Advertisement

அவர், “இவன்க உன்னை ஒன்றும் செய்ய முடியாது.. சொல்லு.. யாரு சொன்னது?”
அவன் தவிப்புடனும் கலவரத்துடனும் எச்சியை முழுங்க, ஆசிரியர்கள் எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க, சக்திவேல் சிறு பயத்துடன் அவனை பார்க்க, நண்பன் மாட்டிக் கொள்வானோ என்று ராஜசேகர் சிறு தவிப்புடன் பார்க்க, சிவகுரு பிரச்சனையை சமாளிக்கும் திடத்துடன் பார்க்க, செல்வராஜும் ராகேஷும் எப்பொழுதும் போல் திடமாக நின்றனர்.
அந்த மாணவன் வாய் திறக்கும் கடைசி விநாடி ரகேஷை பார்க்க அவன் கண்களிலேயே தைரியம் சொல்லி உண்மையை சொல்லாதே என்று கூற, அவன், “எனக்கு.. எனக்கு.. தெரியாது சார்” என்றான். 
ரவி சார் கோபத்துடனும் இயலாமையுடனும் மேஜை மீது ஓங்கி தட்ட, பி.டி சார் கோபத்துடன் இருக்கையில் அமர்ந்தார் ஆனால் அந்தோ பரிதாபம் அவர் அடுத்த நொடி கீழே கிடந்தார். அவர் முன்பு கோபத்துடன் எழுந்த போது இருக்கை சற்று விலகி இருக்க அதை கவனிக்காமல் அவர் அமர போக, கீழே விழுந்துவிட்டார்.
இறுக்கம் தளர்ந்து மாணவர்கள் ஆசிரியர்கள் என்று அனைவருமே சிரித்துவிட்டனர். ரவி சார் அவர் எழ உதவ, பி.டி ஆசிரியர் கூட சிறிது அசடு வழிந்துவிட்டு எழுந்து சரியாக இருக்கையில் அமர்ந்தார்.
அதன் பிறகு மீண்டும் முதலில் இருந்து விசாரணையை தொடர எப்பொழுதும் போல் ஆசிரியர்கள் தோல்வியை தழுவினர்.
ரவி சார் இறுதியாக, “உங்க பரென்ட்ஸ் கூட்டிட்டு வாங்க.. அப்புறம் தான் கிளாஸ் போகலாம்.. இப்போ கிளம்புங்க”
சிவகுரு, “எங்கே சார்?”
அவர் முறைக்கவும் அவன், “நீங்க தானே சார் கிளாஸ்கு போகக் கூடாதுனு சொன்னீங்க” 
அவர் முறைப்புடன், “இப்போ கிளாஸ் போங்க.. நாளைக்கு உங்க அப்பா வந்திருக்கணும்.. இல்லை கிளாஸ் போக முடியாது.. கிளாஸ் போக வேண்டாம் ஜாலினு நினைக்காதீங்க.. நாளைக்கு அப்பா வரலைனா, உங்க அப்பாவிடம் போனில் நான் பேசுவேன்.. இப்போ கிளம்புங்க”
ராகேஷ் மற்றும் செல்வராஜ் அங்கேயே நிற்க ஆசிரியர், “கிளம்ப சொன்னேன்”
செல்வராஜ், “நாங்க என்ன பண்ணனும் னு சொல்லலையே!”
“உங்களுக்கும் சேர்த்து தான் சொன்னேன்”
ராகேஷ், “அப்போ அந்த சீனியர்ஸ் பரென்ட்ஸ்  வர சொல்லுங்க”
பி.டி ஆசிரியர், “உன் அப்பா மேல் அவ்ளோ பயமா?” என்று சிறு நக்கல் குரலில் வினவினார்.
ராகேஷ், “பயம் இல்லை மரியாதை.. தேவை இல்லாமல் அவரை அலைய வைக்க எனக்கு விருப்பம் இல்லை”
“எது டா தேவை இல்லாதது?” என்று ஒரு ஆசிரியர் எகிற, அவரை தடுத்த பி.டி ஆசிரியர், “பிரேமம் நிவின் பௌலி நினைப்பா?”
