையில் மதுபாலா நான்கு முறை கும்பகோணம் சென்று வந்துவிட்டாள்.. முதல்முறை போன போது, கல்யாணி மைதிலி இருவரைத் தவிர ஆண்கள் இருவரும் அத்தனை ஒன்றும் பேசிடவில்லை. ஆக இரண்டே நாட்களில் கிளம்பிவிட, அடுத்த இருபது நாளில் ஸ்ரீநிவாஸும் மைதிலியும் வந்திருந்தனர் சென்னைக்கு..

“எனக்கு ஃபைனல் கவுன்ஸிலிங் இருக்கு மது…” என்றவள், “ஊருக்கு போறப்போ நீயும் வாயேன்..” என,  “இல்லக்கா இப்போ வேணாம்…” என்று மதுபாலா மறுக்க,

“அம்மா ரொம்ப ஆசைப் படுறாங்க..” என்று ஸ்ரீநிவாஸ், மறைமுகமாய் அவனது அழைப்பையும் வைக்க, அடுத்து இதுவே ஒவ்வொரு முறையும் தொடர்ந்தது.

சைலேந்திரன் ஒரே ஒரு முறை மட்டும் தான் மதுபாலாவோடு கலந்து பேசினார். அதுவும் என்ன முடிவு செய்திருக்கிறாய் என்பது மட்டுமே.. ரிஷியிடம் தன் முடிவை சொல்லவில்லை என்றாலும், மதுபாலாவின் நடவடிக்கைகளில் அனைவருமே அவள் மனதை புரிந்துகொண்டாலும், சைலேந்திரனிடம் சொல்ல வேண்டியது அவளது பொறுப்பாய் இருந்தது.

அவளது முடிவை சொன்ன போதோ, “ஹ்ம்ம் இதை கேம்ப் வந்த முதல் நாளே நான் எக்ஸ்பெக்ட் பண்ணேன் மது..ரிஷி.. குட் சாய்ஸ் தான்.. எப்பவும் இதே போல தைரியமா இருக்கணும்…” என்றவர் அவரது எல்லையறிந்து நின்றுவிட, இங்கே நடப்பது எதுவுமே ரிஷிக்கு மட்டும் தெரியாமல் இருந்தது..     

ரிஷிக்கும் மதுவிற்குமான உறவு அலைபேசி மூலம் வளர, அவளோ கடைசி வரைக்கும் தன் முடிவு என்னவென்று சொல்லவேயில்லை. அவனுமே வேலையை விட்டு எல்லாம் வரவில்லை, சுவிஸில் இருக்கும் அதே கம்பனி இங்கே சென்னையிலும் இருக்க, மாற்றல் வாங்கிக்கொண்டு வந்தான் அவ்வளவே..

அவன் கிளம்புவதற்கு முதல் நாள் கூட கேட்டான் “மதுபி.. இப்போ வரைக்கும் நீ எதுவுமே சொல்ல மாட்டேங்கிற…” என,

“இங்க பாரு ரிஷி.. நீ இங்க லேண்ட் ஆனதும் நேரா கும்பகோணம் தான் போற.. பார்ஸ்ட் உன் பேமிலியோட செட்டாகு.. கண்டிப்பா இப்போ அவங்களுமே உன்னை புரிஞ்சிருப்பாங்கன்னு தான் தோணுது.. அடுத்து தான் என்னைப் பார்க்க வரணும்….” என்று சொல்ல,

“இதெல்லாம் ஓவர் மதுபி… சென்னைல தான் லேண்ட் ஆகுறேன்.. ஆன் தி வே ல உன்னை பார்த்திட்டு போயிடுறேனே…” என்றான் ஆசையாய்..

“நோ வே.. இப்போ நான் டோர் லாக் பண்ணிட்டுத்தான் இருக்கேன்.. ஐம் கோயிங் அவுட்.. நீ கும்பகோணம் போயிட்டு எப்போ வருவன்னு சொல்லு அப்ப பாக்கலாம்…”என்றவளும் பேசி முடித்து  கும்பகோணம் பறந்தாள்..

