Advertisement

மழை 9:
பிருந்தா ஆர்லியிடம் சொன்னது சரி தான்..
அன்று மதிய இடைவெளியில் கடைசி இரு வரிசையை சேர்ந்த மாணவர்களை(குரு,ராகேஷ்,செல்வா தவிர) வொர்க்-ஷாப் அழைத்து ஆசிரியர்கள் விசாரித்தார்கள். ஆசிரியர்கள் என்ன தான் திறமையாக  விசாரித்தாலும் அவர்களின் நேரம் வீணானது தான் மிச்சம், அனைத்து மாணவர்களின் பதிலும் ஒன்றாகவே இருந்தது. ‘தெரியாது’ என்பது தான் அந்த பதில்.
என்ன செய்வது என்று ஆசிரியர்கள் பெரும் குழப்பத்தில் இருந்தாரகள். வலுவான ஆதாரம் இல்லாமல் பிரின்சிபாலிடம் இந்த விஷயம் சென்றால் அவரோ இவர்களை தான் கிழி கிழியென்று கிழிப்பார். அதனால் என்ன செய்வதென்று முதலாமாண்டு H.O.Dயிடம் ஆலோசனை செய்தார்கள்.
முதலாமாண்டு H.O.D வேற யாரும் இல்லை.. நம்ம சைக்கோ(கெமிஸ்ட்ரி ஆசிரியர்) தாங்க.. என்னடா முன்பே சொல்லலைன்னு யோசிக்கிறீங்களா.. 
என்ன பண்றது! இரண்டு நாட்கள் முன்பு தான் முதலாமாண்டு H.O.D இங்கே தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஏதோ பெரிய கல்லூரியில் போய் வேலையில் சேர்ந்து விட்டார். அதனால் நம்ம சைக்கோவிற்கு அடித்தது ஜக்பாட்.. பசங்க தலையில் விழுந்தது பெரும் இடி..
நம்ம அனீஸ் சக்திவேல் நிலமையை யோசித்துப் பாருங்க.. பேராசிரியராக இருந்த போதே அவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் இப்போது!!!!!!
சைக்கோ ஸ்ரீராமனை அழைத்து மிரட்டி விஷயத்தை கறக்கலாம் என்றார்.
ஆசிரியர்களின் திட்டத்தை பார்த்து விட்டோம் இப்பொழுது மாணவர்கள் என்ன திட்டம் தீட்டுகிறார்கள் என்று பார்ப்போம் வாங்க..
விசாரணை முடிந்து வந்த போது தான் ராஜசேகர் ஆஷா ஜெனிஷாவை அடிப்பதை பார்த்தான். அதன் பிறகு நடந்தது தான் உங்களுக்கு தெரியுமே.. 
வகுப்பறையினுள்ளே ராஜசேகர் காதல் மழையில் நனைந்து கொண்டிருந்த போது வெளியே-
சிவகுரு, “நாம இப்படியே ஒற்றுமையா இருந்தா அவன்களால (ஆசிரியர்கள்) ஒன்னும் ……. முடியாது”
செல்வராஜ், “அதான் நம்ம கிளாஸ்ஸில் எட்டப்பிகள்  இருக்கங்களே”
சிவகுரு, “எட்டபியா எட்டப்பனா னு யாருக்கு தெரியும்” என்று முணுமுணுத்தான்.
காலையில் நடந்த சம்பவத்திலிருந்து சிவகுருவுக்கும் ராஜசேகருக்கும் ஸ்ரீராமன் மேல் சந்தேகம் எழுந்தது. காலையில் நடந்த விஷயம் ராஜசேகர், சிவகுருவை தவிர மற்ற மாணவர்களுக்கு(கடைசி இரு வரிசையை சேர்ந்த மாணவர்கள்) தெரியாது.
செல்வராஜ், “திட்டுறதா இருந்தா சத்தமா திட்டு”
சிவகுரு, “எனக்கு என்ன பயம்! உன்னை திட்டுனா சத்தமா தான் திட்டுவேன்.. நான்………….”
