Advertisement

ஜெனிஷா ராஜசேகரை காதலுடன் பார்த்தபடியே, “என் லவ்வர் பாய் ராஜசேகர் மூன்றாவது இடத்தில்” என்றவள் தன்னவனை பார்த்து கண்ணடித்தாள். அணைவர் முன்னிலையில் அவள் தேர்ந்தெடுத்த பாடலும் செய்கையும் அவனது கோபத்தை கூட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.
ஏதோ கிண்டலாக சொல்ல வந்த சிவகுரு ராஜசேகரின் கோபம் புரிந்து, “மச்சான் ஒரு ஜாலிக்காக தான் டா இப்படி பண்றா.. எதுக்கு இவ்ளோ கோபம்.. உங்களை பற்றி நம்ம கிளாஸ்ஸுக்கே தெரியும்.. இதே நீ இப்படி பண்ணா அவ ரசிக்க தானே செய்வா”
“நானும் அவளும் ஒன்னா?”
“இல்லையா பின்ன”
“ச்ச்.. அவளும் நானும் வேறில்லை தான் இப்போ நான் சொல்ல…………..”
“புரியுது.. ஒரு பொண்ணு இப்படி செய்ய கூடாதுன்னு சொல்ற.. பட் அவளது இந்த அடாவடி தனம் தானே உன்னை ஈர்த்தது” என்றதும் ராஜசேகர் காதில் ‘நான் இப்படி னு தெரிந்து தானே லவ் பண்ண!’  என்ற ஜெனிஷாவின் குரல் ஒலித்தது, இருப்பினும் அதை ஓரம் கட்டிவிட்டு நண்பனை சிறு ஆச்சரியத்துடன் பார்க்க,
சிவகுரு, “என்ன பார்க்கிற! இவளை லவ் பண்ணாத னு சொன்ன நானே இப்போ சப்போர்ட் பண்றேனா! அவளை கெட்ட பொண்ணு னு சொன்னதே இல்லையே! உன் நேச்சருக்கு செட் ஆக மாட்டான்னு நினைத்தேன் பட் என் எண்ணம் தப்போனு தோணுது”
“சரி தான் உன் கணிப்பு தப்பு தான்.. எனக்காக அவள் கொஞ்சம் மாறி தான் இருக்கிறாள் இருந்தாலும்……..”
“இது சும்மா விளையாட்டு டா”
“இது மட்டுமில்லை டா.. நேத்து அவ அந்த தினேஷ்(ஆசிரியர்) கிட்ட பேசியது.. ச்ச் விடு டா.. சின்ன கோபம் தான்.. எனக்கே தெரியுது.. எந்த அடாவடி தனம் என்னை ஈர்த்ததோ அதையே இப்போ தப்புன்னு சொல்றேன்! அவளும் எனக்காக மாறி இருக்கிறா தான்! அவளது அடாவடித்தனம் சிலது அதிகமா இருந்தால் என் காதலால் மாற்றுவேன்”
“இது தான் நீ..”
இப்பொழுது மனம் சற்று லேசாகிவிட ராஜசேகர் தன்னவளை திரும்பி பார்த்தான்.
அவளது கண்கள் குறும்பாக சிரித்தாலும் அதன் பின்னே காதலுடன் கூடிய மன்னிப்பை யாசிக்கும் பார்வை அவனுக்கு தெரியவும் ஒரு நொடி காதலுடன் பார்த்தவன் சிரிப்பை அடக்கி ஆள் காட்டி விரலை ஆட்டி மிரட்டிவிட்டு திரும்பிக் கொண்டான்.
ஜெனிஷாவின் முகத்தில் இப்பொழுது தனி ஒளி பிறந்தது. ராஜசேகர் கைபேசியில் குறுந்தகவல் வந்தது. அது அவள் அனுப்பியதே.. “உன்னை நான் அறிவேன்” என்று அனுப்பி இருந்தாள்.
ராஜசேகர் தன்னை மீறி அவளை பார்த்து மென்னகை புரிந்தான்.
இவர்களின் தனி ஆட்டத்தை கவனித்துக் கொண்டிருந்த சிவகுரு, “தண்ணிய குடி.. தண்ணிய குடி”  என்றவன், “யம்மா ஆஷா.. அடுத்த பாட்டை போடுமா”
ஆஷா, “நான் உனக்கு அம்மா வா?”
