Advertisement

மழை 28:
கேன்டீனில் அமர்ந்திருந்த நந்தினி தன் அருகில் அமர்ந்திருந்த பிருந்தாவை பார்த்தபடி தேநீரை அருந்திக் கொண்டிருந்தாள். பிருந்தா அமைதியாக அமர்ந்திருந்தாலும் அவளுள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த நந்தினி சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
பின் பிருந்தா கை மேல் தன் கையை வைத்தபடி மெல்லிய குரலில், “பிருந்தா” என்று அழைத்தாள்.
பிருந்தா ‘என்ன’ என்பது போல் பார்க்கவும் நந்தினி, “என்ன குழப்பம் உனக்கு?”
“உனக்கு தெரியாதா?” என்று சிறு எரிச்சலுடன் கேட்டாள்.
நந்தினி மென்னகையுடன், “தெரியும் தான் இருந்தாலும் நீ உன் குழப்பத்தை சொன்னால் என்னால் முடிந்தால் அதை தீர்ப்பேன்.. நிதானமா யோசி..”
“ச்ச்.. என்னை தெளிவா குழப்பிட்டான் டி”
“ஹ்ம்ம்.. புரியுது.. அவன் ஏன் உன்னை குழப்பனும்?”
“என்னால் எதுவும் யோசிக்க முடியலை”
“சரி இந்த தண்ணியை குடி..”
“..”
“குடி”
பிருந்தா நீரை பருகியதும் நந்தினி, “இப்போ இரண்டு நிமிஷம் கண்ணை மூடி சுமி குட்டி(அவள் பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தை) செய்யும் சேட்டை பற்றி யோசி” என்றாள்.
பிருந்தா கண்களை மூடி அந்த சுட்டி குழந்தையின் சேட்டைகளை யோசிக்கவும் அவள் இதழ்களில் புன்னகை அரும்பியது.
அப்பொழுது அங்கே மாலினி வரவும் நந்தினி தன் உதட்டின் மீது விரலை வைத்து அமைதியாக இருக்கும்படி கூறினாள். மாலினியும் அமைதியாக அமர்ந்தாள்.
கண்களை திறந்த பிருந்தா சிறு புன்னகையுடன் நந்தினியை பார்த்தாள். மாலினியை பார்த்தவள், “நீ எப்போ வந்த?”
மாலினி, “இப்போ தான்” என்று சிறு புன்னகையுடன் கூறினாள்.
நந்தினி பிருந்தாவிடம், “இப்போ சொல்லு உன்னை குழப்புவதால் அவனுக்கு என்ன லாபம்?”
சில நொடிகள் யோசித்த பிருந்தா, “என்னிடமிருந்து தப்பிக்க பார்க்கிறானா?”
“எதில் இருந்து தப்பிக்கணும்?”
“என் திட்டில் இருந்தா? ஆனால் தினமும் தானே அவனை திட்டுறேன்”
“தினம் நடப்பதும் இதுவும் ஒன்றா?”
“இல்லை”
“அப்போ இது ஸ்பெஷல்”
“நீ என்னடி சொல்ல வர?”
“எனக்கும் உறுதியா தெரியலை.. உனக்கு உதவி செய்ய முயற்சிக்கிறேன்”
“சரி சொல்லு.. ஸ்பெஷல் என்றால்?”
“இந்த விஷயத்தில் உன்னிடம் எதிர்மறை பதில் வருவதை அவன் விரும்பலையோ என்னவோ!!!”
“அப்போ அவன் என்னை.. என்னை லவ் பண்றான்னு சொல்றியா?”
“இருக்கலாம்”
“ச்ச்.. போடி.. மீண்டும் தொடக்க புள்ளியில் வந்து நிற்கிற”
“சரி… உன் மனநிலை என்ன?”
“புரியலை”
“நீ அவனை காதலிக்கிறியா?” என்று அமைதியாக கேட்கவும் பிருந்தா மட்டுமின்றி மாலினியும் சிறு ஆச்சரியத்துடன் நந்தினியை பார்த்தாள்.
