Advertisement

மழை 36:
CSE வகுப்பறை:
அன்று காலையில் வகுப்பிற்கு வந்து அமர்ந்த சக்திவேல் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த அனீஸ் முதுகில் ஒரு அடி போட்டு, “அப்படி என்ன டா யோசனை? நான் வந்ததை கூட கவனிக்காம!”
“இன்னைக்கு ரிசல்ட் வருதாம் டா”
“அதுகென்ன?”
“என்ன டா இப்படி அசால்ட்டா சொல்ற?”
“வேற என்ன செய்ய?”
“இது என்ன நம்ம காலேஜ் வீட்டுக்கு போஸ்ட்டில் அனுப்புற இன்டர்னல் மார்க்ஸ் னு நினைச்சியா?பஸ்ட் செம் ரிசல்ட்.. ஆன்லைனில் வரும்”
“எனக்கும் தெரியும் டா.. அதுக்காக இப்படி உட்கார்ந்து இருந்தா சரியாகிடுமா?”
[இந்த கல்லூரி மாணவர்களை கொடுமை செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று.. ஒவ்வொருமுறையும் இன்டெர்னல் டெஸ்ட் வைத்து அதன் மதிப்பெண்களை வைத்து ரன்க் போட்டு நோட்டிஸ் போர்டில் ஓட்டுவதோடு அதை இன்லாந்து லெட்டரில் வீட்டிற்கு அனுப்பிவிடுவர். முதல் முறை தான் மாணவர்கள் அப்பாக்களிடம் சிக்கி சின்னாபின்னமானது.. அதன் பிறகு தபால்காரரை கரெக்ட் செய்து கடிதத்தை அவர்களே வாங்கி தந்தையின் கையெழுத்தை அவர்களே போட்டு இங்கே கொடுத்துவிடுவார்கள். வீட்டில் இருந்து வரும் மாணவர்களுக்கு கடிதம் வந்த அடுத்த நாள் தான் வெளியூர் மாணவர்கள் வீட்டிற்கு செல்லும்.. அதனால் இவர்கள் அவர்களை எச்சரிக்கை செய்துவிட அவர்கள் ஏதாவது காரணத்தை கூறி வீட்டிற்கு சென்று கடிதத்தை அவர்களே வாங்கி தப்பித்துவிடுவர்]
அனீஸ் சிறு ஆச்சரியத்துடன் பார்க்கவும் சக்திவேல், “என்ன டா?”
“இன்டெர்னல் மார்க்குகே உன் அப்பா ஒரு மணி நேரம் போனில் பிச்சு உதறினார்……..”
“அதை ஏன் டா இப்போ நியாபகப் படுத்துற! செல்லை ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சேன்.. ஹாஸ்டல் லேன்ட்லைனுக்கு போனை போட்டு வச்சு செஞ்சார்.. ஸ்டடி டைம் வந்திருச்சு, வார்டன் கூப்பிடுறார் அது இது னு சொல்லி போனை வைக்கிறதுக்குள்ள டங்குவாரு அந்து போச்சு”
“இப்போ இப்படி கூலா இருக்கிற?”
சக்திவேல் அவனை பார்த்த பார்வையில் அனீஸ் குழப்பிய  குரலில், “நீ எல்லாத்துலையும் பாஸ் ஆகிடுவியா டா?”
“எப்படியும் திட்டு வாங்க போறது உறுதி.. அது வாங்கும் போது பார்த்துக்கலாம்.. அதுவரை ப்ரீயா இருப்பியா அத விட்டுட்டு இப்ப இருந்தே…………….”
“ச்ச்”
“என்ன டா?”
“நீ எல்லாத்துலையும் பாஸ் ஆகிடுவியா னு கேட்டேனே!”
   
“ஒரு பச்சப் புள்ளைய கேட்டா கூட இதுக்கு பதில் சொல்லும்”
“என்னன்னு?”
“இன்னைக்கு உனக்கு என்னாச்சு டா?”
“கடுப்பை கிளப்பாம பதிலை சொல்லு டா”
“அட போடா.. நானே ஏதாவது ஒன்னுலையாவது பாஸ் ஆவேனா னு யோசிச்சிட்டு இருக்கிறேன்…………..” என்று அவன் முடிக்கும் முன் அனீஸ் விரிந்த புன்னகையுடன் அவனை கட்டிக் கொண்டு, “நண்பேன் டா” என்றான்.
