Advertisement

மழை 8:
காலை தேநீர் இடைவேளையில் ராஜசேகர் மாலினியிடம், “தன்க் யூ சிஸ்டர்.. நீங்க தடுக்கலைனா இன்நேரம் என்குவரியில் இருந்துருப்பேன்.. P.T. வந்தபோ நிலைமையை சமாளிச்சதுக்கும் தேங்க்ஸ்”  
மாலினி மெல்லிய புன்னகையை பதிலாக தரவும் ராஜசேகர், “என்ன சிஸ்டர் சிரிக்கிறீங்க?”
“இந்த சிரிப்புக்கு அர்த்தம் ‘என் தம்பியை காப்பாத்துவது என் பொறுப்பு அல்லவா’ என்பது”
இப்பொழுது ராஜசேகர் புன்னகைத்தான்.
மதிய இடைவெளியில் ஸ்ரீராமன்  மாலினியிடம், “தன்க் யூ மாலு” என்றதும் மாலினி கடுமையாக முறைத்தாள்.
ஸ்ரீராமன், ‘தேங்க்ஸ் தானே சொன்னோம்! அதுக்கு  எதுக்கு இவ கண்ணகி அவதாரம் எடுக்குறா?’ என்று மனதினுள் கேட்டுக் கொண்டான்.
“என்ன சொன்ன?”
“தன்க் யூ மாலு னு சொன்னேன்”
மாலினி கடுமையான குரலில், “என் பெயரை சுருக்கி கூப்பிடாதே”
“உன் பிரெண்ட்ஸ் அப்படி தானே கூப்பிடுவாங்க?”
“என் பிரெண்ட்ஸ் தான் அப்படி கூப்பிடலாம்”
ஸ்ரீராமன் உண்மையான வருத்தத்துடன், “நான் உன் பிரெண்ட் இல்லையா மாலினி?”
ஸ்ரீராமன் தற்பொழுது உண்மையாகவே வருந்துகிறான் என்பது தெரிந்தும் மாலினி சலனமே இல்லாமல், “இல்லை” என்றாள்.
“ஏன் மாலினி? நான்………….”
“பிரெண்ட்ஷிப்னா என்ன னு உனக்கு தெரியுமா?”
“மாலினி”
“எஸ்.. உனக்கு பிரெண்ட்ஷிப்னா என்னனே தெரியாது. என்னை நீ பிரெண்டா நினைத்திருந்தால் என்னிடம் வழிய மாட்ட..”
ஸ்ரீராமன் தலை குனிந்தான்.
பிருந்தா மனதினுள், ‘இவனுக்கு கூட சூடு சொரணை இருக்கா? இல்லை இதுவும் நடிப்போ’ என்று கூறிக்கொண்டாள். 
மாலினி, “என்னை விடு.. நம்ம கிளாஸ்ஸில் யாரையாச்சும் நீ பிரெண்டா நினைக்கிறியா?”
“மாலினி”
மாலினி சுற்றி பார்த்துவிட்டு தாழ்ந்த குரலில், “நீ நேத்து வொர்க்-ஷாப் போயிட்டு வந்தது எனக்கு தெரியும்” என்றதும் அவன் முகம் பேய்யரைந்தது  போல் மாறியது.
ஸ்ரீராமன் எழும்பாத குரலில், “மாலினி” என்று கூற, ஏதோ கூற வந்த மாலினி  செல்வராஜ் மற்றும் சிவகுரு வருவதை பார்த்துவிட்டு பேச்சை மாற்றினாள்.
“எதுக்கு தேங்க்ஸ் சொன்ன?”
“P.T சாரிடம் ஜெனிஷா என்னை மாட்டி விட இருந்தப்ப…………..”
“உனக்காக நான் அப்படி சொல்லலை.. சேகர்-ஜெனிஷா நன்மைக்காக தான் அப்படி சொன்னேன்” என்று முடித்துவிட்டாள்.
மாலினியின் பதிலுக்கு மறுமொழி கூற முடியாமல் ஸ்ரீராமன் தன் இடத்திற்கு சென்றான்.