ரிஷி வருவது உறுதியான பின்னே சாம்பசிவம் மதுபாலாவிடம் அவர்கள் விஷயம் பேச, “இதுல நான் சொல்றதுக்கு என்ன அங்கிள் இருக்கு…” என்று தயங்கியவளிடம்,

“முதல் நாள் நான் பார்த்த மதுபாலாவா பேசும்மா…” என்று அவர் சொல்ல,

“எனக்கு ரிஷியோடு சேர்ந்து வாழ ரொம்ப விருப்பம்…” என்று அவரிடமும் அவள் உள்ளத்தில் இருப்பதை சொல்லிவிட்டாள்.

ஆகமொத்தம் ரிஷிநித்யனுக்கு தவிர அனைத்தும் அனைவருக்கும் தெரியும்.. அவனோ மதுபாலா என்ன சொல்வாளோ?? வீட்டில் என்ன சொல்வார்களோ?? என்ற எண்ணத்திலேயே வர, ஒருவழியாய் சென்னை வந்தடைந்து, மனோகருக்கு ஒருமுறை பேசிவிட்டு, பின் கும்பகோணம் பேருந்தில் ஏற, அவன் மனமோ முதல் முறை இங்கே வந்ததை நினைத்துப் பார்த்தது…

சென்னை வந்ததுமே உடனே மதுபாலாவிற்குத் தான் அழைத்தான்.. ஆனால் அவளோ “கோ டூ யுவர் ஹோம்…” என்று ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பிவிட்டு அழைப்பை ஏற்காமல் இருக்க,                    

“மதுபி……” என்று அவள் பெயரை பல்லைக் கடித்து உச்சரித்துக்கொண்டான்..

ரிஷிக்கோ அவன் வீடு நோக்கி செல்கையில் மனம் அத்தனை தயக்கமாய் இருந்தது.. அவன் வருகிறான் என்று தெரியும்.. ஆனால் யாருமே பேருந்து நிலையத்திற்கு கூட வராதது கொஞ்சம் சங்கடமாய் இருந்தது.. வீடு செல்லும் நேரம் கொஞ்சம் தள்ளிபோகுமே என்று நடந்தே தான் சென்றான்..

ஆனால் எப்படியிருந்தாலும் வீடு வந்துதானே ஆகும், உள்ளே நுழைகையிலேயே  சாம்பசிவத்தின் நண்பர் ஒருவர் அங்கிருக்க, “வா வா ரிஷி.. ஃபாரின் ட்ரிப் போயிருந்தியாமே.. எப்படி இருந்தது??” என்று விசாரிக்க,

‘ஓ.. இதை இப்படி சொல்லிருக்காங்களா??’ என்று நினைத்தவன் ‘இவரென்ன இங்க’என்ற யோசனையோடு “நல்லா இருந்தது அங்கிள்” என்று சிரிக்க,

“இனிமே உன் லைஃபும் நல்லாத்தான் இருக்கப்போகுது…” என்றவர், “என்ன பாக்குற… இன்னிக்கு உனக்கு என்கேஜ்மென்ட்.. ஆனா பொண்ணு யாருன்னு சொல்ல மாட்டேன்…” என்று சொல்லி அவன் தோளில் தட்டிவிட்டு நகர்ந்துவிட,

‘என்னது என்கேஜ்மென்ட்டா…’ என்று அதிர்ந்தவன், ‘என்ன நினைச்சிட்டு இருக்காங்க எல்லாம்.. அப்போ நான் இவ்வாளோ சொல்லியும் யாரும் என்னைப் புரிஞ்சுக்கலைல..’என்றெண்ணியவன், வேகமாய் உள்ளே அனைவரும் இருக்குமிடம் போக, 

“ரிஷி…” என்று கல்யாணி வேகமாய் அவனை நோக்கி வர, அவனுக்கோ அவனது என்கேஜ்மென்ட் என்ற விசயத்திலேயே மனம் உழல,