சக்திவேல், “என்னா ஒரு சந்தோசம் டா! இவ்ளோ நேரம் பியூஸ் போன பல்பா இருந்த உன் முகத்தில் இப்போ தௌசண்ட் வாட்ஸ் பல்ப் எரியுது”
“ஹீ ஹீ ஹீ.. இப்போ தான் மச்சி மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குது”
“இருக்கும்டி இருக்கும்”
ராஜசேகர் சிவகுருவிடன், “மச்சான் நிஜமாவே இன்னைக்கு ரிசல்ட்டா?”
சிவகுரு, “உடனேலாம் வராது டா”
“அப்பிடிங்கிற?”
“இன்னைக்கு தானே ஆரம்பித்து இருக்காங்க.. புலி வருது கதையா ரெண்டு நாள் இதையே மெயிண்டேன் பண்ணிட்டு நடு ராத்திரி ரிசல்ட்டை ரிலீஸ் பண்ணுவான்க”
“உனக்கு எப்படி டா தெரியும்?”
“பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக் கூடாது”
“இப்போ நீ பழமொழியா சொன்ன?”
“மொக்க போடாம நேத்து நீ ஊர் சுத்தின கதையை சொல்லு”
“அதை ஏன் டா கேட்கிற! நிம்மதியா லவ் பண்ண விடுறாங்களா?”
சிவகுரு மென்னகையுடன், “யாருகிட்ட மாட்டின?”
“யாரு இல்லை மச்சான் யாருகிட்டலாம் னு கேளு”
சிவகுரு புன்னகையுடன், “சொல்லு உன் கதையை கேட்போம்”
“ஓவரா சிரிக்காத டா.. உனக்கும் இப்படி ஒரு நிலைமை வரும்”
“நீ இன்னும் வளரனும் தம்பி.. அதெல்லாம் நாங்க திறமையா ஸ்கெட்ச் போட்டு மாட்டாம லவ் பண்ணுவோம்”
“முதல்ல லவ்வ சொல்றதுக்கு ஸ்கெட்ச் போடு டா அப்பறம் ஆணியை புடுங்கலாம்”
“என் கதையை விடு.. நீ உன் கதைக்கு வா”
“உடனே பேச்சை மாத்திடுவியே!”
“அப்படி இல்லை மச்சான்.. லவ்வ சொல்லாம லவ்வை அனுபவிக்கிறதில் தனி சுகம் இருக்குது டா.. ஒரே வாரத்தில் லவ்வை சொல்லி ஓகே பண்ண உனக்கெல்லாம் அது புரியாது”
அவனை ஒருமாதிரி பார்த்த ராஜசேகர், “பருப்பு வேகலை மச்சி” என்றான். 
அதாவது ‘நீ நல்லா சமாளிக்க முயற்சி பண்ற ஆனா நீ சொல்ற காரணம் செல்லாது’ என்பதை தான் ‘நீ வாயால் சுடும் வடையில் பருப்பு வேகலை’ என்றான்.
சிவகுரு அலட்டிக்கொள்ளாமல், “ரைட் விடு” என்றவன், “நேத்து மாட்டுனியா தப்பிச்சியா?”
“மாட்டியிருந்தா இன்னைக்கு காலேஜ் வந்திருப்பேன்!”
“அப்போ காலேஜ் ஆட்கள் யாரு கண்ணிலும் படலை” 
“அப்படியெல்லாம் தப்பு கணக்கு போடாத மச்சான்”
“ஸ்ப்பா.. ஒரு நாள் கூத்தை சொல்ல இவ்ளோ பில்டப்பா டா”
“சரி சரி.. சொல்றேன்.. பினிக்ஸ் மால் தான் போனோம்.. நாங்க போன படத்துக்கு என்னோட அத்தை பையன் வந்திருந்தான்.. நல்ல வேலை அவன் எங்களை பார்க்கலை.. சரி அவனிடமிருந்து தப்பிச்சு கீழ போனா சைக்கோ குடும்பத்தோட வந்திருந்தான்.. ஒருவழியா சைக்கோ கண்ணுல படாம தப்பிச்சு பத்தடி நகர்ந்து இருப்போம் நிஷா அண்ணன் நிற்கிறான்.. அவன் நிஷாவை பார்த்துட்டான்.. ஆனா என்னை பார்க்கலை.. அவன் கிட்ட இருந்து தப்பிக்கிறதுகுள்ள தான் போதும் போதும் னு ஆகிருச்சு.. லைப்-ஸ்டைல் கடைக்குள்ள நுழைந்து கடை உள்ளிருந்தே செகண்ட் ப்ளோர் போய் ஒருவழியா தப்பிச்சோம்..”