ராகேஷ், “செல்வா.. குரு” என்று அழுத்தமான குரலில் அழைக்கவும் இருவரும் அமைதியானார்கள்.
வினோத், “உங்க சண்டையை விலக்குறதுக்கே நம்ம நாட்டாமைக்கு நேரம் சரியா இருக்கும் போல”
மற்றொருவன், “நட்டாமைனா சும்மாவா”
ராகேஷ், “ஓகே.. ஓகே.. பிரச்சனைக்கு வாங்க”
சிவகுரு, “எனக்கு ஒரு யோசனை.. கண்டிப்பா யாரோ உளறி தான் நம்ம மூணு பேர் மேல் விசாரணை பலமா இருந்துது.. இப்போ எல்லாரையும் விசாரிச்சு நோ யூஸ்.. ஸோ அவனுங்க திரும்ப அந்த ஆளை தான் விசாரிப்பானுங்க.. ஸோ இப்போ நாம என்ன செய்யணும் னா.. அந்த ஆளை வாத்திஸ் மிரட்டுரதுக்கு முன் நாம மிரட்டணும்”
வினோத், “யாருன்னு தெரியாம…………”
செல்வராஜ், “மாலினியை மிரட்டினா சரியா இருக்கும்”
சிவகுரு செல்வராஜை முறைத்தான். வினோத்திற்கும் முறைக்க ஆசை தான் ஆனால் அவனுக்கோ சிவகுருவை போல் செல்வராஜை எதிர்க்கும் மன-தைரியம் இல்லையே அதனால் அமைதியாக இருந்தான்.
ராகேஷ், “செல்வா”
செல்வராஜ், “ஆமா இப்படியே என்னை அடக்கு.. அவ சைலென்ட்டா நம்ம எல்லாருக்கும் ஆப்பு அடிச்சிருவா” என்று முணுமுணுத்தான்.
செல்வராஜின் முணுமுணுப்பை மற்றவர்கள் கண்டும் காணமல் இருந்தார்கள்.
சிவகுரு தொடர்ந்தான்..
“ஆள் யாருன்னு தெரியாமையும் மிரட்டலாம்”
வினோத், “எப்படி மச்சான்?”
“பொதுபடையா ஸ்டேஜ்ஜில் ஏறி பேசணும்..”
ராகேஷ் யோசனையுடன், “நல்ல ஐடியாவா தான் தெரியுது யாரு பேசலாம்?”
செல்வராஜ், “நானே பேசுறேன்”
ராகேஷ், “நீ கண்டிப்பா பேச கூடாது”
வினோத், “சேகர்”
ராகேஷ், “சேகர் ஓகே தான்” என்று சுற்றி பார்க்க ராஜசேகர் இல்லை என்றதும், “சேகர் எங்கே?” 
சிவகுரு, “லாஸ்ட் ரோ பாய்ஸ் யாரும் பேச வேண்டாம்”
கூட்டத்தில் ஒருவன், “ஏன்?”
ராகேஷ், “சேகரிடமும் கேட்போம்.. அவன் எங்கே?”
சிவகுரு, “கிளாஸ் குள்ள இருப்பான்.. இரு நான் கூப்பிடுறேன்” என்று கூறி வாசலில் இருந்து ராஜசேகரை அழைத்தான்.
அப்பொழுது தான் ராஜசேகர், “ஒன் மினிட் குரு” என்று கூறிவிட்டு அதன் பிறகு ஜெனிஷாவிடம் காதல் வசனம் பேசியது தான் நமக்கு தெரியுமே.. அதன் பிறகு என்ன நடந்தது என்று பார்ப்போம்..
