Advertisement

‘வழிற பசங்களுக்கு நடுவில் இவன்  வழியலை.. உண்மையான காதலை சொன்னான்..’
இப்பொழுது அவளது மனசாட்சி ஒரு கேள்வியை எழுப்பியது,
ஏன் இதற்கு முன் உண்மையாக காதலை யாரும் உன்னிடம் சொல்லவில்லையா?
உன் குறும்பை ரசித்து காதல் சொல்லவில்லையா?
‘இரண்டு பேர் சொன்னார்கள் தான் ஆனால் அவர்கள் மீது வாராத காதல் இவன் மேல் வந்துவிட்டதே!’
அவளது மனசாட்சி சற்று அமைதியானது.
‘இவனிடம் என்னை வசீகரிக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது’
அவனது சிரிப்பில் நீ மயங்கலையா?
‘அவனது சிரிப்பு வசீகர சிரிப்பு தான் ஆனால் அதையும் மீறி ஏதோ ஒன்று.. ஹ்ம்ம்.. அவனிடத்து இருக்கும் கம்பீரம்.. அது தான் என்னை வசீகரித்தது.. மற்றவர்களை போல் இவன் என்னிடம் மதிமயங்கி நின்றதில்லை.. என்னை காதலிக்கிறான் ஆனால் அதே நேரத்தில் என் தவறை சுட்டி  காட்ட தயங்குவதில்லை..  ஹ்ம்ம்.. சரியா சொல்ல தெரியலை.. என்னை யாரும் அடக்கினால் பிடிக்காது.. ஆனால் இவனை பிடிக்கிறதே!’
அவளையும் அறியாமல் அவள் கண்கள் ராஜசேகரின் இடத்தை பார்த்தது. அங்கே அவன் இல்லை ஆனால் அவளது மனக்கண்  வழக்கமான வசீகர புன்னகையுடன்  அவன் இருப்பது போல் கற்பனை செய்தது, தன்னையும் அறியாமல் சிறு  நாண சிரிப்பை உதிர்த்தாள் ஜெனிஷா. ஆனால் அதை பார்க்க அவளது கதாநாயகன் இல்லையே!
சில நொடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்ட ஜெனிஷாவின் மனம் மீண்டும் ராஜசேகரையே சுற்றி வலம் வந்தது.
‘என்ன ஒரு சிரிப்பு அது.. சிரிப்பிலே மயக்குவான்.. இரு இரு இன்னும் கொஞ்சநாளைக்கு என் காதலை சொல்லாமல் உன்னை படுத்துறேன்..’ என்று மனதினுள் கூறியவள், ‘ஸ்வீட் ரஸ்கல்..’ என்று ரசித்து முணுமுணுத்தாள்.
ஆஷா, “ஜெனி”
அழகிய கனவில் இருந்து முழித்த ஜெனிஷா திருதிருவென்று முழித்தாள்.
ஆஷா, “என்னடி சொன்ன?”
“என்ன?”
ஆஷா அவளை சந்தேகமாக பார்க்கவும், சுதாரித்த  ஜெனிஷா, “என்னடி?” என்று போலி எரிச்சலை காட்டினாள்.
ஆஷா, “நீ தான் ஏதோ சொன்ன”
“நான் ஒன்னும் சொல்லலை.. நீ தான் படத்தை பற்றி சொல்லிட்டு இருந்த.. அப்பறம் என்னாச்சு? ஹீரோ-ஹீரோயின் எப்படி ஒன்னு சேர்ந்தாங்க?”
“அடி பாவி.. இவ்வளவு நேரமா அதை தானே சொல்லிட்டு இருந்தேன்”
“ஓ”
“என்னடி ஓ?”
“நான் கவனிக்கலை”
“அடி பாவி.. இங்க ஒருத்தி கரடியா  கத்திட்டிட்டு  இருக்கேன்.. நீ கூல்-ஆ கவனிக்கலை னு சொல்ற”
“அதான் நீயே சொல்லிட்டியே”
“என்னன்னு?”
“கரடியா கத்திட்டு இருந்த னு.. அதான் கவனிக்கலை”
ஆஷா கடுப்புடன் ஜெனிஷாவை முறைக்க ஜெனிஷாவோ அசால்ட்டாக   தோளை  குலுக்கவும் ஆஷா கடுப்பில் ஜெனிஷாவை அடிக்க தொடங்கினாள். 