“அதான் காலேஜ் முடியிர நேரம் இங்கே வந்தீங்களா?”
“ஹ்ம்ம்.. செம டைமிங்யில் தான் வந்தோம்.. நாங்க வந்த அடுத்த நொடி அவ அண்ணன் வந்து நிற்கிறான்.. வீட்டுக்கு போய் அவன் பார்த்தது நாங்க இல்லை னு சாதிச்சுட்டா”
“நம்புனானா?”
“சந்தேகம் இருக்கும் தான்.. பார்த்துக்கலாம்”
“ஸோ உன் லவ் இப்பவே ரன்னிங் சேஸிங் னு செம த்ரில்லிங்கா போகுது னு சொல்லு”
ராஜசேகர் முறைக்க சிவகுரு, “சைக்கோ கண்ணுல எப்படி சிக்காம தப்பிச்சீங்க?”
“நாங்க கலர் டிரஸ்ஸில் தானே இருந்தோம்.. இங்கே வரும் போது திரும்ப யூனிபார்ம் மாத்திட்டு வந்தோம்”
“அனுபவம்!!!”
“ஸ்ப்பா இவன்களோட மி(மு)டிலை டா”
“இந்த கெடுபிடிக்கு நடுவில் ரொமான்ஸ் பண்ணாமயா இருந்திருப்ப?” என்று கேட்டு கண்சிமிட்ட, ராஜசேகர் அழகாக புன்னகைத்தான். 
அப்பொழுது பிருந்தா வகுப்பினுள் நுழையவும், சிவகுரு, “மச்சி எனக்கு காள் பண்ணுடா” என்றான்.
ராஜசேகர் மென்னகையுடன், “நடத்துடா” என்றபடி சிவகுருவின் கைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.
“ஏசல்கள் ஏனடா?
பூசல்கள் ஏனடா?
யுத்தங்கள் ஏனடா?
ரத்தங்கள் ஏனடா?
மொத்தமும் வீனடா..
தித்திக்கும் தேனடி காதல்..
ஜில்லுனு ஒரு காதல்.. ஹோ..
ஜில்லுனு ஒரு காதல்..” என்ற பாடல் ஒலித்தது.
பிருந்தா திரும்பிக் கூட பார்க்கவில்லை என்றதும், சிவகுரு, “என்ன மச்சான் ரியாக்சனே இல்ல! சவுண்ட்ட கூட்டனுமோ!”
“சவுண்ட்ட கூட்டினா ஸ்பை ஸ்குவார்ட் மூலம் நம்ம பெண்டு கலண்டிரும்..”
“இப்படி அமைதியா இருக்க மாட்டாளே!!!” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“பல கிறுக்கு இருக்கு உனக்கு
இப்போ என்னதா மன கணக்கு!
பல கிறுக்கு இருக்கு உனக்கு
இப்போ என்னதா மன கணக்கு!
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு” என்ற பாடல் ஒலிக்க ராஜசேகர் வாய்விட்டு சிரித்தான்.
ஒரே ஒரு நொடி சிவகுருவின் முகம் வெளக்கெண்ணை குடித்தது போல் ஆனது ஆனால் அடுத்த நொடியே கைபேசியை நோண்ட, அடுத்த நொடி,
“ஏ..ஏய்ய்… கிறுக்கா! கிறுக்கா! கிறுக்கா! காதல் கிறுக்கா!
காதல் கிறுக்கா? இல்ல நீ தான் கிறுக்கா?” என்ற இரண்டு வரிகளை மட்டும் ஒலிக்க விட்டான்.
சிறு கோபத்துடன் திரும்பிய பிருந்தா இவனை பார்த்து முறைக்கவும் இவன் விரிந்த புன்னகையுடன் அவளை பார்த்து கண்ணடித்தான். அவள் உதட்டை சுளித்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.
மாலினி சிரிக்கவும் பிருந்தா, “என்னடி சிரிப்பு?” என்று சிடுசிடுத்தாள்.
மாலினி, “நன்டி(NANDY) ஒரு ஜோக் சொன்னா அதான் சிரிச்சேன்”
“ஜோக்! அதுவும் இவ!”