புன்னகையுடன்  வாசலை நோக்கி வந்தவனை பாதி வழியிலேயே நிறுத்திய சிவகுரு, “எவளோ இம்பார்ட்டன்ட் விஷயம் பேசிட்டு இருக்கிறோம்.. உனக்கு என்னடா ரொமான்ஸ்? அதுவும் ஒன் சைடு ரொமான்ஸ்!” என்று கடித்துக் கொண்டான்.
ஆனால் சிவகுருவின் கோபம் ராஜசேகரின் மனதில் பதியவே இல்லை. 
ராஜசேகர் “மச்சான் உனக்கு இன்னைக்கு ட்ரீட்” என்று பூரிப்புடன் கூறினான்.
முன்பு ஒரு நாள் சிவகுரு ட்ரீட் கேட்ட போது ராஜசேகர், “அவ என் காதலை ஏத்துக்கிட்டதும் உனக்கு தான் டா 1st ட்ரீட்” என்று கூறியது சிவகுருவுக்கு இப்போது நினைவிற்கு வந்தது.
சிவகுரு சிறு ஆச்சரியத்துடன், “ஹே.. எப்படி டா மடக்குன?”
ராஜசேகர் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து கடுமை தோன்றியது.
சிவகுரு, “இல்ல..டா.. அது.. வாய்…. தவறி………….”
ராஜசேகர் கடுமையான குரலில், “உன் வாய் தவறினால் என் கை தவறும்”
சிவகுரு, “ஓகே.. ஓகே.. கூல்.. இப்போ உன் காதல் கதையை சொல்லு” என்று குரலில் உற்சாகத்தை வரவைத்துக் கொண்டு கூற ராஜசேகரின் முகமும் கடுமையை விட்டு இயல்பிற்கு மாறியது.
“அதை இவனிங் சொல்றேன்.. இப்போ  எதுக்கு கூப்பிட்ட அதை சொல்லு”  
“ஹ்ம்ம்.. வெளிய வா” என்று அழைத்து சென்றான்.
ராகேஷ் சுருக்கமாக விவரம் சொன்னான்.
ராஜசேகர் செல்வராஜிடம், “என்ன செல்வா சொல்ற?”
செல்வராஜ், “கிளாஸ்ஸில் பேசணும் சொல்றது ஓகே டா பட் அவன் பிரன்ட் ரோ பசங்களில் யாரையாச்சும் பேச சொல்லலாம் னு சொல்றான்.. அது வேண்டாம்”
சிவகுரு, “ஏன்?”
செல்வராஜ், “அவன்களும் ஏன் டா மாட்டனும்? நம்ம மூணு பேரை தானே சந்தேகப் படுறாங்க…………..”
சிவகுரு, “அதான் சொல்றேன்.. நம்ம மூணு பேரை தான் சந்தேக படுறாங்க  ஸோ  நாம பேச கூடாது.. இந்த விஷயம் வெளிய லீக் அவுட் ஆனா.. பிரன்ட் ரோ பசங்களில் யாராச்சும் பேசுனா இன்னும் குழம்புவான்க.. ஸோ  பிரன்ட் ரோ பாய்ஸ் பேசுனா தான் கரெக்ட்.. இந்த வாத்தீஸ் இன்னும் கொஞ்சம் குழம்பட்டுமே” 
ராஜசேகர், “யாரு உங்க  பெயரை  சொன்னது னு தெரியலை.. அது பிரன்ட் ரோ…………….”
செல்வராஜ், “சேகர்.. அது கண்டிப்பா பசங்க இல்லை”
ராஜசேகர், “செல்வா நீ தேவை இல்லாம சிஸ்டரை சந்தேகப் படுற.. எனக்கு என்னவோ அது பொண்ணுங்க இல்லை னு தோணுது..”
செல்வராஜ், “சிஸ்டர் ஆ” என்று ஏளனமாக சிரிக்க,
ராஜசேகர், “செல்வா வேணாம்”
ராகேஷ், ” ச்ச்.. இப்போ நீங்க ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க..”
செல்வராஜ், “எதை வச்சு பொண்ணுங்க இல்லை னு சொல்ற?”