“எனக்கு எந்த நினைப்பும் இல்லை.. ஆனால் நீங்க சொன்னது சரி தான்.. பிரேமம் படத்தில் வந்த அப்பா போல் என் அப்பா வந்தா உங்களுக்கு தான் பிரச்சனை”
அவர் முறைக்கவும் அவன், “நான் தப்பு செய்தால் நிச்சயம் என் அப்பா என்னை தண்டிப்பார்.. ஆனால் நான் தப்பு செய்யாத போது அவரை அழைத்தால்…………”
“என்ன டா ரொம்ப தான் பில்டப் குடுக்கிற! வர சொல்லு அவரை.. என்னத்தை ……….. பார்க்கிறேன்”
“மரியாதையா பேசுங்க சார்” என்று ராகேஷும், “சார் மரியாதை” என்று செல்வராஜும் கூறினார்.
“உனக்கு வந்தா ரத்தம் எங்களுக்குனா தக்காளி சட்னி யா?”
“நாங்க இப்படி தரக்குறைவா பேசலை” என்று கூறிய போது அவன் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தில் ஒரு நொடி அவர் மிரளத் தான் செய்தார். 
பின் எதுவும் நடக்காதது போல், “சினீயர்ஸ் எப்படி கவனிக்கிறதுன்னு எங்களுக்கு தெரியும்.. இது உங்களுக்கு இரண்டாவது பிரச்சனை என்பதால் தான் இந்த முடிவு.. ஸோ.. நாளைக்கு அப்பாவுடன் வாங்க.. இப்போ கிளம்புங்க”
செல்வராஜ் சிறு தோள் குலுக்கலுடன் கிளம்ப ராகேஷ் அவரை முறைத்துவிட்டே கிளம்பினான்.
அவர்கள் கிளம்பியதும் ஒரு ஆசிரியர், “திமிரை பாருங்க சார்.. உடம்பு முழுக்க திமிர்.. உங்களை முறைச்சிட்டு போறான்”
“நான் பேசியதும் தப்பு தானே”
“சார்!!!!”
“உண்மை தான்.. இவனை திட்டலாம்.. இவன் அப்பாவை பேசும் உரிமை எனக்கு இல்லை.. நானும் வேணும்னு பேசலை.. ஏதோ ஒரு ப்ளோ-வில் பேசிட்டேன்.. அப்போ அவன் கண்ணில் தெரிந்த கோபம்!! நான் சார் என்பதால் மட்டுமே விட்டான்.. இல்லை செம்ம அடி விழுந்து இருக்கும்.. அவனது ரௌத்திரத்தில் நானே ஒரு நிமிஷம் ஆடிட்டேன்.. அதே நேரத்தில் இந்த ரௌதிரத்திலும் அவன் நண்பர்களை விட்டு கொடுக்காமல் ‘நாங்க’ என்று தன்னையும் சேர்த்து கூறியதில் அவனை மெச்ச தோன்றியது”
“என்ன சார் இப்படி சொல்றீங்க?”
பி.டி ஆசிரியர் மென்னகையுடன், “உண்மையை தான் சொல்றேன்.. அவனிடம் தப்பு இல்லை..”
“தப்பு செய்பவனை காப்பது தப்பு தானே!”
“இந்த வயதில் இருக்கும் நட்புணர்வு அது” என்று கூறியவர், மென்னகையுடன், “அவன் வயதில் கிட்டதிட்ட நானும் இப்படி தான் இருந்தேன்” என்றார். 
மதிய உணவு இடைவேளையில் மாலினி தடுத்தும் சமாதானம் அடையாமல் நந்தினி பிருந்தாவை இடைவிடாது திட்டிக் கொண்டிருக்க, “நீ இவ்ளோ பேசுவியா?” என்ற ஜெனிஷாவின் குரலில் நந்தினி அமைதியாகி விட பிருந்தா காதை தேய்த்தபடி, “என்னை திட்டனும் னா மட்டும் மேடம் கே.டி.வி யா மாறிடுவாங்க”
ஆஷா, “அது என்ன கே.டி.வி?”
ஜெனிஷா, “நான்-ஸ்டாப் ஆ திட்டுவா னு சொல்ல வரா” என்று புன்னகையுடன் கூற, ஆஷா, “ஓ” என்றாள்.
பிருந்தா சிறு ஆச்சரியத்துடன் ஜெனிஷாவை பார்க்க, அவள் “என்ன?”
