Advertisement

மழை 22:
அடுத்த நாள் காலை கல்லூரியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிரித்துக் கொண்டிருந்த சிவகுருவை ராஜசேகர் கடுப்புடன் முறைத்துக் கொண்டிருந்தான்.
ராஜசேகர் முறைப்பில் கடுமை கூடவும் சிவகுரு ஒருவாரு சிரிப்பை அடக்கி, “இருந்தாலும் உன் பிளான் இப்படி ப்ளாப் ஆகும் னு நினைக்கலை டா.. சரி சரி முறைக்காத.. வேற யோசிப்போம்..” என்றபடி ராஜசேகரின் தோளை தட்டினான்.
சில நொடிகளில் சிவகுரு, “ஏதாவது கிப்ட் குடுத்து பாரேன்”
“ச்ச்”
“என்னடா?”
“அவ புரிந்து நடந்துக்கணும்னு நினைக்கிறன் டா.. பரிசு கொடுத்து.. ச்ச்.. எனக்கு பிடிக்கலை”
“அப்படி இல்லை டா.. இப்போ உன் மேல் கோபத்தில் இருக்கும் போது சரியா யோசிக்க மாட்டா.. கிப்ட் கொடுத்து அவளை கூல் பண்ணிட்டு”
“என் அன்பு அவளை கூல் பண்ணனுமே தவிர நான் தரும் பரிசு பொருள் இல்லை”
“நீ என்னடா துல்கர் மாதிரி யோசிக்காம டி.ஆர்  மாதிரி யோசிச்சி நெஞ்சை நக்கிட்டு இருக்கிற!”
ராஜசேகர் முறைக்கவும் சிவகுரு, “பின்ன என்ன டா! ஓவரா பீல் பண்ணிட்டு……………”
“போடா.. அதெல்லாம் உனக்குன்னு வரும் போது தானா வரும்”
“எனக்கு தெரிந்து கல்யாணத்திற்கு அப்பறமும் நாங்க டாம் அண்ட் ஜெரி ஆ தான் இருப்போம்”
ராஜசேகர் புன்னகைக்கவும் சிவகுரு, “ஹ்ம்ம்.. இப்படி சிரித்த மாதிரியே இரு.. சும்மா கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்துட்டு இருக்காத”
“ஹ்ம்ம்.. சரி வா கிளாஸ் போகலாம்”
“முதல் பிரியட் என்னடா?”
“யாருக்கு தெரியும்? யாரிதா இருந்தாலும் நாம கவனிக்க போறதில்லை.. அப்பறம் என்ன?”
“அதுவும் சரி தான்” என்று பேசியபடி வகுப்பிற்கு சென்றனர்.
இவர்கள் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் வகுப்பறையினுள் ஆஷா, “அவன் எவ்வளவோ சமாதானப் படுத்த முயற்சித்தான்.. முடியலை என்றதும் உனக்கு உன் காதலை புரிய வைக்க தான் இப்படி செய்தான்”
ஜெனிஷா முறைக்கவும் ஆஷா, “என்ன முறைப்பு?”
“…”
“அவன் உனக்கு………….”
“என் காதலை புரிய வைக்க னு சொல்ல போறியா! இதையே எத்தனை முறை சொல்லுவ?”
“உனக்கு புரியும் வரை” 
ஜெனிஷா முறைக்கவும், ஆஷா, “இந்த முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” 
“உன் லெக்சரை நிறுத்திட்டு உன் வேலையை பாரு”
“ஜெனி.. நான்………………”
“உன்னை விட அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும்..”
“நானும் அதை தான் சொல்றேன்.. அப்புறம் ஏன்…………………..”
“எங்களுக்குள் பிரச்சனை.. வந்து நாட்டாமை பண்ணு னு உன்னை கூப்பிட்டேனா! இல்லை தானே! என்ன பண்ணும் னு எனக்கு தெரியும்..” என்றவள் பேச்சு முடிந்தது என்பது போல் அமர்ந்துக் கொண்டாள்.
எப்பொழுதும் போல் ஆஷா மனதினுள் புலம்பியும் திட்டியும் கொண்டிருந்தாள்.
