Advertisement

மழை 4:
சைக்கோ(அதாங்க கெமிஸ்ட்ரி சார் ராமலிங்கம்) வெளியே செல்லவும் கணித ஆசிரியர் ரத்னவேல் பாண்டியன் வகுப்பறை உள்ளே வந்தார்.
“குட் மார்னிங் ஸ்டுடென்ட்ஸ்.. ஐ ரத்னவேல் பாண்டியன்.. டேக்.. மதேமடிக்ஸ்-I டூ யூ.. டென் மினிட்ஸ் டைம்.. ஆல் கிவ் இன்ட்ரோ.. டெல் நேம், பிளேஸ் யூ கம் பிரம்” என்றார்.
பிருந்தா, “என்ன மாலு இவர் பில் இன் தி ப்லன்க்ஸ் மாதிரி பேசுறாரு”
மாலினி சிறு புன்னகையுடன், “ஹ்ம்ம்.. பார்க்கலாம்”
சக்திவேல், “டேய்.. இவரு உன் இனம் டா”
அனீஸ் ‘என்ன’ என்பது போல் பார்க்கவும் சக்திவேல், “ரொம்ப அழகா இங்கிலீஷ் பேசுறாரே.. அதை சொன்னேன்”
அனீஸ், “நீ மட்டும் கான்வென்ட்டில் படிச்சுட்டு வந்துட்ட.. போடா”
சிவகுரு, “பெயரை கேட்டதும் சிறுத்தை படத்துல வர போலீஸ் ரத்னவேல் பாண்டியன் மாதிரி இருப்பார் னு நினைத்தால் அந்த படத்துல வர ராக்கெட் ராஜா மாதிரி இருக்காரே” என்று கூறவும் மாணவர்கள் சிரித்தனர்.
பதினைந்து நிமிட இன்ட்ரோ பிறகு ஆசிரியர் பாடத்தை நடத்த தொடங்கினார்.
அவர் போர்டில் எழுதி கொண்டிருக்கும் பொழுது சத்தம் வரவும் மாணவர்கள் பக்கம் திரும்பி, “ஐ ரைட்.. யுவர் ஹன்ட் வொர்க்.. வொய் மௌத் ஸ்பீக்?” என்றதும் அவர் பேசியதை சிவகுரு மொழிபெயர்ப்பு செய்தான்,
“நான் எழுதுறதை பார்த்து நீங்க எழுதும் போது உங்க கை வேலை செய்யும் போது வாய் ஏன் பேசுது?”
ஆசிரியர் சிவகுருவை எழுப்பி, “டெல்.. வென் ஹன்ட் வொர்க் வொய் யுவர் மௌத் ஸ்பீக்?” 
சிவகுரு, “மௌத் நோ ஸ்பீக் சார்.. ஒன் டவுட்” என்றதும் மாணவர்கள், மாணவிகள் சிரிக்கவும் ஆசிரியர் கோபமாக, “யூ இன்சல்ட் மீ.. கெட் அவுட்” என்றார்.
சிவகுரு, “ஓகே” என்று கூறி வெளி செல்லவும், ஆசிரியர், “டேக் நோட்.. ஸ்டாண்ட் அண்ட் ரைட்” என்றார்.
சிவகுரு நோட்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். 
ஆசிரியர் அவனை முறைத்துவிட்டு வகுப்பை தொடர்ந்தார். 
வகுப்பு முடியும் தருவாயில்  ரௌண்ட்ஸ் வந்த பிளேட்(அதாங்க பிரின்சிபால் சுவாமிநாதன்) சிவகுருவிடம், “வொய் ஆர் யூ ஸ்டான்டிங் அவுட்-சைடு?” என்று வினவினார்.
சிவகுரு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு,  ஐ said ஐ ஹவ் அ டவுட்.. சார் சென்ட் மீ அவுட்” என்றதும் காகா சீரும் புலியாக மாறியது. 
வகுப்பு முடிந்ததும் சிவகுரு உள்ளே செல்ல, வெளியே வந்த ரத்னவேல் பாண்டியனிடம் சுவாமிநாதன், “மீட் மீ இன் மை ரூம்” என்றார். 
ராஜசேகர், “என்ன டா வெளிய போ சொன்னதும் உடனே போய்ட்ட?”
சிவகுரு புன்னகையுடன், “ஸ்கூலில் சார் எப்போதுமே அவுட்-ஸ்டான்டிங் பெர்சனாலிட்டி தான்” என்றான்.
“ப்ரின்சி என்னடா கேட்டார்?”
“ப்ரின்சி ஆ?” என்று சிவகுரு கேட்டதும் ராஜசேகர் சந்தேகமாக, “ஏன் டா அவர் தானே பிரின்சிபால்?”
“அவரே தான் .. நீ ப்ரின்சி னு மரியாதையா சொன்னதை கேட்டு தான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்..” என்று கூறியவன் ஞாபகம் வந்தது போல், “ஓ.. நீ நேத்து வரலை.. அதான் உனக்கு அவரை பற்றி தெரியலை.. அவருக்கு நிறைய நிக் நேம்ஸ் இருக்குது.. காகா.. கூஜா.. தலையாட்டி பொம்மை.. டம்மி பீஸ்.. பிளேட்.. ரம்பம்.. ஜால்ரா.. etc..etc..”
ராஜசேகர் சிறிது ஆச்சரியமாக பார்க்கவும் சிவகுரு, “நிக் நேம்ஸ் கதைய அப்பறமா சொல்றேன்.. இப்போ நம்ம  ஜிண்டா கதைக்கு வா”
ராஜசேகர், ஜிண்டா வா?”
“அதான் நம்ம maths வாத்தி.. ரத்தன்வேல் பாண்டியன் னு பேர் வச்சுட்டு ராக்கெட் ராஜா மாதிரி ரொம்ப அழகா இங்கிலீஷ் பேசுறதால  ஜிண்டா னு பேர் வச்சுட்டேன்”
[சிறுத்தை படத்தில் ராக்கெட் ராஜா என்றவன் ஜிண்ட ட ஜித ஜித ஜிண்ட ட தா
ஜிண்ட ட ஜித ஜித ஜிண்ட ட தா” என்று அடிக்கடி பாடுவான். அதை தான் ‘ஜிண்டா’ என்று பெயர் வைத்துவிட்டான்]
ராஜசேகர் சிரித்தான். சிவகுரு சுவாமிநாதனிடம் கூறியதை சொன்னதும் ராஜசேகர், ஜிண்டா போட்டு குடுத்துட்டா என்ன டா செய்வ?”
சிவகுரு அசால்ட்டாக, “அதை அப்போ பார்த்துக்கலாம்” என்றான்.  
அதே நேரத்தில் பிரின்சிபால் அறையில்,
சுவாமிநாதன், “வாட் ஹப்பெண்டு இன் CSE-IT கிளாஸ்?”
திடீரென்று மொட்டையாக இப்படி கேட்கவும் ரத்னவேல் பாண்டியன் ஒன்றும் புரியாமல் முழித்தார்.
சுவாமிநாதன், “என்ன முழிக்குறீங்க! எதுக்கு அந்த பையனை வெளியே அனுபுநீங்க?”
“சார்.. அது?”
“டவுட் கேட்டானா?”
“நோ சார்.. அவன்…………” என்று இழுத்தார்.
[எப்பொழுதுமே சுவாமிநாதனிடம் இருந்து ரத்னவேல் பாண்டியன் திட்டுவாங்குவது அவரது ‘பட்லர் இங்கிலீஷ்’ காக தான். அதனால் சிவகுரு கிண்டலை பற்றி கூற தயங்கினார்]
சுவாமிநாதன், “என்ன உங்க இங்கிலிஷை கிண்டல் பண்ணானா?”
“சார்”
“இதுக்கு தான் ‘இங்கிலீஷ் இம்ப்ரூவ் பண்ணுங்க’ னு முதலில் இருந்து சொல்லிட்டே இருக்கிறேன்.. கேட்டா தானே..”
“..”
“ஐ கிவ் யூ ஒன் மன்த் டைம்.. இம்ப்ரூவ் யுவர் இங்கிலீஷ்” என்று கடுமையான குரலில் கூறியவர் ரதன்வேல் பாண்டியன் அங்கேயே நிற்கவும் அதே கடுமையான குரலில், “நொவ் யூ மே கோ” என்றார். 
 
