Advertisement

“நிஜமா?”
“ஏன்?”
“நீ அந்த குரங்கை பத்தி பேசும் போது சில நேரம் ஏதோ உள் அர்த்தத்துடன் சொல்றியோனு தோணும்.. ஆனா” என்று அவள் குழப்பத்துடன் இழுக்கவும்
மாலினி மனதினுள், ‘அவன் காதலை ஒன்னு நீயே உணரனும் இல்லை அவன் சொல்லணும்’ என்று கூறியவள் பிருந்தாவிடம், “அப்படியெல்லாம் இல்லை”
“என்னவோ போ!” என்றவள், “ஆனா இப்போ நடந்ததில் ஒரு சந்தோசம்”
“ரப்பர் ஸ்டாம்ப் அடி வாங்கியதா!”
பிருந்தா விரிந்த புன்னகையுடன், “யா..யா..” என்றவள், “இந்த குரங்கு பயலுக்குள் இப்படி ஒரு ஜாக்கிஜான் இருப்பான்னு நான் நினைக்கவே இல்லைடி” என்று ஆச்சரியபட்டவள், சிறு புன்னகையுடன், “இதிலும் ஒரு ஒற்றுமை டி… ஜாக்கிஜானும் குரங்கு மாதிரி தாவி தாவி ஓடுவான்.. ஸோ பெயர் பொருத்தம் சரி தான்”
மாலினி, “பிருந்தா சொன்னா தப்பா இருக்குமா! அதுவும் சிவா விஷயத்தில்!!”
“அது என்ன சிவா விஷயத்தில்?”
“பின்ன உன்னோட க்ளோஸ் பிரெண்ட் ஆச்சே!”
“க்ளோஸ் பிரெண்ட் இல்லைடி க்ளோஸ் பண்ற பிரெண்ட்”
“ரைமிங் நல்லா தான் இருக்குது.. ஆனா பார்க்கலாம்”
“என்ன பார்க்கலாம்?”
“எந்த க்ளோஸ் னு”
பிருந்தா யோசனையுடன், “நீ அவனை என்னுடன் ஓட்டுறியா இல்லை ஏதும் சொல்ல முயற்சிக்கிறியா!”
மாலினி மெல்லிய புன்னகையுடன், “நீயே கண்டு பிடி”
பிருந்தா சிறு அலட்சியத்துடன் தோளை குலுக்கினாள் பிறகு நந்தினியை பார்த்து, “நீ என்னடி அமைதியா இருக்கிற?”
“இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது?”
“ஓ! சரி இவளிடம் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன்.. அவ அந்த குரங்கை என்னுடன் ஓட்டுறாளா இல்லை எதுவும் சொல்ல முயற்சிக்கிறாளா?”
“அதை நீ தான் கண்டு பிடிக்கணும்”
“நான் உன் அபிப்பிராயத்தை கேட்டேன்”
ஒரு நொடி இரு தோழிகளையும் பார்த்தவள், “அவள் ஏதோ சொல்ல வரது போல் தான் தோணுது”
“அது என்ன?”
நந்தினி தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்க, மாலினி புன்னகைக்கவும் பிருந்தா இருவரையும் முறைத்தாள்.
அப்பொழுது வகுப்பினுள் சைக்கோ வர, அவரை தொண்டர்ந்து வந்த ஸ்பை ஸ்குவார்டை சேர்ந்த இருவர் சிவகுருவையும் ஸ்ரீராமனையும் சுட்டிக் காட்டி, “சேர்மன் கூப்பிடுறார்” என்றனர்.
ராகேஷ் இருவரிடமும் மெல்லிய குரலில் “வாய் திறக்காம திட்டு வாங்கிட்டு வந்து சேருங்க” என்று சொல்லி அனுப்பினான்.
அவர்கள் இருவரும் சென்றதும், சைக்கோ, “என்ன நடந்தது?” என்று கடுமையான குரலில் கேட்க, மௌனமே பதிலாக கிடைத்தது. ஒருவேளை தாரிக்கா வகுப்பிற்கு வந்திருந்தால் அவருக்கு பதில் கிடைத்து இருக்குமோ என்னவோ!
அவர் மீண்டும் கடுமையான குரலில், “தினமும் ஒரு பிரச்சனை! இப்படி ஒரு வகுப்பை நான் பார்த்ததே இல்லை!”
