Advertisement

குறிப்பு :- ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி பெற்றது ACP வெற்றிவேல்.. அதனால் மாலினியின் ஜோடி ACP.. 
இது எனது முடிவில்லை.. வாசகர்களான உங்கள் முடிவு தான்.. வெற்றியை தான் நான் முதலில் ஜோடியாக நினைத்திருந்தாலும் போட்டியில் செல்வா வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் அவனை தான் ஜோடியாக போட்டிருப்பேன் என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.. நான் முன்னாடியே முடிவு செய்ததால் தான் வெற்றியை ஜோடியாக சொல்கிறேன் என்று தயவு செய்து கூறாதீர்கள்.. அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தால் உங்களை ஏன் ஓட்டு போட சொன்னேன்? அதுவும் open voting!! நீங்களே ஓட்டு எண்ணிக்கையை கணக்கு பண்ண முடியும்.. வேண்டுமானால் செக் பண்ணிக்கோங்க தோழமைகளே!!!
இந்த மழையில் வெற்றி தான் ஜோடி என்பது போல் குறிப்பிடவில்லை.. அடுத்த மழை அல்லது அதற்கடுத்த மழையில் அதை பற்றிய குறிப்பு வரலாம்……….
மழை 32:
சிவகுரு, ராஜசேகர், ராகேஷ், செல்வராஜ், ஜெனிஷா, மூன்றாம் ஆண்டு மாணவன் ஒருவனும் இறுதியாண்டு மாணவன் ஒருவனும் முதன்மை ஆசிரியர் (Principal) அறையில் நின்றுக் கொண்டிருக்க டம்மி பீஸ்(அதாங்க பிரின்சிபால்) சிவகுரு மற்றும் ராஜசேகரை கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருந்தார். இவர்களுடன் அந்த போட்டிக்கு இவர்களை அழைத்துச் சென்ற ஆசிரியையும் PT சாரும் இருந்தனர்.
இறுதியாக டம்மி பீஸ், “எவ்வளவு நெச்சழுத்தம் இருந்தா இப்படி செஞ்சிருப்பீங்க! நாளைக்கு அப்பாவை கூட்டிட்டு வாங்க.. நொவ் கெட் அவுட்” என்று கத்தியதும் ராஜசேகர் கிளம்ப சிவகுரு அப்படியே நிற்க, அவர் மீண்டும் முறைப்புடன், “உனக்கு தனியா சொல்லனுமா?” என்று கத்த சிவகுரு ராஜசேகருடன் வெளியே சென்றான்.
வெளியே சென்றதும் ராஜசேகர், “அந்தாளு போக சொல்லியும் ஏன் டா அப்படியே நின்னுட்டு இருந்த?”
கையை காட்டி ‘பொறு’ என்ற சிவகுரு இரு காதில் இருந்தும் பஞ்சை எடுத்து குப்பை தொட்டியில் போட்டான்.
“அடபாவி” என்ற ராஜசேகர் வாயை திறந்தபடி நிற்க,
சிவகுரு, “மச்சி ஒரு டீ அடிப்போமா?” என்று கேட்டு கண் சிமிட்டினான்.
ராஜசேகர் புன்னகையுடன், “டீ குடிக்கிறதை சரக்கு அடிக்கறது போல் சொல்ல உன்னால் தான் டா முடியும்”
“எதிலும் ஒரு கிக் வேண்டாமா!”
“கேன்டீன் டீயை டீயாவே ஏத்துக்க முடியாது இதில் உனக்கு கிக்கு தருதாக்கும்”
“மனமிருந்தால் மார்கபந்து” 
“ஹ்ம்ம்.. இப்படி நாமளே நினைச்சுகிட்டா தான் உண்டு..” என்றவன், “நீ எனக்கும் பஞ்சு கொடுத்து இருக்கலாமே டா” 
“அந்தாளு கேள்வி கேட்டா ஒருத்தராவது பதில் சொல்லணுமே!”