அடுத்தடுத்த வகுப்புகள் நடந்தது. முதல் நாள் வகுப்புகள் வெற்றிகரமாக முடிந்தது.
அடுத்த நாள் கெமிஸ்ட்ரி ஆசிரியர் அனீஸ் மற்றும் சக்திவேலிடம் இம்போசிஷன் பற்றி கேட்கவும் தான் அவர்களுக்கு ஞாபகமே வந்தது.  எழுதவில்லை என்றதும் ராமலிங்கம் கோபப்படவில்லை, அமைதியாக ஆனால் உறுதியான குரலில், “நாளைக்கு 20times எழுதிட்டு வாங்க.. பஸ்ட் டைம் னு விடுறேன்.. நாளைக்கும் எழுதாம வந்தால் இம்போசிஷன் கொண்டுவரவரை பின்னால் நிற்கணும், இம்போசிஷன் கூடிட்டே போகும்.. தென் அட்லாஸ்ட் யூ ஹவ் டு மீட் H.O.D” என்றார். 
சக்திவேல் அனீஸிடம், “சைக்கோ னு கரெக்ட்டா தான் டா பேர் வச்சிருக்க” என்றான்.
நாட்கள் நகரத் தொடங்கியது, மாணவர்கள் மெல்ல மெல்ல கல்லூரி வாழ்வில் பொருந்தினர். வகுப்புகள் ஆரம்பித்து ஒரு வாரம் முடிந்திருந்தது. வண்ண-உடையில் இருந்து சீருடைக்கு மாறினார். 
சீருடைக்கு மாறியது கூட CSE-IT மாணவர்களுக்கு வருத்தம் ஏற்படவில்லை. அவர்களின் வருத்தம் என்னவென்றால் ஐஸ்வர்யாவை தவிர மற்ற ஆசிரியர்கள் அனைவருமே ஆண்கள். 
அதிலும் ஆங்கில பாட ஆசிரியர் மட்டுமே கலகலப்பாக இருந்தார். தோழமையுடன் பழகினார். ‘பிசிக்ஸ்’ ஆசிரியர் பாடம் நடத்தும் போது கண்டிப்பாக இருந்தாலும் மற்ற நேரங்களில் சற்று இலகுவாக இருந்தார். ‘இன்ஜினியரிங் கிராபிக்ஸ்’ ஆசிரியர் ரொம்ப கண்டிப்பானவர் என்று கூற முடியாது, மாணவர்களை சற்று நேரம் கலகலப்பாக பேச விடுவார் ஆனால் அவர் அதில் கலந்துக் கொள்ளாமல் அவர்களுக்கு சிறந்த ஆசானாக இருந்து வழிநடத்துவார்.
‘Foundamentals of Computing & Programming’ என்ற கம்ப்யூட்டர் சம்பந்தமான பாடத்தை தான் ஐஸ்வர்யா நடத்துகிறார்.
ஆங்கில பாட ஆசிரியரை மாணவர்கள் அன்புடன் ‘தோஸ்த்‘ என்று அழைத்தனர். வேதியியல்(கெமிஸ்ட்ரி) ஆசிரியரை ‘சைக்கோ’ என்றும் கணித ஆசிரியரை ‘ஜிண்டா‘ என்றும் ஐஸ்வர்யாவை ‘உலக அழகி‘ என்றும் அழைத்தனர்.
வேதியியல் ஆசிரியர் அனீஸ் மற்றும் சக்திவேலை கேள்வி கேட்டு இம்போசிஷன் குடுத்து கொடுமை படுத்துவதை நிறுத்தவில்லை. 
கணித ஆசிரியர் கேள்விகளால் சிவகுருவை வருத்தெடுத்தார். சிவகுருவிற்கு கணிதத்தில் சிறிது ஆர்வம் இருந்ததால் அவன் அசராமல் ஆசிரியரை சமாளித்தான், இப்பொழுதும் அவரிடம் அவரை போல் தான் பேசுவான். 
இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள்:
கிருஷ்ணமூர்த்தியை தவிர அனைவரும் வகுப்பிற்கு வந்திருந்தனர். மதிய உணவு இடைவெளியில் மாணவர்கள் பெரும் கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.
மாலினி கடைசி வரிசையில் அமர்ந்து சக-மாணவி ஒருத்தி  பாடத்தில் கேட்ட சந்தேகத்தை தீர்த்து வைத்துக் கொண்டிருந்தாள்.
 