“தன்க் யூ சார்” என்று ஒரு குரல் கேட்கவும் அவர் கோபத்துடன், “யாருடா அது! யாரு?” என்று கத்தினார்.
இப்பொழுது மாணவிகள் பக்கமிருந்து, “என்கிவரி வச்சு கண்டு பிடிங்க” என்று குரல் வந்தது. (சந்தேகமே வேண்டாம் அந்த குரலுக்கு சொந்தக்காரி ஜெனிஷா தான்)
இப்பொழுது சைக்கோ மாணவிகள் பக்கம் திரும்பி அதிக கோபத்துடன், “திமிர்.. உடம்பு முழுக்க திமிர்.. பசங்களை விட பொண்ணுங்களுக்கு தான் அதிக திமிர்” என்று ஆரம்பித்தவர் அடுத்து அரைமணி நேரத்திற்கு தனது சொற்பொழிவை ஆற்றினார். அவர் முடித்த தருவாயில் சிவகுருவும் ஸ்ரீராமனும் வர, சிவகுருவை பார்த்தவர் அவனை நிற்க வைத்து தனது சொற்பொழிவை மீண்டும் ஆரம்பித்தவர் அடுத்த பத்து நிமிடத்திற்கு விடாமல் அவனை திட்டினார்.
அனீஷ் சக்திவேலிடம், “அது எப்படி டா நம்மளை திட்டும் போது மட்டும் இவருக்கு இங்கிலீஷ் அருவி மாதிரி கொட்டுது”
“கோபத்துல திட்டும் போது இங்கிலீஷ் வரலையோ என்னவோ!”
“நம்மளை மட்டும் கொஞ்சிட்டா திட்டுவாரு?”
“டேய் நம்மளை மிஞ்சி போனா ரெண்டு நிமிஷம் தொடர்ந்து திட்டுவாரு.. இப்போ கைல மைக் கிடைச்ச அரசியல்வாதி மாதிரி தொடர்ந்து திட்டுட்டு இருக்கார்.. பாவம் அவரும் எவ்ளோ நேரம் தான் இங்கிலீஷ் தெரிஞ்ச மாதிரியே நடிக்க முடியும்!”
“அப்படிங்கிற!” என்றவன் சைக்கோ பார்வை தங்கள் பக்கம் திரும்பவும் வாயை மூடிக்கொண்டான்.
 
அவர் திட்டி முடித்ததும் சிவகுரு சிறு புன்னகையுடன் சிறிது சிரம் தாழ்த்தி, “தேங்க்ஸ் சார்” என்று கூறவும் அவருக்கு இரத்த அழுத்தம் ஏறியது. ஆனால் அடுத்து அவனை திட்ட வார்த்தை இன்றி தவிக்க, அந்த நேரத்தில் வகுப்பு முடிந்த அறிகுறியாக மணி அடிக்கவும் அவனை முறைத்துவிட்டு வெளியே சென்றார். 
சிவகுரு அவன் இடத்தில் அமரவும் ராகேஷ், “சேர்மன் என்ன சொன்னார்?”
“நம்ம சைக்கோவோட அட்வான்ஸ்டு வெர்ஷன் டா மச்சான்.. ஆனா என்ன மனுஷன் இங்கிலிபீஸ்லேயே பேசி கொல்றாரு.. அவரு திட்டினாரு னு மட்டும் தான் புரிஞ்சுது என்ன திட்டினாருனு புரியலை”
ராஜசேகர், “நிஜமா புரியலை!”
“ஆமா டா மச்சான்” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் கூற, ராஜசேகர் புன்னகையுடன், “நம்பிட்டோம் டா” என்று கூற,
சிவகுருவும் புன்னகையுடன், “விட்ரா.. விட்ரா.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்றதும் மாணவர்கள் சிரித்தனர். 
செல்வராஜ் ஸ்ரீராமனை சுட்டிக்காட்டி, “சார் ஏன் வெறப்பா இருக்கார்?”
“அவர் இதுவரை பல பல்புகள் மட்டும் தான் வாங்கி இருக்கிறாராம்.. கெட்ட பெயர் வாங்கியதே இல்லையாம்.. என்னால் அவருக்கு ஒரு தலை குனிவாம்” என்று நக்கல் குரலில் கூறவும் ஸ்ரீராமன் அவனை முறைத்தான்.