“இருந்தாலும் நீ கொஞ்சம் கன்ஸிடர் பண்ணியிருக்கலாம்.. ஒரு மணி நேரம் நான் ஸ்டாப்பா எப்படி தான் இப்படி திட்டுறாரோ!”
“ஒரு மணி நேரம் இல்லை டா.. ரெண்டு மணி நேரம்.. அடுத்த ஒரு மணி நேரம் உன் ஆளுக்கு தான் திட்டு”
“ரொம்ப தான் டா பண்றான்க.. ஓவரால்(Overall) சாம்பியன்ஷிப் கப்பை வாங்கிட்டு வந்து குடுத்து இருக்காங்க.. மனசாட்சியே இல்லாம வெட்டுக்கிளி போட்டு குடுத்து இருக்கிறான்.. இந்தாளும் தாம் தூம் னு குதிச்சிட்டு இருக்கிறார்”
“ஹ்ம்ம்.. ஜெனிக்கு பதில் வேற பொண்ணு ஆடி இருந்தா வெட்டுக்கிளி விட்டிருக்குமோ என்னவோ”
“அது என்னடா ஜெனி” என்று ராஜசேகர் கோபத்துடன் சிறிது எகிற,
“டேய் நான் உன் ஆளை ஒன்னும் சொல்லலை.. நான் சொல்ல வந்தது.. நம்ம கிளாஸ் பொண்ணா இல்லாம இருந்திருந்தா விட்டிருப்பானோ என்னவோ!”
“ச்ச்.. இம்சைங்க டா.. ஸ்கூலில் கூட இப்பலாம் இப்படி தொட்டதுகெல்லாம் அப்பாவை கூட்டிட்டு வர சொல்றது இல்லை”
“ஹ்ம்ம்.. கிரகம் நாம இங்க வந்து மாட்டிக்கிட்டோம்”
“நாளைக்கு என்ன டா பண்றது?”
“இந்தாளாவது ஒரு மணி நேரம் தான் தோரணம் காட்டினான் அப்பா ஒரு வாரம் வச்சு செய்வார் டா”
“அதான் நீ ஒரு டெக்னிக் கண்டு பிடிச்சு வச்சிருக்கியே!”
“எங்க! திட்டுறது முன்னாடி என் காதை செக் பண்ணிட்டு தான் ஆரம்பிக்கவே செய்வார்”
“அப்போ அவர் கிட்ட மாட்டிகிட்ட” என்று ராஜசேகர் புன்னகையுடன் கூற,
சிவகுரு, “சின்ன வயசுல அவர் என்னென்ன காவாளித்தனம் பண்ணாரோ!!” 
“சரி விடு.. எவ்வ்வளவோ பார்த்துட்டோம்” என்றபடி கல்லூரி உணவகத்திற்கு சென்று தேநீர் அருந்தினர்.
அங்கே முதன்மை ஆசிரியர் அறையில் டம்மி பீஸ் ஜெனிஷா மற்றும் மற்ற மாணவர்களை திட்டிக் கொண்டு இருந்தார். அதிலும் ஜெனிஷாவை தான் அதிகமாக திட்டினார். PT சார் ‘இது தைரியமா திமிரா!’ என்ற ஆராய்ச்சி பார்வையுடன் ஜெனிஷாவை பார்த்துக் கொண்டிருக்க, அங்கே இருந்த ஆசிரியை ஜெனிஷாவை சிறு ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏனெனில் டம்மி பீஸ் திட்டிய திட்டிற்கு வேறு பெண்ணாக இருந்தால் ஒன்று அழுதிற்பர் அல்லது கண்களாவது கலங்கி இருக்கும் ஆனால் ஜெனிஷவோ திடமாக அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள்.
இவ்வளவு திட்டு எதற்கு என்று தானே யோசிக்கிறீங்க! நேற்று நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ராகேஷின் (ஆட்ட)குழுவின் தலைவன்(இறுதி ஆண்டு மாணவன்) ‘குரூப் டான்ஸ்’ போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில் படிக்கட்டில் உருண்டு விழுந்து வலது கால் சுளுக்கிக் கொண்டது. அவனிற்கு உதவி செய்த போது தான் சிவகுருவும் ராஜசேகரும் வெட்டுகிளியிடம் மாட்டியது. 