அப்பொழுது வகுப்பின் உள்ளே நுழைந்த ஆசிரியை உயர்சுருதியில், “அமைதியா இருக்க தெரியாது?”
 
சிவகுரு, “லஞ்ச் டைம் தானே”
 
ஆரிசியை, “யாருடா அது? லஞ்ச் டைம் னா சத்தம் போடணுமா? அமைதியா இருங்க” என்று கூறிவிட்டு சென்றார்.
சற்று நேரம் மாணவர்கள் அமைதி காத்தனர், ஆனால் ஐந்தே நிமிடத்தில் சத்தம் அதிகமாக வரவும் அதே ஆசிரியை கோபமாக வந்து, “அறிவே கிடையாதா உங்களுக்குலாம்…………….” என்று கத்த தொடங்கவும்,
 
மாணவர்கள் பக்கத்தில் இருந்து, “வாய மூடிட்டு போடி” என்று ஒரு குரல் கேட்டது. 
அப்பொழுது மாணவர்கள் சத்தத்தை குறைத்ததால்  அந்த வாக்கியம் தெள்ள தெளிவாக அந்த ஆசிரியை காதில் விழுந்துவிட்டது ஆனால் யார் சொன்னது என்பது தெரியவில்லை. அந்த ஆசிரியை வேகமாக வெளியே சென்ற இரண்டு நிமிடங்களில் மெக்கானிகல் டிப்பார்ட்மென்ட்டை சேர்ந்த ஆசிரியர் ஒருத்தர் வகுப்பறையினுள்ளே வந்தார்.
 
“யாரடா அது? யார் சொன்னது?”
 