“நீ நம்புனாலும்  நம்பலைனாலும் மாலினி சிஸ்டர் மேல் எங்க எல்லோருக்கும் நம்பிக்கை இருக்குது.. அதுவும் சிஸ்டர் மேல் எனக்கு………..”
“அதான் எப்படி?”
“உனக்கு காலையில் நடந்த ஒரு கூத்தை பற்றி சொல்றேன்..” என்று கூறி அன்று காலையில் P.T மாஸ்டருடன் நிகழ்ந்த சம்பவத்தை விளக்கி கூறினான். 
செல்வராஜ், “பாசமலர் தம்பிக்காக சப்போர்ட் பண்ணிருப்பா” என்று இளக்காரமாக சொல்லவும் ராஜசேகர் ‘உன்னை திருத்த முடியாது’ என்று ஒரு பார்வையை பார்த்தான்.
சிவகுரு, “செல்வா எனக்கு மாலினி பற்றி தெரியும்.. அவ குணத்தை பத்தி சொல்ல எங்க ஸ்கூல் இன்சிடென்ட்ஸ் நிறைய இருக்குது பட் நீ அதை நம்ப போறதில்லை.. நீ நம்பி ஆக போறதும் ஒன்றும் இல்லை.. ஐ மீன் நீ நம்பினாலும் நம்பாட்டினாலும் மாலினிக்கு ஒன்னுமில்லை.. நீ நம்பலையே னு நெக்ஸ்ட் டைம் சப்போர்ட் பண்ணாம இருக்க மாட்டா.. அதான் மாலினி” என்று நீளமாக பேசி முடித்தான்.
வழக்கம் போல் செல்வராஜ்  தோளை குலுக்கினான் ஆனால் இந்த முறை அவனது உள்ளம் ‘மாலினி மாட்டிவிடலையோ!’ என்று சிறிது யோசிக்கத் தொடங்கியது.
ராகேஷ், “பிரன்ட் ரோவில் தைரியமா பேசுறதுனா கிருஷ்ணா தான்.. பட் அவன் தான் ரெண்டு நாளா வரலையே! அவன் ஏன் வரலை னு தெரியுமா டா?”
ராஜசேகர், “ஹ்ம்ம்.. புழாவிடம் கேட்டேன்.. ஊருக்கு போறதா சொல்லிட்டு போனானாம்..”
ராகேஷ், “போன் பண்ணி கேட்க வேண்டியதானே!”
ராஜசேகர், “அவன் ஊரு கொஞ்சம் கிராமம்.. டவர் இருக்காது”
“ஓ”
ராஜசேகர், “ஷங்கரை பேச சொல்லலாம்”
ராகேஷ், “ஹ்ம்ம்..”
ஒருவழியாக கூட்டணியின் முடிவில் ஷங்கரை பேச சொல்வதாக முடிவானது. ஷங்கரை வெளியே அழைத்து என்ன பேச வேண்டும் என்று சொன்னார்கள்.
சிவகுரு கூறியதை அமைதியாக கேட்ட ஷங்கர், “நீ சொன்னது போல் மிரட்ட என்னால் முடியாது.. ஐ காட் தி பாயிண்ட்.. ஐ வில் சே இன் மை வே”
சிவகுரு, “டேய்.. சொதப்பிறாத”
ஷங்கர் புன்னகைத்தான்.
மாணவர்கள் அனைவரும் வகுப்பறையினுள்ளே சென்றனர். ஷங்கர் மேடை ஏறி பேசத் தொடங்கினான்.
“டியர் பிரெண்ட்ஸ்!
யூ ஆல் நொ தி மட்டர்…………….”
அனீஸ், “டேய் சீன் போடாம தமிழில் பேசு”
ஷங்கர் புன்னகையுடன் தமிழில் பேசத் தொடங்கினான்.