ராகேஷ் ஸ்ரீராமனின் தோளை தட்டி, “ஸ்கூல் லைப் வேற.. காலேஜ் லைப் வேற.. இதெல்லாம் சகஜம் டா” என்றான்.
அப்பொழுது கணித ஆசிரியர் வரவும் அவர்கள் பேச்சு நின்றது.
கணக்கு ஆசிரியர் வகுப்பை தொடங்கினார். சிவகுரு சற்று நேரம் அமைதியாக இருக்கவும் அவர் அவனை பார்த்து, “ஹவ் சேர்மன் ஸ்பிக்?” என்று நக்கல் கலந்த சிறு புன்னகையுடன் வினவினார்.
சிவகுரு,  “பெட்டர் யூ” என்றான்.
அவர் அவனை முறைக்கவும் அவன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அவரை பார்த்தான்.
அனைத்து மாணவர்களின் எண்ணமும் ‘இது இவருக்கு தேவையா!’ என்பதாக தான் இருந்தது. 
அதன் பிறகு எப்பொழுதும் போல் வகுப்புகள் சென்றது.
ஜெனிஷா ராஜசேகரிடம் கைபேசியில் குறுந்தகவல்கள் மூலம் சண்டையிட, அவனோ முன்தினம் கல்லூரிக்கு வராமல் இருந்துததோடு அவளது அழைப்புகளை தவிர்த்து அவளை தவிக்க விட்டதிற்காக மன்னிப்பு கேட்டான். அதனுடன் சேர்த்து தனக்கு அவள் ரொம்ப முக்கியம் என்றும் அவளுக்கும் தான் முக்கியம் என்பதை உணர்த்தவே அப்படி செய்ததாக கூறியவன் பல ‘ஐ லவ் யூ’ அனுப்பி அவளை மலை இறக்கினான். ஆனால் முழுவதுமாக மலை இறங்காத ஜெனிஷா மாலினியுடன் இனி அவன் பேசுவானா என்ற கேள்வியை எழுப்பினாள்.
அந்த கேள்வியை படித்ததும் அவளை திரும்பி பார்த்தவன் அவள் முகம் கோபமின்றி சிறு தவிப்புடன் இருக்கவும் அவன் நீண்ட விளக்கத்தை பதிலாக அனுப்பினான். அதை படித்ததும் அவளது மனம் அதை முழுவதுமாக ஏற்கவில்லை என்றபோதிலும் அவள் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.
ராஜசேகர் அனுப்பிய குறுஞ்செய்தி இதோ,
“நிஷுமா.. ஒன்றை நல்லா புரிஞ்சுக்கோ.. எனக்கு நீ ரொம்ப ரொம்ப முக்கியம்.. ஏதோ ஒரு சூழ்நிலையில் எனக்கு ஒன்று நீ இல்லை சிஸ்டர் தான் கிடைப்பீர்கள் என்று வரும் போது நான் நீ தான் வேண்டும் என்று கூறுவேன்.. அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வர வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.. காதல் என்பது சிரித்து பேசி கொஞ்சி குலாவுவது மட்டுமில்லை.. ஒருவர் தவறு செய்தால் மற்றவர் திருத்தனும்.. அப்படி என்ன தவறு நான் செஞ்சுட்டேன் னு நீ கேட்கலாம்.. நீயே நிதானமா யோசித்து பாரு.. சிஸ்டர் மேல் உனக்கு இருக்கும் வெறுப்பிற்கு காரணமே கிடையாது.. உன்னை போல் அவர்களும் நல்லவரே.. நான் அவங்களிடம் பேச கூடாது என்பதற்கு நியாயமான காரணத்தை சொல்லு நான் பேசலை.. காரணமின்றி வெறுப்பை தேவையே இல்லாமல் வளர்க்காதே என்று தான் நான் சொல்ல விரும்புகிறேன்.. நாளைக்கு நமக்கு கல்யாணம் ஆன பிறகு உனக்கும் சாருவுக்கும்(அவனது தங்கை) ஏதோ சண்டை வந்து அவளிடம் நான் பேச கூடாதுன்னு சொல்லுவியா? ஒருவேளை நீ சொன்னாலும் என்னால் அது முடியுமா? மாலினி சிஸ் என் உடன் பிறந்த சகோதரி இல்லை தான் ஆனால் சில உறவுகள் கருவறை சொந்தமாக இல்லாமல் உணர்வுகளால் உருவான சொந்தமாக இருக்கும்.. அதுவும் கருவறை சொந்தத்திற்கு நிகரான சொந்தமே.. இந்த விஷயத்தில் இதற்கு மேல் நான் விளக்க எதுவுமில்லை.. நீ தான் யோசிக்கணும்.. முடிவு எடுக்கும் முன் என்னக்காக யோசித்து முடிவெடு.. லவ் யூ நிஷுமா”  
மதிய இடைவேளையில் ஆங்கில ஆசிரியரை பார்க்க ஷங்கர் சென்றிருந்ததால் மோகனா CSE வகுப்பறையில் இருந்து தனது வகுப்பறையை நோக்கி தனியாக சென்ற போது அவளை அணுகிய ஆர்லி முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு, “என் கூட பேச மாட்டியா மோனி?” என்று கேட்டபோது பதில் சொல்வதறியாது மோகனா திணறினாள். 