நந்தினி மெல்லிய புன்னகையுடன் மாலினியிடம், “எதுக்கு இந்த ரியாக்சன்? எனக்கு காதலில் ஈடுபாடு இல்லை தான்.. ஆனால் இது வேறு” என்றவள் பிருந்தாவை பார்த்து, “நீ என் தோழி.. நீ இவ்வளவு டிஸ்டர்ப் ஆகி நான் பார்த்தது இல்லை.. அவன் உன்னை காதலிக்கிறானா இல்லையா னு குழம்பாம முதலில் உன் மனதை பற்றி ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வா.. உன் முடிவில் தெளிவா இருந்தால் அவனை ஈஸியா டீல் பண்ணுவ.. எனக்கு தெரிந்து நம்ம கிளாஸ்ஸில் அவனை அவன் வாயை திறமையா சமாளிக்கிற ஒரே ஆள் நீ தான்.. ஸோ நிச்சயம் அவன் மனதில் இருப்பதை உன்னால் தெரிந்துக்கொள்ள முடியும்.. அதற்கு முன் உன் மனதில் என்ன இருக்கிறதுன்னு தெரிந்துக்கொள்… பொறு.. சட்டென்று பதில் சொல்லாதே.. நல்லா யோசி”
“நீ என்னை குழப்புற! நீ சொல்றதை பார்த்தால்…………………………..”
“நான் எதுவும் சொல்லலை.. யோசின்னு தான் சொல்றேன்” என்றவள் மாலினி பக்கம் திரும்பி, “இன்னைக்கு என்ன இவ்வளவு நேரம்?”
“இன்னும் மூணு நாள் தானே இருக்கிறது.. அதான் அதிக ப்ராக்டிஸ்..” 
“எதுவும் சாப்பிட போறியா இல்லை கிளம்பலாமா?”
“கிளம்பலாம்” என்றபடி மாலினி எழுந்துக்கொள்ள, பிருந்தாவும் அமைதியாக எழுந்தாள்.
வர்கள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இரண்டு மேஜை தள்ளி அமர்ந்திருந்த தாரிக்காவிடம் அவளது தோழி ஒருத்தி, “இன்னும் ஏன்டி கோபத்துடன் இருக்கிற?”
தாரிக்கா முறைக்கவும் இன்னொரு தோழி, “தாரி.. ஸ்கூல் லைப் வேறு காலேஜ் லைப் வேறு.. அதுவும் நாம படித்தது கேர்ள்ஸ் ஸ்கூல்.. பசங்க இப்படி தான் இருப்பங்களோ என்னவோ! டேக் இட் ஈஸி”
தாரிக்கா கோபத்துடன், “உன்னை கிண்டல் பண்ணியிருந்தால் இப்படி தான் சொல்லுவியா?”
“அவன்க உன்னை தான் கிண்டல் பண்றாங்க.. ஏன்?”
“..”
“ஒருத்தன்னு இல்லை.. பசங்க பொண்ணுங்க னு ஒட்டு மொத்த கிளாஸ்ஸும் நம்ம மேல் கோபத்துடன் தான் இருக்கிறாங்க………………………..” 
“கம்ப்ளைன்ட் பண்ண போனவளை தடுத்து சும்மா அட்வைஸ் பண்ணாத”
முதலில் பேசிய தோழி, “தாரு.. டென்ஷன் ஆகாம நாங்க சொல்றதை கொஞ்சம் யோசி.. ஏன் நீ மட்டும் தனித்து இருக்கணும் நினைக்கிற?”
“நான் சரியா இருக்கணும் நினைக்கிறேன்”
“நீ உன் விஷயத்தில் சரியா இரு.. ஏன் மற்றவர்களை மாட்டி விடுற?”
“என்னை சீண்டினால் அப்படி தான் இருப்பேன்”
“முதல் என்குவரி அப்போ உன்னை யாரு சீண்டினாங்க?”