“….”
 
“யார்டா ‘போடி’ சொன்னது?” 
 
செல்வராஜ் தன் அருகில் இருந்த ராகேஷிடம், “அங்க சொன்னா இங்க வலிக்குதுடா மச்சான்” என்று முணுமுணுத்தான்.
 
ஆசிரியர், “எவன்டா அது.. இப்ப வாய் திறந்து பேசு”
 
“…”
 
“இப்ப நீயா ஒத்துக்கலை.. விஷயம் சேர்மன் வரை போகும்”
 
“…”
 
“என்னடா கொழுப்பா.. காலேஜ் திறந்து ஒரு மாசம் கூட முடியலை.. அதுக்குள்ள எவளோ திமிர்.. பைனல் இயர்ஸ் கூட இப்படி பேசினது இல்லை.. உங்களுக்கு என்னடா!”
 
(குண்டு ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு வகுப்பறை அமைதியாக இருந்ததால், செல்வராஜ் ராகேஷிடம் முணுமுணுக்காமல், “அவன்களுக்கு தைரியம் இல்லை” என்று மனதினுள் சொல்லிக் கொண்டான்.)
 
“…”
 
“யார் சொன்னதுன்னு இப்போ சொல்ல போறீங்களா இல்லையா?”
 
“..”
 
மாணவர்கள் யாரும் வாய் திறக்காமல் இருக்கவும் ஆரிசியரின் கோபம் கூடியது. அவர் ஒரு சில மாணவிகளை எழுப்பி ‘யார் செய்தது?’ என்று கேட்டார். அப்பொழுது தாரிகாவை எழுப்பினார்.
 
ஆசிரியர், “யார்?”
 
“தெரியாது சார்”
 
“யாரை கேட்டாலும் என்ன தெரியாது தெரியாது னு சொல்லிட்டு இருக்கீங்க? 
என்ன அந்த பையனுக்கு சப்போர்ட்டா?”
 
“சார் லாஸ்ட் ரோ-வில் இருந்து தான் சத்தம் வந்துது.. யாருன்னு எனக்கு தெரியாது”
 
“சிட் டௌன்” என்று கூறிவிட்டு கடைசி இரு வரிசை பசங்களிடம், “யாரடா சொன்னது? சொல்லுங்க.. இல்லை லாஸ்ட் டூ ரோஸ் சேர்மன் மீட் பண்ணனும்”
 
(ஆசிரியர் ‘லாஸ்ட் டூ ரோஸ்’ என்றதும் சிவகுருவிற்கு பத்ரி படத்தில் வரும் காட்சி ஒன்று நினைவிற்கு வந்தது. அந்த படத்தில் ஒரு ஆசிரியர் “லாஸ்ட் ரோ கெட் அவுட்” என்று சொன்னதும் கடைசி வரிசையில் இருக்கும் மாணவர்கள் சோக கீதத்தை வாயால் பாடிவிட்டு கடைசி பெஞ்சை வகுப்பின் வெளியே வைத்து விட்டு உள்ளே வருவார்கள்.
இதை நினைத்து பார்த்ததும் ஏற்பட்ட சிரிப்பை கஷ்ட பட்டு அடக்கினான் சிவகுரு. அவனது நல்ல நேரம் அந்த நேரத்தில் ஆசிரியர் அவனை பார்கவில்லை.)
 
“….”
 
மாணவர்களின் அமைதியை பொறுக்காமல் வெளியே சென்றார். அவர் சென்ற இரண்டி நிமிடங்களில் மற்றொரு ஆசிரியர் உள்ளே வந்தார். 
வந்தவர் ‘யூ’ ‘யூ’ ‘யூ’ என்று மூன்று மாணவிகளை எழுப்பியவர், “கம் அவுட்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். 
மாலினி, ஆஷா, மற்றும் ஆஷா பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவி தான் அந்த ஆசிரியர் தேர்ந்தேடுத்திருந்த மாணவிகள். அந்த ஆசிரியர் வெளியேறியதும் மாணவிகள் மூவரும் வெளியேறினர். 
 
செல்வராஜின் முக சுருக்கத்தை கவனித்த ராகேஷ், “என்னடா?”
 
செல்வராஜ், “மாலினிக்கு தெரியும்”
 
சற்று அதிர்ந்தாலும் ராகேஷ், “விடுடா.. பார்த்துக்கலாம்..”
 
செல்வராஜ், “எதை பார்த்துக்கலாம்? அந்த ராணி ரங்கம்மாவை போல் இவளும் போட்டு குடுப்பதையா?”
 