“ஏன்ம்மா இதுக்குதான் என்னை வா வான்னு எல்லாம் சொன்னீங்களா???” என்று கத்த,

சாம்பசிவம் வந்தவர், “வந்துட்டல்ல போ ரிஷி போய் ரெடியாகு… இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு நல்ல நேரம் முடிஞ்சிடும்…” என்று சொல்ல,

“ப்பா.. என்னதிது.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் வந்தேயிருக்க மாட்டேன்..” என்றவன் மைதிலியைப் பார்த்து

“நீங்கக்கூட என்கிட்டே சொல்லலையே அண்ணி…” என, அவளோ வழக்கம் போல் தன் கணவன் முகத்தைப் பார்க்க, “ச்சே.. என்னவோ போங்க….” என்றவன், வாசலை நோக்கி திரும்ப,

“அக்கா.. இந்த சாரி மட்டும் அயர்ன் பண்ணனுமே…” என்றபடி வந்த மதுபாலாவின் குரலில் வேகமாய் திரும்பியவன், திகைத்துப் போய் நிற்க, நொடியில் அனைத்தும் அவனுக்குப் புரிந்துபோனது..

அவளோ அவனைப் பார்த்து ‘தப்பான டைமிங்ல வந்துட்டோமோ…’ என்று முழிக்க,

“எல்லாரும் சேர்ந்து என்ன பண்றீங்க??” என்று தன் கோபம் குழப்பம் எல்லாம் அடக்கி, அனைவரையும் பார்த்து  ரிஷி வினவ,

“எல்லாரும் சேர்ந்து உனக்கும் மறக்கும் நிச்சயம் பண்ண போறோம் ரிஷி…” என்று மைதிலி சிரித்தபடி சொல்ல,

“அதுக்கு நான் ஓகே சொல்லணும்…” என்றவன் வேகமாய் அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.

‘என்னாச்சு இவனுக்கு ஏன் இப்படி சொல்லிட்டுப் போறான்…’ என்று அனைவரும் புரியாமல் பார்க்க, மதுபாலாவிற்கு நன்கு புரிந்தது ரிஷி ஏன் இப்படி சொன்னான் என்று.

“ஆன்ட்டி.. அது நான் இன்னும் அவன்கிட்ட என் முடிவு சொல்லலைல அதான் கோவமா போறான்…” என்று மதுபாலா சொல்ல,

“எதுவா இருந்தாலும் கெஸ்ட் வர்றதுக்கு முன்னாடி பேசி முடிங்க…” என்று சாம்பசிவம் சொல்ல,  “நீ போய் அவன்கிட்ட பேசு மது…” என்று கல்யாணி அவளை அனுப்ப, மதுபாலா ரிஷியின் அறைக்குச் செல்ல, அவனோ முகத்தை உர்ரென்று வைத்திருந்தான்..

“இப்போ என்ன கோபம் உனக்கு??”

“எல்லாம் பண்ணிட்டு ஒண்ணும் தெரியாதது போல கேட்காத மதுபி…” என்று ரிஷி பொரிய,

“நான் என்ன பண்ணேன்..??” என்றவள், அவனருகே வந்து அமர,

“என்ன பண்ணல?? இத்தனை நாள் எல்லாருமே காண்டாக்ட்ல தான் இருந்திருக்கீங்க இல்லையா?? நான் தான் இடியட் மாதிரி அங்க உன்னை நினைச்சு, இவங்களை நினைச்சு எல்லாம் டென்சன் ஆகிட்டு இருந்தேன் போல..” என்று ரிஷி கத்த

“நீயும் தான் ரிஷி எல்லாரையும் டென்சன் பண்ண..” என்றாள் மதுபாலா கண்டிப்பான குரலில்..

“ஓ.. ரிவன்ஜ் எடுக்கிறீங்களா??”