“ஆமா” என்று மாலினி கூற, 
“ஏன் நான் ஜோக் சொல்ல மாட்டேனா?” என்று நந்தினி வினவ,
பிருந்தா, “ஒரு பேப்பரில் ஜோக் னு எழுதி வாசிக்க சொன்னா ஜோக் னு சொல்லுவ” என்றதும் நந்தினி முறைக்க,
மாலினி மென்னகையுடன், “ச ச.. என்ன ஜில்ஸ் இப்படி சொல்லிட்ட! மொபைலில் எழுதி வாசிக்க சொன்னா கூட வாசிப்பா”
நந்தினி இப்பொழுது மாலினியை முறைக்க, மாலினியும் பிருந்தாவும் கைதட்டிக் கொண்டனர்.
நந்தினி மாலினியை பார்த்து, “நீ யார் கச்சி டி?”
“ச ச நமக்கு இந்த ஆரசியல்லாம் வேணாம் பா” 
நந்தினி, “நெனெப்பு தான்” 
பிருந்தா, “யார் நெனெப்பு?”
மாலினி, “சிவா நினைப்பு.. உனக்கு” 
பிருந்தா, “அதான் தெரியுமே! சரி அதை விடு.. நேத்து என்ன நடந்தது னு மேடமை கேளு”
மாலினி நந்தினியை பார்க்க, அவளோ, “ஒன்னும் நடக்கலை” என்று கூறியபடி ஒரு புத்தகத்தை பிரித்தாள்.
அந்த புத்தகத்தை பிடுங்கிய பிருந்தா, “மேடமிற்கு ஒரு வரன் வந்திருக்கிறது”
மாலினி சிறு அதிர்ச்சியுடன், “என்னடி சொல்ற?”
நந்தினி, “ஹே அது சும்மா ஒரு பேச்சு தான்.. நேத்து வீட்டிற்கு கொஞ்சம் தூரத்து சொந்தம் ஒருத்தங்க வந்தாங்க.. அவங்க என்னை பார்த்ததும் ஏதோ சொன்னாங்க.. என் வயசு தெரிந்ததும் அவங்களே விட்டுட்டாங்க இவ விடாம தொங்கிட்டு இருக்கிறா..”
“ஓ” என்று மாலினி கூற,
பிருந்தா, “இவ வயசு தெரிந்ததும் இவளை மிஸ் பண்ணிட்டோமே னு அந்த அம்மா ஒரே பீலிங்க்ஸ்ஸாம்”
நந்தினி முறைப்புடன், “ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.. தெரியாத்தனமா வண்டியில் வரும் போது இதை பத்தி சொல்லிட்டேன்.. இனி இதை பத்தி பேசின பிச்சிடுவேன்”
“அஹ! நீ பிக்ககிற வரைக்கும் என் கையென்ன மாங்கா பறிச்சிட்டு இருக்குமா?” என்று இருவரது சண்டை வழக்கம் போல் தொடர்ந்தது.
ஜெனிஷா ஆஷாவிடம், “என் கதையை கேட்கிறது இருக்கட்டும்.. நீ எப்போ காவியம் படைக்க போற?”
ஆஷா சிறு வெக்கத்துடன் சிரிக்கவும், ஜெனிஷா, “வெக்கப்பட்டியா! சொல்லிட்டு செய்மா” என்று கலாய்க்க,
ஆஷா முறைப்புடன், “நீ மட்டும் சொல்லிட்டா வெக்கப்பட்ட?”
“நீ சொல்ல சொல்லலையே!” என்றவள் ஆஷாவின் முறைப்பை கண்டுக்கொள்ளாமல், “கேட்டதுக்கு பதிலை சொல்லுடி”
“என்ன சொல்ல?”
“நீ வினோத்தை லவ் பண்றியா இல்லையா?”
“யோசிக்கணும்”
“எவ்ளோ நாள்? அவன் ‘சீ சீ இந்த பழம் புளிக்கும்’ னு வேற பிகர் கிட்ட போற வரைக்குமா?”
“அவன் ஒன்னும் அப்படி கிடையாது” என்று ஆஷா சிறு கோபத்துடன் கூற, ஜெனிஷா அவளது முகத்தை திருப்பினாள்.
ஜெனிஷா காட்டிய இடத்தை பார்த்தவளின் கண்களில் தீ பொறி பறந்தது. ஏனெனில் வகுப்பின் வெளியே வினோத் சீனியர் மாணவியுடன் கடலை வறுத்துக் கொண்டிருந்தான்.