பிருந்தா, “உனக்கு பின் தலையில் ஏதும் அடி பட்டிருச்சா?”
ஜெனிஷா மெல்லிய புன்னகையுடன் நெஞ்சை சுட்டிக்காட்டி, “இங்கே தான் அடி பட்டிருச்சு.. அதனால் வந்த மாற்றமாக இருக்கலாம்” என்று கூறி தோளை குலுக்கவும் பிருந்தா வாயை திறந்து அதிர்ச்சியுடன் ஜெனிஷாவை அதிசய பிறவியை பார்ப்பது போல் பார்க்க, ஜெனிஷா அவள் வாயை மூடினாள்.
பிறகு மாலினியை பார்த்து கையை நீட்ட மாலினியும் கை கொடுத்தாள். அவளது கையை குலுக்கிய ஜெனிஷா, “கேர்ள்ஸ்-ஸில் பஸ்ட் அபாலாஜி எழுதியதிற்கு வாழ்த்துக்கள்” என்றாள்.
மாலினி செல்லமாக முறைக்க ஜெனிஷா புன்னகையுடன், “அக்சுவலி நான் தான் பஸ்ட் எழுதுவேன்னு நினைத்தேன்.. நீ முந்திகிட்ட” என்று கூறி கண் சிமிட்டியவள், “அது சரி எதுக்கு சிரிச்ச?” என்று வினவ நந்தினி மீண்டும் பிருந்தாவை முறைக்க அராம்பிக்கவும்,
பிருந்தா, “திரும்ப முதல்ல இருந்தா!” என்று அலறியபடி தலையில் கைவைக்கவும் மாலினி, ஜெனிஷா மற்றும் ஆஷா வாய்விட்டு சிரிக்க, நந்தினி கூட லேசாக சிரித்தாள். 
மாலினி மென்னகையுடன் பிருந்தாவை சுட்டி காட்டி, “உன் வேலையை இவ செய்தா.. அதான் ஆஷா போல் நான் மாட்டிக்கிட்டேன்”
ஆஷாவும் பிருந்தாவும் ஜெனிஷாவையும் மாலினியையும் மாற்றி மாற்றி பார்த்தனர் பிறகு ஒரே நேரத்தில், “எப்படி டி இப்படி பின்னி பெடலெடுக்கிற?” என்று ஆஷாவும் “நீங்க ரெண்டு பேரும் நல்லவளா கெட்டவளா?” என்று பிருந்தாவும் வினவினர்.
மாலினியும் ஜெனிஷவும் ஒன்றாக தோளை குலுக்கவும் ஆஷாவும் பிருந்தாவும் நெஞ்சை பிடித்தனர்.
அதை பார்த்து ஜெனிஷா மாலினியிடம் கண்ணடிக்க, மாலினி ஜெனிஷாவுடன் கை தட்டினாள்.  
ஆஷா, “வேணாம் டி.. இதுக்கு மேல இந்த சின்ன இதயம் தாங்காது”
பிருந்தா, “அதே தான்” என்றவள், “எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்” என்றாள்.
ஜெனிஷா, “என்ன உண்மைன்னு இன்னுமா நீ கண்டு பிடிக்கலை?”
“சேகர் னு புரியுது இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரா தான் இருக்குது.. எனக்கு தெரிய வேண்டிய உண்மை என்னனா! இப்போ தான் முதல் முறையா சமாதானமா பேசுறீங்களா என்பது தான்”
மாலினி, “நாங்க என்ன எதிரிகளா? சமாதானம் உடன்படிக்கை எடுக்க?”
ஜெனிஷா, “அதானே!” என்று கூறி மாலினியுடன் மீண்டும் கை தட்டினாள்.