ஒரு குழுவிற்கு குறைந்தது ஐந்து நபர் இருக்க வேண்டும் என்பது ஆட்டத்தின் விதி.. இவர்களோ சரியாக ஐந்து நபர் தான் இருந்தனர், அதில் ஒருவனுக்கு அடிபட்டு ஆட முடியாமல் போக என்ன செய்வது என்று தவித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இவர்கள் கல்லூரிக்கு முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு வேறு இருந்தது. 
செல்வராஜ் ‘டேய் இது யாரோ செய்த சதியாக தான் இருக்கும்’ என்று வழக்கம் போல் குதித்துக் கொண்டு இருக்க, ராகேஷ் அவனை அடக்கிக் கொண்டு இருக்க மற்றவர்கள் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க அப்பொழுது ஜெனிஷா தான் ஆடுவதாக கூற,
“எதுக்கு! நாங்க கேவலப்படவா! உன் வேலையை மட்டும் பாரு” என்று செல்வராஜ் எகிற,
கீழே விழுந்தவனுக்கு முதலுதவி செய்துக் கொண்டிருந்த ராஜசேகர், “செல்வா வேணாம்” என்று எகிற,
சிவகுருவும் ராகேஷும் இருவரையும் அடக்கினர். 
அப்பொழுது அங்கே வந்த வெட்டுக்கிளி, “என்ன பிரச்சனை?” என்று கேட்டவர், “டேய்! நீங்க எங்கே இங்க?” என்றார் கோபத்துடன்.
சிவகுரு, “என் பிரெண்ட் இந்த காலேஜ்.. அதான் பாஸ் கிடைச்சுது”
“அதுக்காக காலேஜ் கட் அடிச்சிட்டு வருவீங்களா? நாளைக்கு கவனிக்கிறேன் உங்களை” என்றவர் இறுதியாண்டு மாணவனை பார்த்து, “என்ன பிரச்சனை?”
அவன் நடந்ததைக் கூறவும் அவருக்கு வருத்தம் தான். அவர் விழுந்தவனின் காலை ஆராய அவனோ வலியை முகத்தில் காட்டாமல் பல்லை கடித்து சமாளித்து, “சார்.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.. நீங்க கொஞ்சம் பேசி நாம லாஸ்ட் ஆடுற மாதிரி கேட்டு சொல்லுங்க”
“டேய்.. இந்த காலை வச்சிட்டு எப்படி ஆடுவ?”
“ஸ்ப்ரே பண்ணினா வலி குறைஞ்சிடும் சார்”
“ஆடினா அதிகமாகிடும்.. நான் அலோ பண்ண மாட்டேன்.. இப்போ என்ன நாம செகண்ட் வருவோம் அவ்ளோ தானே.. நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம்.. விடுங்க டா”
“சார் போன முறையும் ஜஸ்ட் மிஸ் ஆகிருச்சு.. இதான் எங்களுக்கு கடைசி வருஷம்.. ப்ளீஸ் சார்”
“சுவர் இருந்தால் தான் சித்திரம்”
“சார் நான் சமாளிப்பேன்.. ப்ளீஸ் சார் நீங்க போய் கடைசி ஆடுறதுக்கு மட்டும் பெர்மிஷன் வாங்குங்க” என்று கெஞ்சி அவரை அனுப்பினான்.
அவர் நகர்ந்ததும் அவனது நண்பன், “டேய் நீ தான் சென்டர்.. எப்படி டா! ரிஸ்க் எடுக்காத” என்று கூற,
அவனோ ஜெனிஷாவை பார்த்து, “வெஸ்டர்ன் ஆட தெரியுமா?” என்று வினவ,
செல்வராஜ் ஏதோ சொல்ல வர இவன், “செல்வா அமைதியா இரு.. நமக்கு இப்போ நேரம் இல்லை” என்றவன் பதிலுக்காக ஜெனிஷாவை பார்த்தான்.