“அதெல்லாம் சும்மா ஒரு ப்ளோ-வில் வரது தான்.. அடுத்த பாட்டை போடு” 
ஆஷா அடுத்த பாடலை இயக்க போனபோது முதல் வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கவும் ECE மாணவிகள் அவசர அவசரமாக தங்கள் வகுப்பு நோக்கி செல்ல, ஜெனிஷா, “சிறிய இடைவெளிக்கு பிறகு முதல் இரண்டு இடத்தை பிடித்திருப்பது யாரென்று பார்ப்போம்.. அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களின் சேகரின் நான்” என்று பிக்-பாஸ் கமல் போல் கூறி முடிக்கவும் ஐஸ்வர்யா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
தன்னவளை பார்த்தபடி எழுந்த சேகர் ஆசிரியர் கவனம் தன்னிடம் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு அவளை பார்த்து கண்ணடித்தான். அவளது அடாவடிதனத்தை அவன் மனம் இப்பொழுது முன்பு போலவே காதலுடன் ரசித்தது, அதுவும் இறுதியாக அவள் சொன்ன ‘உங்களின் சேகரின் நான்’ என்றதில் அவன் மனம் முழுவதும் அவள் பக்கம் சரிந்தது. 
அவளும் அவனை தான் பார்த்தாள்.. அவளும் ஆசிரியரை ஒரு நொடி பார்த்துவிட்டு அவனை பார்த்து கண்ணடித்துவிட்டே இருக்கையில் அமர்ந்தாள்.
ஜெனிஷாவின் அடைமொழியில் கொதிநிலையில் இருந்த ஸ்ரீராமன் இவர்களின் விளையாட்டை பார்த்து மேலும் எரிச்சல் அடைந்தான் இருப்பினும் மாலினி பற்றி பாட வாய்ப்பு கிடைத்ததில் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான்.
ஐஸ்வர்யா தேர்வை தொடங்கினார். அதுவும் ஒரு இருக்கை விட்டு மாணவர்களை அமரச் சொன்னவர் மற்றவர்களை கீழே அமரச் சொன்னார். 
‘இது என்ன ஸ்கூல் போல் இருக்கிறது’ என்ற முணுமுணுப்புடன் மாணவ மாணவிகள் அமர்ந்தனர்.
வெகு சிலர் நேர்மையாக தேர்வை எழுத, தேர்வு ஆரம்பித்த சிறிது நேரம் கழித்து ஒரு சிலர் ஆசிரியருக்கு தெரியாமல் புத்தகத்தை திறந்து எழுத, ஒரு சில மாணவர்கள் புத்தகத்தில் பதில் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாத அளவிற்கு ஞானசூனிகளாக இருக்க, புத்தகத்தை பார்த்து எழுதினவர்களை காண்பிக்க சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தனர்.  
ஒருசிலர் புத்தகத்தை பார்த்து கூட தவறாக எழுதினர், அதாவது சரியான விடை தெரியாமல் ஏதோ எழுதினர். 
ஒருசிலர் எதுவும் எழுதாமல் தைரியமாக வெத்து காகிதத்தை கொடுக்கும் எண்ணத்தில் இருந்தனர்.
பிருந்தா, “ஷ்.. ஷ்..” என்று சத்தம் எழுப்ப மாலினி அவளை பார்த்து ‘பொறு’ என்பது போல் செய்கை செய்தாள். பிறகு முதல் கேள்விக்கான பதிலை எழுதி முடித்துவிட்டு இரண்டு காகிதங்களை அவளிடம் கொடுத்தாள்.
ஜெனிஷா தனது வகுப்பு குறிப்புக்களை கஷ்டப்பட்டு பார்த்து எழுத முயற்சித்துக் கொண்டிருந்த வேளையில் பிருந்தா மாலினியிடம் வாங்கியதை பார்த்தவள் ஒரு சுண்ணத்துண்டை மாலினி மேல் எறிந்தாள். அவள் திரும்பி பார்க்கவும் காகிதத்தை கேட்டாள். மாலினி பிருந்தாவை சுட்டிக் காட்டினாள். அடுத்து பிருந்தா மேல் சுண்ணத்துண்டை ஏறிய, அவள் ‘பொறு’ என்று சொல்லிவிட்டு எழுத தொடங்கினாள். வேக வேகமாக எழுதிய பிருந்தா ஒரு காகிதத்தை ஜெனிஷாவிடம் கொடுத்தாள். 
அந்த வகுப்பு முடிய ஐந்து நிமிடங்கள் இருந்த போது ஆசிரியர், “டைம் இஸ் அப்.. பேப்பரை தாங்க” என்று அறிவித்தார்.