“நம்ம கிளாஸ்ஸில் சீரியஸ்ஸா போயிட்டு இருக்கிற விஷயம் உங்க எல்லோருக்கும் தெரியும்.. அந்த இன்சிடென்ட்டில் ஸ்டாஃப்ஸ்(staffs) டவுட் சிவகுரு, ராகேஷ், செல்வராஜ் மேல் இருக்கிறது.. அதற்கு காரணம் நம்மளில் யாரோ தான்.. இதுவும் உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்..
பட்.. உங்களுக்கு தெரியாத விஷயம்…
பசங்களில் சிலர் அந்த ஆள்  ஸ்பை(spy) என்று கருதுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் அந்த ஆள் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்..
பட் என்னை பொறுத்தவரை அந்த ஆள் ஏதோ வாய் தவறி தான் சொல்லிருக்க வேண்டும்.. இனி ஸ்டாஃப்ஸ் கூப்பிட்டு கேட்டால் ஜாக்கிரதையா பதில் சொன்னா ஸ்டாஃப்ஸ் இந்த பிரச்சனையை இத்தோடு விட்டுருவாங்க அண்ட்  பசங்களுக்கு இருக்கும் கோபமும் மறைய வாய்ப்பு இருக்கிறது.
அந்த ஆள் பாய் ஆர் கேர்ள் னு கூட எனக்கு தெரியாது பட் அவங்களுக்கு நான் சொல்ல நினைப்பது ஒன்னே ஒன்னு தான்.. நாலு வருஷம் ஒன்னா படிக்க போறோம்.. ஸோ நமக்குள் ஒற்றுமை அவசியம்.. நம்ம பிரெண்ட்டை நாம காட்டிக் குடுக்க கூடாது.. தட்ஸ் ஆல்”
பிருந்தா ஸ்ரீராமன் மேல் ஓரப்பார்வையை  செலுத்தினாள், அவள் அவனது முகபாவனையை ஆராயும் முன் மாலினி, “பிருந்தா’ என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அதட்டவும் பிருந்தா எரிச்சலுடன் திரும்பினாள்.
பிருந்தா பல்லை  கடித்துக் கொண்டு, “ஏன்டி இப்படி பண்ற?”
“லூசா டி நீ”
“நீ தான் லூசு”
“உன் பிரெண்டாச்சே”
“ஜோக் ஆ.. சகிக்கலை” 
“பிருந்து.. நீ அவனை பார்க்கிறதை பசங்க யாராது பார்த்தால் அவன் மேல் சந்தேகம் வரலாம்”
“அதானே எனக்கும் வேணும்” என்று பிருந்தா முணுமுணுக்க மாலினி, “நீ நினைப்பது நடக்காமல் ஸ்ரீராம் உன்னை பார்த்தால்?”
“பார்த்தால்?”
“நீ சாதானமாவா பார்க்கிற.. திருட்டுத்தனமா பார்க்கிறது போல் ஓரப்பார்வை பார்த்து தொலைக்கிற.. அவன் உன்னை சைட் அடிக்க ஆரம்சிடுவான்” என்றதும் பிருந்தா வாய்யடைத்துப்போனாள்.
ஷங்கரின் உரையாடலை கேட்டு ஸ்ரீராமனின் மனதினுள் பல்வேறு சிந்தனைகள் எழுந்தன. முதலில் தன் மனதில் எழும் பயத்தை முகத்தில் காட்டாமல் இருக்க அவன் படாதபாடு பட்டான்.
‘ஏற்கனவே எவனும் என்னை மதிக்க மாட்டான்.. இதுல நான் தான் னு தெரிஞ்சுது நம்ம நிலைமை…………
காலைல இந்த ராஜசேகர் பலத்தையே நம்மளால தாக்கு பிடிக்க முடியலை.. பசங்கலாம் சேர்ந்து கிட்டா… ஐயோயோயோ(அவன் மனம் அலறியது)
மாலினிக்கு வேற நான் தான் அந்த ஆள் னு தெரிஞ்சிருக்கு.. ஆமா அப்பறம் ஏன் நம்மள காட்டிக் குடுக்கலை…. 