தன்னை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த பிருந்தாவை பார்த்த மாலினி, “நான் உன் பேவரெட் ஹீரோ துல்கர் இல்லை டி”
“அதான் தெரியுமே”
“அப்பறம் எதுக்கு இந்த லுக்கு விடுற?”
நந்தினி, “உங்களுக்கு வேற பேச்சே பேச தெரியாதாடி?” 
பிருந்தா, “நாங்க என்ன உன்னை மாதிரி சாமியாரா?”
ஆர்லி, “ஜில்ஸ்..  பிரான்க்கா பேசுற நம்மளை நம்பலாம் பட் இவளை போன்ற சைலென்ட் பார்ட்டீஸ் தான் நம்ப கூடாது”
பிருந்தா ஆர்வமாக, “அப்டிங்கற! ஏன் அப்படி சொல்ற?”
இவ்வளவு நேரம் பிருந்தாவை முறைத்துக் கொண்டிருந்த நந்தினி இப்போது  ஆர்லியை முறைத்தாள். 
நந்தினியின் முறைப்பை பொருட் படுத்தாமல் ஆர்லி, “சிலர் சைலெண்ட்டா இருந்தே காரியத்தை சாதிச்சுடுவாங்க”
நந்தினியை மேலும் கீழும் பார்த்த  பிருந்தா, “பார்த்தா அப்படி தெரியலையே” என்று இழுக்க,
நந்தினி, “நான் உண்மையிலேயே நல்ல பொண்ணுடி.. எனக்கு ஒன்னும் தெரியாது” என்றதும் மாலினி பலமாக சிரித்தாள்.
பிருந்தா ஒரு குதுகலத்துடன், “ஹே.. மாலு சொல்லிட்டு சிரி”
மாலினி நந்தினியை பார்த்துக் கொண்டே, “நீ கேட்டதில்லை பிருந்தா..” என்று மீண்டும் சிரிக்க, 
பிருந்தா, “எதை?” என்று வினவ நந்தினியோ ‘ஐயோ இவ ஏதோ என்னை டேமேஜ் பண்ண போறா’ என்று பயந்தாள்.
மாலினி சிரிப்புடன், “ஒரு பழமொழி ஜில்ஸ்.. ‘ஒன்னும் தெரியாத பாப்பா போட்டாளா………………..” 
நந்தினி அவசரமாக மாலினியின் வாயை மூடினாள்.
பிருந்தாவும் ஆர்லியும் ஆர்வமாக, “சொல்லி முடி மாலு” 
மாலினி நந்தினியை பார்த்து, “உனக்காடி எதுவும் தெரியாது!!!  அப்பறம் எப்படி இந்த பழமொழி தெரிந்தது”
நந்தினி, “அது.. என் பாட்டி சொன்னது”
மாலினி, “யாருக்கு உனக்கா?” என்று சிரிக்க நந்தினி அவளை முறைத்தாள்.
மோகனா, “நீ சொன்ன பழமொழிக்கு என்ன அர்த்தம் மாலு?”
மாலினி, “அதை நந்தினி கிட்ட கேளு மோனி.. அவ உனக்கு அழகா எக்ஸ்பிளேன் பண்ணுவா” என்று சிரிக்கவும், நந்தினி அழமாட்டாத குறையாக, “மாலு” என்றாள்.
பொறுமை இழந்த பிருந்தா, “மாலு இப்போ நீ அதை கம்ப்ளீட் பண்ண போறியா இல்லையா” 
மாலினி, “அதுவா.. ஒன்னும்……………………” 
நந்தினி “ப்ளீஸ் மாலு” என்ற சிணுங்கலுடன்  மீண்டும் மாலினியின் வாயை மூடினாள்.
நந்தினியின் கையை எடுத்துவிட முயற்சித்த பிருந்தா  தோல்வியடைய, ஆர்லி  நந்தினியின் இடையில் கூச்சமூட்டினாள். “ஏய்” என்ற அலறலுடன் நந்தினி சிறிது துள்ளினாள்.