“அது.. எனக்கு தெரிந்ததை சொன்னேன்”
“எல்லோருக்கும் தான் ஏதாவது தெரிந்து இருக்கும்.. யாரும் வாயை திறக்கவில்லையே”
“நான் இப்படி தான்.. உங்களால் தான் இன்னைக்கு அவன்களை பற்றி எதுவும் H.O.D கிட்ட சொல்லலை”
“ச்ச்.. என்ன தாரு.. சும்மா விளையாட்டுக்கு கிண்டல் பண்ணதை ஏன் பெருசு படுத்துற! இப்போ நானோ ரோகினியோ இப்படி பண்ணியிருந்தால்…………………”
“நீங்களும் அவன்களும் ஒன்னா?”
“அவங்க நம்ம வகுப்பு தோழர்கள் தானே”
“நம்ம வகுப்பு சரி.. தோழர்கள் இல்லை”
“சரி.. நமக்கு எதிரி இல்லை தானே”
“..”
“ஊரோடு ஒத்து வாழ்.. னு பழமொழியே இருக்குது” 
“..”
“முதல் என்குவேரியில் நீ வாய்விட்டது.. அப்பறம் அன்னைக்கு நாம மட்டும் உட்கார்ந்து இருந்தது னு எல்லோருக்கும் நம்ம மேல கோபம்.. இது சும்மா விளையாட்டுக்கு பண்ணது.. ப்ரீயா விடு.. இன்னும் நாலு வருஷம் ஒன்னா படிக்கப் போறோம்.. சும்மா எல்லாத்துக்கும் சண்டை போட்டு கம்ப்ளைன்ட் பண்ணி பிரச்சனையை வளர்த்துக்காத”
இப்பொழுதும் தாரிக்கா அமைதியாக இருக்கவும் இன்னொரு தோழி, “சின்ன சின்ன விஷய………. சரி.. சின்ன விஷயம் இல்லை.. சும்மா சும்மா எல்லா விஷயத்திற்கும் கம்ப்ளைன்ட் பண்றதுக்கு இது ஸ்கூல் இல்லை.. கொஞ்ச நாள் நீ அமைதியா இருந்தால் எல்லோரும் சகஜமாகிடுவாங்க”
“..”
“பதில் சொல்லுடி.. இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”
“பதில் சொல்ல பிடிக்கலை னு அர்த்தம்”
“ச்ச்.. என்னடி!”
“என்ன என்னடி?”
“எங்களுக்காவாது கொஞ்ச நாள் அமைதியா……………..”
“நான் ஏன் அப்படி இருக்கணும்?”
“அதான் எங்களுக்காக னு சொல்றோமே”
“..”
“என்னடி”
“ட்ரை பண்றேன்” என்று தாரிக்கா அரை மனதுடன் சொன்னதும் இந்தளவிற்காது இறங்கி வந்தாளே என்று அவள் தோழிகள் இருவரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். பிறகு மூவரும் கிளம்பி வீட்டிற்கு சென்றனர்.
மாலினி வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை அடிக்கவும், “சர்ப்ரைஸ்” என்றபடி கதவை திறந்தது நம்ம செல்ல குட்டி மோகனா.
மாலினி புன்னகையுடன், “ஹே! எப்போ வந்த?”
“நான் அப்போவே வந்துட்டேன்.. நானும் அம்மாவும் சேர்ந்து ஸ்வீட் செஞ்சிருக்கோமே!” என்று குதுகலத்துடன் துள்ளி குதித்தவள், “நான் தான் செஞ்சேன்.. அம்மா சொல்லச் சொல்ல செஞ்சேன்”
“கொஞ்சம் பயமா இருக்குதே!”
“உனக்கு பயமா? என்ன மாலு சொல்ற?”
“நீ செஞ்சதா சொன்னியே அதான்” என்று குறும்புடன் மாலினி கூறவும் மோகனா இடுப்பில் கைவைத்து கண்களை சுருக்கி முறைத்தபடி, “அப்போ நீ ஒன்னும் சாப்பிட வேணாம்.. நான் அப்பா வந்ததும் அப்பாக்கு மட்டும் கொடுத்துக்கிறேன்” என்றவள் சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.