(சட்டென்று அவன் மனதில் ஒரு பல்பு எரிந்தது.. பாவம் தப்பாக எரிகிறது என்று இப்போது அவனுக்கு எப்படி தெரியும்?)
ஹே ஒரு வேளை அவளுக்கு நம்மளை பிடிச்சிருக்கோ….
அவனது மனசாட்சி, “நிறுத்து நிறுத்து.. ரொம்ப ஓவரா தெரியலை.. ஏதோ கிளாஸ்மேட் னு விட்டுருப்பா”
“ஏதோ ஒன்னு என் மேல் சாப்ட் கார்னர் இருக்குல”
“ஒரு மண்ணும் இருக்காது”
“அதுலாம் இல்லை.. உனக்கு பொறாமை” (எப்படி எப்படி இவர் மேல் அவரது மனசாட்சிக்கு பொறாமையாம்.. இப்படி யோசிக்கிறவனை எங்கேயாவது பார்த்திருக்கீங்களா பா!!!)
“யாருக்கு எனக்கா?”
“ஆமாம்” 
“உன் தல எழுத்தை யாரால மாத்த முடியும்”
“போடா” என்று தன் மனசாட்சியை விரட்டியவன் வேகமாக சிந்திக்க தொடங்கினான்.
‘ஷங்கர் சொன்னது போல் நடந்துகிட்டா.. பசங்களுக்கு கோபம் போகுதோ இல்லையோ மாலினிக்கு என்னை பிடிக்கும்.. 
அவனது மனச்சாட்சி மீண்டும் வந்தது, “அதான் ஏற்கனவே பிடிச்சுருக்கு சொன்னியே”
“இப்ப ரொம்ப பிடிக்கும்.. போதுமா”
மீண்டும் அவன் மனம் திட்டத்தில் மூழ்கியது,
‘முதலில் பிரெண்ட்ஷிப் வளர்த்து அப்பறம் அப்பறம்………’ நினைக்க நினைக்க அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.. என்னமோ இப்போதே மாலினியின் மனதை வென்ற உணர்வு அவனுக்கு..
ஷங்கர் தன் இடத்தில் அமரவும் அனீஸ், “கலக்குறியே மச்சான்.. கை குடு” என்று ஆராவாரத்துடன் கை குலுக்கினான்.
ஷங்கர், “நான் என்ன சாதனையா செஞ்சிருக்கிறேன்”
சக்திவேல், “மேடை ஏறி பேசியிருக்கியே! எங்களை பொறுத்தவரை அது சாதனை தான்”
ஷங்கர், “இன்னும் கொஞ்ச நேரத்தில் இதுக்கு பரிசு கிடைக்கும் பாரு?”
சக்திவேலும் அனிஷும், “பரிசா?”
“ஹ்ம்ம்.. நீங்க டெய்லி வாங்குற பரிசு தான்”
“என்னடா?”
“சைக்கோ கூப்பிட்டு எனக்கு ரைடு விடுவாரு.. அதை தான் பரிசு னு சொன்னேன்”
“…”
“என்ன டா சைக்கோ னு சொன்னதும் அமைதியாகிடீங்க!” என்று ஷங்கர் சிரிக்கவும், 
அனீஸ், “ஏன் டா சிரிக்க மாட்ட.. டெய்லி இம்போஷிஷன் எழுதுறது நாங்க தானே”
“கிளாஸ் ஒழுங்கா கவனிக்க வேண்டியது தானே”
சக்திவேல், “அதுக்கு இம்போஷிஷன்னே எழுதிருவோமே”
அனீஸ், “அப்படி சொல்லு டா மச்சான்” என்று கூறி இருவரும் கை தட்டிக் கொண்டனர்.