மாலினி, “இவ்வளவு கூச்சமா? ஒருத்தர் ரொம்ப பாவம்” என்று பரிதாபப்பட,
ஆர்லி அறியாபிள்ளையை போல், “யாரு மாலு?”
“வேற யாரு எல்லாம் மிஸ்டர் நந்தினி தான்”
பிருந்தா மெய்யான அதிர்ச்சுயுடன், “யாரு புழாவா?”
நந்தினி பிருந்தாவை அடிக்க ஆரம்பித்தாள்.
பிருந்தா, “சொன்னவளை விட்டுவிட்டு என்னை ஏன்டி அடிக்கிற?”
நந்தினி, “நீ தானே லூசுதனமா உளறுற?” 
“நானா உளறினேன்.. இவ தானே மிஸ்டர் நந்தினி னு சொன்னா”
நந்தினி மீண்டும் அடிக்க ஆரம்பிக்க, பிருந்தா அடியில் இருந்து தப்பிக்க நந்தினியின் இடையில் கூச்சமூட்ட நந்தினி அலறலுடன் துள்ளி குதித்தாள். அவளது அலறலில் புழா திரும்பி பார்க்க நந்தினி கூச்சத்துடன் இடத்தில் அமர்ந்து பிருந்தாவின் கையை நறுக்கென்று கிள்ளினாள்.
பிருந்தா, “பிசாசே வலிக்குதுடி.. இதை எல்லாம் மிஸ்டர் நந்தினி கிட்ட வச்சுக்கோ” என்றதும் நந்தினியின் கண்கள் சிறிது கலங்கிவிட்டது.
மாலினி, “ஹே நந்தினி.. என்ன இது.. சும்மா விளையாட்டுக்கு தானே”
நந்தினி, “எதுடி விளையாட்டு?” சிறு கோபத்துடன் கேட்டாள்.
மோகனா, “என்ன நந்தினி நீ என்ன குட்டி பாப்பாவா?” (இதை ஒரு பாப்பா சொல்வது தான் வேடிக்கையே!)
பிருந்தா, “அதானே நீ என்ன மோகனா வா?”
மோகனா, “நான் ஒன்னும் குட்டி பாப்பா இல்லை”
பிருந்தா ஆச்சரியத்துடன் மோகனாவை பார்க்கவும் மாலினி சிறு புன்னகையுடன், “விடு விடு.. எப்பவாது இப்படி அதிசயம் நடக்கும்”
(பிருந்தா தன்னை ‘குட்டி பாப்பா’ என்று குறிப்பிட்டதை மோகனா புரிந்து கொண்டது தான் அந்த அதிசயம்) 
மோகனா, “என்ன அதிசயம் மாலு?”
பிருந்தா ஆச்சிரியத்தில் இருந்து சட்டென்று மீண்டு, “அதானே பார்த்தேன்!”
மோகனா, “எதை பார்த்த?”
மோகனா கேள்வி மேல் கேள்வி அடுக்க நந்தினி சிரித்துவிட்டாள்.
மாலினி நந்தினியின்  தோளை தட்டி, “குட்.. இப்படி தான் சிரிச்சுட்டு இருக்கணும்..” என்று கூறியவள் சிறு இடைவெளி விட்டு, “ஆனா நண்டு.. நீ இப்படி உணர்ச்சிவசபட்டால் உன்னை ஓட்டுறதை விட்டுருவோம் னு நினைக்காதே” என்றதும் நந்தினி முறைத்தாள்.
(ஆனால் மனதினுள் ‘இனி நந்தினியை ஓட்ட கூடாது, யாரையும் ஓட்ட அனுமதிக்க கூடாது’ என்று முடிவெடுத்தாள் மாலினி)  
மாலினி, “ஓகே..ஓகே.. உடனே நெற்றி கண்ணை திறக்காதே”
மோகனா, “ஓகே நந்து.. இப்ப சொல்லு”
நந்தினி, “எதை?”
“அந்த பழமொழிக்கு அர்த்தத்தை”
ஆர்லி, மாலினி, மற்றும் பிருந்தா பலமாக சிரித்தார்கள். அவர்களை முறைத்த நந்தினி, “நானா சொன்னேன்?”