சிவகுரு, “போன பொண்ணுங்க வரட்டும்.. அப்பறம் பார்த்துக்கலாம்”
 
 
 
மாலினியை தவிர மற்ற இருவரும் வந்தனர். ஆஷா சிறிது கலங்கிய கண்களுடன் வந்தாள். அவளிடம் என்னவென்று கேட்டதற்கு,
“சொன்னது உன் பாய் பிரெண்ட்டா? அதான் யாருன்னு சொல்ல மாடிக்கிறியா? னு கேவலமா கேட்குறாங்க” எனறாள் கலங்கிய விழிகளுடன்.
 
ஜெனிஷா, “யாருன்னு தெரிஞ்சா அவன் என் பாய் பிரெண்ட்டா இல்லையானு சொல்றேன்னு சொல்லிருக்க வேண்டியது தானே.. அத விட்டுட்டு அழுதுட்டு இருக்கியே”
 
ஆஷா ஜெனிஷாவை முறைத்துக் கொண்டே, “உன்ன கேட்டா தெரியும்”
 
“நான் இதை தான் சொல்லிருப்பேன்”
 
“கிளிச்சுருப்ப”
ஏதோ சொல்ல வந்த ஜெனிஷா ஆஷாவின் முகத்தை பார்த்ததும் வெறுமென தோளை குலுக்கினாள். ஜெனிஷா கூறியதை கேட்ட ராஜசேகர் மனதினுள், ‘வாய் ஜாஸ்தி’ என்று கூறிக் கொண்டான்.
 
 
 
ஆசிரியர் அறையில்  மாலினி ஒரு இருக்கையில் அமர்ந்திருக்க அவளுக்கு முன்  மெக்கானிகல் துறையை சேர்ந்த  மூன்று ஆசிரியர்கள்(ஆண்கள்) அமர்ந்திருந்தனர். மூவரில் இன்ஜினியரிங் கிராபிக்ஸ் ஆசிரியரும் இருந்தார்.
 
“யார் சொன்னது?”
 
“தெரியாது சார்”
 
“நீ லாஸ்ட் ரோ-வில் தானே உட்கார்ந்திருந்த?”
 
“எஸ் சார்”
 
“பசங்க சைடு லாஸ்ட் ரோவில் இருந்து தானே சவுண்ட் வந்துது”
 
“தெரியாது சார்”
 
தாரிகாவை கேள்வி கேட்ட ஆசிரியர் சிறிது கோபத்துடன், “என்ன தெரியாது? அப்படி தானே சொன்னா அந்த ஸ்டுடென்ட்”
 
“எனக்கு தெரியாது சார்”
 
“அது எப்படி தெரியாமல் இருக்கும்?” , 
“உண்மையை சொல்லு யார் சொன்னது?” ,
“உண்மையை சொல்லலை சேர்மன் மீட் பண்ண வேண்டியது இருக்கும்.. எங்க கிட்டயே உண்மையை சொல்லிடு.. யார் சொன்னது?” என்று மூன்று ஆசிரியர்களும் மாறி மாறி கேட்ட கேள்விகளுக்கு மாலினி மௌனத்தையே பதிலாக தந்தாள்.
 
தாரிகாவை கேட்ட ஆசிரியர்,  “சொன்னவன் உன் பாய் பிரெண்ட்டா? அதான் சப்போர்ட் பண்றியா?”
 
“சார்”
 
“என்ன சார்? உன் பாய் பிரெண்ட் இல்லைனா வை ஆர் யூ நாட் டெல்லிங் தி ட்ருத்?”
 
“ஐ டோன்ட் நொ சார்”
 
தாரிகாவை கேட்ட ஆசிரியர் கோபமாக குரலை உயர்த்தி, “பொய் சொல்லாத.. சத்தம் வந்தது லாஸ்ட் பெஞ்ச்சில் இருந்து.. நீயும் லாஸ்ட் பெஞ்ச் தானே………….”
 
“சார்……..”
 
“என்ன சார்?”
 
“நான் செகண்ட் ரோ..  பிரகாஷ்(இன்ஜினியரிங் கிராபிக்ஸ் ஆசிரியர்) சாருக்கு தெரியும்.. என் பிரெண்ட்  டவுட் கேட்டானு லாஸ்ட் ரோவில் உட்கார்ந்து அவளுக்கு மக்ஸ்(Maths) சம் சொல்லி குடுத்துட்டு இருந்தேன்.. தாரிகா சொல்லி தான் லாஸ்ட் ரோவில் இருந்து சத்தம் வந்ததுன்னு தெரியும்.. எனக்கு யார் என்ன சொன்னாங்கனு தெரியாது”
 
மூன்று ஆசிரியர்களும் மாலினியை தீர்கமாக பார்க்கவும் மாலினி, “நிஜமா சார்..  சம் தான் போட்டுட்டு இருந்தேன்.. நீங்க வேணும்னா ரேகாவை கேளுங்க”
 
சிறு மௌனம் நிலவியது. பிறகு ஒரு ஆசிரியர், “யூ மே கோ” என்றதும் மாலினி, “தங் யூ சார்” என்று சொல்லிவிட்டு வெளியே செல்ல எழும்பவும், தாரிகாவை கேட்ட ஆசிரியர், “எதுக்கு தங் யூ? நீ சொன்னதை நம்பி உன்னை விட்டதுக்கா? உன் பாய் பிரெண்ட் தப்பிச்சதுக்கா?”
 