மதிய இடைவெளி முடிவதற்கு ஐந்து நிமிடங்கள் இருந்த போது ஒரு மாணவன் வந்து ஷங்கரை H.O.D(சைக்கோ) அழைப்பதாக கூறினான். ஷங்கர் அனீஸ் மற்றும் சக்திவேலை பார்த்து புன்னகைத்துவிட்டு எழுந்தான்.
அப்போது புழா, “ஷங்கர் எதிர்த்து பேசாத”
ஷங்கர் புன்னகைத்துவிட்டு சென்றான்.
ராமலிங்கம்(கெமிஸ்ட்ரி Professor/H.O.D), “உன்னை  நல்ல படிக்கிற பையன் னு நினைத்தேன்”
ஷங்கர், “இப்பவும் நல்ல தானே சார் படிக்கிறேன்”
“படிக்கிறதோட மத்த வேலையும் செய்றே”
“என்ன சார்?”
ராமலிங்கம் சற்று குரலை உயர்த்தி, “என்ன டா பெரிய அரசியல்வாதி னு நினைப்பா.. ஸ்டேஜ் ஏறி எங்களுக்கு எதிரா பேசுற!”
“..”
“என்னடா பதிலை காணும்”
“சார்.. நான் உங்களுக்கு எதிரா ஒரு வார்த்தை கூட பேசலை”
ராமலிங்கம் அவனை முறைத்துக் கொண்டே, “தப்பு செஞ்சவனுக்கு சப்போர்ட் பண்றது எனக்கு எதிரா பேசுறது தானே”
“…”
“இப்ப யாரு செஞ்சா னு நீ சொல்லலை…………..”
“எனக்கு தெரியாது சார்”
“பொய் சொல்லாதே.. உண்மையை சொல்லலைனா உனக்கும் தண்டனை கிடைக்கும்”
“நிஜமாவே எனக்கு யாருன்னு தெரியாது சார்”
“என்னடா எவனை கேட்டாலும் இதே பதில் சொல்றீங்க..”
“..”
“முதல உங்க யூனிட்டியை உடைக்கிறேன்” என்று முணுமுணுத்தார்.
“சார்”
“யூ மே கோ” என்று எரிந்து விழுந்தார். ஷங்கர் அதை எதிர் பார்த்து தானே வந்திருந்தான் அதாலால் நிதானமாக தன் வகுப்பறைக்கு சென்றான்.
ரவி சார், “பார்த்தீங்களா சார் எவ்வளவு திமிர்.. அந்த கிளாஸ்ஸில் படிக்கிற பசங்க பொண்ணுங்க னு எல்லோருக்கும் இக்குவலா திமிர் இருக்குது”
ராமலிங்கம் சிறிது யோசித்துவிட்டு, “பஸ்ட் அந்த கிளாஸ் யூனிட்டி-யை உடைக்கணும்.. பசங்களுக்கு தெரியாம ஸ்ரீராமனை என்குவரி பண்ணுங்க, பசங்களுக்கு தெரிஞ்சே மாலினியை என்குவரி பண்ணுங்க”
ஷங்கர் நடந்தவற்றை ராகேஷ் குழுவினரிடம் கூறினான்.
முதல் வகுப்பு கணிதம்.. பசங்களால் செல்லமாக ஜிண்டா என்று அழைக்கப் படும் ரத்னவேல் பாண்டியன் வகுப்பறையினுள்ளே நுழைந்தார்.
சிவகுரு தொடக்க பள்ளி மாணவனை போல், “குகுகுட்  அஅஅப்ப்ப்ட்டர்நூநூன்சார்” என்று ராகம் பாடினான்.
பாண்டியன், “வாட் பஸ்ட் ஹவர் யூ ஸ்லீப் ஆ”
சிவகுரு, “ஈட்டிங் கிடினஸ் சார்” (உண்ட மயக்கம் என்பதை தான் இப்படி சொல்கிறான்)
பாண்டியன் அவனை முறைத்தார். சிவகுரு ராஜசேகரிடம், “அப்பாடா இப்ப தான் சாப்டது ஜீரனமாச்சு” என்று முணுமுணுத்தான்.