முன்தினம் மாலினி பேசாததினால் அந்த நேர கோபத்தால் ஆர்லியை விலக்கியவளால் தற்போது முகத்திற்கு நேராக கோபம் காட்டவோ முகத்தை திருப்பவோ முடியாமல் திணறினாள்.
அதை பயன்படுத்திக் கொண்ட ஆர்லி குரலில் வருத்தத்தை வரவைத்துக் கொண்டு, “என் கூட பேசு மோனி.. ப்ளீஸ்” என்று போலியாக கெஞ்சினாள்.
“நீ.. நீ.. மாலு கிட்ட கேளு” என்று சொன்னவள் வேகமாக CSE வகுப்பறைக்கு சென்றாள். ஆர்லி கோபத்துடன் தன் வகுப்பறைக்கு சென்றாள்.
மாலினி, “என்ன மோனி?”
“அது..”
“ஆர்லி மிரட்டினாளா?”
“இல்லை”
“அப்பறம் என்ன?”
“அவ பேச சொல்லி கெஞ்சினா.. நான் உன்னிடம் கேட்க சொல்லிட்டு இங்க வந்துட்டேன்”
“எதுக்கு என்னிடம் கேட்க சொன்ன?”
“அது.. முடியாதுன்னு சொல்ல ஒரு மாதிரி இருந்துச்சா! அதான்.. அப்படி சொல்லிட்டு தப்பிச்சு ஓடி வந்துட்டேன்”
“அவளை பார்த்து நீ ஓடி ஒளியக் கூடாது.. தைரியமா எதிர்த்து பேசு”
“..”
“என்ன?”
“ஹ்ம்ம்”
“என்ன ஹ்ம்ம்? சரி னு வாயை திறந்து பேசு”
“அவள் கெஞ்சும் போது பார்க்க பாவமா இருக்கிறது”
மாலினி மனதினுள் ஆர்லியின் சாகசத்தை திட்டிக்கொண்டு, “அவள் உண்மையா கெஞ்சலை.. அப்படி நடிக்கிறா”
“உனக்கு எப்படி தெரியும்?”
“தெரியும்”
“எப்படி?”
“நான் சொன்னா கேட்ப தானே!”
“ஹ்ம்ம்.. ஆனா ஏன் எனக்கு மட்டும் ஒண்ணுமே புரியமாடிக்கிறது?” என்று மோகனா தவிப்புடன் கேட்டபோது அவளை அணைத்து ஆறுதல் சொல்ல துடித்த மனதை அடக்கிய மாலினி, “நீ முயற்சி செய்தால் உன்னாலும் எல்லாத்தையும் புரிந்துக்கொள்ள முடியும்”
“நிஜமா?”
“ஹ்ம்ம்.. நிஜமா தான்”
“ஆனா அவ ஏன் திரும்ப திரும்ப வந்து என்னிடம் பேசுறா?”
ஒரு நொடி யோசித்த மாலினி, “அவளுக்கு உன்னை பிடிக்கலை” 
“பிடிக்கலைனா பேசாம தானே இருப்போம்?”
“ஆமா ஆனா இவ வேற மாதிரி”
“வேற மாதிரி னா?”