மாலினி அதிர்ச்சியுடன், “சார்” எனறாள்.
 
அந்த ஆசிரியர் புருவம் உயர்த்தி என்னவென்று கேட்கவும், மாலினி தணிந்த குரலில்,
“ஸ்கூலில் staff ரூம் விட்டு வெளியே போகும் போது ‘தங் யூ’ சொல்லி பழக்கம்” எனறாள்.
 
இன்ஜினியரிங் கிராபிக்ஸ் ஆசிரியர், “ஓகே.. யூ மே கோ” என்றதும் மாலினி சிறு தலை அசைப்புடன் வெளியே சென்றாள்.
மாணவர்கள் பக்கம் திரும்பாமல் தன் இடத்தில் அமர்ந்தாள் மாலினி.

ஸ்ரீராமன், “மாலினி” என்று அழைத்தான்.

Staff ரூமில் ‘என்ன நடந்தது’ என்று தெரிந்து கொள்ள விரும்பிய மற்ற மாணவர்கள் ஸ்ரீராமனை கேட்க சொன்னார்கள். அவனும் மாலினியிடம் பேச வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் அவளை அழைத்தான்.

மாலினி எரிச்சலுடன் திரும்பினாள்.

ஸ்ரீராமன், “என்ன கேட்டாங்க?”

மாலினி, “யார் சொன்னது னு கேட்டாங்க”

“நீ என்ன சொன்ன?” 

பதில் சொல்ல வந்த மாலினி ஜன்னல் ஓரம் தாரிகாவை விசாரித்த ஆசிரியர் நிற்பதை பார்த்ததும் பதில் எதுவும் சொல்லாமல் திரும்பி கொண்டாள்.

ஸ்ரீராமன் மீண்டும் மீண்டும் அழைக்கவும் எரிச்சலுடன் திரும்பிய மாலினி, “Staff ரூமில் நடந்ததை உன்னிடம் சொல்ல வேண்டியதில்லை” என்று கூறிவிட்டு திரும்பி கொண்டாள். 

மதிய வகுப்பு தொடங்க ஐந்தே நிமிடங்கள் இருந்ததால் அந்த ஆசிரியர் Staff ரூம் சென்றார்.

மோகனா சிறிது பயந்த குரலில் “என்னாச்சு மாலு?” என்று வினவினாள்.

மாலினி, “ஒன்னுமில்லை மோனி”

“ஏன் உன்னை தனியா கூட்டிட்டு போனாங்க? ஆஷா அழுதுட்டு வந்தாளே.. அடிச்சாங்களா?”

“மேடம் திட்டிணப்ப பசங்களில் யாரோ அவங்களை பதிலுக்கு திட்டிடாங்க…………”

“என்ன சொல்லி திட்டுனாங்க? மேடம் எப்படி திட்டலாம்? தப்பு தானே?”

“தப்பு தான்”

“பசங்க செஞ்சதுக்கு நம்மை ஏன் திட்டுறாங்க?”

“யாரு சொன்னாங்க னு நாம சொல்லலைல அதான்”

“நமக்கு தான் தெரியாதே”

“அது அவங்களுக்கு தெரியாதே”

“ஓ” என்றவள் உடனே சிறிது பதட்டத்துடன், “உன்னை அடிச்சாங்காளா மாலு?” என்று கேட்டாள்.

மாலினி சிறு புன்னகையுடன் ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டி, “அடிக்கலாம் மாட்டாங்க”

“அப்போ ஆஷா ஏன் அழுதுட்டு வந்தா?”

‘அதை அவளிடமே கேளு’ என்று சொல்ல நினைத்தவள் ‘வேண்டாம்.. இவ அப்படியே போய் கேட்பா அந்த ஜெனிஷா இவளை கிண்டல் செய்வா’ என்று மனதினுள் கூறிக்கொண்டு, “திட்டிருப்பாங்களா இருக்கும்”

[ஜெனிஷவிற்கும் மாலினிக்கும் எப்போதுமே ஆகாது. ஜெனிஷா இருக்கும் இடத்தை மாலினி தவிர்ப்பாள் ஆனால் ஜெனிஷாவோ மாலினியிடம் சிறு சிறு வம்பு செய்வாள்.
மாலினிக்கு சில செண்டிமெண்ட்ஸ் உண்டு.. தான் தன் தோழிகளுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த பொருள்களை வேறு யாரும் பயன்படுத்துவது பிடிக்காது, அதே போல் தனுக்கு பரிசாக வந்த பொருட்களை நெருங்கிய தோழிகளுக்கே ‘பத்தரமா வச்சுக்கோ’ என்ற எச்சரிக்கையுடன் தான் குடுப்பாள்.
ஜெனிஷா வேண்டுமென்றே மோகனாவிடம் இருந்து மாலினி வாங்கி கொடுத்த பொருட்களை வாங்கி பயன் படுத்துவாள், பத்திரமாக தான் பயன் படுத்துவாள் ஆனால் அதை வாங்கும் போதும் திருப்பி தரும் போதும் அந்த பொருளை அலட்சியமாக கருதுவது போல் மாலினியை சீண்டுவாள்.]