ராஜசேகர் புன்னகையுடன் ஜெனிஷாவை பார்த்தபடி வகுப்பின் உள்ளே வர அவள் அவனை முறைத்தாள்.
ராஜசேகர் நேராக அவள் இடதிற்கு சென்று புன்னகையுடன், “குட் மார்னிங் நிஷு பேபி.. இன்னைக்கு இவனிங் ஐஸ்-கிரீம் சாப்பிட போகலாமா?”
அவள் முறைக்கவும் அவன் புன்னகை மாறாமல், “நேற்றே உன்னை விட்டுட்டு ஐஸ்-கிரீம் சாபிட்டேன்னு கோச்சுட்டு போய்ட.. அதான் இன்னைக்கு போகலாமா னு கேட்கிறேன்”
அவள் பல்லை கடித்துக் கொண்டு முறைத்தாள்.
அப்பொழுது வகுப்பறையினுள் வந்த ஸ்ரீராமன் ஜெனிஷா முகத்தில் தெரிந்த கோபத்தில் அவர்களுக்குள் சண்டை என்று புரிந்துக் கொண்டு உள்ளுக்குள் சந்தோஷப்பட்டான். தன் இடத்தில் அமைதியாக அமர்ந்துக் கொண்டவனது காது அவர்கள் உரையாடலை கவனிக்க தயாரானது. 
ராஜசேகர், “முறைத்து பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்க….” ஒரு நொடி இடைவெளி விட்டு “னு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்..” மீண்டும் ஒரு நொடி இடைவெளி விட்டவன் அவளுது கடுமையான முறைப்பை பொருட்படுத்தாமல், “ஆனா உன் மேல் அதிகமா காதல் பொங்குது” என்று கூறி வசீகர புன்னகையுடன் கண்சிமிட்டினான்.
அவனது பேச்சிலும் செயலிலும் அவன் பக்கம் சரிய தொடங்கிய மனதை அடக்கி முறைப்பை தொடர்ந்தாள்.
அப்பொழுது சிவகுரு, “மச்சான் பி.டி” என்று குரல் கொடுக்க, இவனோ மாறாத புன்னகையுடன், “மாமனை ரொம்ப சோதிக்காம சீக்கிரம் மலை இறங்கிடுடி செல்லம்” என்றவன் அவளது கன்னத்தை லேசாக தட்டிவிட்டு தன் இடத்தில் அமரவும் விளையாட்டுத் துறை ஆசிரியர் அவர்கள் வகுப்பின் வழியாக செல்லவும் சரியாக இருந்தது.
ஜெனிஷா அவனது கடைசி வாக்கியத்தையும் தொடுகையும் மிகவும் ரசித்ததோடு அவனது தைரியத்தையும் ரசித்தாள். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அவன் மீது இருந்த கோபம் குறைந்திருந்தாலும் அவன் மாலினியோடு சகஜமாக பழகுவதை அவளால் ஏற்கமுடியாமல் கோபம் எனும் முகமூடியை கழட்ட அவள் மனம் மறுத்தது.
ஸ்ரீராமன் ராஜசேகரிடம், “என்ன மச்சான் சண்டையா!” என்று சாதாரணமாக கேட்பது போல் கேட்டான்
அவனை பற்றி அறிந்த ராஜசேகர் புன்னகையுடன், “சண்டை இல்லை ஊடல்.. ஊடல் பின் கூடல் னு கேட்டது இல்லை” என்றான்.
ராஜசேகரின் பதிலடியில் எரிச்சலடைந்தவன் அதை மறைத்து, “எனக்கு என்னவோ அப்படி தெரியலையே!” என்று சிறு நக்கலுடன் கூறினான்.
ராஜசேகர் புன்னகையுடன், “அப்படியா!” என்று அவனிடம் கூறிவிட்டு தன்னவளை பார்த்து, “நிஷா” என்று அழைத்தான்.