ஜெனிஷா, “தெரியும்.. அதிலும் பிரைசஸ் வாங்கியிருக்கிறேன்”
அடுத்து அவன் வேக வேகமாக திட்டமிட்டான். அவன், “ராக்கி நீ என் இடத்தில் சென்டரில் ஆடு” என்றவன் நண்பனை பார்த்து, “நீ ராக்கி இடத்தில் ஆடு.. உன்னோட இடத்தில் ஜெனி ஆடட்டும்.. சீக்கிரம் ஸ்டெப்ஸ் சொல்லிக்கொடுங்க.. அவ திணறினா நீ அவளை கவர் பண்ணிடு.. அப்பறம் டான்ஸ் முடியுற வரை PTக்கு இந்த விஷயம் தெரிய வேணாம்.. நிச்சயம் ஒத்துக்க மாட்டார்” என்றான்.
மாலினி, “சீனியர் எனக்கு ஒரு டவுட்”
“என்ன?”
“நாம எதுக்கும் ஜெனி பெயரை உங்க பெயருக்கு பதில் அட் பண்றது பெட்டர் இல்லையா! நாம் ஜெய்ச்சு.. ஆள் மாறாட்டம் னு நம்மளை டிஸ்குவாளிஃபை பண்றதுக்கு வாய்ப்பு இருக்கா?”
“ஹ்ம்ம்.. நீ சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்” என்று சிறிது யோசித்தவன், “குரு சேகர்.. நீங்க ரெண்டு பேரும் PT வந்த பிறகு அங்கே போய் அவருக்கு தெரியாம பெயரை மாத்துங்க” என்றவன் நண்பனை பார்த்து, “மகி உன்னோட பிரெண்ட் ஏதாவது ஹெல்ப் பண்ணுவானா?”
“ஹ்ம்ம்.. பண்ணுவான் டா.. கேட்கிறேன்”
அவன், “சரி சரி.. சீக்கிரம் போய் ப்ராக்டிஸ் ஆரம்பிங்க” என்று அனைவரையும் விரட்டினான். 
அவனது திட்டபடி வெட்டுக்கிளி அறியாமல் ஜெனிஷா ஒரு பையனை போல் வேடமிட்டு ஆட இவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. 
இந்த ஆள் மாறாட்டம் வெட்டுக்கிளிக்கு தெரியாமலேயே போயிருக்கும்! ஆனால் விதி பரிசை அறிவித்த பெண்ணின் மூலம் விளையாடியது. அவள் இவர்களை பாராட்டுவதற்காக நடந்ததை கூறி ஜெனிஷாவை பெருமையாக பேச கீழே வெட்டுக்கிளி முகத்தில் கோபம் தாண்டவமாடியது.
அந்த கோபத்திலும் வெட்டுக்கிளி டம்மி பீஸிடம் இவர்களை போட்டுக் கொடுக்கவில்லை. போட்டி நடை பெற்ற கல்லூரியின் முதலாம் ஆண்டு HOD டம்மி பீஸின் நண்பர். அவரும் இவர்களை பெருமையாக பாராட்டி தான் கூறினார் ஆனால் கைபேசியில் அவரிடம் சிரித்து பேசிய டம்மி பீஸ் இவர்களிடம் சலங்கை கட்டி ஆடிக் கொண்டிருக்கிறார். 
டம்மி பீஸ் ஆடி தீர்த்து சோர்வடைந்து தண்ணீரை எடுத்து குடித்து பின், “இவ்ளோ பேசுறேன் வாய் திறந்து பதில் சொல்றீங்களா?” என்று மீண்டும் ஆரம்பிக்க,
செல்வராஜ் ராகேஷின் அறிவுரையில் பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக நின்றுக் கொண்டிருக்க, 
இறுதி ஆண்டு மாணவன், “சாரி சார்.. இனி இப்படி பண்ண மாட்டோம்” என்றான்.