“ஓ….. உன்னையும் திட்டுனாங்களா?”

மாலினி ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டவும் மோகனா, “ரொம்ப திட்டுனாங்களா?” என்று கேட்டாள். மாலினி ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டினாள்.

பிருந்தா ஏதோ கேட்க வரவும் மாலினி மோகனாவை கண்ஜாடை காட்டி, “அப்பறமா பேசிக்கலாம் பிருந்து..” என்று முணுமுணுத்தாள்.
ஏதோ யோசனையில் இருந்த மோகனா, “மாலு என்னையும் திட்டுவாங்களா?” என்று சிறு பயத்துடன் கேட்டாள்.

மாலினி, “இல்லைடா.. உன்னைலாம் திட்ட மாட்டாங்க.. நீ கவலைப் படாத” என்றதும் தான் மோகனாவின் முகத்தில் பயம் மறைந்து சிரிப்பு எட்டி பார்த்தது.
மோகனாவிற்கு ‘ஏன் என்னை மட்டும் திட்ட மாட்டங்க?’ என்று கேட்க தோன்றவில்லை. அவளை பொறுத்தவரை மாலினி சொன்னால் அது சரியாக தான் இருக்கும்.


இவர்கள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், செல்வராஜ், “நான் சொல்லலை.. சரியான எட்டபி டா” என்று பல்லை கடித்துக் கொண்டு கோபமாக கூறவும், 
ஸ்ரீராமன், “என்ன நடந்துன்னு தெரியாம நீயா ஏன்டா?”

செல்வராஜ், “குரு இவனை சும்மா இருக்க சொல்லு..”

ஸ்ரீராமன், “உனக்கு ஏன் டா இவளோ கோபம் வருது.. நீ தான் அப்படி பேசியதா?”

செல்வராஜ் ஏதோ சொல்லும் முன் ராகேஷ், “யாரு சொன்னா என்னடா! நாலு வருஷம் ஒரே கிளாஸ்ஸில் படிக்க போறோம்.. ஒற்றுமையா இருக்க வேண்டாமா?”

செல்வராஜ், “நீ ஏன் டா இந்த ‘பெண்ஜோந்தி’யிடம் விளக்கம் சொல்லிட்டு இருக்க?”

இப்போது ஸ்ரீராமன் கோபமாக, “என்னடா சொன்ன?” 

செல்வராஜ், “உண்மையை தான் சொன்னேன்”

“டேய் வேண்டாம்”
“என்னடா வேண்டாம்? நீ எதுக்கு டா அந்த எட்டபி மாலினிக்கு சப்போர்ட் பண்ற?”
“அவ என் பிரெண்ட்”

“பிரெண்ட்” என்று நக்கலாக செல்வராஜ் சிரித்தான்.

ஸ்ரீராமன், “டேய்.. என்னை கடுப்பேத்தாத”

பேச்சு வேறு விதமாக செல்லவும்,

சிவகுரு, “விடுங்க டா” என்றும்

ராகேஷ், “விடுங்க டா.. நீங்க எதுக்கு இப்போ சண்டை போட்டுக்குறீங்க?” என்று தடுக்க பார்த்தார்கள். 


ஸ்ரீராமன், “இவன் தான் ஆரம்சான்.. எதுக்கு என்னை பெண்ஜோந்தி னு சொன்னான்.. எனக்கு தெரிஞ்சாகனும்” 

செல்வராஜ், “பசங்கள யாரை கேட்டாலும் சொல்லுவாங்க”

ஸ்ரீராமன் முறைக்கவும் செல்வராஜ், “பசங்களில் உனக்கு பிரெண்ட் கிடையாதா?”

“எல்லோருமே பிரெண்ட்ஸ் தான்”

“அப்போ ஏன் பசங்களுக்கு சப்போர்ட் பண்ணாம அந்த எட்டபிக்கு சப்போர்ட் பண்ற?”

“டேய்.. அவ நல்ல பொண்ணு”

செல்வராஜ், நக்கலாக, “ஆமா அதான் நம்மளை போட்டு குடுத்துட்டா” என்றான்.

ஸ்ரீராமன் ஏதோ சொல்ல வரவும் வேதியியல் ஆசிரியர் வகுப்பறையினுள்ளே நுழைந்தார்.