அவள் திரும்பாததை பொருட்படுத்தாமல், “ஸ்ரீராமன் நமக்குள் சண்டையானு கேட்டான் நான் இல்லை னு சொல்றேன், நம்பாம நீ என் மேல் கோபமா இருக்கிறன்னு அடிச்சு சொல்றான்” என்று அவன் கூறி முடித்த போது ஜெனிஷா அவன் அருகில் இருந்தாள்.  ஸ்ரீராமனின் பேச்சை அவளும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.
ராஜசேகர் ஸ்ரீராமனை வெற்றிபுன்னகையுடன் ஒரு நொடி பார்த்துவிட்டு காதல் புன்னகையுடன் தன்னவளை நோக்கினான். அவளும் குறையாத காதல் புன்னகையுடன், “இன்னைக்கு இவனிங் XXX ஐஸ்-கிரீம் கடைக்கு போகலாம்” என்று கூறியவள் கண்ணடித்துவிட்டு தன் இடத்திற்கு சென்று அமர்ந்தாள்.
ராஜசேகர் இப்பொழுது அதீத காதலுடன் அவளை பார்க்க அவளோ உள்ளுக்குள் அதை கர்வத்துடன் ரசித்துவிட்டு வெளியே போலியாக முறைத்து அழகுகாட்டிவிட்டு திரும்பிக் கொண்டாள். ராஜசேகரின் புன்னகையை மேலும் விரிந்தது.
அவன், “நிஷா” என்று அழைக்க அவள் இப்பொழுது அவனை பார்த்தாள். அவள் தன்னை பார்த்ததும் உதட்டை குவித்து சிறு முத்தமொன்றை கொடுக்கவும் அவள் ஒரு நொடி பேச்சிழந்து சிறு அதிர்வுடன் அவனை நோக்கினாலும் அடுத்த நொடியே வெக்கத்துடன் அவனை நோக்கியவள் அவன் கண்ணடிக்கவும் படபடக்கும் இதயத்துடன் தனது பார்வையை திருப்பிக் கொண்டாள்.
ஸ்ரீராமன் கடுப்புடனும் எரிச்சலுடனும் திரும்பிக் கொள்ள வாய்விட்டு சிரித்த சிவகுரு, “மச்சான் இன்னைக்கு மதியம் ட்ரீட்”
ஜெனிஷாவின் மீது பார்வையை வைத்தபடி ராஜசேகர், “கொடுத்துட்டா போச்சு”
“நம்ம தவளை வாயனும் உண்டு தானே!”
“பின்ன! அவனுக்கு தானே முக்கியமா கொடுக்கணும்” என்றவன் இப்பொழுது சிவகுரு பக்கம் திரும்பினான்.
ஸ்ரீராமன் கோபத்துடன், “என்னடா லந்தா?”
“ஆமா” என்று சிவகுருவும் ராஜசேகரும் ஒன்றாக கூறி கை தட்டிக் கொண்டனர்.
ஸ்ரீராமன் மேலும் கோபத்துடன் முறைக்க, ராஜசேகர் நக்கல் கலந்த குரலில் ஸ்ரீராமனை பார்த்து, “ஆனா உனக்கு ஒரு ராசி இருக்குடா மச்சான்.. என்ன தான் ஒரு பொண்ணு கூட உனக்கு செட் ஆகலை-னாலும் மற்றவர்களை சேர்த்து வைக்கிற ராசி செம்மையா இருக்குது.. அதனால் நான் என்ன சொல்ல வரேன்னா…………………………………”
ஸ்ரீராமன், “டேய் வேண்டாம்” என்று எழுந்து நின்று ஆள்காட்டி விரலை ஆட்டியபடி கூற,
ராஜசேகர் அலட்டிக் கொள்ளாமல் சிவகுருவிடம், “இவன் ஏன் மச்சான் இப்படி துள்றான்? இப்படி கோபப்படுற அளவுக்கு அப்படி நான் என்ன சொல்லிட்டேன்”
“அதானே!!!!”