மாலினி சிறு ஆச்சரியத்துடன் தோழியை பார்த்தாள். தனது பதிலை கேட்டு சிணுங்காமல் செல்லமா முறைத்து முறுக்கிக் கொள்ளும் மோகனா முற்றிலும் புதிது.
மாலினி தன் ஆச்சரியத்தை வெளிகாட்டாமல் தோழி அருகே அமர்ந்து அவள் நாடியை பிடித்து கொஞ்சியபடி, “சும்மா சொன்னேன் டா.. என் பேபி செஞ்சதை நான் சாப்பிடாம இருப்பேனா!” என்றதும்,
அடுத்த நொடியே குதுகலத்துடன், “ஹே மாலு நானும் சும்மா தான் சொன்னேன்” என்றாள்.
“ஹ்ம்ம்.. என்ன ஸ்வீட் பண்ணீங்க?”
“அதை சாப்டுட்டு நீயே சொல்லு”
“ஏன் அதுக்கு இனி தான் பெயர் வைக்கணுமா?”
“போ மாலு.. இன்னைக்கு நீ ரொம்ப கிண்டல் பண்ற! நிஜமாவே உனக்கு ஸ்வீட் கிடையாது” என்றவள் , “அம்மா இவளை பாருங்க” என்று புஷ்பாவிடம் புகார் கொடுத்தபடி சமையலறையினுள் நுழைந்தாள்.
மாலினி ‘பார் டா!’ என்று வாய்விட்டு சொன்னபடி புன்னகையுடன் தன் அறைக்கு சென்று முகம் கழுவி உடை மாற்றிவிட்டு வந்தாள்.
அவள் வந்ததும் அவளிடம் மோகனா முறுக்கும் தான் செய்த இனிப்பையும் ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தாள்.
மாலினி, “யாரோ எனக்கு கிடையாதுனு சொன்னாங்க”
“ஐயோ பாவம் னு கொடுத்தேன்”
“ஹ்ம்ம்.. நேரம் தான்” என்றபடி இனிப்பை சுவைத்தவள் வாய் திறக்கும் முன் மோகனா எதிர்பார்ப்புடன், “எப்படி இருக்குது மாலு?” என்று பரபரத்தாள்.
மாலினி புன்னகையுடன், “சூப்பர் டா! பிரட் அல்வா தானே!”
“ஹே! கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்ட!” என்று குதித்தவள் புஷ்பாவை பார்த்து, “அம்மா நிஜமாவே சூப்பரா இருக்குது”
புஷ்பா, “நானும் அதைத் தானே சொன்னேன்.. உன் பிரெண்ட் சொன்னா தான் நம்புவியா?” என்று செல்லமாக கோபித்துக் கொள்வது போல் நடிக்க,
“அது மாலு பொய் சொல்ல மாட்டா”
“அப்போ நான் சொல்லுவேனா?”
“அது..” என்று சொல்வதறியாது சில நொடிகள் திணறினாள் பிறகு, “நீங்க எனக்காக சும்மா சொல்லலாமே.. அதான்”
புஷ்பா புன்னகையுடன், “சும்மா தான் டா சொன்னேன்” என்று கூற மோகனா புன்னகைத்தாள்.
அதே நேரத்தில் மாலினி நெஞ்சில் கை வைத்து, “ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சியை என் நெஞ்சு தாங்காதுடி” என்றாள்.
மோகனா அவசரமாக மாலினி அருகே சென்று, “என்னடி ஆச்சு.. என்ன பண்ணுது?” என்று கண்கள் கலங்க பதறினாள்.