“மாலு தான் சொன்னா, ஆனா உன்னிடம் தானே அர்த்தம் கேட்க சொன்னா”
“எனக்கு தெரியாது”
“மாலு நீ அழகா அர்த்தம் சொல்லுவ னு சொன்னாளே!”
நந்தினியை பார்க்க மாலினிக்கே  பாவமாக தோன்றியது, உடனே, “மோனி.. நந்துக்கு அர்த்தம் தெரியும் ஆனா அதை உனக்கு புரிற மாதிரி சொல்ல தெரியாதாம்”
“அப்போ நீ சொல்லு”
“எனக்கு அர்த்தம் தெரியாதே”
“ஓ”
பிருந்தா, “இருந்தாலும் நீ இவ்ளோ நல்லவளா இருக்க கூடாது மோனி..”
(மாலினி எதை சொன்னாலும் நம்புகிறாளாம் மோகனா.. அதை தான் இப்படி சொல்கிறாள் பிருந்தா)
மோகனா, “ஏன் அப்படி சொல்ற பிருந்து?”
பிருந்தா தலையில் கை வைத்து ‘ஐயோ’ என்றாள்.
இதை பார்த்த ஷங்கர் தன்னவளை நினைத்து ரசித்து சிரித்தான். இவர்கள் பேசியது காதில் விழாவிட்டாலும் மோகனாவிற்கு பதில் சொல்ல முடியாமல் தான் பிருந்தா நொந்து கொண்டாள் என்பதை புரிந்து கொண்டான். அதே நேரத்தில் மோகனா ஷங்கரை பார்த்தாள். அவனது சிரிப்பை பார்த்ததும் இவளும் சிரித்தாள்.
ஷங்கர் தன்னையும் அறியாமல் தன் இதழ்களை குவித்து சிறு முத்தம் ஒன்றை தன்னவளை நோக்கி காற்றில் பார்க்க விட்டான். அந்த செய்கையில் மோகனா பெரும் அதிர்ச்சி அடைந்தாள். மோகனாவின் பேய்யரைந்த முகத்தை பார்த்து தான் தன் தவறை ஷங்கர் உணர்ந்தான். தன் தலையில் தானே அடித்துக் கொண்டான். மோகனா அவசரமாக தன் பார்வையை திருப்பினாள். இவற்றை பார்த்த ஆர்லியின் மனதினுள் பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
    
அதன் பிறகு நிகழ்ந்த பேச்சுகள் மோகனாவின் காதில் விழுந்தாலும் எதுவும் அவளது மூளையை எட்டவில்லை. ஏதோ இனம் புரியாத பயம் அவளை சூழ்ந்தது. மாலினியின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டாள்.
மாலினி ரகசிய குரலில், “என்ன மோனி?”
“மாலு.. மாலு”
“என்னடா?”
“பயமா இருக்கு”
‘இவளுக்கு திடீர்னு என்ன ஆச்சு?’ என்று குழம்பினாள் மாலினி. மற்றவர்கள் முன் மோகனாவை விசாரிப்பது நல்லதல்ல என்று மாலினிக்கு தோன்றியதோ என்னவோ, மோகனாவின் கையை அழுத்தி, “நான் கூடவே இருக்கிறேனே டா.. அப்பறம் என்ன?”
“..”
மோகனாவின் பார்வை மேல் சிறு பீதியுடன் ஷங்கர் பக்கம் திரும்பியது. மோகனாவின் முகத்தையும் செயல்களையும் பார்த்துக் கொண்டிருந்த  ஷங்கருக்கு தன் மீதே கோபம் வந்தது. மோகனாவை தேற்ற முடியாமல் தவித்தான்.
மோகனாவின் பார்வையை தொடர்ந்து மாலினி ஷங்கரை பார்க்கவும் ஷங்கர் அவசரமாக தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினான்.
மோகனாவின் பயத்தின் காரணத்தை யூகிக்க முடியாமல் மாலினி, “எதுக்கும் பயப்படக் கூடாது” என்று கூறி தேற்ற முயற்சித்தாள்.