ஜெனிஷாவின் செயலை பார்த்த சிவகுரு, “நாராயணா நாராயணா” என்றான்.
ஜெனிஷா அவனை பார்த்து, “நாரதர் கலகம் நன்மையில் முடியும்” என்றாள்.
சிவகுரு புருவம் உயர்த்த, ஜெனிஷா தோளை குலுக்கிவிட்டு ஆஷாவின் கைபேசியிலிருந்து வினோத்தின் எண்னை அழைத்துவிட்டு ஆஷாவின் கையில் கைபேசியை திணித்தாள்.
சீனியர் மாணவியுடன் தீவிரமாக கடலை வறுத்துக் கொண்டிருந்த வினோத் கைபேசியின் அதிர்வை கவனிக்கவில்லை. அழைப்பு நின்றதும் ஆஷா பல்லை கடித்துக் கொண்டு மீண்டும் அழைத்தாள். இப்பொழுது கைபேசியின் அதிர்வை கண்டுகொண்ட வினோத் ஆசிரியர் யாருக்கும் அருகில் இருக்கிறர்களா என்று சுற்றி ஒரு பார்வை பார்த்தான். ஆசிரியர் யாரும் இல்லை என்றதும் கைபேசியை எடுத்து பார்த்த போது அழைப்பு நின்றிருந்தது. அது யாரென்று அவன் பார்க்க போகையில் அந்த சீனியர் மாணவி ஏதோ கேட்கவும் இவன் கவனம் மீண்டும் அவளிடம் சென்றது. 
எதையாவது எடுத்து வினோத்தின் மண்டையை உடைக்கும் அளவிற்கு ஆஷாவிற்கு கோபம் ஏற, ஜெனிஷாவும் ராஜசேகரும் மானசீகமாக தலையில் அடித்துக்கொள்ள, சிவகுரு வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டு எழுந்தான்.
ஆஷா கோபத்துடன், “குரு நீ அவனை கூப்பிடாதே” என்றாள்.
“எனக்கு வேறு வேலை இல்லையா?” என்றவன் வெளியே சென்றான். 
வினோத் இருக்கும் திசைக்கு எதிர் திசைக்கு சென்ற சிவகுரு எதிரே வந்த கிருஷ்ணமூர்த்தியிடம், “மாப்பி வினோத்தை போய் காப்பாத்துடா.. ஆஷா பத்திரகாளி அவதாரத்தில் அவனை பார்த்துட்டு இருக்கா”
“என்ன டா சொல்ற?”
சிவகுரு வினோத் இருந்த இடத்தை சுட்டிக்காட்ட, கிருஷ்ணமூர்த்தி, “இவனுக்கு எதுக்கு டா இந்த வேண்டாத வேலை?”
“அவனை பத்தி தான் தெரியுமே! போடா”
“என் நேரம்” என்றவன் வினோத்திடம் சென்றான்.
“குட் மார்னிங் சிஸ்டர்” என்று அந்த மாணவியை பார்த்து மென்னகையுடன் கூறியபடி வினோத்தின் தோளில் கை போட்ட கிருஷ்ணமூர்த்தி அவன் காதில் மெல்லிய குரலில், “சட்டுன்னு திரும்பாத.. ஆஷா உன்னை தான் பார்த்துட்டு இருக்கா அதுவும் சுட்டெரிக்கும் சூரியனாய்”  
வினோத் சட்டென்று திரும்பி பார்க்க கிருஷ்ணமூர்த்தியும் மானசீகமாக தலையில் அடித்தக் கொண்டு, “டேய்” என்றான்.
ஆஷா கண்ணில் தெரிந்த கனலில் வினோத் மனம் ‘ஐயோ’ என்று அலற அவன் அவசரமாக “பை” என்று கூறி வகுப்பினுள் ஓடினான்.  
“குட் மார்னிங் ப்ரோ” என்ற அந்த மாணவி, “என்ன ரகசியம்?” என்று வினவினாள்.
கிருஷ்ணமூர்த்தி, “அதான் ரகசியம் னு நீங்களே சொல்லிட்டீங்களே!”
“என்னிடம் சொல்ல கூடாத ரகசியமா?”
“அவனிடம் மட்டும் சொல்லக் கூடிய ரகசியம்”
அவள் மென்னகையுடன், “நல்ல பேசுற” என்றாள்.
அவன், “தன்க் யூ.. பை” என்று கூறி வகுப்பினுள் சென்றான்.
  
மழை தொடரும்….

Advertisement