மாலினி தோழியின் கன்னத்தை பற்றி, “ஹே சும்மா சொன்னேன் டா”
“இல்ல.. வா நாம டாக்டர் கிட்ட போகலாம்” என்று மோகனா  கூற,
புஷ்பா, “மோனி அவ உன்னை கிண்டல் பண்றா.. அவளுக்கு ஒன்றுமில்லை”
“கிண்டலா? என்ன மாலு” என்று மோகனா புரியாமல் விழிக்கவும் மாலினி, “ஒண்ணுமில்லை டா.. நீ முன்ன மாதிரி எடுத்ததுக்கெல்லாம் சிணுங்காம சூப்பரா பதில் சொன்னியா! அதை தான் சொன்னேன்”
மோகனா புன்னகையுடன், “ஷங்கர் தான் சொன்னான்.. சும்மா சும்மா சிணுங்க கூடாது.. பயப்படக் கூடாது.. நீயும் கிண்டலாவோ கோபமாவோ பதில் சொல்லணும் னு சொன்னான்”
மாலினி கட்டை விரலை காட்டி, “ஹ்ம்ம்.. சூப்பர்” என்றாள். மோகனா மகிழ்ச்சியுடன் புன்னகைத்தாள்.
மாலினி, “சரி.. என்ன திடீர்ன்னு இங்கே வந்திருக்க?”
“நீ ப்ராக்டிஸ்னு டெய்லி சாயுங்காலம் லேட்டா தானே வர.. என்னையும் கிளம்ப சொல்லிடுற! அதான் வந்தேன்.. காலையிலேயே அம்மா கிட்ட சொல்லிட்டேன்.. அப்பா ஆபீஸ்ஸில் இருந்து வரும் போது என்னை கூட்டிட்டு போவாங்க”
“ஹ்ம்ம்.. செம்ம பிளானிங் தான்”
“இன்னைக்கு ஏன் ரொம்ப லேட்?”
“இன்னும் மூணு நாள் தானே இருக்குது.. அதான்.. இன்னும் மூணு நாளுக்கு இவ்வளவு நேரம் ஆகும்” 
அதன் பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்க மோகன் வந்ததும் மோகனா கிளம்பிச் சென்றாள்.
புஷ்பா, “மோனி மாற்றம் நல்லது தான் இருந்தாலும் பார்த்துக்கோ”
“என்ன மா?”
“அவளது பேச்சு ஷங்கர் பற்றி தான் அதிகமா இருக்கிறது”
“அம்மா.. ஷங்கர் நல்ல பையன் மா”
“இருக்கலாம்.. ஆனால் பின்னாடி காதல் என்று வந்தால்…………….”
“காதல் தப்பிலையே மா”
“தப்பென்று நானும் சொல்லலை.. அமுதாவிற்கு பிடிக்காது…”
“அமுதாமாவை நான் சமாளிக்கிறேன்”
“ஹே! என்னடி சொல்ற! சமாளிக்கிறேன்னா என்ன அர்த்தம்?” என்றதும் தான் மாலினிக்கு தான் வார்த்தையை விட்டது புரிந்தது. அவள் தந்தையை பார்க்க,
புஷ்பா கோபத்துடன் கணவரை நோக்கி, “அப்போ உங்களுக்கும் தெரியும்! ஏன் இப்படி பண்றீங்க?”
மாலினி, “ஷங்கர் நல்லவன் மா.. அவன்…………………….”
“மாலினி..” என்று புஷ்பாவின் குரல் கண்டிப்புடன் ஒலித்தது.
மாலினி தவிப்புடன் தந்தையை பார்க்க, அவர் மனைவியை பார்த்து, “நம்ம காதலிற்கு உன் அம்மா முதலில் சரி சொன்னாங்களா?”
புஷ்பா முறைப்புடன், “பொண்ணு முன்னாடி பேசுற பேச்சா?”
“நீ தானே ஆரம்பித்து வைத்த! பதில் சொல்லு”
“இப்போ என்ன சொல்ல வரீங்க! என் அம்மா மாதிரி அமுதாவும் சம்மதிச்சிருவா னா! ஆனா மோனி என்னை போல் இல்லையே!”
மாலினி, “அதான் நான் இருக்கிறேனே மா! நான் அவளுக்காக பேசுவேன்”
புஷ்பா முறைப்புடன், “நீ பேசுறதை அமுதா கேட்கணுமே!”