ஒவ்வொருவராக தங்கள் விடைத்தாளை கொடுக்க தொடங்கினர்.
மாலினி எழுதி முடித்துவிட்டு விட்டுப்போன விடைத்தாளிற்காக பிருந்தாவை பார்க்க, அவள் ஜெனிஷாவை காட்ட, அவள் ராஜசேகரை காட்ட, அவன் சிவகுருவை காட்ட என்று நீண்டுக் கொண்டே போன தொடர் சங்கிலியில் மாலினி மலைத்துத் தான் போனாள். இறுதியாக அவளது விடை தாள் இருக்கும் ஆளை கண்டு பிடித்துவிட்டாள் ஆனால் அவன் ஒரு மூலையில் இருக்க இவள் ஒரு மூலையில் இருக்க என்ன செய்வது என்று திணறினாள்.
ராஜசேகர், “வெயிட் சிஸ்” என்பது போல் செய்கை செய்துவிட்டு எழுந்தவன் தனது விடைத்தாளை அந்த மாணவன் அருகில் போட்டுவிட்டு அந்த மாணவனுக்கு சிமிக்கை செய்ய அவன் ராஜசேகரின் விடைதாளுடன் மாலினியின் விடைத்தாளை போட்டுவிட, இரண்டையும் ராஜசேகர் எடுத்துக் கொண்டான்.
பிறகு ஆசிரியரை பார்த்து, “மேம் ஸ்டப்ளர்”
“நீ தான் கொண்டு வரணும்” என்று ஆசிரியர் கூற,
மாலினி, “மேம்” என்றபடி தன்னிடம் இருந்ததை காட்டினாள்.
அவள் இடத்திற்கு சென்று அதை வாங்குவது போல் அவளது விடைத்தாளை அவளிடம் கொடுத்தவன் அங்கே இருந்தே தனது விடைத்தாளை ‘ஸ்டப்ளர்’ கொண்டு இணைத்துவிட்டு ஆசிரியரிடம் கொடுத்தான்.
மாலினி நிம்மதி மூச்சுடன் தனது விடைத்தாள்களை இணைத்து ஆசிரியரிடம் கொடுத்தாள். 
அந்த வகுப்பு முடிந்து ஐஸ்வர்யா விடைத்தாள்களுடன் விடைபெற, அடுத்து கணித ஆசிரியர் உள்ளே நுழைந்தார். 
ஜிண்டா பலகையில் எழுதிக் கொண்டிருந்த போது சிவகுரு, “மச்சான் உன் ஆளு பவர் ஸ்டார்(ஆசிரியர் தினேஷ்) பார்த்து அப்படி என்ன சொன்னா?”
“அது உனக்கு தேவை இல்லாதது”
சிவகுரு சிறு தோள்குலுக்களுடன், “என்ன பெருசா பேசியிருக்க போறா! உங்களை பார்த்து கண்ணடிக்கலைன்னு பொறாமையா னு கேட்டு இருப்பா!”
ராஜசேகர் அதிர்ச்சியுடன் பார்க்கவும் சிவகுரு மெல்லிய புன்னகையுடன், “அவ இதுக்கும் மேல பேசியே நான் கேட்டிருக்கிறேன்.. இப்போ உன்னை லவ் பண்ணாம இருந்து இருந்தா அந்த பவர் ஸ்டாரை பார்த்து கண்ணடித்து அவனை ஆஃப் பண்ணியிருக்க கூட வாய்ப்பு இருக்கிறது”
ராஜசேகர், “செய்தாலும் செய்து இருப்பா”
ஜிண்டா, “சிவகுரு ஹவ் மணி(many அவர் இப்படி தான் சொன்னார்) டைம் டெல்.. ஹன்ட் ரைட் வொய் மௌத் ஸ்பீக்”
சிவகுரு, “மௌத் நோ ஸ்பீக் சார்.. ஹன்ட் ரைட் மௌத் டெல் சம் ஸ்டெப்ஸ்”
ஆசிரியர் அவனை முறைக்க, அவன், “ஐ நோ லை சார்.. ஸீ” என்று எழுதாத குறிப்பேடை காட்டினான். 
ஆசிரியர் மேடையில் இருந்து பார்த்ததால் அதை சரியாக கவனிக்காமல் மூக்கறுபட விரும்பாமல், “ஓகே.. சிட்” என்றுவிட்டு எழுதுவதை தொடர்ந்தார். 
ராஜசேகர், “இங்கே வந்து பார்த்து இருக்கணும்!”