டம்மி பீஸ், “இனி ஒருமுறை பண்றதா வேற நினைப்பு இருக்குதா?” என்று மீண்டும் ஆரம்பிக்க,
ராகேஷ், ‘ஏன் பாஸ்?’ என்பது போல் பார்த்து வைத்தான்.
“ஏதோ ஓவரால் கப் வாங்கிட்டு வந்ததால் இந்த ஒரு முறை உங்களை விடுறேன்” என்று கூறி இவர்களை அனுப்பினார்.
அவர்கள் சென்றதும் வெட்டுக்கிளி மற்றும் அந்த ஆசிரியைக்கு அர்ச்சனை தொடங்கியது. அதிலும் இந்த விஷயத்தை மறைத்ததிற்காக வெட்டுக்கிளி அதிகமாக திட்டு வாங்கினார்.   
ராஜசேகரும் சிவகுருவும் தேநீர் அருந்திவிட்டு இடைவேளை தொடங்கியதும் வகுப்பிற்கு சென்றனர்.
சிவகுரு பிருந்தா முன் ஒரு ‘வெஜ் ரோல்’ வைத்தபடி, “குட் மார்னிங் பிந்துஸ்.. உன்னை பார்க்கிறதுக்கு முன்னாடியே அந்த வெட்டுக்கிளி கடன்காரன் என்னை இழுத்துட்டு போய்ட்டான்” என்றான்.
அவனை நிதானமாக பார்த்த பிருந்தா அந்த ‘வெஜ் ரோலை’ சுட்டிக்காட்டி, “என்ன இது?”
“நேத்து என்னை பார்க்காமல் நீ உண்ணாம உறங்காம இளைச்சிட்ட னு உளவியல் ரிப்போர்ட் வந்தது.. அதான்”
அவள் உதட்டை சுளித்து, “நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும்”
“எந்த நினைப்பு பிந்துஸ்?” என்று அவன் புன்னகையுடன் வினவ,
அவள், “உன் நினைப்பு தான்”
“யாருக்கு என் நினைப்பு? உனக்கா?”
அவள் முறைப்பாள் என்று இவன் எதிர்பார்க்க அவளோ உதட்டோர மென்னகையுடன் நிதான குரலில், “இதை தான் சொன்னேன்.. எனக்கு உன் நினைப்பு இருக்கும்கிற உன் நினைப்பு உன் பொழப்பை கெடுக்கும்”
அரை நொடி பேச்சற்று நின்றவன் பின், “பார் டா!” என்றான்.
“எதை?”
“என்னை தான்”
“உன்னை நீயே பார்த்துபியா!”
“என்ன?”
“பாரு நீ தானே சொன்ன! அதான் உன்னை நீயே பார்துப்பியா?”
“திரும்ப பார் டா!”
“எத்தனை முறை பார்த்தாலும் அதே குரங்கு மூஞ்சு தான்”
“என் முகம்.. அதை எத்தனை முறை நானே பார்த்துகிட்டா உனக்கு என்ன?”
“எனக்கென்ன!” என்று தோளை குலுக்கியவள், “இப்போ பிளேட் போடாம இடத்தை காலி பண்ணு”
“ஹ்ம்ம்.. நாட் பேட்.. இந்த குரு கூட சேர்ந்து கொஞ்சமே கொஞ்சம் கலாய்க்க கத்துகிட்ட”
“நாராயணா இந்த கொசு தொல்லை தாங்கலையே!”
சிவகுரு மென்னகையுடன் கண்ணடித்துவிட்டு தன் இடத்திற்கு சென்றான். 
மாலினி மென்னகையுடன், “தெளிஞ்சிட்ட போல!”