“கேட்பாங்க”
“இந்த விஷயத்தில் அவள் கோபம் முதலில் உன் மேல் தான் இருக்கும்.. ஏன் என்றால் நீ சொன்னதால் தான் மோனி ஷங்கருடன் பழக ஆரம்பித்து இருக்கிறாள்”
“இல்லை மா…………………”
“எனக்கு இது பிடிக்கலை.. உன் பெயர் தேவை இல்லாமல் அடிப்படுவது சுத்தமா பிடிக்கலை”
அருணாச்சலம், “விடு மா.. பின்னாடி பார்த்துக்கலாம்”
புஷ்பா முறைக்கவும், மாலினி, “ஏன் மா மோனிக்காக நீ பேச மாட்டியா?” என்றதும் அவரது முறைப்பு அதிகமானது.
அருணாச்சலம் ஏதோ கூற வர, அதை தடுத்த புஷ்பா மாலினியை பார்த்து, “ஷங்கர் மட்டும் விரும்புறானா இல்லை மோனியுமா? மோனிக்கு முதலில் இது புரியுதா?”
“ஷங்கர் தான் விரும்புறான்.. மோனிக்கு அவனை ரொம்ப பிடிக்கும்.. என்னை பொறுத்தவரை அது பிடித்தம் என்பதற்கும் மேலே என்று தான் சொல்லணும்.. ஆனால் அதை அவள் உணரவில்லை.. அவளுக்கு இது இப்போ புரியவும் செய்யாது.. அதனால் தான் அவனும் அமைதியா இருக்கிறான்.. காத்திருப்பதாக சொல்லியிருக்கான்..”
“எத்தனை நாளா இது நடக்குது?”
“மோனிக்கு பீவர் வந்துதே! அப்போ தான் எனக்கு அவன் விருப்பம் பற்றி தெரியும்.. அவன் அவங்க வீட்டில் கூட சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டதா சொன்னான் மா”
புஷ்பா ஒரு பெருமூச்சுடன், “பார்க்கலாம்.. ஆனா மோனியை பத்திரமா பார்த்துக்கோ.. இளமைக்கே உண்டான துடுக்குதனத்துடன் அவனுக்கு ஹெல்ப் பண்றதா நினைத்து ஏதாவது செய்து ஏதாவது தப்பு நடக்க நீ காரணமாகிறாத”
“அம்மா அவன் அப்படிப்பட்ட பையன் இல்லை”
“மாலினி புரிஞ்சுக்கோ! நான் தப்பு நடக்கும் னு சொல்லலை.. ஜாக்கிரதையா இரு னு தான் சொல்றேன்.. அவன் நல்லவனாகவே இருந்தாலும் சூழ்நிலையும் வயதின் வேகமும் அவனை தடம் பிரளச் செய்யலாம்.. அதுவும் மோனி ஒரு குழந்தை மாதிரி.. பார்த்துக்கோ”
“புரியுது மா.. பார்த்துக்கிறேன்” என்றாள்.   
அதன் பிறகு அவள் தன் அறைக்கு சென்றுவிட, சிறு கலக்கத்துடன் அமர்ந்திருந்த மனைவியின் தோளை ஆதரவாக பற்றிய அருணாச்சலம், “கவலை படாத மா.. எல்லாம் நல்ல படியா நடக்கும்”
“ஹ்ம்ம்.. நானும் நம்புறேன்.. பார்க்கலாம்” என்றார்.
அருணாச்சலம் பேச்சை மாற்றி மனைவியை சகஜ நிலைக்கு மாற்றினார்.
அறைக்கு சென்ற மாலினி நந்தினியை அழைத்தாள்.
நந்தினி அழைப்பை எடுத்து, “என்ன மேடம் ரொம்ப பிஸியா! வீட்டிற்கு போனதும் கூப்பிடுவ னு நினைத்தேன்”
“மோனி வந்திருந்தா டா”
“ஓ! மேடம் என்ன சொல்றாங்க?”
“கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறது..” என்று கூறி நடந்தவற்றை கூறினாள்.
நந்தினி, “பரவா இல்லையே!”
“ஹ்ம்ம்.. ஷங்கர் தீயா வேலை செய்றான் போல… சரி நீ ஜில்ஸ் விஷயத்திற்கு வா.. என்ன நடந்தது? சிவா கிட்ட பேசினாளா?”