“நம்ம ஜிண்டா பத்தி தெரியாதா!” என்று சிவகுரு சிரிப்புடன் கூறினான்.
அந்த வகுப்பு முடிந்து தேநீர் இடைவேளை தொடங்கவும் வெளியே செல்ல தொடங்கிய மாணவர்களை தடுத்த வினோத், “இருங்க டா.. முதல் இரண்டு இடம் யாருன்னு பார்த்திரலாம்” என்றவன் ஜெனிஷாவிடம், “உன் முடிவை அறிய ஆவலுடன் ஓடோடி வந்த எங்களை ஏமாற்றி விடாதே சாந்தா.. ச.. ஜெனிஷா.. ஏமாற்றி விடாதே” என்று காதல் மன்னன் ஜெமினி கணேசன் போல் கூற,
ராகேஷ், “அடங்கு டா”
ஜெனிஷா, “இதோ இப்போதே அறிவித்து விடுகிறேன் சகோதரா!” என்று சாவித்திரி போல் கூற, அவளது ‘சகோதரா!’ என்ற வார்த்தையில் வினோத் நெஞ்சை பிடிக்க, மாணவர்கள் சிரித்தனர்.
ஆஷா அடுத்த படலை இயக்கினாள்..
“மௌனமே உன்னிடம்.. அந்த மௌனம் தானே அழகு..
பார்வைகள் போதுமே.. அதில் வார்த்தை பேசி பழகு.. 
மௌனமே உன்னிடம்.. அந்த மௌனம் தானே அழகு..
பார்வைகள் போதுமே.. அதில் வார்த்தை பேசி பழகு..” என்ற வரிகள் மட்டும் ஒலித்தது. (மொழி படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் இரண்டு வரிகள் அவை)  
ஜெனிஷா, “இருக்கும் இடம் தெரியாமல், இந்த காலத்தில் பொண்ணுக கூட இப்படி அமைதியா இருக்க மாட்டாங்களே என்று நம்மை எல்லாம் ஆச்சரியப்பட வைத்த புழா என்ற புழமுத்து குமாரசுவாமி இரண்டாவது இடத்தில்”
சக்திவேலும் அனிஷும் புழாவிற்கு கை கொடுத்து, “கலக்குற மச்சி” என்றும் “அமைதியா இருந்தே பொண்ணுங்க மனசில் இடம் பிடிச்சிட்டியே!” என்றும் கூற, புழாவோ சிறு வெக்கம் கலந்த கூச்சத்துடன் நெளிந்தான்.
கிருஷ்ணமூர்த்தி புன்னகையுடன், “சும்மா இருங்க டா” என்று சக்திவேல் மற்றும் அனிஷை அடக்கினான்.
அடுத்த பாடலை ஒலிபரப்ப போன ஆஷாவை தடுத்த ஜெனிஷா, “முதல் இடத்தை லன்ச் டைமில் சொல்றேன்” என்று சிரிப்புடன் கூற,
மாணவர்கள், “நோ” என்றனர்.
ஜெனிஷா, “ஓகே.. ஓகே..” என்று கூறி ஆஷாவை பார்க்க, அவள் இறுதி பாடலை ஒலிக்க விட்டாள்.
“மச்சி காலரதான் தூக்காமலே ஆடவரியா!
பிகுலு அடிச்சு ரகள செய்ய நீயும் ரெடியா!
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காட்டாதே உதாரு 
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காட்டாதே உதாரு” என்ற வரிகள் மட்டும் ஒலிபெற்றது.(என்னை அறிந்தால் திரைப்படம்) 
ஜெனிஷா, “அதாரு உதாரு அடிதடிக்கு பெயர் போன செல்வராஜ் முதல் இடம்.. கொஞ்சம் முன் கோபம் என்ற போதிலும் பாரதியாரின் ‘ரௌத்திரம் பழகு’ என்ற வார்த்தைகளை நினைவு படுத்துவதோடு பார்க்கவும் ஸ்மார்ட்டாக இருக்கவும் செல்வராஜிற்கு முதல் இடம் தர பட்டது.. இத்துடன் உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம்” என்றவள் ஆஷாவை பார்க்க, அடுத்து இருவரும் சேர்ந்து கை கூப்பி, “நன்றி வந்தனம் நமஸ்கார்” என்று புன்னகையுடன் கூறினார்.
மாணவர்களின் மெல்லிய கரகோஷம் அவர்களை வரவேற்றது. 
மழை தொடரும்….

Advertisement