பிருந்தா மென்னகையுடன், “முழுசா தெளியலை.. நேத்து அவனை பார்க்காததால் ஏதோ ஒரு பீல்.. எப்படி சொல்ல!!! என்னவோ மிஸ் பண்ண பீல்.. நீயும் நேத்து இல்லை.. உன்னையும் மிஸ் பண்ணேன்.. ஆனா இது வேற மாதிரி.. ச்ச் சொல்ல தெரியலை.. இது தான் லவ்வா னு தெரியலை.. அவன் என்னை லவ் பண்றானானும் தெரியலை ஆனா ஒன்னே ஒன்னு தெளிவா புரியுது.. அது அவனுக்கு என்னை என் பேச்சை பிடிச்சிருக்குது.. எனக்கும் அவனை பிடிச்சிருக்குது.. அது எப்படி னு தான் தெரியலை.. இது தான் வெறுப்பிற்கும் விருப்பிற்கும் இடைவெளி அதிகமில்லை னு சொல்றாங்களோ என்னவோ.. இப்போதைக்கு இது லவ்வா னு ஆராய்ச்சியில் இறங்க போறது இல்லை ஆனா அந்த குரங்கை நீ சொன்னது போல் கூலா டீல் பண்றதா முடிவு பண்ணிட்டேன்..”
“சூப்பர் ஜில்ஸ்” என்று கை குலுக்க, 
பிருந்தா கை குலுக்கியபடி, “ஹ்ம்ம்.. என்னோட இந்த மாற்றம் அவனுக்கு பிடிக்குதா? அப்பவும் என்னுடன் பழகுவதை விரும்புறானா? இது காதல் தானா? அப்படி காதல் தான் என்றால் அவனே முதலில் சொல்லட்டும்.. பார்க்கலாம்” என்றாள்.
மாலினி, “ஒரே நாளில் இந்த தெளிவை நான் எதிர்பார்க்கலை ஜில்ஸ்”
“நானே எதிர்பார்க்கலை”
“விடு விடு.. குறிஞ்சி பூ மாதிரி எப்பயாச்சும் இப்படி நடக்கும்” என்று நந்தினி கூற, பிருந்தா அவளை முறைக்க மாலினி ரசித்து சிரித்தாள்.
ராஜசேகர், “என்ன டா தென்றல் வீசுது போல!”
சிவகுரு, “நீ வேற! என் நிலைமை புயலடிச்சா சமாளிக்கலாம் தென்றல் தான் டேஞ்சர்”
“உன்னையும் மண்டை காய வைக்க ஒரு ஆள்.. ஹா ஹா ஹா”
“ரொம்ப சிரிக்காத டா”
“ஹஹ்ஹா ஹா” என்று இன்னமும் சிரித்த ராஜசேகர், “டேய் பிருந்தா உன்னை தான் பார்க்கிறா” என்றதும் சிவகுரு சட்டென்று திரும்பி பார்த்தான்.
உதட்டோர புன்னகையுடன் இவனை ஓரப்பார்வை பார்த்த பிருந்தா அப்பொழுது வகுப்பின் உள்ளே வந்து கொண்டிருந்த சக மாணவி ஒருத்தியை அழைத்து அந்த ‘வெஜ் ரோலை’ கொடுத்தபடி, “குரு உனக்குன்னு வாங்கிட்டு வந்தான்” என்றாள்.
அந்த மாணவி மகிழ்ச்சியுடன், “நிஜமாவா” என்று கேட்டபடி சிவகுருவை பார்த்தாள்.
சிவகுரு பிருந்தாவை முறைத்தான். பிருந்தாவின் புன்னகை விரிந்தது.
அந்த மாணவி அதை வாங்க போக வேகமாக அங்கே வந்த சிவகுரு பிருந்தாவிடம், “நான் சொன்னதை முழுசா சொல்லி கொடு பிந்துஸ்”
அந்த மாணவி ஆர்வத்துடன், “என்ன சொன்ன குரு?”
இப்பொழுது சிவகுரு உதட்டோர புன்னகையுடன் பிருந்தாவை ஓரப்பார்வை பார்த்தபடி, “XXX(வேறு பிரிவை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் பெயர்) இதை உன்னிடம் கொடுக்க சொன்னான்.. இதை வாங்கினா நீ அவனுக்கு ஓகே சொன்னது போல் னு சொல்ல சொன்னான்” என்று கூற,
அந்த மாணவி எரிச்சலுடன் பிருந்தாவிடம், “இதை நீயே சாப்பிடு” என்று சொல்லிவிட்டு தன் இடத்திற்கு சென்றாள்.