ஸ்ரீராமன், “டேய் வேண்டாம்” என்று மீண்டும் சொல்ல,
சிவகுரு, “அதான் ஏற்கனவே சொல்லிட்டியே! வேற ஏதாவது சொல்லு.. நாங்க இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறோம்”
ஸ்ரீராமன் கோபத்துடன் சிவகுரு சட்டையை பிடிக்க முயற்சித்தான் ஆனால் ராஜசேகரின் இடது கையை தான்டி அவனால் ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை.
ராஜசேகர், “வாய் பேச்சு வாய் பேச்சா தான் இருக்கணும்”
ஸ்ரீராமன் கடும் கோபத்துடன் சிவகுருவை பாத்து, “இவன் இருக்கிற தைரியத்தில் ரொம்ப துள்ரடி.. தனியா சிக்குன…………….”
சிவகுரு, “அவனை விடு டா மச்சான்” என்று சிலிர்த்துக் கொண்டு எழ, 
ராஜசேகர், “விடுடா மச்சான்”  
சிவகுரு, “இல்லை டா.. அவன் இதையே சொல்லி காட்டிட்டு இருப்பான்” என்று ஸ்ரீராமனை முறைத்தபடி கூறினான்.
இருவரும் சண்டைக்கோழியாக முறுக்கிக் கொண்டு நிற்க, இருவருக்கும் நடுவில் ராஜசேகர் சமாதான புறாவை பறக்கவிட முயற்சித்து தோற்றான்.
ஸ்ரீராமன், “தில்லு இருந்தா வாடா.. பொடிப் பயலே! என்னோட ஒரு அடியை தாங்குவியா!” என்று அவனது உயரத்தை குறித்து பேசினான். ஸ்ரீராமன் சிவகுருவை விட உயரம் அதிகம். இருவருக்கும் கிட்டதிட்ட ஒரு அடி உயரம் வித்யாசம் இருந்தது.
சிவகுரு ராஜசேகரின் கையை தட்டிவிட்டுவிட்டு ஸ்ரீராமனின் மீது பாய்ந்துவிட இருவரும் வகுப்பறையினுள் கட்டிப்புரண்டு சண்டையிட தொடங்கினர்.
சிவகுருவின் உயரத்தை மனதில் கொண்டு அவனை எளிதாக வென்றுவிட முடியும் என்று ஸ்ரீராமன் நினைக்க, சிவகுருவோ உயரமெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை, நான் உனக்கு சளைத்தவன் இல்லை என்று நிருபித்துக் கொண்டிருந்தான்.
ஒரு சில மாணவர்கள் அவர்கள் சண்டையை விலக்க முயற்சிக்க ஒரு சிலர் சண்டையிட ஊக்கமளித்தனர். மாணவிகள் நடப்பதை சிறு பத்தற்றத்துடன் தங்கள் இடத்தில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தனர். 
அப்பொழுது அங்கே வந்த பிருந்தா அதிர்ச்சியுடன் மாலினி அருகில் சென்று நின்றுக் கொண்டாள். அவள் மாலினி கையை சுரண்ட அவள், “என்னடி?”
”நீ ஏன் சமாதான புறாவா மாறாம இருக்க?”
மாலினி முறைக்கவும் பிருந்தா, “எப்போவும் அதை தானே நீ செய்வ! அதுவும் அங்கே தரையில் உருன்டுட்டு இருக்கிறது உன் பிரெண்ட்!”
“ஹ்ம்ம்.. ஃபார் அ சேன்ஜ்.. நீ போய் சொல்லேன்.. சிவா நிறுத்த வாய்பிருக்கு”
“நான் தடுத்தா அதிகமா சண்டை தான் போடுவான்”
“எனக்கென்னவோ அப்படி தோணலை”
“என்னடி சொல்ற!”
“சும்மா சொன்னேன்” என்று மாலினி சொல்லிக் கொண்டிருந்த போது உள்ளே வந்த ராகேஷும் செல்வராஜும் நிமிடத்தில் சிவகுருவையும் ஸ்ரீராமனையும் ஆளுக்கு ஒருபக்கம் இழுத்து சண்டையை நிறுத்தினர்.