“ஹ்ம்ம்..” என்று ஆரம்பித்து நடந்ததை சொன்னாள்.
மாலினி மெல்லிய புன்னகையுடன், “செம்மையா குழப்பிட்டான் போல!”
“ஹ்ம்ம்.. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறான்”
“ஹ்ம்ம்”
“உண்மையை சொல்லு.. அவன் பிருந்தாவை லவ் பண்றான் தானே?”
“ஆமா”
“உனக்கு எப்போ எப்படி தெரியும்?
“சந்தேகம் இருந்தது.. அவனிடம் கேட்டு தெரிந்துக்கிட்டேன்”
“அதை ஏன் பிருந்தா கிட்ட சொல்லலை?”
“நீ ஏன் சொல்லலை?”
“எனக்கு இந்த பேச்சே பிடிக்காது.. அதனால் நான் தலையிடலை………………”
“ஆனா இன்னைக்கு நீ பேசினது!”
“இப்பவும் எனக்கு இதில் உடன்பாடு இல்லை தான்.. இது அவள் வாழ்க்கை அதனால் தான் பேசினேன்.. நான் இந்த விஷயத்தில் அவளை ஆதரிக்கவும் மாட்டேன் எதிர்க்கவும் மாட்டேன்.. ஆனால் அவ தெளிவா இருக்கணும் நினைத்தேன்.. அவ்ளோ தான்”
“ஹ்ம்ம்.. புரியுது.. நீ ஒரு ஒரிஜினல் பீஸ் டி”
“நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலை”
“ஒன்னு அவளா புரிஞ்சுக்கணும் இல்லை அவன் சொல்லணும்.. அதான் நான் சொல்லலை.. ஜில்ஸ் கிட்ட திரும்ப பேசினியா?”
“இல்லை.. இன்னைக்கு அவ யோசிக்கட்டும்”
“யோசிப்பா?”
“யோசிப்பாள் ஆனால்.. பார்க்கலாம்”
“என்னடி ஆனால்?”
“அவளை பற்றி எனக்கு தெரியும்.. இன்னைக்கே அவளுக்கு தெளிவு வராது.. அவளும் அவனை விரும்புறா னு தான் நினைக்கிறேன்.. அதை கண்டுபிடிச்சாலும் அதை உடனே அவளால் ஒத்துக்கொள்ள முடியாது.. பார்க்கலாம்”
“நீ பயங்கிறமான ஆள் டி.. சைலெண்ட்டா இருந்தே எல்லாத்தையும் சரியா கண்டு பிடிச்சிருற!”
“அப்படி இல்லை.. சின்ன வயசில் இருந்து அவளை பார்க்கிறேன்.. அதனால் அவளை சரியா கணிக்க முடியுது.. அவ்ளோ தான்”
“ஹ்ம்ம்.. இருந்தாலும் நீ சைலென்ட் கில்லர் தான்”
“அடிபாவி.. ஏன்டி இந்த கொலைவெறி”
வாய்விட்டு சிரித்த மாலினி, “இந்த விஷயம்னு இல்லை.. சில பல விஷயங்களில் ஒன்றும் தெரியாதது போல் இருந்தாலும் நீ செம்ம விவரம் தான்”
“உங்களுக்கெல்லாம் வேற பேச்சே வராதா?”
“பார்த்தியா! நான் என்ன விஷயம் னு சொல்லவே இல்லை ஆனா நீ சரியா பாய்ன்ட்டை பிடிச்சிட்ட!”
“அது.. அது.. உன்னை பற்றி எனக்கு தெரியாதா?”
மாலினி மீண்டும் வாய்விட்டு சிரிக்கவும், நந்தினி, “போடி.. நான் போனை வைக்கிறேன்” என்றபடி அழைப்பை துண்டித்தாள்.  
மழை தொடரும்….
குறிப்பு: அடுத்த மழை செவ்வாய்(Dec3) அன்று.. இரண்டு நாட்கள் (28Nov, 29Nov) நான் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன் தோழமைகளே!

Advertisement