“நீ எப்படி நினைச்சாலும் சரி…” என்றவள், இருந்தாலும் பரவாயில்லை என்று இந்த ஆறு மாத காலமாய் நடந்தவைகளை சொல்லிட, அவனுக்கு மதுபாலா மற்றும் அவனது குடும்பம் பேசிக்கொண்டது மட்டும் தானே தெரியாது, அவள் சொல்ல சொல்ல கேட்டவனுக்கோ மதுபாலாவுமே இத்தனை நாட்கள் ஒரு பதற்றத்தில் தான் இருந்திருக்கிறாள் என்று புரிந்தது..

ஆனாலும் “ம்ம்ம்..” என்று மட்டும் சொல்ல, “சோ இந்த என்கேஜ்மென்ட்க்கு சரி சொல்ல மாட்ட அப்படியா??” என்று கேட்டவளைப் பார்த்து,

“இன்னும் என் கேள்விக்கு நீ உன் பதிலே சொல்லல..” என்றான் முறைப்பாய்..

ஆனால் மதுபாலாவோ அவன் கேட்டதற்கு பதில் கூறாமல், அவன் முகத்தின் முன்னே தன் இடக்கரத்தை நீட்ட, அவனோ புரியாமல் முறைத்தான் அவளின் கையைத் தட்டிவிட்டு..

“ம்ம்ச்…” என்று மறுபடியும் அவன் முகத்தின் முன்னே கையை நீட்ட,

“ஏய் என்ன??” என்றி எரிச்சலாய் அவள் கையைப் பற்றியவனுக்கு அவளது இடக்கை மோதிரம் அவன் கரத்தில் அழுத்த, ஒருநொடி அவளை கூர்ந்துப் பார்த்தவன், அப்படியே கரத்தை திருப்பிப் பார்க்க, அவன் அன்று அணிந்த மோதிரம் இன்னமும் அவள் விரலில் அப்படியே இருந்தது.

“மதுபி…!!!” என்று ரிஷி பார்க்க,

“இந்த பதில் போதுமா ரிஷி…” என்று மதுபாலா கேட்க, “நீ.. நீ.. யூ.. அப்போவே ஏன் சொல்லலை.. நான் எத்தனை நாளா கேட்டிட்டு இருந்தேன்.. போ.. மதுபி..” என்றவன் எழுந்துவிட,

“ம்ம்.. உனக்கு எல்லாமே உடனுக்கு உடனே நடக்கணுமா??” என்றவளும் எழ,

“நான் அப்படி சொல்லல, இத்தனை நாள் எவ்வளோ டென்சன் ஆனேன்னு உனக்கேத் தெரியும்.. ஆனா நீ எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சுக்கிட்டு எதையுமே வெளிப்படுத்தல..” என்றான் கோவமாய்..

“சொல்லக்கூடாதுன்னு இல்லை ரிஷி.. ஆனா இது ஆன்ட்டி அங்கிளுக்காக…” என,

“ம்ம்…” என்று கொஞ்ச நேரம் அமைதியாய் நின்றவன், “அதான் ஆல்ரடி என்கேஜ்மென்ட் ஆகிடுச்சே…” என்று அவள் கையை பிடித்து விரலை வருடி, “பின்ன என்ன??” என்று கேட்க,

“இது நமக்காக மட்டும்..” அது அவங்களுக்காக என்று அவளும் அவன் அணிந்த மோதிரம் பார்த்து சொல்ல,

“ஓ.. அப்போ இது எனக்காக..” என்றவன், அந்த மோதிர விரலின் மீது முத்தமிட,

உறவுகளே வேண்டாம் என்று ஒதுங்கியவனும், உறவுகளே இல்லாது இருந்தவளும் இன்று வாழ்வில் இணையப் போவதற்கு அச்சாரமாய் அவர்களின் நிச்சயம் அடுத்து நடக்க, ரிஷியின் காதல் மழையில் நனையத்தான் போகிறாள் மதுபாலா.. மதுபாலாவும் மழையில் நனையும் பனிமலர் போல் ரிஷியை தன் அன்பால் குளிர்விக்கத்தான் போகிறாள்..                 

   

    

 

Advertisement