பிருந்தா, “வேணாம் டி.. அழுதுருவேன்” என்று வடிவேல் போல் கூறவும் மீண்டும் சிரிப்பலை எழுந்தது. அப்பொழுது வகுப்பு தொடங்குவதற்கான அழைப்பு மணி அடிக்கவும் ஜெனிஷாவும் ஆஷாவும் தங்கள் இடத்திற்கு சென்றனர். இடத்தில் அமர்ந்த ஜெனிஷா கைபேசியை எடுத்து பார்க்க அதில் ராஜசேகரிடமிருந்து குறுஞ் செய்தி வந்திருந்தது. ஒரு குறுஞ் செய்தி தான் ஆனால் அதில் பல “ஐ லவ் யூ” மற்றும் பல முத்தம் தரும் ஸ்மைலி படத்தையும் அனுப்பி இருந்தான். அதே குறுஞ்செய்தியை அவனுக்கு திருப்பி அனுப்பியவள் அவனை பார்த்து கண்சிமிட்டினாள். அவன் வேறு உலகத்தில் மிதக்க தொடங்கினான்.
அப்பொழுது அதி வேகமாக உள்ளே வந்த ஒரு ஆசிரியர் நேராக ஜெனிஷா அருகே சென்று, “யாரை பார்த்து கண் அடிச்ச?”
ஜெனிஷா பதறாமல் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு எழுந்து, “கண்ணடிச்சேனா!! எப்படி கண்ணடிக்கிறதுன்னு கூட எனக்கு தெரியாது”
“இந்த நடிப்பெல்லாம் என்னிடம் செல்லாது.. யாருன்னு சொல்லு”
“நான் கண்ணடிக்கலை” என்றவள் குரலை வெகுவாக குறைத்து அவருக்கு மட்டும் கேட்கும் குரலில், “உங்களை பார்த்து அடிக்கலைன்னு கோபமா சார்” என்று கேட்கவும் அவருக்கு ரத்த கொதிப்பு அதிகரித்தது. அவர் பல்லை கடித்துக் கொண்டு அவளை முறைத்தார்.
அவரது முகத்தை பார்த்து ஏதோ இவள் கூறியிருக்கிறாள் என்பதை அறிந்த ராஜசேகர் அவளை முறைக்க அவளோ அலட்டிக் கொள்ளாமல் நின்றாள்.
பசங்க பக்கம் திரும்பிய அந்த ஆசிரியர் இரண்டு நொடியில் ராஜசேகரை பார்த்து, “நான் உள்ளே வந்த போது நீ தான் ஒரு தினுசா இருந்த.. சொல்லு உன்னை பார்த்து தானே கண்ணடிச்சா?”
“எனக்கு தெரியாது சார்”
“அது எப்படி டா தெரியாம இருக்கும்?”
“..”
“ரெண்டு பேரும் பிரின்சிபால் ரூம் வாங்க”
ராஜசேகர், “நாங்க ஏன் சார் வரணும்? இவ கண் அடிச்சாளா இல்லையானே எனக்கு தெரியாது.. இதுல இவ என்னை பார்த்து கண் அடிச்சா னு சொல்றீங்க” என்றும்,
ஜெனிஷா, “நான் கண் அடிக்கலை.. நீங்க தான் அப்படி சொல்றீங்க”
இருவரையும் முறைத்த அந்த ஆசிரியர் ராஜசேகரிடம், “சரி இவ யாரு உனக்கு”
“என் கிளாஸ் மேட்”
“அவ்ளோ தானா?”
“ஆமா”
மாலினியை சுட்டி காட்டியவர், “அன்னைக்கு பி.டி சாரிடம் இவளை சிஸ்டர் னு சொன்னியே! இவளும் அப்படி தானா?”
ராஜசேகர், “ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் னு சொல்ற அளவிற்கு நான் மகான் இல்லை சார்”
“அப்போ இவ யாரு?”
“அதான் சொன்னேனே! என் கிளாஸ் மேட்”
“அப்படி னா!”
“அப்படி னா அப்படி தான்” 
ஆசிரியர் ஜெனிஷா பக்கம் திரும்ப அவள் ஏதோ கூற போக ராஜசேகரின் முறைப்பில் அவள் அமைதியானாள்.
அப்பொழுது உள்ளே வந்த சைக்கோ, “என்னாச்சு தினேஷ்? என்ன பிரச்சனை?”
சட்டென்று தன் முக பாவத்தை இயல்பிற்கு மாற்றிய ஆசிரியர், “ஒன்றுமில்லை சார்.. கொஞ்சம் சத்தம் வந்தது.. வகுப்பில் யாருமில்லைனு வந்தேன்” என்று கூறிவிட்டு வெளியேறினார்.
                                    மழை தொடரும்….

Advertisement