“..”
“நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன்.. ஓகே” என்றவள் தன் நிழலை விட்டு பிரிந்து மோகனா கஷ்டப்பட போகிறாள் என்பதை இப்போது அறிய மாட்டாள்.
“ஹ்ம்ம்”
முதல் முறையாக மோகனாவின் மனதில் இருப்பதை அறிய முடியாமல் தவித்தாள் மாலினி. ஒருவேளை ஷங்கர் தன் பார்வையை திருப்பாமல் இருந்திருந்தால், அவனது பார்வையில் இருந்த தவிப்பை மாலினி பார்த்திருந்தால் பின் நாளில் மோனாவின் பூ போன்ற மனம் கசங்காமல் தவிர்த்திருக்கலாமோ! 
பிருந்தா மாலினிக்கு மட்டும் கேட்கும் குரலில், “மாலு.. பேச்சை சாமர்த்தியமா மாத்திட்டதா நினைப்பா?” என்றாள்.
மாலினி புரியாது போல், “என்ன ஜில்லு சொல்ற?”
“நான் மோனி இல்லை.. ஸ்ரீராம் தான் போட்டு குடுத்தான் னு உனக்கு தெரியும் தானே” என்றதும் மாலினி புன்னகைத்தாள்.
பிருந்தா ஏதோ கேட்க வரவும் மாலினி, “ஷ்.. அப்பறம் பேசலாம்” என்றாள்.
ஆர்லி, “என்ன ஜில்ஸ் லாஸ்ட் ரோ பசங்க யாரையும் காணுமே!”
பிருந்தா, “வேற எங்க போயிருப்பாங்க.. கிளாஸ் விட்டா என்குவரி செஸ்ஸன்  தான்”
ஆர்லி, “இன்னும் விட்ட பாடில்லையா?”
“எப்படி விடுவாங்க! ஒரு staff-யை ‘போடி’ னு சொன்னா சும்மா விட்டுருவாங்களா?”
“அதான் யாரு னு தெரியலையே.. விட்டுற வேண்டியதானே!”
பிருந்தா அமைதியாகிவிட்டாள். மாலினியை பார்த்தாள், ஆனால் மாலினியின் கவனம் இவர்களின் பேச்சில் இல்லை. அவள் மூளையில் மோகனாவின் பயத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதே ஓடிக் கொண்டிருந்தது.
இவர்கள் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் –
ஆஷா முன்தினம் பார்த்த திரை படத்தை பற்றி சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தாள் ஆனால் அது எதுவுமே ஜெனிஷாவின் காதில் விழவில்லை.
அவள் சிந்தனை அவள் வசமே இல்லை! அது ராஜசேகரை பற்றி யோசித்து கொண்டிருந்து.
ராஜசேகர் கூறிய ‘உரிமையா ‘நீ எப்படி இன்னொரு பொண்ணு கூட சிரிச்சு பேசுவ?’ னு கேட்டுருப்ப.. இப்படி பொறாமையினால் கோபம் கொண்டு என்னை வெறுப்பேத்த கண்டவனுடன் சிரிச்சு பேசி…..’ என்ற வார்த்தைகளே அவள் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.. அதன் விளைவாக தன் மனதை ஆராயத் தொடங்கினாள் ஜெனிஷா.
‘கரெக்ட் தானே அவன் மாலினி கூட பேசினதில் எனக்கு பொறமை தானே வந்தது. அவன் காதலை மறுத்த எனக்கு அவன் யாரிடம் பேசினால் என்ன! ஆனால் என்னால் அப்படி இருக்க முடியலையே! அவனை வெறுப்பேத்த தானே ஸ்ரீராம் கூட பேசுனேன்.. அதை இவன் கண்டுக்கலை என்றதும் கோபம் வந்துதே! அவன் சொல்வது உண்மை தானோ அவனை நான் காதலிக்குறேனோ!’
ஓரளவு தன் மனதை புரிந்து கொண்ட பிறகு ‘எப்படி?’ என்ற கேள்வி எழுந்தது.

Advertisement