சிவகுரு, ‘எப்படி!’ என்பது போல் பார்த்து புருவம் உயர்த்த, பிருந்தா தோளை குலுக்கினாள்.
சிவகுரு நகர போக பிருந்தா அந்த ‘வெஜ் ரோலை’ நீட்டி, “இதை எடுத்துட்டு போ”
“உனக்கு தானே கொடுத்தேன்”
“அப்போவே வேணாம் னு தான் சொன்னேன்.. இப்போ கண்டிப்பா வேண்டாம்”
“அது என்ன இப்போ கண்டிப்பா வேணாம்?”
“இதை சாப்பிட்டு YYY(அந்த மாணவி) நீ சொன்னதை நம்பி XXXயை நான் விரும்புறதா சொல்றதுக்கா?” என்று குரலை தாழ்த்தி கூற,
அவனும் குரலை தாழ்த்தி, “நீ தான் என்னை தவிர வேற யாரையும் லவ் பண்ணுவ னு சொன்னியே!”
அவள் முறைக்க அவன், “நீ சொன்னதை தானே சொன்னேன்” என்று புன்னகையுடன் கூற,
அவள் பல்லை கடித்துக் கொண்டு, “இப்பவும் அதை தான் சொல்றேன்.. ஆனா இப்போ எனக்கு எந்த நினைப்பும் இல்லை.. ஒழுங்கு மரியாதையா இதை எடுத்துட்டு போ இல்லை டஸ்ட்பின்னில் போட்டிருவேன்” 
ஒரு நொடி அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியவன் பிறகு சிறு தோள் குழுக்களுடன் அதை எடுத்துச் சென்றான்.
அவன் இடத்திற்கு சென்றதும் ஸ்ரீராமன், “தொப்பி தொப்பி” என்றான் இவனை பார்த்து.
சிவகுரு அதை கண்டுக்கொள்ளாமல் தனது இருக்கையில் அமர ஸ்ரீராமன், “வெஜ் ரோல் குடுத்து கரெக்ட் பண்ண பார்த்து இப்படி பல்ப் வாங்கிட்டியே! ச்..ச்..ச்..” 
ஸ்ரீராமனை நக்கலாக பார்த்த சிவகுரு, “பிந்துஸ்” என்று அழைக்க அவள் திரும்பினாள்.
சிவகுரு பேச வாய் திறக்க, பிருந்தாவோ, “இந்த லூசு சொல்லுச்சுன்னு ஏதாவது பேசின நிஜமாவே உன் மண்டையை உடைச்சிருவேன்” என்றாள்.
சிவகுரு அதை ரசித்து சிரிக்க, ஸ்ரீராமன் கோபத்துடன் பிருந்தாவை பார்த்து, “ஏய்! யாரை பார்த்து லூசு னு சொல்ற?” என்றான்.
பிருந்தா, “இவ்ளோ தெளிவா சொல்லியும் புரியாத உன்னை லூசு னு சொல்லாம வேறு எப்படி சொல்றது?” 
“ஏய் வேணாம்?”
“ஏன்! வலிக்குதா! அழுதுருவியா!” என்று கிண்டலாக கேட்டபடி ஜெனிஷா வந்தாள்.
அவள் கூறியதை கேட்டு பிருந்தா புன்னகையுடன் அவளிடம் கை தட்டிக் கொண்டு, “நீயே சொல்லு ஜெனி.. இவனை லூசு னு சொன்னது தப்பா?”
“தப்பு தான்” என்று அவள் சொல்ல ஸ்ரீராமன் அவளை சந்தேகமாக பார்க்க, ஜெனிஷா, “நீ சொன்னதை லூசு ஏதாவது கேட்டா கோச்சுக்க போகுது” என்று கூற,
சிவகுரு, “அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்” என்று கூறி ராஜசேகருடன் கைதட்ட, இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.
மாலினி பிருந்தாவிற்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில், “ஜில்ஸ் வேணாம்.. விட்டிரு” என்றாள்.