“வொய் திஸ் கொலைவெறி ஆஷா?” என்ற ராஜசேகரின் குரலில் சட்டென்று திரும்பிய ஜெனிஷாவின் கண்களில் ஒரு நொடி வந்து போன மின்னலை ராஜசேகர் கண்டு கொண்டான்.
நொடி பொழுதில்  ராஜசேகரின் உடல் சிலிர்த்தது. ‘ஒரே ஒரு நொடி தாக்குதலுக்கு இவ்வளவு பாதிப்பா!’ என்று தன்னை தானே கேட்டுக் கொண்டான். 
என்ன தான் தன் காதலை மறைக்க   ஜெனிஷா  நினைத்தாலும்  தன் எண்ணத்தின் நாயகனை கண்டதும் அவளது  கண்கள் நொடி பொழுதில் அவளது மன மாற்றத்தை காட்டிக்கொடுத்து விட்டது. தன் மனதை கட்டுபடுத்தும் பொருட்டு தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாள். ஜெனிஷவையே பார்த்த படி புன்னகையுடன் நின்றிருந்தான் ராஜசேகர்.
“என்ன கேட்ட சேகர்?” என்ற ஆஷாவின் கேள்வியில் தன்னை மீட்டுக் கொண்டவன், “நிஷா மேல் என்ன கொலைவெறி னு கேட்டேன்”
ஆஷா ஜெனிஷாவை பார்க்க, ராஜசேகர், “அவளை என்ன பார்க்கிற? அவ ஒன்னும் சொல்ல மாட்டா.. நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”
ஜெனிஷா தனக்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை போல் அமர்ந்திருந்தாள். ஆனால் உள்ளுக்குள் அவளது மனம் பட்டாம்பூச்சியை போல் சிறகடித்துக் கொண்டிருந்தது.ராஜசேகர் மனதினுள் புன்னகைத்துக் கொண்டான்.
ஆஷா, “நானே உருகி உருகி ஒரு  லவ்  ஸ்டோரி சொல்லிட்டு இருந்தேன் சேகர்………….”
ராஜசேகர், “யாரு மேல?”
ஆஷா, ‘என்ன’ என்பது போல் பார்க்கவும் ராஜசேகர், “உருகி உருகி னு சொன்னியே அதான் யாரு மேல னு கேட்டேன்”
ஆஷா முறைத்தாள். ராஜசேகர், “எப்போதிருந்து நிஷாவின் P.A வா மாறின?”
“P.A வா?”
“நிஷா தான் எப்போதும் என்னை பார்த்து முறைச்சிட்டே இருப்பா.. இப்போ அவ அமைதியா இருக்கா பட் நீ முறைக்கிறியே.. அதான் கேட்டேன்”
‘வேண்டும் என்றே தன்னை சீண்டுகிறான்’ என்பதை புரிந்து கொண்ட ஜெனிஷா இப்பொழுதும் ராஜசேகரை பார்க்கவில்லை.
ராஜசேகர் ஆச்சரியமாக, “என்ன ஆஷா இது?”
ஆஷாவிற்கு ஆச்சிரியமாக தான் இருந்தது – தன் தோழி ஜெனியா இப்படி அமைதியாக இருப்பது என்று. 
ஜெனிஷவை பார்த்துக்கொண்டே, “எது?” என்று வினவினாள் ஆஷா.
ராஜசேகர் ஜெனிஷாவை பார்த்துக்கொண்டே சிறு புன்னகையுடன், “பூவுக்குள் பூகம்பம் னு தான் கேள்வி பட்டுருக்கேன்.. ஆனா இப்போ தான் முதல் முறையா பூகம்பத்துக்குள் பூ ஒன்றை பார்க்கிறேன்” என்றான்.
ஜெனிஷா சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். ராஜசேகர் மென்னகையுடன் புருவம் உயர்த்தி  ‘என்னவென்று’  கேட்டான்.
ஜெனிஷா தன் மனதை கட்டுபடுத்தி அவனை முறைத்தாள், இல்லை இல்லை முறைக்க முயற்சித்தாள். 