“அவளுக்கு உன்னை பிடிக்காது அதனால் உன் கூடவே இருந்து உனக்கு கஷ்டத்தை கொடுக்கணும்னு நினைக்கிறா.. அவள் நடிப்பை எப்போதுமே நம்பாதே.. அவ என்ன சொன்னாலும் என்னையோ ஷங்கரையோ கேட்காமல் நம்பாதே.. ஒன்னை நல்லா ஞாபகம் வச்சிக்கோ.. அவளுடன் நீ பேச ஆரம்பித்தால்.. உன்னை என்னிடம் இருந்தும் ஷங்கரிடம் இருந்தும் பிரிச்சிருவா.. அது உனக்கு ஓகே னா அவளுடன் பேசு”
மோகன கலவரத்துடன், “ஏன் மாலு அப்படி செய்றா? நான் என்ன பண்ணேன்?”
மாலினி மோகனாவின் கையை பற்றி, “நீ எதுவும் செய்யலை டா.. அவள் தான் ரொம்ப கெட்ட பொண்ணு”
“எனக்கு பயமா இருக்குது மாலு”
மாலினி இளகிய மனதை மறைத்து முறைக்கவும் மோகனா கண்கள் கலங்க தவிப்புடன், “நீ ஏன் நிறைய மார்க் வாங்கின?”
“அது முடிஞ்சு போனது மோனி.. அதை பற்றி பேசி இனி பிரயோஜனம் இல்லை.. நீ பயப்பிடுறதுக்கு சின்ன பாப்பா இல்லை.. தைரியமா இரு.. உன்னால ஒருத்தியை சமாளிக்க முடியாதா? கண்டிப்பா முடியும்.. நானோ ஷங்கரோ எப்பொழுதுமே உன்னுடன் இருக்க முடியாது.. நீ தைரியமா அவளை சமாளிக்கணும்.. நான் அவளை திட்டுறதை பார்த்திருக்க தானே! ஸோ இனி அவ உன்னிடம் பேச வந்தா என்னை மனதில் நினைத்துக் கொண்டு, நான் எப்படி பேசுவேனோ அப்படி பேசு.. முதலில் கஷ்டமா இருக்கும் ஆனால் அப்பறம் ஈஸியா தான் இருக்கும்.. உன்னால் சமாளிக்க முடியும்.. எனக்காக செய்வியா?”
“சரி மாலு” என்றபோது அவளது குரலில் சிறு தைரியம் தெரிந்தது.
“சரி.. இப்போ உன் கிளாசுக்கு போ”
“சரி பை” என்றபடி எழுந்து சென்றவள் வகுப்பிற்கு சென்று தன் இடத்தில் அமர்ந்ததும் ஆர்லி மீண்டும் கெஞ்சும் குரலில், “என்ன மோனி பேச மாட்டியா?”
ஒரு நொடி யோசித்த மோகனா கண்களை மூடி திறந்து, “உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா? என்னை டிஸ்டர்ப் பண்ணாதே” என்று கூறி முகத்தை திருப்பினாள்.
சரியாக அந்த நேரத்தில் உள்ளே வந்த ஷங்கர் தன்னவளின் கூற்றை கேட்டு ஒரு நொடி அதிர்ச்சியுடன் நின்றான் ஆனால் அடுத்த நொடியே சுதாரித்து புன்னகையுடன் தன்னவளிடம் சென்று கையை நீட்டினான்.
புன்னகையுடன் அவனது கையை பற்றி குலுக்கினான் மோகனா.
ஷங்கர், “சூப்பர் மோனி” என்றதும் அவள் விரிந்த புன்னகையுடன் குதுகலத்துடன், “தேங்க்ஸ்.. கரெட்டா பேசினேனா?”
“ஹ்ம்ம்.. சூப்பர்.. இப்படியே கண்டின்யு பண்ணு” என்றபடி ஆர்லி முகத்தை பார்த்தவன் அவள் முகத்தில் கோபத்திற்கு பதிலாக வருத்தம் தெரியவும் யோசனையுடன் தன் இடத்தில் அமர்ந்தான். அப்பொழுது வகுப்பு தொடங்குவதற்கான மணி அடித்து ஆசிரியர் உள்ளே வரவும் அவனது யோசனை தடைப்பட்டது.
                                    மழை தொடரும்….

Advertisement