அட்டெண்டன்ஸ் எடுத்து முடித்த பிறகு பாண்டியன், “ஓ காட்.. ஐ பர்காட் புக்…”
சிவகுரு எழுந்து, “சார் யூ நோ வொர்ரி.. மீ கோ.. புக் கம்.. வெயிட் பைவ் மினிட்ஸ்” என்றான்.
பாண்டியன், “யூ இடியட்.. சிட் டோவ்ன்”
சிவகுரு, “தன்க் யூ சார்” என்று கூறி அமர்ந்தான்.
ராஜசேகர், “பாவம் டா.. ஏன்டா இப்படி படுத்துற?”
சிவகுரு, “இதுல தனி கிக் டா”
பாண்டியன், “ஸ்ரீராம் யூ கோ.. டேக் புக்.. கம்.. கோ.. கோ” என்று விரட்டினார்.
ஸ்ரீராமன் செல்லும் வழியில் ரவி சார் அவனை வொர்க்-ஷாப் அழைத்து சென்றார்.
ரவி சார், “சிவகுரு, செல்வராஜ், ராகேஷ் இவங்களில் யார் சொன்னது?”
“எனக்கு தெரியாது சார்”
“நீ தானே நேத்து சொன்ன?”
“நான் சொல்லலையே சார்”
“டேய்.. இவங்களில் யாரோ தான் னு நீ தானே சொன்ன”
ஸ்ரீராமன் அவசரமாக, “நோ சார்.. நான் அப்படி சொல்லலை சார்”
“வாட்?”
“எஸ் சார்.. நான் அப்படி சொல்லலை”
“உன்னை யாரும் மிரட்டினான்களா?”
“நோ சார்”
“அப்பறம் ஏன் மாத்தி சொல்ற?”
“நான் மாத்தி சொல்லலை சார்”
(என்ன தான் பசங்களுக்கு சாதகமாக பேசினாலும் ஸ்ரீராமன் முன்  எச்சரிக்கையாக வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டு பேசினான்)
“அப்போ நான் பொய் சொல்றேனா?”
“சார்”
“என்னடா சார் சார் னு.. உண்மையை சொல்லு.. இல்லை உனக்கு தான் பனிஷ்மென்ட்”
“சார்” (சிறு அதிர்வுடன் கூறினான்)
“..”
“சார் உண்மையிலேயே எனக்கு யாரு சொன்னது னு தெரியாது சார்.. இவங்க மூணு பேரில் யாரோ தானா கூட எனக்கு தெரியாது..”
ரவி சார் முறைக்கவும், அவன், “நிஜமா சார்.. என்னை யார் யார் மாலினி கிட்ட விசாரிக்க சொன்னாங்க னு நீங்க கேட்டதுக்கு தான் இவங்க பெயரை சொன்னேன்.. மத்தபடி யார் சொன்னது னு எனக்கு உண்மையாவே தெரியாது சார்.. பிலீவ் மீ சார்.. ரியல்லி ஐ டோன்ட் நோ”
ரவி சார் கணித புத்தகத்தை அவன் கையில் குடுத்து, “ஓகே.. யூ மே கோ” என்றார்.
ஸ்ரீராமன் விடுதலை உணர்வுடன் வகுப்பறையை நோக்கி சென்றான்.
அடுத்த வகுப்பு ஆங்கிலம்.. வகுப்பு நடந்து கொண்டிருந்த போது மாலினியை H.O.D அழைப்பதாக தகவல் வந்ததும் மாலினி ராமலிங்கத்தை பார்க்க சென்றாள்.
மாலினி பக்கம் சிறிது யோசிக்க தொடங்கிய செல்வராஜின் உள்ளம் மீண்டும் மாலினி மேல் குற்றம் சுமத்தத் தொடங்கியது.
மழை தொடரும்….

Advertisement