எப்பொழுதும் போல் கோபம் இல்லாமல் அந்த முறைப்பில்  கனிவு தெரியவும் ராஜசேகர்  வாய்விட்டு சிரித்தான். 
இப்பொழுது மெய்யாகவே ஜெனிஷா முறைப்புடன், “ஹலோ என்ன கிண்டலா?”
“நான் ஏன் நிஷா உன்னை கிண்டல் பண்ண போறேன்?” என்று கூறியவன் ஜெனிஷவை  பொருட்படுத்தாதவன் போல் ஆஷா பக்கம் திரும்பி, “நீ சொல்லு ஆஷா, நீயே உருகி உருகி……………….”
ஆஷா மீண்டும் முறைக்கவும் ராஜசேகர், “ஹே கிண்டல் பண்ணலை.. நீ சொன்னததை தான் சொன்னேன்.. சரி ஓகே.. உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்.. நீ லவ் ஸ்டோரி சொல்லிட்டு இருந்த.. அப்பறம்”
ஜெனிஷவிற்கு டென்ஷன் ஏற தொடங்கியது.
ஆஷா ஜெனிஷாவை பார்த்தாள். ராஜசேகர், “ஹ்ம்ம்.. சொல்லு ஆஷா.. அப்பறம் என்ன ஆச்சு?”
ஜெனிஷவிற்கு மேலும் டென்ஷன் ஏறியது. அதை கண்டும் காணாதவன் போல் ராஜசேகர் ஆஷாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.
ஆஷா, “நான் கதை சொல்லி முடித்த பிறகு இவ கூல்-ஆ ‘அப்பறம் எப்படி ஹீரோ ஹீரோயின் ஒன்னு சேர்ந்தாக னு கேட்குறா சேகர்..”
“ஏன் அபப்டி கேட்டா?”
ஆஷா இப்பொழுது ஜெனிஷாவை முறைத்துவிட்டு, “ஹ்ம்ம்.. கவனிக்கலையாம்”
“ஓ.. ஒரு வேலை நீ இன்ட்ரெஸ்டிங் ஆ சொல்லலையோ!”
ஆஷா இப்பொழுது ராஜசேகரை முறைத்தாள்.
“ஓகே.. ஓகே.. நீ  இன்ட்ரெஸ்டிங்-ஆ தான் சொன்ன.. நிஷா தான் கவனிக்கலை.. ஏன் ஆஷ்…………………….”
ஜெனிஷா தன் பொறுமையை இழந்தாள். தன் கோபத்தை ராஜசேகரிடம் காட்டாமல் ஆஷாவிடம் காட்டினாள்.
“ஏய்.. உனக்கு இவன் கூட என்னடி பேச்சு?”
“ஏன் நான் பேசினா உனக்கு என்ன?”
ஜெனிஷா பல்லை கடித்தாள். பிறகு, “உனக்கு நான் பிரெண்ட்டா இவன் பிரெண்ட்டா?”
“ரெண்டு பேரும் தான்”
ஜெனிஷா கோபமாக ராஜசேகரை முறைத்தாள். ராஜசேகர் அதை பொருட் படுத்தாமல், “நான் சொல்லவந்ததை கேள் ஆஷ்…”
ஜெனிஷா, “ஹே.. அவனை போக சொல்லு?” என்று ஆஷாவிடம் எரிந்து விழுந்தாள்.
ஆஷா, “ஏன்?”
“எனக்கு பிடிக்கலை”
ராஜசேகர், “யாரை என்னய்யா?”
ஜெனிஷா ராஜசேகரை முறைத்துவிட்டு ஆஷாவிடம், “அவன் உன்னை ஆஷ் னு கூப்பிடுறது எனக்கு பிடிக்கலை”
“ஏன்?”
“பிடிக்கலை”
“அதான் ஏன்?”