ராகேஷ் குரலை சற்று உயர்த்தி, “என்ன ரெண்டு பேருக்கும் பெரிய சண்டியர்னு நினைப்பா இல்லை ‘மகேஷிண்டே ப்ரதிகாரம்’ படத்தில் வந்த ஃபாஹத்-பாஸில் சுஜித் னு நினைப்பா!” என்றவன் மற்றவர்களை பார்த்து, “இவங்களுக்கு தான் அறிவில்லை.. சண்டையை விலக்காம ஒத்து ஊத்திட்டு இருக்கீங்க! ஏற்கனவே எதில் நம்மளை வச்சு செய்யலாம் னு காத்துட்டு இருக்கான்க.. நீங்களே இந்தா வச்சுக்கோ னு அவங்க கையில் பிரச்சனையை ஆதாரத்துடன் கொண்டு போய் குடுங்க டா” என்றதும் குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவு அனைவரும் அமைதி காத்தனர்.
சிவகுரு, “சாரி டா” என்று கூற,
ராகேஷ், “எனக்கு எதுக்கு சாரி சொல்ற! நான் உனக்காகவும் தான் சொல்றேன்”
“ஹ்ம்ம்”
ஸ்ரீராமன், “இவன்க என்னை பார்த்து மாமானு சொன்னாங்க டா.. அதான் கோபத்தில்…………………………”
ராகேஷ் ராஜசேகரை பார்க்க அவன், “நாங்க அப்படி சொல்லலை”
ஸ்ரீராமன், “நேரிடையா சொல்லலை ஆனா அந்த அர்த்தத்தில் தான் சொல்ல வந்தான்”
ராஜசேகர், “சரி ஒத்துக்கிறேன்… நான் அந்த அர்த்தத்தில் தான் பேச வந்தேன்.. ஆனா அதற்கு முன் அவன் என்னை சீண்டினான்.. அதுக்கு பதில் தர தான் அந்த அர்த்தத்தில் பேச வந்தேன் ஆனா அதை கூட சொல்லாமல் நிறுத்திட்டேன்.. அவன் பேசினதுக்கு நான் பேசினேன்.. பதிலுக்கு அவனும் பேச வேண்டியது தானே.. அதை விட்டுட்டு எதுக்கு கை ஓங்குறான்.. எப்ப பார்த்தாலும் சும்மா பொண்ணுங்க முன்னாடி ஸீன் போடுறதே இவனுக்கு பொழப்பு”
ராகேஷ், “எல்லா பசங்களும் ஸீன் போடுறது தானே டா”
ராஜசேகர், “இவனை மாதிரி அடுத்தவனை மட்டம் தட்டி யாரும் ஸீன் போடுறது இல்லை” என்று கூற,
ஒரு மாணவன், “அதானே” என்றும் மற்றொருவன், “என்ன ஸீன் போட்டாலும் பல்பு தானே வாங்குறான்” என்றும் கூற அனைவர் முகத்தில் சன்னமான புன்னகை அரும்பவும் ஸ்ரீராமன் கொதிப்புடன், “நீங்க யாரும் பல்பு வாங்கியதே இல்லை?”
முன்னவன் அலட்டிக் கொள்ளாமல், “வாங்கி இருக்கோம் தான் ஆனால் உன்னை போல் பல்பு மட்டுமே வாங்கிட்டு இல்லை”
ஸ்ரீராமன் மீண்டும் ஏதோ கூற வர ராகேஷ், “சரி விடுங்க டா..” என்று கூறி ஸ்ரீராமனின் தோளை தட்டியனடி, “எல்லோரும் ப்ளேசுக்கு போங்க” என்றான்.
ஸ்ரீராமன் ராஜசேகரையும் சிவகுருவையும் முறைத்தபடி இடத்தில் அமர அவர்களோ இவனை அலட்சிய பார்வை பார்த்துவிட்டு இடத்தில் அமர்ந்தனர்.
பிருந்தா மாலினியிடம், “எதோ சொன்னியே! என்ன சொன்ன?”
“ஒன்னுமில்லையே!” என்ற மாலினியை பிருந்தாவோடு சேர்த்து நந்தினியும் சந்தேகமாக பார்த்தாள்.

Advertisement