ஆசிரியர் நுழைந்ததும் ஸ்ரீராமன் அமைதியாக தன் இடத்தில் அமர்ந்தான். 
செல்வராஜ் அவனை முறைத்துக் கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தான்.


மதிய தேநீர் இடைவேளையில் ஸ்ரீராமன் வெளியே சென்ற போது ECE டிப்பார்ட்மென்ட்டை சேர்ந்த ஒரு மாணவன், “உன்னை EG(Engineering Graphics) சார்(தாரிக்காவை விசாரித்த ஆசிரியர்) வொர்க்-ஷாப் வர சொன்னார்” என்றான்.
ஸ்ரீராமன் போனதும் அந்த ஆசிரியர், “நீ தானே சொன்னது” 

“நோ சார்”

“என்ன நோ சார்.. நீ தான் சொன்ன னு எனக்கு தெரியும்.. உண்மைய ஒத்துக்…………….”

“நோ சார்.. நான் சொல்லலை” 

“மாலினி எல்லாத்தையும் சொல்லிட்டா”

‘என்னை ஏன் சம்பந்தமே இல்லாம மாட்டி விட்டுருக்கா? உனக்கு போய் சப்போர்ட் பண்ணேனே’ என்று மனதினுள் மாலினியை திட்டிவிட்டு, “சார் நான் சொல்லலை”

“நீ சொல்லலைனா ஏன் மாலினியை விசாரிச்ச?”

‘இவருக்கு எப்படி தெரியும்’ என்ற சிறு அதிர்ச்சியுடன் பார்க்க, அந்த ஆசிரியர், “என்ன நீ தானே சொன்ன?”

“நோ சார்”

“அப்போ ஏன் மாலினியை விசாரிச்ச?”

“…”

அப்பொழுது உள்ளே வந்த பிரகாஷ் சார், “என்ன ஸ்ரீராம்.. உன்னிடம் இதை நான் எதிர் பார்க்கலை” என்றார்.

“சார் நான் சொல்லலை” 
“தப்பு செஞ்சவங்களுக்கு சப்போர்ட் பண்றதும் தப்பு தான்.. நீ நல்ல பையன் னு நினைத்தேன்..”

‘எவன் சொன்னானோ.. நான் மாட்டிகிட்டு முழிக்குறேன்.. என் பெயர் தான் கெட்டு போகுது.. எவன் சொன்னான் னு தெரிஞ்சாலாது சொல்லி தப்பிச்சுரலாம்..’ என்று மனதினுள் நினைத்தவன் பிரகாஷ் சாரிடம், “உண்மைலேயே எனக்கு யார் சொன்னதுன்னு தெரியாது சார்”
பிரகாஷ் சார் ஏதோ சொல்ல வரவும் தாரிகாவை விசாரித்த ஆசிரியர் கண்-அசைவில் அவரை தடுத்துவிட்டு ஸ்ரீராமனிடம், “நீ ஏன் மாலினியை விசாரிச்ச?”

“பசங்க கேட்க சொன்னங்க சார்”

“யார் கேட்க சொன்னா?”

“…”

“பசங்க என்றால் ஆல் பாய்ஸ்?”

“நோ சார்”

“தென்?”

“சிவகுரு, செல்வராஜ், ராகேஷ்”

“ஓகே யூ மே கோ”

குழப்பத்துடனும் சிறு தயக்கத்துடனும் “சார்” என்று இழுக்கவும், தாரிக்காவை விசாரித்த ஆசிரியர், “நீ செய்யலைன்னு எனக்கு தெரியும்.. கிளம்பு”

“சார்.. மாலினி என்…………..”

“உன்னை கிளம்ப சொன்னேன்” என்று அந்த ஆசிரியர் இறுகிய குரலில் கூறவும் ஸ்ரீராமன் வகுப்பறைக்கு சென்றான். 

வரும் வழியில், ‘மாலினி என்ன சொல்லிருப்பா? அவளுக்கு தெரியும் னு பேசிகிட்டான்களே.. இவர் போட்டு வாங்கிடாரோ.. நாம தான் இவங்களை போட்டு குடுத்துட்டோமோ’ என்று சிறிது வருந்தியவன் அடுத்த நொடியே அலட்சியமாக தோளை குலுக்கி, ‘யார் மாட்டுனா நமக்கென்ன.. நாம தப்பிச்சோம்.. இப்போ பிரகாஷ் சார் என்னை தப்பா நினைக்கலை.. அது போதும்.. 
தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிச்சு தானே ஆகணும்’ என்று மனதினுள் சொல்லிக் கொண்டான்.

வகுப்பறைக்கு சென்ற பின் யாரிடமும் தன்னிடம் நடத்திய விசாரணையை பற்றி சொல்லவில்லை.
மழை தொடரும்….

Advertisement