பிருந்தா அவளை முறைக்க, மாலினி, “என்ன இருந்தாலும் இப்படி பப்ளிக்கா…………..”
“அவனும் பப்ளிக்கா தானே பேசினான்”
“அதில் உன்னை ஒன்றும் சொல்லலையே”
“அது..”
“அதான் சொல்றேன்.. நீ தான் ஆரம்பிக்கிற.. இப்படி பப்ளிக்கா பேசி பிரச்சனை வேணாம்..” என்று கூற பிருந்தா அமைதியானாள்.
ஸ்ரீராமனோ, “என்ன டா ஜோடி போட்டு லந்து பண்றீங்களா?” என்று கோபத்துடன் கூற,
பிருந்தா மாலினியை பார்க்க, இப்பொழுது மாலினி, “ஸ்ரீராம் தேவை இல்லாம பேசாத”
“இவங்க மட்டும் பேசலாமா?” என்று மாலினியிடம் சற்று அடக்கியே வாசித்தான்.
“பிருந்தா ஏதோ கோபத்தில் அப்படி சொல்லிட்டா.. அதுவும் சும்மா சாதாரணமா தான் சொன்னா.. நீ இப்படி பேசலைனா யாரும் அதை கண்டுகொண்டே இருக்க மாட்டங்க.. ப்ரீயா விடு” என்று சொல்ல.
ஸ்ரீராமன் மாலினி சொன்னதால் சிறிது மௌனம் காக்க, அப்பொழுது அங்கிருந்தவர்களின் முகத்தை பார்த்தபடி உள்ளே வந்த செல்வராஜ் கோபத்துடன் ஸ்ரீராமன் அருகே சென்று, “என்ன டா! எப்போதும் ஏதாவது பிரச்சனை பண்ணிட்டே இருப்பியா?” என்று எகிறினான். 
ஸ்ரீராமன் தான் தங்கள் பெயரை ஆசிரியர்களிடம் சொன்னது என்ற உண்மை தெரிந்ததில் இருந்து ஏதாவது காரணத்தை வைத்து அவனை அடிக்க செல்வராஜ் துடித்துக் கொண்டிருக்க ராகேஷ் சிவகுரு மற்றும் ராஜசேகர் தான் அவனை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுதும் ராகேஷ், “செல்வா” என்றழைத்து அவனை அடக்க, மாலினி மானசீகமாக தலையில் கை வைக்க, ஸ்ரீரமான் ‘இவன் ஏன் எகுறுறான்?’ என்பது போல் பார்த்தான். 
செல்வராஜ் அடங்காமல், “என்ன டா லுக்? நீ தான் எட்டப்பன் வேலை பார்த்தது னு எல்லோருக்கும் இப்போ தெரியும்” என்று கூற, ஸ்ரீராமனுள் பயபந்து உருள, அவன்  அதிர்ச்சியுடன் மாலினியை பார்த்தான்.
“அங்கே என்ன லுக்கு! உன்னை மாதிரி போட்டு கொடுக்கிற புத்தி அவளுக்கு கிடையாது..” என்றவன், “அப்பறம்.. ஏதோ உனக்காக தான் அவ அமைதியா இருக்கிறா னு ரொம்ப துள்றியாமே!” என்றான்.
‘முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு?’ என்று நினைப்பில் தைரியம் வந்ததோ இல்லை மாலினி பற்றி பேசியதும் தைரியம் வந்ததோ! ஸ்ரீராமன், “நான் என்ன பண்ணா உனக்கென்ன டா?” என்றான்.  
செல்வராஜ் சண்டைக்கு தயாராக அப்பொழுது வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கவும் ராகேஷ் செலவ்ராஜை இழுத்துக் கொண்டு இடத்திற்கு சென்றான். செல்வராஜ் ஸ்ரீராமனை முறைத்துக் கொண்டே செல்ல அவனும் இவனை முறைத்துக் கொண்டே இடத்தில் அமர்ந்தான்.  
  
மழை தொடரும்….

Advertisement