“…”
“உன்னை கூட தான் நிஷா னு ஷார்ட்டா கூப்பிடுறான்”
இப்பொழுது மட்டும் ஜெனிஷாவிற்கு நெற்றிக்கண் இருந்திருந்தால் ஆஷாவை தோழி என்று கூட பார்க்காமல் எரித்திருப்பாள், அந்த அளவிற்கு கோபம் வந்தது. ஆனால் பாவம் அவளுக்கு தெரியாதே தன் தோழி வேண்டும் என்றே தன்னை சீண்டுகிறாள், தன் காதலை ஒத்துக் கொள்ள வைப்பதற்காகவே தன்னை சீண்டுகிறாள் என்பது தெரியாதே! ஜெனிஷா என்ன செய்வதென்று ஆறியாமல் கையில் இருந்த கண்ணாடி ஸ்கேல்லை(scale) அழுத்தினாள்.
எங்கே அவள் அழுத்திய வேகத்தில் அது உடைந்து அவளது கையை பதம் பார்த்துவிடுமோ என்று பயந்த ராஜசேகர் தன் விளையாட்டை கைவிட்டுவிட்டு, “நிஷா அந்த ஸ்கேல்லை கொடு” என்றான்.
ஜெனிஷா மேலும் அதை அழுத்தி பிடித்தாள். “நிஷா” ராஜசேகரின் குரல் இப்பொழுது அதட்டலாக வந்தது.
ஜெனிஷா கோபமாக அவனை பார்த்து, “என்ன அதட்டல் பலமா இருக்குது! என்னை அதட்ட நீ யார்?”
“ஏன் அது உனக்கு தெரியாது?”
“தெரியாது”
“பொய்”
ஜெனிஷா கோபமாக தன் முகத்தை திருப்பினாள்.
ஆஷா அமைதியாக அவர்களில் உரையாடலை பார்த்துக் கொண்டு இருந்தாள். 
ராஜசேகர், “நிஷா”
“..”
“உனக்கு இப்ப என்ன கோபம்?”
ஜெனிஷா வேகமாக திரும்பினால், “ஏன் அது உனக்கு தெரியாது?”
“தெரியாது”
“பொய்”
‘ரெண்டும் மாத்தி மாத்தி ஒரே வசனத்தை  பேசுதுங்களே’ என்று  ஆஷா மானசீகமாக தலையில் கைவைத்துக் கொண்டாள். 
சில நொடிகள் இருவரும் ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அப்பொழுது சிவகுரு ராஜசேகரை அழைத்தான். ராஜசேகர் “ஒன் மினிட் குரு” என்று சொல்லிவிட்டு ஜெனிஷாவை ஆழ்ந்த குரலில், “நிஷா” என்று அழைத்தான்.
அந்த குரல் ஏதோ செய்ய ஜெனிஷவின் கோபம் வடிய தொடங்கியது. ஜெனிஷா மெல்ல அவனை பார்த்தாள். ராஜசேகர் கண்ணில் காதல் வழிய, “நான் உனக்கு யாரோ வா?”
“..”
“மாலினி………..” என்று அவன் ஆரம்பிக்க ஜெனிஷா மீண்டும் அவனை முறைத்தாள்.
ராஜசேகர், ‘நல்ல வேலை நெற்றிக்கண் இல்லை’ என்று முணுமுணுத்தான்.
“என்ன முணுமுணுப்பு?”
“கோபப்படாம நான் சொல்றதை கேள் நிஷா”
ஜெனிஷா தன் கையில் இருந்த ஸ்கேல் மீது அமைதியாக தன் பார்வையை செலுத்தினாள்.
ராஜசேகர், “மாலினி எனக்கு சிஸ்டர் ஆஷா எனக்கு பிரெண்ட்.. பட் நீ” என்று நிறுத்தவும் ஜெனிஷா சிறு பரவசத்துடன் ராஜசேகரின் கண்களை பார்த்தாள். ஜெனிஷாவின் கண்களை ஊடுருவி பார்த்த ராஜசேகர் புன்னகைத்தான்.
ஜெனிஷா செல்லமாக அவனை முறைத்தாள். 
வாய்விட்டு சிரித்தவன், “நிஷா காலையில் நான் சொன்னது ஞாபகம் இருக்குதா?”
ஞாபகம் இருந்தும் ஜெனிஷா, “என்ன சொன்ன?”
ராஜசேகர் புன்னகையுடன், “அது உனக்கே தெரியும்” என்று கூறி கண்சிமிட்டிவிட்டு சென்றான்.
மழை தொடரும்….

Advertisement